அலைவரிசை 41

Image
  “உங்களால ரியாலிட்டிய அனுபவிக்க முடியல, நடக்கவே நடக்காத விசயங்களை கற்பனையில ரசிச்சு வாழுறிங்கனா, யூ ஆர் டெஃபனைட்லி அன் அன்லக்கி பர்சன்... ஏன்னா நிஜ வாழ்க்கையில உங்க மேல அன்பை கொட்டுறவங்களை கண்டுக்காம நீங்க பாட்டுக்கு கற்பனையில சிறகடிச்சு பறப்பிங்க... நீங்க வாழுற கற்பனை உலகம் உங்களை ரியாலிட்டிய ஏத்துக்க விடாது... இதை Daydreamingனு சொல்லுவாங்க... அதாவது ரியாலிட்டில இருக்குற கஷ்டங்கள்ல இருந்து எஸ்கேப் ஆகுறதுக்கான வழி தான் இந்த கற்பனை வாழ்க்கை... அளவுக்கதிகமான டே-ட்ரீமிங் மனுசங்களோட மனநலத்த பாதிக்குமாம்... மோஸ்ட் ஆப் த பீபிள், அவங்களுக்கு விருப்பமான இன்சிடென்ட்ஸ், ஃபேண்டசிஸை கற்பனையில வாழ்ந்து பாப்பாங்க... இதால ரியாலிட்டில சந்தோசமான ஒரு இன்சிடெண்ட் நடந்தாலும் அதை கற்பனையோட கம்பேர் பண்ணி பாத்துட்டு ‘அந்தளவுக்கு இல்லப்பா’னு திருப்தியில்லாம வாழ்க்கைய கழிப்பாங்க... இது அவங்களுக்கு நெருக்கமான நபர்கள் கூட இருக்குற பாண்டிங்கை கேள்விக்குறியாக்கும்... அவங்க மேல அன்பா இருக்குறவங்களை மதிக்காம இழக்குற நிலமை கூட வரும்... So learn to live in reality, not in dreams.                                      

அலைவரிசை 36

 

அலைவரிசை 36

“இனிப்பான பொய்ய விட கசப்பான உண்மை பெஸ்ட்னு சொல்லுவாங்க... உண்மைய சொல்லுறதால உங்களுக்கு உண்டாகுற பாதிப்பு ரொம்ப சின்னது தான்... ஆனா அந்த சின்ன பாதிப்பை ஃபேஸ் பண்ண பயந்துட்டு பொய் சொல்லி தப்பிச்சோம்னு வைங்க, ஃபியூச்சர்ல ரொம்ப அவமானப்படுவோம்... பொய் சொல்லி ஒரு உறவை நீங்க காப்பாத்தணும்னு நினைச்சிங்கனா அந்த உறவு தற்காலிகமானதா தான் இருக்கும்ங்கிற நிதர்சனத்தை புரிஞ்சுக்கோங்க... அதே நேரம் ஒருத்தர்  உங்க கிட்ட உண்மைய சொல்லி தன்னோட தப்பை ஒத்துக்கிட்டா அதை எந்தக் காரணத்துக்காகவும் ஃபியூச்சர்ல சொல்லிக் காட்டி திட்டாதிங்க... அப்புறம் இனி ஜென்மத்துக்கும் உங்க கிட்ட உண்மையா இருக்கணும்ங்கிற எண்ணம் அவங்களுக்கு வராது”

                                             -கிருதியின் கிறுக்கல் மொழிகள்

பார்க் அவென்யூ அப்பார்ட்மெண்ட், ஷெனாய் நகர்...

பால்கனியைத் தொட்டுக் கொண்டிருந்த அலங்கார பாக்குமரங்களைப் பார்த்தபடி காபியை அருந்திக் கொண்டிருந்தாள் பிரக்ருதி.

அந்த 2BHK ஃப்ளாட்டின் சமையலறையில் பிரக்யா சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தாள். ஹாலில் அமர்ந்து நாட்டு நடப்புகளை விவாதித்துக் கொண்டிருந்தனர் மனோகரும் வாசனும்.

பிரணவியின் உறக்கம் இன்னும் கலையவில்லை.

பிரக்யா தந்தைக்கும் மாமாவுக்கு காபியை எடுத்துச் சென்று நீட்டினாள்.

“இன்னும் நவி எழுந்திரிக்கலயாடா?”

மகளிடம் கேட்டபடி காபியை சுவைத்தார் மனோகர்.

“இல்லப்பா... நைட் முழுக்க அவங்க சரியா தூங்கல”

“ஏன்டாம்மா உடம்புக்கு எதாச்சும்?” என வாசன் கவலையோடு இழுக்க

“ஒன்னுமில்ல மாமா... இப்ப குழந்தை வயித்துக்குள்ள சர்கஸ் பண்ணுமில்ல... அதை ரசிக்கிறதுல தூங்க மறந்திருப்பாங்க... உடனே நீங்க கவலைப்படாதிங்க” என கேலியாகக் கூறியபடி அவர்களோடு சேர்ந்து தானும் காபியைக் குடித்தாள் பிரக்யா.

வாசன் அதை கேட்டு சிரிக்க மனோகரோ பிருத்வி நேற்றாவது போனில் அழைத்தானா என விசாரித்தார்.

“இல்லப்பா”

“வெட்டி வீறாப்பு அவங்கம்மாவ மாதிரியே... ராஸ்கல் பிள்ளை பிறந்தப்புறம் வருவான்ல, அப்ப அவனுக்கு வேப்பிலை அடிக்குறேன்”

கடுப்புடன் முணுமுணுத்தார் மனோகர்.

“விடு மனோ... நம்மளும் ஒரு காலத்துல அம்மா புள்ளைங்களா இருந்தவங்க தான... மகிழ் ஒன்னும் மோசமான மாமியார் கிடையாது”

நண்பரைச் சமாதானம் செய்தார் வாசன்.

“நீ தான் அவளை மெச்சுக்கணும்... அது சரி, உனக்கும் அவளுக்கும் சிந்தனை ஒரே மாதிரி, கொள்கையும் ஒரே மாதிரி... நீ விட்டுக்குடுப்பியா?” என நண்பரை முறைத்தபடி செய்தித்தாளில் மீண்டும் முகம் புதைத்தார் மனோகர்.

“இன்னைக்கு மானிங் அண்ணிக்கு ஆலு பரோட்டா செய்யப்போறேன்... உங்க ரெண்டு பேருக்கும் என்ன வேணும்?”

“ஓட்ஸ் உப்புமா போதும்டா” என்றனர் இருவரும் ஒரே குரலில்.

சமையலுக்கு உதவி செய்ய வேண்டுமென அவர்களிடம் நிபந்தனை போட்டவள் கேரட், பீன்ஸ், பட்டாணிக்காய்களை தட்டில் போட்டு அவர்களிடம் கொடுத்துவிட்டு சமையலறைக்குள் புகுந்துகொண்டாள்.

பிரக்ருதி காபி குடித்துவிட்டு சமையலறைக்குள் புகுந்தாள்.

“காத்தால சமையல் தூள் பறக்குது போல... நான் ஹெல்ப்  பண்ணட்டுமா?”

“நீ போய் தூங்கு... நைட் வந்ததே லேட்... ரெஸ்ட் எடு”

அப்போது பிரக்யாவின் மொபைல் இசைத்தது. பிரக்ருதி யாரென எடுத்துப் பார்க்க தொடுதிரையில் ‘அண்ணா’ என்றிருக்கவும் அழைப்பை ஏற்றாள்.

“சொல்லுங்க மாமா”

“நவி எப்பிடி இருக்கா கிருதி?”

எடுத்ததும் மனைவியைப் பற்றி விசாரித்தான் பிருத்வி.

“அவ நல்லா இருக்கா மாமா... நீங்க மகிழ் ஆன்ட்டி ரெண்டு பேரும் நல்லா இருக்கிங்களா? அங்க குளிர் எப்பிடி இருக்கு?”

“குளிர் பரவால்ல கிருதி... டாக்டர் கிட்ட செக்கப் போனிங்களா?”

“பிரகி கூட்டிட்டுப் போனா மாமா... சோட்டியும் நவியும் ஹெல்தியா இருக்காங்களாம்... வொரி பண்ணிக்க வேண்டாம்னு சொன்னாங்க... க்ரோத் ஸ்கேன் மட்டும் எடுத்துப் பாத்தாங்க... அதுல ஒரு பிரச்சனையும் இல்ல”

“நீயே பேசிட்டிருக்குற... பிரகி என் கூட பேசமாட்டாளா?”

ஆதங்கத்துடன் கேட்டான் பிருத்வி.

பிரக்ருதி மொபைலை பிரக்யாவிடம் நீட்டினாள். அவளோ பேச மறுத்தாள்.

“ப்ச்! சீன் போடாம பேசு”

“ஒழுங்கா போறியா? இல்ல வாய்க்குள்ள கத்திய விட்டு ஆட்டவா?”

வெங்காயம் நறுக்கிக்கொண்டிருந்த கத்தியைக் காட்டி பிரக்ருதியை மிரட்டினாள் அவள்.

“அவ கொஞ்சம் வேலையா இருக்குறா மாமா”

“அப்ப அப்பா கிட்ட போனை குடு”

ஹாலுக்கு வந்தவள் உணவு மேஜையருகே அமர்ந்து காய்கறி நறுக்கிக்கொண்டிருந்த மனோகரிடம் மொபைலைக் கொடுத்து பிருத்வி இணைப்பிலிருப்பதாக கூறினாள்.

“பத்து நாளா பேசாம திடீர்னு துரைக்கு என் ஞாபகம் எப்பிடி வந்துச்சாம்?”

கேலி செய்தபடி மொபைலை வாங்கினார் மனோகர்.

“சொல்லுடா”

“ப்பா! எப்பிடி இருக்கிங்க? அம்மா இல்லாம எப்பிடி சமாளிக்கிறீங்க?”

“உனக்கும் உன் அம்மாவுக்கும் நீங்க இல்லனா உலகம் சுத்தாதுனு நினைப்பாக்கும்? பிரகியும் கிருதியும் என்னையும் வாசனையும் நல்லா பாத்துக்குறாங்கடா... இப்ப கிருதி வேலைக்குப் போறா... நவிக்குக் குழந்தை பிறக்குற வரைக்கும் வேலைக்குப் போகமாட்டேன்னு உன் தங்கச்சி சொல்லிட்டா... பொறுப்பா எல்லாத்தையும் கவனிக்க வேண்டிய ரெண்டு பேரும் அமெரிக்கால வெகேஷன் என்ஜாய் பண்ணுறிங்க”

மனோகர் பிருத்வியை வாட்டியெடுக்க ஆரம்பித்தார்.

“என்னால வேலையை விட்டுட்டு அங்க வந்து இருக்க முடியாதுப்பா”

“சரி! உங்கம்மா மகாராணி என்ன பண்ணுறா அங்க?”

“அவங்க இல்லனா என்னையும் வீட்டையும் யாருப்பா பாத்துப்பாங்க?”

“நீ சின்ன குழந்தையாடா? உன்னால உன்னை கவனிச்சிக்க முடியாதா? உனக்கு ஆள்துணை வேணுமா? இல்ல நவிக்கு வேணுமாடா? நீயும் உன் அம்மாவும் கடைஞ்செடுத்த சுயநலவாதிங்க... உங்க சுயநலத்துக்காக ரெண்டு பொண்ணுங்க கெரியர்ல கேப் விழுந்துடுச்சு”

“ப்பா! பிரகி வேலைக்குப் போய் மட்டும் என்ன செய்யப் போறா? எப்பிடியும் இன்னும் ஒரு வருசத்துல நல்ல வரனா பாத்து மேரேஜ் பண்ணி வைக்கப் போறோம்... அவ எதுக்கு வேலைக்குப் போய் கஷ்டப்படணும்?”

“ஒரு வருசத்துல கல்யாணம் பண்ணணுமா வேண்டாமானு நீ முடிவு பண்ணக்கூடாது பிருத்வி... இன்னும் ஒன் அண்ட் ஹாஃப் இயருக்கு கல்யாணம்ங்கிற பேச்சே எடுக்கக்கூடாதுனு பிரகி சொல்லிட்டா”

அவர் கூறியதைக் கேட்டதும் பிருத்வி கடுப்பானான்.

“இதுல அவ சொல்லுறதுக்கு என்ன இருக்குப்பா? அவ எதையோ மனசுல வச்சுக்கிட்டு இப்பிடி பேசுறா... நீங்க அதுக்கு ஆமா சாமி போடாதிங்க”

மைந்தனின் பேச்சில் எரிச்சலுற்றார் மனோகர்.

“நீ வாய மூடு... அவ எதையும் என் கிட்ட மறைக்கல... நீயும் உன் அம்மாவும் அவளைத் திட்டுனிங்களாமே”

“அவ போயும் போயும் வேலைவெட்டி இல்லாதவனை லவ் பண்ணுறாப்பா”

“அந்தப்  பையன் வேலை வெட்டியில்லாதவன்னு நீ பாத்தியா பிருத்வி? கார்கி குரூப் ஆப் இண்டஸ்ட்ரீஸ் கேள்விப்பட்டிருக்கியா? அதோட சி.எஃப்.ஓ தான் அந்தப் பையன்... இந்தச் சின்ன வயசுல எவ்ளோ பெரிய பொறுப்பை கவனிக்கிறான்... அந்த திமிர் துளி கூட இல்லாம பேசுறான்... என் பொண்ணுக்கு அவனை விட நல்ல லைஃப் பார்ட்னர் கிடைக்க மாட்டான்... நீயும் உன் அம்மாவும் இதுல தலையிடாதிங்க”

ஷ்ரவன் யாரென மனோகர் கூறியதும் வாயடைத்துப்போனான் பிருத்வி.

எதுவும் பேசாமல் அமைதி காத்தவனிடமிருந்து மொபைலை வாங்கிய மகிழினி கணவரிடம் பேச ஆரம்பித்தார். அவருக்கும் இரண்டு டோஸ் திட்டு விழுந்தது.

வாசன் தான் மனோகரைச் சமாதானம் செய்து மகிழினியிடம் தன்மையாகப் பேசினார்.

“நவி பாட்டுக்கு அங்க கிளம்பி வந்துட்டா... என் மனசு என்ன பாடு படுது தெரியுமாண்ணா? என் வீட்டு வாரிசை நான் கூட இருந்து கவனிச்சிக்க முடியலயேனு நான் படுற கஷ்டம் எனக்குத் தான் தெரியும்”

“நீ கவலைப்படாத மகிழ்... குழந்தை பிறந்துட்டானா எல்லா கோவமும் மாயமா போயிடும்”

அவர்கள் பேசி முடிக்க ஸ்டவில் வைத்திருந்த குக்கரும் விசிலடித்தது.

“உருளைக்கிழங்கு வெந்துடுச்சு போல” என்றபடி குளிப்பதற்காக தலையில் எண்ணெய் வைத்தாள் பிரக்ருதி.

வாசன் அதை கவனித்துவிட்டு “எங்க போற கிருதி? நீ நைட் தான கிளம்புவ?” என்க

“இன்னைக்கு கவினோட அக்கா ஆஸ்திரேலியால இருந்து வர்றாங்கப்பா... அவங்களை பிக்கப் பண்ணிக்கப் போறோம்” என்றாள் அவள்.

“ஆஸ்திரேலியால இருந்து வர தெரிந்த பொண்ணுக்கு அமிஞ்சிக்கரைக்கு வழி தெரியாதாம்மா?” என்றார் வாசன் கேலியாக.

கவினின் தமக்கை ஜானகியின் மாமியார் வீடு இருப்பது அமிஞ்சிக்கரையில். அதை மனதில் வைத்து கேட்டார் வாசன்.

“அவங்க மாமியார் குடும்பத்தோட கோயம்புத்தூர் பக்கத்துல அவங்க சொந்த ஊர்ல செட்டில் ஆகிட்டாங்கப்பா... கவின் ஃபேமிலி லாஸ்ட் இயர் தானே இங்க இருந்து அரும்பாக்கத்துல வீடு வாங்குனாங்க... அவங்க அக்காக்கு அந்த வீடு இருக்குற ஏரியாக்கு வழி தெரியாதாம்”

“இந்த சென்னைல ஒரு இடத்துல இருந்து இன்னொரு இடத்துக்குப் போறது ஒன்னும் அவ்ளோ கஷ்டமில்லயேம்மா... ஓலா கேப்ல ஏறுனா வீட்டு வாசல்ல இறக்கி விடப்போறான்”

“ப்பா!”

பிரக்ருதி சலித்துக்கொண்டாள்.

“நீ சும்மா சும்மா ஊர் சுத்துறது நல்லா இல்ல கிருதிம்மா”

பிரக்ருதி பிரக்யாவைப் பார்த்தாள்.

“ஃப்ரெண்ட் கூட தான அங்கிள்  போறா... இவ தனியா ரேபிடோல வர்றானு இவளுக்குத் துணையா கவின் டெய்லியும் லேட்டா தான் போறான்... அவன் கூப்பிடுறப்ப இவ எப்பிடி மாட்டேன்னு சொல்ல முடியும்? எங்கப்பா உங்க கிட்ட உதவி கேட்டா நீங்க மாட்டேன்னு சொல்லுவிங்களா அங்கிள்? அத மாதிரி தான் இதுவும்”

வேறு வழியின்றி ஒப்புதல் அளித்தார் வாசன்.

பிரக்ருதியும் அவளது அறைக்குள் ஓட அவளைத் தொடர்ந்தாள்.

“ஏன்டி அங்கிள் கிட்ட பொய் சொன்ன?”

பிரக்ருதி மாட்டிக்கொண்டவளைப் போல விழித்தாள்.

“என்ன முழிக்கிற?” என அதட்டினாள் பிரக்யா.

“அது வந்து...” என இழுத்தவளின் காது மடலைப் பிடிக்க முயன்றாள் அவள்.

“சொல்லிடுறேன் பிரகி” என வலிக்கு அஞ்சி உண்மையைக் கூற ஆரம்பித்தாள்.

“ஆக்ஸ்வலி ஏர்போர்ட்டுக்குப் போறது வரைக்கும் உண்மை தான்... ஆனா ஆஸ்திரேலியால இருந்து வர்றது கவினோட சிஸ்டர் இல்ல... எங்க க்ளாஸ்மேட் மஹதி” என்றாள்.

“அவளுக்கென்ன இப்ப?”

“அவளை கவின் ஒன்சைடா லவ் பண்ண ஆரம்பிச்சிட்டான்”

“இது எப்ப இருந்து?”

“ரெண்டு நாளுக்கு முன்னாடி அவ இன்ஸ்டால இந்தியாக்கு வரப்  போறதா போஸ்ட் போட்டிருந்தா... அதை அவன் கிட்ட காட்டுனப்ப ஹீ ஃபெல் இன் லவ்”

பிரக்யா புரியாமல் விழித்தாள்.

“இது என்னடி லவ்வு?” என்று கேலியாய் கேட்கவும் செய்தாள்.

“ஏன்டி ராமன் – சீதை, ரோமியோ – ஜூலியட் இவங்கல்லாம் லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்னு சொன்னா காவியம் லெவலுக்குப் புகழுறிங்க... கவின் – மஹதி பண்ணுனா மட்டும் கிண்டலா இருக்கா உங்களுக்கு?” என்று பொங்கியெழுந்தபடி ஷாம்பூ மற்றும் கண்டிஷனர் பாட்டில்களை எடுத்துக்கொண்டாள் பிரக்ருதி.

“உங்க நண்பனோட தெய்வீக காதலுக்கு உதவப்போறிங்க... அதானே?” என்றபடி மீண்டும் சமையலறைக்குள் புகுந்து கொண்டாள்.

பிரக்ருதி வேறேதும் கூறாமல் குளியலறைக்குள் புகுந்து கொண்டாள். அவள் குளிக்கும் போதே கவின் அவளது மொபைலுக்கு அழைத்தான்.

அழைப்பை ஏற்றது பிரக்யா.

எடுத்ததும் அவளென தெரியாமல் “ஏன்டி இப்பிடி ஒரு காலர் டியூன் வச்சிருக்க? எனக்குத் தெரியாம லவ் கிவ் எதுவும் பண்ணுனியா? ‘ஐயோ சாமி நீ எனக்கு வேண்டாம்’னு ஆல்பம் சாங் வந்ததும் நான் அப்பிடியே ஷாக் ஆகிட்டேன்” என்றான் கவின் படபடவென.

“ஹலோ ஹலோ! மிஸ்டர் ரோமியோ! நான் கிருதி இல்ல, பிரகி” என பிரக்யா கூறியதும்

“சாரி சிஸ்டர்... நான் கிருதி லூசுனு நினைச்சிட்டேன்” என்று அசடு வழிந்தான் அவன்.

“கிருதி எங்க?” என்று அவன் கேட்க

“குளிக்க போயிருக்குறா... டோண்ட் வொரி... அங்கிளை சமாளிச்சிட்டா... சொன்ன டைமுக்கு நீங்களும் அவளும் ஏர்போர்ட்டுக்குப் போய் உங்க ஆளை பிக்கப் பண்ணிக்கலாம்” என்றாள் பிரக்யா குறும்பாக.

“இப்ப நீங்க என்ன சொன்னிங்க? என் ஆளுனா சொன்னிங்க?”

“ஆமா”

“ஐயோ சிஸ்டர் இவ்ளோ நல்ல வார்த்தைய சொன்ன வாய்க்குள்ள குலாப்ஜாமூனைத் தான் போடணும்... இதை கேக்கப்பவே எனக்கும் மஹதிக்கும் கல்யாணம் ஆகி டெலிவரி வார்ட் வாசல்ல டென்சனா நிக்குற என் கையில நர்ஸ் என் ஜாடையில ஒரு பேபி கேர்ளை குடுத்து ‘உங்க ஒய்ப் மஹதிய கொஞ்சம் நேரம் கழிச்சு பாக்கலாம்’னு சொல்லுற மாதிரிலாம் கற்பனை பறக்குதே... ஓ! மை கடவுளே!”

கவின் அவன் பாட்டுக்கு உற்சாகத்தில் பிதற்ற பிரக்யா மறுமுனையில் பொங்கி வந்த சிரிப்பை அடக்கச் சிரமப்பட்டாள்.

அதேநேரம் கேசவின் வீட்டில் உணவு மேஜையில் அனைவரும் அமர்ந்திருக்க ஷ்ரவனும் அவர்களோடு இருந்தான்.

சாப்பாடு எடுத்து வைக்கப்பட்டிருக்க எவ்வித குற்றவுணர்ச்சியும் இல்லாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தான் சரண். அவனது தந்தையும் அவ்வாறே!

அவர்களை இப்படியே சாப்பிட விட்டால் நிச்சயம் கேசவின் பொழுது நிம்மதியாக கழியாது. ஷ்ரவனை அர்த்தம் பொதிந்த பார்வை பார்த்தவன் தொண்டையைச் செருமி அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தான்.

பத்மானந்த் என்னவென மைந்தனை நோக்க அவனோ “அந்த நிகிதாக்கு செட்டில்மெண்டா எவ்ளோ குடுத்திங்க டாட்?” என்று கேட்டான் சாதாரணமாக.

அதை கேட்டதும் கமலானந்துக்கும் சரணுக்கும் புரையேறியது. இருவரும் இரும ஆரம்பிக்க அதை பார்த்ததும் உற்சாகம் குமிழிட்டது ஷ்ரவனுக்கும் கேசவுக்கும்.

நிகிதா என்ற பெயரைக் கேட்டதற்கே புரையேறுகிறதா? நன்றாக ஏறட்டும்.  இனி இவர்கள் இருவரும் வாழ்நாளின் ஒவ்வொரு நாளையும் இத்தகைய பதற்றத்துடன் தான் கழிக்க வேண்டுமென மனதிற்குள் கறுவிக்கொண்டான் கேசவ்.

“சொல்லுங்க அங்கிள்... நிகிதாக்கு எவ்ளோ  பணம் குடுத்திங்க?” என்று ஷ்ரவனும் கேட்க

“அந்தச் சமாச்சாரத்த நான் சரண் கிட்ட ஒப்படைச்சிட்டேன்... அவனை கேட்டா தெரிஞ்சிடப்போகுது” என்றார் அவர்.

இப்போது நண்பர்கள் சரணை நோக்க அவனோ மேஜை மீதிருந்த டிஷ்யூவால் வாயைத் துடைத்தான்.

பின்னர் பதற்றத்தை மறைத்தபடி “அவ டூ க்ரோர்ஸ் வாங்குனா ஷ்ரவன்” என்றான்.

“அவ ரேஞ்சுக்கு டூ க்ரோர்ஸ் ரொம்ப அதிகமா தோணுது” என்றபடி பழச்சாறை அருந்தினான் கேசவ்.

“என்ன பண்ணுறது? ஒரு முட்டாளை மகனா பெத்ததுக்கு ரெண்டு கோடி ரூபா எனக்கு நஷ்டம்” என இரக்கமற்று மொழிந்தார் பத்மானந்த்.

அவரது பதிலில் எரிச்சலுற்று பழச்சாறு காலியான கண்ணாடி கோப்பையை டொம்மென்ற சத்தத்துடன் வைத்தான் கேசவ்.

“நீரவை பத்தி தப்பா பேசாதிங்க அங்கிள்” என்றபடி எழுந்தான் ஷ்ரவன்.

சுசித்ரா பதறியவராக “பாதி சாப்பாட்டுல எழுந்திருக்க கூடாது ஷ்ரவன்” என்றார்.

“ஃப்ரெண்டை சொன்னா உனக்குக் கோவம் வருதா? முட்டாளை முட்டாள்னு சொன்னா உனக்கு ஏன் கோவம் வருது?”

பத்மானந்த் விரக்தியாக கூற கேசவ் அவரை முறைத்தான்.

“நீரவ் என்னை விட புத்திசாலினு உங்களுக்குத் தெரியும்... அவனை முட்டாளாக்குறதுக்காக இங்க இருக்குற சிலர் சதி பண்ணுனாங்கனு நான் எத்தனை தடவை சொல்லியும் நீங்க நம்பல... இப்பவும் சதி பண்ணுனவங்களை கூட வச்சிட்டு இறந்தவனை முட்டாள்னு சொல்லுற நீங்க தான் உலகத்துலயே பெரிய முட்டாள்... இன்னொரு தடவை இந்த வீட்டுல என் அண்ணனை பத்தியோ அம்மாவ பத்தியோ யாராச்சும் தப்பா பேசுனிங்கனா மரியாதை கெட்டுடும்”

எச்சரித்தபடி எழுந்தவன் கமலானந்தையும் சரணையும் பார்வையால் எரித்தபடியே

“நீரவ் ஏன் நிலச்சரிவுல மாட்டுனான், அவன் ஏன் அங்க போனான்ங்கிறதுலாம் இப்ப வரைக்கும் புரியாத புதிரா இருக்குல்ல.. அந்த புதிருக்கு நான் சீக்கிரமா விடை கண்டுபிடிப்பேன்... என் அண்ணன் செத்தது விபத்து இல்ல... அது ப்ரீ-ப்ளாண்ட் மர்டர்... அதுக்கு காரணமானவங்களை நான் சும்மா விடமாட்டேன்” என்றான்.

“ஷட்டப் கிரிஷ்... அப்ப இருந்து நீ இதையே சொல்லிட்டிருக்குற... ஆனா அதுக்கு உன் கிட்ட என்ன ஆதாரம் இருக்கு? உன் அண்ணன் அவனோட முட்டாள்தனத்தால இறந்தான்... உங்கம்மா புத்திரசோகத்தால சூசைட் பண்ணி என் மானத்த வாங்குனா... மறுபடி மறுபடி அதை ஞாபகப்படுத்தாத”

கடுங்கோபத்துடன் சாப்பாட்டு தட்டை தள்ளிவிட்டு எழுந்து சென்றார் பத்மானந்த்.

கேசவ் அவரிடம் ஏதோ சொல்லப்போக அவனது புஜத்தைப் பற்றி தடுத்து நிறுத்தினான் ஷ்ரவன்.

“அவர் சொன்ன மாதிரி ஆதாரத்தோட வருவோம்... அது வரைக்கும் நீ டென்சன் ஆகாத... மும்பை ஃப்ளைட்டுக்கு இன்னும் கொஞ்சநேரம் தான் இருக்கு... கிளம்பலாம்”

அதன் பின்னர் விவாதங்களில் நேரத்தை விரயமாக்காமல் இரு தோழர்களும் விமான நிலையத்துக்குக் கிளம்பினர். காரில் சென்று கொண்டிருந்த கேசவின் மனதில் சுனாமி அடித்துக்கொண்டிருந்தது.

அதை இன்னும் பன்மடங்காக்கும் வல்லமை படைத்தவளான பிரக்ருதியை அவன் மீண்டும் நேருக்கு நேர் சந்திக்கும் நிகழ்வு அரங்கேறப்போவது அறிந்து விதி சிரித்துக்கொண்டது. இந்தச் சந்திப்பு இருவரது பிரிவுத்துயரையும் அதிகரிக்குமா? அல்லது காதல் உண்டாக்கிய காயத்தை இன்னும் ஆழமாக்குமா? அதை தீர்மானிக்கப் போவது கேசவும் கிருதியும் உதிர்க்கப் போகும் வார்த்தைகளே!


Comments

  1. 👌👌👌👌👌👌👌👍👍👍👍

    ReplyDelete

Post a Comment