அலைவரிசை 59

 



“உலகத்துல எனக்குச் சேலஞ்சிங்கான மொமண்ட் என்ன தெரியுமா? மன்னிப்பு கேக்குறது... இட்ஸ் மே பி வியர்ட்... பட் இப்ப வரைக்கும் நான் யார் கிட்டவும் மன்னிப்பு கேட்டதில்ல, எக்சப்ட் ஷ்ரவன்... அவன் கிட்டவும் பொலைட்டா தலைகுனிஞ்சு நான் மன்னிப்பு கேக்கல... தப்பே செஞ்சாலும் ஆட்டிட்டியூடை விட்டு இறங்காம சாரி கேக்குறதுல நான் பத்மானந்தோட வாரிசு... இப்ப நான் கிருதி கிட்ட எப்பிடி சாரி கேக்குறதுனு யோசிச்சு யோசிச்சு என்னை நானே குழப்பிட்டிருக்குறேன்... ஒன் கப் ஃப்ராப்புசீனோ குடுத்து சாரி கேக்கலாமா? சப்போஸ் அதை அப்பிடியே என் முகத்துல ஊத்திட்டானா அதை விட அசிங்கம் எனக்கு வேற எதுவுமில்ல... வேர்ட்ஸை வேஸ்ட் பண்ணாம பசக்குனு ஒரு கிஸ் பண்ணி சாரி கேளுனு என் மனசாட்சி சொல்லுது... நான் கிருதி கிட்ட செருப்படி வாங்குறதுல அதுக்கு ஏன் இவ்ளோ ஆர்வம்னு தெரியல... கிஸ் பண்ணி அவளுக்குள்ள இருக்குற குட்டி விஜயசாந்திய ஆக்டிவேட் பண்ண எனக்கு விருப்பமில்ல... எந்த ஃபைட்டும் ஆர்கியூமெண்டும் இல்லாம பொலைட்டா ஒரு சாரி பார்சல்னு எனக்கு நானே ஆர்டர் போட்டுக்கிட்டு அவ கிட்ட மன்னிப்பு கேக்க ரெடியாயிட்டிருக்குறேன்... God only knows whether she will forgive me or not”

                                              -கே.கேவின் மனதின் குரல்

அபராஜித்துடன் வயநாட்டுக்குப் பயணமாகிக் கொண்டிருந்தார் பத்மானந்த். அவரது நீண்ட மௌனம் அவனுக்குப் புதிதில்லை. ஏனென்றால் அலுவல்ரீதியாக கூட அவரிடம் பேசியறியாதவன் அவன்.

பேசுவதற்கான வாய்ப்புகள் அனேகம் இருந்த போதிலும் பத்மானந்தைப் பொறுத்தவரை பணியாளர்களிடம் அதிகம் பேச்சுவார்த்தை வைத்துக்கொள்ள விரும்பமாட்டார்.

மாதமானால் சம்பளம் கொடுப்பதுவும், திறமைக்கேற்ப பணியுயர்வும் ஊதியவுயர்வு கொடுப்பதும் அவர்களுக்குக் கொடுக்கும் மரியாதை. அது போதாதா என்பதே பத்மானந்தின் மனநிலை.



அப்படிப்பட்டவரை இன்று காலம் ஒரு ஊழியனின் உதவியோடு பயணிக்க வைத்துவிட்டது. ஆனால் இப்போதைய பத்மானந்த் இந்நிலைக்காக வருத்தப்படவில்லை. நீரவின் மரணம் குறித்த உண்மைகளும், சரணின் துரோகத்திற்கான ஆதாரங்களும் கிடைப்பதற்கு அபராஜித்தின் உதவி அளப்பரியது என்பது அவருக்கும் தெரியும். அதற்கான நன்றிக்கடனாக அவனுக்கு இன்னும் உயர்ந்த பணியை வழங்க வேண்டுமென மனதுக்குள் நேற்றே தீர்மானித்திருந்தார்.

இப்போதைய மௌனத்திற்கான காரணம் நிகிதா. என்ன தான் அவள் மனம் மாறியிருந்தாலும் ஒரு காலத்தில் அவளும் பணத்திற்காக நீரவுக்குத் துரோகம் இழைத்திருக்கிறாள் அல்லவா!

அவளைப் பற்றி நினைத்தால் சரணது நினைவும் கூடவே வந்து தொலைந்தது. அவனை பற்றி யோசித்தால் கோபமும் அருவருப்பும் மட்டுமே மிஞ்சியது. 

நினைவுகள் நீரோடையைப் போல சலசலக்காமல் ஆழிப்பேரலையாய் அவரை அலைக்கழித்த போது அதன் நடுவே சிக்கிக்கொண்ட சிறு ஓடமாக மௌனத்தில் தத்தளித்துக் கொண்டிருந்தார் பத்மானந்த்.

சரணைப் பழிவாங்க என்ன செய்யவேண்டும்? எவ்வாறு கமலானந்தை பழி தீர்க்க வேண்டுமென நேற்றிரவே தெளிவாகத் திட்டம் தீட்டியவர் அதை செயல்படுத்த நிகிதாவைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது அத்திட்டத்தின் முக்கிய திருப்பம்.

வயநாட்டில் அவளது வீட்டின் முன்னே சென்று இறங்கும் வரை நிகிதா மீதிருந்த பரிதாபம் அங்கே சென்று இறங்கியதும் துளி கூட இல்லாமல் அகன்றது.

இத்தனை வசதிக்கும் காரணம் என் மகனை விட்டு இவளைப் பிரிக்க நான் கொடுத்த இரண்டு கோடி. என் மைந்தனின் வருங்காலத்துக்காக நான் கொடுத்த பணத்தை வைத்து அவனுக்குச் சமாதி கட்டிய இவர்களை நான் ஏன் சும்மா விட வேண்டும்?

அவருக்குள் உறங்கிக்கொண்டிருந்த அசுர குணம் விழித்துகொண்டு பழிவெறியோடு நிகிதாவின் வீட்டுக்குள் நுழைந்தது அபராஜித்துடன்.

அவரைக் கண்டதும் பணிப்பெண் அன்னா குழம்பி நின்றார். பின்னர் நிகிதாவை அழைத்தார்.

அறைக்குள்ளிருந்து வந்த நிகிதா அபராஜித்தோடு நின்று கொண்டிருந்த பத்மானந்தைக் கண்டதும் “சார் வாங்க” என்று பணிவாக உபசரித்தாள்.

“உக்காருங்க சார்”

அன்னாவிடம் அவருக்குச் சாப்பிட சிற்றுண்டி எடுத்து வரும்படி வேண்டினாள்.

“ஒன்னும் வேண்டாம்... நான் பேச வந்ததை பேசிட்டுக் கிளம்புறேன்” என்றார் பத்மானந்த் சுருக்கமாக.

அவரது ஒட்டாத பேச்சு நிகிதாவுக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை. ஒரு காலத்தில் தேயிலை எஸ்டேட் அலுவலகத்தின் சுவர்களில் அலங்கரித்த போட்டோ ஃப்ரேம்களில் மட்டும் பார்த்த முகத்தை அன்று தான் நேரில் காண்கிறாள். அவரது உயரம் இத்தனை தூரம் அவரை வர அனுமதித்ததே பெரிது.

“உக்காரும்மா... உன் கிட்ட நான் தனியா பேசணும்”

பத்மானந்தின் பார்வை அன்னாவைச் சுட்டிக்காட்டியது.

“நீங்க சூப்பர் மார்க்கெட்டுக்குப் போய் ப்ரொவிசன் வாங்கிட்டு வாங்க” என அவரை அனுப்பி வைத்தவள் பத்மானந்திடம் என்ன விசயமென வினவினாள்.

“நான் உனக்கு ஒரு வேலை குடுக்கலாம்னு வந்திருக்குறேன்”

பலமான பீடிகையோடு ஆரம்பித்தார் பத்மானந்த்.

“நீங்க? எனக்கா?” தயக்கத்தோடு நிகிதாவின் குரல் வெளிவந்தது.

“அஃப் கோர்ஸ்... நீ எனக்குக் கடமைப்பட்டிருக்கம்மா... எப்பிடினு கேக்குறியா? உன்னை நீரவை விட்டு பிரிக்குறதுக்காக நான் குடுத்த ரெண்டு கோடு ரூபா தான் இப்ப இந்த வீடா நிக்குது... மிச்சமீதி உன் பேங்க் அக்கவுண்ட்ல உறங்குது... எந்த கைமாறும் எதிர்பாக்காம எப்பிடி அனாமத்தா அந்த ரெண்டு கோடிய காந்தி கணக்குல விட முடியும்? ஐ அம் அ பிசினஸ்மேன்... குடுத்த காசுக்கு வேலை குடுக்க வந்திருக்குறேன்... நீ அதை செஞ்சு தான் ஆகணும்... செய்யலனா உன்னை இரக்கப்பட்டு விடுறதுக்கு நான் கிரிஷ் இல்ல... அவனோட அப்பன்... பிசினஸுக்காக குடும்பத்தை விட்டுக்குடுத்தவன் மகனுக்காக உன்னை இல்லாம ஆக்குறதுக்குக் கொஞ்சம் கூட யோசிக்க மாட்டேன்... த பால் இஸ் இன் யுவர் கோர்ட்”

அவர் பேச பேச வயநாட்டின் சீதோஷ்ணத்தில் கூட நிகிதா வியர்ந்து வழிந்தாள். அது பயத்தினால் உற்பத்தியான வியர்வை.

குரல் உயர்த்தாமல் மோசமான வார்த்தைகளை உதிர்க்காமல் ‘பார்லிமெண்டரி’ என்ற பதத்திற்கு உதாரணமாக தனது மிரட்டலை கட்டளை வடிவில் நிகிதாவிடம் கூறி முடித்த பிறகு பத்மானந்த் எதுவும் நடக்காதது போல மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு தோரணையாக அமர்ந்து கொண்டார்.

நிகிதா வியர்வையைத் துப்பட்டா நுனியால் நாசூக்காக ஒற்றியெடுத்தவள் “இப்ப நான் என்ன செய்யணும்?” என்று தயங்கியவாறு கேட்டாள் அபராஜித்தைப் பார்த்தபடியே.

பத்மானந்த் அவளது யோசனை போன போக்கைப் புரிந்துகொண்டவராக பேசினார்.

“ஹீ இஸ் நாட் லைக் யூ... உண்மையான ஸ்டாஃப்... பணத்துக்காக விலை போகமாட்டான்”

நிகிதாவுக்கு அவரது வார்த்தைகள் செருப்பாக மாறி கன்னத்தில் அறைந்ததை போன்ற பிரமை.



அவள் சிக்கியவளைப் போல விழித்தாள். துப்பட்டாவின் நுனி அவளது பயத்தில் அடிக்கடி முடிச்சாக மாறி மாறி அவிழ்ந்தது.

“நீ செய்ய வேண்டிய வேலை ரொம்ப சிம்பிள்... இன்னும் டூ டேய்ஸ்ல போர்ட் மீட்டிங் கூடப்போகுது... அதோட சரண், அவங்கப்பன் ரெண்டு பேரோட சேப்டரும் குளோஸ்... எல்லாம் முடிஞ்சுதுனு நினைச்சு அவன் தவிக்கிறப்ப நீ அவனுக்கு அடைக்கலம் குடுக்கணும்”

பத்மானந்த் பாதியில் நிறுத்தவும் “அந்தக் கொலைகாரனுக்கு நான் ஏன் அடைக்கலம் குடுக்கணும்? சனியன் ஜெயிலுக்குப் பொய் களி திங்கட்டும்” என அலறினாள் நிகிதா.

“த்சூ! எனக்குக் கத்துறது, அலறுறதுலாம் அலர்ஜி... நான் என் ஃப்ளானை முழுசா சொல்லிடுறேன்” என்றவர் தனது மீதி திட்டத்தையும் கூறி முடிக்கையில் நிகிதா அரண்டு போயிருந்தாள்.

“நான்... நானா... னா... நானா இதை செய்யணும்?” 

பயத்தில் நடுங்கியது அவளது குரல்.

“நீ தான் செஞ்சு முடிக்கணும்... நீரவ் எப்பிடி மூச்சு திணறி இறந்தானோ அதே மாதிரி அந்தச் சரணும் சாகணும்... உன் குழந்தை செத்ததுக்கு பழி வாங்குன மாதிரியும் ஆச்சு” என கூலாக உரைத்தார் பத்மானந்த்.

“நான் இதுல மாட்டிக்கிட்டா?” என கேட்டாள் அவள்.

“மாட்டுனா ஜெயிலுக்குப் போ... நீ வெளிய இருந்து மட்டும் என்ன சாதிக்கப் போற?” 

இளக்காரமாக அவர் கேட்ட விதத்தில் அயர்ந்து போனாள் நிகிதா.

“லுக்! நான் சொன்னபடி செஞ்சு முடிச்சா அவன் செத்ததுக்கான காரணம் யாருக்கும் தெரியாது... அப்பிடியே தெரிஞ்சாலும் உனக்கும் உன் குழந்தைக்கும் நடந்த அநியாயத்துக்கு நீ பழி வாங்குனதா தான் இருக்கணும்... இதுல என் பேர் வெளிய வரக்கூடாது... மீறி வந்துச்சுனா பத்மானந்தோட ஒரிஜினல் வில்லத்தனத்தை நீ பாப்ப... என்னை சிக்கல்ல மாட்டிவிட நினைச்சா கூட நான் கண்டுபிடிச்சுடுவேன்”

அவரது குரலில் இருந்த வெஞ்சினத்தில் அபராஜித்தே ஆடிப்போய்விட்டான்.

நிகிதா மட்டும் எம்மாத்திரம்? எனவே வேறு வழியின்றி சரணை ஒழித்துக்கட்ட சம்மதித்தாள் அவள்.

“ஸ்மார்ட் கேர்ள்... நீ மாட்டாதபடி நான் பாத்துக்குறேன்... இது நான் உனக்குக் குடுக்க நினைச்ச பனிஷ்மெண்ட்ல இருக்குற டிஸ்கவுண்ட்... ஏன் தெரியுமா? என் மகன் ஒரு காலத்துல உன்னைக் காதலிச்சிருக்குறான், அந்த ஒரு காரணத்துக்காக... ஆனா நீ அதை என்னோட வீக்னெஸ்னு நினைச்சு டபிள் கேம் ஆட ட்ரை பண்ணுனா, ஐ வில் ஷோ மை ரியல் ஃபேஸ்”

மிரட்டியவர் அபராஜித்தை அழைத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினார்.

நிகிதா அவர் செய்ய சொன்ன காரியத்தின் தீவிரத்தை எண்ணி எண்ணி மலைப்பும் பயமுமாக நின்றாள்.

****** 

கார்கி குரூப் ஆப் இண்டஸ்ட்ரீஸ் தலைமை அலுவலகம்...

போர்டின் முக்கிய உறுப்பினர்கள், இயக்குனர்கள், ஸ்டேக்ஹோல்டர்களின் பிரதிநிதிகள் என அனைவரும் குழுமிருயிந்த கூட்டத்தின் நடுநாயகமாக அமர்ந்திருந்தான் கேசவ்.

கார்கி டெலிகாம் லிமிட்டட் மீது சுமத்தப்பட்டுள்ள 4G லைசென்ஸ் முறைகேடு வழக்கால் ஒட்டுமொத்த கார்கி குழுமத்தின் பங்குகளும் பங்குச்சந்தையில் படிப்படியாக இறங்குமுகத்தைச் சந்தித்துக் கொண்டிருப்பதை குறிப்பிட்டு குழுமத்தின் எதிர்காலத்துக்காக கூட்டப்பட்ட மீட்டிங் என்ற அறிவிப்போடு கூட்டம் ஆரம்பித்தது.

அக்கூட்டத்தில் 4G லைசென்ஸ் விவகாரத்தில் மொத்த கார்கி குழுமமும் சிக்க காரணமாக காட்டப்பட்டவர்கள் சரணும் கமலானந்தும்.

போர்ட் உறுப்பினர்களோடு மற்றவர்களும் அதிர குழுமத்தின் தரப்பிலும் சில ஆதாரங்கள் வைக்கப்பட்டன. இரண்டு இயக்குனர்கள் அவர்களது பொறுப்பிலிருந்து வழுவி அவர்களின் சுயலாபத்துக்காக செய்த இந்த முறைக்கேட்டுக்கு முழு குழுமமும் பலியாவது நியாயமில்லை என்பதை தனது தரப்பு வாதமாக முன்வைத்தான் கேசவ்.

கூடவே இந்த வழக்கில் ஆளுங்கட்சி எவ்வளவு தீவிரமாக இருக்கிறார்கள் என்பதையும் அடிக்கோடிட்டுக் காட்டினான் அவன். இந்த முறைக்கேட்டில் கார்கி குழுமம் நிரபராதி என்பது நிரூபிக்கப்பட வேண்டியதற்கான அவசியத்தை ஷ்ரவன் தனது தரப்பில் எடுத்துரைத்தான்.

இனியும் அவர்கள் இயக்குனர்களாக நீடித்தால் கார்கி குழுமத்தின் பெயர் சீரழிந்துவிடும்; அவ்வாறு சீரழிந்தால் பங்குதாரர்களின் நிலை அதோகதியாகிவிடும் என்பதை இருவரும் அழுத்தம் திருத்தமாக பதிவுசெய்தனர். 

சரண் மற்றும் கமலானந்த் மீது மினிஸ்ட்ரி ஆப் கார்பரேட் அஃபையர்சில் முதலீட்டாளர்கள் புகார் தெரிவிப்பது, சரணையும் கமலானந்தையும் இயக்குனர்கள் பொறுப்பிலிருந்து நீக்குவதற்காக ‘Ordinary resolution’ நிறைவேற்றப்படுதல் போன்றவை ஒரே சீராக நடந்தேறியது.

அவர்களின் பங்குகளை யார் கைவசப்படுத்துவது என்பது பின்னர் முடிவெடுக்கப்படும் என்ற அறிவிப்போடு அந்த மீட்டிங் முடிவடைய பெரும் பாரம் ஒன்று மனதிலிருந்து இறங்கியது கேசவிற்கு.

இனி குமாரவேலு சரணும், கமலானந்தும் சபீனா சர்மாவோடு சேர்ந்து 4G லைசென்ஸ் பெறுவதற்காக லஞ்சம் கொடுத்த வீடியோ ஆதாரங்களையும், ஆவணங்களையும் சி.பி.ஐயிடம் ஒப்படைப்பது மட்டும் தான் பாக்கி.

ஷ்ரவனிடம் கமலானந்தும் சரணும் என்ன செய்கிறார்கள் என விசாரிக்கச் சொன்னான்.

அவன் விசாரித்தவரையில் இருவரும் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் ஆரம்பிக்கும் முன்னர் இந்தியாவை விட்டு வெளிநாட்டுக்கு ஓடுவதற்கான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளதாக தகவல் கிடைத்தது.

அதை உடனே குமாரவேலுவுக்குத் தெரிவிக்கும்படி கட்டளையிட்டான் அவன்.



ஷ்ரவனும் அவன் சொன்னதை குமாரவேலுவிடம் தெரிவித்தான்.

“கவலைப்படாதிங்க... அவங்க ரெண்டு பேரும் எங்கயும் தப்பிக்க முடியாது... ஏர்போர்ட் அத்தாரிட்டியை வார்ன் பண்ணுவோம்... லோக்கல் போலீஸையும் அலர்ட் பண்ணிடுவோம்... இந்த கேஸ்ல உள்ள போனாங்கனா வெளிய வர்றது சிரமம்... நீங்க என் கிட்ட சொல்லிட்டிங்கல்ல, கவலைய விடுங்க” என அவர் பொறுப்பேற்றுக்கொண்டார்.

சரண் – கமலானந்த் விவகாரம் இனி முடிந்ததென திருப்தியுற்றவன் சுசித்ராவை பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரித்தான். வீட்டிலிருந்து கிளம்பும் போதே அவரது பாதுகாப்புக்காக ப்ரைவேட் பவுன்சர்களை நியமித்துவிட்டு தான் வந்திருந்தான். 

முடிவாக இலகுவாக உணர்ந்தவன் இனி அடுத்து தனது சொந்த வாழ்க்கையைக் கவனிக்கும் முடிவுக்கு வந்தான்.

“நான் கிருதி கிட்ட பேசிட்டேன் கிரிஷ்... இன்னைக்கு ஈவ்னிங் மீட்டிங் கன்ஃபார்மா நடக்கும்டா... ஒரே ஒரு ரெக்வஸ்ட்” என்றான் அவன்.

“என்னடா?”

“தயவுபண்ணி ஆட்டிட்டியூடை குறைச்சிக்க... நீ கொஞ்சம் ஆட்டிட்டியூட் காட்டுனா அவ எவரெஸ்ட் லெவல்ல காட்டுவா... அப்புறம் ஒட்டுமொத்த மீட்டிங்கும் ஸ்பாயில் ஆகிடும்”



“எப்பா சாமி! எத்தனை தடவை இதையே சொல்லுவ? நான் ஆட்டிட்டியூட் காட்ட மாட்டேன்... மரியாதையா பேசுவேன்... மனப்பூர்வமா மன்னிப்பு கேப்பேன்... இவ்ளோ ஏன், கால்ல கூட விழுவேன்... போதுமா? இதுக்கு மேல என் கிட்ட பணிவை எதிர்பாக்காத ஷ்ரவன்”

“சரி சரி! கோச்சுக்காத மச்சி... எல்லாம் உன் லவ் லைஃபுக்காக தானே”

கேசவைச் சமாதானம் செய்து மாலை மெட்ரோ ஸ்டேஷன் சந்திப்புக்காக ஷ்ரவனும் தயாரானான்.

Comments

Post a Comment