பூங்காற்று 42

Image
  நீரஜாட்சி திருமணம் முடிந்த மறுநாளே ரகுநந்தனிடம் தனது நிறைவேறாத திட்டம் பற்றி சொல்ல தக்க தருணத்தை எதிர்நோக்கியிருக்க அவன் ஹோட்டலின் வேலை காரணமாக சென்றுவிட அவளால் அவனிடம் அதை கூறவே முடியவில்லை. அதை தொடர்ந்த நாட்களில் வீட்டில் அனைவரும் ஒரு புறம் ஹர்சவர்தனின் ஹோட்டல் திறப்புவிழாவை பற்றி பேசிக் கொண்டிருக்க இன்னொரு புறம் கிருஷ்ணஜாட்சியும் கரோலினும் சேர்ந்து அவர்கள் திறக்கப் போகிற " டாம் ' ஸ் கஃபே" தொடர்பான வேலைகளில் அலைந்து திரிய இந்த இரண்டு திறப்புவிழாக்களே அங்கிருந்தவர்களின் மொத்த நேரத்தையும் எடுத்துக் கொண்டன. ஹர்சவர்தன் அது விஷயமாக ரகுநந்தனை அழைத்துச் சென்றுவிட நீரஜாட்சி அலுவலக வேலையில் மட்டுமே கவனம் செலுத்தினாள். பெரும்பாலான நேரங்களில் அவன் வீடு திரும்பும் போது அவள் உறங்கிப் போயிருக்க அந்த உண்மை வெளிவராமலே இருந்தது. ஆனால் அவளது தோழி கவிதா இது ரகுநந்தனுக்கு தெரியவருவது அவர்களின் உறவுக்கு நல்லதல்ல என்று ஒவ்வொரு முறை போனில் பேசும் போதும் நீரஜாட்சிக்கு அறிவுறுத்துவாள். நீரஜாட்சிக்கு தன்னை இவ்வளவு காதலிக்கும் தன் கணவனிடம் அவன் சம்பந்தப்பட்ட விஷயத்தை மறைத...

🌺 பூங்காற்று 22 🌺

 

🌺 பூங்காற்று 22 🌺

பத்மாவதி நடந்த எதையும் நம்ப இயலாதவராய் இடிந்து போய் நின்றவர் மீண்டும் ஒரு முறை மணமேடையில் மகனுடன் நின்றிருந்த கிருஷ்ணஜாட்சியை நோக்க அவள் கழுத்திலிருந்த மாங்கல்யம் அவரைப் பார்த்துச் சிரித்தபடி நடந்தது அனைத்தும் உண்மையே என்று புரியவைத்தது. அவரின் மனக்கண்ணில் அரை மணி நேரத்துக்கு முன்பு நடந்த நிகழ்வுகள் நிழலாடத் தொடங்கின.

பட்டாபிராமன் பேத்தி மற்றும் பேரனின் கையைச் சேர்த்து வைத்து கண்ணீர் உகுக்க கூட்டத்தினர் சளசளத்துக் கொண்டிருந்தனர். வேங்கடநாதனோ பேரன் திருமணம் நடந்தால் தான் மருத்துவமனைக்கு நகருவேன் என்று குழந்தை போல் தந்தை அடம்பிடித்ததால் வேறு வழியின்றி மருமகளை எழுப்பிவிட்டார்.

"கிருஷ்ணா! என்னடா மாமா இவ்ளோ சுயநலமா பேசறேனு நினைச்சுக்காதம்மா குழந்தே. ஒரு கல்யாணத்துல நிகழ்ந்த அனர்த்தத்தால ரெண்டு குடும்பங்கள்ல ஏகப்பட்ட இழப்புகள் நடந்திடுத்து. அது மறுபடியும் நிகழாம இருக்கணும்னா உன் தாத்தா சொல்லுறதை கேளுடா! அவருக்கு எதாவது ஆயிடுமோனு நேக்கு பயமா இருக்குடிம்மா. தயவு பண்ணி..." என்று அவர் கைகூப்பவே கிருஷ்ணஜாட்சி பதறிப்போய் அவர் கையைப் பிடித்துக் கொண்டாள்.

"என்ன மாமா நீங்க பெரிய பெரிய வார்த்தைலாம் பேசுறிங்க? நான்.... நான் கல்யாணத்துக்கு..... சம்..... சம்மதிக்கிறேன். நீங்க கண்ணைத் துடைச்சுக்கோங்க" என்றவளின் வார்த்தை நீரஜாட்சிக்கு தன் மீது தீயள்ளிக் கொட்டியது போன்று ருந்தது.

வேகமாக அவளிடம் வந்து "கிருஷ்ணா அவசரப்படாத" என்று ஏதோ சொல்ல வர அவளைக் கையமர்த்திவிட்டு மைத்திரேயியுடன் மணமகள் அறை நோக்கி உடை மாற்ற சென்றாள் கிருஷ்ணஜாட்சி.

நீரஜாட்சி அனைவரையும் ஒரு முறை பார்வையால் எரித்துவிட்டு அவளைத் தொடர்ந்து அந்த அறைக்குச் சென்றவள் மைத்திரேயியின் கையிலிருந்த புடவையை பிடுங்கி எறிந்து விட்டு "அவ மணமேடைக்கு வர மாட்டா! வெளியே போங்க எல்லாரும்" என்று கத்த மைதிலி அவளைச் சமாதானப்படுத்த முயன்றார். அவரின் முயற்சி அனைத்தும் விழலுக்கு இறைத்த நீர் போல் வீணாகவே கிருஷ்ணஜாட்சியே தங்கையை சமாதானப்படுத்த முயன்றாள்.

"நீரு அடம்பிடிக்காத. கல்யாணம் நடக்கலைனா அது தாத்தா மாமா எல்லாருக்கும் தலைகுனிவுடி! புரிஞ்சுக்கோ"

"ஆனா இந்த கல்யாணம் நடந்துச்சுனா வாழ்க்கை முழுக்க நீ அந்த பத்து மாமி முன்னாடி தலை குனியணும் கிருஷ்ணா! அவங்களுக்கு நம்மளை எப்போவுமே பிடிக்காது. பிடிக்காதவங்களை விட்டு விலகி இருக்கிறது தான் நல்லது கிருஷ்ணா"

"நீரு அவங்களைப் பத்தி மட்டும் யோசிக்காத! நீ பெரிய மாமா, சின்ன மாமாவை நினைச்சு பாரு. இந்த ஆறு வருசத்துல நமக்கு எவ்ளோ செஞ்சிருப்பாங்க அவங்க. அந்த நன்றிக்காவது நான் இந்த கல்யாணத்தை ஏத்துகிட்டு தான் ஆகணும்" என்றவளின் வார்த்தையில் துணுக்குற்றாள் நீரஜாட்சி.

"அவங்க நமக்கு என்ன செஞ்சாங்க? எனக்கு புரியல கிருஷ்ணா! நாம இத்தனை நாள் இருக்கிறதுக்கு ஒரு அவுட் ஹவுஸை குடுத்தாங்க. மத்தபடி எல்லாமே நம்ம அப்பாவோட பணம் கிருஷ்ணா! இதுல நன்றிக்கடன் எங்கே இருந்து வந்துச்சு?" என்று அவள் நம்பாத குரலில் கேட்க கிருஷ்ணஜாட்சி இனி அவளிடம் மறைத்து பயனில்லை என்று உணர்ந்தவள் உண்மையை சொல்லிவிட்டாள்.

"அப்பாவோட பணம்னு எதுவும் நம்ம கிட்ட இல்ல. நான் உன் கிட்ட பொய் சொல்லிட்டேன்" என்று சொன்னபடி கண் கலங்க நின்ற தமக்கையை இன்னும் நம்ப முடியாமல் வெறித்தாள் நீரஜாட்சி.

மைதிலி எதுவும் விபரீதமாக ஆகக் கூடாது என்று கிருஷ்ணஜாட்சியை தடுக்க முயல அவளோ "இல்ல சின்ன மாமி! எத்தனை நாளுக்கு இவ கிட்ட மறைக்க முடியும்?" என்று அவரை அமைதிப்படுத்திவிட்டு தங்கையை நோக்கினாள்.

"நல்லா கேட்டுக்கோ நீரு! அப்பாவோட பணம் எல்லாமே நம்ம வீட்டை பேங்க் லோன்ல இருந்து மீட்கவே சரியாப் போயிடுச்சு. இங்க வந்ததுல இருந்து நம்ம சாப்பிட்ட சாப்பாடுல இருந்து போட்டுக்கிட்டிருக்கிற டிரஸ் வரைக்கும் எல்லாமே மாமா குடும்பத்தோட செலவு தான். உன் அக்கா ஒன்னும் சூப்பர் விமன் இல்ல, மூனே வருசத்துல சம்பாதிச்சு கோடிஸ்வரி ஆகறதுக்கு. என் சம்பளம் எல்லாமே உன்னோட படிப்புக்கும், எதிர்காலத்துக்கும் சேர்த்து வச்சதால அதை நான் வேற செலவுக்கு எடுத்ததே இல்ல. அப்பாவோட பணம்னு சொன்னேன்ல, அப்பாவோட பணம் இருந்திருந்தா நான் ஏன் ஹோட்டல், பேக்கரினு ராத்திரி பகல் பார்க்காம உழைக்கப் போறேன் சொல்லு" என்று விரக்தியான குரலில் முடிக்க நீரஜாட்சிக்கு இனி சொல்வதற்கு எதுவுமில்லை என்று புரிந்துவிட்டது.

இவ்வளவு நாள் வாழ்ந்தது மாமா குடும்பத்தினரின் இரக்கத்தில் தான் என்ற உண்மை மனதைத் தாக்க அது ஏற்படுத்திய வலி தாளாமல் தொப்பென்று அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தவள் தான்.

அதன் பின் கிருஷ்ணஜாட்சிக்கு உடை மாற்றி அவளை மணமேடைக்கு அழைத்துச் செல்லும் வரை அவள் இடிந்து போய் தான் அமர்ந்திருந்தாள். மணமேடைக்கு சென்றதும் ஆதிவராஹன் தன் பெண் செய்த பிழைக்கு பரிகாரமாய் தானே கிருஷ்ணஜாட்சியை தாரை வார்த்துக் கொடுப்பதாகக் கூற அனைவருமே விஜயலெட்சுமி மறுப்பு சொல்லுவார் என்று எண்ணினர். அவரும் கிட்டத்தட்ட நீரஜாட்சியின் நிலையில் தான் இருந்தார். அவருக்கு ஏற்பட்ட இழப்பிலிருந்து அவர் இன்னும் மீளவில்லை.

நிறைய களேபரங்கள் நடந்துவிட்டதாலும், பட்டாபிராமனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதாலும் மாங்கல்ய தாரணம் மட்டும் செய்துவிட்டு மணமக்களை வீட்டுக்கு அழைத்துச் சென்று விடலாம் என்று கோதண்டராமன் கூறிவிட்டார்.

அதன் பின் அனைத்தும் அமைதியாகவே கழிய மாங்கல்யதாரணத்துக்குப் பின் மணமக்கள் பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கச் சென்றனர்.

பட்டாபிராமன் நடுங்கும் விரல்களால் பேத்தியின் தலையில் கைவைத்து ஆசிர்வதித்தவர் "வாழ்க்கையில நோக்கு எந்த குறையும் வரக் கூடாது ராஜாத்தி" என்று வாழ்த்திவிட்டு இன்னும் குத்தல் எடுக்கும் நெஞ்சை நீவி விடவே இவ்வளவு நேரம் தாத்தாவின் அருகில் நின்று அவரைப் பார்த்துக் கொண்ட ரகுநந்தன் தந்தையிடம் சொல்லிவிட்டு அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுவிட்டான்.

மணமக்கள் அடுத்து வேங்கடநாதன் பத்மாவதியை நோக்கி வர பத்மாவதி கிருஷ்ணஜாட்சியையும் அவள் கழுத்தில் மைந்தன் கட்டியிருந்த மாங்கல்யத்தையும் வெறித்தவர் ஆங்காரத்துடன் அங்கிருந்து நகர்ந்தவர் வேகமாக மண்டபத்தை விட்டு வெளியேறத் தொடங்கினார்.

இவ்வளவு நேரம் இயந்திரம் போல் இருந்த ஹர்சவர்தனுக்கு அன்னை கோபத்துடன் வெளியேறுவது உரைக்க "அம்மா!" என்றவாறு அவரைப் பின் தொடர வேகமாக நடக்க முயன்றான்.

கிருஷ்ணஜாட்சியின் புடவையின் நுனி அவனது வஸ்திரத்துடன் முடிச்சிடப்பட்டு இருக்கவே அவன் நடந்த வேகத்தில் அது அவிழ்ந்து விட்டது.

அந்தக் காட்சி அனைவரின் கண்ணுக்கும் அபசகுனமாகவே பட்டது. கிருஷ்ணஜாட்சிக்கோ இனி தன் வாழ்வு செல்ல போகும் திசை அந்த ஒரு சம்பவத்திலேயே புரிந்துவிட அவளது முகம் இறுகிவிட்டது. ஹர்சவர்தன் மனைவியின் முகத்தின் இறுக்கத்தை உணர்ந்து மீண்டும் முடிச்சிட முயல அவனால் முடியவில்லை.

அவனது நிலையை உணர்ந்த மைதிலி "டேய் கண்ணா! அக்கா ஆத்துக்கு தான் போயிருப்பா. நீ இப்பிடி அவசரக்குடுக்கைத்தனமாவா நடந்துப்ப?" என்று அவனை கடிந்தபடி மீண்டும் இரண்டையும் இணைத்து முடிச்சிட்டார்.

வேங்கடநாதனுக்கோ மனைவியின் ஆங்கார ரூபம் என்னென்ன செய்ய காத்திருக்கிறதோ என்ற தயக்கம். எனவே மணமக்களை காரில் போய் அமரச் சொன்னவர் மண்டபத்தின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்துவிட்டு கோதண்டராமனிடம் விருந்தினரை கவனிக்குமாறு சொல்லிவிட்டு அனைவரையும் அழைத்துக் கொண்டு ஸ்ரீனிவாசவிலாசத்துக்கு செல்லக் காரில் சென்று அமர்ந்தார்.

காரில் செல்லும் போதே நீரஜாட்சி கிருஷ்ணாஜாட்சியையும் ஹர்சவர்தனையும் திரும்பி பார்த்தவள் மனவேதனையுடன் தன் அருகில் அமர்ந்திருக்கும் சீதாலெட்சுமியின் தோளில் சாய்ந்து கொண்டாள்.

ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தவர்களுக்கு காலையில் கலகலப்பாக இருந்த வீடா இது என்ற வருத்தத்துடன் வீட்டை நோக்கி நடைப்போட்டனர். அவர்களுடன் மைத்திரேயி மற்றும் ஸ்ருதிகீர்த்தியின் குடும்பத்தினரும் வந்தனர்.

ஆதிவராஹன் தங்கை கிருஷ்ணஜாட்சியை எதுவும் மனம் கோணும்படி பேசிவிடக் கூடாது என்பதற்காகவே விஜயலெட்சுமியுடன் வந்து சேர்ந்தார்.

மைத்திரேயியும் மைதிலியும் அவர்களை கூடத்தில் நிறுத்திவிட்டு ஆரத்தி கரைத்து எடுத்து வரவே நீரஜாட்சிக்கு பத்மாவதி எங்கே என்ற கேள்வி தான்.

மைதிலி புன்னகையுடன் ஆரத்தி எடுக்கத் தொடங்க எங்கிருந்து தான் வந்தாரோ தெரியவில்லை, பத்மாவதி ஆரத்தி தட்டை தூக்கி வீசினார். கிருஷ்ணஜாட்சி சர்வமும் ஒடுங்கியவளாக விழியுயர்த்தி அவரைப் பார்த்தாள்.

தானும் தங்கையும் இதே கூடத்தில் வந்து முதன் முதலாக நின்றபோது அவர் எடுத்த அதே ஆங்கார ரூபம். அது இன்னும் என்னென்ன செய்யப் போகிறதோ என்ற கலக்கம் அவளுள் எழ சீதாலெட்சுமி மருமகளை அமைதிப்படுத்துமாறு மகனுக்கு  கண் காட்டினார்.

வந்திருந்தவர்களோ பத்மாவதியின் செய்கையில் அதிருப்தியாகி முணுமுணுக்க ஆரம்பித்தனர். ஹர்சவர்தன் எதுவும் பேசாமல் இடித்தபுளி போல் இருக்கவே வேங்கடநாதன் அவனை முறைத்துவிட்டு மனைவியிடம் வந்தார்.

"பத்மா! கோவப்படறதுக்கான நேரம் இது இல்லடி! குழந்தேளுக்கு ஆரத்தி எடுத்து உள்ளே அழைச்சிண்டு வந்துட்டு எதுவானாலும் பேசிக்கலாம். சம்பந்தி ஆத்துகாராலாம் வந்திருக்கா. எதும் நினைச்சிக்க போறாடி" என்க அந்தப் பெண்மணியோ அதை எல்லாம் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை.

ஆங்காரத்துடன் கணவரை வெறித்தவர் "நன்னா திட்டம் போட்டு மாமனும் மருமகளுமா சேர்ந்து என் ஹர்சாவோட வாழ்க்கையை நாசம் பண்ணிட்டேளே. உங்க ஓடுகாலி தங்கை பெத்த பொண்ணை இந்தாத்து மருமாளக்கணும்னு எத்தனை நாளா கனவு கண்டேள்?" என்க கிருஷ்ணஜாட்சிக்கு தன் அன்னையை அவ்வளவு மோசமாக திட்டும் பத்மாவதியை பார்க்கவே பிடிக்கவில்லை.

தானாக அவளின் கண்கள் கலங்க ஆரம்பிக்க அவள் மனமோ "இல்ல கிருஷ்ணா நீ அழுதது எல்லாமே  போதும். இனி நீ அழக் கூடாது" என்று அறிவுறுத்த கண்ணீரை விழுங்கியபடி நின்றாள். நீரஜாட்சியோ இது தான் நடக்கும் என்று ஏற்கெனவே எதிர்பார்த்திருந்ததால் அவளுக்கு இதில் அதிர்ச்சி எதுவும் இல்லை.

ஆதிவராஹன் "பத்மா என்ன நடந்ததுனு தெரிஞ்சும் கிருஷ்ணா மேல கோவத்தை காட்டுனா என்ன அர்த்தம்?" என்று அதட்ட அவர் தமையனின் கூற்றை காதில் போட்டுக் கொண்டால் தானே.

கிருஷ்ணஜாட்சி அரைமணிநேரத்துக்கு முன் தன்னை அக்னிசாட்சியாக மணந்து கொண்டவனாவது அன்னையை அமைதிப்படுத்துவான் என்று தோண அவனைப் பார்க்க அவனோ இன்னும் இறுகிப் போன முகத்துடன் நின்றான்.

அவள் விரக்தியுடன் "அது சரி! வர்ஷாவை மனைவியா நினைச்சு நிறைய கனவுகளோட இருந்திருப்பார்! இப்பிடி பிடிக்காத ஒருத்தியை தலையில கட்டிட்டாங்களேனு வெறுப்பில இருக்கார். இவர் எங்க பேசப் போறார்?" என்று எண்ணும்போதே தன் நிலை இப்படி ஆகி விட்டதே என்ற கழிவிரக்கம் அவளைச் சாகடித்தது.

"ஏதோ போனா போறதேனு அவுட் ஹவுஸில தங்க வச்சா இப்போ அவளுக்கு இந்த ஸ்ரீனிவாசவிலாசம் கேக்கறதோ? என்னால இவளை என்னைக்கும் மருமகளா ஏத்துக்க முடியாதுண்ணா! செருப்பு அழகா இருந்தாலும் யாரும் அதை பூஜையறையில வச்சுக்க மாட்டா. அதே மாதிரி தான் உங்க ஓடுகாலி தங்கை பெத்த இவளை என்னைக்குமே இந்த ஆத்துக்குள்ள நான் அனுமதிக்க மாட்டேன். என் ஹர்சா கட்டுன மாங்கல்யம் அவ கழுத்துல இருக்கறதே நேக்கு அருவறுப்பா இருக்கறது. அதை கழட்டச் சொல்லுங்கோ" என்று  வெறுப்பை உமிழ்ந்தார். 

 வார்த்தைக்கு வார்த்தை அன்னையை 'ஓடுகாலி' என்று விளிக்க கிருஷ்ணஜாட்சிக்கு இவர்கள் எல்லாம் என்ன மாதிரி மனிதர்கள் என்று முதல் முறையாக மனதில் வெறுப்பு தோன்றியது.

யாரையும் ஒரு வார்த்தை தவறாகப் பேசாத அன்னையின் முகம் மனதில் தோன்ற அவர் சொன்ன வார்த்தைகள், கற்றுக் கொடுத்த நன்னெறிகள் அனைத்தையும் ஒரு ஓரமாக ஒதுக்கி வைத்தாள் கிருஷ்ணஜாட்சி.

பத்மாவதியின் 'ஓடுகாலி' என்ற கூற்றே அவளது மனதில் மூண்ட வெறுப்புத்தீயை கொளுந்து விட்டு  எரியச் செய்ய போதுமானதாக இருந்தது. "போதும் மாமி! இதுக்கு மேல எங்க அம்மாவை பத்தி தப்பா பேசுனிங்கன்னா உங்களுக்கு மரியாதை கிடையாது" என்று வெறுப்புடன் அவள் வாயிலிருந்து வார்த்தைகள் தீக்கங்காய் வந்து விழ பத்மாவதி ஒரு நிமிடம் திடுக்கிட்டு அமைதியானார்.

அவரின் திடுக்கிடலை கண்டபடியே "இவ்வளவு நாள் நான் அமைதியா இருந்தேன்னா அதுக்கு ஒரே காரணம் உங்காத்துக்கு நான் பட்ட நன்றிக்கடன். ஆனா எப்போ என்னை கொஞ்சம் கூட பிடிக்காத ஒருத்தரை விவாகம் பண்ண என் மாமாவோட பேச்சைக் கேட்டு மணமேடையில உக்காந்து அதே மனுசன் கையால மாங்கல்யத்தை வாங்கிட்டேனோ அப்போவே அந்த நன்றிக்கடன் தீர்ந்துடுச்சு.

நீங்க இது வரைக்கும் நிறைய பண்ணிருக்கிங்க மாமி! அது எதுக்குமே நான் உங்க மேல கோவப்பட்டது இல்ல. ஏன்னா எங்க அம்மா உங்களை பத்தி சொன்ன வார்த்தைகள் அப்பிடி. பத்மா மன்னி கோவக்காரி தான், ஆனா மனசுல எதையும் வச்சுக்க மாட்டானு எங்க அம்மா உங்களை பெருமையா தான் சொல்லிருக்காங்க. ஆனா நீங்க அப்பிடி இல்ல. உங்க மனசுல எவ்வளவு அழுக்கு இருந்தா இறந்து போனவங்களை இவ்ளோ மோசமா பேசுவிங்க?

இன்னைக்கு நீங்களும், விஜி பெரியம்மாவும் இவ்ளோ சொகுசா வாழுறிங்கன்னா அது எங்க அம்மா உங்களுக்குப் போட்ட பிச்சை! இங்க நிக்கிற யாருக்கும் என் அம்மா மதுரவாணியைப் பத்தி பேச அருகதை கிடையாது" என்று அவள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் வாளாய் மாறி அவளது தாயைப் பழித்த மனிதர்களின் நெஞ்சை அறுக்கத் தவறவில்லை.

நீரஜாட்சிக்கு கிருஷ்ணஜாட்சியின் இந்தக் கோபம் புதிது. தயக்கத்துடன் அவளை அமைதிப்படுத்த வந்தவளை கூரியவிழியால் நோக்கி தடுத்து நிறுத்தினாள் கிருஷ்ணஜாட்சி.

தன் அருகில் நின்று தான் பேசுவதை அதிர்ந்து போய் பார்க்கும் ஹர்சவர்தனின் வஸ்திரத்துடன் முடிச்சிடப்பட்டிருந்த தன் புடவை நுனியை நிதானமாக அவிழ்த்தாள்.

அனைவரும் அதிரும்போதே பத்மாவதியின் அருகில் சென்று "இது தான் என் அம்மாவை பத்தி நீங்க பேசுற கடைசி தடவையா இருக்கணும். அப்புறம் இன்னொரு விஷயம் எப்பிடி என் அம்மா இரக்கப்பட்டு உங்களுக்கும், விஜி பெரியம்மாவுக்கும் வாழ்க்கை பிச்சை போட்டாங்களோ அதே மாதிரி தான் இன்னைக்கு நான் இரக்கப்பட்டு மணமேடை ஏறினேன். அந்த இரக்கம், நன்றிக்கடன், மரியாதை எல்லாமே இந்த நிமிசத்தோட  அழிஞ்சுப் போச்சு. நீங்க என்ன சொல்லுறது? என் அம்மாவை மோசமா பேசற உங்களோட மகன் கட்டுன தாலியை நான் கழுத்துல சுமந்தா அது என்னைப் பெத்தவளுக்கு நான் பண்ணுற பாவம்" என்று மனதில் இருக்கும் முழுவெறுப்பையும் அவள் கொட்டித் தீர்க்க அங்கே குண்டூசி விழுந்தால் கூட சத்தம் கேட்குமளவுக்கு அமைதி.

கிருஷ்ணஜாட்சி தன் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த மாங்கல்யத்தை வெறித்தவள் விரக்தியான புன்னகையோடு அதை கழுத்திலிருந்து கழற்றவே நீரஜாட்சி, சீதாலெட்சுமி, மைதிலி, மைத்திரேயி மற்றும் ஸ்ருதிகீர்த்தி என்று அனைவரும் அதிர்ந்தனர்.

சீதாலெட்சுமி பதறியவராய் "கிருஷ்ணா வேண்டாம்டி! கழுத்துல ஏறுன மாங்கல்யத்தை கழட்டக் கூடாதுடிம்மா" என்று கண்ணீரை பெருக்க நீரஜாட்சியும் "கிருஷ்ணா" என்று கேவ ஆரம்பித்தாள்.

அவளைப் பிடிக்காத ஸ்ருதிகீர்த்திக்கு கூட அந்த கணம் அழுகை கண்ணை முட்ட "மன்னி! எதுவானாலும் பொறுமையா பேசிக்கலாம்" என்று வேண்டிக் கொள்ள அவளை நோக்கி புன்னகைத்தாள் கிருஷ்ணஜாட்சி.

பத்மாவதியை வெறுப்புடன் பார்த்தவள் அவர் கையில் மாங்கல்யத்தை வைத்துவிட்டு "இது எனக்குத் தேவை இல்லை பத்மாவதிம்மா! உங்க மகனுக்கும் எனக்கும் இனி எந்த சம்பந்தமும் இல்ல. எனக்கு அவரும் தேவை இல்ல, அவர் கட்டுன தாலியும் தேவை இல்ல. இனிமே நானும் நீருவும் இந்த வீட்டுல இருக்கப் போறதும் இல்ல" என்று உறுதியான குரலில் சொல்லிவிட்டு நீரஜாட்சியின் கையைப் பிடித்து அவுட் ஹவுஸிற்கு இழுத்துச் சென்றாள்.

அதற்குள் வந்திருந்த அனைவருமே அவர்களுக்குள் பேசிக் கொள்ள சீதாலெட்சுமியைத் தேற்ற தொடங்கினார் மைதிலி.

ஹர்சவர்தனுக்கு நடந்த எதையும் நம்ப முடியவில்லை. அதிர்ந்து ஒரு வார்த்தை பேசாதவள் இன்று என்னென்ன பேசிவிட்டாள் என்ற திகைப்பில் இருந்தவன் அன்னையின் புறம் திரும்ப அவரோ கிருஷ்ணஜாட்சி கழற்றிக் கொடுத்துவிட்டுச் சென்ற மாங்கல்யத்தை  கையில் ஏந்தியவராய் சிலை போல் நின்று கொண்டிருந்தார்.

சிறிது நேரத்தில் அவுட் ஹவுஸில் இருந்து வெளியே வந்த இரு சகோதரிகளும் தங்களது உடைமைகளுடன் வீட்டை நோக்கி வந்தனர். கிருஷ்ணஜாட்சி சாதாரண உடைக்கு மாறியிருந்தவள் நீரஜாட்சியின் கையிலிருந்த  நகைப்பெட்டிகளை வாங்கி சீதாலெட்சுமியின் கைகளில் திணித்தாள்.

அவர் கண்ணீருடன் எழும்ப "நாங்க கிளம்புறோம் சித்தம்மா" என்று மட்டும் சொல்லிவிட்டு அழுகையைச் சிரமத்துடன் அடக்கி விட்டு வெளியேறத் தொடங்கினாள்.

"கிருஷ்ணா" என்ற ஹர்சவர்தனின் குரலில் திரும்பி அவனைப் பார்த்தவள் அவன் அருகே வரவும் "கவலைப்படாதிங்க மிஸ்டர் ஹர்சவர்தன்! எங்களை மாதிரி ரெப்யூஜீஸ்கும் எங்கேயாச்சும் இடம் கிடைக்கும்" என்று வெறுப்புடன் கூறி விட்டு தங்கையின் கையைப் பிடித்தபடி அந்த வீட்டை விட்டு வெளியேறத் தோட்டத்தில் கால் பதித்தாள்.

மைத்திரேயியின் கணவன் "மைத்தி! அவா எங்கடி போவா? தடுத்து நிறுத்து" என்று சொல்ல மைத்திரேயியால் அழ மட்டுமே முடிந்தது. மொத்தத்தில் அங்கிருந்த அனைவரும் அவர்களைத் தடுக்க இயலாதவராய் சாது மிரண்டால் காடு கொள்ளாது என்ற பழமொழிக்கு அர்த்தத்தை நிஜவாழ்க்கையில் கண்டு அதிர்ந்து நின்றனர்.

Comments

Popular posts from this blog

பூங்காற்று 1