பூங்காற்று 42

🌺 பூங்காற்று 26 🌺
நீரஜாட்சி மறுநாள் காலையில் விழித்ததும் முதலில் தேடியது கிருஷ்ணஜாட்சியையும், கரோலினையும் தான். இருவரையும் தேடி ஹாலுக்கு வந்தவள் அவர்கள் சோபாவில் அமர்ந்து கையில் ஏதோ ஃபைலை வைத்துக் கொண்டு தீவிரமாகப் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டவள் "நேத்து நைட் நீங்க ரெண்டு பேரும் எப்போ வந்திங்க? நான் சீக்கிரமாவே தூங்கிட்டேன்" என்றபடி அவர்களுடன் சோபாவில் அமர்ந்து கொண்டாள்.
"நேத்து நாங்க வர்றதுக்கு லெவன் ஓ கிளாக் ஆயிடுச்சு நீரு. நீ நல்லா தூங்கிட்டு இருந்த. சோ உன்னை டிஸ்டர்ப் பண்ணாம நாங்க சாப்பிட்டிட்டு தூங்க போயிட்டோம்" என்றாள் கிருஷ்ணஜாட்சி தன் கையிலிருக்கும் அந்த ஃபைலை பார்த்தபடி.
நீரஜாட்சி அதற்கு தலையாட்டிவிட்டு எழுந்தவள் கரோலினிடம் "லின் ஆடிட்டர் கிட்ட பேப்பர்ஸ் வாங்கிட்டிங்கல்ல, அப்போ லோன் சீக்கிரமா சேங்சன் ஆயிடும். உங்க நியூ பிராஞ்சுக்கு எங்கே இடம் பார்க்கப் போறிங்க?" என்று கேட்க
கரோலின் "நியூ பிராஞ்ச் ஓப்பன் பண்ணுற ஐடியா எங்களுக்கு இப்போதைக்கு இல்ல நீரு. நாங்க இப்போ இருக்கிற பேக்கரியை கொஞ்சம் ரினோவேட் பண்ணப் போறோம். அவ்ளோ தான்" என்று அவளது கிளிப்பிள்ளை தமிழில் கூற
நீரஜாட்சி "அடிப்பாவிகளா நான் கூட நீங்க புது பிராஞ்ச் ஓப்பன் பண்ண தான் லோனுக்கு அலையுறிங்கனு நினைச்சேன். ஏன் கிருஷ்ணா சட்டு புட்டுனு நாலு பிராஞ்ச் ஓப்பன் பண்ணுனா தான் என்னவாம்? எனக்கு ஒரு தொழிலதிபியோட தங்கச்சினு சொல்லிக்கிற பெருமையை எப்போ தரப் போற நீ?" என்று கேட்டுவிட்டு டீபாய் மீது இருந்த டேபை சார்ஜ் போடச் சென்றாள்.
கிருஷ்ணஜாட்சி அவள் பேச்சில் திகைத்தவள் "சட்டு புட்டுனு ஓப்பன் பண்ணுறதுக்கு அது என்ன ஃபேஸ்புக் அக்கவுண்டா நீரு? இந்த லோனுக்கே நாங்க ஒன் வீக்கா அலையுறோம். ஒரு வழியாக இன்னைக்கு எல்லா பேப்பரும் பக்காவா கைக்கு வந்துடுச்சு. இதையும் பார்த்துட்டு மேனேஜர் திருப்தியானா மட்டும் தான் நமக்கு லோன் சேங்சன் ஆகும்" என்றாள் களைத்துப் போன குரலில்.
நீரஜாட்சி அதைக் கேட்டு பெருமூச்சை இழுத்துவிட அவளது தமக்கை "ஆனா இவ்ளோ கஷ்டப்படாம ரொம்ப சீக்கிரமா முன்னேறுன ஒரு ஆளை எனக்கு தெரியும்" என்று சொல்ல நீரஜாட்சி அவர் யாரென்ற ஆர்வத்துடன் சகோதரியை நோக்கினாள்.
கிருஷ்ணஜாட்சி தங்கையை கேலியாய் பார்த்தவள் "வேற யாரு சூரியவம்சம் சரத்குமார் தான். அவர் தான் ஒரே பாட்டுல நாலஞ்சு பஸ் வாங்கி பஸ் கம்பெனிக்கு ஓனர் ஆயிருப்பார்" என்று சொல்ல நீரஜாட்சி பக்கத்தில் கிடந்த குஷனை எடுத்து அவள் தலையில் அடிக்க கரோலின் புரியாமல் விழித்தாள்.
நீரஜாட்சி அவளிடம் "லின் சரத்குமார் இஸ் அன் ஆக்டர். அவரோட சூரியவம்சம் படத்துல நட்சத்திர ஜன்னலில்னு ஒரே பாட்டுல அவர் பெரியாளா ஆயிடுவார். அதை வச்சு இவ என்னை கலாய்க்கிறா" என்று கிருஷ்ணஜாட்சியை ஓரக்கண்ணால் முறைத்தபடி சொல்ல
"நீ சொன்ன மாதிரி சட்டு புட்டுனு பிராஞ்ச் ஓப்பன் பண்ணறதுக்கு உன் அக்கா வொண்டர் உமன் இல்ல, நானும் கரோலினும் சாதாரண மனுஷிங்க. எங்களோட லட்சியத்தை அடையறதுக்கு எங்களுக்கு இன்னும் கால அவகாசம் தேவை. நீ ஒரு காமர்ஸ் ஸ்டூடண்ட், உனக்கு நான் சொல்லியா தெரியணும்?" என்று முடிவில் அவளுக்கு ஒரு குட்டு வைத்தாள் கிருஷ்ணஜாட்சி.
நீரஜாட்சி நாக்கைக் கடித்துக் கொண்டவள் "ஆமால்ல! என்ன பண்ணுறது கிருஷ்ணா காமர்ஸ் ஸ்டுடண்ங்கிறதையும் தாண்டி நான் உங்க ரெண்டு பேருக்கும் தங்கச்சியா வேற போயிட்டேன். அதான் என்னோட சிஸ்டர்ஸ் எப்போடா பிசினஸ் மேகசினோட கவர் பேஜ்ல வருவாங்கன்னு ஆவலா இருக்கேன். எனக்குப் பேத்தி பிறக்கிறதுக்குள்ளயாச்சும் நீங்க இன்னொரு பிராஞ்ச் ஓப்பன் பண்ணிடுவிங்களா?" என்று கேலி செய்தவாறே குளிக்கச் சென்றாள்.
கிருஷ்ணஜாட்சி அவளது கேலியைக் கேட்டு நகைத்தவாறு கரோலினிடம் பேப்பர்களை சரி பார்க்குமாறு கூறிவிட்டு காலையுணவை தயார் செய்ய சமையலறைக்குள் புகுந்தாள்.
சிறிது நேரத்தில் குளித்து உடை மாற்றிவிட்டு வந்த நீரஜாட்சி தோட்டத்தில் நின்றபடி தலையை உலர்த்த பட்டாபிராமனின் "நீரு" என்ற அழைப்பு காதில் விழ திரும்பினாள்.
நடைபாதையில் அவர் நடந்து வருவதைக் கண்டதும் வேகமாக அவர் அருகில் சென்று கையைப் பிடித்துக் கொண்டபடி அவுட் ஹவுஸின் வாசல்படியில் அமரவைத்துவிட்டு தானும் கீழ்படியில் அமர்ந்து கொண்டாள்.
"என்ன பட்டு? காத்தாலே உங்களுக்கு என்ன நீருவோட நியாபகம்?" என்று வினவியபடி பார்த்தவளின் தலையை கனிவுடன் வருடிக் கொடுத்த பட்டாபிராமன் "இன்னைக்கு சனிக்கிழமையோன்னோ! திருவல்லிக்கேணி வரைக்கும் என்னை அழைச்சிண்டு போறியா? நோக்கு வேற ஏதும் ஜோலி இருந்தா சாயங்காலமா போயிக்கலாம்" என்று சொல்ல
"அட வேற என்ன ஜோலி இருக்க போகுது பட்டு? எல்லாம் உன் பேரன்னு ஒரு அவதாரத்தை வீட்டுல வச்சிருக்கிங்களே அது குடுக்கிற வேலை மட்டும் தான் இருக்கு. பட் பத்து மணிக்கு தானே ஆபிஸ். அதுக்குள்ள டிரிப்ளிகேன் போயிட்டு வந்துடலாம். யூ டோண்ட் ஒரி" என்று அவள் கூற அவருக்கு இப்போது தான் நிம்மதி.
நீரஜாட்சி தாத்தாவுக்கு இன்னும் மனம் தெளியவில்லை என்பதை நன்றாக அறிவாள். அவருக்குத் தன்னால் தானே பேத்திக்கு இப்படி ஒரு நிலமை என்ற குற்றவுணர்ச்சி. அது அவரை மெதுவாக அரித்துக் கொண்டிருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டதால் தான் அவருக்கு மனநிம்மதியை தரும் செயல்களைச் செய்ய நீரஜாட்சி நேரகாலம் பார்ப்பது இல்லை.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் பட்டாபிராமனுக்கு கிட்டத்தட்ட நெருங்கிய தோழர் போல. குடும்பத்தாரிடம் பகிர்ந்து கொள்ள முடியாத சில கஷ்டமான சம்பவங்களைக் கூட அவர் காதில் போட்டுவிடுவார் பட்டாபிராமன். இப்போதும் குடும்பத்தில் நிலவும் அமைதியின்மையைப் பற்றி அவரிடம் முறையிடவேண்டுமென்று தான் இளையபேத்தியிடம் அங்கே அழைத்துச் செல்லுமாறு கேட்டார்.
தாத்தாவின் கையை ஆதரவாகப் பற்றிக் கொண்டவள் "பட்டு நீங்க தேவையில்லாததை யோசிச்சு மனசைப் போட்டுக் குழப்பிக்கறதை நிறுத்துங்க" என்று ஆறுதலாகப் பேச
பட்டாபிராமன் பெருமூச்சுடன் "அந்த பாரத்தை இறக்கி வைக்க தான் நான் அந்த பரமாத்வாவைப் பார்க்க போறேன்" என்றதும்
நீரஜாட்சி "ஓ மை காட்! பிளீஸ் பட்டு, உங்களோட இந்த பரமாத்மா, ஜீவாத்மா கான்செப்டெல்லாம் எனக்கு புரியாது. அதை விடுங்க. பிரேக்பாஸ்டுக்கு அப்புறமா போடுற மாத்திரையை போட்டிங்களா?" என்று அக்கறையுடன் வினவினாள்.
பட்டாபிராமன் "மறந்துட்டேன்டி குழந்தே" என்று சொல்லிவிட்டு தவறு செய்த சிறுபிள்ளையாய் விழிக்க
நீரஜாட்சி கண்டிப்புடன் "நான் குழந்தை இல்ல பட்டு. வர வர நீங்களும், சித்தம்மாவும் தான் குழந்தை ஆயிட்டிங்க. டெய்லி சந்தியாவந்தனம் பண்ண மறக்கிறிங்களா? இல்லை தானே. அதே மாதிரி டேப்லட் சாப்பிடவும் மறக்க கூடாது. சரியா?" என்று மிரட்ட அவரும் சரியென்று தலையாட்டிவிட்டு அவள் கை கொடுக்கவும் எழுந்தார்.
அவரை மெதுவாக கையைப் பற்றி நடைபாதையில் அழைத்துச் சென்றவள் "பட்டு சித்தம்மாவும் உங்க கூட வருவாங்களா?" என்று கேட்டபடி வர அவர்களைத் தோட்டத்தின் ஊஞ்சலில் அமர்ந்தபடி பார்த்துக் கொண்டிருந்த ரகுநந்தன் தாத்தாவின் அருகில் வந்து அவரது இன்னொரு கையைப் பிடித்துக் கொண்டான்.
நீரஜாட்சிக்கு எப்போதும் போல அவனது செய்கை எரிச்சலைக் கொடுக்க "நான் கூட்டிட்டுப் போறேன் தானே! நீ எதுக்கு இடையில வர்ற? என் தாத்தாவை நான் கூட்டிட்டுப் போயிப்பேன். உன் உதவி எங்களுக்கு தேவை இல்லை. அப்பிடி தானே பட்டு?" என்றபடி தாத்தாவையும் சாட்சிக்கு அழைக்க
ரகுநந்தன் கேலியாக "அவர் உனக்கு முன்னாடி எனக்கு தாத்தா ஆயிட்டார்டி. அதுல்லாம் சரி நீ எங்கேயோ போறதா பேசிண்டிருந்த, போறதுலாம் சரி! பட் டைமுக்கு ஆபிஸ்ல இருக்கணும்" என்று கூற நீரஜாட்சி உதட்டைச் சுழித்து அழகு காட்டிவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
அதன் பின் வீடு வந்துவிடவே ரகுநந்தனே தாத்தாவை அழைத்துச் செல்லட்டும் என்று விட்டவள் நேரே அவுட் ஹவுஸிற்கு சென்று தயாரானாள். கிருஷ்ணஜாட்சி செய்து வைத்திருந்ததைச் சாப்பிட்டு விட்டு மதியத்துக்கும் ஒரு டிபன் பாக்ஸில் வைத்துக் கொண்டு இருவரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பினாள்.
அவள் வெளியே வரவும் அவளுக்காக காத்திருந்த பட்டாபிராமனை ஸ்கூட்டியில் ஏற்றிக் கொண்டு அவள் திருவல்ல்லிக்கேணியை நோக்கிச் செல்ல ரகுநந்தன் அவள் கிளம்பிய சிறிது நேரத்திலேயே அலுவலகத்திற்குக் கிளம்பினான்.
**********
ஹர்சவர்தனுக்கு அன்று ஹோட்டலுக்குச் சென்ற பிறகும் ரகுநந்தனின் வார்த்தைகளே காதில் ஒலித்தது. அவனது விழிகள் சுற்றுபுறத்தை நோட்டமிட்டாலும் மனம் முழுவதும் தனது வாழ்க்கையை எப்படி சீரமைக்கப் போகிறோம் என்பதிலேயே இருந்தது. அப்போது வெளியே ஏதோ சத்தம் கேட்க அவனது அலுவலக அறையில் இருந்து வெளியேறி என்னவென்று பார்க்க விரைந்தான் அவன்.
அவன் சென்றபோது ஒரு முதியவரும் மூதாட்டியும் கைகூப்பியபடி நின்றிருந்தனர். அவர்களிடம் ஹோட்டலின் சூப்பர்வைசரில் ஒருவர் கடுமையானக் குரலில் பேசிக்கொண்டிருந்தார்.
அவர் பேசுகிற விதம் ஹர்சவர்தனின் மனதை நெருட வேகமாக அவர் அருகில் சென்றவன் "என்னாச்சு? ஏன் ரவி வயசானவங்க கிட்ட இப்பிடி வாய்ஸ் ரெய்ஸ் பண்ணி பேசிட்டிருக்கிங்க? அவங்க என்ன பண்ணுனாங்க?" என்றுக் கேட்க
சூப்பர்வைசர் ரவி "சார் இந்த பெருசும், அதோட நிக்கிற அம்மாவும் சாப்பிட்டிட்டு பில் கட்டச் சொன்னா காசு காணாம போயிடுச்சுனு டிராமா போடுதுங்க. எனக்கு இவங்களைப் பார்த்தா சந்தேகமா இருக்கு. ஒரு வேளை இங்கே ஏதும் திருட வந்திருப்பாங்களோனு விசாரிச்சிட்டிருக்கேன்" என்று கூற அவரது வார்த்தையைக் கேட்ட முதிய தம்பதியினர் கண்ணீர் வடித்தனர்.
அந்தப் பெரியவரோ ஹர்சவர்தனை நோக்கி கைகூப்பி "சத்தியமா அவர் சொல்லுற மாதிரிலாம் இல்ல தம்பி. நாங்க ஊருல இருந்து பையனைப் பார்க்கிறதுக்காக வந்தோம். எப்போ எங்க பர்ஸ் காணாம போச்சுனு எனக்கே தெரியல. நாங்க திருட வரலை தம்பி. அந்தப் பணத்துக்காக நீங்க எந்த வேலை குடுத்தாலும் நான் செய்யுறேன். ஆனா திருட வந்தோம்னு மட்டும் சொல்லாதிங்க" என்று தளர்ந்த குரலில் கூற ஹர்சவர்தனுக்கு அவர்களைப் பார்த்தாலே பாவமாக இருக்க சூப்பர்வைசரை நோக்கித் திரும்பினான்.
"லிசன் ரவி! நீங்க வேலை பார்க்கிற இடத்துக்கு இவ்ளோ உண்மையா இருக்கிறது ரொம்ப சந்தோசமா இருக்கு. ஆனா அவங்க வயசுக்காச்சும் மரியாதை குடுத்திருக்கலாம். இவங்க ஒருத்தவங்க பணம் குடுக்காம சாப்பிடறதால இந்த ஹோட்டலுக்கு வர்ற வருமானம் நின்னுட போகுதா? முதல்ல இங்கே திருடறதுக்கு என்ன இருக்கு? கிச்சன்ல இருக்கிற வெசல்ஸ், இந்த ஃபர்னிஷர்ஸ் தவிர விலை போற பொருள்னு இங்கே எதுவும் இல்ல. பெரியவங்களை இப்பிடி பேசறது தப்பு. முதல்ல சாரி கேளுங்க" என்று இறுகிய குரலில் கூற சூப்பர்வைசரும் மன்னிப்பு கேட்டார்.
அந்த முதியவர் "மன்னிக்கிறதுக்கு நான் யாரு தம்பி? ஊருல ஏக்கர் கணக்குல நிலம் வச்சு விவசாயம் பண்ணுறவன், இன்னைக்கு பட்டணத்துல சாப்பிட்டதுக்கு பணம் குடுக்க வழியில்லாம திருடன்ங்கிற பழியோட நிக்கிறேன். இது தான் வாழ்க்கை தம்பி. அது யாரை எங்கே வேணும்னாலும் நிறுத்தும். தெருவுல பிச்சை எடுக்கிறவங்களுக்கு கூட சுயமரியாதைனு ஒன்னு இருக்கும். அதை என்னைக்கும் அசிங்கப்படுத்திடாதிங்க. வார்த்தை முக்கியம் தம்பி. பேச வேண்டிய இடத்துல பேசாம இருக்கிறதும் தப்பு. அதே நேரம் நம்ம பேச்சால மத்தவங்களை வருத்தப்பட வைக்கிறதும் தப்பு. அது ஏற்படுத்துற காயம் எப்போவுமே ஆறாது. அதை எந்த மன்னிப்பாலும் ஆறவைக்க முடியாது" என்று வருத்தத்துடன் உரைக்க சூப்பர்வைசர் தலைகுனிந்தபடி அங்கிருந்து நகர்ந்தார்.
ஹர்சவர்தனுக்கு அந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் தனக்கும் தன் தாயாருக்கும் சொல்லப்பட்டதைப் போலவே இருக்க அவரிடம் திரும்பியவன் "அவர் பேசுனதை தப்பா நினைச்சுக்காதிங்க. நீங்க ரெண்டு பேரும் எங்கே போகணும்னு சொன்னா நானே டிரைவரை விட்டு உங்களை டிராப் பண்ணச் சொல்லுறேன்" என்க
அந்த முதியவர் "நான் பஸ் ஸ்டாண்டுக்குப் போகணும் தம்பி. ஆனா கையில சல்லிக்காசு இல்ல" என்று நைந்தகுரலில் கூற அவரது மனைவியான அந்த மூதாட்டி இங்கே நடந்த உரையாடல்களை வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தார்.
ஹர்சவர்தன் மோகனுக்கு போன் செய்து அவன் தந்தையின் கார் டிரைவரை அனுப்பி வைக்குமாறு சொல்லிவிட்டு இருவரிடமும் திரும்பியவன் "நீங்க ஒன்னும் கவலைப்படாதிங்க. நான் டிரைவரை வரச் சொல்லிருக்கேன். அவரு உங்களை பஸ் ஸ்டாண்டுல விட்டுருவார். அப்புறம் இது என்னோட கார்ட். உங்க கிட்டவோ இல்ல உங்க ஊருல யார் கிட்டவோ போன் இருந்துச்சுனா நீங்க ரெண்டு பேரும் ஊர் போய் சேர்ந்ததும் எனக்குக் கொஞ்சம் இன்பார்ம் பண்ணுங்க" என்று தண்மையானக் குரலில் கூற அந்த முதியவர் அவன் கையைப் பிடித்துக் கொண்டார்.
"நீங்க நூறு வருசத்துக்கு நல்லா இருக்கணும் தம்பி. இவளையும் வச்சிட்டு ஆளு தெரியாத இந்த ஊருல இருந்து எப்பிடி என் வீட்டுக்குப் போக போறேனு பயந்துகிட்டே இருந்தேன். கடவுளா பார்த்து உங்களை அனுப்பி வச்சிருக்கார்" என்று சொல்ல
ஹர்சவர்தன் "பெரிய வார்த்தைலாம் சொல்லாதிங்க. எங்க வீட்டுலயும் பெரியவங்க இருக்காங்க. உங்களைப் பார்த்ததும் எனக்கு அவங்க நியாபகம் தான் வந்துச்சு. இவங்க ஏன் அமைதியாவே இருக்காங்க?" என்று அவரது மனைவியைக் காட்டி கேட்க
அந்த முதியவர் "அவளுக்கு வாய் பேச வராது தம்பி. காதும் கேக்காது. அதனால தான் எங்கே போனாலும் கூடவே கூட்டிட்டு போறேன். பிள்ளைங்க எல்லாரும் அவங்க அவங்க குடும்பத்தைப் பார்த்துட்டு போயிட்டாங்க. இனி இவளுக்கு நான், எனக்கு இவனு தான் வாழ்க்கையை ஓட்டணும். வாலிபத்துலயும் சரி! வயோதிகத்திலயும் சரி, கணவனுக்கு மனைவியும் மனைவிக்கு கணவனும் எங்கேயும் எப்போவும் உறுதுணையா இருக்கணும்கிறது என்னோட கொள்கை" என்று அவர் கூற ஹர்சவர்தனுக்கு அவர் சொன்ன வார்த்தைகள் கல்வெட்டில் பதிந்ததைப் போல மனதில் பதிந்துவிட்டது.
சிறிது நேரம் அவர்களிடம் பேசி கொண்டிருந்தவன் டிரைவர் வரவும் அவர்களை காரில் ஏற்றிவிட்டுத் தனது அலுவலக அறைக்குச் சென்றவனின் சிந்தனை முழுவதும் அவரின் வார்த்தையிலேயே இருந்தது.
"வாலிபத்துலயும் சரி! வயோதிகத்திலயும் சரி, கணவனுக்கு மனைவியும் மனைவிக்கு கணவனும் எங்கேயும் எப்போவும் உறுதுணையா இருக்கணும்"
எவ்வளவு பெரிய உண்மையை போகிற போக்கில் சொல்லிவிட்டுச் சென்றார் அந்த பெரியவர் என்று யோசித்தவன் தன்னையும் நினைத்துக் கொண்டான்.
முதல் பார்வையிலேயே கிருஷ்ணஜாட்சியிடம் மனம் படிந்தாலும் அவளைத் தவிர்க்க எண்ணி தோற்றது முதற்கொண்டு அவன் நினைவில் வந்தது. அவளை மறக்க முடியாத இயலாமையைக் கூட அவளிடம் கோபமாய் வெளிப்படுத்திய தன்னை நினைத்து அவன் இப்போது வருத்தப்பட்டுக்கொண்டான்.
அவள் தன் மனைவியாக கிடைத்த போதும் அவளுடன் இக்கட்டான நிலையில் துணை நிற்காத தனது கையாலாகத்தனம் அவனுள் மீதே சீற்றத்தை ஏற்படுத்த முன்னே கிடந்த மேஜையில் கைகளை ஓங்கிக் குத்தி தனது ஆத்திரத்தை தீர்க்க முயன்றான்.
அடுத்து என்ன என்ற கேள்வியே பூதாகரமாக அவனைப் பயமுறுத்த நீண்டநேரமாக யோசனையில் ஆழ்ந்தவனின் கை கம்ப்யூட்டரின் கீபோர்ட் மீது பட்டு அவன் லாகின் செய்து வைத்திருந்த அவனது மின்னஞ்சலில் பழையது ஒன்று திறந்து கொண்டது.
அது அவர்கள் வீட்டு கிருஷ்ணஜெயந்தியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அடங்கிய மின்னஞ்சல். அதை மெதுவாகப் பார்த்தவனின் விழியில் விழுந்த முதல் புகைப்படமே கிருஷ்ணஜாட்சி வெள்ளை சுடிதாரில் கையில் தீபத்துடன் நிற்கும் படம் தான்.
அது பழைய புகைப்படமாக இருந்தாலும் அதன் நினைவுகள் இன்னும் அவன் மனதில் பசுமையாக இருந்தது. அன்று போலவே இன்றும் திரையில் தெரிந்தவளின் பிம்பத்தை வருடிக் கொடுத்தது அவனது விரல்.
"அம்மா உன்னை பேசியே கஷ்டப்படுத்துனாங்க. ஆனா நான் உன்னை பேசாம இருந்து கஷ்டப்படுத்திட்டேன். ஐ அம் சாரி கிருஷ்ணா. நேக்கு நீன்னா ரொம்ப பிடிக்கும். ஒவ்வொரு தடவையும் உன் கிட்ட இதை சொல்லணும்னு நினைக்கிறப்போ அம்மா முகம் நினைவுக்கு வந்துடும். ஆனா இப்போ நீ என்னோட ஆம்படையாளா இருந்தும் கூட உன்னண்ட ஏதோ அன்னியமான ஆள் மாதிரி நடந்துக்க வேண்டியதா இருக்கறது. இதுக்கும் நான் தான் காரணம். ஆனா இன்னைக்கு அந்த பெரியவர் பேசுனாரில்லையா, அது நூத்துக்கு நூறு சரி கிருஷ்ணா. எந்த நிலமையிலயும் கணவனும் மனைவியும் ஒருத்தருக்கொருத்தர் உறுதுணையா இருக்கணும். இது வரைக்கும் நான் உனக்கு எதுலயும் துணை நின்னது இல்ல. ஆனா இனிமே நிக்க ஆசைப்படுறேன். நான் பண்ணுன தப்புக்கு உன்னண்ட மன்னிப்பு கேக்க ஆசைப்படறேன் கிருஷ்ணா. அதுக்கு எவ்ளோ நாள் ஆனாலும் சரி, உன்னோட மன்னிப்புக்காக நான் காத்திருப்பேன்" என்று உறுதியுடன் உரைத்தான் ஹர்சவர்தன்.
கணவன் மனைவி என்பவர்கள் ஒரே அச்சில் வார்க்கப்பட்ட பிரதிகள் அல்ல. அவர்களின் சந்தோசமான வாழ்க்கைக்கு அடையாளம் அவர்கள் எல்லா விதத்திலும் ஒரே மாதிரியாக இருப்பது அல்ல! அவர்களின் மாறுபட்ட குணாதிசயங்களைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப அவர்கள் வாழ்க்கையை வாழ்வது தான்.
Comments
Post a Comment