பூங்காற்று 42

🌺 பூங்காற்று 36 🌺
நீரஜாட்சி ஸ்ரீனிவாசவிலாசத்துக்கு வந்ததும் செய்த முதல் காரியம் அந்த வீட்டின் பழைய சாமான்களை போட்டு வைத்திருக்கும் அறையில் இத்தனை நாட்கள் வைக்கப்பட்டிருந்த மதுரவாணியின் புகைப்படங்கள் அனைத்தையும் தூசி தட்டி எடுத்தது தான்.
வீட்டின் அனைத்து அறைகளிலும் குடும்பத்தாரின் புகைப்படங்கள் மாட்டப்பட்டிருக்க தன் அன்னையின் ஒரு புகைப்படம் கூட இல்லாமலிருப்பது குறித்து மைதிலியிடம் கேட்க அவர் "மதுராவோட போட்டோ எல்லாமே ஸ்டோர் ரூம்ல இருக்கு நீரு" என்று சொல்லிவிட்டு அந்த அறையை காட்டிவிட அதற்கு பிறகு மற்ற வேலைகளை அவள் கவனித்துக் கொண்டாள்.
மதுரவாணியின் புகைப்படங்களை வெளியே எடுத்துவந்தவள் அங்கிருக்கும் சில புகைப்படங்களை கழற்றிவிட்டு அவற்றை மாட்டத் தொடங்கினாள். சீதாலெட்சுமிக்கு மகளது புகைப்படங்களைக் கண்டதும் பழைய நினைவில் கண்கள் கலங்க அவற்றை அவரது விரல்கள் தடவிக் கொடுத்தன.
அவரை அறியாமல் "எவ்ளோ அழகுடி நீ! நீ வாழறதை பார்க்கற கொடுப்பினை இல்லாம போயிடுச்சே நேக்கு" என்றவாறு அவரது உதடுகள் முணுமுணுக்க பத்மாவதிக்கும் ஹாலின் நடுவில் கிடந்த அந்த புகைப்படம் ஏனோ பழைய நினைவுகளைக் கொண்டு வந்தது.
"யார் இதெல்லாம் இங்கே மாட்டி வச்சது?" என்று தனது வெண்கலக்குரலில் முழங்கியவரின் சத்தத்தில் இன்னொரு மூலையில் மற்றொரு புகைப்படத்தை மாட்டிக் கொண்டிருந்த நீரஜாட்சி திரும்பி பார்த்துவிட்டு அவள் நின்று கொண்டிருந்த ஸ்டூலிலிருந்து இறங்கி மெதுவாக அன்னநடை போட்டு அவர் எதிரில் வந்து நின்றாள்.
"நான் தான் பத்து மாமி! உங்களுக்கு இதுல என்ன பிரச்சனை?"
"இந்தாத்துல இவ போட்டோ இருக்கக் கூடாதுனு நான் தான் பழைய சாமான் போடுற அறையில தூக்கிப் போட்டேன். இப்போ மறுபடியும் ஏன் எடுத்து மாட்டிண்டிருக்க?"
"எங்க அம்மா போட்டோ இங்கே இருக்க கூடாதுனு முடிவு பண்ண நீங்க யார் மாமி?"
"நான் இந்த ஆத்து மாட்டுப்பொண்ணுடி. நேக்கு இங்கே என்ன இருக்கணும், இருக்க கூடாதுனு முடிவு பண்ண எல்லா உரிமையும் இருக்கு"
"அதே மாதிரி நானும் இந்த ஆத்து மாட்டுப்பொண்ணா ஆகப் போறேனோன்னோ, சோ எனக்கும் இங்கே எது இருக்கணும், யார் இருக்கணும்னு முடிவு பண்ண எல்லா உரிமையும் இருக்கு. எங்க அம்மா போட்டோ இங்கே தான் இருக்கும். உங்களுக்கு பார்க்க இஷ்டமில்லனா முகத்தைத் திருப்பிட்டு போங்க மாமி. யாரும் உங்களை பார்க்கச் சொல்லி வற்புறுத்தல" என்று அவள் பிடிவாதம் காட்டிப் பேச இதுவரை தனது பேச்சை யாரும் தட்டி அனுபவப்படாத பத்மாவதிக்கு இவளின் வாயாடல்கள் அனைத்தும் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது.
ஆனால் சமாளித்தவராய் "நீ இன்னும் மாட்டுப்பொண்ணு ஆகலைடி. அதுக்குள்ள தலை கால் புரியாம ஆட்டம் போடாதே" என்று நக்கலாய் கூற
நீரஜாட்சி "ஓ! ஆமால்ல! நானும் இதை யோசிக்கலையே. பேசாம ஒன்னு பண்ணுறேன் மாமி, இன்னைக்கு நானும் நந்துவும் சும்மா அவுட்டிங் போலாம்னு இருந்தோம். அப்பிடி போறச்ச ஒரு முருகன் கோயிலோ, பிள்ளையார் கோயிலோ பார்த்து அவனை என் கழுத்துல தாலி கட்டச் சொல்லிடுறேன். அப்போ உங்களுக்கு பிரச்சனை இல்லையே?" என்று கேட்க பத்மாவதிக்கு இந்த பெண்ணிடம் வாயைக் கொடுத்து அவளைத் தூண்டிவிடுவது முட்டாள்தனம் என்பது புரிபட மோவாயை தோளில் இடித்தபடி அங்கிருந்து சென்று விட்டார்,.
நீரஜாட்சி அவர் செல்வதை அலட்சியமாக பார்த்துவிட்டு மற்ற புகைப்படங்களை மாட்ட ஆரம்பித்தாள்.
***************
ரகுநந்தன் தனது தாத்தாவிடம் தன் காதல் விவகாரத்தை சொன்னவுடன் பட்டாபிராமன் வீட்டின் பெரியவராக அடுத்து ஆக வேண்டிய காரியங்களைச் செய்யுமாறு மகன்களிடம் கட்டளையிட்டவர் அன்றே கிருஷ்ணஜாட்சியிடமும் இந்தத் திருமணத்தைப் பற்றி பேசிவிட்டார்.
அவளோ "பட்டு நீருவுக்கு பிடிச்சுருக்கு. அது மட்டுமில்லாம சின்ன அம்மாஞ்சி ரொம்ப நல்லவர். அவர் எப்போவுமே நீருவை நல்லா பார்த்துப்பார்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. அதனால எனக்கு எந்த அப்ஜெக்சனும் இல்ல" என்று கூறிவிட அதன் பின் திருமண வேலைகள் ஜெகஜோதியாக ஆரம்பித்தது.
பட்டாபிராமன் கிருஷ்ணஜாட்சியிடம் இன்னொரு வேண்டுகோளும் வைத்தார்.
"கிருஷ்ணா! உன் தங்கைக்கு எல்லாமே நீ தான். அதோட நீ மறுத்தாலும் நீ தான் இந்தாத்தோட மூத்த மாட்டுப்பொண்ணு. அதனால இந்த கல்யாணவேலைகளை நீயும் ஹர்சனும் சேர்ந்து பார்த்துக்கோங்கடாம்மா. உன் மாமா வேங்கடநாதனால தனியா இழுத்துப் போட்டு இதெல்லாம் பார்க்க முடியாது. ராமனுக்கு உடல்நிலை இன்னும் பழையபடிக்கு வரலை" என்று கூற அவளாலும் மறுக்க முடியாது போயிற்று.
அத்தோடு அவளின் செல்லத்தங்கையின் திருமணத்துக்கு வேலை செய்வது அவளுக்கும் கசக்குமா என்ன? விசயத்தை ஹர்சவர்தனிடம் தெரிவித்த போது அவனும் அதற்கு மறுபேச்சின்றி தலையாட்டி வைத்தான்.
நிச்சயதார்த்தத்துக்கு நாள் குறிக்கப்பட்ட பின்னர் வீட்டிலேயே நிச்சயம் செய்து கொள்ளலாம் என்று பட்டாபிராமன் கூறிவிட்டார். ஏனெனில் முதல் திருமணத்தில் நடந்த நிகழ்வுகள் அவர் மனதை அந்தளவுக்கு பாதித்திருந்தது. திருமணத்தை மட்டும் மண்டபத்தில் வைத்துக் கொள்ளலாம் என்ற அவரது முடிவுக்கு குடும்பத்தினர் சம்மதித்துவிட்டனர். ஆனால் யாருமே பத்மாவதியின் கருத்தை கேட்கவும் இல்லை. அவரும் சொல்ல விரும்பவில்லை.
ஆனால் வேங்கடநாதனிடம் "ஏண்ணா! ஹர்சாவோட நிச்சயத்தை பெருசா கழிச்சோமே. இவனுக்கு மட்டும் சிம்பிளா பண்ணுனா நந்து எதுவும் நினைச்சுக்க போறான்ணா" என்றார் கவலையுடன்.
வேங்கடநாதன் கடந்த சில மாதங்களாக மனைவியின் முகத்தைக் கூட பார்ப்பதை தவிர்த்தவர் "அவ என் பையன். இந்த சின்ன விஷயத்துக்குலாம் உடன்பிறந்தானை பார்த்து பொறாமைப்படற சின்னப்புத்தி அவனுக்கு கிடையாது. நீ உன்னை மனசுல வச்சிண்டு என் பசங்களைப் பத்தி பேசாதே" என்று பதிலளித்துவிட்டு அவரிடம் இருந்து விலகி நடந்தார். பத்மாவதியால் கணவரின் போக்கை நினைத்து வருத்தப்பட மட்டுமே முடிந்தது.
பெருமூச்சு விட்டுக் கொண்டு திரும்பியவரின் காதில் மைதிலியின் பேச்சு சத்தம் விழுந்தது.
"ஆமாடி மைத்தி! வர்ற இருபத்தேழு தான். மாப்பிள்ளைக்கு வசதியா இருக்கும்னு தான் அப்பா ஞாயிறா பார்த்து தேதி குறிச்சிருக்கா. நீ சனிக்கிழமையே வந்துடுடி. இப்போ ஸ்ருதியை அழைச்சிண்டு நோக்கு கால் பண்ணுறேன்" என்று சொல்லிவிட்டு போனை வைத்தவர் அடுத்து ஸ்ருதிகீர்த்திக்கு போன் செய்து நிச்சயதார்த்தத்தை பற்றி தெரிவித்து விட்டு வைத்தார்.
போனை பேசிவிட்டு திரும்பியவரின் கண்ணில் அவரது எதிரில் நிற்கும் தமக்கை பட அவரிடம் "என்னக்கா! கண்ணுல ஜீவனே இல்லாம நடமாடற? இது உன் பையனோட விவாகம். பழைய விஷயங்களை மறந்துட்டு நடக்கப் போறதை மட்டும் கவனிப்போம். நீ என்னோட வா" என்று பத்மாவதியை தன்னுடன் அழைத்துச் சென்றார்.
பத்மாவதியும் இத்தனை மாதங்களில் மாமனார், மாமியார், கணவர்,மைத்துனர் என்று அனைவரும் தன்னை ஒதுக்கி வைத்தபோதும் ஆறுதலாக இருந்த தங்கையின் பேச்சை ஏற்றபடி அவருடன் சென்றார்.
ஒரு நல்ல நாளாக பார்த்து அனைவருக்கும் நிச்சயம் மற்றும் திருமணத்துக்குப் புத்தாடை எடுக்க முடிவெடுத்தனர். ரகுநந்தனும் ஹர்சவர்தனும் வேலை இருப்பதால் வர இயலாது என்று கூறிவிட பெண்கள் மட்டும் செல்லலாம் என்று முடிவு செய்தனர்.
கிருஷ்ணஜாட்சி கடையில் நுழைந்ததுமே மைதிலியிடம் "மாமி! நீருவுக்கு நானே எடுத்துடுறேன்" என்று பொதுப்படையாக கூறிவிட நீரஜாட்சிக்கும் அதுவே சரியென்று பட்டது.
மைதிலி அதை மறுக்க வர "சின்ன மாமி! பின்னாடி யாரும் உடுத்த துணி கூட எங்க காசுல எடுத்தது தான்னு பேசிடக் கூடாதுனு கிருஷ்ணா யோசிக்கிறா. அவளே எனக்கு எடுத்துத் தரட்டும். நீங்க மத்த எல்லாருக்கும் செலக்ட் பண்ணுங்க" என்றாள் நீரஜாட்சி பத்மாவதியை மனதில் வைத்து.
அதன் பின் மைதிலியும் அவர்களை வற்புறுத்தவில்லை. சிறிது நேரத்தில் மைத்திரேயியும், ஸ்ருதிகீர்த்தியும் கூட வந்துவிட உற்சாகமாக புடவைத்தேர்வில் ஈடுபட்டனர் பெண்கள்.
கிருஷ்ணஜாட்சி அவளது தங்கைக்கு பார்த்து பார்த்து புடவையை தேர்வு செய்தாள். நிச்சயத்திற்கு அடர்மஞ்சள் நிறத்தில் அரக்கு பார்டரிட்ட புடவையை தேர்வு செய்தவள் நீரஜாட்சியிடம் காட்ட அவளுக்குமே அது மிகவும் பிடித்து விட்டது. அடுத்து இருவரும் திருமணத்துக்காக புடவைகளைப் பார்க்க எதுவுமே திருப்தியாக இல்லை.
கடைசியாக மைத்திரேயி சந்தன நிறத்தில் அடர்ரோஜாநிற பார்டருடன் கூடிய ஒன்பது முழம் புடவையை காட்ட சகோதரிகள் இருவருக்குமே அது பிடித்துவிட்டது. அடுத்து ஆபரணங்களை வாங்கச் செல்ல எத்தனிக்க நீரஜாட்சிக்கு ரகுநந்தனிடமிருந்து போன் வரவே "மைத்திக்கா, கிருஷ்ணா நகையெல்லாம் எனக்கு இன்ட்ரெஸ்ட் இல்ல. நீங்களே பார்த்து வாங்கிடுங்க. நான் கால் பேசிட்டு வந்துடுறேன்" என்றபடி நகர்ந்தாள்.
"ஹலோ! நீ சைட்ல தானே இருக்க, இப்போ எதுக்கு கால் பண்ணுன?" என்று கேட்டவளிடம் ரகுநந்தன் தான் இன்னும் சிறிது நேரத்தில் அங்கே வந்துவிடுவேன் என்று கூற அவள் ஏன் என்று கேட்பதற்குள் அழைப்பு துண்டிக்கப்படவே அவள் தோளை அலட்சியமாக குலுக்கிவிட்டு கடையை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.
சிறிது நேரத்தில் வீட்டுப்பெண்கள் அனைவரும் திரும்பிவிட அவர்களுடன் கிளம்ப முயன்றவள் ரகுநந்தன் பேசியது நினைவில் வரவும் "நீங்க எல்லாரும் கிளம்புங்க. நந்து வர்றேனு சொன்னான். நான் அவனோட வீட்டுக்கு வர்றேன்" என்று கூற பத்மாவதியை தவிர மற்ற அனைவரும் ஒரு நமட்டுச்சிரிப்புடன் தலையாட்டிவிட்டு நகர அதற்குள் அவனும் வந்துவிட்டான்.
கிருஷ்ணஜாட்சியிடம் அனுமதி பெற்று விட்டு நீரஜாட்சியை ஆபரணங்கள் இருக்கும் பிரிவுக்கு அழைத்துச் செல்ல மற்றவர்கள் வீட்டுக்கு செல்வதற்காக தரிப்பிடத்தில் இருக்கும் காரை நோக்கிச் சென்றனர்.
நீரஜாட்சி மறுபேச்சின்றி அவனுடன் வர ரகுநந்தன் மோதிரங்கள் பிரிவில் அவளை அமர வைத்தவன் அவளுக்கு பிடித்த டிசைனில் பார்க்கச் சொன்னான்.
நீரஜாட்சி "இதெல்லாம் எனக்கு வேண்டாம் நந்து. உங்க அம்மாக்கு தெரிஞ்சா எதாச்சும் சொல்லுவாங்க" என்று மறுக்க ரகுநந்தன் அதை காதில் போட்டுக் கொண்டால் தானே.
அவளுக்கும் சேர்த்து அவனே தேர்வு செய்தவன் "கொஞ்சம் விரலை நீட்டு" என்று கூற அவள் யோசனையுடன் இருக்கவே அவனே விரலை பிடித்து மோதிரத்தைப் போட்டுப் பார்த்தான்.
"வாவ்! கரெக்டா இருக்கு நீரு. ஓகே ப்ரோ, இதையே பில் போட்டுடுங்க" என்றவன்
"அப்பிடியே நான் சொன்னதும் சேர்த்து பில் போட்டுருங்க" என்று எதையோ பூடகமாக கூற நீரஜாட்சி அது என்ன என்ற யோசனையுடன் அவனைத் தொடர்ந்தாள்.
எல்லாவற்றையும் வாங்கிவிட்டு அவளை வீட்டில் கொண்டு சென்று விட்டவன் மதியவுணவை முடித்துவிட்டு மீண்டும் அலுவலகம் சென்றுவிட்டான்.
வெளிப்புற வராண்டாவில் மரத்தின் நிழல் குளுமையாக விழுவதால் அதில் அமர்ந்த பெண்கள் அனைவரும் புடவைகளை சீதாலெட்சுமியிடம் காட்டிக் கொண்டிருந்தனர்.
கிருஷ்ணஜாட்சி நீண்டநாட்களுக்குப் பிறகு அவர்களுடன் அமர்ந்திருந்ததை பார்த்த நீரஜாட்சி "இப்போ நீ வராண்டா வரைக்கும் வந்துட்ட கிருஷ்ணா! இந்த கல்யாணம் மட்டும் ஆகட்டும், நீ வீட்டுக்குள்ளவும் வந்துடுவ! அதை பத்து மாமியால கூட தடுக்க முடியாது. நீயும் மறுக்க முடியாத அளவுக்கு நான் ஒரு பிளான் வச்சிருக்கேன்" என்று தீவிரமான முகபாவத்துடன் சொல்லிவிட்டு பட்டாபிராமனுக்கு உணவு எடுத்து வைக்க சென்றுவிட்டாள்.
அதன் பின் அவளும் சாப்பிட்டு விட்டு வெளியே அலைந்து திரிந்த களைப்பில் அவளது அறைக்குச் சென்றவள் நன்கு உறங்கிவிட்டாள். அப்போது உறங்க ஆரம்பித்தவள் பத்மாவதி தனது பெருங்குரலில் "விளக்கேத்துற நேரத்துல ஆத்துல இப்பிடி இழுத்துப் போர்த்திண்டு தூங்குனா விளங்குமா?" என்று அங்கலாய்த்த சத்தத்தில் விழித்துக் கொண்டாள்.
"ச்சே! எப்பிடி இவ்ளோ நேரம் தூங்குனேன் நான்?" என்றபடி எழுந்தவள் முகம் கழுவிவிட்டு கீழே இறங்கி வந்தாள்.
பத்மாவதியை நோக்கி ஒரு கேலிப்புன்னகையை வீசிவிட்டு வராண்டாவில் அமர்ந்திருக்கும் சீதாலெட்சுமி, பட்டாபிராமனை நோக்கி சென்றாள்.
அவர்களுடன் அமர்ந்து வம்பளக்க ஆரம்பித்தவள் சிறிது நேரத்தில் மைதிலியும் அதில் கலந்து கொள்ளவும் நேரம் போனதே தெரியாமல் அந்த கலகலப்பான உரையாடலில் மூழ்கிவிட்டாள்.
நேரம் ஆவதை அறிந்த மைதிலி "அப்பா, அம்மா ரெண்டு பேரும் பேசுனது போதும். நேரமாச்சு பாருங்கோ! எழுந்து சாப்பிட வாங்கோ!" என்றபடி அவர்களை உள்ளே அழைத்துச் செல்ல நீரஜாட்சியும் அவர்களுடனே இரவுணவை முடித்துவிட்டு தனது அறைக்குள் தஞ்சமடைந்தாள்.
"மதியம் நல்லா தூங்கியும் ராத்திரி சீக்கிரமாவே தூக்கம் வருதே! நம்ம என்ன டிசைனோ?" என்றபடி போர்வையை தலைகூடி மூடியவள் படுத்த சில நிமிடங்களில் உறங்கியும் விட்டாள்.
நல்ல ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது அறையின் கதவு திறக்கும் சத்தம் ஏதோ கனவில் கேட்பது போல அவளுக்கு தோன்ற அதனால் கலைந்த உறக்கத்தை மீண்டும் தொடர முயன்றவளின் முகத்தை மூடியிருந்த போர்வையை யாரோ விலக்கினர்.
எரிச்சலுடன் எழுந்தவள் "நீயா? என் தூக்கத்தை கெடுத்தே தீருவேன்னு எதும் சபதம் போட்டிருக்கியா? இப்பிடி மிட்நைட்ல வந்து உறக்கத்தை கெடுக்கிற" என்று கத்த அவளின் உதட்டில் கை வைத்து "ஷ்ஷ்! கத்தாதேடி" என்று மெல்லிய குரலில் அதட்டினான் ரகுநந்தன்.
"பதினொரு மணி நோக்கு மிட்நைட்டா?" என்று கேலி செய்ய
நீரஜாட்சி "உனக்கு தூக்கம் வராம இருக்கலாம் மேன். நான் யூஸ்வலா இந்நேரத்துக்கு ஆழ்ந்த நித்திரைக்கு போயிருப்பேன்" என்று குறைப்பட்டாள்.
ரகுநந்தன் அவளின் கன்னத்தை கிள்ளியவாறே "ஒரு நாள் முழிச்சிண்டிருந்தா ஒன்னும் கெட்டுப் போயிடாதுடி" என்று கூறியவாறே அவள் முன் பிரிக்கப்படாத நகைக்கடை பைகளை வைத்துவிட்டு எழுந்தவன் கதவை தாழிட்டு விட்டு வந்து பழையபடி அமர்ந்தான்.
நீரஜாட்சி "இந்த ரிங்கை காட்டவா நீ என்னை எழுப்புன?" என்று கேட்க அவன் மறுப்பாய் இடவலமாக தலையாட்டிவிட்டு அதிலிருந்து இரண்டு பெட்டிகளை எடுத்தான்.
நீரஜாட்சி அது என்னவாக இருக்கும் என்ற ஆர்வத்துடன் பார்க்க அவன் அதிலிருந்து இரண்டு செயின்களை எடுக்கவும் விதிர்விதிர்த்து போனாள்.
அவள் விழி விரிய பார்க்க ரகுநந்தன் அதை எடுத்தவன் தன் உள்ளங்கையில் வைத்து அவளிடம் காட்டினான்.
அதில் இரண்டு செயின்களும் 'நந்து, நீரு' என்ற பெயர்களை தாங்கியிருக்கவும் நீரஜாட்சி உள்ளுக்குள் அதிர்ந்தவளாய் அவனைப் பார்த்தாள்.
ரகுநந்தன் "இதை நான் நமக்காக ஸ்பெஷலா செய்ய சொல்லி வாங்குனேன் நீரு. இந்த 'நந்து'ங்கிற செயின் உன்னோட கழுத்துல இருக்கணும்ங்கிறது என்னோட ஆசை. அதே மாதிரி இந்த 'நீரு'ங்கிற செயினை நீயே உன் கையால எனக்கு போட்டு விடு பார்ப்போம்" என்று கூற அவள் என்ன செய்யவென்று தெரியாமல் விழித்தாள்.
"என்னாச்சு நீருகுட்டி? இப்பிடி பார்த்துண்டே இருந்தா என்ன அர்த்தம்? சட்டுப்புட்டுனு போட்டு விடுடி" என்றான் கண்ணில் காதலுடன்.
அவள் இன்னும் அசையாமல் இருக்கவே "சரி நீ வெக்கப்படுறனு நினைக்கிறேன். நானே போட்டுவிடறேன்" என்றபடி தனது பெயரை தாங்கியிருக்கும் செயினை கையில் எடுத்தவன் அவளது கழுத்தில் மாட்டிவிட நீரஜாட்சியின் சிரம் தானாகவே குனிந்து அதை ஏற்றுக் கொண்டாள்.
அது அவளது கழுத்தில் விழவும் உள்ளே திக்கென்று இருக்க ரகுநந்தனை நிமிர்ந்து பார்க்க அவன் நீரஜாட்சியின் பெயரைத் தாங்கிய செயினை அவளது கரத்தில் திணித்தான்.
"ம்ம்... போட்டு விடு" என்று புன்முறுவலுடன் தலை குனிய அவளது கரங்கள் நடுக்கத்துடன் அந்த செயினை அவன் கழுத்தில் போட்டுவிடவும் நிமிர்ந்தான் அவன்.
அவளது பெயரை வாஞ்சையுடன் வருடிக் கொடுத்தபடி "இந்த செயின் என் கழுத்துல இருக்கறது நீயே என் கூட இருக்கற மாதிரி நீரு. அதே மாதிரி தான் நோக்கும். நான் மணமேடையில கட்டப் போற தாலியை விட இது நேக்கு ரொம்ப புனிதமானது நீரு. எப்போவும் இதை உன் கழுத்தை விட்டு இறங்கவிட்டுடாதே" என்று கூற அவள் கண்கள் கலங்கத் தொடங்கியது.
"இப்போ எதுக்குடி அழற?" என்றவாறு அவளை தனது மார்பில் சாற்றிக் கொண்டவன்
"நீருகுட்டிக்கு என்னாச்சு? இப்போ அழற அளவுக்கு நீ என்ன பண்ணி வச்ச?" என்று கொஞ்சலுடன் கேட்க அவளோ தான் போட்ட திட்டங்களை எண்ணி வருந்துவதை அவனிடம் எவ்வாறு கூறுவது என்ற தயக்கத்திலேயே இன்னும் அதிகமாக அழத் துவங்கினாள்.
ரகுநந்தனுக்கு அவளது அழுகை வியப்பை கொடுக்க அவனது கரங்கள் அவளது சிகையை ஆறுதலாக தடவிக் கொடுத்தது.
நீரஜாட்சிக்கு அவனது செய்கை ஆறுதலைத் தர கண் மூடி கண்ணீர் உகுத்தவள் "நீ என்ன ரொம்ப லவ் பண்ணுற நந்து. இந்தளவு காதலுக்கு நான் தகுதியானு நினைச்சு அழறேன்" என்று கேவலுடன் கூற அவளை எழுப்பியவன் அவளது கன்னங்களை அழுத்தித் துடைத்தான்.
"நீ மட்டும் தான் என்னோட முழுக்காதலுக்கும் தகுதியானவடி நீருகுட்டி. உன்னோட அன்பை கூட நீ கோவமா தான் காட்டுவ! உன்னால நடிக்க முடியாது" என்று அவன் பேசிக்கொண்டே செல்ல நீரஜாட்சிக்கு அவனது கடைசி வரி மனதை இன்னும் ரணமாக்கியது.
"ஓகேவா! இனி அழக்கூடாது" என்று கூறியவன் அவளது கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டு விட்டு எழுந்தான். நீரஜாட்சியும் தலையாட்டிவிட்டு எழ அவள் கன்னத்தில் தட்டிவிட்டு கதவை நோக்கி செல்ல நீரஜாட்சி "நந்து" என்று அழைக்க அவன் புன்னகையுடன் திரும்பினான்.
"ஐ லவ் யூ நந்து" என்று அடிமனதிலிருந்து கூற அவனும் பதிலுக்கு "ஐ லவ் யூ நீருகுட்டி" என்று கூறி மனம் நிறைய புன்னகைத்தவன் அவளிடம் அழக் கூடாது என்று சைகை காட்டிக் கதவை அடைத்துவிட்டு சென்றான்.
ரகுநந்தன் சென்றதும் நீரஜாட்சி தனது கழுத்தை தடவியள் அந்த செயினில் இருந்த 'நந்து' என்ற வார்த்தை அவனே அவளுடன் இருப்பது போன்ற மாயையைத் தோற்றுவிக்க அவளது உதடுகள் "இதை நான் எப்போவுமே என் கழுத்தை விட்டு கழட்டமாட்டேன் நந்து" என்றது உறுதியுடன்.
அவளது அனைத்து உறுதியும் உடைய அவளது கரங்களால் அதை கழற்றி வீசி எறியப்போகும் நாள் நெடுந்தூரம் இல்லை என்பதை அவள் அறியவில்லை.
Comments
Post a Comment