பூங்காற்று 42

🌺 பூங்காற்று 35 🌺
கிருஷ்ணஜாட்சி காலையில் எழும் போதே "நீரு எழுந்திருடி!" என்ற வழக்கமான கூவலுடன் எழ, சிறிது நேரம் கழித்து தான் நீரஜாட்சி ஸ்ரீநிவாசவிலாசம் சென்ற நிகழ்வு அவள் புத்தியை எட்டியது. அவள் இல்லாமல் அவுட் ஹவுஸே வெறிச்சோடியது போல தோன்ற சலிப்புடன் எழுந்தவள் போர்வையை மடித்து ஓரமாக வைத்துவிட்டு மற்ற வேலைகளை கவனிக்க ஆரம்பித்தாள்.
சரியாக ஏழு மணிக்கு வராண்டாவில் கேட்ட ஷூ அணிந்த கால்களின் சத்தம் அவளுக்கு ஹர்சவர்தனும் இங்கே தான் இருக்கிறான் என்பதை நினைவுறுத்த அவள் முகம் எரிச்சலை தத்தெடுத்துக் கொண்டது.
ஆனால் அவனோ புன்முறுவல் பூத்த முகத்துடன் சமையலறைக்குள் வந்தவன் "ஹாய் கிருஷ்ணா! குட் மார்னிங், ஸ்ட்ராங்கா சுகர் தூக்கலா ஒரு காபி குடேன் பிளீஸ். நான் கார்டன்ல தான் இருப்பேன் சரியா?" என்று சொல்லி அவளது கன்னத்தை தட்டிவிட்டுச் செல்ல அவளோ அவன் மீதுள்ள கோபத்தை பாத்திரங்கள் மீது பிரயோகித்தபடி காபியை போட ஆரம்பித்தாள்.
அவனது காதில் அது தெளிவாக விழ புன்னகையுடன் தோட்டத்தை நோக்கிச் சென்றவன் அங்கே அன்னையும் தம்பியும் ஏதோ சோகம் கப்பிய முகத்துடன் பேசிக் கொண்டிருக்க என்னவாயிற்று என்ற யோசனையுடன் அவர்களை நெருங்கினான்.
"நந்து என்னாச்சு? ஏன் இவ்ளோ சீரியஸா பேசிண்டிருக்கிங்கம்மா?" என்றபடி அன்னை அமர்ந்திருந்த பெஞ்சில் அவருக்கு அடுத்து அமர்ந்து அவரது தோளை ஆதரவாக பற்றிக் கொண்டபடி கேட்க பத்மாவதிக்கு தன் மகன்கள் ஒன்றும் தன்னை அடியோடு வெறுத்துவிடவில்லை என்ற நிம்மதி.
"ஒன்னும் இல்லடா கண்ணா! ரெண்டு பேரும் உங்க வாழ்க்கைக்கு ஏத்தவாளா பார்த்து தேர்ந்தெடுக்கறேள். இதுல நான் எந்த தப்பும் சொல்லமாட்டேன். உங்க சந்தோசம் தான் அம்மாக்கும் முக்கியம். ஆனா உங்க மனசோட ஒரு ஓரத்துல கூட இந்த அம்மா மேல வெறுப்பு வந்துடாம பார்த்துக்கோங்கோ. நேக்கு என் குழந்தேளை விட பெரிய சொத்துனு எதுவும் கிடையாதுடா" என்று ஏக்கத்துடன் கூறி முடிக்க
ரகுநந்தன் "மா! நீங்க ஏன் இப்பிடிலாம் யோசிக்கறேள்? இப்போ எங்களுக்கு அப்பாவை ரொம்ப பிடிக்கும்னா அதுக்கு அர்த்தம் உங்களை பிடிக்காதுங்கிறது இல்ல. அதே மாதிரி தான் இவனுக்கு மன்னியை பிடிக்கும்னா அதுக்கு உங்களை இவன் வெறுக்கறதா அர்த்தம் இல்லம்மா! இதை நீங்களும் புரிஞ்சிக்கணும்" என்றான் அழுத்தமான குரலில்.
தாயாரின் முன் முழந்தாளிட்டிருந்தவன் எழுந்து "ஆனா நேக்கு உங்க மேல வருத்தம் இருக்குமா! மன்னி விஷயத்துல நீங்க நடந்துக்கிட்ட விதம் கொஞ்சம் கூட சரி கிடையாது. உங்க மகன்ங்கிறதால அதை நியாயப்படுத்த என்னால முடியாது. நான் சொன்னது உங்க மனசை கஷ்டப்படுத்தியிருந்தா ஐ அம் ரியலி சாரிம்மா. பட் என்னால தப்பை என்னைக்குமே தப்புனு மட்டும் தான் சொல்ல முடியும். என்னோட அம்மா என்னை அப்பிடி தான் வளர்த்திருக்கா" என்று சொல்லிவிட்டு வீட்டை நோக்கி சென்றான்.
அவன் சொன்னதை கேட்டதும் ஒரு பக்கம் தனது மகன் இவ்வளவு தெளிவாக யோசிப்பவனாக வளர்ந்திருப்பது அவருக்கு பெருமையைக் கொடுத்தாலும், அவன் கூறிய வார்த்தைகளில் உள்ள உண்மை அவரைச் சுட்டது.
தலை குனிந்து அமர்ந்திருந்தவரின் கன்னத்தைப் பிடித்த ஹர்சவர்தன் "மா! இட்ஸ் டூ பேட்! இப்பிடி நீங்க இருந்தேள்னா பார்க்கறதுக்கு கொஞ்சம் கூட நல்லா இல்ல. கொஞ்சம் சிரிங்க" என்று அவரை சிரிக்க வைக்க முயல அவரும் மகனின் ஆசைக்காக சிரித்து வைத்தார்.
ஹர்சவர்தன் அவரது கையைப் பற்றி அழுத்தியவன் "மா! நேக்கு கிருஷ்ணாவை ரொம்ப வருசமா பிடிக்கும்மா! ஆனா உங்களுக்கு அவளை பிடிக்காதுங்கிறதுக்காக தான் நான் அவளை விட்டு விலகியிருந்தேன். அவ கிட்ட என் மனசுல உள்ளதை சொல்ல நினைக்கறச்சே உங்க முகம் தான் என் மைண்ட்ல வரும். உடனே அந்த எண்ணத்தை தூக்கிப் போட்டுடுவேன்.
நான் அவளை விவாகம் பண்ணிப்பேனு கனவுல கூட நினைச்சது இல்ல. ஆனா தாத்தாவோட பிடிவாதத்தால அவ என்னோட கையால மணமேடையில தாலி வாங்கிக்கிண்டா. நான் அவளண்ட நடந்துண்ட முறையால அவளுக்குமே என்னை பிடிக்காதுனு நினைச்சு தான் அவளை நீங்க திட்டறச்ச நான் அமைதியா இருந்தேன். அவ என்னை விட்டு விலகிப் போயிட்டா அவளுக்குப் பிடிச்ச வாழ்க்கையை அமைச்சுப்பானு யோசிச்சேனே தவிர அவளோட ஆம்படையானா நான் அவளை உங்க வார்த்தைகள்ல இருந்து காப்பாத்தணும்னு நினைக்கல. இது நேக்கு லேட்டா புரிஞ்சாலும் இனி அவளை என்னால மறக்க முடியாதுங்கிற நிலை வந்துடுத்து. அவ ரொம்ப நல்லவம்மா! உங்களுக்கும் அவளைப் பிடிக்கும்" என்றான்.
இவை யாவும் நூறுசதவீத உண்மைகளே என்று பத்மாவதிக்குப் புரிந்தாலும் மனதில் ஏதோ ஒரு உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது.
மகனது சிகையை வாஞ்சையுடன் வருடிக் கொடுத்தவர் "நான் முன்னமே சொல்லிட்டேனே கண்ணா! உங்க விருப்பம் தான் நேக்கும் முக்கியம்னு. உன் ஆத்துக்காரி மோசமானவனு நான் சொல்ல வரலை. அவளோட தங்கையோட ஒப்பிடறச்ச அவ சொக்கத்தங்கம் தான். ஆனா என் மனசு ஏனோ ஒப்பலைடா. அந்தக் காலத்து மனுஷியோன்னோ. கொஞ்சம் நாளாகும் ஹர்சா. நான் என் மனசை மாத்திக்க முயற்சி செய்யறேன், என் பசங்களுக்காக இதை கூட பண்ண மாட்டேனா?" என்றபடி எழுந்தவர் அவனிடம் சொல்லிவிட்டு வீட்டிற்குள் செல்லும் பாதையில் கால் பதித்து நடக்க ஆரம்பித்தார்.
ஹர்சவர்தன் தாயின் பேச்சு கொடுத்த நிம்மதியில் புன்னகையுடன் திரும்பி அவுட் ஹவுஸை நோக்கி நடை போட எத்தனித்தவன் இவ்வளவு நேர உரையாடல்களையும் கேட்டபடி அவர்கள் அமர்ந்திருந்த பெஞ்சின் பின்னே இருக்கும் பிச்சிக்கொடியின் பின்னர் காபி கப்புடன் நின்று கொண்டிருந்த கிருஷ்ணஜாட்சியைக் கண்டதும் மேலும் முன்னேறாமல் சட்டென்று நின்றான்.
கிருஷ்ணஜாட்சி மாமியாரும் கணவனும் பேசிய அனைத்தையும் ஒரு வார்த்தை மிச்சமில்லாமல் கேட்டுவிட்டவள் வேறு எதுவும் கூறாமல் "காபி" என்று கூறிவிட்டு அவன் கையில் காபி கப்பை திணித்துவிட்டு அவுட் ஹவுஸை நோக்கிச் செல்ல அவனும் காபியை அருந்தியபடியே மனைவியை தொடர்ந்தான்.
*************
ரகுநந்தன் பத்மாவதியிடம் பேசிவிட்டு வீட்டிற்குள் வந்தவன் மைதிலியின் கொடுத்த காபியை அருந்திவிட்டு தனது அறைக்குச் செல்ல மாடிப்படி ஏறினான்.
கீழே சீதாலெட்சுமி "டேய் நந்தா! நீரு இன்னும் எழுந்திருக்காம தூங்கிண்டிருக்காடா! அவ அறைக்கதவை தட்டி எழுப்பி விடுடா" என்று கூறியது காதில் விழுந்ததும் "சரி பாட்டி" என்று கூறியவண்ணம் மாடியை அடைந்தான்.
மாடிவராண்டாவில் நடைபோட்டவன் சாத்தியிருந்த நீரஜாட்சியின் அறைக்கதவை தட்ட முயல அவன் கைவைத்ததும் கதவு திறந்து கொண்டது. "என்னடா இவ கதவை கூட லாக் பண்ணாம தூங்கிண்டிருக்கா?" என்ற கேள்வியுடன் உள்ளே நுழைந்தவன் துணிமூட்டை போல் தலை முதல் கால் வரை இழுத்துப் போர்த்தி உறங்கிக் கொண்டிருந்தவளைக் கண்டதும் சிரிப்பைக் கட்டுப்படுத்தியபடி அவளிடம் சென்றான்.
"ஏய் நீரு! எழுந்திருடி! நியாயப்படி நீ என்னை எழுப்பணும். இங்கே எல்லாமே உல்டாவா நடக்கறது" என்றபடி போர்வையை விலக்கிவிட நீரஜாட்சி "விடிஞ்சிருச்சா?" என்றபடி எழுந்து அமர்ந்தாள்.
கையை உயர்த்தி சோம்பல் முறித்தவள் கடிகாரத்தை பார்க்க "வாட்? செவன் தேர்ட்டி தானா? அதுக்குள்ள ஏன்டா என்னை எழுப்புன? யூஸ்வலா சண்டேனா நான் நைன் ஓ கிளாக் தான் எழுந்திருப்பேன்" என்று சொல்லிவிட்டு மீண்டும் தலையோடு மூடிக் கொண்டு நித்திரைக்குச் செல்ல விளைய
அதற்குள் போர்வையை பிடித்துக் கொண்டவன் "ஏய் இன்னொரு தடவை எகிப்து மம்மி மாதிரி உறங்க ஆரம்பிச்சியோ நான் பொல்லாதவனா ஆயிடுவேன். ஒழுங்கா எழுந்துக்கோ. இல்லைனா பக்கெட் தண்ணியை கொண்டு வந்து தலையில ஊத்த வேண்டியிருக்கும்" என்று மிரட்டிவிட்டுச் செல்ல எத்தனிக்க அவனை செல்லவிடாமல் வழியை மறித்தாள் நீரஜாட்சி.
"நீ உன் இஷ்டத்துக்கு என் ரூம்குள்ள வந்திருக்கலாம். ஆனா நான் நினைச்சா தான் இங்கே இருந்து போக முடியும்" என்று வாசலின் நிலையை அடைத்தவண்ணம் நின்றவளைக் கண்டு அவனுக்கு சிரிப்பு தான் வந்தது.
"இத்துணூண்டு இருந்துண்டு நோக்கு வாய் மட்டும் வளசரவாக்கம் வரைக்கும் நீள்றது. ஓரமா போடி! நான் போய் நியூஸ் பார்க்கணும்" என்றபடி அவளை விலக்கிவிட்டு அவன் அறைக்குச் செல்ல அவள் உதட்டைச் சுழித்துவிட்டு படுக்கை விரிப்பை மடித்து வைக்க சென்றாள்.
Comments
Post a Comment