அத்தியாயம் 10
தரங்கிணி கண் விழித்தபோது
அவள் பங்களாவின் விருந்தினர் அறையில் இருந்தாள். சுற்றி யாருமில்லை.
“சித்து ஹாஸ்பிட்டல்ல
இருக்கான்”
சாரதாவின் குரல்
மீண்டும் காதில் ஒலிக்கவும் விறுவிறுவெனப் படுக்கையிலிருந்து எழுந்தாள். இந்தப் பாவிகள்
என் பிள்ளையை என்ன செய்தார்களோ என்று தாய்மணம் அரற்றியது.
வேகமாக லிவிங் அறைக்கு
வந்தவள் “எங்க போனிங்க சாரதாம்மா? என் மகனுக்கு என்னாச்சுனு சொல்லாம எங்க ஓடி ஒளிஞ்சிருக்கிங்க?”
என்று கோபமாகக் கத்தினாள்.
அவளது குரல் கேட்டதும்
மேல்தளத்தில் சாரதாவின் முகம் தெரிந்தது. பணத்திமிர், அதிகாரவெறி எல்லாம் காணாமல் போன
முகம் அது.
பதற்றத்தை மறைத்தபடி
அவர் கீழ்த்தளத்துக்கு வருவதைக் காலணிகளின் சத்தம் உறுதிபடுத்தியது தரங்கிணிக்கு.
“எதுக்கு இப்ப கத்துற?
சித்துக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்ல… அதனால ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணிருக்கோம்”
என்றபடி வந்து நின்றார் அவர்.
“அவனுக்கு ஹெல்த்
இஸ்யூனு ஏன் எனக்கு இன்ஃபார்ம் பண்ணல? இப்ப அவன் எந்த ஹாஸ்பிட்டல்ல இருக்கான்?”
பரபரத்த தரங்கிணியை
எப்படி கட்டுப்படுத்துவதெனத் தெரியாமல் அயர்ந்து போனார் அப்பெண்மணி.
“அவனை யாரும் தொந்தரவு
பண்ணக்கூடாதுனு டாக்டர் சொல்லிருக்காங்க தரங்கிணி… உன் கிட்ட சொல்லாம விட்டது தப்பு…
கவர்னஸ் தமயந்தி உன் கிட்ட இன்ஃபார்ம் பண்ணிருப்பானு நினைச்சேன்”
அவரது குரலில் இருந்த
தடுமாற்றம் தரங்கிணிக்கு அவர் சொல்வது பொய்யெனப் புரியவைத்துவிட்டது. இனியும் தாமதிக்காமல்
மருத்துவமனைக்குச் சென்று மகனைப் பார்த்தேயாக வேண்டுமென துடித்தது அவளது உடலின் ஒவ்வொரு
அணுவும்.
“எனக்கு உங்க விளக்கம்
தேவையில்ல… நான் என் மகனைப் பாக்கணும்”
“முடியாது தரங்கிணி”
வழக்கத்தைக் காட்டிலும்
சாரதா அன்று அமைதியாகப் பேசினாலும் தரங்கிணிக்கு அது நிஷ்டூரமாகத் தோன்றியது.
“ஏன் முடியாது? கோர்ட்
அவனோட கஷ்டடிய உங்க கிட்ட குடுத்ததால அவனை என் கிட்ட இருந்து பிரிச்சிடலாம்னு நினைக்கிங்களா?
அவனை நான் எப்ப வேணும்னாலும் வந்து பாக்கலாம்னு ஜட்ஜ் சொல்லிருக்காங்க… மறந்துட்டிங்களா?
எதுக்காக என்னையும் என் மகனையும் பிரிச்சு வச்சு சந்தோசப்படுறிங்க? இந்த வயசுல கூட
உங்க மகன் அம்மா அம்மானு ஒவ்வொரு விசயத்துக்கும் உங்க முன்னாடி வந்து நிக்குறான்… என்
பிள்ளைக்கும் என்னைப் பாக்கணும், என் கூட இருக்கணும்னு தோணாதா? ஒரு பொண்ணு மேல போடக்கூடாத
பழிய போட்டு என்னை விட்டு என் பிள்ளைய பிரிச்சிங்க… எல்லாத்தையும் நான் பொறுத்துக்கிட்டதுக்குக்
காரணம் என்னை வெறுத்தாலும் என் பிள்ளை மேல உங்களுக்கு இருக்குற பாசம்… ஆனா அதுவும்
பொய் தானோனு எனக்குச் சந்தேகம் வருது… எல்லாருமா சேர்ந்து என் பிள்ளைய என்ன செஞ்சிங்க?”
“வார்த்தைய அளந்து
பேசு தரங்கிணி”
சாரதாவின் குரல்
உயர்ந்தது. அந்நேரம் பார்த்து அங்கே கமலேஷூடன் வந்தார் அவனுடைய தந்தை ஹேமசந்திரன்.
சாரதாவை விட அதிகாரத்திமிரும், செல்வச்செருக்கும் அதிகம் உள்ள நபர்.
தரங்கிணியை ஏதோ புழு
பூச்சியைப் போல பார்த்தவர் “இவ இன்னும் இங்க என்ன செய்யுறா?” என்று சாரதாவிடம் விசாரித்தார்.
“சித்துவ பாக்கணும்னு
சொல்லுறா சந்துரு”
ஹேமசந்திரன் தரங்கிணியை
வெறுப்பாகப் பார்த்துவிட்டு “நம்ம குடும்பத்து வாரிசை நம்ம நினைச்சா மட்டும் தான் இவ
பாக்க முடியும்… போறவங்க வர்றவங்க எல்லாம் பாத்துட்டுப் போறதுக்கு அவன் ஒன்னும் மியூசியத்துல
இருக்குற பொருள் இல்ல” என்றார்.
தரங்கிணிக்கு வந்த
கோபத்தில் அவரது வயதையும் பார்க்காமல் கன்னம் கன்னமாக அறையும் வெறி வந்துவிட்டது.
ஆனால் அவளது பெற்றோர்
கற்றுக் கொடுத்த மரியாதையும் நாகரிகமும் அவளைத் தடுத்தது.
இழுத்துப் பிடித்த
பொறுமையோடு “சித்தார்த்தைப் பெத்தெடுத்த எனக்கு உங்க எல்லாரையும் விட அவன் மேல உரிமை
அதிகம்… சட்டத்தால அவன் மேல எனக்கு இருக்குற உரிமைய குறைக்க முடியுமே தவிர அழிக்க முடியாது
ஹேமசந்திரன் சார்… அவனைப் பாக்க ஏன் என்னை அனுமதிக்க மாட்டேங்கிறிங்க? இத்தனை நாள்
இல்லாம திடீர்னு என் உங்க மகன் என் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டான்? என் நடத்தை
சரியில்லனு வாய் கூசாம கோர்ட்ல சொன்ன உங்க மனைவி ஏன் இன்னைக்கு என் கிட்ட பம்மி பதுங்கி
பேசுறாங்க? என்ன செஞ்சிங்க என் பிள்ளைய? எல்லாருமா சேர்ந்து அவனைக் கொன்னுட்டிங்களா?”
என்று ஆவேசமாகக் கேட்டாள்.
ஹேமசந்திரன் விழிகள்
கோபத்தில் சிவக்க ஏதோ சொல்ல வரவும் “வாயை மூடுங்க… சித்துவ பாக்காம நான் இங்க இருந்து
போகமாட்டேன்… என்னைப் பாக்க விடலனா கமிஷ்னர் ஆபிஸ்ல போய் உங்க மேல சந்தேகம் இருக்குனு
கம்ப்ளைண்ட் குடுப்பேன்… உங்களைச் சும்மா விடமாட்டேன்… எங்க என் மகன்?” என்று அதிகாரமாகத்
தரங்கிணி அவரை அடக்கிவிட அந்தக் கோபத்தை அருகில் நின்ற மகனிடம் காட்டினார்.
“முட்டாள் முட்டாள்!
எல்லாம் உன் முட்டாள்த்தனத்தால வந்த தலைவலி… இவளை ஹாஸ்பிட்டலுக்கு அழைச்சிட்டுப் போ”
என்றவர் தரங்கிணியைத் துச்சமாகப் பார்த்தார்.
“அங்க போனதும் என்
பேரன் கிட்ட அழுது நடிச்சு அவனை உன் கூட அழைச்சிட்டுப் போகலாம்னு நினைக்காத… என் வாரிசை
நான் விட்டுக் குடுக்கமாட்டேன்… முரண்டு பிடிச்சு எங்க கௌரவத்துக்கு உலை வைக்க நினைச்ச,
இந்தத் தடவை என் பதிலடி ரொம்ப கொடூரமா இருக்கும்”
அவரது சுயரூபத்தைப்
பார்த்தவள் என்றாலும் தரங்கிணிக்கு இப்போது அவரது எச்சரிக்கை பயத்தைக் கொடுக்கவில்லை.
மாறாக இவர் இவ்வளவு தூரம் பேசுகிறார் என்றால் பெரிதாக எதுவோ நடந்திருக்கிறதென ஊகித்து
சித்தார்த்தை எண்ணி பயந்தாள் அவள்.
கமலேஷுடன் காரில்
ஏறியவள் சென்னையின் பிரபல பல்நோக்கு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்ததும் பதற்றத்தோடு
மகன் அனுமதிக்கப்பட்டிருந்த பிரிவை நோக்கி விரைந்தாள்.
அது தீவிர சிகிச்சை
பிரிவு எனக் கமலேஷ் சொன்னதும் பாதி உயிர் போய்விட்டது அவளுக்கு. மீதி உயிரோ தலையில்
பெரிய கட்டுடன் மருத்துவமனை படுக்கையில் பிராணவாயு குழாயுடன் கிடந்த சித்தார்த்தைக்
கண்டதும் போய்விட்டது.
“சித்து”
அவன் அனுமதிக்கப்பட்டிருந்த
அறையின் வெளிய மடிந்து தரையில் அமர்ந்து அழத்துவங்கினாள் தரங்கிணி.
கமலேஷ் என்ன சொல்வதெனத்
தெரியாமல் விழித்தான். அவன் மனமும் சித்தார்த்துக்காகத் துடித்தது. என்ன இருந்தாலும்
அவனது இரத்தம் அல்லவா!
“பர்த்டே பார்ட்டி
முடிஞ்ச அன்னைக்கு நைட் ஃபர்ஸ்ட் ஃப்ளோர்ல இருந்து தவறி விழுந்து தலையில அடி பட்டுடுச்சு
தரங்கிணி… அப்ப இருந்து அவனுக்குக் கான்சியஸ் வரல… டாக்டர்ஸ் இன்னும் ஒன் வீக் கெடு
குடுத்திருக்காங்க:’
“எதுக்கு?” விருட்டெனத்
தலையுயர்த்தி சீற்றமாகக் கேட்டாள் அவள்.
“அ… அதுக்குள்ள…
சித்துக்கு கான்சியஸ் வரலனா அவன் கோமாக்கு…”
“வாயை மூடுடா… என்
பிள்ளை கண் முழிப்பான்… இவ்ளோ நடந்திருக்கு… அவனைப் பெத்தவளுக்கு ஒரு வார்த்தை சொல்லணும்னு
தோணுச்சா உனக்கு? நீயும் உன் குடும்பமும் என் வாழ்க்கையை அழிச்சிங்க… என் பிள்ளைய என்
கிட்ட இருந்து பிரிச்சிங்க… உனக்குப் பிடிச்ச வாழ்க்கைய பிடிச்சவங்க கூட வாழுனு உன்னைத்
தொந்தரவு பண்ணாம சட்டப்படி பிரிய நினைச்சதுக்கு என்னை இந்தச் சொசைட்டி முன்னாடி நடத்தை
கெட்டவ, பைத்தியம்னு பட்டம் கட்டித் துரத்தி விட்டிங்க… எல்லாத்தையும் நான் பொறுத்துக்கிட்டேன்…
என் பிள்ளைக்கு மட்டும் எதுவும் ஆச்சுனா உங்க யாரையும் நான் உயிரோட விடமாட்டேன் கமல்…
இந்தத் தரங்கிணி சித்தார்த்துக்காக எதையும் செய்யத் துணிவா… மறந்துடாத”
கோபத்தோடு அவனைக்
கடித்துத் துப்பியவள் செவிலியரிடம் விசாரித்து மருத்துவரைச் சந்திக்க விரைந்தாள்.
அவள் சென்றதும் கமலேஷுக்கு
யாரிடமிருந்தோ அழைப்பு வந்தது. அழைப்பை ஏற்றவன் கவலையாய்ப் பேசலானான்.
“அவ சித்துக்கு என்ன
நடந்துச்சுனு தெரிஞ்சிக்க நான் விடமாட்டேன்… நீ பயப்படாத… அதான் அந்த கவர்னெஸ்சை துரத்தியாச்சே…
பையனுக்கு ஒன்னுமில்ல… அவன் கண் முழிச்சிடுவான்… நீ வருத்தப்படாத… வேணும்னு நீ எதையும்
செஞ்சிருக்கமாட்ட… நான் உன்னை நம்புறேன்… என் கவலை எல்லாம் தரங்கிணி இதைச் சாக்கா வச்சு
போலீஸ், கோர்ட்னு மறுபடி ஏறுவாளோங்கிறது தான்… அப்பிடி போனா நம்மளால இப்ப இருக்குற
மாதிரி சந்தோசமா வாழ முடியாது… நம்ம வாழ்க்கைய நினைச்சு தான் நான் பயப்படுறேன்”
மறுமுனையில் ஏதோ
சொல்லவும் துடித்துப் போய்விட்டான் கமலேஷ்.
“நீ இல்லாம வாழுறதுக்குப்
பதிலா நான் செத்துடுவேன்… உனக்காக எதை வேணாலும் நான் இழப்பேன்… நீ பயப்படாத”
அதே நேரம் மருத்துவரிடம்
பேசிக்கொண்டிருந்தாள் தரங்கிணி.
“சித்தார்த்தை இங்க
கொண்டு வர்றப்ப அவனோட பல்ஸ் ரொம்ப வீக்கா இருந்துச்சு… ஹெவி ப்ளட் லாஸ்… கன்னம், உதடு
எல்லாம் காயம்… மிஸ்டர் ஹேமசந்திரன் கிட்ட கேட்டதுக்கு பையன் மாடில இருந்து தவறி விழுந்துட்டான்னு
சொன்னார்… பட் கன்னத்துலயும் உதட்டுலயும் காயம் பட வாய்ப்பில்ல… ஏன்னா சித்தார்த் விழுந்தது பின்னந்தலைல அடிபடுற
மாதிரி… அப்ப எப்பிடி கன்னம், உதட்டுல காயம் வந்திருக்க முடியும்னு விசாரிச்சேன்… அவர்
அதுக்கு ப்ராப்பரா பதில் சொல்லல… சித்தார்த்தோட கவர்னெஸ் ஏதோ சொல்ல வந்தாங்க… அவங்களை
உங்க எக்ஸ் ஹஸ்பெண்ட் ஏதோ சொல்லி அனுப்பி வச்சிட்டார்… இங்க பாருங்கம்மா, அந்தப் பையனை
உங்க கூட அழைச்சிட்டுப் போயிடுங்க”
தரங்கிணிக்குக் கண்ணீர்
வந்துவிட்டது. சித்தார்த்துக்கு என்னவோ நடந்திருக்கிறது. கமலேஷும் அவனது பெற்றோரும்
அதை மூடி மறைக்கப் பார்க்கிறார்கள்.
இனி இவர்களிடம் சித்தார்த்தை
ஒப்படைக்க அவளுக்கு விருப்பமில்லை. கண்ணீரைத் துடைத்துக்கொண்டு எழுந்தாள் அவள்.
“என் கிட்ட உண்மைய
மறைக்காம சொன்னதுக்கு தேங்க்ஸ் டாக்டர்… இன்னொரு ஹெல்பும் பண்ண முடியுமா?”
“என்னனு சொல்லுங்கம்மா”
“என் பிள்ளைய நான்
பாக்கணும்… ப்ளீஸ்”
மருத்துவர் மறுப்பு
சொல்லவில்லை. செவிலியின் துணையோடு சித்தார்த்தை அனுமதித்த அறைக்குக் கிளம்பினாள் தரங்கிணி.
அங்கே நின்ற கமலேஷை
பார்க்காமல் இருவரும் உள்ளே போய்விட்டார்கள்.
சித்தார்த் கிழிந்த
துணியாகப் படுக்கையில் கிடந்தான். ஒன்பது வயது சிறுவன் ஓடியாடி விளையாட வேண்டிய வயதில்
நினைவிழந்து படுக்கையில் கிடக்கிறான். அவனுக்கு நினைவு வருமா வராதா என்பதே கேள்விக்குறி
என்று வேறு கூறுகிறார்கள்!
அவனுக்காக அனுபமா
லக்கர் பஜாரிலிருந்து பரிசு வாங்கி அனுப்பியிருந்தாள். மரத்தினால் செய்யப்பட்ட சிறிய
கிடார் அது. சித்தார்த்துக்கு இசை என்றால் கொள்ளைப் பிரியம் என்று சொன்னதால் வாங்கியிருந்தாள்
அவள்.
தரங்கிணியின் கைகள்
மகனின் நெற்றியை வருட உயர்ந்தன. பின் தயக்கத்துடன் “நான் அவனைத் தொடலாமா? இன்ஃபெக்சன்
எதுவும் ஆகிடாதே?” என்று செவிலியிடம் கேட்க
“என்ன மேடம் நீங்க?”
என்று முடிக்கும் முன்னரே செவிலியின் கண்கள் கலங்கிவிட்டது.
அதைக் காட்டிக்கொள்ளாமல்
“உங்க ஸ்பரிசம் கூட அவனோட கான்சியஸை திரும்ப கொண்டு வரலாம் மேடம்” என்றார்.
தரங்கிணி அழுகையை
அடக்கிக்கொண்டு நடுங்கிய விரல்களோடு சித்தார்த்தின் முகத்தைத் தொட்டாள். சிகை மழித்த
தலையோடு கிடந்த மைந்தனை இந்தக் கோலத்தில் காணவா வந்தோமென மனதுக்குள் கதறினாள்.
ஐ.வி ஏறிக்கொண்டிருந்தது.
ஊசி குத்தினாலே என் பிள்ளை அழுவானே! மென்மையாக அவனது கையைப் பிடித்தவள்
“எனக்குனு இந்த உலகத்துல
இருக்குறவன் நீ மட்டும் தான் சித்து… அம்மாவ விட்டுப் போயிடாதடா… உனக்கு எதுவும் ஆக
நான் விடமாட்டேன்… எனக்காக சீக்கிரம் கண் முழிச்சிடு சித்து” என்று அழுகையை அடக்கிய
குரலில் மெதுவாகக் கூறினாள் அவள்.
அதற்கு மேல் தாக்கு
பிடிக்க முடியாமல் வெளியே ஓடி வந்துவிட்டாள்.
பின்னே வந்த செவிலி
அவள் முதுகில் தட்டிக்கொடுத்துவிட்டுச் சென்றார்.
கமலேஷ் இன்னும் அங்கேயே
நின்று கொண்டிருந்தான்.
“நீ எப்ப சிம்லாவுக்குக்
கிளம்புற தரங்கிணி?” என்று கேட்டான். இவனுக்கு இந்த விவரம் கூட தெரிந்திருக்கிறதே என்று
தன்னை மீறி வந்த வியப்போடு அவனிடம் வந்தாள் தரங்கிணி.
“என் பிள்ளை கண்
முழிக்கிற வரைக்கும் நான் எங்கயும் போறதா இல்ல”
கமலேஷின் முகத்தில்
ஈயாடவில்லை. அவள் கிளம்பிவிடுவாள் என்று அவனும் நினைக்கவில்லை. விவாகரத்து வழக்கின்
போது சித்தார்த்தின் கஷ்டடிக்காக எவ்வளவு போராடினாள் என்பது அவனுக்குத் தெரியும். அப்படிப்பட்டவள்
சுயநினைவற்ற நிலையில் அவனை விட்டுச் செல்லமாட்டாள்.
ஆனால் இவளை இங்கிருந்து
கிளப்பியாக வேண்டும். சித்தார்த் கண் விழித்ததும் அவனிடம் பக்குவமாகப் பேசி நடந்தது
விபத்தெனப் புரியவைத்துவிடவேண்டும். அதெல்லாம் தரங்கிணி இங்கே இருந்தால் நடக்காது.
அவள் நடக்க விடமாட்டாள்.
“நீ இங்க இருந்தாலும்
எதுவும் மாறப்போறதில்ல தரங்கிணி… கிளம்பு… இல்லனா அப்பா அவரோட பாணில உன்னை இங்க இருந்து
அனுப்பி வைப்பார்”
எச்சரிக்க வேண்டியது
என் கடமை, இதற்கு மேல் உன் விருப்பம் என்ற பாணியில் சொல்லிவிட்டு இடத்தைக் காலி செய்தான்
அவன்.
கமலேஷின் முதுகை
வெறித்த தரங்கிணிக்கு இம்முறை இவர்களிடம் என் மகனை இழக்கமாட்டேன் என்ற உறுதி பிறந்தது.
முதலில் சித்தார்த்துக்கு
என்ன நேர்ந்ததெனக் கண்டறிய வேண்டும். அதற்கு தமயந்தியிடம் பேசவேண்டும். பின்னர் சட்டரீதியாக
சித்தார்த்தைத் தன்னுடன் வைத்துக்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளிலும் இறங்க வேண்டும்.
இதற்கெல்லாம் முன்னர்
உனக்கு இங்கே தங்க இடம் வேண்டும் என்றது மனசாட்சி. தோழமைகள் அனைவரும் வெளிநாட்டில்
குடியேறியிருக்க பெற்றோரும் மறைந்துவிட்ட நிலையில் சென்னை மாநகரில் தரங்கிணி தங்குவதற்கு
இடமில்லை.
பெருமூச்சு விட்டவளுக்குத்
திடுமென அதிரதனின் நினைவு வந்தது. மறுயோசனையின்றி அவனது எண்ணை அழைத்தாள்.
எப்போதும் உடனடியாக
அழைப்பை ஏற்பவன் அன்று ஏனோ இரண்டு முறைகள் அழைப்பு தவறிய பிறகு ஏற்றான்.
“ஹலோ சீனியர்”
தரங்கிணி மடமடவெனத்
தனது நிலையை அவனுக்குச் சொல்லிவிட்டாள்.
“எனக்கு உன் உதவி
வேணும் அதி”
மறுமுனையில் அதிரதனின்
முகம் கனிந்தது. ‘
எப்போது நான் குழம்பினாலும்
எனக்குத் தெளிவு கொடுப்பவள் இவள். அந்த நன்றிக்கடனுக்காக நான் இவளுக்கு உதவியாக வேண்டும்’
“நீ கவலைப்படாத தரு…
சித்து இனிமே உன் கூட இருப்பான்… இன்னும் கொஞ்சநேரத்துல ஹாஸ்பிட்டலுக்குக் கார் வரும்…
நீ கெஸ்ட் ஹவுசுக்கு வந்துடு… மத்ததை அப்புறமா பேசிக்கலாம்”
சொன்னது போலவே அடுத்த
அரைமணி நேரத்தில் கார் வந்தது. அதிலேறி அமர்ந்தவள் அபிராமபுரத்தில் விருந்தினர் மாளிகை
வளாகத்துக்குள் நுழைந்த கார் தரிப்பிடத்தில் நிற்கவும் இறங்கினாள்.
மினி பங்களா தோற்றத்திலிருந்த
அந்த விருந்தினர் மாளிகைக்குள் நுழைந்தவளை லிவிங் அறை சோபாவில் சாய்ந்து அமர்ந்தபடி
வரவேற்றான் அதிரதன்.
அவளுக்குத் தண்ணீர்
கொண்டு வருமாறு பணியாட்களை ஏவியவன் உட்காரும்படி கூற தரங்கிணியும் அமர்ந்தாள். வாடி
வதங்கிய அவளது தோற்றம் அவள் எதிர்கொண்ட சம்பவங்களின் வீரியத்தை அவனுக்கு உணர்த்தியது.
தண்ணீர் வந்ததும்
அருந்தியவள் “தமயந்தி…” என்று ஆரம்பிக்கும்போதே
“விவேக் அவங்களை
அழைச்சிட்டு வா” என்று கட்டளையிட்டான் அதிரதன்.
சில நொடிகளில் விவேக்குடன்
வந்து நின்றார் சித்தார்த்தின் ‘கேர்டேக்கரான’ தமயந்தி. அவரது கண்கள் கலங்கியிருந்தது.
“மேடம்”
வாய்விட்டுச் சொன்னவர்
முடியாமல் அழுதுவிட்டார்.
தரங்கிணி ஓடோடிப்
போய் அவரை அழாதீர்கள் என்று சமாதானம் செய்தாள். கூடவே அதிரதனுக்குக் கண்களால் நன்றியும்
கூறினாள்.
தான் சொன்னதற்காக
தமயந்தியைச் சந்திக்க வைத்துவிட்டானே! நன்றியுணர்ச்சியில் அவள் கண்களும் கலங்கின.
ஆனால் அடுத்து தமயந்தி
சொன்ன செய்தியில் அவளது இதயம் நின்று போனது.
Comments
Post a Comment