அத்தியாயம் 9
- Get link
- X
- Other Apps
அதிரதன் சென்னைக்குச்
சென்று இரு வாரங்கள் தரங்கிணிக்கு ஒருவித அலைக்கழிப்புடன் கழிந்தது. அவளது அலைக்கழிப்புக்குக்
காரணம் அதிரதன் இல்லை.
சென்னைக்குச் சென்றால்
தன்னை மறந்து போவான் என்று எண்ணியிருந்தவளை தினமும் வாட்சப்பில் பேசி தொந்தரவு செய்பவனால்
அவளுக்கு என்ன அலைக்கழிப்பு வந்துவிடமுடியும்?
அவளது அமைதியின்மைக்குக்
காரணம் சித்தார்த். அவனது பிறந்தநாளுக்குப் பிறகு ஏனோ அவனிடமிருந்தோ கேர் டேக்கர் தமயந்தியிடமிருந்தோ
எந்தவித மொபைல் அழைப்புகளும் வரவில்லை.
அவர்கள் அழைக்காவிட்டால்
என்ன, நாம் அழைப்போமெனத் தரங்கிணி விடுத்த அழைப்புகளும் துண்டிக்கப்பட்ட அழைப்புகளாவேப்
போய்விட அவளுக்குள் கலக்கம் மையம் கொண்டது.
வாரயிறுதியில் அழைப்பதாகச்
சொன்ன தமயந்திக்கு என்னவானது என்று விசாரித்துச் சொல்லக் கூட யாருமில்லையே என்ற கழிவிரக்கத்தில்
நாட்களைக் கழித்தவளுக்கு முதல் மாதச் சம்பளம் எப்போது வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுமென்ற
அவசரம்!
அதிரதனிடம் விசாரிக்கச்
சொல்வோமா என்ற எண்ணமும் அவளுக்கு வந்தது. ஆனால் அவனுக்கு இருக்கும் பரபரப்பான வாழ்க்கையில்
தன்னுடைய கவலையை அவன்மீது திணிக்கத் தோன்றவில்லை தரங்கிணிக்கு.
தினமும் வாட்சப்பில்
குறைந்தது அரைமணி நேரம் அவளிடம் மொக்கை போடுபவனுக்கு அவளது சுருக்கமான பேச்சில் மெல்லிய
சந்தேகம் முகிழ்த்தது.
எதுவும் பிரச்சனையா
என விசாரித்தான். பிரச்சனை எதுவுமில்லை என்று சொன்ன பிறகே ஒரு வணிக ஒப்பந்தம் தொடர்பாக
அமெரிக்கப் பயணத்துக்கு அவன் ஆயத்தமானான்.
அவன் வீட்டிலும்
தினசரி குருஷேத்திரம்தான் என்கையில், தன் துன்பத்தை வேறு சொல்லி அவன் மனதில் எதிர்மறை
உணர்ச்சிகளை விதைக்க வேண்டுமா என்று தரங்கிணி எண்ணினாள்.
இதோ இன்னும் நான்கு
நாட்களில் சம்பளம் வந்துவிடும். கையிலிருந்த பணத்தை வைத்து வாரயிறுதியில் சென்னைக்கு
விமான பயணச்சீட்டைப் புக் செய்திருந்தாள் தரங்கிணி.
சென்னைக்குச் சென்று
சித்தார்த்தைச் சந்தித்து அவனோடு சில மணி நேரங்கள் செலவளித்துவிட்டால் இந்த அலைக்கழிப்பு
அடங்கிவிடுமென்று தோன்றியது.
அதுவரை தாக்குப்பிடிக்க
வேண்டுமே! வேலையையும் உடற்பயிற்சியையும் சிக்கென்று பற்றிக்கொண்டாள் தரங்கிணி. அவளுக்கு
இப்போது இருக்கும் மன உளைச்சலை அவை இரண்டும் மடைமாற்றி கொஞ்சம் நிம்மதியாக உணரவைக்கின்றன.
“ஏதோ யோசனைலயே இருக்கிங்க
தாரா தி… எதுவும் பிரச்சனையா?”
ஆதுரமாக விசாரித்த
அனுபமாவிடம் தனது மனதிலுள்ள கலக்கத்தைப் பகிர்ந்துகொண்டாள்.
“இது பசங்களுக்கு
டேர்ம் எக்சாமுக்கான காலம்… அதனால கூட சித்தார்த் உங்க கிட்ட பேசாம இருக்கலாம்… நீங்க
வீக்கெண்ட் சென்னைக்குப் போய் அவனை மீட் பண்ணுங்க… நான் அவனுக்காக லக்கர் பஜார்ல ஒரு
கிப்ட் வாங்குனேன்… அதையும் மறக்காம எடுத்துட்டுப் போங்க” என்று சொல்லி தரங்கிணியை
இயல்பாக்க முயன்றாள் அனுபமா.
அவள் சொல்வது போல
இருந்தால் தரங்கிணிக்கும் நிம்மதியே!
தரங்கிணியின் மனம்
சித்தார்த்தை எண்ணி உழன்று கொண்டிருக்க, சென்னையில் அதிரதனின் நிலையோ மதில் மேல் பூனை
நிலை.
மனோரதி அவனது மனதை
மாற்ற என்னென்னவோ செய்தார். கண்ணீர் விட்டார். கெஞ்சினார். கோபத்தில் மிரட்டியும் பார்த்தார்.
அவரது மகனோ “ஸ்வராஸ்
நேம் இஸ் நாட் ரிட்டன் இன் மை டெஸ்டினி மாம்… டோண்ட் வொர்ரி… கூடிய சீக்கிரமே இன்னொரு
பொண்ணை டேட் பண்ணி மேரேஜ் பண்ணிடுறேன்… சொசைட்டில உங்க மரியாதைக்குக் குந்தகம் வர்ற
மாதிரி இனிமே எந்தச் சம்பவமும் நடக்காது… ஐ ஸ்வர்” என்று அமர்த்தலாகச் சொல்லிவிட்டு
அமெரிக்காவுக்கு விமானம் ஏறிவிட்டான்.
விமானம் ஏறுவதற்கு
ஒரு மணி நேரம் முன்னர் கூட மனோரதி அவரது அறைக்குள் எதையோ இழந்தவரைப் போல அமர்ந்திருப்பதைப்
பார்த்தவனுக்கு, அன்னைக்காக ஸ்வராவை ஏற்றுக்கொள்ளலாமா என்ற எண்ணம் தோன்றியது.
“உனக்குப் பிடிக்காத
விசயத்தை ‘பிடிக்கல’னு சொல்லிப் பழகு அதி”
மனக்கண்ணில் கண்டிப்பும்
கறாருமாக வந்து போனாள் தரங்கிணி.
“யெஸ்! எனக்குப்
பிடிக்காததை நான் பிடிக்காதுனு சொல்ல பழகிக்கணும்… கம் ஆன் அதி… யூ ஆர் பார்ன் டூ ரூல்
த வேர்ல்ட்… இப்பிடி குழம்பி அங்கயா இங்கயானு முழிக்குறது உன் கேரக்டரே இல்ல”
தன்னைத் தானே உற்சாகப்படுத்திக்கொண்டு
அமெரிக்காவுக்குக் கிளம்பியவன் முதல் இரண்டு நாட்கள் வணிக ஒப்பந்தம் தொடர்பான வேலைகளில்
பிசியோ பிசி.
மூன்றாவது நாள் அவனுக்குச்
சோதனையாக விடிந்தது. எதேச்சையாக ஸ்வராவின் இன்ஸ்டாக்ராம் பக்கத்தைத் திறந்து பார்த்தவன்
அவளும் அஜய் ஓபராயும் மாலத்தீவில் நீச்சல் குளத்தில் கண்ணாடி கோப்பைகளை முட்டிய வண்ணம்
நிற்கும் புகைப்படத்தைக் கண்டதும் புகைய ஆரம்பித்தான்.
அது ஆணுக்கே உரித்தான
புகைச்சல்! என்னை விட்டு விலகிவிடு என்று ஒரு பெண்ணிடம் சொன்ன பிறகு அவள் உடனடியாக
வேறொரு உறவில் நுழைந்துவிட்டால் அவளது முன்னாள் காதலன் ஒருவித பாதுகாப்பின்மையை உணர்வான்.
எவ்வளவு எளிதில்
உல்லாசப்பயணம் போய்விட்டாள் இவள்! மனம் குமுறியது! அவள்மீது காதலா என்று கேட்டால் இல்லவே
இல்லை என்பான் அதிரதன்.
காதல் பொய்த்துப்
போனதில் நான் அனுபவித்த வேதனையில் ஒரு சதவிகிதம் கூட இவளுக்கு இல்லையே என்ற முன்னாள்
காதலனின் முதிர்ச்சியற்ற கோபத்தின் வெளிப்பாடே இந்தப் புகைச்சல்!
இம்மனநிலை அவனைச்
சமன் செய்ய ஏதோ ஒரு இளைப்பாறுதல் தேவைப்பட்டது அதிரதனுக்கு.
மதுவில் கிடைக்காத
அந்த இளைப்பாறுதலை ஒரு இந்திய வம்சாவளி பெண்ணின் அணைப்பில் கண்டுகொண்டான்.
அவளின் ஆலிவ் வண்ண
தேகத்தின் மென்மையில் மயங்கிய தருணத்தில் ஸ்வராவை வென்றுவிட்ட மமதை அவனுக்குள்.
ஓரிரவு மட்டுமே நிலைக்கப்
போகிற இந்த இளைப்பாறுதல் உடலுக்குத் தானே தவிர அலை பாய்ந்து கொண்டிருந்த மனதிற்கில்லை
என்பதை காலையில் அந்த இந்திய வம்சாவளி பெண் “லாஸ்ட் நைட் வாஸ் ஃபேபுலஸ் ட்யூட்… அதிர்ஷ்டம்
இருந்தா மறுபடி மீட் பண்ணுவோம்” என்று சொல்லி விடைபெறுகையில் புரிந்துகொண்டான் அதிரதன்.
சட்டை அணியாத உருவத்தைக்
கண்ணாடியில் பார்த்துவிட்டு “ஊப்ஸ்! போச்சேடா உன் வெர்ஜினிட்டி” என்று சொல்லி பின்னந்தலையில்
அடித்துக்கொண்டான் அவன்.
ஏனோ பெரிதாகத் தவறு
செய்துவிட்டோம் என்ற குற்றவுணர்வு எழவில்லை. ஸ்வரா செய்த துரோகத்தின் தாக்கம் என்று
சொல்லி தப்பித்துக்கொள்ளவும் தோன்றவில்லை.
“பசி, தூக்கம் போல
இதுவும் ஒரு பிசிக்கல் நீட்… இத்தனை நாள் மைண்ட் என் கண்ட்ரோல்ல இருந்ததால இந்தப் பசி
தெரியல போல… அதி! யூ ஷூட் ஹேவ் டூ கண்ட்ரோல் யுவர் மைண்ட்… இல்லனா ‘கேசனோவா’ ஆகிடுவ
தம்பி”
கண்ணாடியைப் பார்த்து
அறிவுரை சொல்லிக்கொண்டான் அவன்.
அதன் பின்னர் அவனது
கவனத்தைக் களவாட ஆயிரம் விசயங்கள் வந்துவிட இரவை மறந்து வேலையில் கண்ணானான் அதிரதன்.
காதல், திருமணம்,
கணவன் மனைவி உறவின் பிரகாசம் மங்கிப் போனதாகத் தோன்றியது அவனுக்கு.
மகத்துவமானது என்று
எண்ணி கனவுக்கோட்டை கட்டி, அந்தக் கோட்டை இடிந்து விழுந்துவிட்டதால் உண்டான ஏமாற்றம்
எப்போது குறையுமோ அப்போது அவனுக்கு மீண்டும் காதல், கல்யாணம், குடும்பத்தின் மீது மதிப்பு
வரும்.
ஆனால் ஒன்று, அன்றைய
தினத்திலிருந்து அதிரதன் தரங்கிணியிடம் வாட்சப்பில் மொக்கை போடுவதை நிறுத்திவிட்டான்.
அவளிடம் தான் செய்ததைச் சொல்லிவிட மனம் குறுகுறுத்தது.
சொல்லாமல் பேசினாலோ
அவள் இன்னும் தன்னை பதினேழு வயது அதிரதனாகவே எண்ணி சொல்லும் அறிவுரைகளை முழுமனதோடு
அவனால் ஏற்க முடியாது. எனவே அவளிடம் பேசுவதைத் தவிர்த்தான்.
தனக்கு இருந்த மனப்போராட்டத்தின்
நடுவே தரங்கிணியும் அதிரதனின் திடீர் அமைதியைக் கண்டுகொள்ளாமல் விட அந்த அமைதியும்
விலகலும் தரங்கிணி சித்தார்த்தைப் பார்க்க சென்னைக்குக் கிளம்பும் வரை தொடர்ந்தது.
சென்னை மண்ணை மிதித்தவளுக்கு
மனம் ஒரு நிலையில் இல்லை. யாருக்கோ துன்பம் நேர்ந்தது போல துடித்தது. பெண்களின் உள்ளுணர்வு
அப்படிப்பட்டது.
அந்த துடிப்புடன்
போயஸ் தோட்டத்திலிருக்கும் கமலேஷின் பங்களாவின் முன்னே ஆட்டோவில் வந்து இறங்கியவளைக்
கண்டதும் வாயில் பாதுகாவலர் ஒருவித தயக்கத்தோடு கதவைத் திறந்துவிட்டார்.
“எப்பிடி இருக்கிங்க?”
நலம் விசாரித்தவளுக்குப்
பதிலும் தயக்கத்தோடு வந்தது.
என்னவாயிற்று இவருக்கு
என்று யோசித்தபடியே பிரதான வாயிலை அடைந்தவள் அங்கே எதிர்பட்ட பணியாளரிடம் சித்தார்த்
எங்கே என வினவ அவரும் தயங்கினார்.
வீட்டுக்குள் நுழைந்ததும்
அவளைக் கண்ட பணியாளர்கள் ஒளிவதிலே குறியாக இருந்தார்களே தவிர யாரும் அவளிடம் பேச முற்படவில்லை.
ஏதோ தவறாக இருக்கிறதே
என்று எண்ணியவளின் கண்கள் சித்தார்த்தைத் தேடின. இனியும் பொறுத்திருக்க முடியாமல்
“சித்து எங்கடா இருக்க?” என்று மகனைத் தேடிக் குரல் கொடுத்தாள்.
பதில் வரவில்லை.
அதற்கு பதிலாக மேல்தளத்திலிருந்து யாரோ வந்தார்கள். வந்த நபர் தரங்கிணிக்கு அறிமுகமான
ஒருவர்தான்.
எப்போதும் அவளை அலட்சியத்துடன்
நோக்கும் ஒரு ஜோடி விழிகளில் இந்த அலட்சியம் இல்லை. என்னவோ நடந்திருக்கிறது என்று தரங்கிணி
சந்தேகிக்கும்போதே குரல் உடைய அந்நபர் அவளிடம் பேசலானார்.
“த… தரங்கிணி… ஐ
அம் ரியலி சாரி”
ஏன் இவன் என்னிடம்
மன்னிப்பு வேண்டுகிறான்? தடதடக்க ஆரம்பித்தது தரங்கிணியின் இதயம்.
“என்னாச்சு கமல்?
எதுக்கு சாரி சொல்லுற?”
பரபரப்புடன் கேட்டாள்
அவள்.
அவள் கேள்வி கேட்டது
அவளது முன்னாள் கணவன் கமலேஷிடம். இருவரும் கணவன் மனைவியாக அறியப்பட்டப்போது இந்த பவ்வியம்
அவனிடம் இருந்ததில்லை. அவனது இந்தத் திடீர் குரலிறக்கம் தான் தரங்கிணியைப் பயமுறுத்தியது.
“சொல்லு கமல்” பயத்தை
வெளிக்காட்டாமல் கேட்டாள் தரங்கிணி.
கமலேஷ் திணறினான்.
அவனது விழிகளில் கண்ணீர் முட்டியது. தொண்டையிலிருந்து குரல் வரவில்லை.
“தரங்கிணி…” என்று
நெருங்க வந்தவனை “தூரமா நின்னு பேசு கமல்… உங்கம்மா பாத்துட்டா தப்பாயிடும்” என்று
எச்சரித்தாள்.
அவனது அன்னையான சாரதா
அம்மையாருக்குத் தரங்கிணி என்றால் ஆலகால விஷம். மைந்தன் அவளிடம் இவ்வளவு பம்மினான்
என்று தெரிந்தால் அவருக்கு இதயத்துடிப்பே நின்று போகும்.
கமலேஷோ தரங்கிணியின்
எச்சரிக்கையைச் செவிமடுக்காமல் நெருங்கினான். அவள் கோபம் கொள்ளும் முன்னர் நெடுஞ்சாண்கிடையாக
அவள் காலில் விழுந்தான்.
“கமல்”
கோபமாக உயர்ந்த குரலைக்
கட்டுப்படுத்த முயன்று தோற்றவள் “என் புள்ளைய என்னடா பண்ணுனிங்க?” என்று நடுங்கிய குரலில்
கேட்க கமலேஷின் கண்ணீர் தரங்கிணியின் காலை நனைத்தது.
“என் லைஃப் உன் கையில
தான் இருக்கு தரங்கிணி… என் வாழ்க்கைய கெடுத்துடாத… ப்ளீஸ் தரங்கிணி”
அவன் பேச பேச தரங்கிணியின்
பயம் இன்னும் அதிகரித்தது. அந்நேரத்தில் “கமல் என்ன காரியம்டா பண்ணுற?” என்று அதிகாரத்துடன்
ஒரு குரல் ஒலித்தது அந்த பங்களாவுக்குள்.
அக்குரல் ஒலித்ததும்
தரங்கிணியின் உடலில் அருவருப்பும் கோபமும் ஒருங்கே ஊறியது.
திரும்பிப் பார்க்க
விருப்பமின்றி நின்றவள் “உங்க மகன் கிட்ட என் காலை விடச் சொல்லுங்க… என் பிள்ளை எங்க?
எல்லாருமா சேர்ந்து என் சித்துவ என்ன செஞ்சிங்க?” என்று கோபத்தோடு கேட்டதும் அவளை யாரோ
விருட்டெனத் திருப்பினார்கள்.
தரங்கிணியின் கண்களில்
கோபம் மூள தனது புஜத்தைப் பிடித்த கரத்தைத் தட்டிவிட்டாள்.
“என் பையன் எங்க?”
அவளிடம் பதில் சொல்லாமல்
கமலேஷுக்குக் கட்டளையிட்ட அந்நபர் சாரதா. கமலேஷின் அன்னை. அவர்களது தொழில் கூட்டமைப்பில்
முக்கியமான இயக்குனர்.
“எழுந்திரு கமல்”
கமலேஷ் எழுந்தான்.
அவனது உடலில் இன்னும் நடுக்கம் நிற்கவில்லை.
அவனது தோளைப் பற்றித்
தன்னருகே இழுத்துக்கொண்டார் தரங்கிணியின் முன்னாள் மாமியார்.
அவளை அதிகாரத்துடன்
பார்க்க முயன்றன அவரது விழிகள். ஆனாலும் அவற்றில் கலக்கமும் பயமும் தெரிந்தது.
கமலேஷின் கரத்தைப்
பற்றியபடியே “சித்து… சித்து ஹாஸ்பிட்டல்ல இருக்கான்” என்றார் அதிகாரமாகத்தைக் காட்ட
முயன்றவராக. அதில் அவர் வெற்றி பெறவில்லை. குரலில் கலக்கம் வெளிப்பட்டுவிட்டது.
அடுத்த நொடி தரங்கிணியின்
உலகத்தை யாரோ சுக்குநூறாக உடைத்துப் போட்டார்கள். வாழ்க்கையில் மின்மினியாய் ஒளிர்ந்த
ஒரே ஒரு உறவுக்கு என்னவானதோ என்ற பயத்தில் மூர்ச்சையுற்றாள் அவள்.
- Get link
- X
- Other Apps
Comments
😱
ReplyDeleteவெண்பனியாய் சில நினைவுகள்..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 9)
அடப்பாவி..! அவ தான் அப்படின்னா, இவனும் தடம் மாறிட்டானே. இதுல இனி ஸ்வராவை க்ரிட்டிசைஸ் பண்ண என்ன இருக்கு...? அவளை மாதிரியே இவனும் தன்னை இழந்துட்டான்.
அது சரி,சித்துவுக்க என்னாச்சு ?
ஒருவேளை, சின்ன பையன் அம்மாவை ரொம்ப கேட்டான்னு ஏடாகூடமா அடிச்சு கிடிச்சு வைச்சிட்டாங்களா..? இல்ல குழந்தையை சரிவர கவனிக்காம ஹாஸ்பிட்டலைஸ் பண்ற அளவுக்கு போயிட்டானா ? தரங்கிணியோட நிலைமை ரொம்பவே பாவம். இருந்த ஒரேயொரு நம்பிக்கையிலயும்
இப்படி இடி விழுந்திருக்க தேவையில்லை.
😯😯😯
CRVS (or) CRVS 2797
Sidharth ku enna achi nu theriya la yae gowram nu solli andha kuzhandhai oda custody ah vangi avan ah enna panni tholachaga nu theriya la yae hospital pora alavukku .
ReplyDeleteAthi swara venam nu decide panna appuram yen indha thadumatram
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ReplyDelete