அத்தியாயம் 2
- Get link
- X
- Other Apps
அத்தியாயம் 2
‘சன் டியூ ஹோட்டல்’….
ஆடம்பரமான லாபியில் ஹோட்டலின் ஊழியர்கள் ‘பளிச்’சென்ற சீருடையில் அழகாக நடை பயின்று ஒவ்வொரு வாடிக்கையாளரின் தேவை என்னவென விசாரித்து அவர்களின் முகங்கோணாமல் நிறைவேற்றிக்கொண்டிருந்தார்கள்.
ஹோட்டலின் வரவேற்பு வழக்கம் போல பிசியாக இருந்தது. லாபியிலிருந்து உள்ளே தள்ளி வந்து நின்றால் நாற்புறங்களிலும் தங்க கூண்டுகளைப் போல மின்தூக்கிகள் ஏறியிறங்கிய வண்ணம் இருந்தன.
சிம்லாவைச் சுற்றிப் பார்க்க வந்தவர்கள் ‘காம்ப்ளிமெண்டரியாகக்’ கொடுக்கப்படும் காலையுணவைக் குடும்பத்தோடு முடித்துக்கொண்டு சுற்றுலாவைச் சிறப்பிக்க வெளியேறிக்கொண்டிருந்தார்கள்.
இன்னொரு பக்கமோ புதிதாக ‘செக்-இன்’ செய்யப்பட்டு வாடிக்கையாளர்கள் வந்து கொண்டிருந்தார்கள்.
மேலாண்மை இயக்குனரைக் காணவேண்டுமென மனிதவளத்துறை மேலாளர் கொடுத்த செய்தியைக் கேட்ட பிறகு தனக்கான சீருடையைக் கச்சிதமாக அணிந்து ஹோட்டலின் அலுவல கட்டிடத்துக்குச் செல்லும்போது இதையெல்லாம் தரங்கிணி காண நேர்ந்தது.
சில மனிதர்களின் ஓய்வும் இளைப்பாறுதலும் ‘ஹாஸ்பிட்டாலிட்டி’ துறையை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது! ஒருவரின் ஓய்வு இன்னொருவருக்குத் தொழில்! எத்துணை வினோதம்!
இன்முகத்தோடு அங்கிருந்து வெளியேறி அலுவலக கட்டிடத்தை நோக்கி விரைந்தாள் தரங்கிணி.
ஹோட்டலில் இருந்து அலுவல கட்டிடம் அமைந்துள்ள இடம் வரை போடப்பட்டிருந்த டைல்ஸ்களின் நடுவே பெருக்கல் வடிவத்தில் புற்கள் வளர்ந்திருந்த அழகையும், இரு புறமும் கற்களால் இடுப்பளவு உயரத்துக்குக் கட்டப்பட்டிருந்த சுவர்களையும், அவற்றிற்கிடையே கம்பீரமாக நின்ற ‘விண்டேஜ்’ பாணி விளக்குக் கம்பங்களையும் காண காண தெவிட்டவில்லை அவளுக்கு.
ரசிப்பில் இறங்கிவிட்டால் சுற்றுபுறம் மறந்துவிடும் ஆள் இல்லை தரங்கிணி. எனவே தாமதம் செய்யாமல் அலுவலக கட்டிடத்திற்குள் வந்தவள் தரைத்தளத்திலிருக்கும் வரவேற்பு பகுதியில் தன்னை நோக்கி புன்னகைத்த ரிசப்சனிஷ்டிடம் மேலாண்மை இயக்குனரைப் பார்க்க வேண்டுமென்ற விவரத்தைக் கூறினாள்.
அவளும் யாரையோ தொடர்பு கொண்டு பேசிவிட்டுத் தரங்கிணிக்கு மூன்றாம் தளத்திலிருக்கும் மேலாண்மை இயக்குனரின் அலுவலக அறைக்கு வழி சொல்லி அனுப்பிவைத்தாள்.
“வெல்கம் டூ சன் டியூ”
கண்களும் உதடுகளும் சிரிக்கும் ரெடிமேட் சிரிப்பு ‘ஹாஸ்பிட்டாலிட்டி’ துறையில் பணியாற்றும் ஊழியர்களின் முதல் தகுதி. அது ரிசப்சனிஷ்டுக்கு இருக்கிறதெனச் சிலாகித்தபடி மின்தூக்கிக்குள் நுழைந்துகொண்டாள் தரங்கிணி.
மூன்றாம் தளம் வந்ததும் ரிசப்சனிஷ்ட் சொன்னபடி மேலாண்மை இயக்குனரின் அலுவலக அறையைக் கண்டுகொண்டு பதவிசாகக் கதவைத் தட்டினாள்.
கதவு திறந்ததும் ஒரு வாலிபனின் முகம் தெரிந்தது.
“நீங்க தான் ‘பெல்லா இட்டாலியா’ல ஜாயின் பண்ணிருக்குற சீஃப் செஃபா?”
“யெஸ்”
“ப்ளீஸ் கம் இன்”
வழிவிட்டு நின்றான் அவன். தரங்கிணி அறைக்குள் நுழைந்தவள் மேலாண்மை இயக்குனரின் இருக்கையில் அமர்ந்திருந்த அதிரதனைக் கண்டதும் மெல்லிய அதிர்ச்சியைக் கண்களில் காட்டினாள்.
அதை அதிரதனும் கவனிக்கத் தவறவில்லை.
அவளது விவரக்குறிப்புகள் அடங்கிய கோப்பினை வாசித்துக்கொண்டிருந்தவன் அப்போதுதான் தலையுயர்த்தினான் போல.
ஆனால் அவன் கண்களில் வியப்பு எதுவுமில்லை. தனது ஊழியையிடம் பேசப்போகிற முதலாளியின் பாவனையே அங்கிருந்தது.
“மிஸ் தரங்கிணி ரவிசந்திரன்” என்றவன் புருவம் சுருக்கி “மிஸ் தானே?” என்று சந்தேகமாக வினவ தரங்கிணியின் முகம் மாறியது.
வரவழைத்துக்கொண்ட பணிவோடு “மிஸ் தான்” என்றாள் அமைதியாகக் காட்டிக்கொண்டவளாக.
“குட்”
“மே ஐ கோ நவ்?”
ஏன் இத்துணை அவசரம் இவளுக்கு என்று எண்ணினான் அதிரதன். அவள் வந்ததிலிருந்து தன்னை அடையாளம் கண்டுகொள்ளாதது வேறு அவனுக்குப் பெரிய குறையாகத் தெரிந்தது. எப்படி இவள் என்னை மறக்கலாமென சிறுகுழந்தையாய்க் கோபம் கொண்டு முறைத்து நின்றால் எப்படி இருக்குமென ஒரு கணம் யோசித்தான்.
வேண்டாம்! இவளே தன்னை அடையாளம் கண்டுகொள்ள ஒரு வழி இருக்கிறதே, அதை கடைபிடிப்போம் என்று எண்ணியவனாக
“உங்களோட அகாடெமிக் ஸ்கோர்ஸ் நல்லா இருக்கு… தமிழ்நாட்டுல ஃபேமஸான ஹோட்டல் செயின்ல இண்டர்ன்ஷிப் பண்ணி அங்கயே செஃபா ஒர்க் பண்ணவும் செஞ்சிருக்கிங்க… பட் உங்களோட கரியர் ஹிஸ்டரில ஃபைவ் இயர்ஸ் கேப் இருக்கு… அதுக்கான காரணம் என்னனு தெரிஞ்சிக்கலாமா?” என்று கேட்டான்.
“மேரேஜ், குழந்தைக்காக கரியரை விட்டு விலகியிருந்தேன் சார்”
அமைதியாகக் கூறினாள் தரங்கிணி.
அதிரதனின் முகம் சுருங்கிப்போனது. அவன் மனசாட்சியோ அவனையே திட்டியது.
“ஏன்டா ஒரு காலத்துல உனக்கு க்ரஷ்சா இருந்ததுக்காக காலம் முழுக்க அவ கல்யாணம் பண்ணாம இருந்திருக்கணுமா? சின்னப்பிள்ளைத்தனமா யோசிக்காம ஸ்மார்ட்டா மூவ் பண்ணு”
மனசாட்சியின் அறிவுரையைக் கேட்டுக்கொண்டான் அவன். மணமானவள்! ஆனால் தந்தையின் பெயரைத் தன் பெயரின் பின்னே போட்டிருக்கிறாள்! அப்படி என்றால் தரங்கிணியுடைய கணவன் அவளோடு இல்லையா? குழந்தை?
எண்ணற்ற கேள்விகள் அவனது மூளையைக் குழப்பின. அந்தக் குழப்பத்தை முகத்தில் காட்டாமல் திறமையாகச் சமாளித்தான்.
“சோ மறுபடி உங்க கரியரை பில்ட் பண்ணுறதுக்கு எங்க ஹோட்டலை யூஸ் பண்ணிக்கலாம்னு நினைக்குறிங்க?”
தரங்கிணி பெருமூச்சோடு தலைகுனிந்தாள். கண்களை இறுக மூடிக்கொண்டாள்.
வேலையில் ஐந்தாண்டுகள் இடைவெளி விட்டது குறித்து நிர்வாகத்தினர் கேட்கக் கூடாதென அவள் எதிர்பார்க்க முடியாது. இதோ கடந்த மூன்றாண்டுகளாக அவள் செய்த வேலையில் சிறுகுறை கூட கண்டுபிடிக்க முடியாதுதான். ஆனால் நிர்வாகத்தினர் எப்போதும் ‘மைனஸ்’ எதுவோ அதைத்தான் கண்கொத்தி பாம்பாக விசாரிப்பார்கள்.
அவள் இங்கே உண்மையச் சொல்லவேண்டியது அவசியம்.
திடமாக நிமிர்ந்தவள் “இனிமே என் லைஃபை அர்த்தமுள்ளதா வாழ இந்தக் கரியர் முக்கியம்… அதுக்காக இங்க ஜாயின் பண்ணிருக்கேன்” என்றாள்.
மீண்டும் அதிரதனுக்குக் குழப்பம். மணமாகி கணவனைப் பிரிந்திருப்பாளோ?
மனசாட்சி ‘மடேர்’ என மானசீகமாக அவனை அடித்தது. பொறுமையாக இரு மகனே என்று இலவச அறிவுரை வேறு!
“வெல்! இப்ப இங்க ஜாயின் பண்ணிட்டு மறுபடியும் ஃபேமிலி, குழந்தைய பாத்துக்க நீங்க கரியர்ல ப்ரேக் எடுக்க வேண்டிய சிச்சுவேசன் வருதுனு ரெசிக்னேசன் லெட்டரை நீட்ட மாட்டிங்கனு என்ன கேரண்டி?”
உள்ளே டீனேஜ் பையனாக ஆயிரம் குழப்பங்கள், ஆர்வக்கோளாறில் எழுந்த கேள்விகள் இருந்தன. ஆனால் வெளிப்பார்வைக்கு அவன் முப்பது வயது அறிவு முதிர்ச்சி கொண்ட ஆண்மகன், அதிலும் பிசினஸ்மேன் ஆயிற்றே!
தரங்கிணி புன்னகைத்தாள்.
“என் குழந்தைய நான் கவனிக்கணும்னா கூட எனக்குனு ஒரு கரியர் வேணும் சார்… சோ இனி நான் கரியர்ல ப்ரெக் எடுத்துக்கமாட்டேன்”
இவ்வளவு நேர குழப்பமான மனநிலைக்கு இந்தப் பதில் தற்காலிகமான அமைதியைக் கொடுத்தது. இருப்பினும் குழந்தையைப் பற்றிய தகவல் \தான் அவனுக்குள் முரண்டியது.
அதை விட அதிகம் அவனை வெறுப்பேற்றியது தரங்கிணிக்கு இன்னும் கூட தன்னை தெரியவில்லை என்ற ஏமாற்றம்! எப்படியாவது இவளுக்கு என்னைப் பற்றிய தருணங்களை நினைவுறுத்துவேன் என்று சங்கல்பம் எடுத்தவன் அப்போதே அதை நிறைவேற்ற துணிந்தான்.
“வெல்கம் டூ சன் டியூ மிஸ் தரங்கிணி ரவிசந்திரன்… உங்க வேலையோட முதல் நாள்ல சின்னதா ஒரு ப்ராக்டிக்கல் டெஸ்ட்”
தரங்கிணிக்குச் சவால் என்றால் மிகவும் பிடிக்கும். எனவே நிமிர்வாக “சொல்லுங்க சார்” என்றாள்.
“ப்ரிப்பேர் சால்மன் என்-பாப்பிலோட் வித் சோயா… நான் அதை டேஸ்ட் பண்ணிட்டு உங்களோட கரியர் ப்ரேக் உங்க டேலண்டை குறைச்சிருக்கா இல்லையானு உறுதிபடுத்திக்குறேன்”
சொன்னவன் அங்கே நின்ற இளைஞனிடம் “இவங்க டிஷ் செய்யுறதுக்கு கிச்சனைக் காட்டு சஞ்சய்” என்றான்.
தரங்கிணி அவனோடு செல்லவும் வெற்றி புன்னகையோடு தனது இருக்கையில் நிமிர்வாக அமர்ந்து கொண்டான்.
கண்களை மூடியவனுக்கு “பார்ஸ்மெண்ட் பேப்பரை ஹார்ட்டின் ஷேப்ல வெட்டுனா ஃபிஷ் என்பாப்பிலோட் சரியா வெந்துடும்னு உனக்கு யாராச்சும் சொன்னாங்களா? இந்த ஃபிஷ் ஓவர் குக் ஆகிருக்கு… ஆனா நீ வச்ச எலுமிச்சை துண்டோட புளிப்பு சுத்தமா இதுல இல்ல… ஹெர்ப்ஸ் எல்லாம் டேஸ்ட் மாறி போயிருக்கு” என்று பதிமூன்று வருடங்களுக்கு முன்னர் அவனது தயாரிப்பான ‘மீன் என்பாப்பிலோட்’டிலுள்ள குறைகளை வரிசைபடுத்திய தரங்கிணி மனக்கண்ணில் வந்து போனாள்.
இப்போதிருக்கும் பூசிய உடல்வாகில்லை! சற்றே ஒல்லி மேனி, தூக்கி கொண்டையிட்ட கருஞ்சிகையை செஃப் கேப் எப்போதும் மூடியிருக்கும். இதழ்களில் புன்னகைக்கும் கண்களில் கனிவுக்கும் குறைவே இருக்காது.
இப்போதும் புன்னகைக்கிறாள்தான். ஆனால் அதில் என்னவோ குறைகிறது!
தன்னைப் பற்றி ஒருவன் அலசலில் ஈடுபட்டதை அறியாதவளாக அலுவலக ஊழியர்களுக்கான சமையலையில் இருக்கும் சகல உபகரணங்களையும் கண்ணுற்றபடியே சால்மன் மீனை துண்டுகளாக்கிக் கொண்டிருந்தாள் தரங்கிணி.
பெரிய மீன் துண்டு ஒன்றை எடுத்து பார்ஸ்மெண்ட் பேப்பரின் நடுவில் வைத்து அதன் மீது உப்பு தூவினாள்.
மீனின் ஆரஞ்சு வண்ண சதைப்பற்றான பகுதியின் குறுக்கே கத்தியால் கோடுகளிட்டவள் சிறிய சைனா குடுவையிலிருந்த ‘ஹெர்ப்சை’ மீன் துண்டத்தின் மீது தூவினாள்.
பின்னர் மெல்லிய எலுமிச்சை துண்டுகளை மீனின் மீது அடுக்கியவள் சுற்றிலும் தோல் நீக்கிய பூண்டு, பேபி கார்ன் துண்டுகளையும், சிவப்பு மற்றும் மஞ்சள் வண்ண பெல் பெப்பர் துண்டுகளையும் பரப்பினாள். இறுதியாகச் சில சோயா பீன்ஸ் விதைகளை தூவி பார்ஸ்மெண்ட் பேப்பரின் வெளிப்புற பகுதிகளை ஒன்றிணைத்து பார்சல் போல செய்து, அந்த பார்சலை பேக்கிங் ட்ரேயில் வைத்து பெரிய ஓவனுக்குள் வைத்துவிட்டு ‘சால்மன் என்பாப்பிலோட்’ தயாராவதற்காக காத்திருக்க ஆரம்பித்தாள்.
இது ஒரு பிரெஞ்சு நாட்டு உணவு. பாப்பிலோட் என்றால் பேப்பர் என்று பிரெஞ்சில் அர்த்தம் வருமாம். வெளிநாட்டு உணவு வகைகளை ஆர்.எம்.எஸ்சில் கற்ற போதே இந்த ‘என் பாப்பிலோட்’ வகையறா உணவு வகை செய்வதில் அவள் கை தேர்ந்திருந்தாள்.
அதனாலேயே சில நேரங்களில் ஜூனியர்களுக்கு இந்த உணவு வகை செய்வதிலுள்ள சந்தேகங்களை நிவர்த்தி செய்த அனுபவமும் அவளுக்கு உண்டு.
யோசனையோடு ஓவனைப் பார்த்தவளிடம் “இன்னும் டைம் ஆகுமா மேடம்?” என்று கேட்டு வைத்தான் சஞ்சய்.
தரங்கிணி ஆச்சரியம் ததும்பிய விழிகளால் அவனை ஏறிட்டவள் “இப்ப தானே ஓவனுக்குள்ள வச்சிருக்கேன்… அப்ரகடப்ரானு மந்திரம் போட்டுட்டா உடனே தயாராகிடும்” என்றாள் சிரிப்பை உதட்டுக்குள் பூட்டியபடியே.
சஞ்சய் திகைத்து விழித்தான்.
“சமைக்குறதுனா அடுப்புல வச்சதும் சாப்பாடு ரெடியாகிடும்னு அர்த்தமில்ல… நம்ம சேர்க்குற காய்கறி, மசாலா, ஆயில் ஒவ்வொன்னும் ஒரு குறிப்பிட்ட டெம்பரேச்சர்ல ப்ராப்பரா குக் ஆகுறதுக்கான டைம் குடுக்குறதும் சமையல்ல அடங்கும் ப்ரோ”
சஞ்சய் ஆமோதிப்பாகத் தலையசைத்து ஒதுங்கிக்கொள்ள தரங்கிணியும் சரியான நேரத்தில் ஓவனிலிருந்து பேக்கிங் ட்ரேயை எடுத்து வைத்தாள்.
கையில் சூடு படாமலிருப்பதற்கான கனத்த கையுறையை அணிந்திருந்தாள்.
மெதுவாக பார்ஸ்மெண்ட் பேப்பர் பார்சலைப் பிரித்தவள் அதிலிருந்து எலுமிச்சை மற்றும் ஹெர்ப்ஸ்களின் மணம் வீசுவதை நுகர்ந்தபடியே செலரி தண்டுகளை வெட்டித் தூவினாள்.
பின்னர் பார்ஸ்மெண்ட் பேப்பருடன் அழகான தட்டு ஒன்றில் சமைக்கப்பட்ட மீனை வைத்து அதற்கென உள்ள மூடியால் மூடி மரக்கூடை ஒன்றில் வைத்து எடுத்துக்கொண்டு சஞ்சயுடன் சேர்ந்து மீண்டும் அதிரதனின் அலுவலக அறைக்கு வந்தாள்.
அவன் உணவு அருந்தும் இடத்தைக் காட்டியதும் அங்கே கூடையோடு சென்றவள் மேஜை மீது சமைக்கப்பட்ட மீனைத் தட்டோடு வைத்து கரண்டி மற்றும் முட்கரண்டியை வைத்தாள்.
பின்னர் நாசூக்காக கைகளைப் பொதிந்தபடி ஒதுங்கிக்கொண்டாள்.
அதிரதன் அவளை ஓரக்கண்ணால் பார்த்தபடி நாற்காலியில் அமர்ந்தவன் ‘சால்மன் ஃபிஷ் என்பாப்பிலோட்’டின் நறுமணத்தை ஆழ்ந்து சுவாசித்து நுரையீரலுக்கு அனுப்பினான்.
நாவில் சுவைமொட்டுகள் விழித்துக்கொள்ள முட்கரண்டியால் மீனைச் சோதிக்க ஆரம்பித்தவன் பக்குவமாக வெந்திருக்கவும் அதை விண்டு வாயில் போட்டுக்கொண்டான்.
எலுமிச்சையின் புளிப்பு, பெல்பெப்பரின் மெல்லிய காரம், பூண்டின் நறுமணத்தோடு ஹெர்ப்ஸ்களின் புத்துணர்ச்சியும் சேர்ந்து கொண்டு அவனது சுவைமொட்டுகளுக்கு விருந்தளிக்க “ஆசம்” என்றான்.
தரங்கிணியின் முகம் பிரகாசமுற்றது! அதிரதனின் விழிகள் மீன் துண்டுக்கிடையே கிடந்த சோயா பீன்ஸ் விதையைப் பார்த்ததும் ஜொலித்தன.
நிமிர்ந்து தரங்கிணியைப் பார்த்தான். அவளது பிரகாசமான வதனம் என்ன சொன்னதோ தெரியவில்லை. மீனோடு சேர்த்து சோயா பீன்ஸ் விதைகள், காய்கறிகள் என்று எதையும் விட்டு வைக்காமல் சாப்பிட்டான்.
சாப்பாடு என்றால் வெறுமெனே வாயில் போட்டு மெல்வது மட்டும் இல்லை. ஒவ்வொரு துண்டும் அவன் வாய்க்குள் போகும்போது கண்களில் பளிச் உணர்வு வரும். தாடை அசைபோடும்போது இதழ்களில் உணவின் சுவை அபாரம் என்பதற்கான அறிகுறியாக சிரிப்பு முகிழும்.
ஒருவழியாக அவன் சாப்பிட்டு டிஸ்யூவால் வாய் துடைத்துவிட்டு நிமிர்ந்ததும் தரங்கிணி என்ன சொல்வானோ என காத்திருப்பதைக் கண்டுகொண்டான்.
“உங்க கரியர்ல விழுந்த ப்ரேக் உங்களோட டேலண்டை குறைச்சிடல… வெல்கம் டு சன் டியூ தரங்கிணி” என்றான் மனப்பூர்வமாக.
தரங்கிணியும் புன்னகையோடு “தேங்க்யூ சார்” என்று தலை சாய்த்து அவனது வரவேற்பை ஏற்றுக்கொண்டாள்.
பின்னர் சாப்பிட்ட தட்டை மீண்டும் மூங்கில் கூடையில் வைத்து எடுத்துக்கொண்டவளிடம்
“இதை கிச்சன்ல வச்சிட்டு வந்து இங்க வெயிட் பண்ணுங்க… உங்க டிப்பார்ட்மெண்ட் ஹெட் வந்து முறைப்படி உங்களை டீம் கிட்ட இண்ட்ரடியூஸ் பண்ணி வைப்பார்” என்றான் அதிரதன்.
அவளுமே கூடையை சமையலறையில் வைத்துவிட்டுத் தன் துறையின் தலைமை மேலாளரின் வருகைக்காக காத்திருந்தாள்.
அரைமணி நேரம் ஆமை போல கடந்தும் ஆள் வரவில்லை. கொஞ்சமாகச் சலிப்பு எட்டிப் பார்த்தது அவளுக்குள்.
அதே நேரம் அங்கிருந்தபடி வெளியே தெரிந்த மலைச்சிகரங்களை ரசிப்பதும் அவளுக்குப் பிடித்திருந்தது.
இம்மாதிரி பெரிய ஹோட்டல்களில் பணிக்குச் சேர்ந்துவிட்டால் நேரம் காலம் பார்க்காமல் உழைக்க வேண்டும். எட்டு மணி நேரம் வேலை என்றாலும் இடை நிற்காமல் வேலை செய்யவேண்டும்.
ஒரு சின்ன பிழை நேர்ந்தாலும் அது ஹோட்டலின் நற்பெயருக்குக் குந்தகம் விளைவித்துவிடும்.
இதெல்லாம் ஆர்.எம்.எஸ்சில் சொல்லிக் கொடுக்கப்பட்ட பாலபாடம். இனி இப்படி ஒரு ஓய்வு நேரமும் ரசிக்கும் வாய்ப்பும் எப்போது கிடைக்குமோ தெரியாது. அதனால் கிடைக்கும்போது அனுபவித்துக்கொள் என்றது தரங்கிணியின் மனம்.
அவள் மீண்டும் இமாலயத்தின் சிகரங்களோடு மானசீகமாக உறவாட எத்தனிக்கையில் அதிரதனின் அறைக்குள் இருந்து பதற்றத்தோடு வெளியே வந்தான் சஞ்சய்.
“நீங்க குக் பண்ணுன ஃபிஷ்ல அலர்ஜி உண்டாக்குற பொருள் எதுவும் இருந்துச்சா?” அவன் பதற்றத்தோடு விசாரிக்க தரங்கிணியும் பதற ஆரம்பித்தாள்.
“ஏன்? என்னாச்சு?”
“அதிரதன் சார் வாமிட் பண்ணிட்டிருக்கார் அங்க”
“வாட்?”
அதற்கு மேல் காத்திருக்காமல் அறைக்குள் ஓடினாள் அவள்.
அங்கே அதிரதன் தொண்டையைப் பிடித்தபடி அமர்ந்திருந்தான். அவன் முகத்தில் வேதனையின் அறிகுறியாக சுழிப்பு!
“என்னாச்சு சார்?”
“தெ… ரி…. ய… ல”
அவனால் பேச முடியாதவண்ணம் தொண்டை இறுகிப்போன உணர்வு!
சஞ்சய் ஹோட்டலின் அதிகாரப்பூர்வமான மருத்துவ அதிகாரியை அழைத்து வர சென்றிருந்தான்.
வந்த முதல் நாளிலேயே இப்படியாகிவிட்டதே என கையைப் பிசைந்தபடி நின்றவளுக்குத் திடுமென பொறி தட்டியது.
“சார்… உங்களுக்கு சோயா பீன்ஸ் அலர்ஜியா?”
கலங்கிய விழிகளுடன் அவள் கேட்கவும் ஆமெனத் தலையசைத்தான் அவன்.
“அப்ப ஏன்?... எதுக்காக அதை சாப்பிட்டிங்க? என் கிட்ட வேற ப்ரிப்பேர் பண்ண சொல்லிருக்கலாமே”
கலக்கத்தோடு கேட்டவள் அவனைத் தவிப்பாக ஏறிட அதிரதனின் முகத்தில் வேதனையையும் தாண்டி முறுவல் வந்து போனது.
அதைக் கண்டுகொண்டாள் தரங்கிணி.
“சிரிக்குறிங்களா? யாராச்சும் அலர்ஜன் உள்ள ஃபுட்டை சாப்பிடுவாங்களா? நீங்க சோயா பீன்சை கவனிக்காம போக வாய்ப்பே இல்ல” என்று தன் போக்கில் பேசிக்கொண்டே போனவள் ஒரு நொடி அமைதியானாள்.
அவன் அவளிடம் கை காட்டிய இடத்தில் ஒரு சிறிய மஞ்சள் வண்ண பேனா போன்ற கருவி இருந்தது.
“எபிபென்”
சிரமத்துடன் அவன் உரைக்கவும் அதை எடுத்து வந்து அவனிடம் கொடுத்தவள் அதிரதனின் முகத்தைக் கூர்ந்து கவனித்தாள். அவனது நெற்றியும் தலையும் சந்திக்குமிடத்தில் ஹாரிபார்ட்டருக்கு இருப்பது போல சின்ன தழும்பு இருப்பதைக் கவனித்ததும் பரபரப்புற்றாள்.
அந்தத் தழும்பும், எபிபென் என்ற கருவியும் அவளுக்கு ஒருவனை நினைவுறுத்தின.
பதற்றம் மட்டுப்பட “நீ…. நீங்க… அதி…” என்று சொன்னவள் அவன் அக்கருவியின் உள்ளே இருக்கும் ஆரஞ்சு வண்ண பேனா போன்ற பொருளை எடுக்கவும் சட்டென “நான் வெளிய போறேன்” என்று ஓடோடி வெளியே வந்தாள்.
வந்தவளுக்கு மூச்சு வாங்கியது.
கண்களை இறுக மூடிக்கொண்டவள் “என..க்கு… சோயா… அலர்ஜி” என்று சொன்ன மீசையில்லாத வாலிப முகம் ஒன்று மனக்கணில் வரவும் “ஓ மை காட்! இது அதி… அவனா?” என அதிர்ச்சியை வெளிக்காட்டியபோதே மருத்துவர் வந்துவிட்டார். வந்தவர் உள்ளே போய் அதிரதனைப் பரிசோதித்துவிட்டுச் சாப்பாட்டில் என்ன அலர்ஜன் இருந்ததென விசாரித்தார்.
“சோயா பீன்ஸ்”
மருத்துவர் அவனுக்கு முதலுதவி கொடுத்துவிட்டு ஒவ்வாமை சரியாவதற்கான மருந்தையும் கொடுத்துவிட்டுக் கிளம்பினார்.
“எபிநெஃப்ரின் ஆட்டோ இன்ஜெக்டர் போட்டிருக்குறதால கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கணும்”
அவர் போனதும் விறுவிறுவென தரங்கிணியை ஆர்வத்தோடு ஏறிட்டான் அதிரதன்.
வந்தவள் “சோயா பீன்ஸ் இருக்குனு தெரிஞ்சும் எதுக்காக அதை சாப்பிட்ட….டிங்க?” என்று திணறியபடியே கேட்க
“அதை சாப்பிடலனா இந்நேரம் உனக்கு நான் யாருனு நினைவு வந்திருக்காதுல்ல…” என்று சொன்ன அதிரதன் சிறிது இடைவெளிவிட்டு “சீனியர்…” என முடித்தான்.
தரங்கிணி இடையில் கைகளை ஊன்றிக்கொண்டு அவனைக் கண்டிப்போடு ஏறிட்டாள்.
“நீ…ங்க”
“நீனே சொல்லலாம்… இப்பவும் அதே ஜூனியர் அதியா தான் நான் உன் முன்னாடி இருக்கேன்”
சட்டென இடையிட்டது அதிரதனின் குரல்.
“நீ கொஞ்சம் கூட மாறல அதி… டீனேஜ்ல செஞ்ச மாதிரி இப்பவும் அட்டென்சன் சீக்கிங்குக்காக உன் ஹெல்தை பணயம் வைக்குற”
அதட்டினாள் தரங்கிணி. இப்போதுதான் அதிரதனின் மனம் குளிர்ந்தது.
“உஃப்!”
வாயைக் குவித்து ஊதியவன் “இப்பவும் உனக்கு என்னை ஞாபகம் வராதோனு நினைச்சேன்… உன் மெமரி பவர் அவ்ளோ மோசமில்ல” என்றான்.
“எப்பிடி உன்னைப் பாத்ததும் எனக்கு ஞாபகம் வரும்னு நீ எதிர்பாக்குற? நான் பாத்த பதினேழு வயசு அதிங்கிற ஸ்கூல் பாயா நீ? யூ ஆர் அ மேன் நவ்… இந்த ட்ரிம்ட் ப்யர்ட், மசில்ட் பாடி, கம்பீரமான குரலை எல்லாம் அந்த பேபி ஃபேஸோட கம்பேர் பண்ணி பாத்தா ரெண்டும் வேற வேற ஆளா தோணுது எனக்கு”
அதிரதன் அவளது படபட பேச்சைக் கவனித்தவன் “உனக்கு என்னை ஞாபகம் வந்திருச்சுங்கிற உரிமைல ஒன்னு கேக்கப்போறேன்” என்றதும்
“எதுவா இருந்தாலும் என் ஒர்க் ஹவர்ஸ் முடிஞ்சதும் கேளு… வாங்குற சம்பளத்துக்கு நான் வேலை பாக்கணும்” என்று கறாராகச் சொல்லிவிட்டுக் கிளம்ப எத்தனித்தாள் தரங்கிணி.
“தாராளமா போ… ஆனா இன்னைக்கு நைட் டின்னர் என் கூட தான் சீனியர்”
“நோ அதி…”
“நோ மோர் எக்சியூஸ்…. என்னை மறந்ததுக்கு பனிஷ்மெண்ட்”
பிடிவாதமாக அதிரதன் பேசவும் தரங்கிணியின் இதழிலும் முறுவல் பூத்தது.
ஆறடிக்கு கட்டுமஸ்தான தேகத்தோடு நிற்கும் அதிரதன் அவளுக்குத் தெரியவில்லை. மாறாக ஒல்லியாக நெடுநெடு உயரத்தோடு மீசை தாடியற்ற முகத்தோடு நிற்கும் பதினேழு வயது அதியாக உருமாறி தெரிந்தான்.
“நல்லா ரெஸ்ட் எடு”
தனது வேண்டுகோளை ஏற்கவோ நிராகரிக்கவோ செய்யாது உடல்நலனைப் பற்றிய அக்கறையை வார்த்தைகளில் சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறியவளைச் சிரிப்போடு பார்த்தபடி கண் மூடிக்கொண்டான் அதிரதன்.
- Get link
- X
- Other Apps
Comments
Nice.. Aiyo senior veraya.. entha track yeppadi poga pogutho
ReplyDeleteThank you
Deleteஅருமை
ReplyDeleteThank you
DeleteStory. Super
ReplyDeleteThank you
Delete❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ReplyDeleteThank you
Delete👌👌👌👌
ReplyDeleteThank you
Deleteவெண்பனியாய் சில நினைவுகள்..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 2)
அடப்பாவி...! என்னவொரு பிடிவாதம்...? சரியான விடாகண்டன், கொடா கண்டனா இருப்பான் போலவே. தரங்கினி அவனை மறந்துட்டா என்கிறதுக்காக ரிஸ்க்கை கூட ரஸ்க் சாப்பிடற மாதிரி ஈஸியா எடுத்துட்டானே. அது சரி, தரங்கிணியை அதிரதன் சீனியர்ன்னு சொல்றதைப் பார்த்தா, அதிரதனை விட தரங்கிணி வயசுல பெரியவளோ...?
😀😀😀
CRVS (or) CRVS 2797
Super college mates marupadiyum sandichal . Senior junior combination attagasama iruka pogudu
ReplyDeleteTharangi ku niyabagam vara vaikka ipadi ah pannuvan
ReplyDelete