அத்தியாயம் 1
- Get link
- X
- Other Apps
கனவுகள் இலவசமாம்.
யார் சொன்னது? எந்தக் கனவுக்கும் ஒரு விலை உண்டு. சில கனவுகளுக்கு நமது கற்பனை விலையாகும். சில கனவுகளோ நமது கலையார்வத்தை விலையாகக் கேட்கும். சிலரின் கனவுகளுக்கு மட்டுமே அசாத்திய துணிச்சல் விலையாக அமையும்.
இப்படிக்கு சந்திரிகை
S11 காவல் நிலையம், தாம்பரம் மேற்கு, சென்னை...
காவல் நிலையத்தில் இருக்கும் ரைட்டரிடம் தகவல்
சொல்லிக்கொண்டிருந்தார் நடுத்தர வயதுக்காரர் ஒருவர்.
“பேர், அட்ரஸ் சொல்லுங்க”
“சட்டநாதன், நம்பர் 4, தமிழ்பூங்கா தெரு, இரும்புலியூர்”
“என்ன கம்ப்ளைண்ட்?”
“என் பொண்ணை ஒன்றரை மாசமா காணும்
சார்”
“ஓ! மிஸ்சிங்
கம்ப்ளைண்டா? இவ்ளோ லேட்டாவா வருவிங்க சார்? சரி சரி, பொண்ணு பேர், வயசு எல்லாம்
சொல்லுங்க”
“பேர் சந்திரிகா, போன மாசம் பதினெட்டு வயசு ஆச்சு, மெட்ராஸ் கிறிஸ்டியன்
காலேஜ்ல பி.காம் ஃபர்ஸ்ட் இயர் படிக்கிறா”
“யாரையும் லவ் பண்ணுச்சா பொண்ணு?”
“இல்ல சார்... என் பொண்ணு வீடு விட்டா காலேஜ், காலேஜ் விட்டா வீடுனு
இருப்பா”
“எப்ப இருந்து காணல?”
“போன மாசம் பன்னெண்டாம் தேதி
காலையில இருந்து காணும் சார்”
“பொண்ணோட நடவடிக்கையில எதுவும்
மாற்றம் தெரிஞ்சுதா? ஒன்றரை மாசமா ஏன் தேடல?”
“அது...”
“என்ன இழுக்கிறிங்க?
நீங்க என்ன நடந்துச்சுனு முழுசா சொன்னா தானே நாங்க தேட முடியும்...
பொண்ணு காணாம போயி ஒன்றரை மாசம் கம்முனு இருந்துட்டு இப்ப வந்து கம்ப்ளைண்ட்
குடுக்குறிங்க... ஒருவேளை உங்க பொண்ணு வேற ஜாதிக்கார பையனை லவ்
பண்ணுனதால குடும்பமா சேர்ந்து ஆணவக்கொலை பண்ணிட்டு இப்ப காணலனு பொய் கம்ப்ளைண்ட் குடுக்குறிங்களா?”
ரைட்டர் கேட்ட கேள்வியில் சட்டநாதன் மார்பைப்
பிடித்துக்கொண்டார். நானா என் மகளைக் கொல்பவன்? கண்ணாடியைக் கழற்றி துளிர்த்த
கண்ணீரைத் துடைத்துக்கொண்டார்.
“அப்பிடியெல்லாம் எதுவும் இல்ல
சார்”
அவர் சொல்லிக்கொண்டிருக்கையில் காவல் ஆய்வாளர்
மார்த்தாண்டன் காவல்நிலையத்துக்குள் அடியெடுத்து வைக்க ரைட்டர் முதற்கொண்டு அனைத்து
காவலர்களும் எழுந்து சல்யூட் வைத்தனர்.
காவல் ஆய்வாளர் மார்த்தாண்டன் அவருக்கான இருக்கையில்
அமர்ந்தார். அவரது
முகத்தில் சுரத்தில்லை. ஏட்டு ஒருவர் தேநீர் வாங்கி வரவா என கேட்டதற்கு
வேண்டாமென மறுத்தவர், ரைட்டரிடம் கண்ணீர் மல்க பேசிக்கொண்டிருந்த சட்டநாதனைக் கவனித்தார்.
“அது என்னய்யா கேஸ்?
ஏன் அந்தாள் அழுறார்?”
“ஏதோ மிஸ்சிங் கேஸ் சார்...
பொண்ணு வீட்டை விட்டு ஓடிப்போயிடுச்சு போல... ஒன்றரை
மாசம் கழிச்சு கம்ப்ளைண்ட் பண்ண வந்திருக்கார்”
“எது? ஒன்றரை மாசமா?”
மார்த்தாண்டன் எழுந்தார்.
சட்டநாதனிடம் வந்தவர் “என்ன விவகாரம்?” என்று விசாரிக்க முந்திக்கொண்டு பதிலளித்தார் ரைட்டர்.
“இவரு பொண்ணு வீட்டை விட்டுக்
காணாம போயி ஒன்றரை மாசம் ஆகுதாம்... ஐயா ஆடி அசைஞ்சு இப்ப கம்ப்ளைண்ட்
குடுக்க வந்திருக்காரு”
ரைட்டரின் நக்கலில் சட்டநாதனின் கண்களில் மீண்டும்
கண்ணீர் வெள்ளம்.
மார்த்தாண்டன் ரைட்டரைக் கண்டிப்பது போல பார்த்தார்.
“கம்ப்ளைண்ட் எழுதி வாங்கியாச்சுல்ல?”
“ஆமா சார்”
“இனிமே நான் பாத்துக்குறேன்...
நீங்க வாங்கய்யா” என்றவர் சட்டநாதனைத் தன்னோடு
அழைத்துச் செல்ல முழு காவல் நிலையமும் இக்காட்சியை வாயைப்பிளந்து பார்த்தது.
காரணம் காவல் ஆய்வாளர் மார்த்தாண்டன் கறார்
பேர்வழி. புகார்
கொடுக்க வந்தவர்களிடம் இப்படி கனிவாகப் பேசும் ரகமில்லை. சட்டநாதனிடம்
அவர் பரிதாபம் கொள்வது அங்கிருந்த அனைவருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்தது.
“உக்காருங்கய்யா”
சட்டநாதன் அமர மார்த்தாண்டனும் அவரது நாற்காலியில்
அமர்ந்தார்.
“ஏட்டய்யா தண்ணி பாட்டில் ஒன்னு
வாங்கிட்டு வாங்க”
ஏட்டு ஓட, மொத்த காவல் நிலையமும் அவர்களின்
பேச்சில் காதை வைத்தபடி தங்களது வேலையைக் கவனித்தது.
தண்ணீர் பாட்டில் வந்ததும் சட்டநாதனிடம் மார்த்தாண்டன்
நீட்ட, அவரும்
வாங்கி அருந்தினார்.
“சொல்லுங்கய்யா... என்ன நடந்துச்சு? ஏன் இத்தனை நாள் கம்ப்ளைண்ட் பண்ணல?
யாரும் உங்க பொண்ணை கடத்திருப்பாங்கனு சந்தேகப்படுறிங்களா?”
“இல்ல சார்... எங்க குடும்பத்துக்கு விரோதிங்கனு யாருமில்ல... ஒரே ஒருத்தனை
தவிர... அவனும் என் பொண்ணைக் கடத்துற அளவுக்குத் துணியமாட்டான்”
“யார் அவன்?”
“என் பொண்ணுக்கு நிச்சயம் பண்ணுன
பையன் சார்... பேர் நரேஷ்”
“பதினெட்டு வயசுல கல்யாணமா?
என்ன சார் சொல்லுறிங்க? எனக்குப் புரியல...
நீங்க எதையும் மறைக்காம சொல்லுங்க... உங்க பொண்ணை
தேடுறதுக்கு உதவியா இருக்கும்” என்றார் மார்த்தாண்டன்.
ரைட்டரிடம் பெண்ணின் புகைப்படத்தை வாங்கிவிட்டீர்களா
என விசாரித்தார். இல்லை என்கவும் தானே சட்டநாதனிடம் புகைப்படத்தைக் கேட்டார். அவரும் தனது மொபைலில் வைத்திருந்த சந்திரிகாவின் புகைப்படத்தைக் காட்டினார்.
அதைப் பார்த்ததும் மார்த்தாண்டன் வாயடைத்துப்
போய்விட்டார்.
“இந்தப் பொண்ணு... சோஷியல் மீடியா ஸ்டார் அவார்ட்லாம் வாங்குச்சே... பேர்
கூட...” என அவர் யோசிக்க அவருக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருந்த
கான்ஸ்டபிள் “சந்திரிகா சார்” என்றார்.
“உனக்கு எப்பிடிய்யா தெரியும்?”
என மார்த்தாண்டன் வினவ
“நேரம் போகலனா போன்ல ஃபேஸ்புக்
பாப்பேன் சார்... அதுல இந்தப் பொண்ணு வீடியோ வரும்” என தலையைச் சொறிந்து அசட்டுச்சிரிப்பு சிரித்தார்.
மார்த்தாண்டன் தலையில் அடித்துக்கொண்டார்.
சட்டநாதன் சங்கடமாக நோக்கவும் “நீங்க நடந்தது என்னனு சொல்லுங்க
சார்” என்றார்.
“எனக்குச் சொந்த ஊர் தூத்துக்குடி
சார்... நான் ப்ரைவேட் ஸ்கூல் டீச்சர், என் மனைவி ஹவுஸ் ஒய்ப்... எங்களுக்கு ஒரு பையன்,
ஒரு பொண்ணு... பையனுக்கு ஐ.டி கம்பெனில வேலை கிடைச்சதும் எங்களை குடும்பத்தோட மெட்ராசுக்கு அழைச்சிட்டு
வந்துட்டான்... என் பொண்ணு ப்ளஸ் டூ வரைக்கும் அவங்க ஆச்சி வீட்டுல
தங்கி படிச்சா... அவ ஸ்கூல் படிக்கப்பவே டிக்டாக் ஆப்ல வீடியோ
போடுவா... சும்மா ஜாலிக்குப் பண்ணுறானு நானும் கண்டுக்கல...
டிக்டாக் மோகத்தால படிப்பை கோட்டை விட்டுடுவாளோனு பயந்தேன்...
ஆனா என் பொண்ணு நல்லா படிச்சு மார்க் வாங்குனா...
என் ஒய்ப் அவளைப் பாக்க அடிக்கடி தூத்துக்குடிக்குப்
போவா... அப்பிடி
போறப்ப அவளும் என் பொண்ணு கூட டிக்டாக்ல வீடியோ போடுவா... ரெண்டு
பேரும் ஐடி வச்சிருந்தாங்க... அப்ப தான் கவர்மெண்ட் டிக்டாக்
ஆப்பை தடை பண்ணுனாங்க... உடனே என் பொண்ணு இன்ஸ்டாக்ராம்ல ஐடி
ஓப்பன் பண்ணுனா, யூடியூப் சேனலும் ஆரம்பிச்சா... படிக்கிற வயசுல இதுல்லாம் தேவையாம்மானு கேட்டா டைம்பாசுக்குப் பண்ணுறேன்பானு
சொல்லுவா...
கொஞ்சம் கொஞ்சமா அவளுக்கு அதுல பணம் வரவும் என் பொண்டாட்டியும் மகனும் அவளுக்குச்
சப்போர்ட் பண்ணி ஃபேமிலி வ்ளாக் அது இதுனு கூத்தடிச்சாங்க... இப்பிடி நாள் போயிட்டிருந்தப்பதான் அவன் வந்தான்.... அவன்தான் நரேஷ்”
சட்டநாதன் சந்திரிகாவைப் பற்றிய விவரங்களையும்
நடந்த நிகழ்வுகளையும் சொல்வதற்காக கடந்தகாலத்துக்குப் போய்விட்டார்.
********
டாங்கியோ, மாபோ மாவட்டம், சியோல், தென்கொரியா...
ஜி.எஸ்25 என்ற கொரியன் கன்வீனியன்ஸ் ஸ்டோரின் கண்ணாடி தடுப்புச்சுவரின்
வழியே சாலையில் செல்பவர்களைப் பார்த்தபடி ‘ஃப்ரூட் சோஜூ’
அருந்திக்கொண்டிருந்தாள் வோல்க்வாங்.
வயது பதினெட்டு இருக்கலாம். பால்வெண்மை நிறம்,
தோள் வரை வெட்டிவிடப்பட்ட கூந்தல், தென்கொரியர்களின்
பத்து அடுக்கு சரும பாதுகாப்பு (Ten step Skin care) அணுகுமுறையால்
மேக்கப் இன்றி பளபளக்கும் வதனம்.
அவளை ஒத்த வயதோடு இன்னொரு ஆடவனும் இளம்பெண்ணும்
அவளோடு அமர்ந்திருந்தனர். அவர்களின் கைகளில் இருந்த பேப்பர்
கப்களில் பழக்கலவை குவியல்கள் நிரம்பியிருந்தன.
அந்த இளம்பெண்ணின் பெயர் பார்க் ஷி வொன் (பார்க் என்பது குடும்பப்பெயர்).
இளைஞனின் பெயர் ஹெங்பொக்.
மூவருக்கும் அன்று ஞாயிறு விடுமுறை. அவர்கள் மூவரும் டாங்கியோவில்
இருக்கும் பர்பிள் கே-பாப் பயிற்சி பள்ளியின் மாணாக்கர்கள்.
உலகின் முக்கால்வாசி இளைஞர்களை பீடித்திருக்கும்
கே-பாப் ஜூரம்
அவர்களையும் விட்டு வைக்கவில்லை.
பதினெட்டு வயதிலேயே தென்கொரியாவின் மாபெரும்
எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமான
‘ஸ்கொயர் எண்டர்டெயின்மெண்ட்’டின் ஆன்லைன் ஆடிசனில்
கலந்துகொண்டு பயிற்சிக்குத் தேர்வாகிவிட்டனர்.
அவர்களுக்கான இரண்டு மாத பயிற்சி பர்பிள் கே-பாப் பயிற்சி பள்ளியில் வழங்கப்படும்.
பின்னர் ஹப்ஜியோங் மாவட்டத்தில் உள்ள ஸ்கொயர் எண்டர்டெயிண்மெண்ட் நிறுவனம்
நடத்தும் ஆடிசனில் நேரடியாகக் கலந்துகொண்டு அதிலும் தேர்வாகி சிறந்த கே-பாப் ஐடல் ஆகவேண்டுமென்பது அவர்கள் மூவரின் கனவு.
இம்மாதிரி கே-பாப் ஐடல்களின் பயிற்சிக்காலம்
அவ்வளவு எளிதாக இருக்காது. இந்த மூவருக்கும் கூட அப்படி தான்.
ஹெங்பொக் சென்ற வாரயிறுதி நாளில் கன்வீனியன்ஸ்
ஸ்டோரில் கன்னாபின்னாவென கப் நூடுல்ஸ்,
டோசிராக் எனப்படும் லஞ்ச் பாக்ஸ்களை வெளுத்து வாங்கியதில் பயிற்சி காலத்திற்கான
எடையை விட அதிகம் எடை போட்டுவிட்டான்.
இம்மாதிரி கே-பாப் பயிற்சி காலத்தில் தினந்தோறும்
அவர்களின் உடல் எடை பரிசோதிக்கப்படும். அதில் ஹெங்பொக் மாட்டிக்கொண்டான்.
அதற்கு தண்டனையாக இரண்டு நாட்கள் ஒருவேளை உணவு
மட்டுமே சாப்பிட்டு எடையை மீண்டும் கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறான் அவன்.
பார்க் ஷி வொன்னும், வோல்க்வாங்கும் உடல் எடை
விசயத்தில் வெகு ஜாக்கிரதையாக இருப்பார்கள்.
ஞாயின்றது பயிற்சிப்பள்ளியின் டயட் சாப்பாடு தொந்தரவு இல்லை என்றாலும்
வெகு கவனமாகச் சாப்பிடுவார்கள். பெண்கள் அல்லவா!
(அவர்களின் உரையாடல் கொரியன்
மொழியில் இருக்கும். கதைக்காக தமிழில் எழுதுகிறேன்)
“அடுத்த வாரம் ஸ்கொயர் எண்டர்டெயின்மெண்ட்ல
ஆடிசன் இருக்கு... அதுக்காக நான் டயட்ல கவனமா இருக்கேன்”
என்றாள் வோல்க்வாங்.
“உன்னோட கொரியன் லாங்வேஜ் க்ரேட்
எவ்ளோ இருக்கு க்வாங்?” என்று கேட்டபடி ஸ்ட்ராபெர்ரியை ருசித்தாள்
பார்க் ஷி வொன்.
“இந்த தடவை நல்ல முன்னேற்றம்னு
என்னோட கொரியன் டீச்சர் சொன்னாங்க... அதனால தான் ஆடிசனுக்குப்
போற ட்ரெய்னீஸ் லிஸ்ட்ல என் பேர் வந்திருக்கு” என்றாள் வோல்க்வாங்க்
கண்களில் கனவு மின்ன.
அவள் தென்கொரியாவைச் சேர்ந்தவள் அல்ல. ஹெங்பொக்கும்தான்.
எனவே கொரிய மொழிப்பாடமும் அவர்களுக்குக் கற்பிக்கப்பட்டது. ஓரளவுக்கு நன்றாகவே கற்றுத் தேர்ந்துவிட்டாள் என மொழியாசிரியை நாமின் பாராட்டியிருந்தார்.
“ஹெங்பொக்கும் நானும் இந்த மன்த்
எண்ட்ல நடக்கப்போற ஆடிசனுக்குத் தயாராகுறோம்... நீ தனியா ஹப்ஜியோங்
வரைக்கும் போயிடுவியா க்வாங்?”
“அதுல்லாம் போயிடுவேன் ஷி வொன்”
என்றாள் வோல்க்வாங் நம்பிக்கையோடு.
அவளது கனவுக்காக எத்தனை தடைகளை தாண்டியிருக்கிறாள்? டாங்கியோவுக்கும் ஹப்ஜியோங்குக்கும்
இடையே ட்ரெய்னில் பயணிக்கும் இருபது நிமிட தனிமை பயணத்துக்காக பயப்படுவாளா என்ன?
மூவரும் காலையுணவை கன்வீனியன்ஸ் ஸ்டோரில் முடித்துக்கொண்டு ‘நொரேபேங்’ எனப்படும் கரோகே பாரை அடைந்தார்கள்.
அங்கே கரோகே அறையில் மைக் பிடித்து ஆனந்தமாகப்
பாடி ஆடித் தீர்த்தவர்கள் ஞாயிறு விடுமுறையைக் கழித்துவிட்டு பர்பிள் கே-பாப் பயிற்சி பள்ளியின் டாமெட்ரியை
அடைந்தார்கள்.
ஹெங்பொக் ஆண்கள் பகுதிக்குச் சென்றுவிட வோல்க்வாங்கும்,
பார்க் ஷி வொன்னும் தங்களது அறைக்கு வந்து சேர்ந்தனர்.
இரு நபர்களுக்கு மிகவும் சிறிய அறைதான் அது. ஒரு பக்கம் குளியலறை இருந்தது.
அடுக்கு கட்டில் ஒன்றும், அதன் எதிர்புறம் பொருட்களை
வைத்துக்கொள்ள வார்ட்ரோப் ஒன்றும் இருந்தது.
கடந்த ஒன்றரை மாதங்களில் இதுதான் அவர்களின்
சுகம், துக்கம்,
வலி, சந்தோசத்தைப் பகிர்ந்துகொண்ட இடம்.
இந்தப் பயிற்சிப்பள்ளிகளில் கே-பாப் ஐடலுக்கான தகுதியை வளர்த்துக்கொள்ள
கடுமையான பயிற்சி வழங்கப்படும்.
ஐடல்கள் என்பவர்களைத் தெய்வங்களைப் போல கொண்டாடும்
ரசிகர்களுக்காகப் பயிற்சிக்காலத்தில் அவர்கள் செய்யும் தியாகங்கள் அனேகம்.
பர்பிள் கே-பாப் பயிற்சிப்பள்ளியின் பயிற்சியும் கடுமையானதே.
ஒருநாளில் பத்துமணி நேரம் பயிற்சி இருக்கும். உணவு
கட்டுப்பாடு கடுமையாக இருக்கும்.
நடனம், மொழிப்பயிற்சி, பாடல்,
இசைப்பயிற்சி, நடிப்பு என ஒவ்வொன்றையும் நுணுக்கமாகக்
கற்றுத்தருவார்கள். அது போக உடற்பயிற்சி, தோற்றத்தில் அக்கறை காட்டுவதிலும் கவனம் செலுத்துவார்கள்.
அனைத்திலும் கடினமானது நடனப்பயிற்சியே. உடலை ரப்பர் போல வளைத்தாடுவது
அவ்வளவு எளிதில்லை. சில நேரங்களில் தசைப்பிடிப்பு, தசைநார் கிழிவதெல்லாம் நடந்தேறும். இதை எல்லாம் தாக்குப்பிடித்தவர்கள்
மட்டுமே பெரிய எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்களுக்கு ஆடிசனுக்காக அனுப்பப்படுவார்கள்.
அந்த ஆடிசனிலும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பார்கள். அதில் இருந்து திறமையானவர்களை
எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் தேர்ந்தெடுத்து மீண்டும் பயிற்சி கொடுத்து தங்களுக்குக்
கீழே இருக்கும் பேண்ட்களில் உறுப்பினர்களாகச் சேர்த்துக்கொள்வார்கள்.
இதில் பயிற்சிப்பள்ளிக்கு மட்டும் கட்டணம்
செலுத்தவேண்டும். எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்களின் பயிற்சி இலவசமே. தகுதியான
நபர் என அவர்கள் திருப்தியுறும் வரை பயிற்சி கொடுத்துவிட்டு இசை நிகழ்ச்சிக்காக மேடையேற
விடுவார்கள்.
இசை நிகழ்ச்சி வருமானத்தில் எண்பது சதவிகிதத்தை
எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் எடுத்துக்கொள்ளும். மிச்சமிருக்கும் இருபது சதவிகிதத்தை இசைக்குழுவின்
உறுப்பினர்கள் பகிர்ந்துகொள்வார்கள்.
உலகெங்கும் கே-பாப் ரசிகர்களால் கொண்டாடப்படும்
அனைத்து ஐடல்களுக்கும் இந்த விதிமுறை பொருந்தும்.
இத்தனை கடுமையான சூழலுக்கு மத்தியிலும் இளைஞர்கள்
கே-பாப் வசம் ஈர்க்கப்படுவது
ஆச்சரியம் தான். அத்தகையவர்களில் வோல்க்வாங்கும் ஹெங்பொக்கும்
அடக்கம்.
வோல்க்வாங்கிற்கு நடனம் எளிதாக வந்துவிட்டது. அவளுக்கு ராப் இசையில் மட்டும்
ஸ்தாயி சரியாக வராமல் இழுத்தடித்தது. கடும்முயற்சி செய்து அதில்
தேர்ந்தவளுக்கு இம்மாதத்தில் நல்ல க்ரேட் கிடைத்திருக்கவே ஸ்கொயர் எண்டர்டெய்ன்மெண்ட்
நிறுவனத்தின் ஆடிசனுக்கு அனுப்பப்படுவோர் பட்டியலில் அவளது பெயரும் இடம்பெற்றுவிட்டது.
எத்தனை ஆண்டுகால கனவு இது! சரியான உறக்கம், உணவு, ஓய்வு அனைத்தையும் ஒதுக்கிவிட்டு செய்த கடின முயற்சிக்குப்
பலன் கிடைக்கப் போகும் மகிழ்ச்சியில் முகத்தை ஃபேஷ்வாஷ் கொண்டு கழுவிவிட்டு ஷீட் மாஸ்கை
போட்டு அமர்ந்தாள் வோல்க்வாங். கே-பாப்
உலகில் முக அழகும் உடல் அழகும் மிகவும் முக்கியம் அல்லவா!
வோல்க்வாங்கின் கனவு ஈடேறுமா? கே-பாப்
உலகின் நட்சத்திர பட்டாளத்தில் அவள் இணைவாளா? அல்லது காணாமல்
போவாளா?
- Get link
- X
- Other Apps
Comments
👍💕💕💕
ReplyDelete