அத்தியாயம் 4
- Get link
- X
- Other Apps
வேலியாய் நிற்க வேண்டிய சொந்தங்கள் பயிரை அம்போவென விட்டுச் செல்வது எத்தகைய துர்பாக்கியம்?
உறவுகளின் மகத்துவமும் புனிதமும் பணத்தின் முன்னே செல்லாக்காசாகிப் போகும்
விந்தையான நூற்றாண்டு இது. பணமும் பகட்டும் புகழும் தான் நிரந்தமென எண்ணும் அற்ப மானிடர்கள் உலாவும் சமுதாயம் இது.
இப்படிக்கு சந்திரிகை
சந்திரிகாவின் இன்ஸ்டாக்ராம் ரீல்ஸ்களை வரிசையாகப்
பார்த்துக்கொண்டிருந்தான் நரேஷ்.
கண்களில் காமமும் பேராசையும் வழிந்தது. இத்தனைக்கும் மற்ற சோஷியல்
மீடியா இன்ஃப்ளூயன்சர்களைப் போல ஆடைக்குறைப்பே அதிக பிரபலத்துவத்தைப் பெற்றுத் தரும்
என்ற கொள்கை கொண்டவள் அல்ல சந்திரிகா.
அவளது ஃபாலோயர்களின் எண்ணிக்கையைப் பார்த்தவனுக்கு
அதை விட அதிக சப்ஸ்கிரைபர்கள் கொண்ட அவளது யூடியூப் சேனல் நினைவுக்கு வந்தது.
இன்ஸ்டாக்ராமில் ஸ்பான்சர் மற்றும் ‘கொலாபரேசன்’ மூலமும், பி.ஆர் மூலமும் எவ்வளவு
சம்பாதிப்பாள் என கணக்கு போட்டான். கூடவே யூடியூப் வீடியோக்களின்
பார்வைகளையும் கவனித்தான்.
அனைத்தையும் பார்த்ததும் பெருமூச்சு பிறந்தது. திருமணமான பிறகு சந்திரிகாவின்
அனைத்து கணக்குகளையும் தன்வசம் ஒப்படைக்கவேண்டுமென சர்வேஷிடம் கூறியிருந்தான்.
சர்வேஷும் அதற்கு சம்மதித்தான். அவனுக்குச் சரிதாவை மணமுடிக்கவேண்டும்.
அதற்கு தடையாகச் சந்திரிகா இருப்பதால் சீக்கிரம் அவளை நரேஷின் தலையில்
கட்டிவைத்துவிட்டுவிட வேண்டும் என்ற எண்ணம்.
அவனது அன்னை சாந்தமதிக்கோ மகள் ரீல்ஸ், யூடியூப் என்று போவதால் தங்கள்
இனத்தில் யாரும் மணக்க முன்வரமாட்டார்கள் என்ற பயம்.
சர்வேஷின் சுயநலத்தையும் சாந்தமதியின் பயத்தையும்
தனது பேராசைக்குப் பயன்படுத்திக்கொண்டான் நரேஷ்.
அவனுக்கும் சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்
ஆகவேண்டும், பணத்தில்
குளிக்கவேண்டுமென தீராத ஆசை. ஆனால் அதற்கு கொஞ்சம் உழைக்கவேண்டும்.
அவனுக்குத் தான் உழைக்கப் பிடிக்காதே!
சந்திரிகா தனக்கு தூரத்து உறவில் அத்தை மகள்
என்பது அறிந்த பிறகு அவனது மூளை விதவிதமாகத் திட்டம் தீட்டியது.
யோசித்து பின்னர் நரேஷ் கண்டறிந்த வழியே சந்திரிகாவை மணப்பது.
அவளை மணந்து ‘கபிள் வ்ளாகர்’ என்ற பெயரில் காலையில் எழுந்ததில் ஆரம்பித்து காய்கறி வாங்க சந்தைக்குப் போனது
வரை அனைத்தையும் வ்ளாக் ஆக்கினால் எவ்வளவு சம்பாதிக்கலாம் என கணக்கிட்டான்.
அவனது குடும்பம் கிட்டத்தட்ட வாழ்ந்துக்கெட்ட
குடும்பம். ஊருக்குள்
பெரிய குடும்பம் என்று பெயர். ஆனால் காலி பெருங்காய டப்பா தான்.
தாத்தா காலத்து சொத்தை அவன் தந்தை தவறான வழியில் கரைத்துவிட கட்டப்பஞ்சாயத்து
செய்து சம்பாதித்து வருகின்றனர் தற்போது.
அப்படிப்பட்டவர்களுக்குச் சந்திரிகா பணங்காய்க்கும்
மரமாகத் தெரிந்தாள். மகனின் விருப்பம் தெரிந்ததும் பணத்தாசையில் சம்மதித்து விட்டார்கள்.
சந்திரிகாவைச் சம்மதிக்க வேண்டுமானால் அடிக்கடி
அவள் கண்ணில் அவன் பட்டுக்கொண்டே இருக்கவேண்டுமென சென்னைக்கு இரயில் ஏற்றிவிட்டவர்
சாட்சாத் அவனது தந்தையே தான்!
“போய் சும்மா இருக்காத...
அவ உனக்குப் பேசி முடிச்ச பொண்ணு... ‘எல்லா உரிமையும்’
உனக்கு இருக்கு... என் தங்கச்சி உன்னை எதுவும்
சொல்லமாட்டா... அந்தப் பிள்ளைய உன் வலையில விழவைக்க வேண்டியது
உன் சாமர்த்தியம்” என உபதேசம் வேறு.
இப்படிப்பட்டவர் பெற்ற பிள்ளை எப்படி இருப்பான்? சட்டநாதனின் வீட்டில் சட்டமாக
அமர்ந்து சந்திரிகாவைத் தனது வழிக்குக் கொண்டு வரும் வேலையைச் சரியாகச் செய்துகொண்டிருந்தான்.
சந்திரிகாவுக்கு இன்னும் பொதுத்தேர்வு முடிவுகள்
வரவில்லை. விடுமுறை
என்பதால் தினமும் எதையாவது வீடியோ எடுத்து ரீல்ஸ் போடுவாள், நரேஷ்
வேலை தேடுவதாக பொய் சொல்லிக்கொண்டு அவர்கள் வீட்டில் டேரா போட்டிருந்தான்.
இப்போது மூன்று படுக்கையறைகள் கொண்ட வீடு அது. சர்வேஷின் அறையில் அவனோடு
தங்கியிருந்தான் நரேஷ்.
சற்று முன்னர் சந்திரிகாவிடம் வெயிலுக்கு இதமாக
ஜூஸ் போட்டு எடுத்து வரச் சொல்லியிருந்தான்.
அவன் ஜூஸ் போடச் சொன்னதை தாயிடம் புகாராகச்
சொல்லிக்கொண்டிருந்தாள் சந்திரிகா.
“அவனுக்கு நான் ஏன்மா ஜூஸ் போட்டுக்
குடுக்கணும்? ரொம்ப பண்ணுறான்மா... அவன்
பேசுற விதம், பாக்குற விதம் எதுவுமே சரியில்ல”
சாந்தமதி எலுமிச்சை பழத்தைப் பிழிந்து அதில்
இரண்டு ஸ்பூன் நன்னாரி கலவையை ஊற்றி தண்ணீர் விட்டுக் கலக்கியபடி மகளை எச்சரித்தார்.
“புருசனாகப்போறவனை அப்பிடிலாம்
பேசாத பாப்பா... நரேஷ் நல்லப்பையன்... நம்ம
குடும்பத்துக்கு அவன்தான் சரிப்பட்டு வருவான்... நீ என்ன சொன்னாலும்
தலையாட்டுவான்... இப்பவே எங்கண்ணன் எல்லாமே உன் இஷ்டம் சாந்தானு
என் பொறுப்புல விட்டுட்டாருனா பாத்துக்க... அவனை கட்டிக்கிட்டா
அவன் சொத்து முழுக்க உனக்குத்தான்”
“நான் என்ன சொல்லுறேன் நீ என்ன
சொல்லுறம்மா? கொஞ்சநாளா நீயும் அண்ணனும் சரியில்ல” என்றவளின் கையில் ஜூஸ் தம்ளரைக் கொடுத்தார் சாந்தமதி.
“நாங்க தெளிவாதான் இருக்கோம்...
நீதான் சரியில்ல... இப்பிடி அடக்கமான பையன் அமையுறப்பவே
அமுக்கிடணும்டி... இந்தக் காலத்து பயலுவளை மாதிரி ஆடாத ஆட்டம்
போடுறவன் உனக்குப் புருசனா வந்துட்டா என்ன பண்ணுறதுனு தவிச்ச உங்கப்பாவே நரேஷை மாப்பிள்ளையாக்கிக்க
சம்மதிச்சிட்டார்... நீ மட்டும்தான் அவனைப் புரிஞ்சிக்காம பேசுற...
போ... அவனுக்கு ஜூஸ் குடுத்துட்டுச் சிரிச்ச முகமா
பேசு”
அவளை அனுப்பி வைத்தார்.
சந்திரிகா தயக்கத்தோடு அண்ணனின் அறைக்கதவைத்
தட்டினாள். கதவு
திறந்தது. ஜூஸை கொடுத்துவிட்டு ஓடிவிடலாமென நினைத்தவளை உள்ளே
இழுத்துக்கொண்டான் நரேஷ்.
சந்திரிகா திடீரென அவன் இழுத்ததில் அதிர்ந்து
போனாள்.
ஜூஸை முழுவதுமாகக் குடித்து முடித்தவன் தம்ளரை
அவள் கையில் கொடுக்காமல் உயரே தூக்கிப் பிடித்தான்.
“கிளாஸை குடுங்க”
“வேணும்னா நீயே வாங்கிக்க”
சந்திரிகா வேறு வழியின்றி உயர்த்தி பிடித்த
தம்ளரை அவனிடமிருந்து வாங்குவதற்காக எக்கி நிற்க அந்த இடைவெளியைப் பயன்படுத்தி அவளை
இடையோடு அணைத்தான் நரேஷ்.
“என்ன பண்ணுறிங்க? என்னை விடுங்க... இல்லனா அம்மா கிட்ட சொல்லிடுவேன்”
மிரட்டியவளைப் பார்த்து கொள்ளிவாய் பிசாசு
போல சிரித்தான் அவன்.
“இதெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சுதான்
உங்கம்மா இங்க அனுப்பிருக்காங்க பேபி”
கண்சிமிட்டியவனின் தோள்பட்டையில் பற்கள் பதியும்வரை
நன்றாகக் கடித்தாள் சந்திரிகா.
அவன் வலியில் “ஆஆஆ” என துடித்தபடி கைகளை விலக்கிக்கொள்ள விருட்டென கதவைத் திறந்து ஓடினாள் அவள்.
நரேஷ் வலித்த தோளைத் தேய்த்தபடி அறைக்குள்
நிற்க சாந்தமதி பதறியடித்துக்கொண்டு வந்தார்.
“என்னாச்சு பாப்பா?”
கண்ணீர் மல்க நின்ற சந்திரிகா நரேஷைக் கை காட்டினாள்.
“இவன் என் கிட்ட தப்பா நடந்துக்க
பாக்குறான்மா”
சாந்தமதி அவனைப் பார்க்க நரேஷோ அலட்டிக்கொள்ளவில்லை.
“அத்தை நான் ஃப்ராங் வீடியோ
ஷூட் பண்ணிட்டிருந்தேன்... நம்பலனா இங்க பாருங்க” என்று அவ்வளவு நேரம் ஒளித்து வைத்திருந்த கேமராவை எடுத்துக் காட்டினான்.
“இப்ப இது தான் ட்ரெண்ட் அத்தை...
நான் பேக்ரவுண்ட் மியூசிக் போட்டு அழகா எடிட் பண்ணலாம்னு யோசிச்சேன்...
சந்து பேபி பாதியிலயே என்னைத் தப்பா நினைச்சிட்டு ஓடி வந்துட்டா”
சாந்தமதி அவனை விடுத்து மகளை முறைத்தார்.
“ப்ராங்க் வீடியோனு தெரியாம
மருமகனை தப்பா நினைச்சிட்டியே பாப்பா... இனிமே இப்பிடி பேசாத”
சொல்லிவிட்டுச் சமையலறைக்குப் போய்விட்டார்
அவர். சந்திரிகாவை
நக்கலாகப் பார்த்தான் நரேஷ்.
“என்ன பண்ணப்போற பேபி?
போய் உங்கப்பா கிட்ட கம்ப்ளைண்ட் பண்ணப்போறியா? ஏற்கெனவே மாமாக்கும் அத்தைக்கும் சண்டை... உன்னால மறுபடியும்
அவங்க சண்டை போட்டுக்கணும்னு ஆசைப்படுறியா பேபி?”
சந்திரிகா முந்தையதினம் தந்தைக்கும் தாயாருக்கும்
நடந்த சண்டையை யோசித்துப் பார்த்தாள்.
மீண்டுமொரு சண்டை தன்னால் வரவேண்டாமென அமைதியாக இருந்துவிட தீர்மானித்தாள்
அவள்.
அந்த முடிவின் மூலம் நரேஷின் அட்டூழியம் இன்னும்
அதிகரிக்குமென பாவம் அவளுக்குத் தெரியவில்லை.
********
ஸ்கொயர் எண்டர்டெய்ன்மெண்ட்,
ஹப்ஜியோங், சியோல்...
திடுதிடுப்பென டாமெட்ரி அறைக்குள் வந்த டாமெட்ரி
மேற்பார்வையாளர் பெண்மணி அங்கிருந்த ஃப்ரிட்ஜை திறந்து பார்க்கவும் வோல்க்வாங்குக்குக்
குழப்பம்.
அவர் ஃப்ரிட்ஜை சோதனையிட்டுவிட்டுத் திரும்பியபோது
ஐஸ்க்ரீம் டப்பாக்கள் கை நிறைய இருக்க அவரது பார்வை வோல்க்வாங்கோடு சேர்ந்து அங்கிருந்த
ஏனைய இரண்டு ட்ரெயினிகளையும் சுட்டெரித்தது.
“யார் இதை வாங்கி வச்சது?”
உறுமலாக வந்தது அப்பெண்மணியின் குரல்.
வோல்க்வாங் எப்படி ஐஸ்க்ரீம் ஃப்ரிட்ஜினுள்
வந்ததென தெரியாமல் விழித்தாள்.
அப்போது மற்ற இரண்டு பெண்களும் அவளைக் கைகாட்டினர்.
“இவ சன்டே அவுட்டிங் போனப்ப
வாங்கிட்டு வந்தா... யாருக்கும் தெரியாம சாப்பிட வைச்சிருக்கா...
எங்களுக்கும் தர்றேன்னு சொன்னா”
சீனப்பெண் லிசி அபாண்டமாகச் சுமத்திய பழியால்
அதிர்ந்து போனாள் வோல்க்வாங்.
“உன்னி (அக்கா) நான் இதை வாங்கிட்டு வரல”
எவ்வளவோ மன்றாடியும் மேற்பார்வையாளர் அவள்
சொன்னதை நம்பவில்லை.
“ட்ரெய்னிங் பீரியட்ல இதெல்லாம்
சாப்பிடக்கூடாதுனு ஸ்ட்ரிக்டா சொல்லியும் ஐஸ்க்ரீம் வாங்கி ஒளிச்சு வச்சிருக்க...
ட்ரெய்னிங் அபிஷியல் கிட்ட சொல்லி உனக்குப் பனிஷ்மெண்ட் வாங்கி தர்றேன்”
என்று கத்திவிட்டுப்போனார்.
வோல்க்வாங் அந்த இருவரையும் பரிதாபமாகப் பார்த்தாள்.
இருவரும் இகழ்ச்சியாக முறுவலித்தனர். அவர்களில் தென்கொரியப்பெண்ணான
மிஞ்சோ வோல்வாங்கின் போனிடெயிலை இழுத்தாள்.
“இதெல்லாம் ஒரு மூஞ்சி...
இவ கிட்ட போய் சி.ஈ.ஓ உருகுறார்
பாரேன்” என்றாள் லிசி ஏளனமாக.
“இவங்க நாட்டுப்பொண்ணுங்க எல்லாருமே
ஆம்பளைங்களை மயக்குறதுல எக்ஸ்பர்ட்னு நான் கேள்விப்பட்டிருக்கேன்... இவளும் இந்த ட்ரெயினிங்குக்கு முன்னாடி அந்த ட்ரெயினிங் எடுத்துட்டு வந்திருப்பா
போல” இது மிஞ்சோவின் வன்மம் கொட்டும் பேச்சு.
இன்னும் அசிங்கமாக எதையும் சொல்லும் முன்னர்
டாமெட்ரியை விட்டு கண்ணீருடன் வெளியே வந்தாள் வோல்க்வாங். அவள் முதுகுக்குப் பின்னே
இருவரும் சிரிப்பது கேட்டது.
தினமும் பத்துமணி நேரம் இசைப்பயிற்சி, மொழிப்பயிற்சி, நடனப்பயிற்சி என கடினமாக உழைத்து தனது கனவை அடைய போராடி வருகிறாள்.
கே-பாப் ஐடல் பயிற்சியில் தடை செய்யப்பட்ட உணவுகள் பக்கம் அவள் தலைவைத்துக் கூட
படுப்பதில்லை. அங்கே அறிவுறுத்தப்பட்ட எந்த விதிகளையும் அவள்
மீறியதில்லை.
ஸ்கொயர் எண்டர்டெயின்மெண்டுக்குள் வந்த தினமே
இருவரின் பகையையும் சம்பாதித்துக்கொண்டாள் வோல்க்வாங். அவளுக்கு மட்டும் சி.ஈ.ஓவின் பிரத்தியெக கவனிப்பும் ஆடை அணிகலன் பரிசும் வருவதை
கண்டு பொறாமையில் பொங்கினர். அவர்கள் தான் தடை செய்யப்பட்ட உணவான
ஐஸ்க்ரீமை கொண்டு வந்து ஃப்ரிட்ஜில் வைத்திருக்க வேண்டும்.
ஒரு பக்கம் கடுமையான பயிற்சியால் மனமும் உடலும்
இளைப்பாறுதலைத் தேட மறுபுறம் உடன் தங்கியிருப்பவர்கள் எப்போது என்ன செய்து வைப்பார்களோ
என்ற பயம். இதற்கு
மத்தியில் சி.ஈ.ஓ என்பவனின் தாபப்பார்வைகள்
வேறு அவளைக் கொல்லாமல் கொன்றன.
மனம் தாங்காமல் வீட்டுக்கு அழைத்துப் பேசலாம்
என்றாலோ மொபைல் மேற்பார்வையாளரின் பொறுப்பில் இருந்தது. கே-பாப்
பயிற்சியில் இருப்பவர்கள் விருப்பப்பட்ட நேரத்தில் எல்லாம் வீட்டினருக்கு அழைத்துப்
பேசமுடியாது. அவர்களின் மொபைல் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தில்
கட்டுப்பாட்டில் இருக்கும்.
மன இறுக்கத்தைப் போக்கிக்கொள்ள மியூசிக் ரூமுக்குப்
போனாள் வோல்க்வாங்.
அங்கே யாருமில்லை என்றதும் மைக்ரோஃபோன் முன்னே
கிடந்த இருக்கையில் அமர்ந்தாள்.
‘தி ரோஸ்’ என்ற கொரியன் இசைக்குழுவின்
‘She’s in the rain’ என்ற பாடலை கண்மூடிப் பாட ஆரம்பித்தாள்.
பாடியவளின் கண்களில் கண்ணீர் நிரம்பியது. அது இமை தாண்டி கன்னங்களில்
வழிந்தது.
I'm dying inside
I wanna think that it's a lie, why, why
கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள் வோல்க்வாங். உடனே சென்று ஷி வொன்னையும்
ஹெங்பொக்கையும் பார்க்க வேண்டுமென்பது போல இருந்தது. அவர்களின்
தோளில் சாய்ந்து கதறியழவேண்டும். அழுகையினூடே பாடுவதை மட்டும்
அவள் விடவில்லை.
She's in the rain
You wanna hurt yourself, I'll stay with you
You wanna make yourself go through the pain
It's better to be held than holding on, no woah
பாடி முடித்தவள் நடனப்பயிற்சிக்கு நேரமாகவும்
அங்கிருந்து ஓடினாள்.
அங்கே அவளுக்கு முன்னே அனைவரும் குழுமியிருந்தனர்.
பயிற்சி ஆரம்பித்தது. நடன ஆசிரியர் ஜாங் யெபின்
பழகுவதற்கு இனிமையானவர், ட்ரெயினிகளில் அவருக்கென ரசிகைகள் பட்டாளம்
கூட இருந்தது. பர்பிள் பள்ளி நடன ஆசிரியை போலன்றி கடினமான அசைவுகளைப்
பொறுமையாகச் சொல்லிக்கொடுப்பார்.
தவறான அசைவுகள் ஆடினால் திட்டாமல் எப்படி அதை
சரிபடுத்த வேண்டுமென பயிற்றுவிப்பார்.
நடனப்பயிற்சி இடைவிடாமல் இரண்டுமணி நேரம் தொடர்ந்தது. மதியவுணவுக்கான இடைவேளை நேரம்
ஆரம்பித்ததும் ட்ரெயினிகள் கலைந்தனர்.
வோல்க்வாங் சாப்பிட விருப்பமின்றி நடன அறையில்
அமர்ந்துவிட்டாள்.
மனம் சோர்வாக இருக்கையில் உணவு உண்டால் என்ன? பட்டினி கிடந்தால் என்ன?
யாரோ அவளது தோளைத் தொட்டார்கள்.
“சொன்சங்நிம் (சார்)” என்றபடி எழுந்து இடைவரை குனிந்து வணக்கம் கூறினாள்.
“எதுவும் பிராப்ளமா?”
என ஆதுரமாகக் கேட்டவரிடம் இலைமறைகாயாக தனது பிரச்சனையைக் கூறினாள்.
“ஐ ஃபீல் டவுன்... ஐ நீட் டு சீ மை ஃப்ரெண்ட்ஸ் அண்ட் ஃபேமிலி”
சோர்வாகப் பதிலளித்தாள் வோல்க்வாங்.
“ஏன் இந்த ஃபீலிங் திடீர்னு
வந்துச்சு?”
“தெரியல... என் கனவைத் தேடி நான் இங்க வந்தேன்.... அதை அடையுறதுக்குள்ள
என்னை நானே இழந்துடுவேனோனு பயமா இருக்கு... என்னோட சுயத்தை இழந்து
கனவை ஜெயிச்சா அதை எப்பிடி வெற்றினு சொல்ல முடியும்? அது தோல்வி
தான?”
கண்களில் கண்ணீர் பளபளக்க கேட்டாள் வோல்க்வாங்.
அவளைக் கனிவாய் ஏறிட்டார் நடன ஆசிரியர் யெபின்.
“வெற்றிக்காக கடுமையா போராடி
தோத்தா அந்தத் தோல்வி கூட கவுரமானது... போராடாம தோல்விய ஏத்துக்கக்கூடாது
க்வாங்... உன்னால முடிஞ்சவரைக்கும் ஹார்ட்வொர்க் பண்ணு...
டோண்ட் கிவ் அப் சூன்”
யெபினின் அறிவுரை வோல்க்வாங்குக்கு அவளது தந்தையை
நினைவுபடுத்தியது. தனக்காக மட்டுமே யோசிக்கும் ஜீவன் அவர்.
அவருக்குப் பெருமை சேர்க்கத் தான் இத்தனை போராட்டம்! இதில் பாதிவழியில் ஓடிப்போனால்
அவளுக்கு மட்டுமன்றி அவள் மீது நம்பிக்கை வைத்த தந்தைக்கும் அது இழுக்கு தானே!
போராடாமல் தோல்வியை ஏற்றுக்கொள்ளக்கூடாதென
தீர்மானித்தவளாக நடன அறையிலிருந்து நம்பிக்கையோடு கிளம்பினாள் வோல்க்வாங்.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment