அத்தியாயம் 11
அத்தியாயம் 11
நாம் அனைவரும் ஒரு ‘ஜட்ஜ்மெண்டல் சொசைட்டி’யில் வாழ்ந்து வருகிறோம். நமது அன்றாட நடவடிக்கைகள் நம்மை அறிந்தவர்களாலும்
முன்பின்னறியாத நபர்களாலும் விமர்சனத்துக்குள்ளாவதை கண்டுகொள்ளாமல்
நகர்வதற்கு நாம் பழகிக்கொண்டிருக்கிறோம். ஏன் என்னைப்
பற்றி இப்படி பேசுகிறீர்கள்
என்று கேட்பதற்கான தைரியத்தை
நாம் வளர்த்துக்கொள்வதில்லை. வளர்ப்பதற்கு இந்தச்
சமுதாயம் நம்மை அனுமதிப்பதும்
இல்லை.
இப்படிக்கு சந்திரிகை
மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி, மில்லர் மெமோரியல்
லைப்ரரி...
சோர்ந்து போயிருந்த சந்தோஷை அழைத்துக்கொண்டு
கல்லூரி நூலகத்திற்கு வந்திருந்தாள் சந்திரிகா.
அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட அசைண்மெண்டுக்குத்
தேவையான புத்தகங்களைத் தேடியவாறு மிகவும் மெதுவான குரலில் சந்தோஷிடம் அவனது சோர்வுக்கான
காரணத்தைக் கேட்டாள்.
“இன்னைக்கு எங்கண்ணி நான் வச்சிருந்த
பி.டி.எஸ் ஆல்பம் கலெக்சன் எல்லாத்தையும்
தூக்கி குப்பையில வீசிட்டாங்க சந்து... நான் இல்லாத நேரத்துல
செஞ்சிருக்காங்க... இன்னைக்கு மானிங் குப்பைவண்டி வந்தப்ப அதுல
எல்லாத்தையும் போட்டுட்டாங்க... குப்பைவண்டி கிளம்புறப்ப நான்
கவனிச்சேன்... ஏன் இப்பிடிலாம் செஞ்சிங்கனு கேட்டதுக்குத் திட்டிட்டாங்க
என்னை”
சந்திரிகாவுக்கு அவனை எண்ணி பரிதாபமாக இருந்தது. பாவம்! பெற்றோரை இழந்து மூன்றாண்டுகள் அண்ணன் அண்ணியின் தயவில் வாழ்ந்து வருகிறான்.
அண்ணனுக்கும் அண்ணிக்கும் குழந்தை இல்லை.
அந்தப் பெண்மணி நினைத்திருந்தால் சந்தோஷை தனது
குழந்தையாக எண்ணி அன்பு காட்டியிருக்கலாம்.
ஆனால் மனோன்மணிக்கு அவ்வளவு பெரிய உள்ளம் இல்லையே!
தங்கள் தலைமீது சுமத்தப்பட்ட வேண்டாத சுமையாகச்
சந்தோஷை பாவித்து வெறுத்து ஒதுக்கினார்.
கணவரின் முன்னால் மட்டும் அன்பாய் பார்த்துக்கொள்வதை போலக்
காட்டிக்கொள்வார்.
தற்போது சந்தோஷின் கே-பாப் ஆர்வம் அவருக்குக் கிடைத்த
சாக்கு.
“என் பெரியம்மா பொண்ணு அன்னைக்கு
வீட்டுக்கு வந்தா... நம்ம சந்தோஷ் அந்நேரம் ரூம்ல பாட்டு போட்டு
ஆடிட்டிருந்தான்... இவன்லாம் எங்க உருப்படப்போறான்னு நக்கலா கேக்குறா...
படிக்கிற வயசுல ஆட்டம் பாட்டம்னு போனா எப்பிடிங்க இவன் முன்னேறுவான்?
நம்ம காலத்துக்கு அப்புறம் இவன் கஷ்டப்பட்டுட்டக்கூடாதுல்ல”
நைச்சியமாகப் பேசி அண்ணனின் மனதில் சந்தோஷிற்கு
எதிரான எண்ணங்களை விதைத்தாள்.
சந்தோஷ் ஊதாரி, பொறுப்பற்றவன் என்று அண்ணனின் வாயாலேயே
சொல்லவைத்தாள்.
கே-பாப் மேளாவிற்குப் போனதையும் போட்டுக்கொடுத்து திட்டு வாங்க வைத்தாள் அந்தப்
புண்ணியவதி. இப்போதோ அவனது பி.டி.எஸ் ஆல்பம் கலெக்சன் முழுவதையும் குப்பைவண்டியில் அனுப்பிவிட்டாள்.
சந்தோஷிற்கு ஆறுதல் கூறியபடி புத்தகங்களோடு
நூலகத்திலிருந்து வெளியேறினாள் சந்திரிகா.
“அப்ப கே-பாப் காம்படிசன்லயும் கலந்துக்க முடியாதாடா?”
“சான்ஸ் கம்மி தான் சந்து...
அண்ணா பெர்மிசன் குடுத்தாலும் அண்ணி ஏதாச்சும் பண்ணி என்னை வீடியோ ரெக்கார்ட்
பண்ணவிடமாட்டாங்க”
சந்திரிகா நடப்பதை நிறுத்தினாள்.
“நீ எங்க வீட்டுக்கு வந்துடு...
நான் உன்னோட வீடியோவ ரெக்கார்ட் பண்ணுறேன்”
சந்தோஷ் கொஞ்சம் தயங்கினான்.
“உங்கம்மா எதுவும் சொல்லிட்டாங்கனா
என்ன செய்யுறது?”
“ப்ச்! எங்கப்பாக்கு நம்ம ரெண்டு பேரைப் பத்தியும் நல்லா தெரியும் சந்தோஷ்...
இந்தச் சண்டே நீ தயங்காம எங்க வீட்டுக்கு வா... வீடியோ ரெக்கார்ட் பண்ணி அவங்க மெயிலுக்கு அனுப்பிட்டு அப்பிடியே எங்க வீட்டுல
சாப்பிட்டுட்டுப் போடா”
“தேங்க்ஸ் சந்து”
சொல்லும்போதே கண்ணீர் வந்துவிட்டது சந்தோஷிற்கு. அவன் முதுகில் விளையாட்டாக
அடித்தாள் சந்திரிகா.
“இதுக்குலாமா அழுவாங்க லூசு?
ஃப்ரெண்ட்ஸ் எதுக்கு இருக்காங்க? அவசரத்துக்கு
ஹெல்ப் பண்ணுறதுக்குத் தானே”
கல்லூரி முடிந்துவிட்டதால் இருவரும் அவரவர்
வீட்டுக்குக் கிளம்பினர்.
ஸ்கூட்டியில் வீட்டுக்கு வந்து சேர்ந்த சந்திரிகாவுக்கு
வழக்கமான அமைதிக்குப் பதிலாக ஆட்களின் அரவம் கேட்கவும் திகைப்பு. யார் வந்திருப்பார்கள் என்ற
கேள்வியோடு வீட்டுக்குள் நுழைந்தவள் அங்கே கண்ட காட்சியில் அதிர்ந்து செயல்பட முடியாமல்
நின்றாள்.
வீட்டின் உணவு மேஜையில் நரேஷின் தந்தை நடேசன்
அமர்ந்திருக்க அவருக்கு விருந்துபச்சாரம் செய்துகொண்டிருந்தார் சாந்தமதி. ஹால் சோபாவில் அமர்ந்து நரேஷின்
அன்னை பரமேஷ்வரி தொலைகாட்சியில் சீரியல் பார்த்துக் கமெண்டரி கொடுத்துக்கொண்டிருந்தார்.
இவர்கள் இங்கே என்ன செய்கிறார்கள்? இவர்களோடு நரேஷும் வந்திருப்பானோ?
அவளது கேள்விகளுக்கு விடையாய் நரேஷே வந்தான்.
“ஹாய் பேபி”
அவனைக் கண்டதும் எரிச்சலில் முகம் சுளித்தாள்
சந்திரிகா.
மானம் கெட்ட மனிதர்கள். தந்தை அவ்வளவு சொல்லியும்
தங்கள் வீட்டில் அமர்ந்திருக்கிறார்களே! பணத்திற்காக எந்த நிலைக்கும்
இறங்குவார்கள் போல.
“என்ன மருமவளே வாசல்ல நிக்குற?
உன்னைப் பாக்கணும்னு எம்புட்டு ஆசையா வந்திருக்கோம்? உள்ள வாம்மா”
சொந்த வீட்டிற்குள் வருவதற்கே அழைப்பு விடுத்தார்
நரேஷின் அன்னை பரமேஷ்வரி.
அன்று இதே வாய் கழுதை என்று அவளைக் கழுவி ஊற்றியது. இன்று மீண்டும் மருமகளாகி
விட்டாள்! ஒருவேளை தங்களை வைத்து அடுத்தவரை அடையாளம் காணும் குணம்
போலப் பரமேஷ்வரிக்கு. எரிச்சலாய் இருந்தது.
சந்திரிகா பொருமலுடன் உள்ளே வந்தவள் எதுவும்
பேசாமல் அவளது அறைக்குள் செல்ல எத்தனிக்க அவளைத் தடுத்தது சாந்தமதியின் அதட்டல்.
“வீட்டுக்கு வந்தவங்களை வாங்கனு
சொல்லமாட்டியா பாப்பா?”
அறை வாயிலில் நின்றவள் திரும்பி அன்னையை முறைத்தாள். பின்னர் போலிச்சிரிப்பை இதழில்
ஒட்ட வைத்துக்கொண்டாள்.
“வாங்கத்தை, வாங்க மாமா... ஊர்ல நிலம் நீச்சை யார் பொறுப்புல விட்டுட்டு
வந்திருக்கிங்க? சீக்கிரமா ஊருக்குக் கிளம்புங்க... இல்லனா ஆளில்லாத சொத்துனு எவனும் அமுக்கிடுவான்”
நக்கலாகச் சொல்லிவிட்டுத் தனது அறைக்குள் சென்றுவிட்டாள்.
அவள் அறைக்கதவை அறைந்து சாத்திய விதத்தில்
அங்கிருந்த நால்வரும் முகத்திலறைந்தாற்போல உணர்ந்தனர்.
நரேஷ் பற்களைக் கடித்தான். அவன் கோபமடைவதைக் கண்டதும்
சாந்தமதி வேகமாக அவனைச் சமாதானம் செய்ய ஆரம்பித்தார்.
“நீ ஒன்னும் கவலைப்படாத மருமவனே...
கொஞ்சம் அவளை விட்டுப் பிடிப்போம்”
“நல்லா பேசுதிய மதினி...
பாப்பாவ விட்டுப் பிடிக்கலாம், சரி தான்...
அண்ணனை என்ன சொல்லிச் சம்மதிக்க வைப்பிய?”
நரேஷின் அன்னை பரமேஷ்வரி காரியத்தில் கண்ணாய்
வினவினார்.
“ஆமா தங்கச்சி... மச்சானை எப்பிடி சம்மதிக்க வைப்பம்மா?” இது நரேஷின் தந்தை
நடேசன்.
“அவரையும் பாப்பாவையும் சம்மதிக்க
வைக்க நானாச்சு... என்னை நம்புங்க... அவ
என் மருமவனைக் கல்யாணம் பண்ணுவா... நம்ம எல்லாரும் ஒரே குடும்பமா
சந்தோசமா இருப்போம்”
“என்னமோ போம்மா... எங்க நரேஷுக்கு திருச்செந்தூர்ல மிராசுதார் வீட்டுச் சம்பந்தம் வந்துச்சு...
நூறு பவுன் நகை, ஏழு லட்சம் ரொக்கம் குடுத்து வீட்டோட
மாப்பிள்ளையா வச்சுக்கிறேன்னு சொன்னாங்க... நாங்க தான் உனக்கு
வாக்கு குடுத்துட்டோம்னு அந்தச் சம்பந்தத்தை வேண்டாம்னு சொன்னோம்”
சந்தடி சாக்கில் திருமண சந்தையில் மகனுக்கு
இருக்கும் கிராக்கியைக் கோடிட்டுக் காட்டினார் நடேசன்.
அது உண்மையில்லை என்பது சாந்தமதிக்கே தெரியும். கெத்து காட்டுகிறார்களாமென
அலட்சியமாய் எண்ணிக்கொண்டார்.
சந்திரிகாவின் கவனம் வேறு பக்கம் திரும்பினாலும்
வருமானத்திற்கு ஆபத்து! அவள் நரேஷைத் தவிர வேறொருவனை மணந்தாலும் ஆபத்து. இந்த
இரண்டுமே நடக்கவிடக்கூடாதென்றால் கொஞ்சம் ரிஸ்க் எடுத்துத் தான் ஆகவேண்டுமெனத்
தீர்மானித்தார் பேராசை பிடித்த சாந்தமதி.
பணமெனும் அரக்கனின் பாசக்கயிற்றில் சிக்கியவரின்
மூளை நல்லபடியாகவா சிந்திக்கும்?
கோணலாய் குரூரமாய் சிந்தித்து கேவலமான திட்டமொன்றை அவருக்கு அளித்தது
அந்தப் பொல்லாத மூளை.
சட்டநாதனையும் சந்திரிகாவையும் கலங்கடிக்கும்
மோசமான திட்டமொன்றை செயல்படுத்த கணவர் வேலையிலிருந்து வீட்டுக்கு வரும் நேரத்திற்காகக்
காத்திருக்க ஆரம்பித்தார் சாந்தமதி.
*******
ஸ்கொயர் எண்டர்டெய்ன்மெண்ட்,
ஹப்ஜியோங், சியோல்...
‘ப்ளாக் ஆலீவ்’ இசைக்குழுவினரின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலுக்கான படப்பிடிப்பு ஆரம்பித்துவிட்டது.
இசைக்குழுவில் இருக்கும் ஐந்து பெண்களும் தங்களின்
ஐடல் பயிற்சி அனுபவத்தையும்,
அன்றாடம் செய்யுன் பயிற்சிகள் குறித்தும் பகிர்ந்துகொள்ளும் வீடியோக்கள்
யூடியூபில் உலா வர ஆரம்பித்திருந்தன.
‘ப்ளாக் ஆலீவ்’ இசைக்குழுவினரின் டெபியூவுக்காக கே-பாப் ரசிகர்கள் காத்திருந்தனர்.
அவர்கள் என்னென்ன செய்கிறார்கள்? என்ன சாப்பிடுகிறார்கள்?
எப்படிப்பட்ட பயிற்சிகள் தரப்படுகின்றன? ஐவரில்
சர்வதேச அளவில் ரசிகர்களைக் கொள்ளை கொண்டவர் யாரென எண்ணற்ற கேள்விகளுக்கான கண்டெண்டுகளுடன்
யூடியூபில் வீடியோக்கள் வெளிவர ஆரம்பிக்க அறிமுகமாவதற்கு முன்னரே ரசிகர்கள் மத்தியில்
ஐவரின் பெயரும் பிரசித்தி பெற ஆரம்பித்தது.
அவர்களைப் போலவே ‘ஆல்பா ஒய்’ இசைக்குழுவின் ஆண் உறுப்பினர்களும் ரசிகர்களின் உள்ளத்தை யூடியூப் வீடியோக்களின்
வாயிலாகக் கவர்ந்திருந்தனர்.
இரு இசைக்குழுக்களும் அதிகாரப்பூர்வ அறிமுக
நாளுக்காகக் காத்திருந்தனர்.
முன்பு போலன்றி வோல்க்வாங்கிடம் அன்பாக நடந்துகொண்டாள்
லிசி. அவளோடு சேர்ந்து
மிஞ்சோவும் வோல்க்வாங்கை மரியாதையாக நடத்தினாள். அவளுக்கு நடந்த
அதிர்ச்சியான சம்பவத்தின்போது வோல்க்வாங் ஆதரவாக நின்றதும் ஆதுரமாகப் பேசியதும் லிசிக்குக்
கொடுத்த ஆறுதல் அவளது இந்த மாற்றத்திற்குக் காரணம்.
தாய்லாந்து பெண்ணான மிஷாவும், கனடா பெண்ணான லில்லியும் ஏற்கெனவே
வோல்க்வாங்க் மீது அன்பு கொண்டவர்கள்.
இனி ஐவரும் ஒரே குடும்பம், ஸ்கொயர் எண்டர்டெயின்மெண்டோடு
தாங்கள் போட்டிருந்த ஒப்பந்தக் காலம் முடியும் வரை ஒருவரை ஒருவர் அன்போடு அரவணைத்துக்கொள்ள
வேண்டும். தங்களுக்குள் போட்டி பொறாமை வந்துவிட்டால் அது
‘ப்ளாக் ஆலீவ்’ இசைக்குழுவின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்.
இதைத் தெள்ளத்தெளிவாகப் புரிந்துகொண்டதால்
நட்போடு பழகினர் ஐவரும். வாரயிறுதி நாட்களில் நகர்வலம் செல்லும் வ்ளாகுகள் எல்லாம் இப்போது உற்சாகமயமாகக்
காட்சியளித்தன.
சமீப நாட்களாகச் சி.ஈ.ஓவின்
தொல்லையும் இல்லாததால் வோல்க்வாங் மகிழ்ச்சியாகவே இருந்தாள் எனலாம்.
அந்த வாரயிறுதியிலும் வெளியே ஊர் சுற்ற சென்ற
ஐவரும் வயிறு பசியில் காந்தலெடுக்கவும் சப்வேயை அடைந்தனர்.
“நம்ம டெபியூ ஆனதுக்கு அப்புறம்
இந்த மாதிரி ஃப்ரீயா சுத்த முடியாதுல்ல”
உண்மை தான்! இப்போது அவர்கள் வெறும் ட்ரெயினிகள் மட்டுமே.
அவர்களின் அதிகாரப்பூர்வமான அறிமுக ஆல்பம் வந்துவிட்டால் ஸ்கொயர் எண்டர்டெயின்மெண்டின்
‘ப்ளாக் ஆலீவ்’ இசைக்குழுவினருக்கு முன்பு வழங்கப்பட்ட
பிரத்தியேக பாதுகாப்பு அவர்களுக்கும் வழங்கப்படும். விரும்புகிற
நேரத்தில் எல்லாம் ஊர் சுற்ற முடியாது.
ஏக்கத்துடன் அவர்கள் பேசிக்கொண்டிருக்க அனைவருக்கும்
சாப்பாடு ஆர்டர் செய்ய லிசி எழுந்து சென்றாள்.
கலோரி கணக்கு வைத்துச் சாலட்கள், ராப்கள் மற்றும் சாண்ட்விச்
ஆர்டர் செய்தவள் தாகசாந்திக்கு கோலா ஜீரோ என்ற பானத்தை வாங்கிக்கொண்டு மேஜையை அடைந்தாள்.
“நம்ம எல்லாருக்கும் ஃபிப்டீன்
சி.எம் சாண்ட்விச் ஆர்டர் பண்ணிருக்கேன்... இன்னைக்கு என்னோட ட்ரீட்” என்றபடி புன்னகைத்தாள்.
எதற்கு என அனைவரும் கேட்கவும் இன்று அவளது
பிறந்தநாள் என்றாள் லிசி.
உடனே மற்ற நால்வரும் உற்சாகமாக வாழ்த்தினர்.
“ஆப்போசீட்ல இருக்குற கபேல கேக்
வாங்கிப்போம்”
இரகசியக்குரலில் வோல்க்வாங் லில்லியிடம் கூறினாள்.
“அவளுக்கு என்ன ஃப்ளேவர் பிடிக்கும்னு
தெரியாதே?”
“ரெட் வெல்வெட் லிசியோட ஃபேவரைட்...
அவ ஃபுட்கோர்ட்ல சாப்பிடுறப்ப நான் கவனிச்சிருக்கேன்... இவங்க பிசியா பேசுறப்ப நம்ம கேக் வாங்கி பேக்ல வச்சிப்போம்... அவளுக்கு ஈவ்னிங் சர்ப்ரைஸ் குடுப்போம்”
இருவரும் மற்ற மூவர் அறியாவண்ணம் திட்டம் தீட்டினர்.
ஆர்டர் செய்த உணவு வந்ததும் ஆளுக்கொரு சாண்ட்விச்சை
கடித்து கோலாவை அருந்தினார்கள்.
இந்த வேளை உணவுக்கான கலோரியை கணக்கில் வைத்து
அடுத்தவேளை உணவை அருந்தவேண்டிய கட்டாயம்.
நாக்கு இன்னும் வேண்டுமெனக் கேட்டாலும் எடை
போட்டுவிடுமோ என்ற பயம் நாக்கு ருசியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது.
மற்ற மூவரும் பேச்சில் ஆழ்ந்திருந்தபோது மெதுவாக
லில்லியும் வோல்க்வாங்கும் அங்கிருந்து நழுவினார்கள்.
சப்வேக்கு எதிரே இருந்த கபேக்குள் நுழையும்
முன்னர் வோல்க்வாங் லில்லியை வெளியே நிற்கும்படி வேண்டிக்கொண்டாள்.
“அவங்க யாரும் நம்மளைத் தேடுறதுக்கு
முன்னாடி நான் வந்துடுவேன்... சப்போஸ் அவங்க பாத்துட்டாங்கனா
பக்கத்துல இருக்குற பார்க்குக்குப் போனேன்னு சொல்லிடு... இல்லனா
அவங்க கவனம் கபே பக்கம் திரும்பிடும்... அப்புறம் நம்ம சர்ப்ரைஸ்
டோட்டலா ஸ்பாயில் ஆகிடும் லில்லி”
லில்லியும் சரியென ஆமோதித்தவள் வெளியே நின்று
அங்குமிங்குமாய் போகும் வாகனங்களைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
அப்போது திடீரெனக் கபேயின் தரிப்பிடத்தில்
நின்ற ரோல்ஸ் ராய்ஸ் பேண்டம் காரிலிருந்து இறங்கினான் லீ ஹோ சூக். இறங்கியவன் பாதுகாவலர்கள்
இருவரோடு லில்லியை நோக்கி வந்தான்.
அவனை அங்கே கண்டதும் புன்னகைத்த லில்லி “அன்னியோங்காசேயோ சஜங்நிம்”
என்று இடைவரை குனிந்து வணக்கம் கூற அவனும் பதிலுக்குப் புன்னகைத்தான்.
அவனது விழிகள் வோல்க்வாங்கைத் தேடியது. அதை அறியாத லில்லி அவள் கேக்
வாங்க சென்றிருப்பதைக் குறிப்பிட்டாள்.
“இன்னைக்கு லிசியோட பர்த்டே...
நாங்க அவளுக்குக் கேக் குடுத்து சர்ப்ரைஸ் பண்ணலாம்னு இருக்கோம்”
“கேக்?”
அணிந்திருந்த குளிர்கண்ணாடியை மூக்கு வரை இழுத்து
அவன் பார்த்த பார்வையில் சடாரெனத் தங்களின் உணவுக் கட்டுப்பாடு புத்தியில் உறைக்க பேச்சைத்
திருத்தினாள் லில்லி.
“சுகர் ஃப்ரீ கேக்...
கேலரி டீடெய்ல்ஸ் கேட்டுத் தான் க்வாங் வாங்குவா”
அவள் சமாளிப்பது புரிந்தது. கடிந்துகொள்ளாமல் தனது உதவியாளனை
அழைத்தவன் இரகசியக்குரலில் ஏதோ கூறினான். பின்னர் கபேவினுள் சென்று
மறைந்தான்.
அந்த உதவியாளன் லில்லியிடம் லிசிக்காக ஸ்கொயர்
எண்டர்டெயின்மெண்டின் பார்ட்டி ஹாலில் பிறந்தநாள் கொண்டாட சி.ஈ.ஓ அனுமதி
கொடுத்துள்ளதாகக் கூறினான்.
லில்லிக்குச் சந்தோசம் தாங்கவில்லை.
“கம்ஷாஹம்னிடா”
அவள் நன்றியுரைக்கும் போதே கபேயிலிருந்து வெளியே
வந்தாள் வோல்க்வாங்.
“லோ கேலரி சுகர் ஃப்ரீ ரெட்
வெல்வெட் கேக் ஃபார் அவர் லிசி”
கேக் வைக்கப்பட்டிருந்த பெட்டியைத் தூக்கிக்
காட்டியபடி உற்சாகம் ததும்ப உரைத்தபடி துள்ளலாக ஓடிவந்தாள் அவள்.
“சீக்கிரமா இதைப் பேக்ல வை...
இல்லனா லிசி பாத்துடுவா”
அவசரமாகப் படபடத்தாள் லில்லி.
கூடவே சி.ஈ.ஓ பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு
அனுமதி அளித்த விவரத்தையும் வோல்க்வாங்கிடம் பகிர்ந்துகொண்டாள்.
“நிஜமாவா?”
வோல்க்வாங்கால் நம்பவே முடியவில்லை. எப்போதும் டாமெட்ரியில் தானே
அவர்களின் கொண்டாட்டங்கள் இருக்கும். இது என்ன புதியதாகப்
பார்ட்டி ஹாலில் கொண்டாடுவதற்கு அனுமதி கிடைத்திருக்கிறது?
இதில் ஏதேனும் சதி இருக்குமோ? சை! என் புத்தி ஏன் இப்படி போகிறது? இன்னும் சில நாட்களில்
இசைக்குழுவின் அறிமுகம் நடந்தேற இருப்பதால் இந்தச் சலுகை கிடைத்திருக்கலாம்.
எதையும் நல்ல விதமாகச் சிந்திக்க கற்றுக்கொள் க்வாங்.
தனக்குத் தானே அறிவுரை சொல்லிக்கொண்டாள் வோல்க்வாங்.
“இப்ப தான் சி.ஈ.ஓவ இங்க பாத்தேன்... நம்ம வெட்டியா
ஊர் சுத்துறோம்னு நினைச்சுடக்கூடாதுல்ல, அதான் லிசியோட பர்த்டேக்கு
கேக் வாங்க வந்தோம்னு சொன்னேன்... உடனே பி.ஏ கிட்ட பர்த்டெ செலிப்ரேசன்கு பெர்மிசன் குடுத்ததா சொல்லி அனுப்புனார்”
விளக்கத்தைக் கேட்டதும் மெய்யாகவே வோல்க்வாங்கிற்கு
சந்தோசமாக இருந்தது. நீண்டநாட்கள் கழித்து உற்சாகமான நிகழ்வொன்றில் கலந்துகொள்ளப் போகும் ஆனந்தம்.
இம்மாதிரி கொண்டாட்டங்களில் கலந்துகொண்டு எத்தனை மாதங்கள் ஆகிறது!
இருவரும் கபே வாயிலில் நிற்கும் போதே மூன்று
பெண்களும் சப்வேயிலிருந்து வெளியே வந்தார்கள்.
“இங்க என்ன பண்ணுறிங்க?”
என்று கேட்ட மிஞ்சோவின் காதில் இரகசியம் பேசினாள் லில்லி.
உடனே அவளது முகத்திலும் மகிழ்ச்சி தாண்டவமாடியது.
“இது லிசிக்குத் தெரியக்கூடாது...
சர்ப்ரைசா இருக்கணும்”
பெரிய கண்களை உருட்டி எச்சரித்தாள் வோல்க்வாங். அடுத்ததாக மிஷாவிடமும் இரகசியமாகத்
தகவல் பரிமாறப்பட்டது.
லிசியைத் தவிர மற்ற அனைவரும் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கான
அனுமதி கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் உல்லாசப்பறவைகளாக ஸ்கொயர் எண்டர்டெயின்மெண்டின்
டாமெட்ரிக்குக் கிளம்பினார்கள்.
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடைபெறப்போகிற
அனர்த்தமும் அதனால் வோல்க்வாங்கின் கே-பாப் ஐடல் கனவே கேள்விக்குறியாகப் போகிறதென்ற உண்மையும் தெரியாமல் ஐவரும் சந்தோசத்தில்
திளைத்தவாறு பேருந்தில் ஏறினார்கள்.
Comments
Post a Comment