அத்தியாயம் 11

  அத்தியாயம் 11 நாம் அனைவரும் ஒரு ‘ ஜட்ஜ்மெண்டல் சொசைட்டி ’ யில் வாழ்ந்து வருகிறோம் . நமது அன்றாட நடவடிக்கைகள் நம்மை அறிந்தவர்களாலும் முன்பின்னறியாத நபர்களாலும் விமர்சனத்துக்குள்ளாவதை கண்டுகொள்ளாமல் நகர்வதற்கு நாம் பழகிக்கொண்டிருக்கிறோம் . ஏன் என்னைப் பற்றி இப்படி பேசுகிறீர்கள் என்று கேட்பதற்கான தைரியத்தை நாம் வளர்த்துக்கொள்வதில்லை . வளர்ப்பதற்கு இந்தச் சமுதாயம் நம்மை அனுமதிப்பதும் இல்லை .                                                           இப்படிக்கு சந்திரிகை மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி , மில்லர் மெமோரியல் லைப்ரரி ... சோர்ந்து போயிருந்த சந்தோஷை அழைத்துக்கொண்டு கல்லூரி நூலகத்திற்கு வந்திருந்தாள் சந்திரிகா . அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட அசைண்மெண்டுக்குத் தேவையான புத்தகங்களைத் தேடியவாறு மிகவும் மெதுவான குரலில் சந்தோஷிடம் அவனது சோர்வுக்கான காரணத்தைக் கேட்டாள் . “ இன்னைக்கு எங்கண்ணி நான் வச்சிருந்த பி . டி . எஸ் ஆல்பம் கலெக்சன் எல்லாத்தையும் தூக்கி குப்பையில வீசிட்டாங்க சந்து ... நான் இல்லாத நேரத்துல செஞ்சிருக்காங்க ... இன்னைக்கு மானி

அத்தியாயம் 8

எந்தத் துறையில் பெண்கள் சாதித்தாலும் அவர்களைப் போகப்பொருளாக மட்டுமே காணத் தெரியும் இந்த ஆண்களுக்கு. நீங்கள் விமானம் ஓட்டலாம். ராக்கெட்டில் ஏறி செவ்வாய் கிரகம் வரை செல்லலாம். ஒரு நாட்டின் கவிழ்ந்து கிடந்த பொருளாதாரத்தை தூக்கி நிமிர்த்தலாம். அதற்கெல்லாம் காரணமான உங்கள் அறிவைப் புகழும் ஆண்கள் மிகவும் குறைவு. அவர்களின் பார்வைக்குக் கிடைக்கும் உங்கள் அங்க லாவண்யங்களைத் தவிர வேறேதையும் புகழத் தெரியாத புண்ணியாத்மாக்கள் ஆண்கள்.

                                                   இப்படிக்கு சந்திரிகை

சட்டநாதன் குடும்பத்தினரிடம் நரேஷ் சாமர்த்தியமாகப் பழகி நல்லப்பெயர் எடுத்தான். சந்திரிகாவுக்கு மட்டுமே அவனது சுயரூபம் தெரியும். அவனைப் பற்றி தந்தையிடம் சொல்லலாம் என்றாலோ சமீப நாட்களில் பெற்றோருக்கிடையே தன்னைக் காரணமாக வைத்து அடிக்கடி சண்டை வருவதால் அந்த யோசனையை செயல்படுத்தாமல் இருந்தாள்.

சாந்தமதியும் சர்வேஷும் சமூல வலைதள சம்பாத்தியம் கொடுத்த ஆடம்பரத்தையும் புகழையும் இழக்க விரும்பவில்லை. அவர்கள் நரேஷின் செய்கைகளைக் கண்டிக்காததற்கு அதுவே காரணம். சர்வேஷ் இப்போதெல்லாம் தனது வாழ்க்கையைப் பற்றி மட்டுமே யோசிக்கத் தொடங்கினான்.

இப்படி நாட்கள் கடக்க சந்திரிகாவின் பொதுத்தேர்வு முடிவுகள் வந்தது. நல்ல மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் மாணவியாகத் தேர்வாகியிருந்தாள் சந்திரிகா.

மார்க் ஷீட் வாங்குவதற்காக தூத்துக்குடிக்குக் கிளம்பியவளுடன் துணைக்குச் செல்வதாக சொல்லிக்கொண்டு வந்தான் நரேஷ். சாந்தமதியும் சர்வேஷும் அதற்கு கூட்டு.

அவனைப் பற்றி தெரிந்திருந்தால் அவனோடு செல்ல சந்திரிகாவுக்கு மனம் ஒப்பவில்லை. தன்னோடு பயணம் செய்யும் தருணத்தை வீடியோ எடுத்துதூத்துக்குடி டிராவல் வ்ளாக்என்று அவனது சேனலில் பதிவேற்ற கூட எண்ணுவான் என்பதால் அவனோடான நெருக்கத்தைத் தவிர்க்க விரும்பி தந்தையைத் தன்னோடு வரும்படி அழைத்தாள் சந்திரிகா.

சட்டநாதனும் மகளுடன் கிளம்ப, பெற்றோர் ஞாபகம் வந்துவிட்டதென பொய் சொல்லி நரேஷும் அவர்களோடு கிளம்பினான்.

சட்டநாதன் இருந்ததால் ரயில் பயணத்தில் சந்திரிகாவிடம் உரிமை எடுத்துக்கொள்ளவோ நெருக்கம் காட்டவோ அவன் முயற்சிக்கவில்லை.

இவ்வளவு ஏன், வீடியோ கூட எடுக்கவில்லை.

முத்துநகர் எக்ஸ்ப்ரஸ்சில் தூத்துக்குடியில் சென்று இறங்கியதும் பாட்டி வீட்டுக்குச் செல்லலாமென சந்திரிகா கூறும்போதே நரேஷின் தந்தை நடேசன் வந்துவிட்டார்.

வாங்க சம்பந்திபிரயாணம்லாம் சவுக்கியமா இருந்துச்சா? என்னம்மா மருமகளே, ஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்திருக்கியாமே? சந்தோசமா இருக்கு

வாய் ஓயாமல் பேசியவர் தங்கள் வீட்டிற்கு வந்தால் தான் ஆயிற்று என்று அடம்பிடிக்க வேறு வழியின்றி சட்டநாதனும் மகளை அழைத்துக்கொண்டு நரேஷின் ஊரான புதுக்கோட்டைக்குச் சென்றார்.

அங்கிருந்து தூத்துக்குடிக்கு அடிக்கடி பேருந்து வசதி உண்டு.

நரேஷின் வீட்டிற்கு வந்ததும் அவனது அன்னை பரமேஷ்வரி வாயெல்லாம் பல்லாக அவர்களை வரவேற்றார்.

வாங்கண்ணே! நல்லா இருக்கிங்களா? இருங்க ஆரத்தி எடுத்துட்டு வர்றேன்

உள்ளே ஓடிய அந்தப் பெண்மணி திரும்பி வந்தபோது கையில் ஆரத்தி தட்டு இருந்தது. இது எதற்கு என்பது போல பார்த்தாள் சந்திரிகா.

நீ நம்ம வீட்டுக்கு முதல் தடவையா வர்றல்ல பாப்பா, இந்தப் பயலை கல்யாணம் பண்ணிட்டு மருமகளா வர்றப்ப என்ன செய்யணுமோ அதை இப்பவே செஞ்சு பாக்க ஆசையா இருக்கு

இது என்ன வெட்கம்கெட்ட பேச்சு என்பது போல சந்திரிகா முகம் சுளித்தாள்.

அதுல்லாம் தேவையில்ல ஆன்ட்டி... எனக்கு ஸ்கூலுக்குப் போக டைம் ஆகுது

அவளது மறுப்பில் ஒரு வினாடி நரேஷின் தாயார் பரமேஷ்வரியின் கண்களில் குரோதம் வந்து போனது.

என் மகன் சொன்னது சரி தான்... இந்த ஆங்காரம் பிடிச்ச கழுதை இப்பவே என்னை எதிர்த்துப் பேசுறா... இருடி, நீ மருமகளா எங்க வீட்டுக்குத் தானே வரப் போற? அப்ப உனக்கு நான் யாருனு காட்டுறேன்என வன்மத்துடன் சொல்லிக்கொண்டார் மனதிற்குள்.

அவரது கணவர் நடேசன் அசட்டுச்சிரிப்போடு சட்டநாதனையும் சந்திரிகாவையும் வீட்டுக்குள் அழைத்துச் சென்றார்.

பரமு! இன்னைக்கு மருமகளுக்குப் பிடிச்ச சமையல செஞ்சு அசத்திடணும்.... ஏலேய் நரேஷு, நம்ம ஆறுமுகம் கடையில போய் ரெண்டு கிலோ கறி எடுத்துட்டு வாஎன மகனையும் மனைவியையும் விரட்டினார் மனிதர்.

அதுல்லாம் எதுக்கு சார்? நாங்க சாயங்காலம் இவ ஆச்சி வீட்டுக்குக் கிளம்பிடுவோம்... நீங்க சிரமப்படாம எப்பவும் போல சமைச்சு வைங்க போதும்என்றார் சட்டநாதன் நாசூக்காக.

அந்தக் குடும்பத்தின் விருந்தோம்பலைக் கிராமத்து மக்களின் வெள்ளந்தி குணமென சட்டநாதன் எடுத்துக்கொள்ள சந்திரிகாவுக்கோ மொத்த குடும்பமும் நாடகமாடுவதை போல தோன்றியது.

தனக்கென ஒதுக்கப்பட்ட அறைக்குள் சென்று தாழிட்டவள் பல் துலக்க குளியலறைக்குள் சென்றாள்.

அங்கே பெரிய ட்ரம்மில் தண்ணீர் வைத்திருந்தார்கள். கை வைத்து பார்த்தால் சில்லிட்டிருந்தது. அதில் பல் துலக்குவதில் பிரச்சனை இல்லை. ஆனால் குளிக்க முடியாதே!

பல் துலக்கி முகம் கழுவியவள் குளிக்க வேறு தண்ணீர் ஏற்பாடு செய்ய முடியுமாவென நரேஷின் அன்னையிடம் கேட்க சென்றாள்.

சமையலறையில பரமேஷ்வரி இல்லையெனவும் வீட்டின் பின்பக்கத்தை நோக்கி விரைந்தாள்.

அங்கே மூவரும் நின்று கொண்டிருந்தனர்.

நரேஷின் பெற்றோரின் முகம் கடுகடுவென இருந்தது.

உனக்கு வேற பொண்ணே கிடைக்கலையாலே? அவ வெள்ளைத்தோலை காட்டி மயக்கிட்டாளாக்கும்? மரியாதை தெரியாத கழுதைய தான் காதலிச்சு தொலைப்பியா?” இது பரமேஷ்வரி.

எம்மா நான் எங்க காதலிச்சேன்? கழுதைனு சொல்லுறல்ல, அந்தக் கழுதை மாசமாசம் எவ்ளோ சம்பாதிக்குது தெரியுமா? நான் மட்டும் அவளைக் கட்டிக்கிட்டா அவளை காட்டியே யூடியூப்ல ஃபேமஸ் ஆகிடுவேன்... அவளை மாதிரி சம்பாதிக்க ஆரம்பிச்சதும் அந்தக் கழுதைய கழிச்சு கட்டிட்டு ஒழுக்கமானவளா குடும்பப்பொண்ணா ஒருத்திய கட்டிக்கிறேன்

இதுக்குலாம் எத்தனை வருசம் ஆகுமோ? அதுக்குள்ள பிள்ளை கிள்ளைனு எதுவும் தொந்தரவு வந்துட்டுனா என்னய்யா செய்ய?”

வெட்கமே இல்லாமல் கேட்டு வைத்தார் அவனைப் பெற்ற மகராசனான நடேசன்.

பிள்ளை வந்தா கூட நல்லது தான்... இப்ப யூடியூப்ல புள்ளத்தாச்சிங்களை காட்டி காசு பாக்குற பிசினசும் நடக்குப்பா... முதல் மாச செக்கப்புக்குப் போனோம், எங்க பிள்ளைக்கு அந்தக் குறைபாடு, இந்தக் குறைபாடுனு இல்லாத ஒன்னை இஷ்டத்துக்கு அடிச்சு விட்டு செண்டிமெண்டா பேசி காசு பாக்கானுங்க... நீ வேற விசயம் தெரியாம இருக்கியேப்பா

 என்னமோ சொல்லுத... உன் கைக்கு காசு வந்தா தான் நம்ம சொத்து பிரச்சனை தீரும்ல... அம்புட்டு சொத்தும் வில்லங்கத்துல சிக்கி கெடக்கு பாத்துக்க... அதை மனசுல வச்சு சட்டுப்புட்டுனு சம்பாதிக்க பாரு... சம்பாதிச்சதும் அந்தக் கூத்தாடி சனியனை தலை முழுகிட்டு நம்ம ஊர்க்கார பொண்ணு ஒன்னை கட்டிக்கஅது தான் நமக்கு கௌரவம்

நாக்கா தேள்கொடுக்கா என சந்தேகப்படும் அளவுக்கு குரூரம் தொனிக்க மகனுக்குத் திட்டத்தை விளக்கினார் நடேசன்.

இவ்வளவு நேரம் தேனொழுக பேசியவர்களா இவர்கள் என சந்திரிகாவே திகைக்கும் அளவுக்கு அவளைப் பற்றி கேவலமாகப் பேசி திட்டித் தீர்த்துக்கொண்டிருந்தார்கள் மூவரும்.

சந்திரிகா அடைந்த அதிர்ச்சிக்கு அளவேயில்லை. இதற்கு மேல் இங்கே இருந்தால் அது அவமானம். விடுவிடுவென ஹாலில் இருந்த தந்தையின் முன்னே வந்து நின்றாள் அவள்.

என்னாச்சு பாப்பா? குளிக்கலையா?”

இல்லப்பா... நம்ம ஆச்சி வீட்டுக்குப் போயிடுவோம்... எனக்கு இங்க இருக்க பிடிக்கல

ஏன்டா பாப்பா? என்ன பிரச்சனை?”

போறப்ப சொல்லுறேன்பா... நான் லக்கேஜை எடுத்துட்டு வந்துடுறேன்

சட்டநாதன் மகளின் நடவடிக்கையில் உண்டான மாற்றத்தைக் கண்டு திகைத்துப் போனார். என்னவாயிற்று என்ற கேள்வியோடு தனது உடைகள் அடங்கிய பேக்கை எடுத்துக்கொண்டவர் சந்திரிகா அவளது ஷோல்டர் பேக்கோடு வரவும் நரேஷிடம் சொல்லிக்கொண்டு விடைபெற சென்றார்.

தந்தையும் மகளும் நின்ற கோலத்தைக் கண்டு நரேஷும் அவனது பெற்றோரும் துணுக்குற்றனர். ஏன் திடீரென கிளம்பிவிட்டார்கள் என்ற கேள்வியை அவர்களது புருவச்சுழிப்பில் தெரிந்துகொண்டனர் தந்தையும் மகளும்.

என்ன மாமா அதுக்குள்ள கிளம்பிட்டிங்க?” என்ற கேள்வியோடு வந்தான் நரேஷ்.

சட்டநாதன் பதிலளிக்கும் முன்னர் முந்திக்கொண்டாள் சந்திரிகா.

எங்க ஸ்கூல்ல இருந்து கால் பண்ணுனாங்க... அவசரமா வரச் சொல்லிருக்காங்க... இப்ப கிளம்புனா தான் நாங்க போய் சேர வசதியா இருக்கும்... சென்னைக்குக் கிளம்புறதுக்கு முன்னாடி இங்க வந்து சாப்பிட்டுட்டு போறோம் நரேஷ்

புன்னகை முகமாக பதிலளித்த மகள் ஏன் தன்னிடம் வேறு காரணம் கூறினாளென சட்டநாதன் ஐயம் கொண்டார்.

சந்திரிகாவின் பதில் நரேஷுக்கு நம்பிக்கை அளிக்கவில்லை. இருப்பினும் ஒரேயடியாக கட்டுப்படுத்தினால் இவள் திருமணத்தை நிறுத்திவிடுவாள், பின்னர் ஆடம்பர வாழ்க்கை குறித்த கனவுகள் சிதைந்துவிடுமென அமைதி காத்தான்.

அவனது தந்தையும் அன்னையும் சட்டநாதனை வழியனுப்பி வைப்பதை இயலாமையோடு பார்த்தான் அவன்.

சந்திரிகா தந்தையோடு பேருந்து நிறுத்தத்திற்கு வரும் வரை பேசவில்லை.

ஆச்சி வீட்டுக்குப் போனதும் சொல்லுறேன்பாஎன்று சுருக்கமாக முடித்துவிட்டாள்.

சட்டநாதனின் மாமியார் வீடு இருக்கும் குரூஸ்புரம் பகுதியை அடைந்ததும் சந்திரிகா நடந்ததை தந்தையிடம் கூறினாள்.

அவருக்குத் தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை.

என்னம்மா சொல்லுற?”

நரேஷ் என்னோட சோசியல் மீடியா பாப்புலாரிட்டிய வச்சு பணம் பாக்குறதுக்காக தான் என்னை கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறான்பா... இதை அவனே என் கிட்ட சொன்னான்

அன்றொரு நாள் கபே காபிடேயில் நடந்ததை தந்தையிடம் மறைக்காமல் கூறிவிட்டாள் சந்திரிகா. கேட்க கேட்க சட்டநாதனின் இரத்தம் கொதித்தது.

இத்தகைய கேவலமான எண்ணத்தோடு என் வீட்டில் இருந்தவனை கண்டுகொள்ள முடியாதளவுக்கு நான் முட்டாளாகிப் போனேனே! எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்திருந்தால் என் மகளை கேவலமாக பேசியிருப்பான்!

வந்த கோபத்திற்கு நரேஷ் மட்டும் எதிரில் இருந்தால் அவனைக் கொன்றிருப்பார் சட்டநாதன்.

இந்தப் பயலோட புத்தி என்னனு தெரியாம உங்கம்மாவும் அண்ணனும் இவனுக்கு ஜால்ரா தட்டுறாங்க... நீ ஒன்னும் பயப்படாத பாப்பா... இனிமே நரேஷ் நம்ம வீட்டுப்பக்கம் வரமாட்டான்... உங்கம்மாவையும் அண்ணனையும் நான் கவனிச்சிக்கிறேன்

ஆனா இதை காரணமா வச்சு அம்மா கூட சண்டை போடாதிங்கப்பா... நீங்க ஒவ்வொரு தடவை சண்டை போடுறதை பாக்கப்பவும் எனக்கு கில்டியா இருக்கு

சொல்லும் போதே கண்களில் கண்ணீர் பளபளத்தது சந்திரிகாவுக்கு.

எந்தப் பெண்ணுமே தன்னைக் காரணமாக வைத்து பெற்றோர் சண்டையிடுவதை விரும்பமாட்டாள் தானே!

நான் சண்டை போடமாட்டேன் பாப்பா... அவங்களுக்குப் புரியுற விதத்துல பேசி அவனை நம்ம வீட்டுக்கு வரவிடாம செய்யுறேன்என உறுதியளித்தார் சட்டநாதன்.

மனமோ திகுதிகுவென வேள்வித்தீயாய் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது. எப்பாடுப்பட்டேனும் மகளை நரேஷிடமிருந்து பாதுகாக்க தீர்மானித்தார் சட்டநாதன்.

********

ஸ்கொயர் எண்டர்டெயின்மெண்ட், ஹப்ஜியோங், சியோல்

மறுநாள் மியூசிக் வீடியோ படப்பிடிப்புக்காக ஆர்வத்துடன் தயாராகிக்கொண்டிருந்தனர் ட்ரெயினிகளான ஐந்து பெண்கள். அந்த ஐவரில் வோல்க்வாங்கும் ஒருத்தி.

இந்த ஐந்து பெண்கள் அடங்கிய இசைக்குழுவுக்குப்ளாக் ஆலீவ்என பெயரிடப்பட்டு அனைவரும் தீவிரப்பயிற்சியில் கடந்த மூன்று மாதங்களாக ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

டாமெட்ரியில் வோல்க்வாங்குடன் தங்கியிருந்த இரு பெண்களான லிசியும் மிஞ்சோவும் அதில் அடக்கம். இன்னுமே அவர்களுடன் சுமூகமான உறவில்லை என்றாலும் புதிதாக இசைக்குழுவில் இணைந்த இரு பெண்கள் வோல்க்வாங்கை மதித்தனர்.

வாரயிறுதியில் ஊர் சுற்றும் போதும் இளைப்பாறும் போதும் அவளைத் தங்களுக்குத் துணையாகச் சேர்த்துக்கொண்டனர். தங்களில் ஒருத்தியாக அவளுக்கு அங்கீகாரம் கொடுத்தனர்.

மூவர் இருந்த டாமெட்ரியிலிருந்து தற்போது ஐவர் இருக்கும் டாமெட்ரிக்கு இடம் மாறியிருந்தாள் வோல்க்வாங். ஒரே இசைக்குழுவில் பணியாற்றப் போகும் ஐவரும் ஒரு குடும்பமாக உணரவேண்டுமென்பதால் இந்த ஏற்பாடு.

வோல்க்வாங் தான் ஐவரில் இளையவள். எனவே மற்றவர்களை அன்போடுஉன்னி’ (அக்கா) என்றே விளிப்பாள்.

பயிற்சியின் கடுமையும், லீஹோவின் கழுகுப்பார்வையும் ஒரு புறம் அவளைச் சோர்வுறச் செய்தாலும் தனது கனவான கே-பாப் ஐடல் எனும் நிலையை மிகவும் நெருங்கிவிட்டதாக உணர்ந்தாள்.

அவளுடன் ட்ரெயினியாகச் சேர்ந்த எத்தனையோ பேர் இன்னும் எந்த இசைக்குழுவுக்கும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. ஆனால் வோல்க்வாங்ப்ளாக் ஆலீவ்இசைக்குழுவின் உறுப்பினர் ஆகிவிட்டாளே! அந்த இசைக்குழுவில் அவள் தான் இளையவள். எனவே அவளைமேக்னேஎன்று அழைப்பார்கள்..

அவர்களின் குழு எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்பது விடையறியாத வினா. ஆனால் நிச்சயம் அவர்களின் அறிமுகம் நடந்தேறும் என ஸ்கொயர் எண்டர்டெயின்மெண்ட் ஊடகங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்கள்.

அந்த சந்தோசத்தில் இதுநாள் வரை இருந்த கஷ்டங்கள் யாவும் பனி போல விலகுவதாக உணர்ந்தாள் வோல்க்வாங்.

கூடவே ஹெங்பொக்கும் ஸ்கொயர் எண்டர்டெயின்மெண்டின் ஆண்கள் இசைக்குழுவானஆல்பா ஒய் பேண்டின்உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டான்.

அவனுக்கும் பயிற்சி கடுமையாகப் போய்க்கொண்டிருந்தது. இதன் காரணமாக முன்பு போல இருவரும் சந்தித்து பேசமுடியவில்லை.

ஏனெனில் கே-பாப் இசைக்குழுவுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எதிர்பாலினருடன் சாதாரணமாகப் பேசினாலும் அவர்கள்டேட்டிங்செய்கிறார்கள் என ஊடகங்கள் திரித்து செய்தி பரப்பும் என்பதால் ஸ்கொயர் எண்டர்டெயின்மெண்ட் ஒரு இசைக்குழுவின் உறுப்பினர்கள் மற்றக் குழுவிலுள்ள எதிர்பாலினரோடு பேசிக்கொள்ளக்கூடாதென கட்டுப்பாடு விதித்திருந்தது.

வாரயிறுதி நாட்களில் இளைப்பாற வெளியே சென்றாலும் அவரவர் இசைக்குழு உறுப்பினர்களோடு தான் செல்லவேண்டும்.

ஸ்கொயர் எண்டர்டெயின்மெண்டோடு போடப்பட்ட ஒப்பந்தக்காலம் முடியும் வரை கே-பாப் இசைக்குழுவின் உறுப்பினர்களுக்குக் குடும்பம், நட்பு எல்லாமே ஏனைய உறுப்பினர்கள் தான்.

இதனால் அவர்களிடையே பொறாமை மறைந்து நட்பு மேலோங்கும் என்ற எண்ணம்.

அந்த விதியை மீறாமல் வோல்க்வாங்கும் ஹெங்பொக்கும் நடந்து கொண்டனர்.

இருபத்து நான்கு மணிநேரமும் அவளைக் கண்காணித்துக்கொண்டே இருக்கும் சி..ஓ லீ ஹோ சூக்கால் ஹெங்பொக்கின் கே-பாப் எதிர்காலம் கேள்விக்குறியாவதை வோல்க்வாங் விரும்பவில்லை.

அவனை விட்டு விலகியிருப்பதே நட்புக்குச் செய்யும் மரியாதை என்று உணர்ந்து தனது குழு உறுப்பினர்களோடு மட்டும் நட்பை வளர்த்துக்கொண்டாள்.

புதிதாக சேர்ந்த இருவரில் ஒருத்தி தாய்லாந்தை சேர்ந்தவள், பெயர் மிஷா. மற்றொருத்தியான லில்லி கனடாவில் பிறந்த கொரிய வம்சாவளி பெண்.

பழைய டாமெட்ரி பெண்களைப் போல அல்லாமல் நட்பாகப் பழகினார்கள் அந்த இருவரும். எனவே வோல்க்வாங் வெகுவிரைவில் அவர்களோடு நட்பாகிவிட்டாள்.

ஹெங்பொக்குக்கும் நல்ல தோழமை கிடைத்திருக்கும் என நம்பினாள்.

அன்றைய நடனப்பயிற்சிக்குப் பிறகு ஐவரும் டாமெட்ரியை அடைந்த போது ஐவரில் லிசியின் மொபைல் சிணுங்கியது.

இசைக்குழுவுக்காக தேர்வு செய்யப்பட்ட பின்னர் தளர்த்திக்கொள்ளப்பட்ட விதிகளில் ஒன்று ட்ரெயினிகளின் மொபைலை மேற்பார்வையாளர்கள் வசம் ஒப்படைப்பது.

ஐவரும் சுதந்திரமாக மொபைலை பயன்படுத்தலாம். அதன் மூலம் தங்களது பயிற்சி அனுபவத்தைப் படம் பிடிக்கலாம். இன்னும் இரு வாரங்களில் அவர்களுக்கான அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலுக்காக படப்பிடிப்பும் ஆரம்பித்துவிடும். அதில் அவர்களின் பயிற்சி வீடியோக்கள், வாரயிறுதியில் சுற்றிப் பார்க்கச் செல்லும் போது எடுக்கப்படும் வ்ளாகுகளை பதிவேற்றிக்கொள்ளலாம். உலகளவில் தங்கள் இசைக்குழுவுக்கு ரசிகர்படைகளை உருவாக்குவதற்காக இந்த வழிமுறையை ஸ்கொயர் எண்டர்டெயின்மெண்ட் போன்ற கே-பாப் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன.

லிசி மொபைல் இசைத்ததும் பேயறைந்தாற்போல விழித்தாள். தேகம் அச்சத்தில் நடுங்க அழுதபடி அமர்ந்தவளை அவளது தோழியான தென்கொரியப் பெண் மிஞ்சோ தேற்றினாள்.

பயப்படாத லிசி... அவன் கூப்பிட்டா நீ போகணும்னு அவசியமில்ல

அவன் சி..ஓ கிட்ட என்னைப் பத்தி தப்பா சொல்லிட்டான்னா என்னோட ஐடல் கனவு நிறைவேறாம போயிடும் மிஞ்சோ

வோல்க்வாங்கோடு சேர்ந்து லில்லியும் மிஷாவும் நடப்பதை வேடிக்கை பார்த்தனர்.

வேறென்ன செய்யமுடியும்? மற்ற இருவரும் இவர்களிடம் நெருங்குவதே இல்லை. பிரச்சனை என்னவென தெரியாமல் எப்படி தீர்வு சொல்வது?

அவன் என்னை ஸ்பான்சர் கூட தப்பான உறவுக்குக் கட்டாயப்படுத்துறான் மிஞ்சோ... என் லவ்வை குழி தோண்டி புதைச்சிட்டான்

மனமொடிந்து அழுதாள் லிசி. மனம் பொறுக்காமல் மூவரும் விசாரிக்க மிஞ்சோ நடந்ததை கூறினாள்.

ஸ்கொயர் எண்டர்டெயின்மெண்டின் ஊழியனோடு லிசிக்கு இருந்த உறவை அவள் காதலென கருத அவனோ அவளை தனது தேவைகளுக்காகப் பயன்படுத்திக்கொண்டான்.

உடல்ரீதியான தேவைகளுக்கும் பணத்தேவைகளுக்கும் அவளைக் கருவியாகப் பயன்படுத்தி ஸ்பான்சர்கள் தரும் பணத்தில் அவனும் மஞ்சள் குளித்தான்.

அப்படிப்பட்ட ஸ்பான்சரில் ஒருவன் லிசியைத் தவறான கண்ணோட்டத்தில் அணுக அவளோ மறுத்திருக்கிறாள். இதை அறிந்த அவளது காதலனான நிறுவன ஊழியன் சம்மதிக்கச் சொல்லி கட்டாயப்படுத்துகிறானாம்.

அவள் மட்டும் மறுத்தாள் என்றால் நிறுவனத்தின்டேட்டிங் தடையைமீறி தன்னைக் காதலித்ததை சி..ஓவிடம் கூறிப்ளாக் ஆலீவ்கே-பாப் குழுவிலிருந்து தகுதிநீக்கம் செய்ய வைப்பேன் என மிரட்டுகிறானாம்.

எத்தனை கடினமான பயிற்சிகள் ஆடிசன்களை எதிர்கொண்டு கிடைத்த வாய்ப்பு இது. அதை இழக்க விரும்பாமல் அதே நேரம் தவறான வழிக்குப் போகவும் விருப்பமின்றி அழுது கொண்டிருந்தாள் லிசி.

அவளுக்கு ஆறுதல் கூறிய நால்வரும் இனி அவன் அழைத்தால் செல்லாதே, பிரச்சனை வந்தால் நாங்கள் துணையாக நிற்கிறோமென உறுதியளித்தனர். வோல்க்வாங்கோ அந்த ஸ்பான்சரின் எதிர்பார்ப்பும் லீஹோவின் எதிர்பார்ப்பும் ஒன்று தானே என மனதுக்குள் குமுறிக்கொண்டாள். அவனிடம் சொன்னால் மட்டும் நிலமையைப் புரிந்துகொண்டு நிறுவன ஊழியனை கண்டிக்கவா போகிறான் என்ற நம்பிக்கையின்மை அவளுக்குள். மற்ற நால்வரிடமும் வெளிப்படையாக அதை சொல்லவில்லை.

Comments