அத்தியாயம் 3
- Get link
- X
- Other Apps
“சகல சௌகரியத்துடன் வாழும் போது கிடைக்காத அனுபவம் தனியே நின்று சவால்களை எதிர்கொள்ளும்
போது கிடைக்கிறது. வாழ்க்கையானது துணிந்து நிற்பவர்களைப்
புரட்டியெடுக்கும். பதுங்கியிருப்பவர்களுக்கு வெண்சாமரம் வீசும். வெண்சாமரத்துக்கு ஆசைப்பட்டால் அனுபவம் கிடைக்க வழியேது?
இப்படிக்கு சந்திரிகை
ஹோட்டல் அக்கார்ட்,
குரோம்பேட்டை...
ஹோட்டலின் ‘கார்டனியா’ எனும் பிரத்தியேக
பகுதியில் பஃபே முறையில் சந்திரிகாவின் பிறந்தநாள் விருந்து நடைபெற்றுக்கொண்டிருந்தது.
சக யூடியூபர்கள், கபிள் வ்ளாகர்கள்,
சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்களால் கார்டனியா பகுதி உற்சாகத்தில் மிதந்தது.
லேவண்டர் வண்ண ஆர்கன்சா சீக்வின்ஸ் பதித்த
கவுனில் அழகியாகக் காட்சியளித்தாள் சந்திரிகா. காதுகளில் முத்துக்கள் பதித்த சந்த்பலிகள் அசைந்தாடி
அவளது கன்னத்தை முத்தமிட்டுக் கொண்டிருந்தன.
பார்லர் உபயத்தால் கரும்பட்டாய் மின்னிய கூந்தலை
பீச் வண்ண நகப்பூச்சு விரல்களால் இலாவகமாக பின்னுக்குத் தள்ளியபடி அண்ணனுடன் பணிபுரியும்
பெண்ணோடு பேசிக்கொண்டிருந்தாள்.
அப்பெண்ணின் பெயர் சரிதா. சௌகார்பேட்டையைச் சேர்ந்த
மார்வாடி பெண் அவள். தாத்தா காலத்திலேயே தமிழகத்திற்கு குடிபெயர்ந்துவிட்டதால்
திருத்தமாகத் தமிழ் பேசினாள்.
“எந்தக் காலேஜ்ல யூ.ஜிக்கு அப்ளை பண்ணப்போற சந்து?”
“மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ்
தான் என்னோட சாய்ஸ் அக்கா... எம்.ஓ.பி பெஸ்ட்னு அண்ணா சொல்லுறான்... அப்பாக்கு ஸ்டெல்லா
மேரீஸ் ஓ.கே... யார் என்ன சொன்னாலும் நான்
செலக்ட் பண்ணுற காலேஜுக்குத் தான் போவேன்”
இரு பெண்களும் பேசிக்கொண்டிருக்கும் போது இடையிடையே
வந்து சரிதாவுக்கு அது வேண்டுமா இது வேண்டுமா என கேட்டு தொந்தரவு செய்தான் சர்வேஷ்.
அவர்களைக் கவனித்தபடி இதர யூடியூபர்களோடு பெருமை
பீற்றிக்கொண்டிருந்தார் சாந்தமதி.
சர்வேஷுக்குச் சரிதா மீது ஆர்வமிருப்பதைக்
கண்டுகொண்டார் அவர். கணவரை அழைத்து அவர்கள் இருவரையும் காட்டி
“ஜோடிப்பொருத்தம் நல்லா இருக்கில்லங்க...
நான் அந்தப் பொண்ணு கிட்ட பேசிப் பாக்கட்டுமா?” என்று வினவ
“சும்மா இரு சாந்தா...
ஐ.டி ஃபீல்ட்ல இருக்கிறவங்க இப்பிடி ஜோவியலா பேசிக்கிறது
வழக்கம்... நீ தேவையில்லாம சர்வேஷ் பேரைக் கெடுத்துடாத”
என அதட்டினார் சட்டநாதன்.
வந்திருந்த யூடியூபர்கள் எல்லாரும் சந்திரிகாவை
வாழ்த்தியபடி சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.
அவர்களில் பெரும்பாலானவர்கள் கபிள் வ்ளாகர்கள். சர்வேஷ் அவர்களிடம் யூடியூப்
வருமானத்தைப் பற்றி இலைமறைக்காயாக விசாரித்தான்.
அவர்கள் அனைவரும் குறிப்பிட்ட MCNல் (Mutli
Channel Network) இணைந்திருப்பதாக கூறினர். அதில்
இணைந்துவிட்டால் வெகுசீக்கிரத்தில் பிரபலமாகிவிடலாம் என்றனர்.
வீடியோ எடுப்பது, எடிட்டிங், தம்நெயில் வடிவமைப்பு என அனைத்தையும் MCN நிறுவனங்களே
பார்த்துக் கொள்வார்களாம். சில நேரங்களில் ட்ரண்டிங்கான கண்டெண்டையும்
கொடுத்து விடுவார்களாம். வெறுமெனே அதில் நடிப்பது மட்டும்தான்
கபிள் வ்ளாகர்களின் வேலை என்றார்கள்.
“ப்ரோ ஆர்வமா கேக்குறதை பாத்தா
சீக்கிரமே கல்யாணத்தை பண்ணிட்டு கபிள் வ்ளாக் போடுவிங்க போலயே” என ஒரு தம்பதி கிண்டல் செய்யவும், சர்வேஷின் மனதில் பேராசை
பேரலையாய் எழுந்தது.
தங்கையிடம் பேசிக்கொண்டிருந்த சரிதாவைப் பார்த்தான். அவனும் அவளும் இரண்டாண்டுகளாக
காதலிக்கிறார்கள். சரிதா அழகி. அவளை மணந்தால்
யூடியூபில் சம்பாதிக்கலாம். ஐ.டி வேலை போல
பிக்கல் பிடுங்கல் இருக்காது. வீட்டில் அன்றாடம் நடப்பதை வ்ளாக்
எடுத்து போட்டு சொகுசாகச் சம்பாதிக்கலாமே என எண்ணினான் அவன்.
சரிதாவிடம் தனது ஐடியாவைக் கூற அவளுமே சம்மதித்தாள். அவளுக்குப் பணத்தை விட யூடியூபர்
என்பதால் வரும் புகழின்மீது கண்.
வந்திருந்தவர்களில் பெரும்பான்மையான கபிள்
வ்ளாகர்கள் சென்னையின் பிரபல கல்லூரிகளில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றுவதற்கு அழைக்கப்பட்டதை
பெருமையாகக் கூறியதில் அவளுக்கும் ஆசை வந்துவிட்டது.
சர்வேஷின் குடும்பம் ஏற்கெனவே யூடியூபில் பிரபலம்
ஆகிவிட்டார்கள். அவர்கள் குடும்பத்தில் சீக்கிரம் உறுப்பினராகிவிட்டால் நாமும் பிரபலமாகிவிடலாம்
என கணக்குப் போட்டாள் அவள்.
சர்வேஷும் அவனது அன்னையும் தனியே போய் பேசிக்கொண்டிருந்ததை
அவள் கவனித்தாள். என்ன பேசுகிறார்கள் என அவள் யோசிக்கும்போதே திராவிட நிறத்தில் நெடியவன் ஒருவன்
கார்டனியாவுக்குள் பிரவேசித்தான்.
அவன் கையில் சிவப்புரோஜாக்கள் அடங்கிய மலர்க்கொத்து
அமர்ந்திருந்தது. வந்தவன் நேரே சந்திரிகாவிடம் சென்று மலர்க்கொத்தை நீட்டினான்.
அவன் யாரென புரியாமல் அவள் விழிக்கையில் புன்னகையோடு “ஹேப்பி பர்த்டே மை லவ்”
என வாழ்த்தினான்.
“மை லவ்வா?”
சந்திரிகா அதிர்ந்தாள்.
“யார் இவன்?”
சட்டநாதனின் வதனம் சினம் கொள்ள ஓடோடி வந்தனர்
சாந்தமதியும் சர்வேஷும்.
“வாங்க வாங்க மாப்பிள்ளை”
சாந்தமதியும் சர்வேஷும் அந்த நெடியவனை முப்பத்திரண்டு
பற்களும் மின்ன வரவேற்கவும்,
சட்டநாதனும் சந்திரிகாவும் மாப்பிள்ளையா என அதிர்ந்தனர்.
சட்டநாதன் சீற்றத்துடன் மனைவியைப் பார்வையால்
எரித்தார்.
“எல்லாத்தையும் வீட்டுல போய்
சொல்லுறேன்ங்க... கொஞ்சம் பொறுமையா இருங்க” அவரது காதில் கிசுகிசுத்தார் சாந்தமதி.
சந்திரிகாவோ அந்த நெடியவனின் மையல் பார்வையில்
முகம் சுளித்தாள்.
அவளருகே வந்த சர்வேஷ் அவனைத் தங்கைக்கு அறிமுகம்
செய்து வைத்தான்.
“பாப்பா இவர் நரேஷ்...
அம்மாவோட தூரத்துச் சொந்தம்... அம்மா உன்னை இவருக்குப்
பேசி முடிச்சிருக்காங்க”
சிரித்தபடியே தங்கையின் மனதில் அணுகுண்டு தாக்குதல்
நடத்தினான் சர்வேஷ்.
“அண்ணா... இதை பத்தி... எப்ப...” சந்திரிகா
பேச வார்த்தை வராமல் தத்தளித்தாள்.
அந்த நரேஷோ அவளை உரிமையோடு தோளணைத்தான்.
வெடுக்கென விலக முயன்றவளை இறுக்கமாக அணைத்தவன் “உனக்குப் புரியுற மாதிரி எல்லாத்தையும்
எக்ஸ்ப்ளெய்ன் பண்ணுறேன் பேபி... நம்ம தனியா போகலாமா?”
என்று கேட்டவாறு தோளில் இருந்த கையை இடைக்கு மாற்றி அவளைத் தன்னோடு இழுத்துச்
சென்றான்.
சட்டநாதனின் பார்வை மீண்டும் சாந்தமதியைச்
சுட்டது. வந்திருந்த
யூடியூபர்களோ “நீங்க கபிள் வ்ளாகர் ஆகுறதுக்கு முன்னாடி சந்து
சிஸ்டர் ஆகிடுவாங்க போலயே” என்று கிண்டல் செய்தனர்.
சர்வேஷ் மனதுக்குள் குதூகலித்தான்.
அதே நேரம் சந்திரிகாவைத் தனியே அழைத்துச் சென்ற
நரேஷோ அவளது இடையில் வைத்த கையை அகற்றாமல் லஜ்ஜையின்றி அவளை அணுவணுவாக ரசித்தான்.
“எக்ஸ்யூஸ் மீ! கொஞ்சம் கையை எடுக்கிறிங்களா?”
அவளது சீற்றத்தை பாம்பின் சீற்றமாகக் கருதாமல்
பூனைக்குட்டியின் சீறலாக கருதி ரசித்தான் நரேஷ்.
“யூ ஆர் ப்ரிட்டி பேபி”
குழைந்தது அவனது குரல்.
“ஷட்டப்”
வெடித்தபடி அவனிடமிருந்து விலகினாள் சந்திரிகா.
“என்னாச்சு பேபி? நான் உன்னோட ஃபியான்ஸ்... ஏன் விலகுற?”
“எனக்கு உங்களைப் பிடிக்கலைங்க...
அம்மா என் கிட்ட கேக்காம கல்யாணம் பேசி முடிச்சிருக்காங்க...
ப்ளீஸ் என்னை டிஸ்டர்ப் பண்ணாதிங்க”
கரம் குவித்து மன்னிப்பு வேண்டினாள் சந்திரிகா.
ஆனால் நரேஷோ வில்லத்தனமாகச் சிரித்தான்.
“எப்பிடி எப்பிடி? உனக்குத் தெரியாம பேசி முடிச்சாங்களா? பேபி, இந்தக் கதைய வேற எவனாச்சும் இளிச்சவாயன் கிட்ட சொல்லு... ரெண்டு வருசமா உன்னோட டிக்டாக் வீடியோஸ், ரீல்ஸ் வீடியோஸ்
பாத்து பைத்தியமாகி நிக்கிறேன் நானு... போன மாசம் அத்தை திருச்செந்தூருக்கு
சர்வேஷ் மச்சான் கூட வந்தப்ப என் ஃபேமிலி கிட்ட பேசுனதை வச்சு நீ எனக்குச் சொந்தக்காரி
அதுவும் முறைப்பொண்ணுனு தெரிஞ்சிக்கிட்டேன்... இதுக்கு மேல ஏன்
யோசிக்கணும்னு அப்பவே அத்தை கிட்ட உன்னைக் கல்யாணம் பண்ணிக் குடுக்க கேட்டுச் சம்மதமும்
வாங்கிட்டேன் பேபி... இனிமே நீ எனக்குத் தான் சொந்தம்”
இறுமாப்பாக நரேஷ் சொல்லிக்கொண்டே போக, சந்திரிகாவின் விழிகளில் கண்ணீர்
கோர்க்க ஆரம்பித்தது.
********
ஸ்கொயர் எண்டர்டெய்ன்மெண்ட்,
ஹப்ஜியோங், சியோல்...
ஸ்கொயர் எண்டர்டெயின்மெண்டின் இரண்டாம் கட்ட
ஆடிசனில் தேர்வான ஐம்பது ட்ரெயினிகளில் வோல்க்வாங்கும் அடக்கம்.
ஆடிசனில் தேர்வான விவரத்தை சொன்னது போலவே மின்னஞ்சலில்
அனுப்பியிருந்தார்கள். ஸ்கொயர் எண்டர்டெயின்மெண்டின் டாமெட்ரியில் அவளுக்குத் தங்குமிடம் ஒதுக்கப்பட்டதையும்
குறிப்பிட்டிருந்தார்கள்.
மின்னஞ்சல் வந்த நாளிலிருந்து மூன்று நாட்களில்
அவள் ஸ்கொயர் எண்டர்டெயின்மெண்டுக்கு உடமையோடு குடிபெயர வேண்டுமென கட்டளையிட்டிருந்தார்கள்.
அந்த மின்னஞ்சலைப் பார்த்ததும் வோல்க்வாங்கின்
கண்களில் கண்ணீர் கோர்த்தது.
எத்தனை மாத கனவு இது! இதற்காக எவ்வளவு தடைகள்,
சோதனைகள், போராட்டங்கள்!
பயிற்சிக்காலத்தில் எவ்வளவு மனம் நொந்திருப்பாள்? கடுமையான நடனப்பயிற்சியால்
உடலின் ஒவ்வொரு செல்லும் ஓய்வுக்கு ஏங்கினாலும் விடாமல் பயிற்சி செய்த பொழுதுகள்தானே
இந்த வாய்ப்பைப் பரிசாக அளித்திருக்கிறது.
இந்தச் சந்தோசத்தைப் பகிர்ந்துகொள்ள தோழி ஷி
வொன் அவளுடன் இல்லை. அவள் பர்பிள் பயிற்சிப்பள்ளியை விட்டு விலகி அன்றோடு ஒரு வாரம் கடந்துவிட்டிருந்தது.
ஷி வொன்னுக்கு நடன அசைவுகள் சரியாக வராததால்
நடன ஆசிரியை கன்னாபின்னாவென திட்டிவிட்டார்.
“நீயெல்லாம் கே-பாப் ஐடலுக்கு லாயக்கு இல்லாதவ... நீ இங்க வரலனு யார்
அழுதாங்க? இந்த ட்ரெய்னிங் ஸ்கூலோட பாத்ரூமை க்ளீன் பண்ணுறதுக்கான
தகுதி கூட உனக்கு இல்ல... உன்னை ஸ்கொயர் எண்டர்டெயின்மெண்டோட
ஆடிசனுக்கு நான் அனுப்பவிடமாட்டேன்... அப்பிடியே நீ போனாலும்
ஆடிசன்ல செலக்ட் ஆக மாட்ட”
அவரது பேச்சைக் கேட்டு இதர ட்ரெயினிகள் சிரிக்கவும்
அவமானம் தாங்காமல் அன்றே பர்பிள் பயிற்சி பள்ளியை விட்டு வெளியெறினாள் அவள்.
வாரயிறுதியில் வோல்க்வோங்கும் ஹெங்பொக்கும்
வழக்கமாகச் செல்லும் கன்வீனியன்ஸ் ஸ்டோரில் ஷி வொன் விற்பனை பெண்ணாக வேலை செய்வதை பார்த்து
இருவரும் கண்ணீர் விட்டனர்.
“அழாதிங்க... என்னால ஐடல் ஆக முடியலனா என்ன? நீங்க ரெண்டு பேரும் இருக்கிங்கல்ல...
நீங்க ரொம்ப கஷ்டப்பட்டு இந்த ஃபீல்டுக்குள்ள வந்திருக்கிங்க...
முயற்சிய கைவிட்டுடாதிங்க”
கண்ணீர் மல்க அவர்களுக்கு விடைகொடுத்து அனுப்பிவைத்தாள்
ஷி வொன்.
அவள் சொன்னதை மனதில் நிறுத்திக்கொண்டு ஸ்கொயர்
எண்டர்டெயின்மெண்டை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கினாள் வோல்க்வாங்.
ஸ்கொயர் எண்டர்டெயின்மெண்டில் இறங்கியதும்
ட்ரெயினிகள் தங்கக்கூடிய டாமெட்ரிக்கு அழைத்துப்போனார் ஊழியர் ஒருவர். அவள் தங்கவேண்டிய அறையில்
இன்னும் இரண்டு பெண்கள் தங்கியிருந்தனர்.
வோல்க்வாங்கைப் பார்த்ததும் புன்னகைத்தனர்.
அவளும் சிரிக்க தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டனர்.
ஒருத்தி சீனப்பெண், மற்றொருத்தி தென்கொரியாவைச்
சேர்ந்தவள்.
சீனப்பெண் தன்னை லிசி என அறிமுகப்படுத்திக்கொண்டாள். தென்கொரிய பெண்ணின் பெயர்
மிஞ்சோ.
ஸ்கொயர் எண்டர்டெயின்மெண்டின் இரண்டாவது தளத்தில்
கபடேரியாவும், ரெஸ்ட்ராண்டும் இருந்தன. பேஸ்மெண்டில் பொழுதுபோக்கு மற்றும்
விளையாட்டுக்கான வசதிகள் அந்நிறுவனத்தின் ஊழியர்களுக்காகவும், அதில் ஒப்பந்தமாகியுள்ள ஐடல்கள் மற்றும் நடிகர்களுக்காகவும் செய்யப்பட்டிருந்தன.
ஆடிட்டோரியம், நடனப்பயிற்சிக்கான ஏழு விஸ்தாரமான
அறைகள், ஏழு ரெக்கார்டிங் அறைகள், முப்பது
இசையமைப்பு அறைகள் என அங்கே இல்லாத வசதிகளே இல்லை.
அனைத்து அறைகளும் சவுண்ட் ப்ரூஃப் என்பது கூடுதல்
சிறப்பு. பதினான்கு
தளங்களில் ஐந்து அண்டர்கிரவுண்டிலும், ஒன்பது தரைக்கு மேலும்
கட்டப்பட்டுள்ளன.
உள்ளே நுழைந்ததும் இருக்கும் தரைத்தளம் முழுவதும்
ஸ்கொயர் எண்டர்டெயிண்மெண்டில் ஒப்பந்தமாகியுள்ள கே-பாப் ஐடல்களின் ரசிகர்களுக்கானது. பனிகாலத்தில் ஐடல்களைப் பார்க்க வரும் ரசிகர்கள் சாலையில் குளிரில் வாடுவதைப்
பொறுக்காமல் சி.ஈ.ஓ செய்த ஏற்பாடுதான் முழு
தளத்தையும் ரசிகர்களுக்காக ஒதுக்கியது.
அந்த தளத்தில் அவர்கள் ஐடல்களைச் சந்தித்துப்
பேசும் வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
இவை அனைத்தையும் அந்த இரண்டு பெண்களும் விளக்கிக்கொண்டிருந்த
போது நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் வந்தார்.
வந்தவர் வோல்க்வாங்கை சி.ஈ.ஓ அழைப்பதாக
கூறவும், மற்ற இருவர் முகத்திலும் பொறாமையின் சாயல்.
வோல்க்வாங்கால் அவர் கூறியதை நம்ப முடியவில்லை. சி.ஈ.ஓ எதற்கு தன்னைப் பார்க்கவேண்டும்?
குழப்பத்துடன் சீ.ஈ.ஓவின்
அலுவலக அறை அமைந்திருக்கும் தளத்தை நோக்கி அந்த ஊழியரோடு நடந்தாள்.
மின் தூக்கியின் உதவியால் பதினான்காவது தளத்தை
அடைந்தவள் சி.ஈ.ஓவின் அறைக்குள் நுழைந்தாள்.
அங்கே நீளமான கண்ணாடி மேஜையின் பின்னே கிடந்த
சுழல் நாற்காலியில் அமர்ந்திருந்தான்(ர்) சி.ஈ.ஓ.
நெடுநெடு உயரம். கொரியர்களுக்கே உரித்தான டபுள்
ஐலிட் கண்கள் – அவற்றில் கூர்மை சற்று அதிகம். மற்ற கொரிய ஆண்களைப் போல சரும பாதுகாப்பு மற்றும் மேக்கப் உபயத்தால் பளபளக்கும்
வெண்ணிற சருமம். சிவந்த இதழ்கள். ஜெல் உபயோகத்தால்
அடங்கி நின்ற கருமை வண்ண சிகை – இந்த வர்ணனைகளுக்குச் சொந்தக்காரன்
ஸ்கொயர் எண்டர்டெயின்மெண்டின் சி.ஈ.ஓ லீ
ஹோ சூக். சுருக்கமாக லீஹோ. வயது முப்பதைத்
தொட்டுவிட்டது.
அறைக்குள் வந்த வோல்க்வாங்கை அவனது கண்கள்
அளவிட்டது.
வந்தவளோ இடை வரை குனிந்து “அன்னியோங்காசேயோ சஜங்நிம்
(வணக்கம் சி.ஈ.ஓ)”
என்றாள் மரியாதைநிமித்தம்.
அவளுக்கு அமரும்படி இருக்கையைக் காட்டினான்
லீஹோ.
வோல்க்வாங் அமரத் தயங்கவும் எழுந்தவன், அணிந்திருந்த
ப்ளேசரை இழுத்துவிட்டபடி அவளை நெருங்கினான்.
வோல்க்வாங்கின் தேகத்தில் பரபரப்பும் நடுக்கமும்
விரவிப் பரவியது. பயந்து சில அடிகள் பின்னோக்கி வைத்தாள்.
அவளை இடிப்பது போல வந்து நின்றவன் “ஏன் விலகிப்போற? கிட்ட வா” என்றான் ஹங்குல் மொழியில்.
அவள் மருளவும் “யப்பயோ (பியூட்டிஃபுல்)” என வாய்க்குள் முணுமுணுத்தான்.
அவளது மருட்சி அவனுக்குப் பிடித்திருந்தது.
மானாய் மருண்ட விழிகளோடு உதட்டை அவள் கடிக்கவும்
லீஹோவின் கண்கள் அவளது செவ்விதழில் படிந்தது.
“ஷால் ஐ கிஸ் யூ?”
அவளது விழிகள் விரிந்ததற்கு காரணம் லீஹோவின்
திருத்தமான ஆங்கில உச்சரிப்பா?
அல்லது அவன் உச்சரித்த வார்த்தைகளின் அர்த்தமா?
பயத்தோடு எச்சிலை விழுங்கிய வோல்க்வாங் பட்டென
கரம் குவித்தாள்.
“நான் பெரிய கனவோட இங்க வந்திருக்கேன்...
நீங்க என் கிட்ட இப்பிடி பிஹேவ் பண்ணுறது தப்பு”
பக்கென நகைத்தான் அவன்.
“என்ன பெரிய கனவு? ஐடல் ஆகுறது அவ்ளோ ஈசினு நினைச்சியா? அதுக்கு நீ ரொம்ப
கஷ்டப்படணும்... இந்த அழகான உடம்பு அந்தக் கஷ்டத்தைத் தாங்குமானு
தெரியலையே”
சொன்னபடியே அவளுடலின் வரிவடிவை வரைந்து காட்டியது
லீஹோவின் ஆட்காட்டிவிரல்.
வோல்க்வாங் தேம்பத் துவங்கினாள். அவளது அழுகையில் அவனுக்கு
எரிச்சலானது.
“ஸ்டாப் இட்... டோண்ட் க்ரை... உன்னோட ஆடிசனை லைவா பாத்த நாள்ல இருந்து
நான் நானா இல்ல... ஐ நீட் யூ”
மனதில் இருப்பதை வெளிப்படையாக லீஹோ உரைத்தான்.
அவனது பேச்சு கட்டளையாக ஒலிக்கவும் வோல்க்வாங்
இடிந்து போனாள்.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment