அத்தியாயம் 5
- Get link
- X
- Other Apps
ஒரு ஆணைக் காணும் போது பெண்ணவளின் தேகம் வெட்கத்தால் நடுங்கவேண்டும்,
பயத்தால் அல்ல. அவனது தீண்டல் மயிலிறகின் வருடலாய்
சுகமளிக்கவேண்டும், கம்பளிப்பூச்சி ஊர்வதைப் போன்ற அருவருப்பைத் தருவதல்ல. அவனது நெருக்கம் கொடுக்கும் இதமானது பாதுகாப்பைத் தரவேண்டும், காமாந்தக உணர்வுகளால் வரும் அசூயையைத் தருவதல்ல”
இப்படிக்கு சந்திரிகை
சட்டநாதனும் சாந்தமதியும் கடுமையான வாக்குவாதத்தில்
ஈடுபட்டிருந்தனர்.
சந்திரிகாவை வைத்து ப்ராங்க் பண்ணுவதாக எடுத்த
வீடியோவை நரேஷ் அவனது யூடியூப் சேனலில் பதிவேற்றி அது ஒரு இலட்சம் பார்வைகளைக் கடந்துவிட்டது.
கமெண்ட்களில் இருவரும் காதலிக்கிறார்களா? லிவின் உறவா? என கேள்விகள் தாறுமாறாக வந்துவிட சந்திரிகா கலங்கிப்போனாள்.
தந்தையிடம் சொல்லி அழுதாள் அவள். மகளின் கண்ணீரைப் பார்த்துவிட்டு
எந்த தகப்பன் சும்மா இருப்பார்?
நரேஷ் எங்கே என தேடியவர் சாந்தமதி எதிர்ப்படவும்
அவரைத் திட்டித் தீர்க்க ஆரம்பித்தார்.
“ஊர்ல இல்லாத மாப்பிள்ளைனு ஒருத்தனைக்
கொண்டு வந்து வயசுப்பிள்ளை இருக்குற வீட்டுல தங்க வைக்கிற அநியாயம் எங்கடி நடக்கும்?
நானும் போனா போகுதுனு பாத்தா அவன் லிமிட்டை தாண்டி நடந்துக்கிறான்...
நம்ம சொந்தக்காரங்க பாத்தா என்ன நினைப்பாங்க? வீடியோவ
பாருடி, என் மகள் மானம் கப்பலேறுது”
சந்திரிகா வெளியே நின்று அழுது கொண்டிருந்தாள்.
சாந்தமதி அதை அறியாமல் வார்த்தைகளை சிதறிடித்தார்.
“இப்ப தான் உங்க பொண்ணு மானம்
போகுதாக்கும்? படிக்கிற வயசுல டிக்டாக்ல வீடியோ போட்டாளே,
அப்பவே அது போயிடுச்சு... கமெண்ட்ல ஒவ்வொருத்தனும்
கேக்கிற கேள்விக்கு அப்பவே நம்ம குடும்பத்தோட தூக்குல தொங்கிருக்கணும்... நம்ம என்ன செத்தா போயிட்டோம்? அவளும் டிக்டாக்ல இருந்து
இன்ஸ்டாக்ராம், யூடியூப்னு காசு சம்பாதிக்க ஆரம்பிச்சிட்டா...
காசு வருதுனதும் நம்ம அவளைத் தடுக்கல... என் மனசுல
ஒரு ஓரத்துல நம்ம பிள்ளைய எவன் கட்டிப்பான்னு பயம் வரும்ங்க... பொட்டப்பிள்ளை காசுல செழிப்பா வாழுறோம், அதுக்காக அவளைக்
கட்டிக்குடுக்காம வீட்டோட வச்சிக்க முடியுமா? நான் ஊர்ப்பக்கம்
போனப்ப என் கூடப்பிறந்த அக்காவே உன் மகளுக்குக் கல்யாணம் ஆன மாதிரி தான்னு வழிச்சம்
காட்டுச்சு... என் வயிறு எரிஞ்சது எனக்குத் தான் தெரியும்...
இந்தப் பயலை தவிர வேற எவனும் நம்ம பிள்ளைய கட்டிக்கமாட்டான்...
அப்பிடி கட்டிக்கிட்டாலும் அவ சம்பாதிக்கிற காசுக்காக தான் கட்டிப்பான்...
என் மகள் பணப்பிசாசு மாதிரி ஒருத்தன் கூட குடும்பம் நடத்தி கஷ்டப்படணுமா?
சொல்லுங்க”
சாந்தமதியின் பேச்சில் சட்டநாதனின் குரல் தணிந்தது. மகளுக்குப் பிடித்த எதையும்
அவர் தடுத்ததில்லை. மற்றபடி பணத்தேவைக்காக ஒன்றும் அவர் சந்திரிகாவை
ரீல்ஸ் செய்ய அனுமதிக்கவில்லை. மகள் அவளிடம் திறமை இருப்பதாக
நினைக்கிறாள், அதை வெளிக்காட்டும் ஊடகமாக இன்ஸ்டாக்ராமையும் யூடியூபையும்
கருதுவதால் மட்டுமே அனுமதித்தார்.
சந்திரிகாவும் பிரபலமடைய வேண்டுமென்பதற்காக
ஆபாசமான ரீல்ஸ்களையோ, ஆடைக்குறைவாக அணிந்து அருவருப்பூட்டும் விதமான ரீல்ஸ்களையோ போடுவதில்லை.
பெரும்பாலும் நகைச்சுவை மற்றும் நடனம் சார்ந்த ரீல்ஸ்கள் மட்டுமே.
அதிலும் சமீப காலமாக அவளது ரீல்ஸ் மற்றும் யூடியூப் வீடியோக்களில் பெற்றோரும்
சகோதரனும் தான் கருப்பொருட்கள் என்பதால் வரம்பு மீறிய கண்டெண்ட்கள் எதுவும் அவளது சேனலிலோ
இன்ஸ்டாக்ராம் பக்கத்திலோ இருக்காது.
சில ரீல்ஸ் பிரபலங்களைப் போல அவளுக்குச் சினிமா
கனவு எதுவுமில்லை. ஆனால் ஊடகங்களில் பிரபலமாகிவிட்டாலே குடும்பவாழ்க்கைக்குத் தகுதியற்றவளாக ஒழுக்கமற்றவளாகப்
பெண்களைச் சித்தரிக்கும் சமூகம் சந்திரிகாவையும் அப்படி தானே பார்க்கும் என்ற நிதர்சனத்தை
மறந்துவிட்டார் அந்தப் பாசக்கார தந்தை.
இப்போது முகத்திலடித்தாற்போல மனையாள் அதை விளக்கவும்
உடைந்துபோனார் மனிதர். அவரை அமைதியாக்கிவிட்ட கர்வத்தில் வெற்றிப்புன்னகை பூத்தார் சாந்தமதி.
நரேஷும் சந்திரிகாவின் சமூகவலைதள பிரபலத்துவத்துக்காகவும்
பணத்துக்காகவும் தான் அவளை மணக்க ஆவலாய் இருக்கிறான் என அறியாதவரா அவர்!
சொல்லப்போனால் மகளின் சம்பாத்தியத்தில் சொகுசாக
கார் வாங்கி இதோ சொந்த கிராமத்தில் புதிய வீடு கட்டுவதற்கான பூமிபூஜைக்கும் வேலை நடக்கிறது. எல்லாம் சந்திரிகாவின் யூடியூப்
வருமானத்தை நம்பி தானே ஆரம்பித்திருக்கிறார்கள்.
அவளுக்குத் திருமணமாகி வேறு வீட்டுக்குப் போய்விட்டால்
இந்தச் சொகுசு வாழ்க்கைக்கு வழியேது?
சர்வேஷ் சரிதாவைத் திருமணம் செய்து யூடியூப் சேனல் ஆரம்பிப்பான் தான்.
ஆனால் மகளைப் போல் அவனால் சீக்கிரம் பிரபலமாகாவிட்டால் என்னவாகும்?
எனவே தான் சில நிபந்தனைகளுக்குட்பட்டு நரேஷை
மருமகனாக்க சம்மதித்திருந்தார் சாந்தமதி.
மகள் அவன் மீது ஆர்வம் காட்டவேண்டுமென தங்கள்
வீட்டில் நரேஷ் தங்கிக்கொள்ளவும் அனுமதித்தார். அவன் சந்திரிகாவிடம் அப்படி இப்படி நடந்துகொள்வதை
கூட வயதுக்கோளாறு என்று பெரிதாக கருதவில்லை அவர்.
சமூக வலைதளத்தில் கிடைக்கும் பிரபலத்துவமும், பணமும் ஒரு தாயின் மனதை எந்தளவுக்கு
மோசமானதாக மாற்றும் என்பதற்கு உதாரணமாகிப்போன சாந்தமதி இன்னும் கணவர் மற்றும் மகளிடம்
தனது சுயரூபத்தைக் காட்டவில்லை.
சந்திரிகா அன்னையின் வார்த்தைகளை ஒன்றுவிடாமல்
கேட்டுவிட்டு தனது அறைக்குள் சென்று கதவை அடைத்துக்கொண்டாள். மனம் கொந்தளித்தது.
கொந்தளிப்பின் அடையாளமாக கண்கள் கண்ணீரைப் பொழிந்து தள்ளியது.
அரைமணிநேர அழுகைக்கு பிறகு மனதைச் சமாதானப்படுத்திக்கொண்டாள்.
நரேஷின் நோக்கம் என்னவென அவனிடமே கேட்டுத்
தெரிந்துகொள்ளவேண்டுமென தோன்றியது.
ஏன் அவனைத் தவறாக நினைக்கவேண்டும்? மணமுடிக்க எண்ணுபவன்
தன்னிடம் உரிமையாகப் பழக நினைக்கிறானோ என்னவோ? அவனிடம் தனது கனவுகள்
மற்றும் ஆசைகளைப் பற்றி சொன்னால் புரிந்துகொள்வான் என்ற நம்பிக்கை பிறந்தது.
வெளியே நரேஷின் குரல் கேட்கவும் கதவைத் திறந்தாள்.
அப்போது தான் சர்வேஷுடன் எங்கோ போய்விட்டு
வீடு திரும்பியிருந்தான். சந்திரிகாவைப் பார்த்ததும் புன்னகைத்தான்.
“நீங்க ஃப்ரீயா இருக்கிங்களா?”
என்று கேட்டவளிடம் ஆவலாய் வந்தான்.
“நான் எப்பவும் ஃப்ரீ தான்...
என்ன விசயம் பேபி?” என குழைந்தான்.
“கொஞ்சம் அவுட்டிங் போகலாமா?”
அவள் முதல் முறையாக அவனிடம் வந்து பேசுகிறாள். வெளியே செல்லலாமா என கேட்கிறாள்.
இந்த வாய்ப்பைத் தவறவிட நரேஷ் என்ன முட்டாளா?
போகலாமென சொல்ல வந்தவன் ஓரக்கண்ணால் இறுகிய
முகத்தோடு அமர்ந்திருந்த சட்டநாதனைப் பார்த்ததும் பேச்சை மாற்றினான்.
“பெரியவங்க கிட்ட பெர்மிசன்
கேட்டுட்டு அவங்க ஓ.கே சொன்னா போகலாம் பேபி”
உடனே எங்கிருந்தோ சாந்தமதியின் குரல் ஒலித்தது.
“எனக்கு எந்தப் பிரச்சனையும்
இல்ல தம்பி”
நரேஷின் பார்வை சட்டநாதன் மீது படிந்தது.
பெரியவர்கள் அனுமதியின்றி வெளியே போகவேண்டாமென்றவன் மீது அவருக்குக்
கொஞ்சம் நல்ல அபிப்பிராயம் தோன்றியது.
“போயிட்டு வாங்க... காரை மெதுவா ஓட்டுங்க” என்று அனுமதியளித்தார் அவர்.
சந்திரிகா ஒரு முடிவோடு நரேஷை அழைத்துக்கொண்டு
கிளம்ப சர்வேஷிடம் வெற்றிக்குறி காட்டினார் சாந்தமதி. அக்காட்சியைச் சட்டநாதனோ சந்திரிகாவோ
பார்க்கவில்லை என்பது தான் சோகம்.
******
ஸ்கொயர் எண்டர்டெய்ன்மெண்ட்,
ஹப்ஜியோங், சியோல்...
பயிற்சிகள் அனைத்தும் முடிவடைய இரவு பன்னிரண்டு
மணியாகிவிட்டது. டாமெட்ரிக்கு வேகமாக வந்த வோல்க்வாங் அதன் கதவு அரைகுறையாகத் திறந்திருக்கவும்
சந்தேகித்தாள்.
முழுவதுமாகத் திறந்துகொண்டு உள்ளே வந்தவள்
அங்கே கண்ட காட்சியில் அதிர்ச்சியில் உறைந்தாள்.
அவளது அறையில் தங்கியிருந்த சீனப்பெண் லிசியோடு
ஸ்கொயர் எண்டர்டெயின்மெண்டின் ஊழியன் ஒருவன் இதழ் முத்தத்தில் மூழ்கியிருந்தான்.
வோல்க்வாங் அதிர்ச்சி நீங்கி “என்ன நடக்குது இங்க?”
என கோபத்தோடு உரத்தக்குரலில் கேட்டபடி அறைக்குள் பிரவேசித்தாள்.
அவளைக் கண்டதும் இருவரும் சட்டென விலகினர்.
லிசி வோல்க்வாங்கை திமிராகப் பார்த்தாள். ஆடவனின் தோளில் சாய்ந்துகொண்டாள்.
“ஏன் பாத்தா தெரியலையா?
சி.ஈ.ஓவோட ரூம்ல உனக்கும்
அவருக்கும் என்ன நடந்துச்சோ அதுதான் இங்க நடந்துச்சு” என்றாள்
தெனாவட்டாக.
அவளது பதிலில் வோல்க்வாங்கின் முகம் கறுத்தது. நிறுவன ஊழியன் வோல்க்வாங்கைப்
பார்த்து நக்கலாகச் சிரித்தான்.
“இது கம்பெனி முழுக்க தெரிஞ்ச
சீக்ரேட் தானே டார்லிங்... சி.ஈ.ஓ குடுத்த கிப்ட்ஸ் எல்லாம் இங்க பத்திரமா இருக்குறதை வச்சே நான் புரிஞ்சிக்கிட்டேன்”
என்றான் அவன்.
அவனது பார்வை வோல்க்வாங்கின் பொருட்கள் அடுக்கப்பட்டிருந்த
அலமாரியை கிண்டலாக வருடியது.
“இவ கிட்ட பேசி டைம் வேஸ்ட்
பண்ணவேண்டாம் டியர்... நம்ம பாருக்குக் கிளம்புவோம்” என கிளி போல மிழற்றினாள் லிசி.
கே-பாப் ஐடல் ட்ரெயினிங்கின் போது நிறுவனத்தின் டாமெட்ரியை விட்டு நள்ளிரவில்
வெளியேறும் உரிமை ட்ரெயினிகளுக்குக் கிடையாது. முக்கியமாக அவர்களுக்கு
ஆல்கஹால் தடை செய்யப்பட்ட பானம்.
வாரயிறுதி நாளில் மட்டும் அவர்கள் வெளியே செல்வார்கள். ஆனால் இவள் நள்ளிரவில் பாருக்குச்
செல்வோம் என்கிறாளே என்ற திகைப்பு வோல்க்வாங்கிற்கு.
இது மட்டும் நிறுவனத்தின் மேலாண்மைக்குத் தெரியவந்தால்
லிசியின் ஐடல் கனவு அதோ கதி தான். வோல்க்வாங் அவளை எச்சரித்தாள்.
“நீ இப்பிடி போறது சூப்பர்வைசருக்குத்
தெரிஞ்சிட்டுனா உன்னை பேன் (ban) பண்ணிடுவாங்க லிசி”
“இவர் இருக்குற வரைக்கும் என்னோட
ட்ரெய்னிங்ல எந்த பிரச்சனையும் வராது... உனக்கு ஒன்னு தெரியுமா?
எனக்கும் மிஞ்சோவுக்கும் ஸ்பான்சர் கிடைச்சிருக்காங்க... இனிமே எங்களுக்கு ஆகுற செலவை அவங்க கவனிச்சிப்பாங்க... உனக்குத் தான் சி.ஈ.ஓ இருக்காரே”
ஏளனமாகச் சொல்லிவிட்டு அந்த ஆடவனோடு கிளம்பிச்
சென்றுவிட்டாள் லிசி.
வோல்க்வாங் தன்னையும் சி.ஈ.ஓ லீ
ஹோ சூக்கையும் இணைத்து வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பினாள்.
தனது உடமைகள் வைத்திருந்த அலமாரி அருகே வந்தாள்.
அதனுள் இருந்த விலையுயர்ந்த கைப்பையினுள் லீஹோவின்
கார்ட் இருந்தது. அதிலிருந்து அவனது எண்ணைக் கண்டறிந்தவள் மேற்பார்வையாளரிடமிருந்து மொபைலை வாங்கிக்கொண்டாள்.
லீஹோவின் எண்ணுக்கு அழைத்தவள் அழைப்பு ஏற்கப்படவும் “சஜங்நிம் (சி.ஈ.ஓ) நான்
வோல்க்வாங்... உங்களை இப்ப பாக்க முடியுமா?” என்று கேட்டாள்.
மறுமுனையில் அனுமதி கிடைத்தவுடன் மின்தூக்கியை
நோக்கி நடந்தாள். மறக்காமல் அவன் கொடுத்த பரிசுகளையும் ஒரு பையில் எடுத்துக்கொண்டாள்.
சி.ஈ.ஓவின் அலுவலகம் அமைந்திருக்கும் தளத்தின் எண்ணை அழுத்தினாள்.
தளத்தில் மின்தூக்கி நின்றதும் வெளியே வந்தவள்
லீஹோவின் அலுவலக அறைக்கதவைத் தட்டினாள்.
“கமின்”
உள்ளே அடியெடுத்து வைத்தவளை இருகரம் விரித்து
வரவேற்றான் லீஹோ.
“வெல்கம் மை ஹார்ட்”
எப்போதும் போல் அட்டகாசமான தோற்றம். பார்த்தவுடன் எப்பேர்ப்பட்ட
பெண்ணின் உள்ளத்தையும் கவரும் வசீகரம். ஆளுமையோடு விரித்த கரங்களுக்குள்
அடைக்கலமாகி அவனது மார்புக்குள் புதைந்துவிடமாட்டோமா என எண்ணாத பெண்களே இல்லை.
ஆனால் வோல்க்வாங்கின் கண்ணிலும் கருத்திலும்
அது பதியவில்லையே.
“சஜங்நிம்”
பொறுமையாக அழைத்தாள் அவள்.
அவனது சி.ஈ.ஓ பதவியை வைத்து விளித்தவிதம்
லீஹோவுக்குப் பிடிக்கவில்லை. இருப்பினும் எதற்காக வந்திருக்கிறாள்
என்பதை தெரிந்துகொள்ளாமல் பேசவேண்டாமென அமைதி காத்தான்.
“நீங்க குடுத்த கிப்ட்ஸ் எல்லாமே
இதுல இருக்கு”
பையை நீட்டினாள் வோல்க்வாங்.
லீஹோ விரித்த கரத்தை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டான்.
“ஹேண்ட்பேக், லேடீஸ் ஷூஸ்லாம் நான் யூஸ் பண்ணுறதில்ல” என மிதப்பாக
பதிலளித்தான் அவன்.
“எனக்கு இது எதுவும் வேண்டாம்...
என் ரூம்மேட்ஸ் என்னையும் உங்களையும் கனெக்ட் பண்ணி அசிங்கமா பேசுறாங்க...
எல்லாத்துக்கும் இந்த கிப்ட்ஸ் தான் காரணம்... ப்ளீஸ் வாங்கிக்கோங்க”
அவள் கிட்டத்தட்ட கெஞ்சினாள். ஆனால் லீஹோ அதைக் கண்டுகொள்ளவில்லை.
“நீங்க வாங்கலைனா நான் இதை இங்கயே
வச்சிட்டுப் போயிடுவேன்”
அடுத்த வினாடி வோல்க்வாங்கின் கரத்திலிருந்து
அந்தப் பை பறிக்கப்பட்டது. பையிலிருந்த பரிசுகள் அனைத்தையும் ஒரு நொடி கூட யோசிக்காமல் குப்பைத்தொட்டியில்
கொட்டினான் லீஹோ.
வோல்க்வாங் அவற்றின் விலையைப் பற்றி ரூம்மேட்ஸ்
சொல்லக் கேட்டிருந்தாள். எனவே அதிர்ச்சியோடு அவன் குப்பைத்தொட்டியில் அனைத்தையும் கொட்டுவதைப் பார்த்தாள்.
லீஹோ அவளது அதிர்ச்சியை ரசித்தவண்ணம் சுழல்நாற்காலியில்
அமர்ந்துகொண்டான்.
அமர்ந்து தனது விரல் நகங்களைப் பரிசோதித்தவன் “நான் கேட்டதுக்கு நீ இன்னும்
பதில் சொல்லல” என்றான்.
வோல்க்வாங் அமைதி காத்தாள். அவனது தேவை அவள் தான் என்று
தெரியும். அதில் அவளுக்கு கிஞ்சித்தும் விருப்பமில்லை என்பது
இப்போது அவனுக்குப் புரிந்திருக்குமென நம்பி அமைதியாக நின்றாள்.
“ஐ நீட் ப்ராப்பர் ஆன்சர்”
“எனக்கு நீங்க கேட்டதுல உடன்பாடு
இல்ல... உங்களோட ஆடம்பரமான கிப்ட்ஸ் எதுவும் என் மனசை மாத்தாது...
எனக்கு என்னோட கே-பாப் ஐடல் கனவு தான் முக்கியம்”
வோல்க்வாங்கின் குரலில் பிடிவாதம் கலந்திருப்பதை
உணர்ந்தான் லீஹோ. சன்னப்புன்னகை ஒன்று அவனது இதழின் ஓரத்தில் வெளிப்பட்டது.
“நினைச்சதை வலுக்கட்டாயமா அடையுறது
எனக்கு பழக்கம் தான்... இதுவரைக்கும் அப்பிடி தான் நடந்திருக்கு...
உன் விசயத்தில கொஞ்சம் சாப்டா நடந்துக்கலாமேனு யோசிச்சேன்...
பட் யூ ஆர் ஃபோர்சிங் மீ டு டேக் வயலன்ஸ்”
வன்முறை என்றதும் வோல்க்வாங்கின் விழிகளில்
கிலி பரவியது. என்ன செய்யப்போகிறான் இவன்? ஆள் வைத்து என்னைக் கொல்லப்
போகிறானா? இல்லை என்றால் எங்கேயும் கடத்திக்கொண்டு போகப்போகிறானா?
“பயப்படாத... உன்னை கொலை பண்ணுற ஐடியா எதுவும் இல்ல... உன்னோட சம்மதமில்லாம
உன்னை எடுத்துக்க எனக்குக் கொஞ்சநேரம் கூட ஆகாதுங்கிறதை நீ மறந்துடக்கூடாது க்வாங்”
எச்சரிக்கிறானா? அல்லது பயமுறுத்துகிறானா?
குழப்பமாக இருந்தாலும் அவன் சொன்ன தொனியே வோல்க்வாங்கின் இதயத்தை உறையவைத்தது.
இப்போது நீ பயந்துவிட்டால் லீஹோ நினைத்ததை
நடத்திவிடுவான் பெண்ணே! அச்சம் கொள்ளாதே என மனம் தைரியம் கொடுத்தது.
வோல்க்வாங் வெளிப்பார்வைக்குத் திடமாக காட்டிக்கொண்டு
நிமிர்ந்தாள்.
“அப்பிடி ஒரு நிலமை வந்துச்சுனா
நான் இங்க இருந்து போயிடுவேன் லீஹோ”
அவள் வாயில் தன் பெயர் வந்ததை எண்ணி மனம் குளிர்ந்தாலும்
அதற்கு முன்பே உரைத்த வார்த்தைகளின் விளைவால் லீஹோவின் சிறிய கண்களில் எரிமலை போல சீற்றம்
தோன்றியது.
கோபத்தோடு இருக்கையிலிருந்து எழுந்தான் அவன்.
வேக அடிகளால் அவளை நெருங்கியவன் இடையோடு சேர்த்து
அணைத்துக்கொண்டான்.
வோல்க்வாங் திமிற அவளது திமிறலை கரங்கொண்டு
அடக்கி அவளது விழிகளில் தன் விழிகளைக் கலக்கவிட்டான்.
தீண்டாமலே போதையூட்டும் மாயக்காரி இவள்! மற்ற பெண்களிடம் கடினமாக காட்டிக்கொள்ளும்
என்னையே நிதானமாக நடந்துகொள்ள வைக்கிறாளே!
வோல்க்வாங்கின் நடுங்கும் மேனியும் துடிக்கும்
செவ்விதழ்களும் அவனுக்குப் பித்து பிடிக்கவைத்தன.
ஆவலோடு முத்தமிடுவது போல அவள் இதழ் நோக்கி
குனிந்தவன் வோல்க்வாங்கின் கண்கள் கலங்கவும் அப்படியே நின்றுவிட்டான்.
கொரியப்பெண்களுக்குரிய இடுங்கிய கண்களில்லை
அவளுடையது. பெரிய
கருவிழிகள். நீளமான இமைகள். வெண்படத்தில்
கண்ணீர் நிரம்பியிருக்க செவ்வரியாய் அதில் நரம்புகள் ஓடிய காட்சி அவளது அச்சத்தைச்
சொல்லாமல் சொன்னது.
அந்தக் கருவிழிகளின் கண்ணீர் அவனை ஏதோ செய்திருக்கவேண்டும்! “சே” என்றபடி வோல்க்வாங்கை உதறித் தள்ளினான்.
அவன் உதறிய வேகத்தில் வோல்க்வாங் அந்த அறையின்
ஓரத்தில் சென்று விழுந்தாள்.
“கெட்டவுட்” என்று இடிக்குரலில் இரைந்தான்.
ஒரு நொடி வோல்க்வாங்கின் மேனி பயத்தில் தூக்கிவாரிப்போட்டது.
“உன்னை வெளிய போகச் சொன்னேன்”
மீண்டும் கர்ஜித்தான் லீஹோ.
வோல்க்வாங் பயந்தபடியே எழுந்தவள் அவ்விடத்தை
விட்டு ஓடோடி வெளியே வந்தாள்.
இனி லீ ஹோ சூக் தன்னைத் தொந்தரவு செய்யமாட்டான் என்ற நம்பிக்கை பிறந்தது
அவளுக்கு. ஆனால் இவை அனைத்தும் ஆரம்பம் மட்டும் தான் என விதி
சொன்னது அவளது செவியில் விழவில்லை.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment