அலைவரிசை 31

Image
  “பேர் புகழுக்காக ஆசைப்படாதவங்கனு இந்த உலகத்துல யாருமே இருக்க மாட்டாங்க... அந்த அளவுக்கு இல்லனாலும் தனக்குனு ஒரு அங்கீகாரம் வேணும்ங்கிற ஆசையாவது இருக்கும்... அப்பிடி அங்கீகாரம் கிடைக்காம போன நமக்குக் கட்டாயம் ஒரு சலிப்பு வரும்... அந்தச் சலிப்பு ரெண்டு விதமா நம்மளை உசுப்பேத்தும்.. ஒன்னு, இப்ப இருக்கிறத விட இன்னும் பெட்டரா நம்ம அந்த காரியத்த செய்யணும்னு உத்வேகம் வரும்... இன்னொன்னு, என்ன செஞ்சாலும் நம்மளை கண்டுக்க மாட்டாங்க, அப்புறம் ஏன் இவ்ளோ பிரயத்தனப்படணும்னு அந்த காரியத்த பாதியில விட்டுட்டுப் போயிடுவாங்க... இதுக்கு நம்ம யாரை ப்ளேம் பண்ணலாம்? இவ்ளோ பிரயத்தனப்பட்டு ஒருத்தர் ஒரு காரியத்த பண்ணுறத பாத்துட்டு அவங்களைக் கண்டுக்காம போறவங்க, அவங்க பண்ணுற விதம் பெஸ்டா இருந்தாலும் வாயை திறந்து பாராட்டாதவங்களை தானே ப்ளேம் பண்ண முடியும்... சில நேரங்கள்ல செய்யுற வேலைக்கான அங்கீகாரம் கிடைக்காத ஆளுங்க அந்த அங்கீகாரம் யாருக்குக் கிடைச்சுதோ அவங்களை எதிரியா நினைக்குறதும். அவங்க மேல பொறாமைப்படுறதும் கூட நடக்கும்”                                               -கே.கேவின் மனதின் குரல் E15, சாக்சனி அப

அலைவரிசை 13

 



“நாம யாருமே நமக்குக் குடுக்கப்பட்ட எந்த ஒரு விசயத்தையும் எதுக்காக குடுக்கப்பட்டுச்சோ அதுக்காக மட்டும் யூஸ் பண்ணுறதில்ல. ஃபார் எக்சாம்பிள், கடவுள் நமக்குக் கண்ணை குடுத்தது நல்ல விசயங்களை பாத்து தெரிஞ்சிக்கிறதுக்காக. ஆனா அந்த கண்ணை வச்சு மோசமான எத்தனையோ விசயங்களை பாக்குறோம். அதே  மாதிரி கடவுள் நம்மளை படைச்சு நம்ம கிட்ட ஒப்படைச்ச இந்த வாழ்க்கையை நல்லபடியா மட்டுமா வாழுறோம்? நம்மளோட பாதி வாழ்க்கை அடுத்தவங்களோட லைஃப் ஸ்டைலை பாத்து ஏங்குறதுலயே முடிஞ்சிடுது. மீதி வாழ்க்கை அப்பிடி ஒரு லைஃப் ஸ்டைல் நமக்குக் கிடைக்கலையேனு நொந்து நூடுல்ஸா போய் முடிஞ்சிடுது. இதுக்கு மத்தியில நமக்கான வாழ்க்கைய அனுபவிச்சு ரசிச்சு வாழ நாம தவறிடுறோம். So, learn to be happy with what you have”

                                              -கே.கேவின் மனதின் குரல்

ராஜா அண்ணாமலைபுரம்...

மெஜந்தா வண்ண இழைகளாலான பூக்களுடன் கம்பீரமாக ஓங்கியுயர்ந்து நின்று கொண்டிருந்த தூங்குமூஞ்சி மரம் அரணாக இருக்க கிட்டத்தட்ட பத்தாயிரம் சதுர அடியில் இரண்டு தளங்களுடன் விரிந்து கிடந்தது அந்த பங்களா.





‘எல்’ வடிவத்தில் சுற்றிலும் வாதாம் மரங்களும் புல்வெளிகளும் சூழ்ந்த அந்த பங்களாவிற்குள் நுழையும் போதே ‘கொய்’ எனப்படும் அலங்கார மீன்கள் நிறைந்த சிறிய குளமொன்று லிவிங் ஏரியாவுக்கு முன்னே நம்மை வரவேற்கும்.

லிவிங் ரூமில் ஓவியர் மஹ்மத் ஹூசைனின் ஓவியமும் சோபாக்களும் அதில் கிடந்த குஷன்களும் எளிமையோடு அழகையும் கொட்டிக் காட்டியது. 

வீட்டில் அழகு தான் கொட்டிக் கிடந்ததே தவிர உயிர்ப்பு என்பது இல்லை. அந்த உயிர்ப்பைத் தன்னோடு எடுத்துச் சென்றுவிட்ட இரண்டு ஜீவன்கள் புகைப்படமாகச் சிரித்துக் கொண்டிருக்க அவர்களைத் தவற விட்ட துரதிர்ஷ்டசாலி அப்புகைப்படத்தினருகே நின்று கொண்டிருந்தார்.



அவர் பத்மானந்த். கார்கி குழுமத் தொழில்களை மேலாண்மை செய்யும் தலைமைப்பதவியை வகிப்பவர்.

“நீங்க ரெண்டு பேரும் இல்லாம நான் தவிச்சுப் போயிடுவேன்னு நினைச்சிங்களா? நல்லா பாருங்க, முன்ன விட அதிக பலத்தோட நிக்குறேன்... இந்த பத்மானந்தோட மன உறுதிய யாராலயும் குலைக்க முடியாது... உங்களாலயும் தான்” என்று சற்று கர்வமாக உரைத்தார் அவர்.

அப்போது அறையின் வாயிலில் கை தட்டும் ஓசை கேட்டது. திரும்பிப் பார்த்தார் அவர்.



அங்கே நின்று கொண்டிருந்தவர் கமலானந்த், பத்மானந்தின் இளைய சகோதரர்.

“வா கமல்” என்று உள்ளே அழைத்தார் பத்மானந்த்.

“இது தான் நீங்க அண்ணா... நான் கூட இந்நேரம் எமோஷ்னலி வீக்கா இருப்பீங்கனு நினைச்சேன்... ஆனா பத்மானந்தை யாராலயும் அசைக்க முடியாதுனு நிரூபிச்சிட்டிங்கண்ணா” என்றபடி தமையனை ஆரத் தழுவினார் கமலானந்த்.

“வெட்டியான எமோசன்ஸ்ல டைம் வேஸ்ட் பண்ணுறது எனக்குப் பிடிக்காதுனு உனக்குத் தெரியாதா கமல்? சரி, சரணும் சுசித்ராவும் எங்க?”

“சரண் ஆபிஸ்கு கிளம்ப ரெடியாகுறான்ணா... சுசித்ரா பத்தி நான் சொல்லித் தெரியணுமா? அவ ஒரு எமோஷ்னல் இடியட்... இந்நேரம் அவ ரூம்ல உக்காந்து அழுதுட்டுருப்பா” என்றார் கமலானந்த் எள்ளலாக.

“சுசித்ராவுக்கு பூஞ்சை மனசு கமல்... வருசம் போச்சுனா அவ தானா தேறிடுவா”

இருவரும் பேசியபடியே டைனிங் ஹாலுக்கு வந்தனர். எட்டு பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து சாப்பிடும்படி நீண்டு கிடந்தது உணவு மேஜை. ஆனால் அங்கே இப்போது சாப்பிடப் போவதென்னவோ மூவர் தான்.

பத்மானந்த், அவரது இளைய சகோதரர் கமலானந்த், சரண் இம்மூவர் மட்டும் தான். கமலானந்தின் மனைவி சுசித்ரா இப்போது இருக்கும் மனநிலையில் சாப்பிட மாட்டார் என்பது உறுதி.

இருவரும் உணவு மேஜையில் அமர்ந்த போது இருவருக்குமான உணவு எடுத்து வைக்கப்பட்டது.

ஆலிவ் எண்ணெய்யில் வதக்கப்பட்ட காய்கறிகள், முட்டை, ஐந்து பாதாம் மற்றும் ஒரு வாழைப்பழம். இவ்வளவு தான் பத்மானந்துக்கும் தயானந்துக்கும் காலையுணவு.

அதை பார்த்ததும் முகம் சுளித்தார் பத்மானந்த்.



“நான் உன் கிட்ட என்ன சொன்னேன் வசந்த்? இனிமே நான் இந்த டயட்டை ஃபாலோ பண்ண மாட்டேன்னு சொன்னேனா இல்லையா? நீ டயட் சார்ட் படி சமைச்சு வச்சா என்ன அர்த்தம்?”

“அதானே! இவ்ளோ கோடி சொத்துக்கும் அதிபதி என் அண்ணா... அவரால வாய்க்கு ருசியா சாப்பிட முடியலைனா அப்புறம் எதுக்கு இந்த வசதி எல்லாம்?” என்று கமலானந்தும் எரிச்சல் மூள பேசினார்.

“மாமாக்கு மட்டுமில்ல இனிமே உங்களுக்கும் பேலியோ டயட் படி தான் சாப்பாடு”

கம்பீரமாக ஒலித்தது கமலானந்தின் மனைவி சுசித்ராவின் குரல். இருவரும் குரல் வந்த திசை நோக்கி திரும்பினர்.

வழக்கமான உற்சாகமின்றி சோர்ந்து கிடந்தது அவரது வதனம். காரணமென்னவென இருவரும் அறிவர். எனவே என்னவென கேட்கவில்லை.

“இன்னும் எத்தனை நாளுக்கு இப்பிடி சாப்பிடணும் சுசிம்மா?” என்று ஆதங்கமாக கேட்டார் கமலானந்த்.



“ப்ளட் சுகர் லெவல் நார்மலா ஆகுற வரைக்கும் இனிமே உங்களுக்கும் மாமாக்கும் பேலியோ டயட் தான்... அக்கா ஆரம்பிச்ச வச்ச எதுவும் இந்த வீட்டுல மாறலை... இது மட்டும் மாறிடும்னு நினைச்சீங்களா?” என்று கேட்டவர்

“நீங்க லஞ்ச் ரெடி பண்ணுங்க வசந்த்” என ஆணையிட செஃப் வசந்த் சமையலறை நோக்கி சென்றுவிட்டான்.

“காலங்காத்தால உங்க கதாகாலட்சேபத்த ஆரம்பிச்சிட்டிங்களாம்மா?” என்று சலிப்பாக கேட்டபடி வந்து சேர்ந்தான் அவரது புத்திர பாக்கியம் சரண்.



அவனைக் கண்டதும் சுசித்ராவின் முகத்தில் இறுக்கம். வழக்கம் போல அவனிடம் பேச்சைத் தவிர்த்தவர் பத்மானந்திடம் பேச ஆரம்பித்தார்.

“இன்னும் மூனு நாள்ள அக்காவுக்கும் நீரவுக்கும் திதி குடுக்கணும் மாமா... அதுக்கான ஏற்பாட்டை பண்ணட்டுமா?”

பத்மானந்த் கரண்டியால் சாப்பிட்டபடியே நிமிர்ந்தார்.

“என் பேச்சைக் கேக்காம தற்குறித்தனமா நடந்தவனுக்கும், கோழைத்தனமா தற்கொலை பண்ணுனவளுக்கும் திதி குடுக்க வேண்டிய அவசியமில்ல சுசித்ரா”

இரக்கமற்ற குரலில் சொன்னபடி மீண்டும் சாப்பாட்டில் கண்ணானார் அவர்.

அன்னையை நக்கலாகப் பார்த்து சிரித்தபடி தனக்காக சமைத்து வைக்கப்பட்ட உணவைச் சாப்பிட ஆரம்பித்தான் சரண்.

“இது தப்பு மாமா... உங்க பொண்டாட்டி பிள்ளைக்குத் திதி குடுக்க வேண்டியது உங்க கடமை... அவங்க இருந்த வரைக்கும் உங்களுக்கு எதிரா ஏதாச்சும் செஞ்சிருப்பாங்களா?”

சாப்பாட்டைப் பாதியில் வைத்துவிட்டு எழுந்தார் பத்மானந்த்.

“முதலும் கடைசியுமா கேட்டுக்க சுசித்ரா... உன் அக்காவோட மகன் என் பேச்சை மதிக்காம போனதால செத்துப் போனான்... உன் அக்கா அவன் செத்த துக்கம் தாங்காம தற்கொலை பண்ணிக்கிட்டா... ஆனா அவங்க செஞ்ச செயலோட விளைவை அனுபவிக்கிறவன் நான் தான்... நான் மட்டும் தான்... அவங்க சாவுக்கு நான் தான் காரணம்னு என் கிட்ட கை நீட்டி சம்பளம் வாங்குறவன்லாம் என்னைப் பத்தி பேசுனான்... அதுக்கு அவங்க தான காரணம்? இனிமே அவங்க பேச்சை எடுக்காத சுசித்ரா”

சொல்லிவிட்டு தனது கோட்டை எடுத்துக்கொண்டு வெளியேறப்போனவரை சுசித்ராவின் அடுத்த கேள்வி தடுத்து நிறுத்தியது.

“அப்ப ஏன் அவங்க போட்டோவை உங்க ரூம்ல மாட்டி வச்சிருக்கிங்க மாமா?”

பத்மானந்த் நின்றவர் “எந்த இடத்துல நம்ம சறுக்குனோம்னு அடிக்கடி ஞாபகப்படுத்திட்டே இருக்கணும் சுசித்ரா... உன் அக்கா விசயத்துல நான் சறுக்கிட்டேன்... இனிமே அந்த தப்பு நடக்கக்கூடாதுனா அடிக்கடி அவங்க ரெண்டு பேர் போட்டோவும் என் கண்ணுல படணும்” என்று பதிலளித்துவிட்டு கிளம்பினார்.

வீட்டை விட்டு வெளியேறியவர் கொய் மீன்கள் வளைந்து நெளிந்து ஓடும் செய்குளத்தைப் பார்த்ததும் ஒரு கணம் நின்றார்.

“இந்த கொய் மீன் அதிர்ஷ்டத்தையும் வளத்தையும் கொண்டு வரும்... ஜேப்பனீஷ் மக்களோட நம்பிக்கைப்படி இந்த கொய் மீன் தைரியத்தையும் வெற்றியையும் குறிக்குமாம்... இதை வீட்டுல வளத்தா நல்லதுங்க”

காலம் சென்ற மனைவியின் குரல் காதில் ஒலித்தது. இந்தக் குளம் மட்டுமில்லை, இங்கே இருக்கும் புல் பூண்டு முதற்கொண்டு ஒவ்வொன்றும் அவரது மனைவியான கார்கி ஆசையாகப் பார்த்து பார்த்து வளர்த்தது.

தெளிவான சமயோஜிதமான பெண்மணி. ஆனால் இவ்வளவு மென்மையான மனதோடு பிறந்திருக்க வேண்டாம்.



பத்மானந்த் மனைவியைப் பற்றிய சிந்தனைகளை அறவே ஒதுக்கிவிட்டு தரிப்பிடத்தை நோக்க அவரது கண்பார்வைக்குக் காத்திருப்பவரைப் போல காரை அவரருகே நிறுத்தினார் டிரைவர்.

அதிலேறியவர் நிறுவனத்தை நோக்கி கிளம்ப அவரது கார் வெளியேறுவதை டைனிங் ஹாலின் பக்கவாட்டு கண்ணாடி சுவரின் வழியே பார்த்தபடி நின்று கொண்டிருந்தார் சுசித்ரா.

மைந்தனும் கணவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்க அங்கே நிற்க பிடிக்காமல் தோட்டத்திற்கு வந்தவரின் பார்வை வீட்டின் அரணாய் நிற்கும் தூங்குமூஞ்சி மரத்தின் மீது நிலைத்தது.

ஏழு வருடங்களுக்கு முன்னர் வீட்டின் கட்டுமானம் ஆரம்பிக்கும் போதே மரத்தை வெட்டக்கூடாதென ஆணையிட்ட தமக்கை அவர் மனக்கண்ணில் வந்து போனார்.

“மரம் ரொம்ப வருசமா இங்க நிக்கிது போல... இதை ஏன் வெட்டணும்?”

“மரத்தை வெட்டலைனா காம்பவுண்ட் வால் கட்டுறது கஷ்டம் மேம்”

“மரத்தோட கிளை போறதுக்கு ஏத்த மாதிரி காம்பவுண்ட் வால் கட்டுங்க... ரெண்டு மூனு பக்க கிளை போகுது பாருங்க... அதை கூட கட் பண்ண வேண்டாம்... உங்களுக்கே சென்னையோட வெதர் பத்தி நல்லா தெரியும்... மரம் இருந்தா வீட்டுக்குள்ள ஹீட் வராது”

“ஹீட் வரக்கூடாதுனா வீடு ஃபுல்லா செண்ட்ரல் ஏ.சி பண்ணிடலாமே மேம்”

“ஏ.சியோட குளிர்ச்சிய விட வீட்டுக்கு பச்சைக்குடை பிடிச்ச மாதிரி இந்த மரம் நின்னுச்சுனா கண்ணுக்குக் குளிர்ச்சியா பாக்குறதுக்கு எவ்ளோ ரம்மியமா இருக்கும்னு யோசிங்க சார்”

எத்தனை வாக்குவாதங்களுக்குப் பிறகு பிடிவாதமாக இந்த மரத்தைக் காப்பாற்றினாய்? அந்தப் பிடிவாதத்தையும் திடத்தையும் ஏன் இழந்தாய்? அதை இழந்து தற்கொலை முடிவுக்கு வரும் போது என் நினைவு உனக்கு வரவில்லையா?

மரணித்த தமக்கையிடம் மானசீகமாக உரையாடினார் சுசித்ரா. ஆனால் அவரது கேள்விக்குப் பதில் கிடைக்கப் போவதில்லையே!

சாப்பிட்டு முடித்துவிட்டு சரணும் கமலானந்தும் கிளம்ப அவர்களைப் பார்க்க பிடிக்காமல் மீண்டும் வீட்டுக்குள் சென்றுவிட்டார் சுசித்ரா.

தனது அறைக்குள் புகுந்து கொண்டவர் பழைய போட்டோ ஆல்பங்களை எடுத்து பார்க்க ஆரம்பித்தார்.

அனைத்திலும் பெற்றோருடன் புன்னகை முகமாக நின்று கொண்டிருந்தனர் சுசித்ராவும் கார்கியும்.

அந்த முகங்களில் தான் எத்துணை நம்பிக்கை! எத்துணை தைரியம்!

இதெல்லாம் தந்தை மறைந்த பிறகு போயிருக்கும் போல!

இல்லை இல்லை! பத்மானந்த் கமலானந்த் சகோதரர்களின் அன்னை தூரத்து உறவு அத்தை என்று சொல்லிக்கொண்டு அவர்களின் வாழ்க்கைக்குள் நுழைந்த பிறகு காணாமல் போயிருக்க வேண்டும்.

தூரத்து உறவுக்காரப்பையன்கள் என்பதாலும் கடின உழைப்பாளிகள் என்பதாலும் நம்பி இரு பெண்களையும் அவர்களுக்கு மணமுடித்துக் கொடுத்த அவர்களின் தந்தையின் நம்பிக்கை பொய்த்தது இரு சகோதரர்களும் அவரது பெண்களின் வாழ்க்கையை விட தொழிலை முக்கியமாக கருதிய போது தான்.

மகள்களின் வாழ்க்கையைத் தவறானவர்களிடம் ஒப்படைத்துவிட்டோமோ என அவர் குற்றவுணர்ச்சியில் கரைய அவரது புதல்விகளோ கிடைத்த வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு வாழ பழகினர்.

எப்போதுமே இரு சகோதரர்களுக்கும் தொழில் வளர்ச்சிக்கு முன் குடும்பம் உறவுகள் எல்லாம் ஒன்றுமேயில்லை.

ஆனால் மனைவியும் மகனும் இறந்தது கூடவா ஒரு மனிதனின் மனதை பாதிக்காமல் போகும்?

அகால மரணமடைந்த சகோதரிக்கும் அவரது மகனுக்கும் ஆண்டவன் தான் சாந்தியை கொடுக்க வேண்டுமென வேதனையுடன் கண்களை மூடியவரின் இமையை மீறி வழிந்தது கண்ணீர்!

*******

வாடிக்கையாளர்களுக்கு பரபரப்பாக சாக்லேட் பானங்கள் தயாரித்துக் கொண்டிருந்தான் கே.கே. மெக்சிகன் ஸ்பைஸ்ட் ஹாட் சாக்லேட், சேவரி வேஃபிள்ஸ், சிகாகோ ஸ்டைல் ஹாட் டாக் – இதுவே அன்றைய ஸ்பெஷல் மெனு.

அவனோடு சேர்ந்து ஜேக்கப்பும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தான். பிரக்ருதியின் பிரச்சனை என்னவாயிற்று என கேட்டபடி ஹாட் டாகை எடுத்து பேப்பர் ப்ளேட்டில் வைத்தான் கே.கே.



“எவ்ரிதிங் இஸ் ஆல்ரைட் கேசவ்... யூ.எஸ்ல செக்சுவல் ஹராஸ்மெண்டை சீரியசா ட்ரீட் பண்ணுவாங்க... எவ்ளோ பெரிய வி.ஐ.பியா இருந்தாலும் இந்த மாதிரி கேஸ்ல சிக்கிட்டாங்கனா மக்கள் அவங்களை மன்னிக்க மாட்டாங்க... அவங்க நேம் டேமேஜ் ஆகுறது நிச்சயம்... மிஸ்டர் அகர்வால் பையனோட பேர் வெளிய வந்தா தன்னோட பிசினஸ் பாதிக்கப்படும்னு பயப்படுறார்... சோ நிஷாந்த் எந்தக் காலத்துலயும் கிருதி மேல ஃபால்ஸ் அக்யூசேசன் வைக்க முடியாது” என்றான் ஜேக்கப்.

நிஷாந்தால் எதுவும் பிரச்சனை வந்துவிடுமோ என பயந்து கொண்டே இருக்கும் பிரக்ருதி நான்கு நாட்களாக இயல்பாக இல்லை. பிருத்வியைத் தவிர மற்ற இரு பெண்களுக்கும் நடந்த அனைத்தையும் கே.கே கூறிவிட்டிருந்தான்.

பிரணவி பிரக்ருதியைத் திட்டிய திட்டுக்கு அளவேயில்லை. கண்மூடித்தனமான நம்பிக்கையை முன்பின் தெரியாத ஆள் மீது வைக்க அவள் எப்படி துணிந்தாள் என்ற ஆதங்கம் அவளுக்கு.

பிரக்ருதி கூறிய எந்தச் சமாதானமும் பிரணவிக்குப் போதவில்லை. ஆனால் பிருத்வியிடம் மட்டும் இதை பற்றி மூச்சு விடக்கூடாது என்ற முடிவுக்கு வந்துவிட்டாள்.

சொல்லப் போனால் பிரக்ருதியை விட அதிகம் பயந்தவள் பிரணவி தான். எனவே இத்தகவலை முதலில் அவளிடம் தெரிவிக்க வேண்டுமென எண்ணி பிரக்ருதியின் எண்ணுக்கு அழைத்தான்.

அவள் அழைப்பை ஏற்றதும் “நவி சிஸ்டர் கிட்ட போனை குடு” என்றான்.

பிரணவி அழைப்பை ஏற்றதும் “கிருதிக்கு இனிமே நிஷாந்தால எந்தப் பிரச்சனையும் வராது சிஸ்டர்... மிஸ்டர் அகர்வால் அவரோட பையன் செக்சுவல் அசால்ட் கேஸ்ல மாட்டுறதை விரும்பல... சோ அவர் இதை முடிச்சிக்க நினைக்குறார்... இனிமே கிருதிக்கு அவன் எப்பவும் பிரச்சனை குடுக்க மாட்டான்னு டிவிஷன் கமாண்டர் சொன்னாங்க... நீங்க டென்சன் இல்லாம ரிலாக்சா இருங்க” என்றான்.



“இப்ப தான் நிம்மதியா இருக்கு கிரிஷ்... ஜேக்கப்கு நான் தேங்க்ஸ் சொன்னேன்னு சொல்லிடுங்க... இன்னொரு விசயம், நிஷாந்த் பிரச்சனை எப்பவுமே பிருத்விக்குத் தெரிய வேண்டாம்... இது மட்டும் அவருக்குத் தெரிஞ்சா கிருதியை குத்தம் சொல்ல அவருக்குப் பாயிண்ட் கிடைச்சிடும்” என்று வேண்டிக்கொண்டாள் பிரணவி.

“என்ன சிஸ்டர் இப்பிடி சொல்லுறிங்க?”

“என் புருசனைப் பத்தி எனக்குத் தெரியும் கிரிஷ்... அவரோட குணத்தை என்னால முழுசா மாத்த முடியாது... பட் அந்தக் குணத்தால என் தங்கச்சி ஹர்ட் ஆகாம பாத்துக்க முடியும்... அதனால தான் கேக்குறேன், ப்ளீஸ் இந்த மேட்டர் எப்பவும் பிருத்விக்குத் தெரியக்கூடாது”

“டோண்ட் வொரி... நாங்க யாருமே பிருத்வி ப்ரோ கிட்ட சொல்ல மாட்டோம்... நீங்க கிருதிய திட்டாதிங்க சிஸ்டர்... அவ முட்டாள் இல்ல, ஆர்வக்கோளாறு மட்டும் தான்... எப்பேர்ப்பட்ட ஆர்வக்கோளாறையும் மோசமான அனுபவம் மாத்திடும்... இனிமே அவ இந்த மாதிரி சிக்கல்ல மாட்டிக்க மாட்டா”

“நீங்க ஈஸியா சொல்லிட்டிங்க... இவளை யூ.எஸ் அனுப்பறச்ச எங்கப்பா என் கிட்ட என்ன சொன்னார் தெரியுமா? உங்கம்மா இவளை வெளியே அனுப்பி வச்சிட்டு வயித்துல நெருப்பைக் கட்டிட்டு இருப்பா...  அவ போறப்ப அந்த நெருப்பை என் வயித்துக்கு ட்ரான்ஸ்பர் பண்ணிட்டுப் போனா... இப்ப நான் அதை உனக்கு ட்ரான்ஸ்பர் பண்ணுறேன்னார்... நீங்க சொல்லுற மாதிரி அவ ஆர்வக்கோளாறு தான்... இந்த முந்திரிக்கொட்டைத்தனத்தால அவ மறுபடியும் பிரச்சனையில மாட்டிப்பாளோங்கிற பயத்துல நாலு நாளா அவளை புரொவிசன் வாங்க கூட அனுப்பாம நான் காவல் காத்துட்டிருக்கேன்... இப்ப நீங்க சொன்னதும் அவளுக்கு இந்த அனுபவம் கத்துக் குடுத்த பாடம் மறக்காதுனு தோணுது”

“ஆர்வக்கோளாறுகளுக்கு அசட்டுத்தைரியமும் இருக்கும் சிஸ்டர்... அது கிருதிக்கு அளவுக்கு அதிகமா இருக்கு... பிரச்சனை வந்தாலும் சமாளிச்சிடுவா”

“நாட் பேட்... கொஞ்சநாள் பழக்கத்துலயே என் தங்கச்சி இப்பிடி தான்னு கரெக்டா சொல்லுறிங்க”

பிரணவி பேசிக்கொண்டிருக்கும் போதே அவளிடமிருந்து மொபைலை வாங்கினாள் பிரக்ருதி.

“கிரிஷ் கிரிஷ், எப்பிடியாச்சும் நவியோட ஜெயில்ல இருந்து என்னை ஜாமீன்ல எடு ப்ளீஸ்... நாலு நாளா ஹவுஸ் அரெஸ்ட்ல வச்சிருக்கா... என்னை மாதிரி ஃப்ரீ பேர்டை இப்பிடி கூண்டுல அடைக்கிறது எப்பேர்ப்பட்ட பாவம்னு சொல்லி என்னை காப்பாத்து”



மறுமுனையில் கே.கே சிரித்தான்.

“ஃப்ரீ பேர்ட் வானத்துல பறந்து வாழ்க்கைய அனுபவிச்சா யார் தடுக்கப் போறாங்க? அது கரெக்டா கரண்ட் கம்பில உக்காருதே... அதான் நவி சிஸ்டர் கூண்டுக்குள்ள போட்டு பூட்டிட்டாங்க”

“எப்பா சாமி! இனிமே நான் டேட்டிங் போகணும்னு கனவுல கூட நினைக்க மாட்டேன்... என் மொபைல்ல டிண்டர், பம்பிள் ரெண்டு ஆப்பும் எப்பவோ டெலிட் பண்ணிட்டேன்... நான் உண்டு என் வேலை உண்டுனு குட் கேர்ளா இருப்பேன்... இது ஃபாதர் ப்ராமிஸ்”

“நீ கெஞ்சுறதை கேக்குறதுக்குப் பாவமா இருக்கு... உனக்காக நான் நவி சிஸ்டர் கிட்ட பேசுறேன்... ஆனா இதுக்காக நீ எனக்கு என்ன தருவ?””

கே.கே வேண்டுமென்றே கேலியாகத் தான் கேட்டான்.

“லஞ்சம் கேக்குறியா நீ? அமெரிக்காவுக்கு வந்தும் லஞ்சம் கேட்டு இந்தியாவோட மானத்தை இண்டர்நேஷ்னல் லெவல்ல வாங்குற... இது தப்பு கிரிஷ்” என்று சமாளித்தாள் பிரக்ருதி.

“ஏய்! எனக்குக் குடுக்குறதுக்கு ஒன்னுமில்லனு ஓப்பனா சொல்லு... அதை விட்டு இந்தியா இண்டர்நேஷ்னல்னு ஏன் சமாளிக்குற?”

“தெரியுதுல்ல... என் கையில நயா பைசா இல்ல... தப்பு தப்பு... நயா பென்னி (penny) இல்ல”

“சரி விடு... உனக்காக நான் சிஸ்டர் கிட்ட ரெகமண்ட் பண்ணுறேன்... அந்த நன்றிக்கடனை மூனு நாள் எங்க பம்பிள் பி ட்ரக்ல வேலை செஞ்சு கழிச்சிக்க”

அவன் தீர்வு கூறியதும் பிரக்ருதி ஒத்துக்கொள்ளவில்லை.

“நான் விஸ்காம் படிச்சது உன் தள்ளுவண்டிக்கடையில வேலை பாக்குறதுக்கா? போடா இவனே! நீ ஒன்னும் ரெகமண்ட் பண்ணி கிழிக்க வேண்டாம்” என அவள் மறுக்க

“அப்ப நவி சிஸ்டரோட ஜெயில்ல ஜாமீன், பெயில் எதுவும் இல்லாம இன்னும் நாலைஞ்சு மாசத்துக்கு கைதியா இரு” என்றான் கே.கே.

பிரக்ருதி யோசித்தவள் பின்னர் சம்மதித்தாள்.

“பட் எனக்குனு ஒரு கண்டிசன் இருக்கு... உன் தள்ளுவண்டிக்கடையில மூனு நாளுக்கும் எனக்கு டெய்லி வேஜ் வேணும்... அங்க விக்காத சரக்கை என் தலையில கட்டி சம்பளம் குடுக்காம ஏமாத்த கூடாது”

“சரி... உன் கண்டிசனுக்கு ஒத்துக்குறேன்”

“அப்ப நானும் உன் தள்ளுவண்டிக்கடையில வேலைக்குச் சேருறேன்”

இருவரும் பேசி முடித்ததும் பிரணவியிடம் போனை கொடுத்தாள் பிரக்ருதி.

“நான் உங்க கிட்ட முன்னாடியே கிருதிய ஃப்ரீயா விடுங்கனு சொன்னது அவளுக்குத் தெரிய வேண்டாம் சிஸ்டர்... இப்ப தான் உங்க கிட்ட கெஞ்சி சம்மதிக்க வைச்சேன்னு சொல்லுங்க... அப்புறம் இன்னொரு விசயம், நான் த்ரீ டேய்ஸ் டல்லாஸ்ல இருக்க மாட்டேன்... ஆர்லிங்டன் போறேன்... எனக்குப் பதிலா கிருதி ஃபுட் ட்ரக்ல ஜேக்கப்கு ஹெல்பா  இருக்க பர்மிஷன் குடுங்க ப்ளீஸ்”

“தாராளமா அவளை அனுப்பி வைக்குறேன்... உங்க வேலைய முடிச்சிட்டு வாங்க”

“தேங்க்யூ சிஸ்டர்”

அவர்கள் இருவரும் பேசி முடிக்கவும் பிரக்ருதி தமக்கையை ஆர்வத்தோடு நோக்கினாள்.

அவளும் தொண்டையைச் செருமிவிட்டு “கிரிஷ் உனக்காக கேட்டுக்கிட்டதால இன்னையோட உன் ஹவுஸ் அரெஸ்ட் முடியுது... ஆனா ஒன்னு, இன்னொரு தடவை இதே தப்பு நடக்க கூடாது” என்றாள்.

பிரக்ருதி புன்னகையோடு தமக்கையை அணைத்து முத்தமிட்டாள்.

“தேங்க்ஸ் நவி... உம்மா”



“உம்மா குடுத்ததுலாம் சரி... கிரிஷ் மூனு நாள் ஏதோ வேலை விசயமா ஆர்லிங்டன் போறாராம்... அவர் திரும்பி வர்ற வரைக்கும் நீ ஃபுட் ட்ரக்ல ஷ்ரவனுக்கும் ஜேக்கப்புக்கும் உதவியா இருக்கணும்னு கேட்டுக்கிட்டார்... உனக்கு ஒன்னும் பிரச்சனையில்லயே?”

“நோ ப்ராப்ளம் நவி... நான் போறேன்”

தமக்கையிடம் சம்மதம் கூறிய பிறகே கே.கேவுக்கு ஆர்லிங்டன்னில் வேலை இருப்பதால் தான் தன்னை ஃபுட் ட்ரக்கில் வேலைக்கு அழைத்திருக்கின்றான் என்பதை புரிந்து கொண்டாள் பிரக்ருதி. ஆனால் அதை நேரடியாக கூறாமல் தன்னிடம் விளையாடி இருக்கிறான் போல.

தள்ளுவண்டிக்கடை என ஃபுட் ட்ரக்கை கேலி செய்தாலும் பிரக்ருதிக்கு பம்பிள் பி ட்ரக்கை பிடிக்கும். அதன் தினசரி வாடிக்கையாளர் அல்லவா! இனி அதில் பணி செய்பவளும் கூட!

“ஆர்.ஜே கனவு தான் இன்னும் பலிக்கல... கிடைச்ச செஃப் அசிஸ்டெண்ட் வேலையவாச்சும் ஜாலியா பாப்போம்” என உற்சாகத்துடன் பம்பிள் பியில் பணியாற்ற தயாரானாள் பிரக்ருதி.

Comments

Post a Comment