அலைவரிசை 31

Image
  “பேர் புகழுக்காக ஆசைப்படாதவங்கனு இந்த உலகத்துல யாருமே இருக்க மாட்டாங்க... அந்த அளவுக்கு இல்லனாலும் தனக்குனு ஒரு அங்கீகாரம் வேணும்ங்கிற ஆசையாவது இருக்கும்... அப்பிடி அங்கீகாரம் கிடைக்காம போன நமக்குக் கட்டாயம் ஒரு சலிப்பு வரும்... அந்தச் சலிப்பு ரெண்டு விதமா நம்மளை உசுப்பேத்தும்.. ஒன்னு, இப்ப இருக்கிறத விட இன்னும் பெட்டரா நம்ம அந்த காரியத்த செய்யணும்னு உத்வேகம் வரும்... இன்னொன்னு, என்ன செஞ்சாலும் நம்மளை கண்டுக்க மாட்டாங்க, அப்புறம் ஏன் இவ்ளோ பிரயத்தனப்படணும்னு அந்த காரியத்த பாதியில விட்டுட்டுப் போயிடுவாங்க... இதுக்கு நம்ம யாரை ப்ளேம் பண்ணலாம்? இவ்ளோ பிரயத்தனப்பட்டு ஒருத்தர் ஒரு காரியத்த பண்ணுறத பாத்துட்டு அவங்களைக் கண்டுக்காம போறவங்க, அவங்க பண்ணுற விதம் பெஸ்டா இருந்தாலும் வாயை திறந்து பாராட்டாதவங்களை தானே ப்ளேம் பண்ண முடியும்... சில நேரங்கள்ல செய்யுற வேலைக்கான அங்கீகாரம் கிடைக்காத ஆளுங்க அந்த அங்கீகாரம் யாருக்குக் கிடைச்சுதோ அவங்களை எதிரியா நினைக்குறதும். அவங்க மேல பொறாமைப்படுறதும் கூட நடக்கும்”                                               -கே.கேவின் மனதின் குரல் E15, சாக்சனி அப

அலைவரிசை 14

 


“Experience is the best teacher. சக மனுசங்களோட அட்வைஸோ, அதட்டல் உருட்டலோ நம்மளை மாத்துறதை விட அனுபவம் நமக்குள்ள உண்டாக்குற மாற்றம் ரொம்ப ஆழமானது. அது காலகாலத்துக்கும் மறக்க முடியாத மாற்றமா இருக்கும். இதை சிம்பிள் எக்சாம்பிள்ல விளக்கலாம். ஒரு பூனை கிட்ட பால் சூடா இருக்கு, குடிக்காத, வாய் சுட்டுடும்னு சொன்னா அது கேக்காது. அதுக்கு நம்ம பாஷையும் புரியாது. ஆனா அந்தப் பூனை சூடான பால்ல வாயை வச்சு சூடு பட்டுச்சுனா நீங்களே கொண்டு போய் பாலை வச்சாலும் அது குடிக்காது. இது தான் அனுபவம் கத்து குடுக்குற பாடத்தால வர்ற மாற்றம். இப்ப நான் ஏன் இவ்ளோ லெங்தியா பேசுறேன்னு கேக்குறிங்களா? வேற எதுக்கு, இனிமே பணக்காரனை தான் கல்யாணம் பண்ணிப்பேனு என் கனவுல கூட நினைக்க மாட்டேன். என் அனுபவத்துல நான் கத்துக்கிட்ட பாடம் இது”

                                             -கிருதியின் கிறுக்கல் மொழிகள்

தி சாக்சனி அப்பார்ட்மெண்ட்ஸ், மோன்ட்ஃபோர்ட் ட்ரைவ்...

E13 அப்பார்ட்மெண்டில் தனது உடமைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர் கே.கேவும் ஷ்ரவனும். முன்னர் கே.கே மட்டும் தான் ஆர்லிங்டன் செல்வதாக ஏற்பாடு. ஆனால் செல்லும் வேலையில் இருவரும் பங்கெடுத்தால் தான் ஆத்ம திருப்தி உண்டாகுமென வேண்டிய ஒருவர் கூறியதால் இருவரும் கிளம்பிக்கொண்டிருந்தனர்.

ஜேக்கப் அவர்கள் பிரயாணம் செய்வதற்காக ‘யெல்லோ கேப்’ டாக்சியைப் புக் செய்திருந்தான். டாக்சி வருவதற்கு அரைமணி நேரம் இருக்கும் போது தாங்கள் வரும் வரை பம்பிள் பி ட்ரக்கை பிரக்ருதியோடு சேர்ந்து கவனித்துக்கொள்ள முடியுமா என்று மீண்டும் ஒரு முறை கேட்டான் கே.கே.

“நான் பாத்துக்குறேன் கேசவ். த்ரீ டேய்ஸ் என்னால மேனேஜ் பண்ண முடியாதா?”

“இன்னைக்கு மானிங் வரைக்கும் நான் மட்டும் தான் போறதா இருந்துச்சு... நீயும் ஷ்ரவனும் பாத்துப்பிங்கனு நினைச்சேன்... இப்ப அவனும் என்னோட வர்றான்... கிருதி ஒரு ஆர்வக்கோளாறு... வேலை செய்யுற ஆர்வத்துல கண்டிப்பா ஏதாவது சில்லுவண்டுத்தனம் பண்ணுவா”

“அப்ப நீ அவளை நமக்கு ஹெல்ப் பண்ணவே சொல்லிருக்கவே கூடாது”

“நமக்கு ஒரு ஹெல்பர் வேணுமே.... அதுக்காக அவளோட ஆர்வக்கோளாறை பொறுத்துக்கலாம்”

சரியாக அந்நேரம் பார்த்து பிரக்ருதி வந்து விட்டாள். கே.கே தன்னை பற்றி ஆர்வக்கோளாறு என்று சொல்வதை கேட்டதும் கடுப்போடு அவனது தோளில் அடித்தவள்

“நான் ஆர்வக்கோளாறா? ஒரு விக்கெட் ஸ்லிப் ஆகிடுச்சு... அதுக்குனு நீ என்னை ஓவரா கலாய்ப்பியா?” என்று கேட்டபடி அவனை உலுக்க

“இதை தான் ஆர்வக்கோளாறு முந்திரிக்கொட்டைத்தனம்னு நான் சொல்லுறேன்... உன்னை பத்தி பாசிட்டிவா சொன்னதை நீ பெருசா எடுத்துக்கல... ஆர்வக்கோளாறுனு சொன்னதும் பொங்கி எழுந்து நிக்குற” என்றபடி அவளது கரத்தை விலக்கினான் கே.கே.



பிரக்ருதி அவனை முறைத்தபடியே “ஆர்லிங்டன்ல உன் தள்ளுவண்டிக்கடைக்கு இன்னொரு ப்ராஞ்ச் ஆரம்பிக்கப் போறியா?” என்க

“அங்க ஒரு மடம் இருக்கு... அதுக்குத் தான் போறோம்” என்றான் ஷ்ரவன்.

“வாட்? மடத்துக்குப் போறிங்களா? ரெண்டு பேரும் சாமியார் ஆகப் போறிங்களா? கே.கே சிங்கிள் சிங்கம்... அவன் சாமியாரா போனா யாருக்கும் நஷ்டமில்ல... உனக்கு என்ன மேன் ஆச்சு? அது சரி! ஃபர்ஸ்ட் டேட்ல பேய்க்கதை சொன்னவனைலாம் நம்புனியே பிரகி... இப்ப உன் நிலமைய பாத்தியா? இந்த பையன் உன்னை அம்போனு விட்டுட்டு மடத்துல சாமியாரா சேரப்போறான்” என பிரக்ருதி படபடவென பொரிய

“மடத்துக்குப் போனா சாமியாரா தான் ஆகணுமா? நாங்க வேற வேலை விசயமா போறோம்” என்றான் ஷ்ரவன்.

“அப்பிடி என்ன சீக்ரேட் வேலை?” என்று கேட்டபடியே அவர்களின் உடமைகளை பார்வையிட்டாள் பிரக்ருதி.

“வேண்டியவங்களுக்கு திதி குடுக்கணும்... இது முதல் வருச ஸ்ரார்த்தம்... அதை முறைப்படி பண்ணிடனும்னு சொன்னாங்க”

கே.கே உணர்ச்சியற்றவனாக பதிலளித்தபடியே விட்டத்தை பார்த்தான்.

பிரக்ருதி இவ்வளவு நேரம் இருந்த குறும்புத்தனத்தை ஓரங்கட்டிவிட்டு தீவிரமான முகபாவத்துக்கு மாறினாள்.

“திதி? யாருக்கு?”

“என் ஃப்ரெண்டுக்கும் அவனோட அம்மாவுக்கும்”

ஷ்ரவன் பதிலளிக்கவும் டாக்சி ஓட்டுனரிடமிருந்து அழைப்பு வரவும் சரியாக இருந்தது.

“டாக்சி வந்துடுச்சு கேசவ்” என ஜேக்கப் கூறவும் இருவரும் ஃப்ளாட்டை விட்டு வெளியேறினர்.



பிரக்ருதி ஜேக்கப்பிடம் நாளை காலையில் சரியான நேரத்துக்கு வந்து விடுவதாக கூறிவிட்டு தங்கள் ஃப்ளாட்டுக்குச் சென்றாள்.

அங்கே பிரக்யா ஷ்ரவனிடம் பேசிக்கொண்டிருப்பதை கண்டவள் அவளைத் தொந்தரவு செய்யாமல் பிரணவியிடம் வந்து நின்றாள்.

பிரணவிக்குக் கால்வீக்கம் கண்டிருக்கவே அவளருகே அமர்ந்து மடியில் எடுத்து வைத்து வெண்ணீர்பேக் வைத்து ஒத்தடம் கொடுக்க ஆரம்பித்தாள்.



“விடு கிருதி... கால்வீக்கம் குறையவே மாட்டேங்கிறது” என சலித்தாள் பிரணவி.

“நீ ரொம்ப நேரம் நிக்காதனு சொன்னா கேக்குறியா? உனக்கு ஏதாச்சும் வேணும்னா என் கிட்ட சொல்லு... இல்ல பிரகி கிட்ட கேளு... ஏன் தேவையில்லாம எழுந்திரிச்சு அங்க இங்க நடக்குற?”

“வாக்கிங் போகவேண்டாமாடி?”

“வாக்கிங் மீன்ஸ் நடக்குறது... E14 ஃப்ளாட் ஆன்ட்டி கூட ஊர்வம்பு பேசிக்கிட்டு நிக்குறது இல்ல”

பிரக்ருதி கேலி செய்யவும் பிரணவி அசட்டுப்புன்னகை பூத்தாள்.

“ஐய்ய! சிரிச்சு சமாளிக்காத... நாளையில இருந்து மூனு நாளுக்கு நானும் ஜேக்கும் தான் ட்ரக்கை மேனேஜ் பண்ணப்போறோம்... நான் இல்லனதும் பக்கத்து ஃப்ளாட் ஆன்ட்டி கூட சேர்ந்து கதை பேசி காலையும் காதையும் வீங்க வச்சிடாத”

பிரக்ருதியின் கையில் பட்டென்று அடித்தாள் அவள்.

“பெரியவங்களை கிண்டல் பண்ணாதடி”

“யாரு? அந்தம்மாவா? மூனு வேளையும் மருமகள் வாய்க்கு ருசியா சமைச்சுப் போட்டும் அவங்களை குறை சொல்லுது... சரியான வன்ம குடவுன்”

தமக்கையும் தங்கையும் பேசிக்கொண்டிருப்பதை கேட்டவாறு வந்தாள் பிரக்யா.

“யாரை சொல்லுற கிருதி? பக்கத்து ஃப்ளாட் ஆன்ட்டிய தானே?” என்று அவள் கேட்க

“ஆமாடி... அந்த அம்மாவுக்கு மூட்டுவலியாம்... மருமகள் முடக்கத்தான் கீரை சூப் வச்சு குடுத்தா சரியா போயிடுமாம்... ஆனா அவ செஞ்சு குடுக்கலனு குறை சொல்லுது அந்த ஆன்ட்டி... டல்லாஸ்ல முடக்கத்தான் கீரைய எங்க போய் வாங்குவா அந்த மருமகள்? மனசு முழுக்க வன்மம் அந்த ஆன்ட்டிக்கு” என்று முழுக்கதையையும் விவரித்தாள் பிரக்ருதி.

பிரணவி ஆச்சரியத்துடன் “இதெல்லாம் உனக்கு எப்பிடி தெரியும்?” என்று கேட்க

“எனக்கு எல்லா பக்கமும் காது இருக்கு” என்றாள் பிரக்ருதி.

அவர்களின் உரையாடலைக் கேட்டபடி அமர்ந்திருந்த பிரக்யாவின் முகம் சுரத்தின்றி இருந்தது.

என்னாயிற்று என்று கண்களால் அவளிடம் கேட்ட பிரக்ருதிக்கு ஒன்றுமில்லை என்ற மறுப்பான தலையசைப்பு பதிலாக கிடைத்தது.

பிருத்வியும் வந்துவிட அவனிடம் பம்பிள் பி ட்ரக்கில் வேலை செய்யப்போவதை கூறினாள் பிரக்ருதி. அவனிடம் இருந்து எதிர்ப்பு வருமென நினைத்திருந்தனர் மூன்று பெண்களும். ஆனால் அவன் எளிதாக சம்மதித்துவிட்டான்.

“ஜெண்டர் ரிவீலிங் பார்ட்டிய அந்தப் பசங்க நமக்கு எவ்ளோ சிறப்பா பண்ணி குடுத்தாங்க? அவங்களுக்கு ஹெல்ப் பண்ணுறது ஒன்னும் தப்பில்ல”

அப்பாஹ்டா என்று நிம்மதி பெருமூச்சு விட்டவர்கள் அவன் அடுத்து கேட்ட கேள்வியில் திருதிருவென விழிக்க ஆரம்பித்தனர். அக்கேள்விக்குப் பிரணவிக்கானது.

“நீ நாலு நாளா கிருதிய வெளிய விடாம ஹவுஸ் அரெஸ்ட்ல வச்சிருந்த மாதிரி தோணுச்சு... அப்பிடி தானா? இல்ல எனக்கு மட்டும் தான் அப்பிடி தோணுச்சா?”

பிரணவி பதில் சொல்லாமல் விழித்தாள். இவன் எதையும் கண்டுகொள்ளாமல் இருக்கிறான் என்றல்லவா அவள் எண்ணியிருந்தாள். ஆனால் கவனித்திருக்கிறான் போல.

“அது... வந்து பிருத்வி... நான்...” என அவள் பதிலளிக்க திணற ஆபத்பாந்தவளாக உதவிக்கு வந்தாள் அவனது தங்கை.

“கிருதிக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்லண்ணா... அதான் அவளை அண்ணி வெளிய போகவேண்டாம்னு வீட்டுலயே இருக்க சொன்னாங்க”

“ஓ! இப்ப உடம்புக்கு ஒன்னுமில்ல தானே? ஏன்னா அவ வேலை செய்யப்போறது ஃபுட் ரிலேட்டடா”

“நேத்தே சரியாயிடுச்சு மாமா... ஐ அம் பெர்ஃபெக்ட்லி ஆல்ரைட்”

பிரக்ருதி கூறவும் பிருத்வியும் புன்னகைத்துவிட்டு அவர்களின் அறைக்குச் சென்றுவிட்டான்.

தப்பித்தோமென மூன்று பெண்களும் பெருமூச்சு விட்டனர்.

மறுநாள் சரியான நேரத்தில் ஜேக்கப்போடு அவனது வீட்டுக்குச் சென்று ட்ரக்கில் கமிஷரியை அடைந்தாள் பிரக்ருதி.

அங்கே அவன் சொன்ன வேலைகளை தட்டாமல் செய்தவள் அன்றைய மெனுவை ட்ரக்கிலிருந்த கரும்பலகையில் எழுதினாள்.

தேவையான உணவுப்பொருட்களோடு ட்ரக் கிளம்பியதும் எங்கெல்லாம் ட்ரக்கை நிறுத்துவார்கள்? எவ்வளவு நேரம் வாடிக்கையாளர்கள் வருவார்கள் என்பதை எல்லாம் கேட்டுத் தெரிந்துகொண்டாள்.

ட்ரக் நிற்கவும் இறங்கி போர்ட் ஒன்றை வைத்தவள் ட்ரக்குக்குள் ஜேக்கப்புக்கு உதவி செய்ய ஆரம்பித்தாள். பின்னர் ட்ரக் நிற்பதை கண்டு கூட்டம் வழக்கம் போல வரவும் வாடிக்கையாளர்கள் கேட்டதை ஜேக்கப் கொடுக்க பணம் வாங்கும் வேலையைக் கவனித்தாள்.

பரபரப்புடன் நேரம் கழியும் போது மற்றவற்றை மறந்திருந்தாள் அவள். ஜேக்கப்பையும் சும்மா சொல்ல முடியாது. இருவர் இல்லாத குறை தெரியாமல் அன்றைய வேலையை முடித்தான் அவன்.



வேலை முடிந்து வீட்டிற்கு கிளம்பும் போது தான் ஜேக்கப் அவனது காதலியிடம் பேசவில்லை என்பதையே கவனித்தாள்.

“ஜேக்குக்கு ரோஸ் கிட்ட இருந்து ஒரு கால் கூட வரலையே?”

“ஒர்க் டைம்ல பேசுனா லியானாவுக்குப் பிடிக்காது... இனிமே உள்ள டைம் எங்களோடது”

“அஹான்! இன்னைக்கு ஈவ்னிங் பப்ல மீட்டிங்கா?”

ஜேக்கப் பதில் சொல்லாமல் சிரித்தான். பின்னர் கண்கள் ஜொலிக்க “வீ ஆர் கோயிங் டு மேரிட்” என்றான்.

“வாவ்! இட்ஸ் அ குட் நியூஸ்... எப்ப? எங்கனு மட்டும் சொல்லு ஜேக்... நானும் பிரகியும் வருவோம்... நாங்க இது வரைக்கும் அமெரிக்கன் வெட்டிங் பாத்ததே இல்ல”

“யூ கய்ஸ் ஷுட் கம் டு அவர் மேரேஜ்... சீக்கிரமே நானும் லியானாவும் இன்விடேசனோட வருவோம்”

“வீ ஆர் வெயிட்டிங்”

பின்னர் ட்ரக்கை அவனது வீட்டு கராஜில் நிறுத்தி பூட்டியவன் காருக்குள் அமர்ந்ததும் பிரக்ருதியிடம் சில டாலர் நோட்டுகளை நீட்டினான்.

“டுடேஸ் சேலரி”

பிரக்ருதி முகம் மலர அதை வாங்கிக்கொண்டாள்.

“திஸ் இஸ் மை ஃபர்ஸ்ட் சேலரி” என குதூகலித்தவள் வீட்டுக்கு வந்ததும் டாலர் நோட்டுகளை பிரணவி மற்றும் பிரக்யாவின் முகத்தின் முன்னே ஆட்டிக்காட்டினாள்.

“போதும்டி... இந்த சேலரிக்கு இவ்ளோ பில்டப்பா?” என பிரக்யா சலிக்கவும் பிரக்ருதியின் உற்சாகம் வற்றிவிட்டது

“என்னாச்சு பிரகி? நான் உன்னை இரிட்டேட் பண்ணிட்டேனா?” என அவள் புரியாமல் விழித்தபடி கேட்க பிரக்யா தனது மனச்சோர்வை அவளிடம் காட்டிவிட்ட குற்றவுணர்ச்சியில் நாக்கை கடித்தாள்.

“சாரி கிருதி... இன்னைக்கு கொஞ்சம் மைண்ட் அப்செட்டா இருக்கு... சாரிடி” என்க பிரணவியோ இருவரையும் மாறி மாறி பார்த்தாள்.

பின்னர் “கிருதி உன்னோட ஃபர்ஸ்ட் சேலரில எங்களுக்கு ட்ரீட் வைக்க மாட்டியா?” என்று அவள் கேட்க தோழியர் இருவரும் இயல்புக்குத் திரும்பினர்.

பிரக்ருதி அவர்கள் இருவருக்கும் என்ன வேண்டுமென கேட்டு ஆன்லைனில் ஆர்டர் போட்டவள் குளித்தால் நன்றாக இருக்குமென தோன்றியதால் அவர்களின் அறைக்குச் சென்றுவிட பிரக்யா பிரணவியோடு அமர்ந்திருந்தாள்.

பிரக்யாவின் முகத்தை ஆழ்ந்து நோக்கினாள்.

“உன் முகமே சரியில்ல... என்ன பிரச்சனை? என் கிட்ட சொல்ல மாட்டியா?”

“ஒன்னுமில்ல அண்ணி... எனக்கு எந்த கம்பெனியிலயும் ஜாப் கிடைக்க மாட்டேங்கிறதுல்ல... அதை நினைச்சு கொஞ்சம் கஷ்டமா இருக்கு” என்றாள் அவள்.

பிரணவி அவள் கூறியதை நம்பவில்லை. அதே நேரம் தோண்டி துருவவும் இல்லை. பிரக்ருதி உடை மாற்றிவிட்டு வரவும் ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருட்களோடு டெலிவரி எக்சிகியூட்டிவ் வீட்டின் அழைப்புமணியை அழுத்தவும் சரியாக இருந்தது.

பிரக்யா கதவைத் திறந்து வாங்கிக்கொண்டு வர அடுத்த சில நிமிடங்களின் பிரக்ருதியின் முதல் வேலைக்கான முதல் சம்பளம் கிடைத்ததற்கான கொண்டாட்டம் ஆரம்பித்தது.

சாப்பாட்டிக்கிடையே பிரக்ருதியின் தந்தை வாசனுக்கு வீடியோ அழைப்பும் பறந்தது.

வாசன் மகள் கூறியவற்றை கேட்டுவிட்டு “வேலை செய்யுறதுலாம் சரி தான்.. எந்த வம்பு தும்புக்கும் போகாம இருக்கணும்... மூனு நாளுக்கு அப்புறம் இந்த வேலையை விட்டுடுவ தானே?” என்று கேட்கவும் செய்தார்.

பிரக்ருதி தந்தையை முறைத்தவள் “ஏன்பா உனக்கு இவ்ளோ கொலைவெறி? நான் வேலைக்குப் போறதுல உனக்கு என்ன கஷ்டம்?” என்க

“நீ காலேஜ் போனப்பவே டெய்லி ஒரு பஞ்சாயத்தை இழுத்துட்டு வருவ... உன்னை எந்த தைரியத்துல வேலைக்கு அனுப்புறது?” என பதிலளித்தவர் பின்னர் பிரணவியின் உடல்நிலையைப் பற்றி விசாரிக்க பேச்சு வேறு திசையில் சென்று முடிந்தும் விட்டது.

பெண்களின் கொண்டாட்டமும் முடிந்துவிட்டது. இருப்பினும் பிரக்யாவின் முகத்தில் சகோதரிகள் எதிர்பார்த்த தெளிவு இன்னும் வராததால் அவளை அப்பார்ட்மெண்டின் பூங்காவுக்கு அழைத்துச் சென்றாள் பிரக்ருதி.



“என்னடி உன் பிரச்சனை?” என்று அவள் கேட்டது தான் தாமதம் பிரக்யா தனது ஆதங்கத்தை ஒரே வார்த்தையில் கூறிவிட்டாள்.

“ஷ்ரவன்”

“அவன் என்ன பண்ணுனான்?”

“அவன் எதுவும் பண்ணலை... நான் தான் தேவையில்லாம அவனை இரிட்டேட் பண்ணிட்டேன்.. அவன் என் கிட்ட கோச்சிக்கிட்டான்”

பிரக்ருதி அவளை நம்ப முடியாமல் பார்த்தாள். ஏனெனில் தன்னைப் போல அவள் எளிதில் உணர்ச்சிவசப்பட மாட்டாள். அவசரத்தில் வார்த்தைகளை அள்ளித் தெறிப்பவள் இல்லை. மிகவும் தெளிவானவள் அவளது தோழி. அவளிடம் கோபித்துக்கொள்ளும் அளவுக்கு ஷ்ரவன் சென்றிருக்கிறான் என்றால் ஏதோ பிரச்சனை! என்னவென விசாரித்தாள் பிரக்ருதி.

“அவன் நேத்து போனதுல இருந்து எனக்குக் கால் பண்ணவே இல்ல கிருதி... இன்னைக்கு மானிங் நீ கிளம்புனதும் கால் பண்ணி ஏன்டா பேசலனு கொஞ்சம் கோவமா கேட்டேன்... அவன் அங்க இருந்த பிசில மறந்துட்டேன்னு சொன்னான்... அந்த நேரம் என் வாயில சனி புகுந்துடுச்சு... அவன் எப்பிடி என்னை மறக்கலாம்ங்கிற கோவம்... சோ கொஞ்சம் ஓவரா பேசிட்டேன்”

“அப்பிடி என்ன தான் சொன்னம்மா?”

“நீ அங்க வேற பொண்ணை பாத்திருப்ப... அதான் என்னை மறந்துட்டனு சொன்னேன்”

பிரக்ருதியின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது. இப்படிப்பட்ட வார்த்தைகளை பிரக்யாவா கூறினாள் என்ற அதிர்ச்சி.

“என்ன பிரகி இது? ஒருத்தன் உன் கிட்ட அவனோட பாஸ்டை பத்தி ஓப்பனா சொல்லுறான்னா அவன் உன் மேல அவ்ளோ நம்பிக்கை வச்சிருக்குறான்னு அர்த்தம்... ஆனா நீ அதையே குத்திக்காட்டிருக்க... இது தப்பு பிரகி” என்றாள்.

“எனக்கு இது லேட்டா தான் புரிஞ்சுது கிருதி... அவன் இனிமே என் கிட்ட பேசவே மாட்டானாம்”

கண் கலங்கினாள் பிரக்யா.

“ப்ச்! நீ கோவத்துல வார்த்தைய விட்ட மாதிரி அவனும் கோவத்துல பேசிருப்பான்... விடு... இங்க வந்ததும் பேசிக்கலாம்... இதுக்காக நீ சோகமா இருக்கணும்னு அவசியமில்ல... தப்பு பண்ணிட்டனு தோணுது... அப்ப அவன் கிட்ட சாரி கேட்டுடு... சாரி கேட்டதுக்கு அப்புறம் அவனால கோவத்தை பிடிச்சு வச்சிக்க முடியாது”

தோழிக்கு ஆறுதல் கூறி எப்படியோ அவள் மனதை தேற்றினாள் பிரக்ருதி.

இப்படியே அன்றைய நாள் கழிந்து மறுநாள் பொழுதும் விடிந்தது. அது ஆர்லிங்டனில் சிருங்கேரி மடத்திலிருந்த ஷ்ரவனுக்கும் கே.கேவுக்கும் கொஞ்சம் உணர்ச்சிமயமான காலையாக அமைந்தது.

சாஸ்திரப்படி கார்கிக்கும் நீரவுக்கும் திவசம் நடைபெற்று கொண்டிருந்தது.

ஹோமம் வளர்த்து தர்ப்பையின் மீது பிண்டம் வைத்து கார்கி மற்றும் நீரவின் பெயரைக் கூறிவிட்டு இன்னும் குடும்பத்தில் இறந்தவர்களின் பெயர் ஞாபகமிருந்தால் கூறும்படி கேட்டார் திவசம் செய்பவர்.

அவனும் நினைவிருந்த பெயர்களை கூற அந்தப் பிண்டத்தை மடத்தின் கோசாலையிலிருந்த பசுக்களுக்கு அளித்து திவசத்தை முடித்து வைத்தார் புரோகிதர்.

பின்னர் அவருக்கு தட்சணை அரிசி காய்கறிகளை கொடுத்துவிட்டு காக்கைக்கு உணவளிக்க சென்றனர் நண்பர்கள் இருவரும்.

காகங்கள் உணவைக் கொத்தி தின்ன அதில் ஒரு காட்சி கே.கேவின் கவனத்தை ஈர்த்தது.

பெரிய காகம் ஒன்று அதன் பின்னே தத்தி தத்தி வந்த குட்டி காகத்துக்கு தனது அலகால் சில சோற்று பருக்கைகளை ஊட்டியது. மற்ற காகங்கள் அதை கொத்தாமல் பாதுகாத்தபடி தனது குஞ்சுக்கு உணவளித்த அக்காட்சியைக் கண்டதும் அவனது கண்களில் நீர் கோர்த்தது.

அதோடு காகங்கள் தங்களுக்கு உணவு கிடைத்ததே போதுமென எண்ணாமல் கரைந்து மற்ற காகங்களையும் அழைத்து உண்பதை பார்த்த ஷ்ரவன்

“இதுக்கு இருக்குற அறிவு கூட ஆறறிவு இருக்குற மனுசங்களுக்கு இல்ல... ஒய்புக்கும் மகனுக்கு முதல் வருச திவசத்த செய்ய வேண்டியவர் புது டீலை பேச மும்பைக்குக் கிளம்பிட்டாராம்... சுசித்ரா ஆன்ட்டி பேசுனப்ப சொன்னாங்க” என்றான்.

கே.கே விரக்தியாக புன்னகைத்தான்.

“இது ஒன்னும் புது கதை இல்லயே... எப்பவும் நடக்குறது தான்... அவங்களுக்கு கால் பண்ணி திவசம் முடிஞ்சுதுனு சொல்லிடு... நாளைக்கு அன்னதானத்தை முடிச்சிட்டு நம்ம டல்லாஸ் கிளம்பிடுவோம்னு இன்ஃபார்ம் பண்ணிடு ஷ்ரவன்”

“சரிடா” என்றவன் சுசித்ராவின் எண்ணுக்கு அழைத்தான்.

“சொல்லு ஷ்ரவன்” என்றவரிடம் திவசம் முடிந்தது என்று கூறினான்.

“இப்ப தான் நிம்மதியா இருக்கு ஷ்ரவன்... என் அக்காவுக்கும் நீரவுக்கும் என்னால எதையும் செய்ய முடியாதோனு பயந்துட்டேன்டா... உண்மையான ஃப்ரெண்டா நீ உன் கடமைய செஞ்சிட்ட” என்றார் அவர்.



“என் ஃப்ரெண்டுக்கு நான் செய்யக்கூடாத கடமை இது... என் கெட்டநேரம் அவன் இல்லாம நான் வாழ கத்துக்கிட்ட மாதிரி அவனுக்குத் திவசம் பண்ணவும் மனசை தயார்படுத்துனேன்... ப்ச்! பழசை பேசவேண்டாம் ஆன்ட்டி”

“நீ எப்ப இந்தியாக்குத் திரும்பி வருவ?”

“கே.கே எப்ப வரணும்னு சொல்லுறானோ அப்ப வருவேன்... ரொம்ப நேரம் பேசிட்டேன் போல... உங்க ஹஸ்பெண்டும் பையனும் பாக்குறதுகுள்ள நீங்க காலை கட் பண்ணிடுங்க”

ஷ்ரவன் அழைப்பைத் துண்டிக்கவும் சுசித்ரா கண்ணீருடன் பத்மானந்தின் அறைக்குச் சென்றார். அங்கே புகைப்படமாக இருந்த கார்கியையும் நீரவையும் கண்ணீர் மல்க நோக்கினார்.

அவரது வாயிலிருந்து வார்த்தைகள் வரவில்லை என்றாலும் மனம் கொஞ்சம் அமைதியுற்றிருந்தது. காலமானவர்களுக்குச் செய்ய வேண்டியதை செய்து முடித்த திருப்தியோடு சுவரில் சாய்ந்தார் சுசித்ரா.

சதையும் இரத்தமுமாக கண் முன்னே நடமாடியவர்கள் எதிர்பாராமல் மரணிப்பது எவ்வளவு பெரிய கொடுமை என்பது அனுபவித்தவர்கள் மட்டுமே அறிந்த உண்மை. அதை எந்த மகிழ்ச்சியாலும் நீர்த்துப் போக செய்ய இயலாது என்றாலும் எவ்வித காயத்தையும் ஆற்றும் காலம் மரணம் ஏற்படுத்திய வெற்றிடத்தையும் துயரத்தையும் கூட போக்கடிக்கும் என்பது நிதர்சனம்.


Comments

Post a Comment