பூங்காற்று 48

Image
  நீரஜாட்சி அன்று காலையில் எழும் போதே அவளுக்கு மனது சரியில்லை. முதல் வேளையாக முகம் கழுவி விட்டு வராண்டாவில் சென்று காற்றாட அமர்ந்தவள் டியூசனுக்கு செல்லும் விக்கிக்கு டாட்டா காட்ட அவன் சைக்கிளில் ஏறியவன் "நீருக்கா! நான் இன்னும் ஒன் ஹவர்ல டியூசன் முடிச்சு வந்துடுவேன். அதுக்கு அப்புறம் மேட்சை ஸ்டார்ட் பண்ணுவோம்" என்று அறிவிப்பு விடுத்தபடி சென்றான். அவன் செல்வதை பார்த்துவிட்டு வனஜா "என்னமோ போ நீரு! இவன் பப்ளிக் எக்சாம்ல என்ன மார்க் வாங்குவானோனு அவனுக்கு பயம் இருக்கோ இல்லையோ எனக்கு டென்சனா இருக்கு. ஹாஃப் இயர்லில எய்ட்டி பர்சன்டேஜ் தான் வாங்கியிருக்கான்" என்று வருத்தமாக கூற நீரஜாட்சி "அக்கா எய்ட்டி பர்சண்டேஜ் உங்களுக்கு கம்மியா தெரியுதா ? பப்ளிக் எக்சாம் மார்க் நம்ம வாழ்க்கையை தீர்மானிக்கிறது இல்லக்கா. அதை தவிர அவனோட மத்த பழக்க வழக்கங்கள் தான் அவனை நல்ல மனுசனா காட்டும். வெறும் மார்க்கை வச்சு அவனை எடை போடாதிங்க. இப்போ இல்லைனாலும் வருங்காலத்துல அவன் ஒரு நல்ல நிலமைக்கு வருவான்" என்று விக்கியை புகழ்ந்து தள்ள வனஜா "அது சரி! நீ அவனை விட்டுக...

பூங்காற்று 45


பூங்காற்று 45

நீரஜாட்சிக்கும் ரகுநந்தனுக்குமான மோதல்கள் ஒரு பக்கம் இருக்க பெரியவர்கள் அனைவரும் ஆன்மீக சுற்றுலாவுக்காக தயாராகிக் கொண்டிருந்தனர். ஹர்சவர்தனும் கிருஷ்ணஜாட்சியும் மற்றொரு புறம் தேனிலவு செல்வதற்காக தங்களின் பணிகளை முழுவீச்சில் முடிக்க வேண்டியிருந்ததால் இவர்களில் யாருக்குமே நீரஜாட்சி, ரகுநந்தனின் போக்கு கண்ணில் படவில்லை.

பத்மாவதியும் மைதிலியும் முதலில் அதை கவனித்திருந்தாலும் நீரஜாட்சி கூறிய சமாதானத்தில் இருவரும் அரைமனதுடன் சமாதானமாயினர். ஆனால் இருவருமே தத்தம் கணவரிடம் இதை பற்றி இன்னும் ஒரு வார்த்தை மூச்சுவிடவில்லை. தெரிந்தால் அவர்களும் இதை நினைத்து மனதை போட்டு குழப்பிக் கொள்வார்கள் என்ற எண்ணம் தான்.

நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் முதலில் பக்கத்து மாநிலத்தில் உள்ள இடங்களுக்கு செல்லலாம் என்று சுற்றுலா கமிட்டியினர் முடிவு செய்திருந்தனர். அங்கே செல்வதற்கு பேருந்தும் தயாராக இருந்தது. தூர பிரதேசங்களுக்கு மட்டும் விமானத்தில் சென்று கொள்ளலாம் என்ற அவர்களின் முடிவு அனைவருக்கும் சரியென்று பட்டது. இவற்றை எல்லாம் முடித்துவிட்டு தமிழ்நாட்டில் உள்ள மற்ற இடங்களையும் இறுதியாக சென்னையில் உள்ள கோயில்களையும் தரிசித்துக் கொள்ளலாம் என்று சுற்றுலா வருபவர்களுக்கு அறிவித்துவிட்டனர்.

கிருஷ்ணஜாட்சி ஹர்சவர்தனுடன் அவர்களுடைய லண்டன் பிரயாணத்துக்காக அவள் உடைமைகளை எடுத்து வைத்துக் கொண்டிருக்க நீரஜாட்சி பட்டாபிராமனுக்கும் சீதாலெட்சுமிக்கும் உதவிக் கொண்டிருந்தாள், இல்லை இல்லை அவள் அவர்கள் இருவரையும் மிரட்டிக் கொண்டிருந்தாள்.

"சித்தம்மா மூட்டுவலிக்கு தைலம் எடுத்து வச்சியா? நீங்க போற இடத்துல குளிர் அதிகம் இருக்கும். சால்வை எடுத்து வச்சிட்டியா?" என்று கேட்டபடி அந்த பொருட்களை எல்லாம் எடுத்து வைக்க

பட்டாபிராமன் மனைவியை கிண்டலாக பார்த்தபடி "என் பேத்தியை பார்த்து திருந்துடி..இவ்ளோ வயசாறது, இன்னும் துளி கூட பொறுப்பில்லாம நடந்துக்கற" என்று கூற சீதாலெட்சுமி மோவாயை தோள்பட்டையில் இடித்துக் கொண்டார். ஆனால் நீரஜாட்சியின் பார்வை அடுத்து பட்டாபிராமனின் பக்கம் திரும்ப அவரும் கப்சிப்பானார்.

நீரஜாட்சி "க்கும்..! நீங்க ஷேத்ராடானம் போற மாதிரி இல்ல, ஏதோ ஸ்கூல் பசங்க டூர் போற மாதிரி அதை மறந்துட்டேன், இதை மறந்துட்டேனு சொல்லிட்டு ரெண்டு நாளா அதகளம் பண்ணிட்டிருக்கிங்க. ஏதோ நான் ஒருத்தி இருக்கறதால பரவால்ல" என்று அவர்களை செல்லமாக அதட்டிவிட்டு சூட்கேசை மூடினாள்.

அவர்களின் லக்கேஜை ஹாலில் கொண்டு வைக்க  சென்றவளை பெருமிதமாக பார்த்தபடி "சீதே இவ அப்பிடியே என் அம்மா மாதிரிடி" என்று சிலாகிக்க

சீதாலெட்சுமி "எப்பிடி சொல்லுறேள்? இவ்ளோ நேரம் என்னை போட்டு வறுத்தெடுத்தாளே.., அதை வச்சு தானே" என்று கணவரை முறைத்துவிட்டு அவருக்கு கைகொடுத்தவர் அவர் கையைப் பிடித்து எழுப்பி அழைத்துச் சென்றார்.

அதற்குள் இரு மகன்களும் மருமகள்களும் ஹாலுக்கு அவரவர் லக்கேஜுடன் வந்துவிட்டனர். சீதாலெட்சுமி பூஜையறயில் சென்று அங்கிருந்த வெங்கடேஸ்வருக்கு ஆரத்தி காட்டிவிட்டு ஹாலுக்கு வந்து அனைவரிடமும் காட்ட அனைவரும் ஆரத்தியை கண்ணில் ஒற்றிக் கொண்டனர்.

கோதண்டராமன் கைக்கடிகாரத்தைப் பர்த்தவர் "அப்பா நாழியாறது. இப்போ கிளம்புனா தான் பஸ்ஸில போய் செட்டில் ஆக கரெக்டா இருக்கும்" என்று நினைவூட்ட பட்டாபிராமன் சீதாலெட்சுமியிடம் சீக்கிரம் பூஜையறை சமாச்சாரங்களை முடிக்குமாறு கூறினார்.

பத்மாவதி ஹர்சவர்தன் மற்றும் கிருஷ்ணஜாட்சியை அழைத்தவர் "ரெண்டு பேரும் பத்திரமா போயிட்டு வாங்கோ. அங்கே போய் இறங்குனதும் நேக்கு கால் பண்ணனும்" என்று கூறிவிட்டு மகனை ஆசிர்வதித்தவர் மருமகளின் தாடையை கிள்ளி முத்தமிட்டுக் கொண்டார்.

மைதிலியும் அதே அறிவுரையை வழங்கிவிட்டு பத்மாவதியின் காதை கடிக்க ஆரம்பித்தார்.

"அக்கா., இவா ரெண்டு பேருக்கும் உன்னோட அறிவுரை தேவையே இல்லை. நீ சொல்ல வேண்டியது உன் இளைய பிள்ளைக்கும் மருமகளுக்கும் தான்" என்று கூற பத்மாவதி நீரஜாட்சியையும் ரகுநந்தனையும் அழைக்க இருவரும் அவர் அருகில் வந்தனர்.

ரகுநந்தன் அவர் அருகில் வந்ததும் "மா! புது போன் ஒழுங்கா வேலை செய்யுது தானே?" என்று மறக்காமல் கேட்க அவரும் ஆமென்று கூறியவர் மகனிடம் "நந்து! நேக்கு எப்போவுமே உன்னை நினைச்சு தான் கவலைடா. ரெண்டு பேரும் முறைச்சிண்டே இருக்காதேள்டா. எவ்ளோ ஆசையா நாங்க எல்லாரும் கல்யாணம் பண்ணி வச்சோம்?" என்று அமைதியான குரலில் இருவரிடமும் பேச ஆரம்பித்தார்.

"நாங்க வர்ற வரைக்கும் சண்டை போடாம சமத்து பசங்களா இருங்கடா ரெண்டு பேரும். சின்ன குழந்தேள் கிட்ட சொல்லுற மாதிரி சொல்ல வச்சிட்டேளே" என்று வேடிக்கையாய் பேசுவது போல அறிவுறுத்திவிட்டு கிளம்பினார்.

குடும்பத்தினர் வெளியேற இரு இளம்ஜோடிகளும் அவர்களை தொடர்ந்தனர். நீரஜாட்சி ஹர்சவர்தனிடமும் கிருஷ்ணஜாட்சியிடமும் அவர்களை மாலை விமானத்துக்கு தயாராகும் படி கூறிவிட்டு ரகுநந்தனுடன் பெரியவர்களை வழியனுப்பி வைக்க காரில் ஏறினாள்.

பேருந்து நிற்குமிடத்தை அடைந்தவர்களிடம் நீரஜாட்சி மீண்டும் மீண்டும் கவனமாக இருந்து கொள்ளுமாறு அறிவுறுத்த மைதிலி "உன் பாட்டி தாத்தாவை பத்திரமா கொண்டு வந்து ஒப்படைக்க வேண்டியது என் பொறுப்பு. நீ டென்சன் ஆகாதே. அம்மா நீங்களே உங்க பேத்தியண்ட சொல்லுங்கோ" என்று சீதாலெட்சுமியை அழைக்க

அவரும் "நீரு! நாங்க பத்திரமா போயிட்டு வந்திடுவோம்டிம்மா. அதான் உன் மாமா, மாமிகள் இருக்காளோன்னோ அவா எங்களை கவனமா பார்த்துப்பா" என்று சொல்ல அவளுக்கு கண் கலங்கியது.

கலங்கிய கண்களுடன் அவரைக் கட்டிக் கொண்டவள் "நான் நம்மாத்துக்கு வந்த நாள்ல இருந்து உன்னையும் பட்டுவையும் பிரிஞ்சதே இல்ல சித்தம்மா. பேசாம நானும் உங்களோட வரட்டுமா?" என்று கேட்டு குடும்பத்தினருடன் சேர்த்து கணவனையும் அதிர வைத்தாள்.

ரகுநந்தன் "வாட்? உனக்கு என்ன பைத்தியமாடி? அவா திரும்புறதுக்கு குறைஞ்சது ஒரு மாசமாச்சும் ஆகும். அவ்ளோ நாள் நீ அவாளோட சேர்ந்து சுத்த போறியா?" என்று பதறியவனாய் கேட்ட போதே பத்மாவதிக்கும் மைதிலிக்கும் உள்ளுக்குள் இது வரை இருந்த தவிப்பு சிறிது மட்டுப்பட்டது. நீரஜாட்சி சொன்னது போல இது ஒரு சாதாரண பிரச்சனை தான் போல என்று எண்ணியவர்கள் அவனது முகம் போன போக்கை கண்டதும் பக்கென்று சிரித்துவிட நீரஜாட்சி மட்டும் அவனை அலட்சியமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு சீதாலெட்சுமியை கட்டிக் கொண்டாள்.

வேங்கடநாதன் "நீரு! எல்லாரும் சீக்கிரமா வந்துடுவோம்டா. கண்ணை துடைச்சுக்கோ" என்றபடி மருமகளை இயல்புநிலைக்கு கொண்டு வர அதே நேரம் பேருந்து கிளம்ப போவதாக ஒருவர் வந்து கூற அனைவரும் நீரஜாட்சிக்கும் ரகுநந்தனுக்கும் கையசைத்து விடைபெற்றனர்.

அவர்கள் பேருந்தில் ஏறி பேருந்து அங்கிருந்து நகரும் வரை இருவரும் அதையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு ஒரு பெருமூச்சுடன் கிளம்பினர்.

**************

காரில் ஏதும் பேசாமல் வீட்டுக்கு வந்து சேர்ந்தவர்கள் மதியவுணவை முடித்துவிட்டு தேனிலவு செல்லும் தம்பதியினருக்கு உதவி செய்ய தொடங்கினர். நேரம் போவதே தெரியாமல் கடந்துவிட விமானநிலையத்துக்கு செல்வதற்காக லக்கேஜூடன் வெளியே வந்தனர் ஹர்சவர்தனும் கிருஷ்ணஜாட்சியும்.

ரகுநந்தன் அவற்றை கொண்டு சென்று காரில் வைத்தவன் நீரஜாட்சியை ஒரு பார்வை மட்டும் பார்க்க அவள் சென்று முன்னிருக்கையில் அமர்ந்து கொண்டாள். விமான நிலையம் வரும் வரை ஹர்சவர்தனுடன் அரட்டை அடித்துக் கொண்டே வந்தனர் மூவரும்.

விமானநிலையத்தில் நுழைந்தவர்கள் விமானம் கிளம்புவதற்கான அறிவிப்புக்காக காத்திருக்கையில் நீரஜாட்சி கிருஷ்ணஜாட்சியிடம் "எல்லாரும் என்னை தனியா விட்டுட்டு கிளம்புறிங்களே?" என்று கூறிவிட கிருஷ்ணஜாட்சி தங்கையின் குரலில் இருந்த வருத்தத்தில் கலங்கி விட்டாள்.

"நீரு! எதுவும் பிரச்சனையாடி? கொஞ்ச நாளா உன் முகமே சரியில்லயே" என்றவளிடம் நீரஜாட்சி தன்னை சமாளித்தவளாய் "நான்..சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் கிருஷ்ணா. எனக்கு ஒரு பிராப்ளமும் இல்ல" என்று சிரித்து வைக்க அதன் பின்னரும் அவள் சந்தேகம் தீரவில்லை.

ஆனால் அதற்குள் விமானத்துக்கான அறிவிப்பு வந்துவிட இருவரும் கிளம்பினர். ரகுநந்தனும் நீரஜாட்சியும் தத்தம் உடன்பிறப்புகள் கண்ணிலிருந்து மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் பின்னர் கிளம்பினர்.

வீட்டுக்கு வந்தவர்களின் மனதை வீட்டின் அசாதாரணமான அமைதி ஏதோ செய்ய நீரஜாட்சி இரவுணவு தயாரிக்கிறேன் பேர்வழியாக சமையலறைக்குள் புகுந்து கொள்ள ரகுநந்தன் லேப்டாப்புக்குள் தன்னை புதைத்துக் கொண்டான்.

மொபைலில் அழைப்பு வர யாரென்று பார்த்தவன் திரையில் தெரிந்த பெயரைக் கண்டதும் புன்னகையுடன் அழைப்பை ஏற்று "ஹலோ வருண்" என்று பேச ஆரம்பித்தான். அவனை அழைத்தவன் அவனுடன் லண்டனில் படித்த அவனது நண்பன் வருண் தான்.

அப்பா காலத்தில் ஆஸ்திரேலியாவில் செட்டிலான அவனது குடும்பத்துக்கு சொந்தமாக அங்கே ஒரு  சிமெண்ட் ஃபேக்டரி இருக்கிறது. அதன் மேலாண்மை இப்போது அவன் வசம் தான் இருந்தது. அவன் இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காகவும் அதை பற்றி பேசுவதற்காகவும் தான் அழைத்திருந்தான்.

கையோடு ரகுநந்தன் நேரில் வந்து ஆலோசனை கொடுத்தான் என்றால் இன்னும் நன்றாக இருக்கும் என்று கூறிவிட ரகுநந்தனும் அதற்கு சம்மதித்துவிட்டான். போனை வைத்தவன் தனக்கும் நீரஜாட்சிக்கும் இடையே சிறிது இடைவெளி இருந்தால் மட்டுமே தன்னால் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு  காண முடியும் என்று எண்ணிக் கொண்டான்.

வெகுநேரமாகிவிட்டதால் வயிறு தனக்கு இரை போடுமாறு அழைக்க அவன் கீழே செல்ல டைனிங் டேபிளில் அவனுக்கு சாப்பாடு மூடி வைக்கப்பட்டிருக்க அவனது கண்கள் நீரஜாட்சியை தேடின.

வெளியே அவள் போன் பேசும் சத்தம் கேட்கவும் அவன் நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தான். நீரஜாட்சி போனை வைத்துவிட்டு வீட்டுக்குள் அடியெடுத்து வைக்க அந்நேரம் பார்த்து அவன் மூடி வைத்திருந்த சாப்பாட்டை திறந்துப் பார்த்துவிட்டு முகம் சுளித்தான்.

"உப்புமாவா? மனுசன் சாப்பிடுவானா இதை? இதை செய்யுறதுக்கு தான் இவ்ளோ பில்டப்பா" என்று பாத்திரத்தை அலட்சியமாக தள்ளிவிட்டு மாடிப்படி ஏறியவனை எரிச்சலுடன் பார்த்தாள் நீரஜாட்சி.

"உப்புமானு எவ்ளோ சாதாரணாமா சொல்லிட்டு போறான்? இது கூட கிடைக்காம நாட்டுல எவ்ளோ பேர் பட்டினியா தூங்குறாங்கன்னு இவனுக்கு எங்கே தெரியப் போகுது?" என்று முணுமுணுத்தபடியே அந்த பாத்திரத்தை எடுத்தவள் விறுவிறுவென்று வாயில்புற கேட்டை நோக்கி சென்றாள்.

வெளியே தெருவை சுற்றிமுற்றி பார்த்தவள் எதையோ கண்டு சிரிக்க அங்கே அவளிடம் வந்து வாலாட்டியபடி நின்றது ஒரு நாய். அதன் அருகில் குனிந்தவள் "ஸ்கூபி! எப்பிடி இருக்க?" என்றபடி  அதன் காதை தடவிக்கொடுத்தவள் அதற்கு உணவு வைக்கும் பாத்திரத்தை எடுத்து மொத்த உப்புமாவையும் கொட்டி அதனிடம் வைக்க அது ஆவலுடன் சாப்பிட ஆரம்பித்தது.

அது சாப்பிடும் அழகை ரசித்தபடி நின்றவள் சாப்பிட்டு முடித்ததும் அவளிடம் வந்து உரசிக் கொண்டு நின்ற ஸ்கூபியை தடவிக் கொடுத்து அனுப்பி வைத்தாள். ஸ்கூபியைக் கண்டதும் மனம் இலேசாக அதே மனநிலையுடன் வீட்டுக்குள் சென்றவள் கணவனின் கோபம் சூழ்ந்த முகத்தை கண்டதும் யோசனையுடன் சமையலறையை நோக்கிச் சென்றாள்.

சற்று முன்னர் தனக்கு சாப்பாடு வைத்திருந்த பாத்திரம் அவள் கையில் காலியாக இருப்பதைக் கண்டவன் கடுப்புடன் அவள் பின்னோடு சென்று "இங்கே இருந்த உப்புமாவை என்ன பண்ணுன?" என்று கேட்க

அவளோ அலட்சியமாக அந்த பாத்திரங்களை அலம்பிவிட்டு "ஸ்கூபிக்கு போட்டுட்டு வந்துட்டேன்" என்று கூறிவிட்டு புடவை முந்தானையில் ஈரக்கரத்தை துடைத்தபடி நகர்ந்தாள்.

தன்னுடைய சாப்பாட்டை நாய்க்கு போட்டது மட்டுமல்லாது அதை திமிராய் வேறு சொல்கிறாள் இவள் என்ற எண்ணம் அவனுக்குள் எரிச்சலை மூட்ட "ஒரு நாள் எங்க அம்மா இந்தாத்துல இல்லன்னதும் நீ என்னை பட்டினி போடுற பார்த்தியா? ஒரு மனுசன் வீட்டுக்கு வந்தா அவனுக்கு நிம்மதி தான் இல்லைனு பார்த்தா இப்போ சாப்பாடும் இல்லாம போயிடுத்து" என்று அவன் கத்த துவங்கினான்.

நீரஜாட்சி "இப்போவும் ஒன்னும் கெட்டுப் போகல. கிச்சன்ல இன்னும் ரவை வெங்காயம்லாம் இருக்கு. போய் நீயே உப்புமா கிண்டி சாப்பிட்டுக்கோ. முடிஞ்சா நாளைக்கு கொஞ்சம் சீக்கிரமா எழுந்திருச்சு வாக்கிங் மண்ணாங்கட்டினு காலைல ஊர் சுத்தாம உனக்கு வேணுங்கிற பிரேக்ஃபாஸ்டை நீயே சமைச்சுக்கோ. ஏன்னா இனிமே நான் உனக்காக சமைக்க போறது இல்ல" என்று அமர்த்தலாக  மொழிந்துவிட்டு மாடியை நோக்கி சென்றாள்.

"ஏய் உன் மனசுல என்ன தான்டி நினைச்சிட்டிருக்க?"

"இப்போதைக்கு தூங்கணும்னு நினைக்கிறேன். நீயும் சமைச்சு சாப்பிட்டுட்டு, கிச்சனை கிளீன் பண்ணிட்டு வந்து தூங்கு. காலையிலே வேற சமைக்கணும் இல்லையா?" என்று அவனுக்கு பதிலளித்தபடியே அவர்களின் அறைக்கு சென்றுவிட்டாள்.

ரகுநந்தன் அதற்கு பின் சமையலறைக்கு வந்தவன் வெந்ததும் வேகாததுமாக எதையோ செய்து சாப்பிட்டவன் நடந்த கலவரத்தில் அவன் நாளை ஆஸ்திரேலியா கிளம்ப வேண்டும் என்ற விஷயத்தை அவளிடம் சொல்ல மறந்தான்.

*************

மறுநாளும் நீரஜாட்சி தன் கையால் அவனுக்கு தண்ணீர் கொடுக்க கூட முன்வரவில்லை. அவனோ இன்னும் சில மணி நேரங்களில் விமானம் ஏற வேண்டிய பதற்றத்திலிருக்க காலையிலேயே போன் செய்திருந்தான் வருண்.

அவனிடம் "நான் இன்னும் கொஞ்ச நேரத்துல ஏர்போர்ட் கிளம்பிடுவேன்டா. டோன்ட் ஒர்ரி" என்று கூறிவிட்டு போனை வைக்க அவன் பின்னே நின்ற நீரஜாட்சி இவன் எங்கே செல்கிறான் என்ற ரீதியில்அவனைப் பார்க்க இப்போது அலட்சியமாய் செல்வது அவனது முறையாயிற்று.

நீரஜாட்சி அவன் பின்னே அவர்களின் அறைக்குள் வந்தவள் "நந்து நீ எங்கே கிளம்புற?" என்று கேட்க

அவன் மொட்டையாக "ஆஸ்திரேலியா" என்று மட்டும் கூறிவிட்டு ஏற்கெனவே எடுத்து வைத்திருந்த லக்கேஜை பார்த்து திருப்திப்பட்டுக் கொண்டான்.

நீரஜாட்சி "ஆஸ்திரேலியாவா? அங்கே ஏன் போற? ஏன் திடீர்னு.." என்று அவள் கேள்வியாய் அடுக்கும் போதே அவள் புறம் திரும்பியவன் "ஏன்? போனா என்ன? நான் என்ன பண்ணுறேன், எங்கே போறேன் இதெல்லாம் உன் கிட்ட எழுதி வச்சே ஆகணுமா?" என்று அவளை அலட்சியப்படுத்த நீரஜாட்சி கையைப் பிசைந்தபடி நின்றாள்.

அவளுக்கு இந்த உலகில் பிடிக்காத விஷயம் என்றால் அது தனிமை மட்டுமே. அவளால் ஆளரவம் இன்றி இருக்க முடியாது. எனவே ஒரு நப்பாசையுடன் "நீ எப்போ திரும்பி வருவ நந்து?" என்று கேட்க

அவன் "எப்போ திரும்பி வரணும்னு நான் இன்னும் டிசைட் பண்ணல. மே பி ஒன் மன்த் ஆகலாம்" என்று சாதாரணமாய் கூறிவிட்டு லக்கேஜை எடுத்துக் கொள்ள

நீரஜாட்சி "ஒன் மன்தா? என்னால அவ்ளோ நாள் தனியா இந்த பெரிய வீட்டுல இருக்க முடியாது நந்து. என்னையும் உன் கூடவே கூட்டிட்டு போ பிளீஸ்" என்று கேட்க அவன் எரிச்சலுடன் திரும்பினான்.

"எதுக்கு உன்னை கூட்டிட்டு போகணும்? இல்ல தெரியாம தான் கேக்குறேன், நல்லா டிராமா போட்டு என்னை கல்யாணம் பண்ணியாச்சு..அப்புறமும் பொறுக்காம பேசி பேசியே என் நிம்மதியை கெடுத்தாச்சு..இப்போ தான் உன் கிட்ட இருந்து ஒரு பத்து நாள் விடுதலை கிடைச்சதுனு சந்தோசப்பட்டா அங்கேயும் வர்றேனு சொல்லுற.

ஒரு பொண்டாட்டியா நீ எதையுமே செய்யாதப்போ என் காசுல என் கூடவே ஒட்டிண்டு வரணும்னு நினைக்க மட்டும் உனக்கு என்ன உரிமை இருக்கு? உன் முகத்தை பார்க்காம நீரஜாட்சினு ஒருத்தி இருக்காங்கறதையே ஒரு பத்து நாளுக்கு மறக்கலாம்னு தான் நான் ஆஸ்திரேலியா போறேன். உண்மையை சொல்லணும்னா எனக்கு திரும்பி வர கூட இஷ்டமில்ல. ஒரு வேளை திரும்பி வந்தேன்னா இந்தாத்துல நீ இல்லாம போனேனு வையேன், இன்னும் சந்தோசப்படுவேன்"  என்று கண் மண் தெரியாமல் வார்த்தையை விட ஏற்கெனவே அவனிடம் இருந்து மனதளவில் விலகியிருந்த நீரஜாட்சி அன்று அவனிடமிருந்து மொத்தமாக விலகிவிட்டாள்.

ரகுநந்தன் தான் பேசியதற்கு அவள் பொங்கியெழுந்து வாக்குவாதம் செய்வாள் என்று எதிர்பார்க்க அவளோ அமைதியாக முகம் இறுக நின்று கொண்டிருந்தாள். நீரஜாட்சியின் இறுகிய முகம் அவனுக்கு மூளையில் அபாயமணியை ஒலிக்க செய்தாலும் அதை எல்லாம் கண்டுகொள்ளும் நிலையில் அவன் இல்லை.

ஏதும் பேசாமல் அவன் சூட்கேசுடன் நகர அதற்கு பின் அவனிடம் பேசுவதற்கு அவளுக்கும் எதுவுமில்லை. மெதுவாக நகர்ந்து டிரஸ்ஸிங் டேபிள் மோடாவில் அமர்ந்தவளின் செவியில் கார் கிளம்பும் ஓசை நன்றாக விழுந்தது. தன் எதிரே இருக்கும் கண்ணாடியில் தெரிந்த தனது பிம்பத்தை வெறிக்க ஆரம்பித்தாள்.

அதில் தெரிவது தன் உருவம் தானா என்ற சந்தேகம் அவளுக்கு எழுந்தது. பிறர் தன்னை அவமதிப்பாய் ஒரு சொல் கூறினாலும் பொறுக்காதவள் இவன் கூறும் இத்தனை வார்த்தைகளையும் பொறுத்ததோடு அதற்கு பதிலடியும் கொடுத்து கொண்டிருப்பது அவளுக்கே ஆச்சரியம் தான். பழைய நீரஜாட்சியாக இருந்திருந்தால் ரகுநந்தன் முதல் நாள் பேசிய பேச்சுக்கே போடாவென்று தூக்கிப் போட்டுவிட்டு சென்றிருப்பாள்.

எது தன்னை தடுக்கிறது என்று கண்ணாடியில் தன்னை உற்று நோக்கியவளின் பார்வையில் பட்டது ரகுநந்தன் தனது கையால் அணிவித்த அவனது பெயர் பொறித்த செயின். அவன் கட்டிய தாலியை விட இந்த செயினை தான் அவள் புனிதமாக மதித்தாள். அவள் மீதான ரகுநந்தனின் காதலுக்கு அடையாளமே அந்த செயின் தான்.

அதை கரங்கள் வருடிக் கொடுக்கையிலேயே அவனது வார்த்தைகள் செவியில் ஒலிக்க உள்ளுக்குள் மூண்ட வெறுப்பில் அவளது கரங்கள் அந்த செயினை கழற்றத் தொடங்கின.

ரகுநந்தன் என்றுமே கழற்றக் கூடாதென்று அன்புக்கட்டளையிட்டிருந்த தருணம் கண் முன் வர அலட்சியத்துடன் அதை கழற்றியவள் "இனிமே இது எனக்கு தேவையே இல்லை. இதை எனக்கு குடுத்தவனும் தான்" என்று சொன்னபடியே செயினை டிரஸ்ஸிங் டேபிள் மீது வீசியெறிந்தாள்.

 

Comments

  1. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பூங்காற்று 1