பூங்காற்று 48

Image
  நீரஜாட்சி அன்று காலையில் எழும் போதே அவளுக்கு மனது சரியில்லை. முதல் வேளையாக முகம் கழுவி விட்டு வராண்டாவில் சென்று காற்றாட அமர்ந்தவள் டியூசனுக்கு செல்லும் விக்கிக்கு டாட்டா காட்ட அவன் சைக்கிளில் ஏறியவன் "நீருக்கா! நான் இன்னும் ஒன் ஹவர்ல டியூசன் முடிச்சு வந்துடுவேன். அதுக்கு அப்புறம் மேட்சை ஸ்டார்ட் பண்ணுவோம்" என்று அறிவிப்பு விடுத்தபடி சென்றான். அவன் செல்வதை பார்த்துவிட்டு வனஜா "என்னமோ போ நீரு! இவன் பப்ளிக் எக்சாம்ல என்ன மார்க் வாங்குவானோனு அவனுக்கு பயம் இருக்கோ இல்லையோ எனக்கு டென்சனா இருக்கு. ஹாஃப் இயர்லில எய்ட்டி பர்சன்டேஜ் தான் வாங்கியிருக்கான்" என்று வருத்தமாக கூற நீரஜாட்சி "அக்கா எய்ட்டி பர்சண்டேஜ் உங்களுக்கு கம்மியா தெரியுதா ? பப்ளிக் எக்சாம் மார்க் நம்ம வாழ்க்கையை தீர்மானிக்கிறது இல்லக்கா. அதை தவிர அவனோட மத்த பழக்க வழக்கங்கள் தான் அவனை நல்ல மனுசனா காட்டும். வெறும் மார்க்கை வச்சு அவனை எடை போடாதிங்க. இப்போ இல்லைனாலும் வருங்காலத்துல அவன் ஒரு நல்ல நிலமைக்கு வருவான்" என்று விக்கியை புகழ்ந்து தள்ள வனஜா "அது சரி! நீ அவனை விட்டுக...

பூங்காற்று 39

 


பூங்காற்று 39

திருமண நாளின் விடியல் அழகாக ஆரம்பிக்க நீரஜாட்சியை அதிகாலையிலேயே எழுப்பி விட்டாள் கிருஷ்ணஜாட்சி. அவள் கண்ணை கசக்கிக் கொண்டு எழும்புகையிலேயே  அவுட் ஹவுசினுள் நுழைந்தார் பத்மாவதி.

"கிருஷ்ணா நீரஜா எழும்பிட்டாளா? தலையில எண்ணெய் வச்சிக்கணும்டி" என்று கூறியபடி நீரஜாட்சியிடம் வந்தவர் அவளைச் சீக்கிரமாக குளித்துவிட்டு தயாராக கூற அவளும் அவர்சொன்னபடி குளித்துவிட்டு  புடவையை சுற்றிக் கொண்டு வந்தாள். அதன் பின்னர் அடுத்த சடங்குக்கு அவளை அழைத்துச் செல்ல கிருஷ்ணஜாட்சியும் சீக்கிரமாக குளித்துவிட்டு நீரஜாட்சிக்கு நலங்கு வைப்பதற்காக அவளும் சென்றுவிட்டாள்.

அங்கே மைதிலி, சீதாலெட்சுமி, மைத்திரேயி, ஸ்ருதிகீர்த்தி இவர்களுடன் அவர்களின் மாமியார்களும் இருக்க பத்மாவதியே முன் நின்று நீரஜாட்சிக்கு மஞ்சள் பூசி நலங்கு வைக்க மற்றவர்களும் அதைப் பின்பற்றி சடங்கை ஆரம்பித்தனர்.

அதே நேரம் மண்டபத்தில் ரகுநந்தன் விரதத்துக்காக தயாரானான். ஹர்சவர்தனும், அவனது தந்தை, சித்தப்பா மற்றும் சகோதரிகளின் கணவர்கள் என அனைவரும் சூழ்ந்து கேலி செய்ய அவனும் திருமணச்சடங்குகளில் ஐக்கியமானான்.

வீட்டில் நீரஜாட்சியை மீண்டும் குளித்து வர சொல்லிவிட்டு மற்ற சம்பிரதாயங்களையும் அவளை முடிக்க வைத்துவிட்டு அனைவரும் மண்டபத்திற்கு செல்ல தயாராகுகையில் கிருஷ்ணஜாட்சியை தனது அறைக்கு அழைத்துச் சென்றார் பத்மாவதி. கிருஷ்ணஜாட்சியும் நீரஜாட்சியுடன் அவளது தோழி மற்றும் மைத்திரேயி இருப்பதால் பத்மாவதியுடன் அவரது அறைக்கு சென்றாள்.

அங்கே சென்றதும்  தனது மர பீரோவில் இருந்து நகைப்பெட்டிகளை எடுத்தவர் அவளை அமரச் சொல்லிவிட்டு தனது கையாலே அணிவிக்க கிருஷ்ணஜாட்சி பதறியவளாய் "இதுல்லாம் எதுக்கு மாமி?" என்று தடுக்க முயல

அவர் பெருமூச்சுடன் "இது எல்லாமே என் மூத்த மருமாளுக்குனு நான் பார்த்து பார்த்து வாங்கி வச்சதுடிமா! வேண்டானு சொல்லிடாதே. நீ என்னை மன்னிச்சிட்டேனு சொன்னது உண்மைனா இது எல்லாத்தையும் நீ இன்னைக்கு போட்டுக்கணும்" என்று கூறிவிட அதன் பின் அவள் மறுபேச்சு பேசவில்லை.

சில நிமிடங்களில் ஆபரணங்கள் மின்ன நின்றவளின் முகம் வழித்து திருஷ்டி கழித்தவர் அவளின் மாங்கல்யமற்ற கழுத்தை வெறித்துவிட்டு குங்குமச்சிமிழில் இருந்து குங்குமத்தை எடுத்து கிருஷ்ணஜாட்சியின் முன்வகிட்டில் வைத்துவிட்டு "தீர்க்க சுமங்கலியா இருக்கணும்" என்று ஆசிர்வதித்துவிட்டு அவளை நீரஜாட்சி தயாராகிவிட்டாளா என்று பார்த்துவர அனுப்பினார்.

கிருஷ்ணஜாட்சி பத்மாவதியின் செய்கையில் திகைத்தாலும் வயதில் பெரியவரை மறுத்து பேச வழியின்றி அனைத்தையும் இன்முகத்தோடு கேட்டுவிட்டு நீரஜாட்சியை அலங்கரிக்க சென்றாள்.

அவள் சென்றதும் பத்மாவதி தானும் மகனின் திருமணத்துக்கு பட்டாடை உடுத்தி தயாரானாவர் அறையை பூட்டிவிட்டு கீழே சென்றார். நேரே பூஜையறைக்கு சென்றவர் நீண்டநாட்களுக்கு முன்னர் தனது கையால் அங்கே வைக்கப்பட்ட மாங்கல்யத்தை எடுத்தவர் "பகவானே இன்னைக்கு எல்லாமே நல்லபடியா முடியணும். என் குழந்தேளுக்கு இனி எந்த சிரமமும் கஷ்டமும் வராம பார்த்துக்கோங்கோ" என்று  வேண்டிவிட்டு பூஜையறையை அடைத்துவிட்டு மைதிலியை அழைத்தார்.

நீரஜாட்சி தயாராகிவிட்டாளா என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே மண்டபத்திலிருந்து கார்கள் வந்துவிட முதலில் நீரஜாட்சியை அவளது சகோதரி மற்றும் மைத்திரேயியுடன் அனுப்பியவர் கவிதாவையும் ஸ்ருதிகீர்த்தியையும் அவர்களுடன் செல்ல பணித்தார்.

அடுத்த காரில் பெரிய பெண்மணிகள் அனைவரும் ஏறிக் கொள்ள சிறிது நேரத்தில் இரண்டு கார்களும் மண்டபத்தை அடைய அங்கே வர்ஷா மணப்பெண்ணுக்கு ஆரத்தி எடுக்க தயாராக நின்றாள்.

நீரஜாட்சி காரில் இருந்து இறங்கியவள் அந்த இருள் பிரியாத காலை வேளையில் மண்டபத்தின் ஒரு புறத்தில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த "நந்து வெட்ஸ் நீரு" என்ற பெயர்களை கண்டதும் முகம் பூவாய் மலர அவளது மருதாணியில் சிவந்திருந்த கரங்கள் கழுத்தில் இருந்த செயினிலிருக்கும் நந்து என்ற பெயரை மென்மையாக வருடிக் கொடுத்தது.

மங்கலவாக்கியம் முழங்க ஆரம்பிக்க வர்ஷா வந்து ஆரத்தி எடுத்து அவளை உள்ளே அழைத்துச் செல்ல உறவினர் புடைசூழ மண்டபத்தில் நுழைந்தவளின் விழிகளோ ரகுநந்தனை தான் தேடியது. திருமணநாள் ஏற்படுத்திய இனம்புரியாத மகிழ்ச்சியில் மனதின் கலக்கங்கள் எல்லாம் ஓடி ஒளிந்து கொள்ள அவளின் அகமும் புறமும் ரகுநந்தனின் பார்வைக்காக தவமிருக்க அவளது சிந்தனையின் நாயகன் இத்தனை வருட பிரம்மச்சரியவாழ்வை முடித்து கிருஹஸ்தன் ஆவதற்கான பூஜையை செய்து கொண்டிருந்தான்.

நீரஜாட்சி அவனை பார்ப்பதற்குள் மணமகள் அறைக்குள் அழைத்துச் செல்லப்பட்டாள். அவளுக்கு ஊஞ்சலுக்கான பட்டுச்சேலையை கட்டிவிட சொல்லிவிட்டு பத்மாவதி தனது இளைய புத்திரன் பூஜையை முடித்து விட்டானா என்று பார்க்கச் சென்றார். அங்கே பூஜை முடிந்துவிடவே ஹர்சவர்தனிடம் "ஹர்சா இவனை காசியாத்திரைக்கு ரெடி பண்ணுடா" என்றவர் ரகுநந்தனிடம் வந்து நெட்டி முறித்து திருஷ்டி கழித்தார்.

"கண்ணா கொஞ்சம் மேல பாரு" என்ற சொன்னபடி அவன் விழிகளில் மையை தடவி விட அவன் "மா! இது வேறயா?" என்று சிணுங்க அவனை கேலி செய்தான் ஹர்சவர்தன்.

"நீ இன்னைக்கு கல்யாணமாப்பிள்ளைடா! உன் மேல திருஷ்டி பட்டுடக் கூடாதுனு தான் மை பூசி விடுறாங்க. கண்ணை சிமிட்டாம இருடா" என்று கூற அவனும் இது வரை மை பூசி பழக்கமில்லாதவன் கண் கலங்க நின்றான்.

தாயார் சென்றதும் ரகுநந்தன் "டேய் நேக்கு கண்ணை உறுத்துதுடா. இந்த நீரு எப்பிடி தான் டெய்லி இதை கண்ணு நிறைய போட்டுட்டு சுத்தறாளோ?" என்று உச்சுக் கொட்ட

ஹர்சவர்தன் அந்த அறையில் அவர்களுடன் நின்ற சகோதரிகளின் கணவர்மாரிடம் "பார்த்தேளா அத்திம்பேர், இப்போ கூட இவனுக்கு நீரு நியாபகம் தான்" என்று கேலி செய்துவிட்டு  அவனை காசியாத்திரைக்கு தயாராக்க ஆரம்பித்தான்.

அதே நேரம் நீரஜாட்சிக்கு முழு அலங்காரமும் முடிந்துவிட மைத்திரேயி அவளது கன்னத்தில் திருஷ்டி படாமலிருக்க கருப்பு மையினால் பொட்டு வைத்துவிட்டு அவளை கண்ணாடி முன் நிற்க வைக்க நீரஜாட்சிக்கு தனது கண்களையே தன்னால் நம்ப முடியவில்லை.

ரகுநந்தனின் 'நிப்பான் பெயிண்ட் ஜோக்' நினைவுக்கு வரவே அதை நினைத்து அவள் தனியே சிரித்துக் கொள்ள கவிதா "என்னாச்சு கல்யாணப்பொண்ணு தனியா சிரிக்கிறா? அதுக்குள்ளவா கனவு காண ஆரம்பிச்சிட்ட நீரு?" என்று கேலி செய்து அவளை இன்னும் வெட்கத்தில் மூழ்கடித்தாள்.

இவ்வாறு ஆளாளுக்கு அவளை கேலி செய்து முகம் சிவக்க வைத்துக் கொண்டிருக்கையில் கரோலினும் மெர்லினுடன் வந்து சேர அந்த அறையில் கலகலப்பு மண்டபத்தையே நிறைத்தது என்றால் மிகையில்லை.

அதே நேரம் பத்மாவதியும் மைதிலியும் பரபரப்பாக உறவினர்களை வரவேற்று அமரவைத்து விட்டு மாமனார் மாமியாரிடம் வந்து சேர்ந்தனர். பட்டாபிராமன் அன்றைக்கு எல்லா காரியத்தையும் இழுத்துப் போட்டு செய்தபடி வலம் வந்த மூத்தமருமகளைக் கனிவாக பார்த்தபடி "பத்மா! கொஞ்சம் நேரம் உக்காரும்மா! காத்தாலே இருந்து நிக்காம சுத்திண்டிருக்கியே" என்று அக்கறையாக கூற அவரும் ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு மாமனாரிடம் அமர்ந்தவர் "என்னப்பா பண்ணறது? இங்கே மாப்பிள்ளை பொண்ணு ரெண்டு பேருமே நம்மாத்துகாராளா போயிட்டாளே. அப்போ நான் தானே ஓடியாடி பண்ணனும்? மத்த எல்லா சம்பிரதாயம், சடங்கு எல்லாத்தையும் மைதிலி நல்லபடியா செஞ்சு முடிச்சா. என்னால முடிஞ்சது கல்யாணத்துக்கு நான் செய்யறேன்பா" என்றார் மனநிறைவுடன்.

சீதாலெட்சுமி மூத்தமருமகளின் கையைப் பற்றி அழுத்தமாக தட்டிக் கொடுக்க அங்கே வந்த வேங்கடநாதன் "மாமியாரும் மருமகளும் அப்புறமா போஸ் குடுத்துக்கோங்கோ! அங்கே நந்து காசியாத்திரையை முடிச்சிட்டான். அடுத்து மாலை மாத்தணுமோன்னோ! பத்மா நீ போய் நீரு ரெடியாயிட்டாளானு பார்த்துட்டு அவளை அழைச்சிண்டு வா" என்று படபடத்துவிட்டு செல்ல சீதாலெட்சுமியும் பட்டாபிராமனும் மாலை மாற்றும் சடங்கை கண்டுகளிக்க எழுந்தனர்.

சிறிது நேரத்தில் நீரஜாட்சி அடர்சிவப்பு நிற பட்டில் முழு அலங்கார பூஷிதையாக வர சீதாலெட்சுமி "என் ராஜாத்தி! பேருக்கு ஏத்த மாதிரி நீ இன்னைக்கு பார்க்க மகாலெட்சுமி மாதிரியே இருக்கேடி" என்க

நீரஜாட்சி "அப்போ இவ்ளோ நாள் நான் எப்பிடி இருந்தேன் சித்தம்மா?" என்று குறைபட மைத்திரேயி "அடியே இன்னைக்கு உனக்கு விவாகம். இன்னைக்காச்சும் கொஞ்சம் பேச்சை குறைக்கலாமே" என்று கேலி செய்தபடி அழைத்துச் சென்றாள்.

மைதிலி கிருஷ்ணஜாட்சியிடம் "கிருஷ்ணா நீ போய் ஹர்சன் கிட்ட நந்துவை அழைச்சிண்டு வரச் சொல்லு" என்று கட்டளையிட அவள் மணமகன் அறையை நோக்கிச் சென்றாள்.

அவள் கதவை நாசூக்காக தட்ட கதவை திறந்தவன் ஹர்சவர்தன் தான். அடர்பச்சை நிற பட்டுப்புடவையில் பொற்பாவையென நின்ற மனைவியின் அழகில் மெய்மறந்து நின்றவனை கேலியாக பார்த்த கிருஷ்ணஜாட்சி "அண்டசராசரமும் உங்க வாயில தெரியுது" என்று கேலி செய்துவிட்டு அவன் தலையில் தட்ட வாயை மூடிக் கொண்டான் அவன்.

"இவ்ளோ அழகா இருந்தா யாரா இருந்தாலும் ரசிக்க தான் செய்வாங்க கிருஷ்ணா. பை த வே நான் எப்பிடி இருக்கேனு நீ சொல்லவே இல்லையே" என்று அவள் முன் வந்து நின்றவனின் தோற்றம் அவளது கருத்தைக் கவராமல் இல்லை.

பட்டு வேஷ்டி சட்டையில் ஜொலித்த அந்த ஆறடி அழகனின் தோற்றத்தில் மெய்மறந்தவள் அதை மறைத்தவாறே உதட்டை சுழித்துவிட்டு "ஏதோ இருக்கிங்க, சோளக்கொல்லை பொம்மைக்கு வேஷ்டி சட்டை போட்ட மாதிரி" என்று கேலி செய்தவாறு அவனை விலக்கிவிட்டு அறையினுள் சென்றாள்.

உள்ளே அவள் நுழைந்ததும் ரகுநந்தன் சங்கடத்துடன் விழிக்க கிருஷ்ணஜாட்சி "ரொம்ப வெக்கப்படாதிங்க அம்மாஞ்சி. இன்னைக்கு நீங்க அங்கவஷ்திரம் தான் கட்டிக்கணும். ஈவினிங் ரிசப்சனுக்கு தான் இனிமே சேர்ட் தருவோம்" என்று கேலி செய்துவிட்டு அவனை வெளியே அழைத்து வரக் கூறிவிட்டு அங்கிருந்து நகர

ரகுநந்தன் "டேய் பார்த்தியா? மன்னி கூட கேலி பண்ணிட்டு போறாடா. எனக்கு சேர்ட் வேணும்டா" என்று மீண்டும் அடம்பிடிக்க ஹர்சவர்தன் "அதுல்லாம் முடியாது. நீ இப்பிடி தான் இருக்கணும். ஒழுங்கா என்னோட வா. நானெல்லாம் என்னோட விவாகத்துல இல்லயா? ஏதோ இவன் மட்டும் தான் வானத்துல இருந்து குதிச்ச மாதிரி" என்று அதட்டியபடி அவனை வெளியே அழைத்துவந்தான்.

வீடியோ அவனை நோக்கி திரும்ப அந்த அகன்ற மணமேடையை அடைந்தவனின் பார்வை தனது எதிரில் சிவப்புநிறப்பட்டில் செம்பாவையென நின்ற நீரஜாட்சியைக் கண்டதும் உலகம் மறந்தான்.

நீரஜாட்சி ஆறடி உயரமும், அகன்ற தோளுமாய் ஆண்மைக்கே இலக்கணமாய் தன் எதிரே நிற்பவன் இனி தன்னவன் என்ற பெருமிதத்தோடு அவனைப் பார்த்து வெட்கப்புன்னகை பூக்க அந்த சடங்கு இனிதே ஆரம்பித்தது.

நீரஜாட்சியின் இரு தாய்மாமாக்கள் மற்றும் அண்ணன் முறையான விஜயராகவன் மற்றும் ராகுல் அவளைத் தோளில் தூக்கிக் கொள்ள அதே நேரம் ரகுநந்தனை ஆதிவராஹன், ஹர்சவர்தன் மற்றும் அருணுடன் சேர்ந்து சேஷனின் பேரன்கள் தோளில் தூக்கிக் கொள்ள இருவரும் அவரவர் கையில் இருக்கும் மாலையை தத்தம் இணையின் கழுத்தில் போட வர அவர்களை தூக்கியிருந்தவர்கள் தூரத்தை அதிகரித்தனர்.

நீரஜாட்சி உதட்டை பிதுக்கியவளாய் "பெரிய மாமா சும்மாவே உங்க மகன் பனைமரத்துல பாதி! இதுல அவனை தூக்கிட்டாங்கன்னா அவன் என்னை விட ரொம்ப ஹைட்டா இருப்பான். நான் எக்கி எக்கி போட்டாலும் இவங்கள்லாம் அவனை தள்ளி கொண்டு போயிடுறாங்க. நீங்க என்னன்னு கேளுங்க" என்று குறை கூற

இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த உறவினர்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து ரகுநந்தனும் நகைக்க ஆரம்பித்தான்.

சீதாலெட்சுமி "எல்லாம் சுலபமா கிடைச்சுடாதுடிம்மா! முடிஞ்சா என் பேரன் கழுத்துல மாலையை போடு பார்ப்போம்" என்று கிண்டல் செய்ய ரகுநந்தன் "அப்பிடி சொல்லுங்கோ பாட்டி" என்று அவரிடம் பேசி விட்டு நீரஜாட்சியை நோக்கி கண்சிமிட்ட அவள் வெளிப்படையாக "இதுலாம் சீட்டிங்" என்று கூற மீண்டும் அனைவரும் நகைக்க அந்த சடங்கு கலாட்டாக்களோடு நடைப்பெற்றது.

நீரஜாட்சி முகம் சுணங்குவதை விரும்பாத ரகுநந்தன் தானே தலை குனிய அவள் மனம் நிறைந்தவளாய் மாலையை அவன் கழுத்தில் போட்டுவிட்டாள். அடுத்து அவனது முறை. அவளும் நல்லப்பிள்ளையாக தலை குனிய அவளது கழுத்தை ரகுநந்தன் போட்ட மாலை அலங்கரிக்க ஆரம்பித்தது. ஒருவழியாக அந்த சடங்கு முடிவடைய அடுத்து மணமக்கள்  மணமக்கள் மண்டபத்தின் இன்னொரு புறம் இருக்கும் ஊஞ்சலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஊஞ்சலில் அமர வைக்கப்பட்ட மணமக்கள் நாராயணன் மற்றும் மகாலெட்சுமியின் அம்சமாகவே கருதப்படுவர். நீரஜாட்சியும் ரகுநந்தனும் அதில் அமர சூழ்ந்து நின்ற பெண்கள் பாடல் படித்தபடி அவர்களுக்கு திருஷ்டி கழிக்க அரிசியை அவர்கள் தலையை சுற்றிவிட்டு தூர எறிந்தனர். அதன் பின் பாலினால் பாதங்களை கழுவி விட ஊஞ்சலை ஆட்டியபடி பாடல்கள் பாட ஆரம்பித்தனர்.

ரகுநந்தனின் கரங்கள் நீரஜாட்சியின் தோளை அணைத்திருக்க அவளது முகம் மனதின் சந்தோசத்தை அப்படியே பிரதிபலித்தது. அவளது காதருகில் குனிந்தவன் "ஐ லவ் யூ நீரு" என்று அப்போதும் கூற அவள் கண்ணை விரித்து சுற்றி நின்றவர்களை கண்ணாலேயே சுட்டிக்காட்ட அவனோ "என் ஆத்துக்காரி கிட்ட நான் சொல்லுறேன்டி. அவங்களுக்கு என்னவாம்?" என்று கேலி செய்ய ஊஞ்சல் சடங்கும் கேலியும் கிண்டலுமாக நகர்ந்தது.

அது முடிவடைய அடுத்து கன்னிகாதானம் செய்து வைப்பதற்கான நேரம். பத்மாவதி நீரஜாட்சிக்கு முகூர்த்தப்புடவையை அணிவித்துவருமாறு பெண்கள் அனைவரையும் அனுப்பி வைக்க ரகுநந்தன் மணமேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டான்.

சிறிது நேரத்தில்  அடர்ரோஜாவண்ண பார்டர் வைத்த சந்தனவண்ண பட்டில் கழுத்தில் மாலைகள் அணிந்து வந்தவள் மணமேடையில் அமர அவளை கன்னிகாதானம் செய்து வைக்க பட்டாபிராமனே இருவருக்கும் இடையே அமர்ந்தார்.

பயபக்தியுடன் "பகவானே! என் பொண்ணுக்கு என்னால செய்ய முடியாத சடங்கை அவளோட பொண்ணுக்கு செய்யற பாக்கியத்தை நேக்கு குடுத்துருக்கேள். இவா ரெண்டு பேரும் வாழ்க்கையில எந்த கஷ்டமும் இல்லாம ஷேமமா வாழ வைங்கோ" என்று மனதாற இறைவனை வேண்டியபடி பேத்தியை பேரனுக்கு கன்னிகாதானம் செய்துவைத்தார் அவர்.

அதன் பின் மாங்கல்யதாரணத்துக்கும் அவரே அவளை தாரை வார்த்து கொடுப்பதாக கூற நீரஜாட்சி கேலியாக "பட்டு உங்களுக்கு மன தைரியம் ஜாஸ்தி. இல்லைனா என்னை மடியில உக்கார வைக்கறதுக்கு இவ்ளோ ஆர்வமா முன் வருவிங்களா?" என்று கூற சுற்றி இருக்கும் குடும்பத்தினர் கலகலக்க அவரும் புன்னகை பூத்தவராய் தாரை வார்த்துக் கொடுக்க அமர்ந்தார்.

அவரது மடியில் நீரஜாட்சி அமர உற்றார் உறவினர் ஆசியுடன், அனைவரும் அட்சதை தூவி வாழ்த்த, அக்னி சாட்சியாக  ரகுநந்தன் மாங்கல்யத்தை நீரஜாட்சியின் சங்கு கழுத்தில் அணிவித்து அவளை தனது சரிபாதியாக்கியவன் அவளது கணவன் என்னும் அடையாளத்தை பெற்றுக் கொண்டான்.

கழுத்தில் மாங்கல்யம் விழவும் நீரஜாட்சி நிமிர்ந்து ரகுநந்தனை பார்க்க அவனது கண்ணில் தெரிந்த அளவற்ற காதல் அவளது கண்ணில் ஆனந்தக்கண்ணீரை வரவழைக்க ரகுநந்தன் புன்னகையுடன் அவளைப் பார்த்தவன் "இனிமே யாராலயும் நம்மளை பிரிக்க முடியாது நீருகுட்டி" என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறிவிட்டு அவள் நெற்றியில் முத்தமிட அந்த அழகிய தருணத்தில் அவர்களின் வாழ்வின் புதிய அத்தியாயம் ஆரம்பமானது.


Comments

  1. அருமையான ஐயராத்துக் கதை ஒவ்வொரு வரியையும் ரசித்து படித்தேன்

    ReplyDelete
  2. பூங்காற்றிலே உன் சுவாசம்..! எழுத்தாளர்: நித்யா மாரியப்பன் (அத்தியாயம் - 39)

    அப்பாடா...! ஒருவழியா நந்து நீரு கல்யாணம் முடிஞ்சது. அடுத்ததென்ன, இனி கிருஷ்ணா ஹர்ஷா கல்யாணத்தையும் பண்ணிட வேண்டியது தானே...? அட.. ஆமாங்க, அதான் கிருஷ்ணா முதல்ல கட்டின தாலியை கழட்டி கொடுத்துட்டு, இப்ப வெறும் கழுத்தோட தானே சுத்தி வரா. அதான் மறுபடியும் தாலியை கட்டச் சொன்னேன்.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

    ReplyDelete
  3. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பூங்காற்று 1