பூங்காற்று 42

நிச்சயதார்த்தம் எந்த குறைபாடுமின்றி
நல்ல முறையில் முடிவடைய நாட்கள் ஜெட் வேகத்தில் கடந்தன. பட்டாபிராமன் கடந்த முறை போலன்றி இந்த
திருமணத்தில் அனைத்து சம்பிரதாயங்களும்
முழுவதுமாக எவ்வித தடங்கலுமின்றி நடைபெற வேண்டும் என்று முன்னரே வேங்கடநாதனிடம் அழுத்தமாகக்
கூறிவிட்டார்.
அவரும் பத்மாவதிக்கு புரியும்
வகையில் தந்தை கூறிய விஷயத்தை அவரது காதில் போட்டுவிட்டு திருமண வேலைகளில் மூழ்கிப் போனார். பத்மாவதி
எதிலும் ஒட்டாமல் விலக முயன்றாலும்
மைதிலி
"அக்கா இது உன் மகனோட விவாகம். இதுல நீயே பட்டும் படாம நடந்துண்டா நந்து அம்மாக்கு நம்ம மேல அக்கறையே
இல்லைனு நினைச்சுக்க மாட்டானா?" என்று இழுத்துப் பிடித்து அவரை ஒவ்வொரு
காரியத்திலும் ஈடுபட வைத்தார்.
அதே நேரம் நிச்சயம் மற்றும்
முகூர்த்தத்துக்கான புடவைகளை கிருஷ்ணஜாட்சி எடுத்துவிட ஊஞ்சல் வைபவத்துக்கு இன்னும் சில சடங்குகளின்
போது அணிய தேவையான புடவைகளை மைத்திரேயியுடன்
சேர்ந்து தானே பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்திருந்தார் மைதிலி.
இளைய மருமகளுக்கு
பேத்திகளின்
மீது இருக்கும் பாசத்தை எண்ணி பட்டாபிராமன் தம்பதியினர் மகிழ்ந்து போயிருக்க சீதாலெட்சுமி
நீரஜாட்சியை அழைத்து மதுரவாணிக்காக
தாங்கள்
வாங்கி வைத்திருந்த நகைகளை அவள் வசம் ஒப்படைக்க அவளோ "சித்தம்மா இதுலாம் ஓல்ட் ஃபேசன் ஜூவல்ஸா இருக்கு.
இருந்தாலும் அட்ஜெஸ்ட் பண்ணிக்கறேன்"
என்று கேலி செய்தபடியே வாங்கிக் கொண்டாள்.
பின்னர் சந்தேகத்துடன் "சித்தம்மா எல்லா நகையையும் எனக்கே
குடுத்தா கிருஷ்ணாக்கு எதுவும் கிடையாதா?"
என்று
கேட்க
சீதாலெட்சுமி "இது அவளுக்கு
குடுக்க தான் வச்சிருந்தேன். அவ கல்யாணம் என்ன நம்ம எதிர்ப்பார்த்தா நடந்துச்சு? திடுதிடுப்புனு நடந்த கல்யாணம், அதுக்கு அப்புறம் நடந்த ஏகப்பட்ட சம்பவங்கள்னு
மனநிம்மதியே காணாம போயிடுத்தே! அப்போ
நகைகளை
பத்தி யோசிக்க நேரம் இல்லடிம்மா" என்று கூறிவிட அவள் அந்த நகைகளை கிருஷ்ணஜாட்சி வசமே ஒப்படைத்துவிட்டாள்.
"என்னால இதை பத்திரப்படுத்தி வைக்க முடியாது கிருஷ்ணா.
நீயே வச்சுக்கோ" என்று கூறிவிட்டு செல்லும்
தங்கையை பார்த்தவள் மனதிற்குள் "அம்மாவே இல்லாதப்போ இந்த நகையை மட்டும் வச்சு நான் என்ன
பண்ண போறேன்?" என்று சொல்லிக்
கொண்டு சலிப்புடன் அவற்றை
வார்ட்ரோபில் உள்ளறையில் வைத்து பூட்டினாள்.
*************
திருமண நாள் அருகில் வர வர
நீரஜாட்சிக்கு சிறிது சிறிதாக பதற்றமும் அதிகரிக்க ஆரம்பித்தது. மொத்த குடும்பமும் பரபரப்பாக ஓடிக்
கொண்டிருக்க சீதாலெட்சுமி அவளை திருமணம் முடியும்
வரை அலுவலகம் செல்ல வேண்டாம் என்று கூறிவிட்டதால் அவள் வீட்டில் அமர்ந்து தனது திருமணத்துக்காக
மற்றவர்கள் ஆர்வமாக ஏற்பாடுகளை கவனிப்பதை வேடிக்கை
மட்டும் பார்த்துக் கொண்டிருந்தாள்.
கண்களில் கனவு மின்ன செல்லும்
ரகுநந்தனை கண்டால் மட்டும் அவள் மனதிற்குள் குற்றவுணர்ச்சி எழும். தான் தேவையில்லாமல் அவனை வைத்து
விளையாடுகிறோமோ என்று அவள் யோசிப்பாள். ஆனால்
அவளாலுமே அந்த திருமணம் நின்று போவதை பற்றி யோசிக்க முடியவில்லை. எனவே வெளிப்பார்வைக்கு அமைதியாக
தெரிந்தாலும் உள்ளுக்குள் ஆயிரம் குழப்பங்களுடன் தான்
அவளும் உலாவினாள்.
ஆனால் திருமண நிகழ்வுகள் அனைத்திலும் மணப்பெண்ணுக்குரிய
உற்சாகத்துடன் முழுமனதோடு தான் கலந்து
கொண்டாள்.
திருமணம் வாழ்வில் ஒரு முறை மட்டுமே வரும் அற்புதமான தருணம், அதை ஏன் தேவையில்லாத குழப்பங்களைப் பற்றி
சிந்தித்து தான் அனுபவிக்காமல் விட
வேண்டுமென்று
தனக்கு தானே அறிவுறுத்திக் கொண்டாள். ஆனால் தனது மனதில் ரகுநந்தன் மீதான காதல் எப்போதோ
நுழைந்துவிட்டது என்பதை மட்டும் அவள்
புரிந்து
கொள்ளவில்லை.
திருமணத்துக்கு மூன்று நாட்கள்
முன்னர் பந்தல்கால் நடப்பட்டு அதற்கான பூஜைகளும் நடைபெற்றுக் கொண்டிருக்க நீரஜாட்சி அவள் தோழி
கவிதாவை போனில் வறுத்தெடுத்துக் கொண்டிருந்தாள்.
"ஏய் பேசாதடி! இன்னும்
டூ டேய்ஸ்ல மேரேஜ்! ஆனா
நீ இன்னும் சென்னைக்கு வர்ற. ஒழுங்கா சொன்னபடி நாளைக்கு நீ இங்கே இருக்கிற. இல்லனா
நீருனு உனக்கு ஒரு ஃப்ரெண்ட் இருந்தாங்கிறதையே
மறந்துடு. வை போனை" என்று அவளை ஒரு வழி பண்ணிவிட்டு போனை வைத்தவள் திரும்பி நடக்க முயலுகையில்
யாரோ கையை பிடித்து நிறுத்த திரும்பி
பார்த்தாள்.
வேறு யாருமில்லை , ரகுநந்தன் தான்
நின்று கொண்டிருந்தான்.
"யாரை போன்ல இந்த
திட்டு திட்டுற? பாவம்! அவங்க
பயந்துடப் போறாங்க" என்று கேலி செய்தபடி அவளுடன் பேச ஆரம்பிக்க
"இந்த கவிதா தான்
என்னை டென்சன் பண்ணுறா.
அவங்க அப்பா அம்மா கூடபோனதுக்கு அப்புறமா அவ என்னை சுத்தமா மறந்துட்டா. ஐ ஹேட் கவிதா"
என்று அவள் சிறுகுழந்தை போல் குறை சொல்ல அவன்
நமட்டு சிரிப்புடன் அவள் தலையில் செல்லமாக தட்டினான்.
"அது எப்பிடி உன் கல்யாணத்துக்கு அவ லேட்டா வருவா? டுமாரோ ஷார்ப்பா வந்து நிப்பா உன் ஃப்ரெண்ட். ரெண்டு பேரும் ஃபெவிகால்
போட்டு ஒட்டாத குறையா சுத்திண்டிருந்துட்டு
இப்போ அவளை வெறுக்கறேனு சொல்லுறியே, இது நியாயமா?" என்றவனை ஏறிட்டு பார்த்தாள் நீரஜாட்சி.
"எனக்கு குடுத்த
பிராமிஸை காப்பாத்தாதவங்களை
நான் அப்பிடி தான் சொல்லுவேன்" என்று பிடிவாதமாக கூறிவிட்டு அங்கிருந்து செல்ல அதற்குள்
அவனை ஏதோ பூஜைக்கு அழைக்கவும் அவனும் இதை
பெரிதுப்படுத்தாமல் சென்று விட்டான்.
அவளை வருந்த வைக்காமல் சொன்னபடி
மறுநாள் வந்து நின்றாள் கவிதா. அதன் பின் தான் நீரஜாட்சியின் முகத்தில் தெளிவே வந்தது. அப்போது தான்
இரயில் நிலையத்திலிருந்து வீட்டுக்கு
வந்திருந்தவளை தனது அறைக்கு அழைத்துச் சென்றாள் நீரஜாட்சி.
"ஏன்டி என் கையை கட்டி இழுத்துட்டுப் போன மாதிரி இவ்ளோ வேகமா
கூட்டிட்டு வந்த?" என்று கேட்டவாறு ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு
அமர்ந்தாள் கவிதா.
நீரஜாட்சி கதவை தாழிட்டு விட்டு அவளிடம் வந்தவள் தனது
திட்டத்தை ஒருவரி விடாமல் கூறவும் கவிதா ஆச்சரியத்தில் வாயைப் பிளந்தாள்.
"அப்போ இதுக்காக தான்
நீ கல்யாணத்துக்கு சரினு சொன்னியா? நீ நந்து அண்ணாவை லவ்
பண்ணலையா?" என்று அவளை
உலுக்கவும்
நீரஜாட்சி குழப்பத்துடன்
"எனக்கு
தெரியலையே கவிதா! எனக்கு அவனை ரொம்ப பிடிக்கும். யாருமே கிருஷ்ணாவை பத்தி யோசிக்காதப்போ கூட அவன்
யோசிச்சான். அவங்க அண்ணன், அம்மானு எல்லார் கிட்டவும் கிருஷ்ணாவுக்காக ஆர்கியூ
பண்ணுனான். இது எல்லாத்துக்கும் மேல
அவன்
என்னை ரொம்பவே லவ் பண்ணுறான் கவி. இப்பிடி ஒருத்தனை வேண்டானு சொல்ல எந்த பொண்ணுக்கு மனசு வரும்? இந்த கல்யாணம் நடந்தா நந்துவும் நானும் வாழ்க்கையில் ஒன்னு சேர்ந்துடுவோம். அதே
மாதிரி கிருஷ்ணாவும் இந்த வீட்டுக்குள்ள
வந்துடுவா. பத்து மாமியோட திமிரும் கொஞ்சம் அடங்கும்" என்றாள்.
கவிதா தோழியின் நலனில் அக்கறை கொண்டவளாய் "நீ இதை நந்து
அண்ணா கிட்ட சொல்லிடறது தான் பெட்டர்!" என்று கூற
நீரஜாட்சி "புரியாம பேசாதே கவி. இதை எப்பிடி நான் அவன்
கிட்ட சொல்ல முடியும்? கிருஷ்ணா இந்த வீட்டுக்குள்ள வரலைனு சொன்னா நானும்
அவளை மாதிரியே தாலியை கழட்டி வீசிடுவேனு சொல்லி
அவளை இங்கே வர வைக்க போறேனு நான் அவன் கிட்ட சொன்னா அவன் நிச்சயமா என்னை மன்னிக்க மாட்டான். அவன்
ஏற்கெனவவே சொல்லுவான்டி 'நம்ம ரெண்டு பேர் சம்பந்தப்பட்ட விஷயத்துல நீ
யாரையும் உள்ள இழுக்க கூடாதுனு. அதனால அவனுக்கு இது
தெரியாம இருக்கறது தான் நல்லது" என்று அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.
தோழியிடம் தனது மனபாரத்தை இறக்கி வைத்த பிறகு அவள் பெரும்
நிம்மதியடைந்தாள். அடுத்து வந்த சடங்குகள் அனைத்திலும்
நிர்மலமான மனதுடன் அவள் கலந்து கொண்டாள்.
**************************
திருமணத்துக்கு முந்தைய நாள்
மாலையில் மாப்பிள்ளை அழைப்புக்கு (ஜானவாசம்) அனைவரும் மண்டபத்துக்கு வந்துவிட அதன் பின் நடக்கும்
நிச்சயதார்த்தத்துக்காக நீரஜாட்சியை தயார் செய்து
கொண்டிருந்தனர் பெண்கள். இது ஒரு பெயரளவுக்கு நடைபெறும் நிகழ்வு.
ரகுநந்தன் அலங்கரிக்கப்பட்ட
காரில் வந்து இறங்கவும் கிருஷ்ணஜாட்சி அவனுக்கு ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துச் செல்ல அவனை
தொடர்ந்து அவனது தந்தை மற்றும் குடும்பத்தினர்
அனைவரும் வந்தனர். வந்தவர்களை மேடைக்கு அனுப்பி விட்டு வந்தவள் வாயிலில் வர்ஷா அருணுடன்
வருவதைக் கண்டதும் இன்முகமாய் சென்று
அவர்களையும்
வரவேற்று இருவரையும் மேடைக்கு செல்லுமாறு கூறினாள்.
அருண் தயங்கவே ஆதிவராஹனை அழைத்து அவர்கள் இருவரையும் மேடைக்கு
அழைத்துச் செல்லுமாறு கூறிவிட்டு நீரஜாட்சி
தயாராகிவிட்டாளா என்று கவனிக்க சென்றாள்.
அந்த சடங்கில் நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே
கலந்து கொண்டதால் அங்கே மைத்திரேயி, ஸ்ருதிகீர்த்தியின்
புகுந்த வீட்டினர் மற்றும் அந்த குடும்பத்தின் நெருங்கிய நண்பரான சேஷனின்
குடும்பத்தினர் மட்டுமே இருக்க அனைவரின் கண்களும்
மேடையை நோக்கியே இருந்தது.
பத்மாவதி இளையமகனின் சிகையை
சரி செய்தபடி அமர்ந்திருந்தவர் ஆதிவராஹனுடன் மேடையேறிய வர்ஷாவையும் அவளது கணவன் அருணையும் பார்த்ததும்
இத்தனை நாட்கள் மனதில் பூட்டி வைத்திருந்த வெறுப்பு
மேலோங்க "நில்லுடி அங்கேயே" என்று தனது வெண்கலக்குரலில் முழங்கிவிட்டு எழுந்து
அவர்களை நோக்கிச் செல்ல வேங்கடநாதன்
முதற்கொண்டு
அனைவரும் திகைத்தவராய் எழுந்தனர்.
பத்மாவதி ஆதிவராஹனை வெறித்தவாறே
"யாரை கேட்டு இவாளை இங்கே அழைச்சிண்டு வந்திருக்கேள் அண்ணா? இவளால என் பிள்ளை மானம் போனது பத்தாதா? இப்போ என்ன பண்ணி நடக்கப் போற விவாகத்தை நாசம் பண்ண வந்திருக்கா இவ?" என்று ஆவேசமாய் பேசிக் கொண்டே செல்ல மைதிலியுடன் நின்று கொண்டிருந்த
விஜயலெட்சுமிக்கு தான் ஆடாவிட்டாலும் தன் தசை
ஆடும் என்பது போல தனது மகள் ஏச்சு பேச்சு வாங்குவது புத்தியில் உரைத்தது.
அதே நேரம் நீரஜாட்சிக்கு அலங்கரித்துக் கொண்டிருந்த
கிருஷ்ணஜாட்சி பத்மாவதியின் சத்தத்தில் அந்த அறையில் இருந்து வெளியே வர
நீரஜாட்சியும் மற்றவர் சொன்னதை காதில் போட்டுக் கொள்ளாமல் தமக்கையை தொடர்ந்து சென்றாள்.
அங்கே வர்ஷா கண்ணீருடன் நிற்க அருண் தலை குனிந்து நிற்பது
கண்ணில் படவுமே மேடைக்கு விரைந்தனர் இருவரும்.
பத்மாவதி "நோக்கு கொஞ்சமாச்சும்
கூச்சநாச்சம் இருந்தா இந்தாத்து விவாகத்துக்கு வந்திருப்பியா? அன்னைக்கு உன்னால என் பிள்ளையை, என் மாமனாரை இந்த மொத்த கல்யாண மண்டபமும் என்ன பேச்சு பேசுனானு
நோக்கு தெரியுமாடி?" என்று வாய்க்கு வந்தபடி வசையாடியவரை அமைதியாக்க
வேங்கடநாதன் முயல அவரோ யார் பேச்சையும் கேட்காமல்
இஷ்டத்துக்கு பேசிக் கொண்டிருந்தார்.
மற்றவர்களை விலக்கி விட்டு
வந்த கிருஷ்ணஜாட்சி பத்மாவதியை வெறுப்புடன் பார்த்துவிட்டு விஜயலெட்சுமியிடம் "இப்போ கூட வாயை
திறந்து உண்மையை சொல்ல மாட்டிங்களா
பெரியம்மா? எங்க அம்மாவை உங்களுக்கு பிடிக்காதுனு
நீங்க அன்னைக்கு எல்லார் முன்னாடியும் எங்க
அம்மாவை பத்தி உண்மையை சொல்லாம மறைச்சிங்க. ஆனா வர்ஷா நீங்க பெத்த பொண்ணு தானே! உங்க
நாத்தனார் இப்பிடி வாய்க்கு வந்தபடி
கர்ப்பிணியா
இருக்கறவளை வசைபாடுறதை கேட்டும் கல்லா நிக்கிறிங்களே, உங்களுக்குலாம் மனசாட்சியே இல்லையா?" என்று கடினமான குரலில் கேட்க
பத்மாவதி விஜயலெட்சுமியிடம்
வந்தவர் "இவ என்ன சொல்லுறா மன்னி? நீங்க எந்த உண்மையை மறைச்சேள்? தயவு பண்ணி சொல்லிடுங்கோ! மதுராவை பத்தி
எதையோ மறைச்சிட்டேள்னு இவ பழி போடுறாளே
அதையாச்சும் இல்லைனு சொல்லுங்கோ மன்னி" என்று அவர் அவசரமாக கேட்கவும் விஜயலெட்சுமி தலையை குனிந்து
கொண்டார்.
"அவ பழி போடலை பத்மா! நான் மதுராவை பத்தி நிறைய உண்மைகளை
மறைச்சிட்டேன் தான். நான் தான் பாவி!
அந்த
பாவம் தான் என் பொண்ணு தலையில விடிஞ்சிடுத்து" என்று முகத்தில் அறைந்து கொண்டு அழ ஆரம்பிக்க அங்கே
இருந்த அனைவருக்கும் அவரது பேச்சு அதிர்ச்சியை அளிக்க
ஆதிவராஹன் வெறுப்புடன் மனைவியை பார்த்துவிட்டு அதற்கு சற்றும் குறையாத வெறுப்புடன் தங்கையிடம்
வந்தார்.
"அவ பேசறது நோக்கு இன்னுமா புரியலை பத்மா? இருபத்தஞ்சு வருசத்துக்கு முன்னாடி
மதுரா மண்டபத்திலிருந்து
வெளியே போக காரணமே உன் மன்னி தான். அவ போகலைனா இவளால என்னை விவாகம் செஞ்சுக்க முடியாதுனு
சொல்லி, செத்துடுவேனு மிரட்டி
அவளை இந்த முடிவுக்கு வர
வச்சது இவ தான்.
எல்லாம் முடிஞ்சு வந்தா நானே
உங்க குடும்பத்துல உண்மையை சொல்லுறேனு மதுராவையும், மதியையும் ஏமாத்துனது உன்னோட மன்னி தான். மதிக்கு
என்னைக்குமே குடும்பத்தை எதிர்த்து
மதுராவை
அழைச்சிண்டு போகணும்கிற எண்ணமே கிடையாது. நான் சொன்னதை நம்பலைனா நீயே உன் மன்னி கிட்ட கேளு" என்று
அனைத்தையும் கூறிவிட பத்மாவதி அதிர்ச்சியுடம்
விஜயலெட்சுமியை பார்க்கவும் அவர் அமைதியாக தலையசைத்து ஒத்துக் கொண்டார்.
ஆதிவராஹன் "இதே மாதிரி தான் வர்ஷா மாப்பிள்ளையை பத்தி இவளண்ட
சொன்னப்போ அவ கிட்டவும் தானும் செத்து, என்னையும் சாப்பாட்டுல விஷம் வச்சு
கொன்னுடுவேனு மிரட்டியிருக்கா உன் மன்னி. என்
பொண்ணு அதனால தான் கல்யாண சடங்குகள்ல சிரிச்சமுகமா இருந்திருக்கா. நீ எடுப்பார் கைப்பிள்ளை
மாதிரி என் மகளையும், மதுராவையும் இவ பேச்சை கேட்டு வெறுத்து இன்னைக்கு
அவப்பெயரோட நிக்கற பத்மா" என்று
முடித்துவிட்டு
மகளை தோளோடு அணைத்துக் கொண்டார்.
நீரஜாட்சி இவை அனைத்தையும்
கேட்டதற்கு பின்னர் தேவை இல்லாமல் தன் தாயும் தந்தையும் விஜயலெட்சுமியின் சுயநலத்தாலும், பத்மாவதியின் முட்டாள்தனமான கோபத்தாலும் குடும்பத்தை விட்டு விலக்கி
வைக்கப்பட்டனரே என்ற வருத்தத்தால் வாய் மூடி மவுனியானாள்.
பட்டாபிராமன், சீதாலெட்சுமி
தம்பதியினரும் அவரது புத்திரச்செல்வங்களும் தான் இதில் பரிதாபத்துக்கு உரியவர்கள்.
மூத்தமருமகளின் முட்டாள்தனம் தனது மகளை சாகும் தருவாயில் கூட பார்க்க விடாமல்
செய்துவிட்டதே என்று சீதாலெட்சுமி வாய் விட்டே
புலம்பி அழ பட்டாபிராமன் "நீ ஏன்டி அழறே?
மூத்த
மருமாளை மகளா நினைச்சு மகளை
ஒதுக்கி வச்சோமோன்னோ, அதுக்கு இன்னும்
பகவான் நமக்கு நிறைய தண்டனையை பாக்கி
வச்சிருக்கறார்" என்று மனம் வெதும்பினார்.
ரகுநந்தன் கிருஷ்ணஜாட்சியிடம்
"மன்னி! இதை நீங்க உங்க விவாகத்தப்போ நடந்த பிரச்சனையிலயே சொல்லிருக்கலாமே!"
என்று மனம் பொறுக்காமல் கேட்டுவிட
கிருஷ்ணஜாட்சி "சொன்னா மட்டும் எல்லாரும் நம்பிடுவாங்களா? எத்தனை பேர் சாபமோ எங்க அம்மா அப்பாக்கு சாவு கூட நல்ல விதமா வரலை. இதுல நான்
இந்த உண்மையை சொல்லிருந்தா உங்க அம்மா இன்னும் கேவலமா
தான் என்னை பெத்தவங்களைப் பேசிருப்பாங்க. செத்தும் இவங்க வாயில அவங்க விழ வேண்டாமேனு தான்
நான் யார் கிட்டவும் சொல்லலை! இப்போவும் வர்ஷாவை
இவங்க பேசுனதால தான் நான் கோவப்பட்டு உண்மையை சொல்ல சொன்னேனே தவிர என் அம்மாவை பத்தி இவங்க
தெரிஞ்சிக்கணும்னு நான் சொல்லலை.
என் அம்மாவும் அப்பாவும் எப்படிபட்டவங்கன்னு இவங்க யாரும்
சர்டிஃபிகேட் குடுக்க வேண்டிய அவசியம்
இல்லேனு
தோணுச்சு" என்று பேச்சை முடித்தவள்
பத்மாவதியிடம் வந்தாள்.
"இந்த கல்யாணமாச்சும் நடக்கணும்னு நினைக்கிறிங்களா? இல்ல...' என்று
இழுத்தவளை ஏறிட்டவர் "இந்த கல்யாணம் நிக்க
வேண்டிய அவசியம் ஏதும் இல்லைடிம்மா! இனி நான் எந்த விவகாரத்திலயும் முடிவு எடுக்கறதா இல்ல.
அப்போ இருந்து இப்போ வரைக்கும் என்னோட முடிவு
எல்லாமே தவறா தானே இருந்துருக்கு. நீயே எல்லாரையும் அமரச் சொல்லிடு. கல்யாணம் நடக்கும்"
என்று உறுதியான குரலில் கூறிவிட்டு
வர்ஷாவிடம்
சென்றார்.
"நீயும் உன் ஆத்துக்காரரும் முடிஞ்சா இந்த முட்டாளை
மன்னிச்சிடுங்கோ. போய் உக்காருங்கோ" என்றபடி
மேடையை கைகாட்ட வர்ஷா தயங்கியவள் அருண் சொல்லவும் மேடை ஏறினாள். மைதிலி அவளை கைப்பற்றி சென்று
அமரவைத்துவிட்டு ரகுநந்தனையும் அமர சொன்னார்.
பின்னர் கூடியிருந்தவர்களிடன்
சிரமம் பார்க்காமல் அமருமாறு வேண்டிக் கொண்டவர் தமக்கையையும் மேடைக்குச் செல்லுமாறு
கூறிவிட்டு மாமனார் மாமியார் என்று
அனைவரிடமும்
"நடந்ததை நினைச்சே வருத்தப்பட்டுண்டே இருந்தா பொழுது விடிஞ்சிடும். எல்லாத்தையும் திருஷ்டி
பரிகாரம்னு நினைச்சிண்டு சிரிச்ச முகமா இருந்து இந்த
சடங்கை முடிக்கப் பாருங்கோ" என்று பொதுப்படையாக கூறிவிட அனைவரும் கனத்த மனதுடன் மேடையில்
அமர்ந்தனர்.
அனைவரும் மேடையில் அமர ஹர்சவர்தன்
அப்போது தான் ஹோட்டலில் இருந்து வந்தவன் கிருஷ்ணஜாட்சியிடம் "சாப்பாடு எல்லாமே தயாராயிடுச்சு
கிருஷ்ணா. பை த வே ஏன் எல்லாரும் ஒரு
மாதிரி
ரெஸ்ட்லெஸ்ஸா இருக்கேள்?" என்று புரியாமல்
கேட்க அவள் "உங்க தம்பி கிட்ட
கேட்டுக்கோங்க" என்று கூறிவிட்டு நீரஜாட்சியை மீண்டும் மணப்பெண் அறைக்கு அழைத்துச் சென்றாள்.
அதன் பின் அவன்
ரகுநந்தனிடமே
விவரத்தைக் கேட்டு தெரிந்து கொண்டவன் சிறிது நேரத்தில் நிச்சயதார்த்தம் ஆரம்பித்துவிட
மனைவியிடம் எதுவும் பேசாமல் அமைதியானான்.
நிச்சயதார்த்தம் எந்த தடங்கலுமின்றி
நடந்துவிட பட்டாபிராமனிடம் சேஷனும்" உன் இளைய மருமகள் சொன்ன மாதிரி இது எல்லாமே திருஷ்டி பரிகாரம்னு
எடுத்துக்கோடா. இனி உன் மூத்தமருமகள் அந்த
குழந்தைகளை வெறுக்க மாட்டா. அது போதும் நோக்கு" என்று ஆறுதல் கூறி அவரையும்
சீதாலெட்சுமியையும் வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு தானும் குடும்பத்தினருடன் கிளம்பினார்.
ஹர்சவர்தன் அருணையும் வர்ஷாவையும்
வழியனுப்பிவிட்டு வந்தவன் ரகுநந்தனிடம் "டேய் நீ இன்னைக்கு இங்கே தான் தங்கணும். காத்தாலே நிறைய
சடங்கு சம்பிரதாயம்லாம் இருக்கு. ரொம்ப நேரம்
முழிச்சிண்டிருக்காம சாப்பிட்டிட்டு தூங்கு" என்று அறிவுறுத்திவிட்டு மைத்திரேயி, ஸ்ருதிகீர்த்தி, பத்மாவதி மற்றும் மைதிலியை வீட்டில் விடச் சென்றான்.
கிருஷ்ணஜாட்சியும்
நீரஜாட்சியும்
ஆதிவராஹனிடம் பேசிக் கொண்டிருந்தமையால் அவனை கவனிக்கவில்லை. வீட்டிற்கு சென்றவனின் புத்தியில் இரு
சகோதரிகளும் மிஸ்ஸிங் என்பது உரைக்க
மீண்டும்
மண்டபத்தை அடைந்தவன் இருவரையும் காரில் சென்று அமருமாறு கூறிவிட்டு கிளம்பினான்.
வரும் வழியில் மூவரும் எதுவுமே
பேசிக் கொள்ளவில்லை. அமைதியாக அவர்களை வீட்டில் விட்டவன் கிருஷ்ணஜாட்சியிடம் "கிருஷ்ணா
நானும் இன்னைக்கு ரகுவோட மண்டபத்துலயே ஸ்டே பண்ணிக்கப்
போறேன். நீ நீருவை உன்னோட அழைச்சுண்டு போயிடு" என்று கூற கிருஷ்ணஜாட்சி தலையாட்டி விட்டு
நீரஜாட்சியை அழைத்துக் கொண்டு அவுட் ஹவுஸ் செல்ல
விழைந்தவள் திடீரென்று தாத்தா பாட்டியின் நினைவு தாக்கவே வீட்டுக்கே தங்கையை அழைத்துச் சென்றாள்.
இரு சகோதரிகளும் கூடத்தில் நுழையும் போது அவர்கள் கண்ட காட்சி
அவர்களுக்கு ஆச்சரியத்தையும் வருத்தத்தையும் ஒரு சேர கொடுத்தது.
அங்கே பத்மாவதி மதுரவாணி குடும்பத்தினருடன் சேர்ந்து இருக்கும்
புகைப்படத்தை மார்போடு அணைத்துக் கொண்டபடி கண்ணீர்
பெருக்கிக் கொண்டிருந்தார். கண்ணீரை துடைத்தபடி நிமிர்ந்தவர் கூடத்தில் நிற்கும் இரு
பெண்களையும் கண்ட போது இதே கூடத்தில்
ஏழு
வருடங்களுக்கு முன்னர் இதே பெண்கள் நின்றதையும் அவர்களை தான் பேசக் கூடாத வார்த்தை எல்லாம் பேசியதையும்
நினைத்துப் பார்த்தார்.
மெதுவாக புகைப்படத்தை சோஃபாவில்
வைத்துவிட்டு அவர்களை நோக்கி வந்தவர் இருவரையும் நோக்கி கைகூப்பியபடி "என்னை
மன்னிச்சுடுங்கோ" என்று தேம்பி தேம்பி அழ இரு சகோதரிகளும் இதை எதிர்ப்பார்க்கவில்லை.
கிருஷ்ணஜாட்சி பதறியவளாய் "என்ன பண்ணுறிங்க மாமி? முதல்ல கையை கீழே போடுங்க" என்று
அவரது கையை இறக்க முயல
பத்மாவதி "நான் பண்ணுன பாவத்துக்கு இது பத்தாதுடிம்மா!
மதுராக்கு நான் பண்ணுன பாவம் என் அறிவுக்கு எட்டாம
நான் பண்ணுனது. ஆனா உங்க ரெண்டு
பேரையும் இந்தாத்துக்கு வந்த நாள்ல இருந்து
தனியாளா நிக்க வச்சது தெரிஞ்சு பண்ணுனது தானே. உங்க படிப்பு, வேலைனு எல்லாத்தையும் நாசம்
பண்ணிட்டேனே. நேக்கு நல்ல கதியே கிடைக்காது" என்று முகத்தில் அறைந்தபடி அழத்
தொடங்கினார்.
கிருஷ்ணஜாட்சி நீரஜாட்சியை பார்க்க அவள் சமையலறைக்கு தண்ணீர்
எடுத்து வருவதற்காக சென்றாள்.
அவள் சென்றபின்னர்
பத்மாவதியை
சோஃபாவில் அமர வைத்தவள் "பழசை நினைச்சு இனிமே யாரும் வருத்தப்பட வேண்டாம் மாமி. விடிஞ்சா கல்யாணம். அதை
மட்டும் யோசிப்போமே. இப்போ நம்ம என்ன அழுதாலும் நடந்த
எதுவுமே மாறப் போறது இல்ல. ஆனா நடக்க இருக்கிறதை நம்மளால நல்லபடியா நடத்தி வைக்க
முடியும் மாமி. நீங்க வீணா மனசை போட்டுக் குழப்பிக்காதிங்க.
எங்க அம்மா உங்களை
எப்போவுமே
குறைச்சு பேசுனது இல்லை மாமி. எப்போவுமே உங்களை அவங்க மதிப்பா தான் நினைச்சிருந்தாங்க. அதனால நீங்க
அம்மாவை நினைச்சு கவலைப்பட்டு அழாதிங்க. எங்களை
பத்தி நினைச்சு அழறிங்கன்னா அதுவும் தேவை இல்ல. எங்க ரெண்டு பேரையும் பிடிக்காட்டியும் இவ்ளோ
நாள் ஒரு பாதுகாப்பான இடத்துல நாங்க தங்கிக்க நீங்க
அனுமதிச்சிருக்கிங்க. அது ஒன்னு போதும் எங்களுக்கு. கண்ணை துடைச்சுக்கோங்க" என்று அவள்
ஆறுதல் சொல்லும் போதே நீரஜாட்சி தண்ணீருடன்
திரும்பினாள்.
பத்மாவதியிடம் தண்ணீரை நீட்டியவள்
"போய் தூங்குங்க மாமி. நேரம் ஆச்சு" என்று மட்டும் கூற பத்மாவதியும் தண்ணீரை குடித்துவிட்டு
தனது அறையை நோக்கி தளர்ந்த நடையுடன்
சென்றார்.
அவர் சென்று கொண்டிருப்பதை
பார்த்துவிட்டு நீரஜாட்சி "இவங்களை என்ன கேட்டகரில சேர்க்கறதுனே தெரியல கிருஷ்ணா. இவங்க
நல்லவங்கனு டக்குனு என்னால நினைக்க
முடியல.
அதே நேரம் கெட்டவங்களா இருந்தா இந்நேரம் நம்ம கிட்ட மன்னிப்பு கேட்டிருக்க மாட்டாங்க. எப்பிடியோ
இத்தனை வருசம் நம்ம அம்மா அப்பாவை பத்தி தப்பா
நினைச்சிட்டிருந்த ஒரே ஒரு மனுஷிக்கும் அவங்களைப் பத்தி தெரிய வந்துச்சே" என்று கூறிவிட்டு
அவளுடன் அவுட் ஹவுஸிற்கு சென்றாள்.
அவுட் ஹவுஸ் சென்று திரும்பியவள்
உடை மாற்றிவிட்டு தூங்கச் செல்ல அவளுக்கு என்னவோ அன்று தூக்கம் வரவில்லை. தாய் தந்தையின்
வாழ்க்கையின் மிகப் பெரிய உண்மை தெரிந்த அதிர்ச்சியினாலா
இல்லை பத்மாவதியின் மாற்றத்தினாலா என்று அவளுக்கு தெரியவில்லை.
இருந்தாலும் கண்ணை
மூடியவளின்
மனத்திரையில் ரகுநந்தனின் சிரித்த முகம் வரவே சட்டென்று எழுந்து அமர்ந்தவள் "இந்த மாமிக்கு பாடம்
கத்துக் குடுக்கணும்னு தான் நான் இந்த
கல்யாணத்துக்கு
ஒத்துக்கிட்டேன்னு இன்னும் நந்துவுக்கு தெரியாதே. ஆனா
இதை அவன் கிட்ட
மறைச்சிட்டு அவன் கட்டுற தாலியை என்னால ஏத்துக்க முடியாது" என்று தனக்குள் கூறிக் கொண்டவள் தனது
போனை எடுத்து அவனது எண்ணுக்கு அழைத்தாள்.
தூக்க கலக்கத்துடன் "ஹலோ" என்றவனிடம் அவசரமாக "நந்து உன்
கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்" என்று
அவள் கூறிவிட்டு அவனது அடுத்த கேள்விக்காக காத்திருந்தாள்.
ஆனால் ரகுநந்தனோ "நீரு நான் இன்னைக்கு செம டயர்ட். நாளைக்கு
வேற காத்தாலே எழுப்பிவிட்டுருவேனு ஹர்சா சொல்லிட்டான்.
சோ எதுவா இருந்தாலும் காத்தாலே பேசிக்கலாம். குட் நைட்" என்று அவள் பேச
வாய்ப்பளிக்காமல் பேசிவிட்டு போனை வைத்தான்.
நீரஜாட்சி போனை
வெறித்தபடி
அமர்ந்திருந்தவள் கடவுளை வேண்டியபடி மறுபடியும் படுக்கையில் விழுந்தாள். மனக்கலக்கத்துடன் புரண்டு
புரண்டு படுத்தவள் தூங்கியும் விட்டாள்.
பூங்காற்றிலே உன் சுவாசம்..! எழுத்தாளர்: நித்யா மாரியப்பன் (அத்தியாயம் - 38)
ReplyDeleteவெண்ணைய் திரண்டு வர நேரத்துல தாழி உடைஞ்ச கதரயா, எல்லா விஷயமும் சுபமா முடிஞ்சு வர நேரத்துல இந்த நீரு புதுசா ஒரு பிரச்சினையை ஆரம்பிச்சு வைச்சிடுவா போலயிருக்கே..?
ஆக மொத்தம், ஸ்ரீ நிவாச இல்லத்துல திடிர் திடிர்ன்னு குண்டு வெடிச்சிட்டே இருக்கும் போல.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Interesting
ReplyDelete❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ReplyDelete