பூங்காற்று 38

Image
  நிச்சயதார்த்தம் எந்த குறைபாடுமின்றி நல்ல முறையில் முடிவடைய நாட்கள் ஜெட் வேகத்தில் கடந்தன. பட்டாபிராமன் கடந்த முறை போலன்றி இந்த திருமணத்தில் அனைத்து சம்பிரதாயங்களும் முழுவதுமாக எவ்வித தடங்கலுமின்றி நடைபெற வேண்டும் என்று முன்னரே வேங்கடநாதனிடம் அழுத்தமாகக் கூறிவிட்டார். அவரும் பத்மாவதிக்கு புரியும் வகையில் தந்தை கூறிய விஷயத்தை அவரது காதில் போட்டுவிட்டு திருமண வேலைகளில் மூழ்கிப் போனார். பத்மாவதி எதிலும் ஒட்டாமல் விலக முயன்றாலும் மைதிலி "அக்கா இது உன் மகனோட விவாகம். இதுல நீயே பட்டும் படாம நடந்துண்டா நந்து அம்மாக்கு நம்ம மேல அக்கறையே இல்லைனு நினைச்சுக்க மாட்டானா ?" என்று இழுத்துப் பிடித்து அவரை ஒவ்வொரு காரியத்திலும் ஈடுபட வைத்தார். அதே நேரம் நிச்சயம் மற்றும் முகூர்த்தத்துக்கான புடவைகளை கிருஷ்ணஜாட்சி எடுத்துவிட ஊஞ்சல் வைபவத்துக்கு இன்னும் சில சடங்குகளின் போது அணிய தேவையான புடவைகளை மைத்திரேயியுடன் சேர்ந்து தானே பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்திருந்தார் மைதிலி. இளைய மருமகளுக்கு பேத்திகளின் மீது இருக்கும் பாசத்தை எண்ணி பட்டாபிராமன் தம்பதியினர் மகிழ்ந்து போயிருக்...

பூங்காற்று 34

 


ஹர்சவர்தன் சாதாரணமாக ஹாலின் சோஃபாவில் சென்று அமர்ந்து கொள்ள கிருஷ்ணஜாட்சிக்கு இவனைப் பார்த்துவிட்டு நீரஜாட்சி கோபப்பட்டால் என்ன செய்வது என்ற தவிப்பு. அவளது தவிப்பை அதிகரிப்பது போலவே நீரஜாட்சியின் ஸ்கூட்டியின் சத்தமும் கேட்க அவள் "ஹர்சா! நீரு வந்துட்டா, நீங்க ஒழுங்கா இப்போவே உங்க வீட்டுக்குப் போயிடுங்க. இல்லைனா..." என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே நீரஜாட்சி "கிருஷ்ணா" என்று அவளது பெயரை ஏலம் விட்டபடி வராண்டாவில் நுழைந்துவிட்டாள்.

கிருஷ்ணஜாட்சி வாயிலைப் பார்த்து திரும்ப உள்ளே நுழைந்த நீரஜாட்சி அங்கே சோஃபாவில் சாய்ந்து அமர்ந்திருந்த ஹர்சவர்தனைக் கண்டதும் "நீங்களா?" என்று மெல்லிதாக அதிர்ந்தாள். அவன் புன்னகையுடன் "நானே தான். உனக்கு அதுல என்ன டவுட்?" என்று கேட்டுவிட்டு அவனது போனை நோண்ட ஆரம்பிக்கவும்  நீரஜாட்சி பார்வையாலேயே இவன் இங்கே என்ன செய்கிறான் என்று கிருஷ்ணஜாட்சியிடம் வினவ அவள் பாவமாக விழித்தபடி நின்று கொண்டிருந்தாள்.

நீரஜாட்சிக்கு அவன் அமர்ந்திருக்கும் தோரணை எரிச்சலூட்டினாலும் ஒரு வழியாக பொண்டாட்டி அருமை இப்போதாவது தெரிந்ததே என்று ஏளனமாக உதட்டைச் சுழித்துவிட்டு "நீங்க இங்க வந்து இப்பிடி சட்டமா உக்காந்திருக்கறது உங்க அம்மாக்கு தெரியுமா அத்திம்பேர்?" என்று கேட்க அவனோ தீவிரமாக போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தவன் தலையை உயர்த்தி அவளைப் பார்த்துவிட்டு இல்லையென்று தோளை குலுக்கிவிட்டு மீண்டும் விளையாட ஆரம்பித்தான்.

கிருஷ்ணஜாட்சி அவனது செய்கையில் எரிச்சலுற்றவள் அவன் கையிலிருக்கும் போனை சட்டென்று பிடுங்கியபடி "அவ உங்க கிட்ட தான் பேசிட்டிருக்கா" என்று அவனை முறைத்தபடி கூற

ஹர்சவர்தன் "தெரியுது! இப்போ அதுக்கு என்ன பண்ண சொல்லுற? நீயே கேளு நீரு! நான் இவளண்ட பிரபோஸ் பண்ணி மூனு மாசம் முடிஞ்சுப் போச்சு. இப்போ வரைக்கும் இவ வாயில இருந்து அதை பத்தி ஒரு வார்த்தை வரட்டுமே. நானும் எவ்ளோ நாள் தான் காத்திண்டிருக்கறது? அதனால தான் ஆத்துக்கு அழைச்சு பார்த்தேன். எங்கம்மா இருக்கிற ஆத்துல இவ கால் வைக்க மாட்டேனு பிடிவாதம் பிடிச்சதால நான் இங்கே வந்துட்டேன். இதுல என்ன தப்பு?" என்று கேட்க நீரஜாட்சி ஏதோ கோபத்துடன் கூற வந்தவள் திடீரென்று அமைதியானாள்.

அவளின் மனதிற்குள் சில காட்சிகள் ஓட இவன் வந்தது கூட நல்லதிற்கு தான் என்று எண்ணியபடி "நோ பிராப்ளம் அத்திம்பேர். நீங்க இங்கேயே தங்கிக்கோங்க. அதோ இருக்கு பாருங்க, அது என்னோட ரூம். நீங்க அங்கே ஸ்டே பண்ணிக்கோங்க. நான் நம்மாத்துல போய் தங்கிக்கறேன். பிராப்ளம் சால்வ்ட்" என்றவளை ஹர்சவர்தன் நன்றியுடன் பார்க்க கிருஷ்ணஜாட்சியோ கொலைவெறிப்பார்வை பார்த்து வைத்தாள்.

"நீரு எங்கேயும் போகக் கூடாது. இங்க பாருங்க, நான் நல்லபடியா சொல்லிட்டிருக்கப்போவே போயிடுங்க. இல்லைனா நான் பட்டுவை கூப்பிட வேண்டியிருக்கும்" என்று ஹர்சவர்தனை மிரட்ட இருவருமே அவளின் கோபத்திற்கு அசைந்து கொடுக்கவில்லை.

நீரஜாட்சி  ஒரு படி மேலே சென்று "நீ வேணும்னா உன் புக்காத்துக்கு போகாம அவுட் ஹவுஸே கதினு இரு. நான் ஏன் அப்பிடி இருக்கணும். நான் இப்போவே போறேன். அத்திம்பேர் ஒரு பத்து நிமிசம், நான் கிளம்பிடுவேன்" என்றபடி அவள் அறையை நோக்கி செல்ல கிருஷ்ணஜாட்சி புலம்பியபடியே அவள் பின்னே சென்றாள்.

அவளது எந்த புலம்பலுக்கும் செவி மடுக்காமல் தன் காரியத்திலேயே கண்ணாக தன்னுடைய உடைமைகளை சூட்கேசில் எடுத்துக் கொண்டவள் "ஷ்ஷ்! கிருஷ்ணா கொஞ்சம் நேரம் அமைதியா இருக்கியா? நான் உன்னை என்ன பூச்சாண்டி கிட்டவா விட்டுட்டு போறேன்? ஹீ இஸ் யுவர் ஹஸ்பெண்ட் மை டியர் சிஸ்டர். எனக்கும் அவரைப் பிடிக்காது தான். ஆனா உனக்காக மெனக்கெட்டு இவ்வளவும் பண்ணுறதை பார்க்கிறப்போ மனசுக்கு சந்தோசமா இருக்கு கிருஷ்ணா. அதை விட பெரிய சந்தோசம் எது தெரியுமா? இப்போவும் அம்மா அம்மானு சுத்தாம உன் பக்கம் உள்ள நியாயத்தை புரிஞ்சுகிட்டு இங்கேயே வந்தார் பாரு! அது தான். விலகி இருந்திங்கன்னா நீ அவரை புரிஞ்சிக்கிறதுக்கான வாய்ப்பு உனக்கு கிடைக்காமலே போயிடும். உனக்கு நான் அட்வைஸ் பண்ண வேண்டிய அவசியமே இல்லை. நீயே கொஞ்ச நாள் கழிச்சு புரிஞ்சுப்ப" என்று சொல்லிவிட்டு அவளிடமும் ஹர்சவர்தனிடம் சொல்லிக் கொண்டு அங்கிருந்து வெளியேறி ஸ்ரீநிவாசவிலாசத்தை நோக்கி நடைபோட்டாள் அவள்.

ஹர்சவர்தன் செல்பவளையே பார்த்துவிட்டு "அவளை சின்னபொண்ணுனு ரொம்ப குறைவா எடை போட்டது தப்பு. இப்போ உன்னை விட அவ மெச்சூர்டா யோசிக்கிறா. அவளை பார்த்து கத்துக்கோ. ஆமா நைட்டுக்கு என்ன டின்னர்? உன்னால தனியா பண்ண முடியலைனா சொல்லுநானும் ஹெல்ப் பண்ணுறேன்" என்றபடி ஏதோ அவன் சொந்த வீட்டில் இருப்பவனை போல உள்ளே செல்லவும் தலையிலடித்தபடி அவனை தொடர்ந்தாள் கிருஷ்ணஜாட்சி.

அதே நேரம் ரகுநந்தன் ஹாலில் குட்டி போட்ட பூனையாக உலாவிக் கொண்டிருந்தவன் வாயிலில் நீரஜாட்சி சூட்கேசுடன் வந்து நிற்கவும் "ஏய் நீ என்னடி பண்ணுற இந்த நேரத்துல?" என்று கத்தவும் வாயில் கை வைத்து "சூ! மெதுவா பேசுடா, நான் இனிமே இங்கே தான் இருக்கப் போறேன்" என்றபடி அவன் அருகில் வந்து நிற்க ரகுநந்தனுக்கு இதை நம்பவும் முடியவில்லை, நம்பாமலும் இருக்க இயலவில்லை.

அவன் பதறிப் போய் அவளை வெளியேற்ற முயல அவளோ செல்லாமல் முரண்டு பிடித்தபடியே "ஐயோ பட்டு, சித்து இங்க வாங்க! சின்ன அம்மாஞ்சி என்னை வீட்டை விட்டு துரத்த பார்க்கிறான்" என்று கூப்பாடு போட

ரகுநந்தன் பதறியவனாய் "ஏய் ஏன்டி தண்டோரா போடாத குறையா கத்துற? எல்லாரும் வந்துட போறாங்க" என்று அவள் வாயை பொத்த முயல அதற்குள் மொத்த வீடும் ஹாலில் கூடிவிட்டது.

பட்டாபிராமன் நீரஜாட்சியின் கையில் இருக்கும் சூட்கேசையும், அவளது மறுகையை பிடித்திருக்கும் ரகுநந்தனின் கரத்தையும் உற்று நோக்கியவர் "ஏன்டா குழந்தையோட கையை பிடிச்சிண்டு நிக்கற? முதல்ல அவ கையை விடு" என்று அதட்ட ரகுநந்தன் அவளை முறைத்தபடியே கையை விடுவித்தான். நீரஜாட்சி பதிலுக்கு கண் சிமிட்ட அது சரியாக பத்மாவதியின் கண்ணில் பட்டு தொலைத்தது.

அவர் "நீ பெத்த ரெண்டுமே சரியில்லங்கிறப்போ அவளை குறை சொல்லி என்ன ஆகப் போறதுடி பத்மா?" என்று தனக்குள் பொறுமி தீர்த்தபடி மாமனார் என்ன சொல்ல போகிறாரோ என்று பதபதைப்புடன் நின்று கொண்டிருந்தார்.

பட்டாபிராமன் நீரஜாட்சியிடம் "ஏன்டிம்மா இந்நேரத்துல பொட்டியும் கையுமா நிக்கற? என்னாச்சு நோக்கு?" என்று வினவ நீரஜாட்சி ஹர்சவர்தன் வந்ததிலிருந்து அவன் பேசிய அனைத்தையும் ஒரு வார்த்தை விடாமல் சொல்லிவிட குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் அது ஆச்சரியம் என்றால் பத்மாவதிக்கு அது மிகப் பெரிய அதிர்ச்சி. தனது மகனா இப்படி பெண்டாட்டிதாசனாக மாறிவிட்டான் என்று மனதிற்குள்  பொறுமியவர் "பாருங்கோப்பா! என் பையன் இப்பிடி ஒரு காரியத்தை செய்யக் கூடியவனே இல்ல! கேக்க கூடாதவா பேச்செல்லாம் கேட்டு அவன் ஆடறான்" என்றார் நீரஜாட்சியை பார்த்தபடியே.

அதற்கு சளைக்காதவளாய் "ஏன் பட்டு ஒரு புருசன் தன் பொண்டாட்டியோட இருக்கறது அவ்வளவு பெரிய மோசமான காரியமா? அப்பிடினா இந்தாத்துல இருக்கற பெரிய மனுஷால்லாம் முதல்ல அவா அவா ஆம்படையானா தனியா அனுப்புங்கோ! அப்புறமா என் கிருஷ்ணாவையும், அத்திம்பேரையும் பத்தி பேசலாம்" என்று பதிலடி கொடுத்துவிட்டு அவரை அலட்சியமாக ஒரு பார்வை பார்த்தாள்.

ரகுநந்தன் இப்படியே விட்டால் மொத்த குடும்பமும் இந்த இருவரின் சண்டைக்காட்சியை விடிய விடிய பார்க்க வேண்டியது வரும் என்று  எண்ணியவன் "ரெண்டு பேரும் கொஞ்சம் அமைதியா இருக்கேளா? ஏன் எப்போ பாரு சண்டை போட்டிண்டே இருக்கேள்? மா! அவ தான் ஏதோ உளருறாள்னா நீங்க பெரியவங்க தானே! பொறுத்து போக மாட்டிங்களா?"  என்று கூற இருவருமே முகத்தை தூக்கி வைத்துக் கொண்டனர்.

அவனோ "இவங்க இப்பிடியே முகத்தை தூக்கி வச்சிண்டு இருந்தாலும் பரவால்லடா நந்து! வாயை மட்டும் திறந்து எதுவுமே பேசிடக் கூடாது பகவானே" என்று வேண்டியபடி பட்டாபிராமனிடம் வந்தவன் தன்னையும் நீரஜாட்சியையும் தவிர அனைவரையும் அமர சொல்லிவிட்டு தான் பேச நினைத்த விஷயங்களை சொல்ல ஆரம்பித்தான்.

"தாத்தா! நானும் நீருவும் லவ் பண்ணுறோம். ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம்னு ஆசைப்படறோம். இதை உங்க கிட்ட இன்னைக்கு சொல்லி அனுமதி வாங்கலாம்னு தான் நான் காத்திருந்தேன். அதுக்குள்ள என்னென்னமோ நடந்திடுத்து" என்றான் தனது தாயாரையும் நீரஜாட்சியையும் முறைத்தபடியே.

அவன் சொன்ன விஷயங்கள் அனைத்தையுமே ஹர்சவர்தன் திருமணம் முடிந்த நாளில் அவன் நடந்து கொண்ட விதத்திலிருந்தே அனைவரும் ஓரளவுக்கு ஊகித்திருந்ததால் யாருக்கும் இது அதிர்ச்சியை தரவில்லை. ஆனால் இருவரும் எலியும், பூனையுமாக சண்டையிட்டதை சற்று முன்னர் கூட நேரடியாக பார்த்த பட்டாபிராமனுக்கு இவர்களின் வருங்காலம் எப்படி இருக்கும் என்ற கவலை தான்.

சீதாலெட்சுமியும் கூடவே சேர்ந்து "இவா போடுற சண்டைக்கு வழக்கு தீர்த்து வைக்கவே நமக்கு நேரம் சரியா இருக்கப் போறதுண்ணா" என்று கேலியாகப் பேசவும் நீரஜாட்சி "சித்தம்மா! உன் ஹியூமர் சென்ஸ் ஆசம்! பட் இப்போ எனக்கு சிரிப்பே வரலை" என்று சொல்லிவிட்டு பட்டாபிராமனுக்கும் கிட்டத்தட்ட அவரது மனைவியின் கூற்றே வருங்காலத்தில் நிகழலாம் என்ற எண்ணம்.

ஆனால் ரகுநந்தனோ "தாத்தா! சண்டை போடுறதெல்லாம் வச்சு எங்களை பத்தி ஒரு முடிவுக்கு வராதிங்க. அது சும்மா செல்ல சண்டை தாத்தா. அது வந்த வேகத்துலயே போயிடும். அதுக்காக எங்களை பிரிச்சிடாதிங்க" என்று உணர்ச்சிபூர்வமாகக் கூற

நீரஜாட்சி அவன் காதில் "டேய் டிராமா கிங்! அவர் எப்போடா நம்மளை பிரிப்பேனு சொன்னாரு? ஓவரா டயலாக் பேசாத" என்று முணுமுணுக்க அவன் முறைத்ததும் அமைதியாகி விட்டாள்.

சிறிது நேரம் அமைதியில் கழிய பட்டாபிராமன் தொண்டையை கனைத்தபடி "ஏன்டா வேங்கடநாதா! நோக்கும் உன் ஆத்துக்காரிக்கும் இந்த விவாகத்துல இஷ்டமா?" என்று கேட்க வேங்கடநாதனின் தலை வேகமாக ஆமென்று ஆட பத்மாவதி என்ற பெண்மணியை அங்கே யாரும் மருந்துக்கு கூட பார்க்கவில்லை.

கோதண்டராமனும் இதற்கு சரியென்று விட மைதிலி மனம் நிறைந்தவராய் "அப்பா மதுராவை தான் கூடவே இருந்து பார்த்துக்கற பாக்கியம் நமக்கு கிடைக்கல. அவ பொண்ணுங்களாச்சும் நம்மளோடவே இருப்பாங்கிறப்போ நான் மட்டும் வேண்டானா சொல்லப் போறேன்? நேக்கும் இந்த விவாகத்துல பூரண சம்மதம்" என்று கூறவே ரகுநந்தனுக்கு இப்போது தான் மனம் அமைதியானது.

நீரஜாட்சியிடம் திரும்பியவன் "சரிடி! அதான் எல்லாரும் விவாகத்துக்கு ஒத்துக்கிட்டாங்கல்ல! நீ கிளம்பு" என்று அவளை வெளியேற்றுவதிலேயே கண்ணாக இருக்க

நீரஜாட்சி கடுப்புடன் "உனக்கு மண்டைக்குள்ள மசாலாவே இல்லடா. அவங்க ரெண்டு பேரும் அவுட் ஹவுஸில இருக்கறச்ச நான் எப்படி அங்கே தங்க முடியும்? பனைமரத்துல பாதி வளர்ந்தா மட்டும் பத்தாது. அறிவும் வேணும்" என்று சொல்லவே அவன் பதிலுக்கு ஏதோ சொல்ல வர அந்நேரம் பார்த்து அவனுக்கு மொபைலில் கால் வரவே அவளை முறைத்தபடி ஒரு ஓரமாக சென்று போன் பேசத் தொடங்கிவிட்டான்.

நீரஜாட்சி பட்டாபிராமனிடம் "பட்டு அவங்க பிரச்சனை தீரணும்னா கொஞ்ச நாளாச்சும் அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து இருக்கணும். அதுக்கு இடையில நான் அங்கே இருந்தா நல்லா இருக்காதுனு தான் இங்கே வந்துட்டேன். இங்கே அம்மாவோட ரூம் இருக்குல்ல, அதிலயே தங்கிக்கறேன். உங்க யாருக்கும் இதுல எந்த பிரச்சனையும் இருக்காதுனு எனக்கு தெரியும். அந்த நம்பிக்கையில தான் நான் சூட்கேசோட வந்திருக்கேன்" என்று கூற சீதாலெட்சுமிக்கும் அவள் கூறுவது சரியென்றே பட்டது.

இளைய மருமகளிடம் "மைதிலி நீ மதுராவோட அறை சாவியை இவளண்ட குடு. நீ அங்கேயே இருந்துக்கோடி ராஜாத்தி" என்று கூறியவர் மகன்கள், மருமகள்களை உறங்கச் செல்லுமாறு கூறிவிட்டு நீரஜாட்சிக்கு மதுரவாணியின் அறை மாடியில் இருப்பதாக சொல்லிவிட்டு கணவருடன் தனது அறையை நோக்கி சென்றார் அவர்.

நீரஜாட்சியும் அனைவரும் கலைந்துவிடவே மாடியை நோக்கிச் சென்றவள் சிறிது நேரத்தில் மைதிலி சாவியோடு வர அதை வாங்கிக் கொண்டாள். அவர் "தினமும் இந்த அறையை சுத்தம் பண்ணி வச்சிடுவேன்டாம்மா! அதனால நோக்கு வேற எந்த சிரமமும் இருக்காது.  உன் ஜாமானை எல்லாம் காத்தாலே பீரோல்ல அடிக்கலாம். நீ போய் தூங்கி ரெஸ்ட் எடு" என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.

அவர் சொன்னபடியே அறை ஒரு தூசி துரும்புமின்றி அவ்வளவு சுத்தமாக இருந்தது. சூட்கேசை தரையில் வைக்கும் போது தான் தனக்கு எதிர் அறை ரகுநந்தனுடையது என்பதை அவள் கவனித்தாள். வெளியே வந்தவள் அந்த வராண்டாவில் உலாவும் போது ரகுநந்தன் மாடிக்கு வந்து சேர்ந்தான்.

அவளை அங்கே காணவும் அதிர்ந்தவன் "ஏய் நீ இங்க என்னடி பண்ணிண்டிருக்க? உன்னை அவங்க அனுப்பி வச்சிட்டாங்கன்னு நினைச்சு மேல வந்தா நீ இங்கே நிக்கற?" என்று பதற நீரஜாட்சிக்கு அவனது பதற்றம் நகைப்பை உண்டுபண்ண இவனுடன் கொஞ்சம் விளையாடினால் என்ன என்று எண்ணியபடி அவனிடம் பேச ஆரம்பித்தாள்.

"நீ ஏன் டென்சன் ஆகற நந்து? நான் அவங்க யாருக்கும் தெரியாம இங்க வந்துட்டேன். இன்னைக்கு நைட் நான் உன்னோட உன் ரூம்ல தான் இருக்கப் போறேன்" என்று சொல்லிவிட்டு விஷமமாக சிரிக்க

ரகுநந்தன் கடுப்புடன் "அடியே எதுவும் சொல்லிடப் போறேன்! ஒழுங்கா உன் பெட்டியை தூக்கிட்டு அவுட் ஹவுஸை பார்த்து கிளம்பு. என்னோட இருக்கப் போறாளாம்! விளையாட்டுக்கும் ஒரு அளவு இருக்கு" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவள் அவனைக் கடந்து அவனது அறைக்குள் செல்ல முயல ரகுநந்தன் பட்டென்று அவளை இழுத்து தன் எதிரே நிறுத்தினான்.

"நீரு விளையாட்டுத்தனத்துக்கு ஒரு எல்லை இருக்குடி. போய் ஒழுங்கா தூங்கு"

"அதையே தான் நானும் சொல்லுறேன். எனக்கு தூக்கம் வருது. வா நம்ம போய் தூங்குவோம்" என்று கேலியாக கூற ரகுநந்தன் "ஹே பகவான்! இவளை என்ன நேரத்துல மதுரா அத்தை பெத்தாங்கன்னு தெரியலையே" என்று வாய்விட்டுப் புலம்ப நீரஜாட்சி கலகலவென்று நகைத்தாள்.

"நீ நான் சொன்னதை நம்பிட்டல்ல! நீ காண்டானது கூட நல்லா தான் இருக்கு. என்ன சொல்லு, அடுத்தவங்களை இரிட்டேட் பண்ணி பார்க்கிறப்போ வர்ற சந்தோசத்துக்கு வேற எதுவும் ஈடாகாது" என்று கூறவும் தான் அவள் விளையாடுகிறாள் என்பதே அவனுக்கு புரியவந்தது.

நீரஜாட்சி "ரொம்ப பதறாதேடா! எங்களுக்கும் எப்போ எப்படி பிஹேவ் பண்ணனும்னு தெரியும். நான் அம்மாவோட ரூம்ல தான் நம்ம கல்யாணம் முடியற வரைக்கும் ஸ்டே பண்ண போறேன். ஆனா அப்பப்போ உன்னை டிஸ்டர்ப் பண்ணுவேன். இப்போ பதறாம போய் தூங்கு" என்று சொல்லிவிட்டு அவள் அவனது எதிர்ப்பக்க அறைக்குள் சென்று கதவை தாழிட ரகுநந்தன் "ஹப்பாடா புயல் அடிச்சு ஓய்ஞ்ச மாதிரி இருக்கு. ஒரு நிமிசத்துல என்னையே கலங்கடிச்சிட்டா இந்த குட்டி பிசாசு" என்று அவளை செல்லமாக கடிந்துவிட்டு அவனது அறைக்குள் சென்றான்.


Comments

  1. பூங்காற்றிலே உன் சுவாசம்..! எழுத்தாளர்: நித்யா மாரியப்பன் (அத்தியாயம் - 34)

    ஓ மை காட்..! ஓ மை காட்...! அம்புட்டு நல்லவனா இந்த ரகுநந்தன்....? நீருவைப் பார்த்து இப்படி பயப்படறானே...? அவ தானே அவனைப் பார்த்து பயப்படணும்...?

    எதெப்படியோ... கிருஷ்ணாவும் ஹர்ஷாவும் கொஞ்ச நாளைக்கு ஒரே வீட்டுல இருந்தாலாச்சும்
    அவங்களுக்கு இடையே உள்ள இடைவெளி குறையுதான்னு பார்ப்போம்.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

    ReplyDelete
  2. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பூங்காற்று 1