பூங்காற்று 48

காலையில் கண்ணை கசக்கிக் கொண்டு விழித்தாள் அவள். கலைந்திருந்த
சுருண்ட கூந்தலை ஒதுக்கிவிட கைகள் உயரும் போது தான்
தெரிந்தது தான் அவனது அணைப்பில் இருக்கிறோம் என்பது. கையை விலக்க முயற்சித்து தோல்வியுற்றவள்
"நேத்து நைட் படிச்சு படிச்சு
சொல்லியும்
ஹக் பண்ணிட்டு தூங்கற அளவுக்கு இவருக்கு தைரியமா?" என்று முணுமுணுக்க
அவளை பொம்மையை அணைத்திருக்கும்
குழந்தை போல தனது அணைப்புக்குள் வைத்திருந்தவன் "பொண்டாட்டியை
ஹக் பண்ணுறதுக்கு கூட எனக்கு உரிமை இல்லையா?"
என்றபடி
கண்ணை திறந்து விஷமமாக
புன்னகைத்தான்.
அவன் புன்னகைத்த போது வேகமாக
அவனை தள்ளிவிட்டு எழுந்தவள் "என்ன உரிமை கிடையாதா? கடமையை செய்யாதவங்க உரிமையை பத்தி பேசவே கூடாது
ஹர்சா" என்று மூக்குநுனி சிவக்குமளவுக்கு
கோபத்தில் கத்தினாள் கிருஷ்ணஜாட்சி.
ஹர்சவர்தன் காதுமடல்களை தேய்த்தபடி
எழுந்தவன் "நேத்து நைட் நான் உன் கிட்ட தெளிவா சொல்லிட்டேன் தானே. மறுபடியும் முதல்ல இருந்து
ஆரம்பிச்சா என்ன அர்த்தம்? உன் கிட்ட கேட்டுட்டு தான் நான் தாலியை கட்டுனேன்
கிருஷ்ணா. இப்போவும் நான் உன்னை விட்டு விலகி தான்
இருக்கேன். ஆனா ஒரு ஹக் கூட பண்ணக் கூடாதுனு சொன்னா என்ன நியாயம்?" என்று
குறும்பாக கேட்டபடி படுக்கையை விட்டு கீழே இறங்க அவனது கால்கள் நேற்று இரவு அவன் தரையில்
உறங்குவதற்காக விரித்த விரிப்பின் மீது படவே
அதை மடித்து வைக்க ஆரம்பித்தான்.
கிருஷ்ணஜாட்சி "இங்க பாருங்க ஹர்சா! இனிமே நீங்க என்னை
ஹக் பண்ணவோ என் கிட்ட வரவோ கூடாது. அவ்ளோ தான்" என்று அவள் பிடிவாதமாக கூற
அவனோ இவள் என்ன சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கிறாள் என்ற
எரிச்சலில் "ஏய் சும்மா கீறல் விழுந்த ரெக்கார்டர்
மாதிரி சொன்னதையே சொல்லி மனுசனை கடுப்பாக்காதே! உன்னை நான் ஹக் பண்ண சொன்னேனா? நான் தானே உன்னை ஹக் பண்ணுறேன். நான்
லவ் பண்ணி கல்யாணம் பண்ணுனவன்மா.
அப்பிடியெல்லாம் ஒரேயடியா சாமியார் மாதிரி இருக்க முடியாது" என்று அமர்த்தலாக மொழிந்து விட்டு
குளியலறையை நோக்கிச் செல்ல அவள் என்ன
செய்யவென்று
தெரியாமல் விழிக்க ஆரம்பித்தாள்.
*********
ரகுநந்தன் காலையில் கண்விழித்தவன்
தன் முன்னே உறங்கும் நீரஜாட்சியை கண் இமைக்காமல் பார்த்தபடி சிறிது நேரம் ரசித்தவன் அவள் கன்னத்தை
செல்லமாக கிள்ளிவிட்டு எழுந்தவன் "நீரு எழுந்திருடி!
டைம் ஆச்சு" என்று எழுப்ப அவள் கும்பகர்ணனினுக்கு பேத்தி போல அசைந்து கூட கொடுக்கவில்லை.
"நான் குளிச்சிட்டு வர்றதுக்குள்ள நீ எழுந்திருக்கிற.
இல்லைனா அவ்ளோ தான்" என்று அவன் மிரட்டி விட்டு செல்ல அவனது வார்த்தைகளை
கவனிக்காமல் அவள் தூக்கத்தை தொடர்ந்தாள்.
ரகுநந்தன் குளித்துவிட்டு வந்தவன் இன்னும் உறங்கிக்
கொண்டிருப்பவளை இடுப்பில் கை வைத்தபடி
முறைத்தவன்
மெதுவாக போனை எடுத்தவன் அதில் ஹெட்போனை மாட்டி அவள் காதில் வைத்துவிட்டு அவளது போனுக்கு அழைக்க
நன்றாக உறங்கிக் கொண்டிருந்தவளின் காதில் ரிங்டோன்
சத்தமாக ஒளிக்க பதறியடித்துக் கொண்டு எழுந்தாள் நீரஜாட்சி.
என்ன சத்தம் என்று
புரியாமல்
சில கணங்கள் திருதிருவென்று விழித்தவளின் தோற்றம் அவனுக்கு நகைப்பை உண்டாக்க சத்தம் போட்டு சிரிக்க
தொடங்க நீரஜாட்சி கடுப்புடன் காதில் மாட்டியிருந்த
ஹெட்போனை கழற்றியவள் "எல்லாம் உன்னோட வேலையாடா?" என்று
கேட்க
அவன் புருவத்தை உயர்த்தி "அது நானே" என்று இரு
கைகளையும் விரித்து பெருமையாக கூறியபடி நிற்க
நீரஜாட்சி படுக்கையிலிருந்து
எழுந்தவள் "என் தூக்கத்தை கெடுத்துட்டு உனக்கு போஸ் ஒன்னு தான் குறைச்சல்" என்று
கூறியவாறு அவனை பட்பட்டென்று அவளது
பூங்கரங்களால்
அடிக்கத் தொடங்கினாள்.
அதை எதிர்பார்த்தவன் போல அவள் கரங்களை வளைத்து முதுகுக்குப் பின்
பிடித்துக் கொண்டவன் "நீருகுட்டிக்கு
இன்னைக்கு ஆபிஸ் வர்ற ஐடியா இருக்கா? இல்லையா? உன்னை இப்பிடி குளோஸ் அப்ல பார்த்துட்டே
இருந்தா என்னோட மைண்ட் மாறிடும். அதுக்குள்ள குளிச்சு
ஆபிஸுக்கு ரெடியாகு. இன்னைக்கு ஹோட்டலோட எல்லா ஒர்க்கும் ஃபினிஷ் ஆயிடும். செக்
பண்ணுறதுக்கு நம்ம ரெண்டு பேரும் தான்
சைட்டுக்கு
போகணும். நியாபகம் இருக்கா?" என்று கேட்க
அவளுக்கும் அப்போது தான் நினைவு வந்தது.
ஹர்சவர்தனின் ரெசிடென்சியல்
ஹோட்டலுக்கான கட்டுமானப்பணி முழுவதுமாக முடிவடைந்த நிலையில் வழக்கம் போல அவனுடன் சென்று முடிவுற்ற
கட்டிடத்தை பார்வையிடச் செல்ல வேண்டும் என்று அவன்
முன்னரே கூறியிருந்தான்.
"இந்த கல்யாண வேலையில நான் மறந்துட்டேன் நந்து. ஒரு ஹாஃஃப்
அன் ஹவர்ல நான் ரெடியாயிடுவேன். கொஞ்சம் என் கையை
விடுறியா?" என்று கேட்டபடி
அவனிடமிருந்து கையை உருவிக் கொண்டவள் டவலை
எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் தஞ்சம் புக ரகுநந்தனும் உடை மாற்றிவிட்டு கீழே சென்றான்.
அவன் வருவதைக் கண்டதும் பத்மாவதி
"வந்துட்டியா நந்து? இன்னைக்கு
கிருஷ்ணாக்கு தாலி பிரிச்சு கோர்க்கலாம்னு நானும்
மைதிலியும் பேசிண்டோம்டா! நம்மாத்து மனுஷாளை மட்டும் வச்சு சிம்பிளா செய்திடலாம்னு
இருக்கோம். உன் அண்ணாவும் மன்னியும் இன்னும் கீழே வரலை. நீ இன்னைக்கு ஃப்ரீ
தானே" என்று அவனிடம் வினவ
ரகுநந்தன் "மா! நானும் நீருவும் இன்னைக்கு ஹோட்டல் வேலை
முடிஞ்சதை பார்க்கப் போகணும். இந்தச்
சடங்கை
இன்னொரு நாள் வச்சிக்கப் படாதா?" என்று வினவியவாறு
சட்டையின் கைகளை மடித்துவிட
ஆரம்பித்தான்.
பத்மாவதி "உன் பாட்டி தான் ஏற்கெனவே அவா விவாகம் முடிஞ்சு
ரொம்ப நாள் ஆகறதுனு சொன்னா! இதுக்கு
மேல
தள்ளி போடறது சரியில்லடா" என்று விளக்கம் அளிக்க அவனும் சரியென்று தலையாட்டினான்.
ஹாலில் தாத்தாவுடன் சென்று
அமர்ந்து கொண்டவன் "தாத்தா பேப்பர் படிச்சிண்டிருக்கேள் போல?" என்று வினவ பட்டாபிராமன்
ஆராய்ச்சிப்பார்வையுடன் செய்தித்தாளை கீழே வைத்தவர் அவரது நீண்டநாள் சந்தேகத்தை அவனிடம்
கேட்டே விட்டார்.
"டேய் கண்ணா! நீயும்
சரி உன் அண்ணாவும் சரி, நம்மாத்துல இருந்தவரைக்கும் நம்ம பாஷையை
நன்னா தான் பேசிண்டிருந்தேள்.
அப்ராட் போயிட்டு வந்தது தான் தாமதம் ரெண்டு பிள்ளையாண்டானுக்கும் பாஷை மாறி
போயிடுத்து. அது என்ன திடீர் திடீர்னு அந்த பாஷை
எட்டிப் பார்க்கறது?" என்று கேட்டவரை பார்த்து
நகைத்தான் ரகுநந்தன்.
"அது ஒன்னும் இல்ல தாத்தா! லண்டன்ல என்னோட படிச்சவாளோட
சேர்ந்து பேசி பேசி பாஷை மாறிடுத்து.
இப்போ
அக்கேசனலா அப்பப்போ எட்டி பார்க்கறது. அதெல்லாம் கணக்குல எடுத்துக்காதேள். என்னண்ட இவ்ளோ
வியாக்கியானம் பேசறேளே, உங்க இளைய பேத்தி என்னை எள்ளி நகையாடுறப்போ மட்டும் இந்த
பாஷை பேசறாளே! அவளையும் கொஞ்சம் என்கொயரி பண்ணறது
தானே மிஸ்டர் பட்டாபிராமன்" என்று நீரஜாட்சியை கோர்த்துவிட்டு வேடிக்கை பார்க்க
ஆரம்பித்தான்.
சீதாலெட்சுமி துளசிமாடத்துக்கு பூஜை செய்துவிட்டு திரும்பியவர்
பேரனிடம் "நீரு எங்கடா கண்ணா?" என்று கேட்டவாறே
சோஃபாவில் அமர
ரகுநந்தன் "பாட்டி அவ சரியான தூங்குமூஞ்சி. எனக்கு
தெரிஞ்சு இப்போ செகண்ட் ரவுண்ட் தூங்கிண்டிருப்பா" என்று அவளை கிண்டல்
செய்தான்.
தாத்தா பாட்டியுடன் உற்சாகமாக
பேசிக் கொண்டிருந்தவனுக்கு திடீரென்று நீரஜாட்சியிடம் இருந்து போனில் அழைப்பு வர சீதாலெட்சுமியிடம்
"பார்த்திங்களா பாட்டி உங்க பேத்திக்கு கொழுப்பை? ஒரே ஆத்துல இருந்திண்டு என்னை போன்ல
கூப்பிடறா" என்று போலியாக குறை
கூறியவன் போனை எடுத்து "ஹலோ" என்று பேச ஆரம்பித்தான்.
"நந்து எனக்கு ஒரு
ஹெல்ப் பண்ணுடா. கொஞ்சம் ரூம்கு வா" என்று மட்டும் கூறிவிட்டு போனை வைத்தாள்
அவனது மனைவி.
போனை வைத்த ரகுநந்தன் தாத்தா
பாட்டியிடம் "உங்க பேத்தி தான். இப்போ என்ன பஞ்சாயத்துக்கு கூப்பிடறானு தெரியல. போய்ட்டு வந்து
எக்ஸ்பிளெய்ன் பண்ணுறேன்" என்று
கூறிவிட்டு
மாடிப்படி ஏற ஆரம்பித்தான்.
அங்கே அவர்களின் அறையில் நீரஜாட்சி பட்டுப்புடவையை கட்டி
முடித்துவிட்டு கொசுவம் சரிவராமல் ஒவ்வொன்றாக
எடுத்துவிட்டு கொண்டிருந்தாள். அவளால் அதை சரியாக வைக்க முடியவில்லை.
"உஃப்! இந்த பட்டுப்புடவையை கண்டுபிடிச்சவன் மட்டும்
என் கையில மாட்டுனான், மவனே அவன் சட்னி தான். ஃப்ளீட்ஸ் ஒழுங்காவே
வரலையே. இந்த நந்துவை கூப்பிட்டு எவ்ளோ நேரம்
ஆகுது? பேசாம கிருஷ்ணாவையே
கூப்பிட்டிருக்கலாம்" என்று தனக்குள் புலம்பியவாறு
கிருஷ்ணஜாட்சியை அழைக்க முயல அதற்குள் ரகுநந்தன் வந்துவிட்டான்.
புடவை கொசுவம் சரியாக வராமல்
விழித்த மனைவியை கண்டவன் "என்ன ஹெல்ப் நீருகுட்டி? ஷேரி கட்டி விடணுமா?" என்று
விஷமமாக கேட்டபடி அவள் அருகில் வர
நீரஜாட்சி "அதுல்லாம் நானே கட்டி முடிச்சிட்டேன். இந்த
ஃப்ளீட்ஸ் மட்டும் கொஞ்சம் பிடியேன்" என்று
அவனிடம் நீட்ட அவனோ இதை நான் என்ன
செய்வது என்று விழித்தான்.
நீரஜாட்சி "நீ இதை பிடிச்சு
நான் அரேஞ்ச் பண்ணுன மாதிரி கீழே வரைக்கும் கரெக்டா அரேஞ்ச் பண்ணி குடு நந்து. இல்லைனா ஷேரி தடுக்கி
விட்டிடும். பார்க்கவும் நல்லா இருக்காது"
என்று கூற மனைவியின் முகவாட்டம் பொறுக்காத கணவனாக அவன் அழகாக கொசுவத்தை ஒன்று போல கீழே வரை மடிப்பு
கலையாமல் ஒழுங்குப்படுத்தி கொடுத்தான்.
நீரஜாட்சி கொசுவம் அழகாக வந்த பின் "வாவ்! நீ சூப்பரா
அரேஞ்ச் பண்ணிருக்க நந்து!" என்று கூறியவள் கண்ணாடியில் தன்னை பார்த்து திருப்தி
பட்டுக் கொண்டாள்.
பின்னர் திரும்பி கணவனிடம் "தேங்க்யூ சோ மச்" என்று
கூறிவிட்டு அந்த புடவைக்கு ஏற்ற அணிகலன்களை அணியத் தொடங்கினாள்.
ரகுநந்தன் டிரஸ்ஸிங் டேபிளின்
ஒரு முனையில் அமர்ந்தவன் அவள் ஜிமிக்கியை காதில் மாட்டிவிட்டு விரலால் சுண்டி விட்டு அழகு பார்ப்பதை
ரசித்தபடி நின்றான்.
நீரஜாட்சி அவனது பார்வையை கவனிக்காதவளாய் தலை உலர்ந்து விட்டதா
என்று தொட்டுப் பார்த்தவள் தலையை பின்னலிட
தொடங்கினாள். ஒரு வழியாக அனைத்தையும் முடித்துவிட்டு திரும்பியவள் அவன் கையைக் கட்டிக் கொண்டு சாய்ந்து
நின்று தன்னை பார்ப்பதைக் கண்டதும்
என்னவென்று
புருவம் உயர்த்தி வினவ அவன் புன்னகையுடன் அவள் அருகில் வந்து இடையோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.
"எதுக்கு எடுத்தாலும் இந்த ஐ ப்ரோவை தூக்கி மிரட்டாதடி! ஒரு
மனுசனுக்கு அவன் பொண்டாட்டியை ரசிக்கிற உரிமை கூடவா
கிடையாது. சரி அதெல்லாம் விடு, இவ்ளோ கஷ்டப்பட்டு ஃப்ளீட்ஸ் எடுக்க ஹெல்ப் பண்ணிருக்கேனே!
எனக்கு எதும் கிடையாதா?" என்று அவளை குறிப்பாய் பார்த்து கேட்க
நீரஜாட்சி "பொண்டாட்டி உதவ வேண்டியது ஒவ்வொரு புருஷனோட கடமைடா!
கடமையை செய்யணும், பலனை எதிர்ப்பார்க்கவே கூடாதுனு பகவானே
சொல்லிருக்கார். சோ நீ கொஞ்சம் தள்ளி
போறியா, சின்ன மாமி என்னை சீக்கிரமா தயாராகி
கீழே வரச் சொன்னாங்க" என்று அவனை விலக்க
முயற்சிக்க அவன் மறுப்பாய் தலையசைத்தான்.
"எனக்கு எதுவும்
குடுக்காம உன்னை இங்கே இருந்து அனுப்புற ஐடியா இல்ல"
"விளையாடாதே நந்து.
ஆல்ரெடி நான் எழுந்திருச்சதே லேட். இன்னும் லேட் ஆக்காதே. என்னை விடு"
"ம்ஹூம்! முடியாது.
கிவ் மீ அ கிஸ்"
என்றவாறு தனது கன்னத்தை தொட்டு காட்ட அவள் பட்டென்று அந்த கன்னத்திலேயே அடித்துவிட்டு "இது
போதும்னு நினைக்கேன். இப்போ விடு" என்று அமர்த்தலாக மொழிய
"ஏய் கிஸ் பண்ண சொன்னா ஆம்படையானு கூட பார்க்காம அறையற. நோ
வே.. உன்னை இப்போதைக்கு விடறதா இல்ல" என்று
அவன் தனது பிடியை இன்னும் இறுக்க நீரஜாட்சி அவனை முறைத்தாள்.
"என்ன முறைச்சாலும் நோ யூஸ். குடுக்க வேண்டியதை குடுத்துட்டு
கிளம்பிட்டே இரு" என்று அவன் கூற
வேறு
வழியின்றி அவன் கன்னத்தில் இதழ் பதிக்க அவள் எம்பி நிற்க அவளது கணவனோ அவனது இலக்கான அவளின் செவ்விதழ்களை
நொடிப்பொழுதில் சிறை செய்திருந்தான்.
அந்த எதிர்ப்பாரா
இதழணைப்பில்
முதலில் திகைத்தாலும் பின்னர் கண்ணை மூடிக் கொண்டவள் சிறிது நேரம் கழித்து அவன் விடுவிக்கவே அவனை
பார்க்க இயலாது விழிகளை தாழ்த்திக்
கொண்டாள்.
தனது செய்கை அவளுக்குள் ஒரு
சிறிய பூகம்பத்தை நிகழ்த்தியிருக்கும் என்பதை உணர்ந்த ரகுநந்தன் "இனிமே நீ என்னை அடிப்ப?" என்று கேலிப்பேச்சில் அவளை இயல்புக்கு
கொண்டு வர முயல
நீரஜாட்சி அவனை
நிமிர்ந்து
பார்த்தவள் "அப்பிடி தான் அடிப்பேன். இன்னொரு தடவை வேணும்னா அடிக்கட்டுமா?" என்று கேட்டபடி அவன் கன்னத்தில்
மீண்டும் சற்று பலமாகவே அறைய அவன் கன்னத்தை பிடித்துக் கொண்டான்.
"ஏய் குட்டிபிசாசு!
ஏன்டி இவ்ளோ பலமா அறைஞ்ச?" என்று அவன் கன்னத்தை தேய்த்துவிட நீரஜாட்சி சிரிப்பை அடக்கியபடி "நீ எவ்ளோ வலியை
தாங்கிப்பேனு செக் பண்ணுனேன் மை டியர் ஹப்பி. நாட் பேட். இது எதையும் தாங்கும் கன்னம்
போல. இன்னும் ரெண்டு அடி போடலாமானு
யோசிக்கிறேன்"
என்று குறும்பாக கூறிவிட்டு அறையை விட்டு வெளியேறினாள்.
ரகுநந்தன் அவளது கேலியை நினைத்து சிரித்தவன் கன்னத்தை
தேய்த்தவாறே கீழே இறங்கிவந்தான்.
தாலி பிரித்து கோர்ப்பதற்கு நல்ல
நேரம் வருவதற்குள் கிருஷ்ணஜாட்சியையும் ஹர்சவர்தனையும் திருமண உடையில் தயாராக சொல்லியிருந்தார்
பத்மாவதி.
நீரஜாட்சி ஹர்சவர்தனிடம் ஏதோ பேசி சிரித்துக் கொண்டிருக்க
நீரஜாட்சியின் திருமணம் வரவேற்பு முடிந்து அவுட்
ஹவுஸிலேயே தங்கிவிட்ட மெர்லின், கரோலின் மற்றும்
கவிதாவுடன் தாலி பிரித்து கோர்க்கும்
சடங்கை பார்க்க ஆவலுடன் தயாராகி வந்துவிட்டார்.
கவிதா ஹர்சவர்தனிடம் புன்னகைத்தவள்
நீரஜாட்சியை தனியே அழைத்துச் சென்று "ஏய் நீ எதுவும் நந்து அண்ணா கிட்ட உளறி வைக்கலையே?" என்று மெதுவாக கேட்க அவள் மறுப்பாக தலையசைத்தாள்.
தொடர்ந்து "ஆனா அதை அவன் கிட்ட சொல்லாம என்னால மறைக்க
முடியாதுடி. இன்னைக்கு கண்டிப்பா அவன் கிட்ட சொல்லிடுவேன்" என்று கூற
கவிதாவுக்கு நீரஜாட்சியின் வாழ்வில் இதனால் குழப்பம்
வந்துவிடுமோ என்ற பயம்.
ஆனால் சிறிது நேரத்தில் மைத்திரேயி அவள் கணவனுடன் வந்துவிட
அந்த கலகலப்பில் கவிதா சிறிது சிறிதாக இந்த பிரச்சனையை மறந்தாள்.
ஹர்சவர்தனின் தாய்மாமா என்பதால்
ஆதிவராஹனுக்கு பத்மாவதி அழைப்பு விடுத்திருந்தார். சொன்ன நேரத்தில் வந்து நின்ற அண்ணனை கண்டு
புன்னகைத்தவர் அவருடன் நின்ற விஜயலெட்சுமியை
கண்டதும் முகம் இறுகிப் போனவராய் ஏதும் பேசாமல் சென்று விட்டார்.
ஆதிவராஹனுக்கும்
தங்கையின்
மனநிலை புரிந்திருந்தது. இவ்வளவு நாட்கள் மனைவி கூறிய பொய்யால் தங்கை செய்த தவறுகள் அவளுக்கு
குற்றவுணர்ச்சியை தருகிறது என்பதை உணர்ந்தவர் அதைப் போக்கி கொள்ளும் வழி அறியாது
தங்கை தவிப்பதையும் புரிந்து கொண்டார். என்ன
இருந்தாலும் உடன்பிறந்தவர் அல்லவா!
நெருங்கிய உறவினர்
அனைவரும்
வந்துவிட தாலி பிரித்து கோர்ப்பதற்காக விஜயலெட்சுமியை ஒரு பெண்மணி அழைக்க பத்மாவதி சத்தமாக "தேவை
இல்லை! என் குழந்தேளுக்கு நல்லது நடக்கிறதுக்காக தான்
இந்த சடங்கை பண்ணுறதே. என் பொண்ணு இருக்க வேண்டிய இடத்துல இவ இருக்காளேனு ஒரு நிமிசம்
இவங்க நினைச்சாலும் என் மகனும் மருமகளும் நிம்மதியா
வாழ முடியாது. என் மருமகள் கழுத்துல ஏறப்போற தாலி நல்ல மனுஷி கையால ஏறணும்னு நான் ஆசைப்படறேன்.
அதான் நானே ஒதுங்கி நிக்கறேன்"
என்று
மனதில் பட்டதை மறைக்காமல் கூறிவிட்டார்.
அங்கே ஒரு சங்கடமான அமைதி நிலவ அதையும் அவரே கலைத்தார்.
"மைத்தி நீயும் ஸ்ருதியும் வாங்கோ. மைதிலி நீயும் வாடி.
உன் கையால தாலியை பிரிச்சு செயின்ல் கோர்த்து
போடுடிம்மா" என்று கூற மைதிலி சகோதரியின் கூற்றை ஏற்றவர் அந்த சடங்கை தன் கையாலேயே ஆரம்பித்து
வைத்தார்.
கயிறிலிருக்கும்
மாங்கல்யத்தை
செயினில் கோர்த்தவர் அதற்கு மஞ்சள் குங்குமம் பூ வைத்து விட்டு அட்சதையை தூவி இருவரையும்
ஆசிர்வதித்தார். அவருக்குப் பின் அனைவரும் அட்சதையை
தூவ ஆரத்தி மைத்திரேயி இருவருக்கும் ஆரத்தி எடுத்தாள்.
கிருஷ்ணஜாட்சி கழுத்தில் கனமாக கிடந்த செயினை வருடியவள் அந்த
மாங்கல்யத்தை கையில் எடுத்துப் பார்க்க ஏனோ
அவளுக்கு உள்ளுக்குள் புல்லரித்தது. அவள் அறியாமல் அதை கண்ணில் ஒற்றிக் கொள்ள நீரஜாட்சி கவிதா, கரோலினிடம் அதை காட்டிவிட்டு
"அங்கே பாருங்கப்பா!
கிருஷ்ணா கணவனே கண் கண்ட தெய்வம் லெவலுக்கு ஃபீல் பண்ணுறா" என்று கேலி செய்ய
அவள் அருகில் இருந்த சீதாலெட்சுமி
"ஏன்டி நோக்கு வாய் மூடவே மூடாதா? உன்னை மாதிரி
ஆம்படையான் எழுப்பியும் எழும்பாம
உறங்கறவளா இல்லாம அவளாச்சும் பொம்மனாட்டியா லெட்சணமா இருக்காளே" என்று பதிலுக்கு கேலி
செய்ய நீரஜாட்சி சட்டென்று திரும்பி
ரகுநந்தனை
முறைக்க ஆரம்பித்தாள்.
அவன் தந்தை சித்தப்பாவுடன்
பேசிக் கொண்டிருந்தவன் "இவ எதுக்கு இப்பிடி முறைக்கறானு புரியலையே" என்று யோசித்தபடியே
தனது பேச்சை தொடர்ந்தான்.
அதே சமயம் மணையில்
அமர்ந்திருந்த
ஹர்சவர்தன் கிருஷ்ணஜாட்சியிடம் "பிடிக்காத புருஷன் கட்டுன தாலியா இருந்தாலும் இவ்ளோ மரியாதை
குடுக்கிறியே கிருஷ்ணா, ஐ அப்ரிசியேட்" என்று பெருமிதமாய் கூற
கிருஷ்ணஜாட்சி கேலியாக
"ஐயோ!
கொஞ்சம் நிறுத்துங்க. பத்து சவரன் செயினை யாரா இருந்தாலும் பயபக்தியோட தான் போட்டுப்பாங்க. இதுல
இவர் கட்டுன தாலிக்கு மரியாதை குடுக்கோம்னு
ஐயாவுக்கு பெருமை வேற" என்று அவன் காலை வாரிவிட ஹர்சவர்தன் மனைவி தன்னுடன் உரிமையாய் வார்த்தைக்கு
வார்த்தை பேசுவதே தனக்கு போதும் என்று நிம்மதியுடன்
அவளது கேலிப்பேச்சை ரசித்தான்.
அவர்களின் திருமணம் திடுமென்று
நடந்தாலும் இத்தனை பிரச்சனைகளுக்கு பிறகு அவர்கள் கணவன் மனைவியாய் மணையில் அமர்ந்திருப்பதே
அவர்களுக்கு கடவுளின் பரிபூரண ஆசிர்வாதம் இருப்பதை
உணர்த்த மொத்த குடும்பமும் அந்த சடங்கை மனநிறைவோடு செய்து முடித்தனர்.
Superu
ReplyDelete❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ReplyDelete