பூங்காற்று 40

Image
  மாங்கல்ய தாரணம் முடிந்ததும் மணமக்கள் சப்தபதி வைத்துவிட்டு பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொள்ள செல்ல ரகுநந்தன் மறக்காமல் நீரஜாட்சியிடம் "நீரு சைட் மாத்திக்கிறியா ?" என்று கேட்க அவள் வேண்டாமென்று மறுத்துவிட்டு பொறுப்பான மருமகளாக பத்மாவதி மற்றும் வேங்கடநாதனின் காலில் கணவனுடன் சேர்ந்து விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டாள். அடுத்து கோதண்டராமன் மைதிலியை நோக்கி செல்லும் போது ரகுநந்தன் "கிரேட் இம்ப்ரூவ்மெண்ட் நீருகுட்டி" என்று பாராட்ட அவனிடம் நாக்கை துருத்தி அழகு காண்பித்துவிட்டு சின்ன மாமா , சின்ன மாமியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டாள். ஆசிர்வாதம் வாங்க வேண்டிய பெரியவர்களின் பட்டியல் சற்று நீளம் என்பதால் ஒருவர் பாக்கியின்றி அனைவரின் ஆசிர்வாதத்தையும் வாங்கி முடித்ததும் நீரஜாட்சி தான் மனதில் நினைத்த திட்டத்தை செயல்படுத்த இது தான் சரியான சமயம் என்று எண்ணியவள் " கிருஷ்ணா" என்று அழைத்தவாறு ஏதோ சொல்லப் போக அது பத்மாவதியின் பெரிய குரலில் அடங்கிவிட்டது. இவர் எதற்காக கிருஷ்ணஜாட்சியை அழைக்கிறார் என்று புருவங்கள் முடிச்சிட அவள் க...

பூங்காற்று 5

 



நீரஜாட்சி கிரிக்கெட் மட்டை மற்றும் பந்துடன் வெளியே வந்தவள் கையில் அவற்றை வைத்துக் கொண்டு அந்தச் சிறுவர்களின் முன் அங்கும் இங்குமாக நடந்தாள்.

அவள் கையில் மின்னிய புத்தம் புது கிரிக்கெட் மட்டையைக் கண்டவர்கள் ஆர்வத்துடன் "அக்கா புது பேட்டாக்கா?" என்று கேட்க

நீரஜாட்சி அப்போது தான் அவர்களை கவனித்தது போல "இதுவா? இது என் தாத்தா நேத்து வாங்கித் தந்தாரு. எப்பிடி இருக்கு?" என்று புருவத்தை உயர்த்தி கேட்க

அந்தச் சிறுவர்கள் "சூப்பரா இருக்குக்கா. எனக்கு ஒரு தடவை குடுப்பியா?" என்று ஆசையாக கேட்டுவிட்டு கண்கள் மின்ன அந்த கிரிக்கெட் மட்டையைப் பார்த்தனர்.

அவளும் பெரியமனதுடன் அவர்களிடம் கொடுக்க அவர்கள் சிறிது நேரம் விளையாடிவிட்டு கொடுக்க மனமில்லாமல் திருப்பியளித்தனர்.

 நீரஜாட்சி அவர்களை ஓரக்கண்ணால் பார்த்தபடி "உங்க எல்லாரும் இந்த பேட் ரொம்ப பிடிச்சிருக்கோ?" என்று கேட்க அவர்கள் தலையாட்ட அவள் "ஓகே! அப்போ என்னை இந்த டீம்ல சேர்த்துக்கிட்டிங்கன்னா டெய்லி இந்த பேட் வச்சு விளையாடலாம்" என்று ஆசை காட்டினாள்.

அவள் பேச்சைக் கேட்ட சிறுவர்கள் அவர்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டு அவர்களுக்குள் தலைவன் போல இருந்தவன் நீரஜாட்சியைப் பார்த்து "சரிக்கா, நீயும் இனிமே எங்க டீம் பிளேயர். உனக்கு பேட்டிங் பிடிக்குமா, பவுலிங் பிடிக்குமா?" என்று கேட்க நீரஜாட்சி அவளின் மூளையில் உதித்த திட்டத்தை செயல்படுத்த நேரம் வந்துவிட்டதை அறிந்து மனதிற்குள் மகிழ்ந்தாள்.

அவர்களிடம் "எனக்கு பேட்டிங்னா இஷ்டம்டா கோபு. உன் பேரு கோபால் தானே! நான் உன்னை கோபுனு கூப்புடுறேன் சரியா?" என்க அவனும் தலையை உருட்டிவிட்டு தன் நண்பர்களிடம் அவர்கள் நிற்க வேண்டிய இடத்தைச் சொல்லிவிட்டு ஸ்டெம்புக்கு முன் காலால் கோடு கிழித்தான்.

அவன் விக்கெட் கீப்பராக நின்று கொள்ள அவனது நண்பன் பந்து வீச தயாராக நின்றான். நீரஜாட்சி தான் நிற்கும் இடத்திலிருந்து பந்தை அடித்தால் அது மாமியின் மண்டை உடைபடுமா என்ற சிந்தனையுடன் பந்து செல்லப் போகும் கோணத்தை கற்பனையில் எண்ணித் திருப்திப்பட்டுக் கொண்டவள் "நான் ரெடிடா" என்றாள்.

அந்த பந்து வீசும் பையன் "அக்கா பீ கேர்ஃபுல்" என்று மிரட்ட நீரஜாட்சி அமர்த்தலாக "என்னை எங்க ஊருல லேடி எம்.எஸ்.டி னு சொல்லுவாங்கடா" என்று சொல்லிவிட்டு கிரிக்கெட் மட்டையைத் தரையில் தட்டினாள்.

அவன் "உன் ஹேர்ஸ்டைலைப் பார்த்துச் சொல்லிருப்பாங்க" என்று கேலி செய்தபடி பந்தை வீச நீரஜாட்சி மட்டையை ஓங்கிப் பந்தை அடித்ததில் அது மாமியின் மண்டையைத் தாக்காமல் நேராக ரகுநந்தனின் அறை ஜன்னல் கண்ணாடியை நொறுக்கித் தள்ளியது.

சிறுவர்கள் "என்னக்கா கண்ணாடியை உடைச்சிட்ட?" என்று அப்பாவியாய்க் கேட்க

அவள் கிரிக்கெட் மட்டையைத் தோளில் வைத்துக் கொண்டு "சே! டார்கெட் மிஸ் ஆயிடுச்சு. இட்ஸ் ஓகே! மாமி மண்டைக்கு பதிலா அவங்க வீட்டு கண்ணாடி போயிடுச்சு. நெக்ஸ்ட் டைம் உன் கான்சென்ட்ரேசனை மிஸ் பண்ணாம அவங்களை அட்டாக் பண்ணு நீரு" என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

அதற்குள் தன் அறை ஜன்னல் கண்ணாடி சிலீரென்ற சத்தத்துடன் நொறுங்கும் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்து ரகுநந்தன் பார்க்க அவன் காலடியில் கண்ணாடி சில்லுகளுடன் புத்தம் புதிய கிரிக்கெட் பந்து கிடந்தது.

உடைந்த ஜன்னல் வழியாகப் பார்த்தவனின் கண்ணில் மட்டையைத் தோளில் ஏந்தியபடி சிறுவர்கள் புடைச்சூழ நின்ற நீரஜாட்சி பட்டுவிட்டாள்.

"எல்லாம் இந்த குட்டிப்பிசாசோட வேலையா? கண்ணாடியை நொறுக்கிட்டு பீமன் கதாயுதத்தோட நிக்கிற மாதிரி போஸ் வேறயாடி குடுக்கற? தோ வர்றேன்" என்று கடுப்புடன் தன் அறைக்கதவை மூடிவிட்டு படிகளில் தடதடவென்று இறங்கினான்.

கீழே தோட்டத்தில் உட்கார்ந்து கதையளந்து கொண்டிருந்த அன்னையையும் அத்தையையும் நோட்டமிட்டு விட்டு தெருவுக்குச் சென்றவன் சிறுவர்களிடம் பேசிக் கொண்டு நின்றவளை நோக்கி "ஏய் நீரஜாட்சி! இங்க வாடி" என்றுக் கத்தினான்.

அவள் அவனது குரலில் இருந்தே யார் அழைத்தது என்பதைக் கண்டுபிடித்தவள் அந்த சிறுவர்களிடம் "நீங்க கிளம்புங்கடா. நம்ம டுமாரோ ஃபுல் சன் வெளிச்சத்துல விளையாடுவோம்" என்றுச் சொல்லி அனுப்பி வைத்துவிட்டு அவனை நோக்கி வந்தாள்.

அவன் கோபமாக இருப்பது தெரிந்தே "கூப்பிட்டேளா அம்மாஞ்சி?" என்று நக்கலாக அவனது பாஷையைப் பேசியபடி அருகில் வந்தவளின் காதைப் பிடித்து திருகியபடி வீட்டினுள் அழைத்துச் சென்றான் ரகுநந்தன்.

 அவளோ "டேய் எருமை மாடு! நெட்டைக் கொக்கு, வளர்ந்து கெட்டவனே! காதை விடுடா. வலிக்குது" என்று கத்தியபடி அவனுடன் செல்ல மொத்தவீடும் அவள் போட்ட கூப்பாட்டில் தோட்டத்தில் கூடிவிட வேங்கடநாதன், கோதண்டராமன் மற்றும் ஹர்சவர்தன் மட்டும் அதில் மிஸ்ஸிங்.

அவளது திருவிளையாடலை அவன் சொன்னதும் பத்மாவதி பத்திரகாளி அவதாரம் எடுக்க தயாராக, மைதிலி என்னடி பண்ணி வச்சிருக்க என்றவாறு கையைப் பிசைந்து கொண்டு நிற்க, கிருஷ்ணஜாட்சி பயத்துடன் நின்று கொண்டிருந்தாள்.

நீரஜாட்சி வீட்டினுள் இருந்து வந்து கொண்டிருந்த தாத்தா பாட்டியைக் கண்டதும் பெருங்குரல் எடுத்து "ஐயோ சித்தம்மா, பட்டு சீக்கிரமா வாங்க. சின்ன அம்மாஞ்சி என் காதை பிய்ச்சு எடுத்துவார் போல" என்று அழ சீதாலெட்சுமி பதறியவராய் ஓடி வந்தார்.

கோபத்தில் சிவந்த முகத்துடன் நிற்கும் இளையப்பேரனை பார்த்தவர் அவன் கையில் சிக்கியிருக்கும் பேத்தியின் கண்ணீரைக் கண்டதும் "டேய் நந்து! சின்னப் பொண்ணு கிட்ட நோக்கு என்னடா வம்பு வேண்டி கிடக்கறது? முதல்ல அவ காதை விடுடா" என்று அதட்ட அவன் எப்போதும் போல அவரது வார்த்தைக்குப் பணிந்து அவளது காதை விட்டான்.

அவள் ஓடிச் சென்று சீதாலெட்சுமியைக் கட்டிக் கொள்ள அவர் அவளது தலைமுடியை வருடிக் கொடுத்தவாறு "என்னடாம்மா, அம்மாஞ்சி ஏன் உன் மேல கோவமா இருக்கறான்?" என்று கேட்டார்.

அவளோ அப்பாவியாய் முகத்தை வைத்தபடி "சித்தம்மா நான் பட்டு வாங்கிக் குடுத்த பேட் பாலை எடுத்துட்டு கிரிக்கெட் விளையாடப் போனேன். எப்போவுமே நான் சூப்பரா பேட்டிங் பண்ணுவேன். ஆனா இன்னைக்கு என்னோட டார்கெட் மிஸ் ஆகி சின்ன அம்மாஞ்சியோட ரூம் ஜன்னல்ல பால் பட்டு கண்ணாடி உடைஞ்சுப் போச்சு. நான் வேணும்னே பண்ணல சித்தம்மா" என்றுச் சொல்லிவிட்டு அவரை மீண்டும் கட்டிக்கொண்டாள்.

பட்டாபிராமன் இதை இலகுவாக எடுத்துக் கொண்டு சிரித்தவர் "இவ்ளோ தானா? டேய் நந்து ஜன்னல் கண்ணாடி உடைஞ்சதுக்காடா இவ்ளோ அழிச்சாட்டியம் பண்ணுன? நான் கூட என்னவோ ஏதோனு பயந்து போயிட்டேன் போ. குழந்தே ஏதோ தெரியாம பந்தை அடிச்சிட்டா. இனிமே கவனமா இருப்பா. எல்லாரும் போங்கோ. போய் வேலையைப் பாருங்கோ" என்று சீதாலெட்சுமியிடம் மாலை கதாகாலட்சேபத்துக்குச் செல்ல வேண்டும் என்பதை நினைவுறுத்த நீரஜாட்சி பாட்டியிடம் இருந்து விலகிக் கொண்டாள்.

இப்போது சென்று சிறிது நேரம் ஓய்வெடுத்தால் தான் கதாகாலட்சேபத்தை கேட்க முடியும் என்பதால் அவரும் கணவருடன் ஓய்வெடுக்கச் செல்லவே பத்மாவதி ஒரு முறைப்புடன் விஜயலெட்சுமியை அழைத்துக் கொண்டு வீட்டினுள் சென்று விட கிருஷ்ணஜாட்சி நீரஜாட்சியை அழைத்தாள்.

"நான் சின்ன அம்மாஞ்சி கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு வர்றேன் கிருஷ்ணா" என்று அவள் நல்லபிள்ளையாகச் சொல்ல அவளும் தங்கையின் எண்ணம் அறியாதவளாய் தன் பங்குக்கு ரகுநந்தனிடம் ஒரு மன்னிப்பை கேட்டு விட்டு அவுட் ஹவுஸினுள் சென்றாள்.

நீரஜாட்சி அவள் போய்விட்டாளா என்று கழுத்தை வளைத்துப் பார்த்து விட்டு ரகுநந்தனின் புறம் திரும்பியவள் "உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா என் காதை பிடிச்சி திருகுவ? ஜன்னல் கண்ணாடி தானே உடைஞ்சுது. உன் மண்டையா உடைஞ்சுது?" என்று கோபத்துடன் சொல்ல

ரகுநந்தன் கை முஷ்டி இறுக "அடியே செய்யறதையும் செஞ்சிட்டு நீ இவ்ளோ திமிரா வேற பேசுவியோ?" என்றபடி அவள் அருகில் வர

அவள் கையிலிருந்த கிரிக்கெட் மட்டையை உயர்த்தி அவன் தலைக்கு குறி வைத்தவாறு "அங்கேயே நில்லு! இல்லன்னா உன் மண்டையை உடைச்சுடுவேன். என்னையும் கிருஷ்ணா மாதிரி பிள்ளைப்பூச்சினு நெனைச்சிட்டியோ? எங்க ஊருல போய் கேட்டுப் பாரு. என் கிட்ட கல்லடி படாத ஆளே கிடையாது. உனக்கு உங்கண்ணாவுக்கு உங்கம்மாக்குலாம் நாங்க பாக்க எப்பிடி தெரியுறோம்? பிச்சைக்காரங்க மாதிரியா? உங்க இஷ்டத்துக்கு திட்டுறிங்க. உங்க அம்மாவை வாயை கொஞ்சம் கம்மி பண்ணிக்கச் சொல்லு. என்னை ஆலகால விஷம்னு சொல்லி திட்டுறாங்க. அப்புறம் நானும் ஆலகால விஷம் என்னென்ன பண்ணும்னு டெமோ காட்ட வேண்டியிருக்கும். ஆக்சுவலி இன்னைக்கு என் டார்கெட்டே பத்து மாமி தான். என்னோட பேட்டிங் சரியில்லாம போனதால அவங்க மண்டை பிழைச்சுது. அதனால தான் உன் ரூம் விண்டோவோட கிளாஸ் உடைஞ்சு போச்சு. ஆனா எப்போவும் ஒரே மாதிரி குறி தப்பிட்டே இருக்காது" என்று மிரட்டினாள்.

அவன் முகம் கடினமுற "லிசன்! நீயும் உங்க அக்காவும் தான் எங்க ஆதரவுல இருக்கிங்களே தவிர நாங்க ஒன்னும் உங்களை ண்டிப் பிழைக்கல. யாரும் இல்லாம தனிமரமா நிக்கறச்சேவே நோக்கு இவ்ளோ திமிரு இருக்கறதே! அத்தை மாமா உயிரோட இருந்தா உன்னைலாம் கையில் பிடிக்க முடியாதுனு தான் பகவான் அவா ரெண்டு பேரையும் சீக்கிரமா அழைச்சிட்டார்" என்று கண் மண் தெரியாத கோபத்தில் என்ன பேசுகிறோம் என்பது புரியாமல் பேசியவன் மைதிலி வீட்டுக்குள் இருந்து வந்ததை கவனிக்கவில்லை.

ஆனால் மைதிலி அவன் பேசிய வார்த்தைகள் அனைத்தையும் அட்சரம் பிசகாமல் கேட்டு மனம் உடைந்தவர் "நந்து" என்று கோபத்துடன் அவனை அழைக்க நீரஜாட்சியுமே அப்போது தான் அவரைக் கவனித்தாள்.

விறுவிறுவென்று சின்ன மகனிடம் வந்த மைதிலி "என்ன பேச்சுடா பேசுற? அவ சின்ன குழந்தே! தெரியாம ஏதோ பேசிட்டான்னா அதுக்கு நீ பெரியவனா பொறுத்து போகாட்டியும் இப்பிடி காலமானவாளை இழுத்து வச்சு பேசிருக்க வேண்டாம்" என்று அவனை உலுக்கி எடுத்தபடி கடிந்து கொள்ள

அவன் விடாமல் "நான் இப்போ என்ன தப்பா சொல்லிட்டேன் சித்தி? இவா ரெண்டு பேரும் தான் நம்மை அண்டிப் பிழைக்க இங்க வந்திருக்காளே ஒழிய நம்ம யாரும் இவா ஆத்துல போய் இருக்கல. இந்த குட்டிப்பிசாசு இருக்கே, இதுக்கு தலையில இருந்து கால் வரைக்கும் அகங்காரம் மட்டும் தான் இருக்கு. ஏதோ பெத்தவா இல்லாத பொண்ணாச்சேனு பார்த்தா என் அம்மாவைப் பத்தி என்னண்டவே தப்பா பேசறா. ஹர்சாவோட பயத்துலயும் நியாயம் இருக்கு. இவா இன்னும் இந்த ஆத்துக்கு என்னென்ன சீர்கேட்டைக் கொண்டு வரப் போறாளோ?" என்று கையை உதறிவிட்டு வெறுப்புடன் சென்றுவிட்டான்.

மைதிலி திரும்பி நீரஜாட்சியைப் பார்க்க அவள் முகமும் அவன் பேசிய பேச்சில் கலங்கிவிட்டது.

மைதிலி சமாதானப்படுத்த அவள் அருகில் செல்ல அவரைத் தடுத்துவிட்டு "வேண்டாம் சின்ன மாமி. நான் வீட்டுக்குப் போறேன்" என்றபடி அவுட் ஹவுஸ் செல்லும் ஒற்றையடிப்பாதையில் நடக்கத் தொடங்கினாள்.

மைதிலி அவளை நீர் நிறைந்த விழிகளால் ஏறிட்டவர் வீட்டினுள் இருந்து தமக்கை அழைக்கும் சத்தம் கேட்க முந்தானையில் கண்ணீரை துடைத்துவிட்டு வீட்டினுள் சென்றார் அவர்.

அவுட் ஹவுஸிற்கு சென்ற நீரஜாட்சி வராண்டாவின் ஒரு மூலையில் அமர்ந்து ரகுநந்தனின் வார்த்தைகளை அசை போடத் தொடங்கினாள்.

"லிசன் நீயும் உங்க அக்காவும் தான் எங்க ஆதரவுல இருக்கிங்களே தவிர நாங்க ஒன்னும் உங்களை ஒண்டிப் பிழைக்கல" என்றவனின் குத்தல் மொழியை கேட்டதும் தந்தை எப்போதும் சொல்லும் வார்த்தை நினைவுக்கு வந்தது.

"என் நீரு குட்டி தான் இந்த வீட்டோட இளவரசி. யாரும் அவளை எதுவும் சொல்லக் கூடாது" என்றவரின் கர்வம் தவழும் முகம் நினைவில் அலையடிக்கத் தொடங்கியது.

"யாரும் இல்லாம தனிமரமா நிக்கறச்சேவே நோக்கு இவ்ளோ திமிரு இருந்தா அத்தை மாமா உயிரோட இருந்தா உன்னைலாம் கையில் பிடிக்க முடியாதுனு தான் பகவான் அவா ரெண்டு பேரையும் சீக்கிரமா அழைச்சிட்டார்" இந்த வார்த்தைகள் தான் அவளை மிகவும் காயப்படுத்திவிட்டது.

ஆனால் அவள் அழுது அரற்றவில்லை. அவளின் பிஞ்சுமனதில் அவனது வார்த்தைகள் பதிந்துவிட அவளுக்கு பத்மாவதியும் அவரது பிள்ளைகளும் மிகவும் மோசமான மனிதர்களாக தோற்றமளிக்கத் தொடங்கினர்.

அன்று முழுவதும் அவளால் இயல்பாக இருக்கமுடியவில்லை. சிந்தனைவயப்பட்டவளாக இருந்த தங்கையிடம் கிருஷ்ணஜாட்சி எதுவும் பிரச்சனையா என்று வினவ

நீரஜாட்சி தெளிவான குரலில் "நம்ம சீக்கிரமா படிச்சு முடிச்சுட்டு ஒரு பெரிய வேலைக்குப் போகணும் கிருஷ்ணா. அப்போ தான் இந்த வீட்டை விட்டுச் சீக்கிரமா போக முடியும்" என்றுச் சொல்ல கிருஷ்ணஜாட்சிக்கு தங்கை எதையோ மறைக்கிறாளோ என்று தோன்ற நீரஜாட்சியை அதட்டி விஷயத்தை அவள் வாயிலிருந்து வாங்கிவிட்டாள்.

அவளுக்குமே அத்தையின் புத்திரர்கள் தங்களைப் பற்றி இவ்வளவு மோசமான எண்ணம் வைத்திருப்பது அவளது சுயமரியாதையை தாக்க தான் செய்தது.

ஆனால் அவர்கள் சொன்னதில் ஒரு விஷயம் சரி தானே. இன்றைய நிலையில் தானும், தங்கையும் மாமா குடும்பத்தை தானே அண்டி நிற்க வேண்டியுள்ளது என்பதை வருத்தத்துடன் நினைத்துக் கொண்டாள் கிருஷ்ணஜாட்சி.

அன்றைய கசப்பான சம்பவத்தை நாள் முழுவதும் நினைத்துக் கொண்டே இருந்த நீரஜாட்சி அதை நினைத்தபடியே இரவில் உறங்கிப் போனாள்.

மறுநாள் காலை விழித்ததும் அவள் முகம் சுருக்கி அமர்ந்திருப்பதைக் கண்ட கிருஷ்ணஜாட்சி தங்கையிடம் "என்னாச்சு நீரு? உடம்பு எதுவும் சரியில்லயா?" என்றுக் கேட்க அவள் "வயிறு ரொம்ப வலிக்குது கிருஷ்ணா" என்றுச் சொல்ல அவளது ஸ்கர்ட்டைப் பார்த்த கிருஷ்ணஜாட்சிக்கு விஷயம் புரிந்துவிட்டது.

சந்தோசத்துடன் தங்கையை அணைத்துக் கொண்டவள் "ஒன்னும் இல்ல நீரு. என் குட்டித்தங்கச்சிம்மா இன்னைக்கு பெரிய பொண்ணா ஆயிட்டா. இது சந்தோசமான விஷயம் தான். வா அக்கா உனக்கு சொல்லிப் புரிய வைக்கிறேன்" என்று தங்கையை பாத்ரூமுக்கு அழைத்துச் சென்று அவளை குளிக்கச் சொன்னவள் அவளிடம் என்ன செய்ய வேண்டும் என்பதை ஒரு அக்காவாக மட்டுமின்றி அன்னையாக விளக்கி கூறிவிட்டு சீதாலெட்சுமியிடம் இந்தச் சந்தோசமான தகவலைச் சொல்ல சென்றாள்.

வழக்கம் போல துளசிமாடத்தின் அருகில் நின்றவரை நெருங்காமல் "சித்தம்மா! நீரு பெரிய மனுசி ஆயிட்டா" என்று மகிழ்ச்சியுடன் கூற சீதாலெட்சுமி மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனார்.

அவளை அவுட் ஹவுஸிற்கு அனுப்பிவிட்டு மைதிலியிடம் விஷயத்தைக் கூறியவர் பட்டாபிராமனிடமும் மகன்களிடமும் பகிர்ந்து கொள்ள விஷயம் மெதுவாக பத்மாவதியின் செவியையும் எட்டியது.

மாமியாரிடம் வந்தவர் "அம்மா! உங்க பேத்தி ருதுவாயிட்டாளாமே. நம்ம சாம்புமாமாவை கூப்பிட்டு பதினாறாம் நாள் கிரகசுத்தி, புண்ணியானம் பண்ணிடுவோம். மத்த விஷயத்தை அவரண்ட நீங்களும் அப்பாவும் பேசிடுங்கோ" என்று தன்னுடைய சொந்த விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு மூத்த மருமகளாக தனது கடமையைச் செய்ய விழைந்தார்.

அவர் அவ்வளவு தூரம் சொன்னதே சீதாலெட்சுமிக்கு சந்தோசம். பத்மாவதி சொன்னதை போலவே பதினாறாம் நாள் ஹோமம் வளர்த்து கிரகசுத்தி, புண்ணியாகவாசனம் எல்லாம் செய்து ருது சாந்தி பூஜை நடைபெற கிருஷ்ணஜாட்சிக்கு பெற்றோர் இல்லாத குறை தெரியாவண்ணம் மூத்த மாமி செய்த ஏற்பாடுகள் மனதை நிறைத்தது.

அதே போல் பத்மாவதியும் அந்த குடும்பத்தின் மூத்தமருமகளாக தனது கடமையை செவ்வனே செய்தவர் நீரஜாட்சியின் தலையில் அட்சதையைத் தூவி வாழ்த்திவிட்டுத் தான் சென்றார்.

மைதிலிக்கு தன் அக்காவைப் பற்றி தெரியுமென்பதால் அவரது இந்த செய்கை ஆச்சரியம் அளிக்கவில்லை.

ஆனால் பத்மாவதியும் தெளிவாக "இந்த ஆத்தோட மூத்த மாட்டுப்பொண்ணா என்னோட கடமையை தான் நான் செஞ்சேன் மைதிலி, அதுக்காக நான் மதுரவாணி பண்ணிட்டுப் போன காரியத்தை மறந்துட்டேனு அர்த்தம் இல்லடி" என்று முத்தாய்ப்பாகச் சொல்லிவிட

மைதிலி மனதிற்குள் "இவ்வளவு தூரம் உன் மனசை மாத்துன பகவான் அந்த விசயத்தையும் உன்னை மறக்க வைச்சிடுவார்னு நேக்கு நம்பிக்கை இருக்கறதுக்கா" என்று சொல்லிக் கொண்டார்.


Comments

  1. பூங்காற்றிலே உன் சுவாசம்..!
    எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
    (அத்தியாயம் - 5)

    ச்சே...! நந்து அப்படி பேசியிருக்க கூடாது. அதுவும் செத்துப் போனவங்களை இழுத்து வைச்சு. அது அந்த ரெண்டு பொண்ணுங்களோட மனசை எந்தளவுக்கு பாதிச்சிருக்கும்.

    அட...நீரு பெரிய மனுசியாகிட்டா
    இனிமேலாச்சும் கொஞ்சம்
    வம்பு தும்புக்கு போகாமா இருந்தா சரி தான்.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

    ReplyDelete
  2. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பூங்காற்று 1