அத்தியாயம் 11
மனம் வெடிக்க அழுது
கொண்டிருந்த தரங்கிணியை எப்படி தேற்றுவதெனத் தெரியாமல் அமர்ந்திருந்தான் அதிரதன். அவளருகே
அமர்ந்திருந்த தமயந்தியின் ஆறுதல்களைக் கேட்கும் திடம் கூட இல்லாமல் கதறிக்கொண்டிருந்தாள்
அவள்.
“எப்பிடி என் மகனைக்
கஷ்டப்படுத்த மனசு வந்துச்சு? அவன் அவங்களுக்கு என்ன பாவம் பண்ணுனான்?”
“அழாதிங்க மேடம்…
கடவுள் இருக்காரு… தப்பு செஞ்சவங்களுக்கு அதுக்கான கூலிய குடுப்பாரு”
“என்ன கூலி குடுத்து
என்ன பிரயோஜனம்? இன்னைக்கு என் பிள்ளை சுயநினைவு இல்லாம படுத்துக் கிடக்கான்… அவன்
எனக்குப் பழைய சித்துவா திரும்பிக் கிடைப்பானா? பெத்த வயிறு காந்துது தமயந்தி”
அதிரதன் அவர்களைத்
தொந்தரவு செய்யாமல் விவேக்கை அழைத்துக்கொண்டு சற்று தூரத்தில் சென்று நின்றான்.
தரங்கிணியின் கண்ணீர்
அவனை ஏதோ செய்தது. வார்த்தையால் சொல்லத் தெரியவில்லை அவனுக்கு.
“சொல்லுங்க சார்”
பார்வையைத் தரங்கிணியிடமிருந்து
விலக்கி விவேக்கிடம் கொண்டு வந்தான் அதிரதன்.
“மிஸ்டர் ஹேமசந்திரன்
கிட்ட நான் பேசணும் விவேக்… தமயந்தி சொல்லுறதை பாத்தா சித்தார்த்தை யாரோ மாடில இருந்து
தள்ளி விட்டிருக்காங்க… அந்தப் பையனுக்குப் பாதுகாப்பு இல்லாத இடத்துல அவனை விட்டு
வச்சா நாளை பின்ன இன்னும் விபரீதமா எதுவும் நடக்க வாய்ப்பிருக்கு… அதுக்கு முன்னாடி
ஹேமசந்திரன் கிட்ட பேசி சித்தார்த்தைத் தரங்கிணி கிட்ட ஒப்படைக்கணும்”
விவேக் தயங்கினான்.
“தமயந்தி இன்னும்
நடந்ததை முழுசா சொல்லலையே சார்… யார் அந்தப் பையனைத் தள்ளி விட்டாங்கனு….”
அவன் சொல்லிக்கொண்டிருக்கையிலேயே
தரங்கிணியின் குரல் கோபத்தோடு ஒலித்தது.
“அவனை நான் சும்மா
விடமாட்டேன்… நீங்க எனக்காக போலீஸ்ல சாட்சி சொன்னிங்கனா என் மகனை என்னோட பொறுப்புல
வச்சுப்பேன்… எனக்கு ஹெல்ப் பண்ணுங்க தமயந்தி”
அதிரதன் மீண்டும்
அங்கே சென்று பார்க்கையில் தமயந்தியிடம் தீவிரக்குரலில் பேசிக்கொண்டிருந்தாள் தரங்கிணி.
“மேடம்… நான்…” எனத்
தமயந்தி தயங்க
“என்ன நடந்துச்சுனு
தெளிவா சொல்லுங்க… உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் வராம நான் பாத்துக்குறேன்” என உறுதியளித்தான்
அதிரதன்.
தமயந்தி ஒரு நொடி
தயங்கினார். பின்னர் மனக்கண்ணில் சித்தார்த்தை ஒரு உருவம் கன்னங்களில் அறைந்ததையும்,
கோபத்தோடு அவனை மாடியிலிருந்து தள்ளி விட்டதையும் நினைத்துப் பார்த்தவர் தயக்கம் நீங்கி
சொல்ல ஆரம்பித்தார்.
“எல்லாத்துக்கும்
காரணம் அந்த பாபி தான் மேடம்”
அதிரதனின் கண்கள்
பாபி என்ற பெயரில் சுருங்கின. யாரவள்?
அவன் யோசிக்கும்போதே
தரங்கிணியின் முகத்தில் கோபம் மின்னியது.
“இதுக்காக தான் கமல்
என் கிட்ட கெஞ்சுனானா? என் பிள்ளைக்கு நடந்த அநியாயத்தை விட அவனோட காதல் அவனுக்கு முக்கியமா
போயிடுச்சுல்ல?”
குரல் உடைந்தது அவளுக்கு.
அப்படி என்றால் பாபி என்பவள் கமலேஷின் காதலியாக இருக்கக்கூடுமென ஊகித்துக்கொண்டான்
அதிரதன்.
“அன்னைக்குச் சித்தார்த்
அழுதுகிட்டே கமலேஷ் சார் ரூம்ல இருந்து ஓடிவந்தான்… அவனைத் துரத்திட்டு வந்த பாபி கன்னத்துல
மாறி மாறி அறைஞ்சாங்க… அவங்க அப்ப நிதானத்துல இல்ல மேடம்… வெறி பிடிச்ச மாதிரி அடிச்சவங்க
‘என்னையும் கமலையும் யாராலயும் பிரிக்க முடியாது’னு சொல்லிக்கிட்டே அவன் நெஞ்சுல கை
வச்சு தள்ளுனாங்க… அதுல நிலை தடுமாறி… சித்தார்த்…. சித்தார்த் மாடில இருந்து விழுந்துட்டான்…
அவங்களை தூரத்துல இருந்து பாத்த நான் பையனுக்கு என்னாச்சோனு பயந்து போய் மாடில இருந்து
கீழ பாக்க அவன்… அவன்…. இரத்தம்….”
சொல்ல முடியாமல்
தடுமாறிய தமயந்தியின் கண்களில் மரண பீதி!
“நான் அழுதுக்கிட்டே
போய் சாரதா மேடம் கிட்ட நடந்ததை சொன்னதும் மேடம் பதறிப்போய் சித்தார்த்தைத் தூக்கிக்கிட்டு
ஹாஸ்பிட்டலுக்கு ஓடிட்டாங்க… அப்புறம் கமல் சார் வந்தாங்க… நடந்தது எல்லாம் சொன்ன பாபி
அதை வேணும்னு செய்யலனு கமல் சார் கிட்ட அழுதாங்க… அப்புறம் எல்லாருமா சேர்ந்து ஹாஸ்பிட்டலுக்குப்
போனாங்க… அன்னைக்கு முழுக்க யாருமே வீட்டுக்கு வரல… எனக்கு மட்டும் சாரதாம்மா கிட்ட
இருந்து போன் வந்துச்சு… நாளைல இருந்து நீ வேலைக்கு வரவேண்டாம்னு சொன்னாங்க… நான் சித்தார்த்தைப்
பாக்கலாமானு கேட்டதுக்கு வீட்டுல நடந்ததை பத்தி வெளிய யார் கிட்டவாச்சும் மூச்சு விட்டா
என் புள்ளைங்களுக்கும் சித்தார்த் நிலமைதான் வரும்னு மிரட்டுனாங்க… என் ஈரக்குலையே
அந்து போச்சு… ஒரு அம்மாவா என்னால வேற எதையும் யோசிக்க முடியலைங்க மேடம்”
தமயந்தியின்மீது
தரங்கிணிக்கு எந்தக் கோபமும் வரவில்லை. அதற்கு மாறாக முறைகேடான உறவுக்காக தன் வாழ்க்கையை
நாசம் செய்ததோடு மட்டுமன்றி இன்று தனது மைந்தனின் உயிரையும் பணயம் வைத்த சாரதா – ஹேமசந்திரன்
மீது கட்டுக்கடங்கா வெறுப்பு பிறந்தது அவளுக்கு.
“நான் அவங்க யாரையும்
சும்மா விடமாட்டேன்” என்று கோபமாகச் சூளுரைத்த தரங்கிணியைச் சமாதானம் செய்தான் அதிரதன்.
“உனக்கு உன் மகன்
வேணுமா? இல்ல நியாயம் வேணுமா?”
அவன் கேட்டதில் திகைத்து
விழித்தாள் அவள்.
“என்ன கேள்வி இது?”
“கேட்டதுக்குப் பதில்
சொல்லு தரு… உனக்குச் சித்தார்த் வேணுமா? இல்ல அவனுக்கு நடந்த தப்புக்கு நியாயம் வேணுமா?”
தரங்கிணி எதையோ யோசித்தவள்
“எனக்கு என் பிள்ளை மட்டும் போதும் அதி” என்றாள் கலங்கிய குரலில்.
“டன்”
இவ்வளவுதான் சொன்னான்
அதிரதன். அதற்கு என்ன அர்த்தமென அவள் விழிக்கும்போதே விவேக்கிடம் ஹேமசந்திரனைச் சந்திக்க
ஏற்பாடு செய்யும்படி கட்டளையிட்டான்.
“‘சித்தார்த்தைக்
கொல்ல நினைச்சதுக்குப் பாபி கம்பி எண்ணக்கூடாதுனா’ ஹேமசந்திரன் என்னை மீட் பண்ணனும்’னு
அவரோட சன் கமலேஷ் கிட்ட சொல்லு”
அதிரதனின் கட்டளையைச்
செய்து முடிக்க விவேக் போய்விட தரங்கிணி அவனை நன்றியொடு ஏறிட்டாள். அவளது கண்களில்
நிரம்பியிருந்த கண்ணீரால் அவனது உருவம் கலங்கலாகத் தெரிந்தது.
“என்னாச்சு சீனியர்?”
என்றவனிடம்
“என் பையனை மட்டும்
எனக்கு மீட்டுக் குடுத்துடு அதி… எனக்குனு இருக்குற ஒரே சந்தோசம் அவன் மட்டும்தான்”
என்றாள் கரங்கூப்பி.
அவளது கரத்தைப் பற்றியவன்
“பெரிய வார்த்தை எல்லாம் பேசாத தரு… தைரியமா இரு” என்றான்.
பின்னர் தமயந்தியிடம்
அவரது பாதுகாப்பு குறித்து கவலைப்படவேண்டாமென கூறினான்.
“விவேக் மூலமா உங்க
வீட்டுக்கு பவுன்சர்ஸ் வச்சு பாதுகாப்பு தரச் சொல்லுறேன்… உங்களுக்கும் உங்க பசங்களுக்கும்
எந்தப் பிரச்சனையும் வராது… உங்களுக்கு வேற ஒரு நல்ல ஜாப்கும் அரேஞ்ச் பண்ணுறேன்… கவலைப்படாதிங்க”
தரங்கிணியைப் போல
தமயந்தியும் நன்றியோடு கரங்கூப்ப அதிரதனின் இதழில் புன்சிரிப்பு மட்டுமே!
அதே நேரத்தில் தொழிலதிபர்
ஹேமசந்திரனின் பங்களாவில் கமலேஷைத் திட்டித் தீர்த்துக்கொண்டிருந்தார் சாரதா.
“முட்டாள் முட்டாள்…
போயும் போயும் அந்தத் தரங்கிணி கால்ல விழுந்து அழுதிருக்க… அதுவும் என் வாழ்க்கைய கெடுத்துடாதனு
சொல்லிருக்க… இதை வச்சு அவ நடந்ததை ஸ்மெல் பண்ணிட்டானா என்ன பண்ணுவ? உன்னால நம்ம குடும்பத்தோட
கௌரவம் மட்டுமா போகும்? பாபியோட குடும்பத்துக்கும் இதால அசிங்கம்… அவ இதை வச்சு சித்தார்த்தை
அவ கிட்ட வச்சுக்க பாத்தானா நான் உன்னைச் சும்மா விடமாட்டேன்”
கமலேஷுக்குத் தொண்டை
அடைத்துக்கொண்டது.
“மாம்…”
“பேசாத… நிதானமா
யோசிச்சு பேசமாட்டியா? எடுத்தேன் கவிழ்த்தேன்னு எல்லாத்தையும் செஞ்சுட்டு அப்புறம்
மாம்னு வந்து நிக்குறது உனக்கு வழக்கமா போயிடுச்சு… நீ மட்டும் புத்திச்சாலியா இருந்திருந்தனா
இவ்ளோ பிரச்சனை நடந்திருக்காது கமல்… உனக்குப் பாபிய பிடிச்சிருக்குனா அந்த ரிலேசன்ஷிப்பை
நீ சீக்ரேட்டா வச்சிருந்திருக்கலாம்… அதை தெரிஞ்சிக்கிட்டதால தானே தரங்கிணி கூட விவாகரத்து,
சித்தார்த்தோட கஷ்டடினு கோர்ட் படி ஏற வேண்டியதா போச்சு… இன்னொரு தடவை நீ செஞ்ச முட்டாள்தனத்துக்காக
நாங்க கோர்ட்டுக்கு அலைய முடியாது கமல்”
கமலேசுக்கு அன்னையின்
பேச்சில் கோபம் வந்துவிட்டது இப்போது. ஆனால் பேச முடியாத சூழல்.
தனது அறைக்குள் கோபமாக
வந்து கதவை அடைத்துக்கொண்டான்.
அவனது காதலை எப்போதுமே
மட்டமாக எண்ணும் அன்னைக்கு எப்படி தனது மனவுணர்வுகளைப் புரியவைப்பதென அவனுக்குத் தெரியவில்லை.
இரகசியமாக எங்களின் காதலைத் தொடரவேண்டிய நெருக்கடியை உருவாக்கியதே நீங்கள்தான் என ஒருமுறை
அவன் குரல் உயர்த்தினால் என்னவாகும்?
இதோ இந்த பரந்து
விரிந்த தொழில் சாம்ராஜ்ஜியமும், பிறந்ததிலிருந்து பழகிப்போன வசதி வாய்ப்புகளும், சொகுசு
வாழ்க்கையும் கேள்விக்குறியாகும். தங்குமிடம், உடுத்தும் உடை, அடுத்த வேளை உணவுக்காக
அவனும் யாரோ ஒருவனிடம் கை கட்டி வேலை பார்க்க வேண்டிய நிலை வந்து சேரும். இதற்காக அஞ்சி
தானே அவன் தரங்கிணியின் கழுத்தில் தாலி கட்டினான்.
தாலி கட்டியதோடு
கடமை முடிந்ததெனப் போய்விடமுடியுமா? மாபெரும் தொழில் சாம்ராஜ்ஜியத்துக்கு வாரிசு வேண்டுமே!
அதற்கான ‘ப்ளாக்மெயில்’ சாரதா மூலம் ஆரம்பிக்கவும் காதலோ காமமோ இல்லாமல் கடனே என்று
தரங்கிணியோடு வாழ்ந்து ஒரு பிள்ளையும் பெற்றாயிற்று.
இனியும் என்னைக்
கட்டுப்படுத்தாதீர்கள் என்று அன்னையிடம் சொல்லிவிட்டுப் பாபியின் காதலில் கட்டுண்டவனுக்குத்
தரங்கிணியால் தங்கள் உறவைக் கண்டுபிடிக்க முடியாதென்ற அலட்சியம்.
அந்த அலட்சியத்தால்
அவனும் பாபியும் ஒருநாள் கையும் களவுமாகத் தரங்கிணியிடம் மாட்டினார்கள். அவள் உடனே
வெடித்தாள். கத்தினாள். சண்டை போட்டாள். வாக்குவாதமும் போராட்டமும் வாழ்க்கையாகிப்
போக ஒரு கட்டத்தில் திருமணவுறவு சட்டப்படி முடிவுக்கு வந்தது.
தங்கள் குடும்பத்து
வாரிசுக்காக மகனையே ‘ப்ளாக்மெயில்’ செய்தவராயிற்றே சாரதா அம்மையார்! தரங்கிணியை மட்டும்
விட்டுவைப்பாரா என்ன?
ஜீவனாம்சமாக சில
நூறு கோடிகள் கொடுப்பதாகச் சொல்லி சித்தார்த்தை அவளிடமிருந்து மொத்தமாகப் பிரிக்க பேரம்
பேசினார். தாய்ப்பாசத்துக்கு விலையேது? தரங்கிணியின் மறுப்பை சட்டத்திலுள்ள ஓட்டைகள்
மூலமும், தனது தந்திரத்தாலும் முறியடித்த சாரதாவுக்கு இப்போது வரை அன்னையையும் மகனையும்
பிரித்த குற்றவுணர்ச்சி கிஞ்சித்தும் கிடையாது.
சித்தார்த் அவர்களைப்
பொறுத்தவரை குடும்பத்தின் வாரிசு. கௌரவச்சின்னம். அவ்வளவே!
இப்போது அந்த கௌரவச்சின்னம்
கைவிட்டுப்போய்விடுமோ என்ற பயம் அவருக்கு! மற்றபடி பேரன்மீது பாசம் எல்லாம் கிடையாது.
மகனையே வந்து பார் என்பவருக்குப் பேரன் மட்டும் இனிக்கவா போகிறான்?
ஹேமசந்திரனுக்கும்
அதே பதற்றம்தான்.
அன்றைய இரவைப் பதற்றத்தோடு
கழித்தவர்களுக்கு மறுநாள் விடியலில் அதிரதனின் உதவியாளன் மூலம் அவன் தங்களைச் சந்திக்க
விரும்புவதாக வந்த செய்தி பெரும் குழப்பத்தைக் கொடுத்தது.
அதிரதனின் தந்தை
ராம்பிரகாஷ் ‘ஹாஸ்பிட்டாலிட்டி’ தொழிலில் இருக்கும் அனைவருக்கும் சிம்மச்சொப்பனம்.
ஹேமசந்திரனுக்குத் தொழில்முறை போட்டியாளர் அவர். அவரது மைந்தன் தன்னையும் தனது குடும்பத்தையும்
சந்திக்க விரும்புவது ஹேமசந்திரனுக்கு வினோதமான உணர்வைக் கொடுத்தது.
அதே நேரம் தங்கள்
தகுதிக்கு நிகரான ஒருவனின் விருப்பத்தை மறுக்கும் தைரியமும் இல்லை. காரணம் ராம்பிரகாஷுக்கு
அரசியல் வட்டாரத்தில் இருக்கும் செல்வாக்கு. அவரது மைந்தனின் விருப்பத்தை நிராகரித்தால்
பின்னாட்களில் அது தொழிலில் பாதிப்பை உண்டாக்கிவிடக் கூடாது என்ற எச்சரிக்கையுணர்வோடு
அதிரதனைச் சந்திக்க ஒப்புக்கொண்டார்.
சாரதா, கமலேஷை அழைத்துக்கொண்டு
தங்களது ஹோட்டலின் கார்பரேட் ஹாலில் அவனுக்காகக் காத்துக் கிடந்த மனிதருக்கு அந்த அறைக்குள்
கம்பீரமும், ஆகிருதியுமாக நுழைந்த அதிரதனைக் கண்டதும் காரணமேயின்றி மூச்சடைத்தது. காரணம்
அவன் தனியாக வரவில்லை.
தன்னுடன் தரங்கிணி
மற்றும் தமயந்தியை அழைத்து வந்திருந்தான்.
“ஷிட்... இவ அதிரதன்
ராம்பிரகாஷ் கூட என்ன பண்ணுறா?” சாரதா கணவரின் காதைக் கடித்தார்.
“ஐ டோண்ட் நோ சாரு”
அவருக்கும் குழப்பம்தான் தரங்கிணியை அங்கே கண்டதில்.
கமலேஷோ தமயந்தியைக்
கண்டதில் அதிர்ந்து போயிருந்தான்.
“ஹலோ அதிரதன்” என்று
சினேகமாகப் பேச்சை ஆரம்பிக்க எண்ணிய ஹேமசந்திரனை அலட்சியம் தழுவிய விழிகளால் ஏறிட்ட
அதிரதன் நிறுத்துங்கள் என்பது போல கையுயர்த்தினான்.
“நான் உங்களை மீட்
பண்ண விரும்புனதுக்குக் காரணம் எந்த பிசினஸ் டீலிங்கும் இல்ல மிஸ்டர் ஹேமசந்திரன்…
ஹாஸ்பிட்டல்ல கான்சியஸ் இல்லாம இருக்குற சித்தார்த்தை தரங்கிணி கிட்ட ஒப்படைச்சிடுங்கனு
கேட்டுக்குறதுக்காக”
அவ்வளவுதான்! சாரதா
கோபத்தோடு எழுந்தார்.
“கோர்ட்டே அவனோட
கஷ்டடி எங்களுக்குனு சொல்லிடுச்சு அதிரதன்… நீங்க யார் இடையில பஞ்சாயத்து பண்ணுறதுக்கு?”
அவரது விழிகள் தரங்கிணியை
வெட்டுவது போல முறைத்தன.
“அதே கோர்ட் இன்னும்
கொஞ்சநாள்ல சித்தார்த்தோட கஷ்டடிய தரங்கிணி கிட்ட குடுக்கும்… கூடவே சித்தார்த்தைக்
கொலை பண்ண பாத்த குற்றத்துக்காக உங்க பையன் கமலேஷோட காதலி பாபிக்கும், அந்தக் குற்றத்தை
மறைச்சதுக்காக உங்க மூனு பேருக்கும் தண்டனை குடுக்கும்”
நிறுத்தி நிதானமாக
அதிரதன் சொல்லவும் சாரதா, ஹேமசந்திரன், கமலேஷ் மூவரின் முகத்திலும் ஈயாடவில்லை.
பதற்றத்தோடு எழுந்த
கமலேஷின் கண்களில் கண்ணீர்.
“நோ நோ! அதிரதன்
அப்பிடி எதுவும் செஞ்சிடாதிங்க… பாபி என் உயிர்… ப்ளீஸ் உங்க கால்ல வேணும்னாலும் விழுறேன்”
விட்டால் விழுந்து
விடுபவனைப் போல அதிரதனை நோக்கி வந்தவனை அங்கேயே நில் என்பது போல சைகை காட்டி நிறுத்தினான்
அதிரதன்.
கமலேஷைக் கேவலமாய்
ஒரு பார்வை பார்த்துவிட்டு “உன்னை மாதிரி ஆளுங்க ஆண்குலத்துக்கே அவமானம்… வேற ஒருத்திய
காதலிக்கிறவன் எதுக்குடா தரங்கிணிய கல்யாணம் பண்ணி ஒரு குழந்தைய குடுத்து அவ வாழ்க்கைய
கெடுத்த? கட்டுன பொண்டாட்டிய பைத்தியம், நடத்தை கெட்டவனு சொல்லி டிவோர்ஸ் பண்ணுனப்ப
துடிக்காத மனசு கள்ளக்காதலி ஜெயிலுக்குப் போயிடுவானதும் துடிக்குதோ? சீ! பக்கத்துல
வராத நீ… வந்தனா உன்னை என் கையால கொன்னுடுவேன்” என்று இடி முழக்கம் போல முழங்கினான்.
சாரதாவுக்கும் ஹேமசந்திரனுக்கும்
அவமானம் தாங்கவில்லை.
அதிரதன் அவர்களை
நிதானமாக ஏறிட்டான்.
“பாபி ஜெயிலுக்குப்
போகக்கூடாதுனா சித்தார்த்தைத் தரங்கிணி கிட்ட ஒப்படைக்கணும்… இதுதான் டீல்… இதுக்கு
ஒத்துக்காம நீங்க மூனு பேரும் முரண்டு பிடிச்சிங்கனா பாபி கூட சேர்ந்து நீங்க மூனு
பேரும் கோர்ட் படி ஏறியிறங்கணும்… அப்புறம் உங்க பிசினஸ் புஷ்ஷ்ஷ்”
கையில் புஷ்வாணம்
வெடித்துக் காட்டினான் அவன்.
ஹேமசந்திரனுக்கும்
சாரதாவுக்கும் அடிவயிறு பற்றியெரிந்தது. கமலேஷோ விட்டால் அதிரதன் காலடியில் விழுந்து
கெஞ்சுவான் போல. அவனைக் கட்டுப்படுத்தியாக வேண்டும்.
“டேய் கமல்”
அவனை அதட்டினார்கள்
கணவனும் மனைவியும். அவனோ கறுகிய முகத்தோடு அவர்களை கொல்லும் ஆவேசத்தோடு வெறி வந்தவனாக
நெருங்கினான்.
“பாபியோட வாழ நான்
என்ன வேணும்னாலும் செய்வேன்… இனியும் உங்க வெட்டி கௌரவம், போலி அன்புக்காக நான் என்
காதலை கள்ளக்காதல் மாதிரி தொடர முடியாது”
“வாயை மூடுடா முட்டாள்”
“நீங்க பேசாதிங்க”
மூவரும் மாறி மாறி
சண்டையிட்டுக் கொள்ள தரங்கிணி அதிரதனைக் கவலையோடு பார்த்தாள். அவனோ சுண்டுவிரலால் காதைக்
குடைந்தவனாக
“ஏய்! உங்க சண்டைய
வீட்டுல வச்சுக்கோங்க… இப்ப எனக்கு உங்க முடிவு என்னனு தெரியணும்…. சித்தார்த்தா? ஜெயிலா?
த பால் இஸ் இன் யுவர் கோர்ட் டர்ட்டி ஃபெல்லோஸ்” என்று மூவரையும் காட்டிக் கூறினான்.
அவர்களுக்கு பொறியில்
சிக்கிய எலியின் நிலை. சித்தார்த்தை விட்டுக்கொடுக்காவிட்டால் இத்தனை ஆண்டுகள் கட்டிக்
காப்பாற்றிய கௌரவமும், தொழிலும் நாசமாய்ப் போய்விடும்.
புஷுபுஷுவென மூச்சு
விட்ட சாரதா ஏதோ சொல்ல வர அவரைத் தடுத்த ஹேமசந்திரன் அதிரதனை நேருக்கு நேர் பார்த்து
தனது முடிவைச் சொல்லிவிட்டார்.
“சித்தார்த்தைத்
தரங்கிணி கிட்ட ஒப்படைக்குறோம்”
தரங்கிணியின் கண்களில்
நீர்த்திரை.
“வாய் வார்த்தைக்குச்
சொன்னா எப்பிடி நம்புறது?”
“லீகலா சித்தார்த்தோட
கஷ்டடிய தரங்கிணி கிட்ட ஒப்படைக்குறதுக்கான வேலைய நான் பாத்துக்குறேன்”
ஹேமசந்திரன் உறுதியளித்தார்.
“அது மட்டும் போதாது…
இந்த நிமிசத்துல இருந்து உங்க குடும்பத்துல இருந்து யாரும் தரங்கிணியையோ சித்தார்த்தையோ
தொந்தரவு பண்ணக்கூடாது… அவ என்னோட ஃப்ரெண்ட்… என் முதுகுக்குப் பின்னாடி எதுவும் காய்
நகர்த்துனிங்கனா விளைவு ரொம்ப மோசமா இருக்கும்… அப்புறம் தமயந்தி இப்ப எங்களோட ஸ்டாஃப்…
அவங்க பாதுகாப்புக்கு உங்களால பிரச்சனை வந்துச்சுனு சின்னதா ஒரு சந்தேகம் எனக்கு வந்தா
கூட உங்களை நான் சும்மா விடமாட்டேன்”
அனைத்துக்கும் பூம்பூம்
மாடு போல தலையாட்டினார்கள் தந்தையும் மகனும்.
“ஓ.கே… டீல் ஓவர்…
டாக்குமெண்டேசனை முடிச்சிட்டு என் செகரட்டரி கிட்ட இன்ஃபார்ம் பண்ணிடுங்க மிஸ்டர் ஹேமசந்திரன்…
குட் பை”
அதிரதனோடு கிளம்பினார்கள்
தரங்கிணியும் தமயந்தியும். அந்த கார்பரெட் அறைக்குள் சாரதா காச்மூச்செனக் கத்துவதும்
அவரை ஹேமசந்திரனும் கமலேஷும் எதிர்ப்பதும் காதுகளில் விழுந்தது மூவருக்கும்.
ஹோட்டலை விட்டு வெளியேறியதும்
தமயந்தியை விவேக்கின் பாதுகாப்பில் அனுப்பிவைத்த அதிரதன் தரங்கிணியிடம் “ஹேப்பி?” என்க
“ம்ம்” என்று கண்ணீரோடு
மேலும் கீழுமாகத் தலையாட்டினாள் அவள்.
“வாட் நெக்ஸ்ட்?”
“என் மகனைப் பாக்கணும்
அதி”
“நானும் வரலாமா?”
“யூ ஷூட் கம் மேன்”
தரங்கிணி மகிழ்ச்சியாய்ச்
சொல்ல காரிலேறினார்கள் இருவரும். காரைக் கிளப்பும் முன்னர் அதிரதன் ஒரே ஒரு கேள்வி
கேட்டான் தரங்கிணியிடம்.
“உன் முன்னாள் கணவனை
இந்தளவுக்கு மயக்கி வச்சிருக்காளே பாபி, அவ உன்னை விட அழகா தரு?”
அச்சூழலிலும் வெடித்துச்
சிரித்தாள் தரங்கிணி. சிரித்து முடித்தவள் “காதலுக்கு அழகு தேவையில்ல அதி” என்றாள்.
ஏனோ அதிரதனால் அதை ஒப்புக்கொள்ள முடியவில்லை. மறுப்பு கூற வாயெடுத்தவன் அடுத்து தரங்கிணி
சொன்ன செய்தியில் கண்கள் தெறிக்க திகைப்பின் உச்சத்துக்கே போய்விட்டான்.
👌👌👌👌
ReplyDelete