பூங்காற்று 40

பட்டாபிராமன் இரு
பேத்திகளையும் அவுட் ஹவுஸில் கொண்டு போய்விட்டவர் அவர்களிடம் “ரெண்டு பேரும்
இருங்கடா. நான் போய் மைத்தியை உங்களுக்கு உதவிக்கு அனுப்பிவிடறேன்” என்று சொல்லிவிட்டு
வீட்டை நோக்கிச் செல்ல சீதாலெட்சுமி பேத்திகளுடன் இருந்து அவர்களுடையை உடைமைகளை எடுத்து
வைக்க உதவிக் கொண்டிருந்தார்.
அவர்கள் வீட்டின்
அவுட் ஹவுஸ் முறைப்படி பராமரிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டிருப்பதால் அவர்களுக்கு
ஒதுங்க வைக்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை. தோட்டத்துக்கு நடுவே
கலைநயத்தோடு கட்டப்பட்டிருந்த அந்த அவுட் ஹவுஸ் இரண்டு படுக்கையறை, சமையலறை, ஒரு நடுத்தரமான
ஹால் மற்றும் நீண்ட வராண்டாவை உள்ளடக்கியது. வராண்டா பாதியளவு
கான்கீரிட் சுவரும் மீதி உயரத்துக்கு மரத்தடுப்பும் போடப்பட்டு கோடைகாலத்தில் அங்கேயே
இளைப்பாறுவதற்கு ஏற்றபடி கட்டப்பட்டிருந்தது.
கிருஷ்ணஜாட்சி பாட்டியுடன்
பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருக்க நீரஜாட்சி வராண்டாவின் சுவரின் மீது ஏறி மரத்தடுப்பின்
இடைவெளி வழியே தோட்டத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். திடீரென்று
அவளுக்குப் பின்புறம் யாரோ நகைக்கும் ஒலி கேட்க வேகமாக கீழே குதித்தவள் அங்கே நின்ற
இளம்பெண்ணைப் பார்த்ததும் சினேகமாகச் சிரித்தாள்.
அவள் நீரஜாட்சியின்
அருகில் சென்று “நீ நீரஜா தானே! நான் மைத்ரேயி. உன்னோட சின்னத்தை
மைதிலியோட பொண்ணு” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள
நீரஜாட்சி சிரித்த
முகத்துடன் “நான் உங்களை காலையிலே தாத்தா கூடப் பார்த்தேன்கா. அப்போவே எனக்கு
உங்களை ரொம்பப் பிடிச்சுப் போச்சு. உள்ளே கிருஷ்ணாவும், சித்துவும்
திங்ஸை அடுக்கி வச்சிட்டு இருக்காங்க. நீங்க போய் ஹெல்ப்
பண்ணுங்க” என்றுச் சொல்லி மீண்டும் சுவரில் ஏறி நின்று வேடிக்கை பார்ப்பதைத்
தொடர்ந்தாள்.
மைத்ரேயி அவளிடம் “பார்த்துடி! கீழே விழுந்து
வச்சிடாதே! அப்புறம் அதுக்கும் பெரியம்மா எதாச்சும் சொல்லப் போறா” என்றபடி வீட்டினுள்
சென்றாள்.
கிருஷ்ணஜாட்சி பாட்டியுடன்
பேசிக் கொண்டிருந்தவள் அறைவாயிலில் நிழலாட உள்ளே வந்த மைத்ரேயியைக் கண்டதும் தயக்கத்துடன்
எழ அவள் புன்னகை தவழும் முகத்துடன் “உக்காரு கிருஷ்ணா! தாத்தா தான்
நீங்கள்லாம் தனியா இருப்பேள்னு சொல்லி உங்களுக்கு பேச்சுத்துணைக்கு என்னை அனுப்பி வச்சார்” என்றபடி தானும்
அமர்ந்து கிருஷ்ணஜாட்சியையும் தன்னருகில் அமர்த்திக் கொண்டாள்.
பின்னர் பாட்டியிடம் “பாட்டி! இவா அப்பிடியே
அத்தை மாதிரி இருக்கா பாக்கறதுக்கு. கிருஷ்ணா! நீரஜா உங்க
தோப்பனார் மாதிரியோ?” என்று தன்னுடைய சந்தேகத்தைக் கேட்க கிருஷ்ணஜாட்சி அதற்கு
ஆமென்று தலையை மட்டும் ஆட்டினாள்.
மைத்ரேயி அவளுடைய
கையைப் பிடித்து தட்டிக் கொடுத்தவள் “இங்க நோக்கு என்ன
பிரச்சனைனாலும் நீ என் கிட்ட ஷேர் பண்ணிக்கலாம். என்னடா பெரிய
மாமி காத்தாலே அப்பிடி பேசிட்டாளேனு வருத்தப்படாத. காலம் எல்லாரையும்
மாத்தும். சோ நீ இப்பிடி தயங்கிண்டே பேசாம உரிமையா பேசு. சரியா?” என்று ஆறுதலாகப்
பேச
கிருஷ்ணஜாட்சி கண்கள்
பனிக்க “அம்மா அப்பாக்கு அப்புறமா எங்களுக்கு யாருமில்லனு நெனைச்சு வருத்தப்பட்டுட்டிருந்தப்போ
கடவுளா பார்த்து எங்களுக்கு
குடுத்த வரம் தான் தாத்தா, பாட்டி, பெரிய மாமா, சின்ன மாமா எல்லாரும். மாமி பேசுனதை
நெனைச்சு வருத்தப்படலைக்கா. ஆனா அதுக்கு அப்புறம் இந்த வீட்டில இருக்கிறவங்க எங்களை எப்பிடி
நடத்துவாங்கன்னு ரொம்ப கவலையா இருந்துச்சு. உங்க பேச்சைக்
கேட்டதுக்கு அப்புறமா எல்லாமே மாறும்கிற நம்பிக்கை வந்திருக்கு” என்று கூற
மைத்ரேயி தன் சுடிதாரின்
துப்பட்டாவை எடுத்து அவள் கண்ணீரைத் துடைத்தவள் “சீ அசடு மாதிரி
அழக் கூடாதுடி! மைத்ரேயியோட அத்தங்காவா லெட்சணமா இருக்கணும்” என்று கேலி
செய்ய கிருஷ்ணஜாட்சியின் இதழில் புன்னகை அரும்பத் தொடங்கியது. சீதாலெட்சுமிக்கு
இளைய தலைமுறையாவது பழைய கசப்பான சம்பவங்களை மறந்துவிட்டு மகிழ்ச்சியாக இருக்கிறதே என்ற
மனநிறைவு.
அப்போது தான் அவர்
புத்தியில் பட்டது நீரஜாட்சியைக் காணவில்லை என்பது. மைத்ரேயி
அவள் வெளி வராண்டாவில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாகக் கூற அவர் வெளியே
வந்துப் பார்க்க அவள் அங்கே இல்லை.
பதறிப் போனவராய் ஹாலினுள்
வந்தவர் மைத்ரேயியிடம் “மைத்தி நீரு அங்கே இல்லடி. குழந்தே எங்கப்
போனானு தெரியலயே பகவானே! ஏன் இந்த இளம்வயசுல இவாளை இப்பிடி சோதிக்கிற?” என்று புலம்பத்
தொடங்கினார்.
மைத்ரேயியும் கிருஷ்ணஜாட்சியும்
அவரைச் சமாதானப்படுத்திக் கொண்டிருக்க அந்த வீட்டின் பெரிய காம்பவுண்ட் சுவரைத் தாண்டி
நீரஜாட்சியின் குரல் கேட்கவும் சீதாலெட்சுமி இரு பேத்திகளுடன் வீட்டின் வெளியே வந்துப்
பார்க்க தெருவில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்களிடம் விவாதித்துக்
கொண்டிருந்தாள் நீரஜாட்சி.
“டேய் பிளீஸ்டா
என்னையும் சேர்த்துக்கோங்க. நான் சூப்பரா பேட்டிங் பண்ணுவேன்டா” என்றுப் பேசிக்
கொண்டிருக்க சீதாலெட்சுமி ஆகாயத்தைப் பார்த்து கும்பிட்டுக் கொண்டே அவள் அருகில் சென்றார்.
திடீரென்று தன்னருகில்
வந்து நின்ற பாட்டியுடன் மைத்ரேயியும், கிருஷ்ணஜாட்சியும்
அவளைப் பார்த்து முறைக்கவே அவள் உதட்டைப் பிதுக்கிவிட்டு “ஏன் நீங்க
எல்லாரும் இப்பிடி ஒரு ரியாக்சன் குடுக்கிறிங்க? சித்தம்மா
பிளீஸ் இவங்க கிட்ட சொல்லி என்னையும் இவங்க டீம்ல சேர்த்துக்கச் சொல்லு” என்று பாவமாகக்
கேட்க
கிருஷ்ணஜாட்சி பொறுமையிழந்தவளாய் “கிரிக்கெட்
டீம்ல அப்புறமா சேர்ந்துக்கலாம். இப்போ எங்களோட வா” என்று கையைப்
பிடித்து அவளை இழுத்துச் செல்ல அந்த சிறுவர்கள அதை வேடிக்கை பார்த்தபடி தங்களுக்குள்
பேசிக் கொண்டனர்.
கிருஷ்ணஜாட்சி வீட்டினுள்
அவளை அழைத்துச் சென்று கடிந்து கொள்ள நீரஜாட்சி “எனக்கு டைம்பாஸ்
ஆக வேண்டாமா கிருஷ்ணா? இங்கே மைத்திக்கா மட்டும் தான் நம்ம செட். சித்துவும், பட்டுவும்
ஓல்ட் ஜெனரேசன். அந்த இன்னொரு பொண்ணு நம்ம ரெண்டு பேரையும் பார்த்தப்போவே விளக்கெண்ணெய் குடிச்ச மாதிரி
முகத்தை வச்சிக்கிட்டா. அப்புறம் அந்த ரெண்டு நெடுமரத்தையும் எனக்குச் சுத்தமா பிடிக்கல. இப்போ சொல்லு! நான் என்ன
தான் பண்ணுறது? அதான் வெளியே குட்டிப்பசங்க கிரிக்கெட் விளையாடிட்டு இருந்ததைப்
பார்த்து அவங்க டீம்ல என்னைச் சேர்த்துக்கச் சொல்லி கேட்டேன். அவங்க மாட்டேனு
சொல்லிட்டாங்க” என்றுச் சொல்ல சீதாலெட்சுமி அவளை அணைத்துக் கொண்டார்.
“சாயந்திரமா
ரெண்டு மாமாவும் வீட்டுக்கு வரட்டும்டி. என் செல்லப் பேத்திக்கு
என்ன வேணும்னு லிஸ்ட் போட்டுக் குடு. அவா எல்லாத்தையும்
வாங்கிண்டு வருவா. கிருஷ்ணா, மைத்தி நீங்க ரெண்டு
பேரும் கிச்சன்ல என்னென்ன தேவைப்படும்னு லிஸ்ட் போடுங்கோ. நீரு நீயும்
உனக்கு என்னென்ன வேணும்னு லிஸ்ட் எழுதி வை. நான் உங்க
மூனு பேருக்கும் சாப்பாடு எடுத்திண்டு வர்றேன்” என்றுச் சொல்லிவிட்டு
வீட்டை நோக்கிச் சென்றார்.
அவர் சொன்னபடி மூவரும்
லிஸ்டை தயார் செய்துவிட்டு அவுட் ஹவுஸை சுற்றி இருக்கும் தேவையற்ற செடிகளைப் பிடுங்கத்
தொடங்கினர். தோட்டத்தின் மரநிழலில் உள்ள ஊஞ்சலில் சாய்ந்து ஹெட்போனில்
பாடல்களை கேட்டுக் கொண்டிருந்த ரகுநந்தனின் பார்வையில் அவர்கள் படவே எழுந்து அவர்களிடம்
சென்றான்.
வியர்வை வழிய வேலை
செய்து கொண்டிருந்தவர்களைக் கண்டதும் மைத்ரேயியைப் பார்த்து “மைத்திக்கா
நோக்கு ஏதாச்சும் ஹெல்ப் தேவையா?” என்க மைத்ரேயி சந்தேகத்துடன் தம்பியைப் பார்த்தபடி “வேண்டாம்டா
நந்து. அப்புறம் இதைச் சாக்கா வச்சு உன்னோட அசைன்மெண்ட் ஒர்க்கை என் தலையில கட்டிடுவ” என்றுச் சொல்லிவிட்டு
தன் வேலையைக் கவனிக்கத் தொடங்கினாள்.
அவளிடமிருந்து நகர்ந்தவன்
கிருஷ்ணஜாட்சியிடம் “பெரிய அத்தங்கா! நோக்கு ஏதாச்சும்
ஹெல்ப் தேவையா?” என்று வேண்டுமென்றே கேலி செய்தான்.
கிருஷ்ணஜாட்சி புன்னகையுடன்
வேண்டாமென்று மறுக்கவே அவன் பதிலுக்குச் சிரித்துவிட்டு அவர்களிடமிருந்து சிறுது தூரம்
தள்ளி நின்று ஏதோ செடியை நட்டு வைத்துக் கொண்டிருந்த நீரஜாட்சியிடம் சென்றான்.
“குட்டி அத்தங்கா! எதுக்கு இவ்ளோ
சிரமப்படற? நான் வேணா ஹெல்ப் பண்ணட்டுமா?” என்றுக் கேலி
விரவிய குரலில் கேட்க அவள் நிமிர்ந்து அவன் பார்வையைச் சந்தித்தவாறே “ஒன்னும் தேவை
இல்ல” என்று அவன் தன்னை பையன் என்றுச் சொன்ன கடுப்பை மறைக்காது குரலில் காட்டவே
அவன் “இந்தப் பொன்னான
கைகள் புண்ணாகலாமா? உதவிக்கு வரலாமா? சம்மதம் வருமா?” என்று இழுத்துப்
பாடியபடியே அவளைப் பார்த்துக் கொண்டே பின் நோக்கி நடக்க அவள் கோபத்துடன் பக்கத்தில்
தண்ணீருடன் குழம்பிக் கிடந்த மண்ணை அள்ளி அவன் மீது வீசிவிட்டு கை அலம்பச் சென்றுவிட்டாள்.
அதைக் கண்டவன் “இந்த ஆங்ரி
பேர்டுக்கு கோவம் மூக்கு மேல நிக்கறது. ஹே பகவான்! இவளைக் கட்டிண்டு
முழிக்கப் போறவன் எவனோ?” என்று எண்ணியபடி வீட்டை நோக்கிச் செல்ல வழியிலேயே இவ்வளவு
நேரம் அவன் செய்த திருவிளையாடல்களை ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்த அவனது அன்னை
பத்மாவதியிடம் மாட்டிக் கொண்டான்.
அவர் மனதிற்குள் “அந்த ரெண்டையும்
நான் விஷமா வெறுக்கிறேன். இவன் என்னடான்னா அவா கிட்டப் போய் உறவுமுறை கொண்டாடிண்டு
நிக்கறான்?” என்று வெதும்பியவர் அதை மறைக்காமல் முகத்தில் காட்டியபடி “நந்து பொம்மனாட்டி
இருக்கற இடத்துல நோக்கு என்ன வேலை?” என்று இறுகிய குரலில்
கேட்க
ரகுநந்தன் இலகுவான
குரலில் “மை டியர் மம்மி! ஏன் இவ்ளோ
கோவப்படற? நான் சும்மா அவாளை வம்பிழுத்திண்டு வர்றேன். நீ சீரியசா
எடுத்துக்காதே. இப்போ வா! நேக்கு ரொம்ப பசிக்கறது. சாதம் போடு” என்று அவரைத்
தோளோடு அணைத்துக் கொண்டுச் செல்ல பத்மாவதியும் அதற்கு மேல் அவனிடம் வாதிடாமல் அவனுடன்
சென்றார்.
எவ்வளவு கோபமாய் இருந்தாலும்
பிள்ளைகள் பசிக்கிறது என்றுச் சொல்லிவிட்டால் போதும்! அந்தக் கோபம்
காற்றிலிட்ட கற்பூரமாக மறைந்துவிடும். உடனே பிள்ளைகளை உண்ண
வைத்துப் பார்த்தால் தான் அவர் சமாதானமாவார். அவரின் அந்த
பலகீனத்தை அறிந்த ரகுநந்தன் அதை இப்போது பயன்படுத்திக் கொண்டான்.
அதே நேரம் மைத்ரேயியும், கிருஷ்ணஜாட்சியும்
அவுட் ஹவுசை சுற்றி ஓரளவுக்கு சீர்படுத்திவிட்டு சீதாலெட்சுமி கொண்டு வந்த மதியவுணவை
நீரஜாட்சியுடன் சேர்ந்து ஒரு பிடி பிடித்தனர்.
மதியம் உண்ட களைப்பு
தீர வராண்டாவில் மினி மெத்தையை விரித்த சீதாலெட்சுமியுடன் நீரஜாவும் படுத்துக் கொள்ளவே
மைத்ரேயி அவுட் ஹவுஸின் மரக்கதவை தாளிட்டுவிட்டு வந்து கிருஷ்ணஜாட்சியுடன் அமர்ந்து
கதை பேச ஆரம்பித்தாள்.
சீதாலெட்சுமியும், நீரஜாட்சியும்
ஜிலுஜிலு காற்றில் கண்ணயர்ந்தவர்கள் நன்றாகவே உறங்கிவிட்டனர். மாலையில்
மைதிலி வந்து கதவை தட்டவும் தான் கிருஷ்ணஜாட்சி மைத்ரேயியின் மடியில் உறங்கிப் போனவள்
வேகமாகச் சென்று கதவைத் திறந்தாள். அங்கே மைதிலியும், கூடவே பத்மாவதியும்
நிற்கவே இருவரையும் பார்த்துப் புன்னகைத்துவிட்டு உள்ளே செல்ல வழிவிட்டு நிற்க இரு
சகோதரிகளும் வராண்டாவுக்குச் சென்றனர்.
மைதிலி அங்கே சீதாலெட்சுமியின்
கழுத்தைக் கட்டிக் கொண்டு உறங்கும் நீரஜாட்சியை ரசித்தவர் அவளது நாடியைக் கிள்ளி தன்
உதட்டில் முத்தமிட்டுக் கொண்டபடி “என் செல்லம்! உறங்கறப்போ எவ்ளோ
அழகு” என்றுச் சொல்ல பத்மாவதி வெறுப்புடன் “நோக்கு அறிவில்லையா
மைதிலி?” என்றுக் குரோதத்துடன் சொல்ல அந்தக் குரலில் திடுக்கிட்டு
விழித்தார் மைத்ரேயி.
கிருஷ்ணஜாட்சி தன்
அதிர்ச்சியை மறைக்காமல் முகத்தில் காட்ட அதைக் கண்டு கொண்ட பத்மாவதி “அது… தூங்கறவா
முகத்தை ரசிக்க கூடாதுனு பெரியவா சொல்லிருக்காளோன்னோ!” என்றுச் சமாளிக்கவே
மைதிலியும் அதை ஒத்துக் கொண்டார்.
மைதிலி கிருஷ்ணஜாட்சியிடம்
பால் பாக்கெட்டுகளை கொடுத்தவண்ணம் “இதை ஃபிரிட்ஜில வச்சுக்கோடிம்மா! காத்தாலே
நம்மாத்துக்குப் பால் போடுறவர்ட்ட நான் இங்கே குடுக்கச் சொல்லிடறேன். நோக்கு வேற
எதாச்சும் வேணுமா?” என்றுப் பேச அந்தச் சத்தத்தில் விழித்தனர் பாட்டியும் பேத்தியும்.
சீதாலெட்சுமி நீரஜாட்சியை
தன்னுடன் அழைத்துச் சென்று முகம் அலம்பி விட்டு வர நீரஜாட்சி முகத்தை துடைத்தபடி மைதிலிக்கு
ஒரு புன்முறுவலை வழங்கியவள் பத்மாவதியைக் கண்டதும் உதட்டைச் சுழித்துக் கொண்டாள்.
பத்மாவதி அதைக் கண்டுகொண்டவராய்
மனதிற்குள் “இத்துணூண்டு இருக்கறச்ச
இதுக்கு திமிரைப் பாரு. இருடி நோக்கு நான் யாருனு காட்டறேன்” என்று மனதிற்குள்
பொறுமியபடி தேன் சொட்டும் குரலில் அவளைப் பார்த்து “ஏன்டிம்மா
நீரஜா நீ ஏன் பொம்மனாட்டியா லெட்சணமா உடுத்திக்கக் கூடாது? நம்மாத்து
பொண்ணுங்க நெத்தியை இப்பிடி பால்நெத்தியா வச்சிக்கப்படாது. ஏன்மா உங்க
பேத்திக்கு இதைலாம் சொல்லித் தர மாட்டேளா?” என்று மாமியாரிடம்
அவளைப் பற்றிய குறைவான எண்ணத்தை உருவாக்க முயன்றார்.
நீரஜா முந்திக் கொண்டு “மாமி பொம்மனாட்டி
மாதிரி உடுத்திண்டுருக்கவா மட்டும் பொம்மனாட்டி மாதிரியா நடந்துக்கறா? காளி அவதாரம்னா
எடுக்கறா!” என்று காலையில் அவர் ஆடிய ஆட்டத்தை மறைமுகமாகக் குத்திக்
காட்டிவிட்டு கண்ணைச் சிமிட்டியவள் “நான் இன்னும் நீங்க
சொன்ன மாதிரி பொம்மனாட்டியா ஆகலே! ஆனதுக்கு அப்புறமா உங்க அட்வைஸை ஃபாலோ பண்ண டிரை பண்ணுறேன்” என்றுச் சொல்லிவிட்டு
தன் கட்டைக்கூந்தலைச் சிலுப்பியபடி அங்கிருந்து நகர்ந்து தோட்டத்துப்பக்கம் சென்றாள்.
பத்மாவதி அவள் பேச்சைக்
கேட்டு பல்லைக் கடித்துக் கொண்டு அமைதி காத்தார். ஆனால் மைதிலி
அவள் சொன்ன “நான் இன்னும் நீங்க சொன்ன மாதிரி பொம்மனாட்டியா ஆகலே!” என்ற வார்த்தையைக்
கேட்டுத் துணுக்குற்றவராய் கிருஷ்ணஜாட்சியைப் பார்க்க அவள் மெதுவாக “ஆமா மாமி! அவ இன்னும்
பெரிய மனுஷி ஆகல” என்றுச் சொல்லவும் சீதாலெட்சுமிக்கும் மைத்ரேயிக்கும் அவளுடைய
சிறுபிள்ளைத் தனத்துக்கான காரணம் முழுவதுமாய் புரியவந்தது.
மைதிலி பெருமூச்சுடன் “எல்லாத்துக்கும்
காலம் நேரம் கூடி வரணும்மா!” என்றுச் சொல்லிவிட்டு பத்மாவதியுடன் நகர்ந்தார்.
அதன் பின் நான்கு
பெண்கள் மட்டும் காபியுடன் அரட்டையைத் தொடர சிறிது நேரத்தில் பட்டாபிராமனும் அவரது
மகன்களும் கூட அதில் கலந்து கொண்டனர். அவுட் ஹவுஸிலிருந்து
கேட்டச் சிரிப்புச்சத்தம் வீட்டில் தனது அறையின் முன் இருந்த வராண்டாவில் அமர்ந்து
லேப்டாப்பில் ஏதோ நோண்டிக் கொண்டிருந்த ஹர்சவர்தனின் உதட்டிலும் சிரிப்பை வரவழைக்க
அவன் புன்னகைத்தவாறு வேலையைத் தொடர்ந்தான்.
அதே நேரம் நீரஜாட்சி
தாத்தாவிடம் அடம் பிடித்து அன்று இரவே கிரிக்கேட் பந்து மற்றும் மட்டையை வாங்கிவிட
அதைக் கட்டி அணைத்தவாறே தூங்கிப் போனாள். கிருஷ்ணஜாட்சி அவளை
எழுப்ப மனமின்றி அவள் அருகில் படுத்துக் கொண்டு அன்றையை நிகழ்வுகளை அசைப் போடத் துவங்கினாள்.
திடீரென்று வீட்டின்
வெளியே சரசரவென்ற சத்தம் கேட்க விதிர்விதிர்த்தவளாய் மரக்கதவை திறந்து வெளியே சென்றவள்
எதன் மீதோ கால் வைத்து வீலென்று அலறப் போக அவளது வாயைப் பொத்தியது ஒரு ஆண்கரம். பயத்தில்
அவளது இதயத்துடிப்பு மத்தளம் போல் கேட்க வியர்வை ஊற்றெடுக்க ஆரம்பித்தது.
அவளது வாயிலிருந்து
கரம் நீக்கப்பட அவள் திரும்பி யாரென்று பார்க்க அவளை முறைத்தவாறு நின்றவன் ஹர்சவர்தன். கையைக் கட்டிக்
கொண்டு தன்னை கூறுபோடும் விழிகளால் அளவெடுக்கும் அவனது விழிவீச்சை அப்போதும் எதிர்கொள்ள
இயலாது சிரம் தாழ்த்த அவள் நெற்றியில் வியர்வைப்பூக்கள் அரும்பத் தொடங்கியிருந்தன.
அவனது வழக்கமான கடினக்குரலில் “இருட்டில
வர்றப்போ கையில டார்ச் வச்சிண்டு வர மாட்டியா? இல்ல நோக்கு
ஆந்தை மாதிரி ராத்திரி கண் தெரியுமோ? நான் மட்டும் பிடிக்கலன்னா
உன் செல்லத் தங்கை பறிச்சு வச்சிருந்த குழில உன் கால் மாட்டிண்டிருக்கும். அதுல டூல்ஸை
வேற போட்டு வச்சிருக்கா அவ. அதுல்லாம் கால்ல வெட்டிச்சுனு வை, இந்த ராத்திரில
நோக்கு டி.டி இஞ்செக்சன் போட டாக்டரைத் தேடி அலையணும். சோ இனிமே
நைட் வெளியே வந்தா டார்ச்சோட வரணும். புரியறதா?” என்றவனின்
குரலில் இருந்த்து அக்கறையா கோபமா என்றுப் புரியாமல் கிருஷ்ணஜாட்சி விழிக்க ஹர்சவர்தனுக்கோ
அவளுடைய இந்த விழிச்சுழல் தன்னை விழுங்குவது போன்ற பிரம்மை.
தலையை உலுக்கி தன்னைச்
சமனப்படுத்தியபடி “ஆத்துல டார்ச் இருக்காது. இதைப் பிடி” என்று அவளிடம்
நீட்ட அவள் அதை வாங்கத் தயங்கியபடி நின்றாள்.
காலையில் அவன் பேசிய
பேச்சுக்கள் அப்படி. தங்களை அகதிகளுடன் ஒப்பிட்டுப் பேசியவனின் கையிலிருந்து ஒரு
குண்டூசியை அவள் வாங்கினாலும் அது அவளது தாய் அவளுக்கு ஊட்டி வளர்த்திருந்த சுயமரியாதைக்கு
இழுக்கு தான் என்று நினைத்தபடி சுடிதார் துப்பட்டாவின் முனையை கைகளால் திருகியபடி அதை
வாங்காமல் நின்றாள் கிருஷ்ணஜாட்சி.
ஹர்சவர்தன் அவளது
கைவிரல் துப்பட்டாமுனையை படுத்தும் பாட்டை பார்த்தபடியே “இப்போ வாங்கப்
போறியா இல்லையா?” என்று அதட்ட அவள் பதறிப்போனவளாய் அவன் கையிலிருக்கும் டார்ச்சை
வாங்கிக் கொண்டு விறுவிறுவென்று வீட்டினுள் சென்று மரக்கதவை அடைத்துக் கொண்டாள். அவள் சென்றபின்
அங்கிருந்து நகர்ந்தவன் தூக்கம் வரும் வரை ஊஞ்சலில் அமர்ந்து அவன் தோழர்களுடன் மொபைலில்
பேச ஆரம்பித்தான்.
வீட்டுக்குள் வந்த
கிருஷ்ணஜாட்சி ஹர்சவர்தனைப் பற்றி ஒரு முடிவுக்கு வர முடியாமல் தவித்தபடி தங்கையை அணைத்துக்
கொண்டு உறங்க ஆரம்பித்தாள்.
💕💕💕💕
ReplyDeleteNeeru yaru ku indha kuzhi ah thondi vacha oru vela raghu kaga irukumo
ReplyDelete❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ReplyDelete