பூங்காற்று 34

கதவை யாரோ தட்டும்
சத்தம் கேட்க திடுக்கிட்டு எழுந்தாள் அந்த இளம்பெண். ஒல்லியான
மேனி, சுருண்ட நீண்ட கூந்தல் உறக்கத்தால் நெற்றியில் மீது புரள அதை காதின் பின்புறம்
ஒதுக்கியவள், தன் நீண்ட விழிகளை சுழற்றி தன் அருகில் உறங்கிக் கொண்டிருக்கும்
தங்கையை பார்த்தாள். அவளைப் போலவே ஒல்லி தேகம் தான். ஆனால் தந்தையின்
பால்நிறம், கூர்நாசியை உரித்து வைத்தபடி கழுத்தைத் தொட்டக் கூந்தலுடன், இன்னும் குழந்தைத்தனம்
போகாத அந்த முகம் உறக்கத்திலும் அதில் தெரிந்த தெளிவு என அவளை ரசித்தவள் கதவை திறக்கலாமா
வேண்டாமா என்ற யோசனையுடன் இருக்க கதவு இன்னும் ஓங்கித் தட்டப்பட்டது.
அவள் இயல்பிலேயே கொஞ்சம்
பயந்த சுபாவம் வேறு. என்ன செய்ய என்று புரியாமல் பயந்து கொண்டிருக்க அந்த சத்தம்
கேட்டு அவளின் தங்கை விழித்ததை அப்போது தான் பார்த்தாள்.
அவள் கண்ணை கசக்கி
கொண்டபடி மலங்க மலங்க விழித்துவிட்டு படுக்கையை விட்டு இறங்க பெரியவள் பதறிப்போய் “எங்க போற
இந்த நேரத்துல?” என்று கேட்க இளையவள் “உனக்கு கதவு
தட்டுற சத்தம் கேக்கலையா? நான் போய் யாருனு பாக்குறேன்” என்று சொல்லிவிட்டு
படுக்கையறையை விட்டு விறுவிறுவென்று நடக்க பெரியவள் அவள் பின்னே ஓடினாள்.
சின்னவள் ஒன்றும்
இவளை போல் அல்ல. அவள் இந்த வயதிலேயே தைரியமானவளாக வளர அவளின் தந்தையும் ஒரு
காரணம் என்று நினைத்தவாறே “நீரு கொஞ்சம் நில்லுடி” என்று அவள்
பின்னே ஓட அதற்குள் அவள் கதவை திறந்திருந்தாள்.
பதைபதைத்த மனதுடன்
தங்கையின் அருகில் சென்றவள் வாயிலில் நின்றவர்களை கண்டதும் நெற்றியை சுருக்கி இவர்களை
எங்கேயோ பார்த்தது போலுள்ளதே என்று
யோசிக்க அங்கே நின்ற இரண்டு நடுத்தர வயது ஆண்களுக்கு அந்த இரண்டு பெண்களையும்
கண்டு பாசத்தில் கண்கள் கலங்கியது.
பெரியவள் அவர்களை
கண்டு கொண்ட உற்சாகத்துடன் “மாமா!” என்று விளிக்க சின்னவள் இன்னும் அவர்களை நம்பாத பாவனையுடன்
தான் பார்த்துக் கொண்டிருந்தாள். அதை அறிந்தவள் தங்கையிடம் “நீரு! இவங்க நம்ம
மாமா. அம்மாவோட பழைய ஆல்பத்துல இவங்க போட்டோ இருக்குடி” என்று சொல்லி
புரியவைக்க அதன் பின்னர் தான் சின்னவளின் முகத்தில் அந்த சந்தேகபாவம் சென்றது.
இருவரையும் உள்ளே
அழைத்து சென்றவள் “உக்காருங்க மாமா. நீங்க வருவிங்கன்னு
நான் யோசிக்கவே இல்ல” என்று சொல்லிவிட்டு சுவற்றை பார்க்க அங்கே புகைப்படமாய் தொங்கிக்
கொண்டிருந்தனர் இந்த இரு பெண்களின் தாய் மதுரவாணியும், தந்தை மதிவாணனும்.
வந்திருந்த அந்த இரண்டு
ஆண்களுக்கும் இவர்களின் தாய் உடன்பிறந்த தங்கை. இரத்தப்பாசம்
அவர்களின் கண்ணில் கண்ணீரை வரவழைக்க இருவருமே தங்கையை இந்த கோலத்தில் காணவா இருபது
ஆண்டுகள் கழித்து வந்தோம் என்று உள்ளுக்குள் உருகினர்.
அங்கே தங்கையின் வார்ப்பாய்
நிற்கும் பெரியவளும், அவர்கள் தந்தையின் பிரதிபிம்பமாய் நிற்கும் இளையவலூம் அவர்கள்
மனதை நிறைவு செய்ய அவர்களில் மூத்தவர் பேச ஆரம்பித்தார்.
“பாருங்கோடா
நான் தான் உங்க பெரிய மாமா வேங்கடநாதன், இவன் என்னோட ஒடம்பிறந்தான்
கோதண்டராமன். எங்க ரெண்டு பேரோட தங்கை தான் உங்க அம்மா மதுரா” என்று சொல்லி
தங்களை அறிமுகப்படுத்த இளையவர் தங்கை மகள்களை பற்றி விசாரிக்க ஆரம்பித்தார்.
“குழந்தே! உன் பேர்
என்னடா?” என்று கேட்க மூத்தவள் “கிருஷ்ணஜாட்சி
மாமா. அப்புறம் இவ பேரு நீரஜாட்சி” என்று கையோடு சிறியவளையும்
அறிமுகப்படுத்தினாள்.
இருவரும் தங்கை மகள்களை
பார்த்து புன்னகைத்தவர்கள் “ரெண்டு பேரும் என்ன படிக்கிறேள்?” என்று கேட்க
இளையவள் “நான் டென்த் போர்ட் எக்சாம் எழுதியிருக்கேன். கிருஷ்ணா
பிளஸ் டூ எக்சாம் எழுதியிருக்கா” என்று தங்களின் கல்வி விவரங்களை தெரிவிக்க இரு சகோதரர்களும்
அர்த்தபுஷ்டியுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
பின்னர் இளையவர் “நீங்க ரெண்டு
பேரும் எங்காத்துக்கு எங்களோட வர்றேளா? அங்க உங்களுக்கு பாட்டி, தாத்தா இருக்கா. ரெண்டு மாமிகள்
இருக்கா. அது போக விளையாட்டு துணைக்கு ரெண்டு அம்மங்கா இருக்கா. மாமா ரெண்டு
பேரும் உங்களை நல்லா பாத்துப்போம்டா” என்று தளுதளுத்த குரலில்
கூற மூத்தவளுக்கு தினமும் இரவில் தானும் தங்கையும் பயந்து கொண்டே உறங்குவது, மளிகை சாமான்
வாங்க செல்லும் போது சந்திக்கும் குறுகுறுத்த பார்வைகளை கண்டு நடுங்குவது, இது எல்லாவற்றுக்கும்
மேலாக இரண்டு நாட்களாக அவளை பின் தொடரும் பக்கத்துவீட்டு இளைஞனின் முகமும் நினைவில்
வர சட்டென்று “சரி மாமா. எங்களையும் உங்க கூடவே
கூட்டிட்டு போங்க. இங்க தனியா இருக்க பயமா இருக்கு” என்று சொல்ல
இருவரும் கலங்கிய கண்களை துடைத்து கொண்டனர்.
“சரி! உங்க ஜாமானெல்லாம்
எடுத்து வைங்கோ!” என்று இருவரையும் அனுப்பிய கோதண்டராமன் கலங்கிப் போனவராய்
சுவரில் கணவருடன் சிரித்து கொண்டிருக்கும் தங்கையின் முகத்தை பார்த்தவர் “அம்மா மதுரா! உன் குழந்தேள்
ரெண்டு பேரும் இனிமே நம்மாத்துல வளருவா. நாங்க அவாளை கண்ணுக்குள்ள
வச்சு பாத்துப்போம்டா” என்று சொல்லிவிட்டு அந்த போட்டோவையும் கழற்றி கிருஷ்ணஜாட்சி
கொண்டு வந்த பேக்கினுள் வைத்தார்.
இருவரும் தாங்கள்
பிறந்து வளர்ந்த வீட்டை ஒரு முறை பார்த்துக் கொண்டனர். பின்னர் மாமாக்களின்
கையை பிடித்து கொண்டு வெளியேறிய அவர்களுக்கு விதி கடினமான பாதையை சென்னையில் போட்டு
வைத்துக்கொண்டு காத்திருந்தது.
சென்னை சென்று இறங்கியவர்
தங்கையின் மகள்களுடன் வீட்டுக்குள் நுழையும் போது மனைவியும், அவளது தங்கையும்
துளசிமாலையைக் கோர்த்துக் கொண்டிருந்தனர். இரு பெண்குழந்தைகளுடன்
நுழைந்த கணவன்மார்களை கேள்வியாகப் பார்த்தவர்களிடம் கோதண்டராமன் சுருக்கமாக “இவா ரெண்டு
பேரும் மதுரவாணியோட குழந்தேள். இனிமே இவா நம்மாத்துல தான் இருக்கப் போறா” என்று சொல்லவும்
மூத்த மருமகளும் வேங்கடநாதனின் மனைவியுமான அந்த வைரபேசரி பெண்மணி பொங்கி விட்டார்.
“யாரை கேட்டு
இவா ரெண்டு பேரையும் இந்த ஆத்துக்குள்ள அழைச்சிண்டு வந்திருக்கேள்? இது ஸ்ரீநிவாசவிலாசம். அனாதை விடுதி
இல்ல” என்று காளி சொரூபமாய் நின்ற மனைவியை வேங்கடநாதன் எவ்வளவோ முயன்றும் அமைதிப்படுத்த
முடியவில்லை.
கோதண்டராமன் தயக்கத்துடன் “மன்னி! அவாளுக்கு
நம்மளை விட்டா இந்த லோகத்துல சொந்தம்னு சொல்லிக்க யாரு இருக்கா? பெத்தவா இல்லாத
குழந்தேள் மன்னி” என்று சொல்ல
பத்மாவதி அவர் தான்
மூத்தவர் வேங்கடநாதனின் மனைவி “நீங்க சித்த நாழி சும்மா இருக்கேளா? இவாளைப் பெத்த
புண்ணியவதியால அன்னைக்கு என் அண்ணா மணமேடையில அம்போனு நின்னானே, அப்போ அவன்
பரிதவிச்சது நேக்கு மட்டும் தான் தெரியும்” என்று சொல்லிவிட்டு
அங்கே நின்ற இரு சகோதரிகளையும் எரிப்பது போலப் பார்த்தார். அவரருகில்
கையைப் பிசைந்தபடி இரு பெண்களையும் பரிதாபமான முகத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார்
பத்மாவதியின் தங்கையும், கோதண்டராமனின் தர்மபத்தினியும், அந்த வீட்டின்
இளைய மருமகளுமான மைதிலி. அவராலும் அவரது தமக்கையின் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
அவர்களின் தாயாரான
மதுரவாணி மைதிலியின் இளம்பிராய தோழியுமாவார். இரு பெண்களையும்
வாஞ்சையுடன் பார்த்தவர் மனதில் மதுரவாணிக்கு என்னவாகியிருக்கும் என்ற கேள்வி எழாமல்
இல்லை.
ஆனால் அவரது தமக்கை
பத்மாவதியின் சிந்தனை வேறுவிதமாகச் சென்றது. அவரது பார்வை
மூத்தவள் கிருஷ்ணஜாட்சியின் மீது படும் போது அவர் வியந்தது ஒரு விஷயத்தில் தான். மூத்தவள்
அப்படியே நாத்தனாரின் பிரதிபிம்பமாக நின்றது தான். அதே தேன்
நிறம், பெரிய அகண்ட கண்கள், சுருண்ட கூந்தல் என்று இளம்வயது மதுரவாணியின் பிரதிபிம்பமாக
நின்றவளை அவருக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அவளின் அருகில்
நின்ற சிறுமி அவளது முட்டைக்கண்ணை உருட்டி அவரை விழிக்க அவர் “சின்னது தோப்பனாரை
உரிச்சு வச்சிருக்கு” என்று தனக்குள் சொல்லிக் கொண்டார்.
அதே நேரம் மாடிப்படியில்
யாரோ இறங்கி வருவது போல காலடியோசை கேட்க அனைவரும் நிமிர்ந்துப் பார்க்க அங்கே படிகளில்
இறங்கி வந்து கொண்டிருந்தான் பத்மாவதியின் சாயலில் ஆறடி உயரத்தில் ஒரு ஆடவன். அவனது பார்வை
புதியவர்களான அந்த இரண்டு பெண்களையும் கூர்மையாகத் தாக்க கிருஷ்ணஜாட்சி அந்தப் பார்வைவீச்சைத்
தாங்கிக் கொள்ள முடியாமல் தலையைக் குனிந்து கொண்டாள். அவன் தான்
ஹர்சவர்தன். வேங்கடநாதன் பத்மாவதி தம்பதியினரின் மூத்தப் புத்திரன். லண்டனின்
எம்.பி.ஏ செய்து கொண்டிருந்தவன் விடுமுறைக்காக வீட்டுக்கு வந்திருந்தான்.
அவன் பத்மாவதியின்
அருகில் நின்றவன் “மா! காத்தாலே என்ன பிரச்சனை உங்களுக்கு? இவாள்ளாம்
யாரு?” என்றவனின் பார்வை மூத்தவளின் சாயலைப் பார்த்ததும் துணுக்குற்றது.
வேங்கடநாதன் மனைவியை முந்திக் கொண்டு “இவா ரெண்டு
பேரும் உன்னோட அத்தை மதுரவாணியோட பொண்ணுங்க. இவா இனிமே
நம்மாத்துல நம்மோட தான் இருக்கப் போறா ஹர்ஷா” என்று சொல்ல
அவரை உணர்ச்சியற்ற முகத்துடன் பார்த்தான் அவன்.
அவனது முகமாற்றத்தைக்
கண்ட அவனது சித்தி மைதிலி அவன் அருகில் வந்து “ஹர்ஷா! இங்க பாருடா
கண்ணா! அவா பாவமோன்னோ. பெத்தவா இல்லாத பெண் குழந்தேள்டா! நம்மாத்துல
இருந்துட்டுப் போகட்டுமேடா கண்ணா” என்று தோழியின் மகளுக்காகப் பரிந்துப் பேசியவர் தமக்கையின்
விழிவீச்சின் தாக்கத்தில் அமைதியானார்.
வீட்டின் மூத்த இளவரசனான
ஹர்சவர்தன் தன்னுடைய தந்தையை நோக்கி “அப்பா நான் சொல்லுறதை
தப்பா எடுத்துக்காதிங்க! இவா ரெண்டு பேரும் ஆத்துக்குள்ள வந்தா பிரளயம் வரும்னு தெரிஞ்சுமா
அழைச்சிண்டு வந்திங்க? அப்பா புரிஞ்சுக்கோங்க இது நம்ம வீடு, ஆதரவு இல்லாதவங்களை
அழைச்சிண்டு வர்றதுக்கு இது ஒன்னும் ரெப்யூஜிஸ் கேம்ப் இல்ல” என்றான் உறுதியாக.
வேங்கடநாதன் மனைவியின்
மறு அவதாரமாகப் பிறந்தவன் வேறு எப்படி இருப்பான் என்று நொந்து கொண்டபடி மகனிடம் அவர்களுக்காகப்
பரிந்து பேச வர அவன் “அப்பா எதிர்த்துப் பேசறதா நெனைக்காதிங்க. இவா ரெண்டு
பேரையும் எதாச்சும் ஆர்ஃபனேஜ்ல சேர்த்து விடுங்க. அங்கே இவாளை
நல்லபடியா பார்த்துப்பாங்க” என்று அவனது அன்னைக்கு ஆதரவாகப் பேசி பத்மாவதியின் மனதைக்
குளிர்வித்தான் அவரது சீமந்தப்புத்திரன்.
அவன் பேசி முடிக்கும்
போதே “இந்த பட்டாபிராமன் உயிரோட இருக்கறச்ச என் பேத்திகளை ஏன்டா அனாதை ஆசிரமத்துக்கு
அனுப்பனும்?” என்றச் சிம்மக்குரல் வீட்டுவாயிலில் இருந்துக் கேட்க இரு சகோதரிகளுடன் சேர்ந்து மொத்த குடும்பமும் வீட்டின் வாயிலை
நோக்கித் திரும்ப அங்கே நெற்றியில்
திருமண் தரித்து நின்ற ஒரு பெரியவரும் அவர் அருகில் நின்றபடி அந்த இரு சகோதரிகளையும்
வாஞ்சையோடு பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீசூர்ணம் அணிந்த அவரின் மனைவியும் இன்னும் இரண்டு
பெண்களோடு நின்று கொண்டிருந்தனர்.
அவர் தான் பட்டாபிராம
ஐயங்கார். அந்த வீட்டின் பெரியவர். அவரின் அருகில்
நின்றப் பெண்மணி சீதாலெட்சுமி தான் வேங்கடநாதன், கோதண்டராமன்
மற்றும் மதுரவாணியைப் பெற்றெடுத்த அன்னை. அவருடன் நின்று கொண்டிருந்த இரு பெண்களும் கோதண்டராமன், மைதிலியின்
சீமந்தப்புத்திரிகள். மூத்தவள் மைத்ரேயிக்கு ஹர்சவர்தனின் வயது தான். சாந்தம் தவழும்
அவளின் முகமே பார்த்தவுடன் நீரஜாட்சியை கவர்ந்துவிட அவளைப் பார்த்துச் சினேகமாகப் புன்னகைத்தாள். மைத்ரேயியும்
அவளையும், கிருஷ்ணஜாட்சியையும் பார்த்துப் பதிலுக்குப் புன்னகைத்தாள்.
ஆனால் அவளின் அருகில்
நின்ற இளையவளோ இவர்கள் இருவரையும் துச்சமாகப் பார்க்க நீரஜாட்சிக்கு அவளை முதல் பார்வையிலேயே
பிடிக்காமல் போய்விட்டது. அவள் தான் ஸ்ருதிகீர்த்தி. மைத்ரேயியின்
தங்கை. அவள் அப்படியே பத்மாவதியின் வார்ப்பு. அவள் கிருஷ்ணஜாட்சியை
பார்வையால் அளவிட்டவள் அவளது அழகில் பொறாமைக் கொண்டாள் அக்கணமே. பின்னர் நீரஜாட்சியைப்
பார்த்தவள் மனதில் “இது பொண்ணா பையனா” என்று கேட்டுக்
கொண்டாள். நீரஜாட்சியின் கழுத்தளவு முடியும், திலகமற்ற
நெற்றியும், அவள் அணிந்திருந்த டாப் மற்றும் பட்டியாலாவும் அவளை எந்த
விதத்திலும் பெண்ணாகக் காட்டவில்லை தான். ஆனால் அந்த பதினைந்து
வயது சிறுமி நீரஜாட்சிக்கு இந்த விஷயங்களில் எல்லாம் ஆர்வமில்லை என்பதால் அவள் இது
எதையும் கண்டுகொள்வதில்லை.
தங்களை ரட்சிக்க வந்த
பரந்தாமனாக நின்ற தாத்தாவைக் கண்டதும் இரு பெண்களும் முகம் மலர பட்டாபிராமனுக்கு கிருஷ்ணஜாட்சியின்
சிரிப்பைக் கண்டதும் மதுரவாணியின் கள்ளமற்ற முகம் நினைவுக்கு வர “அம்மாடி மதுரா” என்று தழுதழுத்தக்
குரலில் அவளை அழைத்தவர் அவளை அணைத்துக் கொண்டார்.
தாத்தாவின் பாசத்தில்
நெகிழ்ந்துப் போய் நின்ற கிருஷ்ணஜாட்சி பேச முடியாமல் கண்ணீரை மட்டும் வடிக்க நீரஜாட்சியை
மார்போடு அணைத்துக் கொண்டார் சீதாலெட்சுமி.
ஹர்சவர்தன், பத்மாவதி, ஸ்ருதிகீர்த்தியைத்
தவிர மற்ற அனைவரும் இந்தப் பாசப்போராட்டத்தை கண்ணில் திரையிடும் கண்ணீருடன் கவனித்துக்
கொண்டிருந்தனர். பத்மாவதியின் மனதில் துவேசமும், ஸ்ருதிகீர்த்தியின்
மனதில் பொறாமையும் கொழுந்து விட்டு எரிய, ஹர்சவர்தனோ அவர்களைப்
போல் அல்லாமல் வீட்டின் அமைதிக்கு இந்தப் பெண்களால் குந்தகம் வருமோ என்ற சந்தேகத்துடன்
அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
*****
மக்களே!
இது ஆறு வருசத்துக்கு முன்னாடி நான் எழுத வந்த புதுசுல வாட்பேட்ல எழுதுன கதை. கொஞ்சம் பெரிய கதை. ஆல்ரெடி சிலர் படிச்சிருக்கலாம். ஆண்டாண்டு காலமா PDFஆ சுத்துற கதையும் கூட. புதுசா ஃபாலோ பண்ணுற மக்களுக்காக இதை ரீரன் பண்ணுறேன். ஆல்ரெடி படிச்சவங்க மறுபடி நீரு - நந்து கூட ட்ராவல் பண்ணுங்க.
💕💕💕
ReplyDeleteஏற்கனவே படித்த கதை தான். இருந்தாலும் இப்போதும் ஒரு சுவாரஸ்யம் கிடைக்கிறது.
ReplyDeleteகதை அருமை
ReplyDeleteYes Naan entha story padichiruken..
ReplyDeleteSema intersting story sis, happy for rerun this story
ReplyDeleteNan ippo than first time padikiren sis
ReplyDelete❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ReplyDelete