அத்தியாயம் 11
மனம் வெடிக்க அழுது கொண்டிருந்த தரங்கிணியை எப்படி தேற்றுவதெனத் தெரியாமல் அமர்ந்திருந்தான் அதிரதன். அவளருகே அமர்ந்திருந்த தமயந்தியின் ஆறுதல்களைக் கேட்கும் திடம் கூட இல்லாமல் கதறிக்கொண்டிருந்தாள் அவள். “எப்பிடி என் மகனைக் கஷ்டப்படுத்த மனசு வந்துச்சு? அவன் அவங்களுக்கு என்ன பாவம் பண்ணுனான்?” “அழாதிங்க மேடம்… கடவுள் இருக்காரு… தப்பு செஞ்சவங்களுக்கு அதுக்கான கூலிய குடுப்பாரு” “என்ன கூலி குடுத்து என்ன பிரயோஜனம்? இன்னைக்கு என் பிள்ளை சுயநினைவு இல்லாம படுத்துக் கிடக்கான்… அவன் எனக்குப் பழைய சித்துவா திரும்பிக் கிடைப்பானா? பெத்த வயிறு காந்துது தமயந்தி” அதிரதன் அவர்களைத் தொந்தரவு செய்யாமல் விவேக்கை அழைத்துக்கொண்டு சற்று தூரத்தில் சென்று நின்றான். தரங்கிணியின் கண்ணீர் அவனை ஏதோ செய்தது. வார்த்தையால் சொல்லத் தெரியவில்லை அவனுக்கு. “சொல்லுங்க சார்” பார்வையைத் தரங்கிணியிடமிருந்து விலக்கி விவேக்கிடம் கொண்டு வந்தான் அதிரதன். “மிஸ்டர் ஹேமசந்திரன் கிட்ட நான் பேசணும் விவேக்… தமயந்தி சொல்லுறதை பாத்தா சித்தார்த்தை யாரோ மாடில இருந்து தள்ளி விட்டிருக்காங்க… அந்தப் பையனுக்குப் பாதுகாப்பு இல்லாத ...