பூங்காற்று 42

Image
  நீரஜாட்சி திருமணம் முடிந்த மறுநாளே ரகுநந்தனிடம் தனது நிறைவேறாத திட்டம் பற்றி சொல்ல தக்க தருணத்தை எதிர்நோக்கியிருக்க அவன் ஹோட்டலின் வேலை காரணமாக சென்றுவிட அவளால் அவனிடம் அதை கூறவே முடியவில்லை. அதை தொடர்ந்த நாட்களில் வீட்டில் அனைவரும் ஒரு புறம் ஹர்சவர்தனின் ஹோட்டல் திறப்புவிழாவை பற்றி பேசிக் கொண்டிருக்க இன்னொரு புறம் கிருஷ்ணஜாட்சியும் கரோலினும் சேர்ந்து அவர்கள் திறக்கப் போகிற " டாம் ' ஸ் கஃபே" தொடர்பான வேலைகளில் அலைந்து திரிய இந்த இரண்டு திறப்புவிழாக்களே அங்கிருந்தவர்களின் மொத்த நேரத்தையும் எடுத்துக் கொண்டன. ஹர்சவர்தன் அது விஷயமாக ரகுநந்தனை அழைத்துச் சென்றுவிட நீரஜாட்சி அலுவலக வேலையில் மட்டுமே கவனம் செலுத்தினாள். பெரும்பாலான நேரங்களில் அவன் வீடு திரும்பும் போது அவள் உறங்கிப் போயிருக்க அந்த உண்மை வெளிவராமலே இருந்தது. ஆனால் அவளது தோழி கவிதா இது ரகுநந்தனுக்கு தெரியவருவது அவர்களின் உறவுக்கு நல்லதல்ல என்று ஒவ்வொரு முறை போனில் பேசும் போதும் நீரஜாட்சிக்கு அறிவுறுத்துவாள். நீரஜாட்சிக்கு தன்னை இவ்வளவு காதலிக்கும் தன் கணவனிடம் அவன் சம்பந்தப்பட்ட விஷயத்தை மறைத...

பூங்காற்று 21

 


மறுநாள் காலையில் வழக்கம் போல நீர்ஜாட்சிக்கு முன்னரே விழித்துவிட்ட கிருஷ்ணஜாட்சி அவள் என்ன மாதிரி மனநிலையில் இருப்பாளோ என்ற குழப்பத்துடனே காபி மற்றும் காலை உணவை  தயார் செய்ய நீரஜாட்சி நிதானமாக எட்டு மணிக்கு எழுந்து சாவகாசமாக குளித்துவிட்டு வந்தவள் கிருஷ்ணஜாட்சியின் சமையலை வாசம் பிடித்தபடி சமையலறைக்குள் வந்துவிட்டாள்.

"வாவ் கிருஷ்ணா உன்னோட இட்லி அண்ட் சாம்பார் வாசம் ஆளை அப்பிடியே தூக்குதே. காபி அப்புறமா குடிச்சிக்கிறேன். முதல்ல பிரேக் பாஸ்ட்" என்று சாதாரணமாகவே பேச காலையில் எழுந்ததும் வழக்கம் போல தனக்கு கிளாஸ் எடுப்பாள் என்று எண்ணிக் கொண்டிருந்த கிருஷ்ணஜாட்சிக்கு அவளின் இந்த அமைதியான தோற்றம் திகைப்பைக் கொடுத்தது.

ஒரு தட்டில் இட்லியை வைத்து சாம்பாரை ஊற்றியபடியே "நீரு உனக்கு என் மேல கோவம் ஒன்னும் இல்லையே?" என்று தயங்கி தயங்கி கேட்க  தட்டை வாங்க நீட்டிய நீரஜாட்சியின் அதை வாங்கிக் கொள்ளாமல் அந்தரத்திலேயே நின்றது.

கிருஷ்ணஜாட்சி அவள் இன்னும் கோபமாக இருக்கிறாள் போல என்று எண்ண அவளோ அதற்கு மாறாய் சகோதரியை தோளோடு அணைத்துக் கொண்டபடி "உன் மேல என்னால ரொம்ப நேரத்துக்கு கோவமா இருக்க முடியுமா கிருஷ்ணா? நேத்தைக்கு நான் தான் கொஞ்சம் அசடு மாதிரி அவசரபுத்தியோட நடந்துகிட்டேன். பட் அந்த என்.கே நம்பர் ஒன் பேசுனதுக்கு நான் குடுத்த ரிப்ளைஸ் எதையும் நான் வாபஸ் வாங்கிக்கறதா இல்ல. நீ இனிமே அவர் கிட்ட பேசாத. சப்போஸ் மாமி உன்னை அவர் கிட்ட எதாவது கேக்க சொன்னா கூட என் கிட்ட சொல்லு. நான் பார்த்துக்கிறேன்" என்று பெரிய மனுஷி மாதிரி கூற கிருஷ்ணஜாட்சிக்கு அவள் கோபம் குறைந்ததே போதுமென்று தோன்றிவிட அவள் சொன்ன அனைத்துக்கும் தலையை ஆட்டி வைத்தாள்.

அதன் பின் சகோதரிகள் இருவரும் வழக்கம் போல ஒருவரை ஒருவர் கலாய்த்தபடி காலையுணவை முடித்து விட்டு வீட்டை நோக்கிச் சென்றனர். அன்று மைத்திரேயி வருவதாகச் சொல்லியிருந்தாள். அங்கே இருவரும் போய் நின்றவுடனே சீதாலெட்சுமி நீரஜாட்சியை கண் காட்டி என்ன பிரச்சனை என்று கிருஷ்ணஜாட்சியிடம் கேட்டு வைக்க அவளோ ஒன்றும் இல்லை கவலைப்பட வேண்டாம் என அவருக்கு சமாதானம் கூறினாள்.

நீரஜாட்சியும் நேற்றைய சம்பவத்தின் நிழல் எதுவும் இல்லாமல் அனைவரிடமும் சாதாரணமாக நடந்து கொள்ளவே சீதாலெட்சுமிக்கும் பிரச்சனை ஒன்றும் தான் எண்ணிய அளவுக்குப் பெரிதில்லை என்ற நிம்மதி.

சிறிது நேரத்தில் கணவனுடன் வந்து சேர்ந்த மைத்திரேயியுடன் வர்ஷாவும் இணைந்து வரவே நீரஜாட்சி இருவரையும் நோக்கி ஒரு அசட்டு சிரிப்பு சிரித்து அவர்களை சமாதானப்படுத்த முயற்சி செய்தாள். இருவரும் சிறிது நேரம் முறுக்கிக் கொண்டவர்கள் பின்னர் குழந்தை அர்ஜூனை வைத்து அவள் விளையாட்டு காண்பிக்கவும் சமாதானமாயினர்.

ஹர்சவர்தன் ஹோட்டலுக்குச் செல்ல தயாராகி வந்தவன் நேற்றைய நிகழ்வுகளின் தாக்கத்தில் நீரஜாட்சியையும் கிருஷ்ணஜாட்சியையும் பார்க்க முடியாமல் தவித்தவன் வர்ஷாவிடம் ஒரு சினேகப்புன்னகையைச் சிந்தியவன் பத்மாவதியிடம் "மா! நான் ஹோட்டலுக்குக் கிளம்புறேன். பிரேக் பாஸ்ட் அங்கேயே பார்த்துக்கிறேன்" என்றுச் சொல்ல அதற்கு அவர் ஏதோ சொல்ல மறுத்தவன் அவரிடம் ஒரு புன்னகையுடன் விடை பெற்றான்.

அதன் பின் கிருஷ்ணஜாட்சியும் ஹோட்டலுக்குச் செல்ல தயாராக நீரஜாட்சி அவளிடம் "சொன்னதை மறந்துடாதே! அந்த என்.கே நம்பர் ஒன் கிட்ட இருந்து விலகியே இரு" என்று காதுக்குள் முணுமுணுக்க கிருஷ்ணஜாட்சியும் தலையாட்டிவிட்டு சென்றாள்.

அவள் சென்று சிறிது நேரத்தில் ரகுநந்தனும் வந்துவிட மீதமிருந்த இளையவர்கள் அனைவரும் கலகலப்பாக உரையாட ஆரம்பிக்க ரகுநந்தனின் விழிகள் நீரஜாட்சியின் விழிகளுடன் சண்டையிட ஆரம்பித்தது. அவள் வாய்க்குள் ஏதோ முணுமுணுக்க அவன் அவளை கேலியாகப் பார்த்தபடி "நீருகுட்டி ஏதோ முணுமுணுக்கற மாதிரி தெரியுது! என்ன லண்டன் டெக்னிக்கை யூஸ் பண்ணனுமா?" என்று வினவ அவளுக்கு வந்த கோபத்துக்கு அவள் கண்களாலேயே அவனை எரித்தாள்.

கடுப்புடன் "விவஸ்தை கெட்டவன், எல்லாரும் இருக்கறப்போ லூசுத்தனமா உலறி வைக்கிறான்" என்று மீண்டும் வாய்க்குள்ளே முணுமுணுக்க வர்ஷா ஆர்வத்துடன் "அது என்னடா லண்டன் டெக்னிக்?" என்று புரியாமல் வினவவும் ரகுநந்தன் கிண்டலாக "என்ன நீருகுட்டி மன்னி கேக்கறா! சொல்லிடவா?" என்று குறும்புப்பார்வை பார்க்க அவனது இலகுவான பேச்சில் பத்மாவதியின் மனம் துணுக்குற்றது.

ஆனால் அதற்கு எதிர்வினையாக நீரஜாட்சியின் கோபத்தில் சிவந்த முகத்தைக் கண்டதும் தான் அது வழக்கமாக அவளை அவன் வம்பிழுப்பது போல தான் என்று எண்ணி நிம்மதி பெருமூச்சு விட்டார்.

ஆனால் ரகுநந்தனோ அன்று மட்டும் அல்ல அதைத் தொடர்ந்த நாட்களிலும் நீரஜாட்சியுடன் இழைந்து கொண்டே திரியவே அவருக்கு முதல் முறையாக இருவரையும் ஒரே இடத்தில் வேலை செய்ய சொல்லி கட்டளையிட்டுத் தான் தவறு செய்துவிட்டோமோ என்று தோன்ற ஆரம்பித்தது.

பத்மாவதி ஒரு வித பதபதைப்புடன் நாளைக் கடத்த அவரது மூத்தப்புதல்வனின் திருமண நாளும் வந்துவிட்டது. ஆனால் அதன் சந்தோசத்தை அவரது இளைய மைந்தன் முழுவதுமாக அனுபவிக்க விட்டால் தானே. அவரின் இந்த பதற்றத்துக்கு ரகுநந்தனின் காதல் பார்வை அனைத்து திருமணச்சடங்குகளிலும் நீரஜாட்சியை தழுவியதே காரணம்.

விஜயலெட்சுமியிடம் இது குறித்து கேட்டதற்கு அவரோ "பத்மா! நோக்கு தெரியாதாடி, நம்ம நந்தன் விளையாட்டுப்பையன். அவன் சும்மா அத்தை மகள்னு உரிமையா அவளண்ட வம்பிழுத்திண்டிருக்கானே ஒழிய அவன் போய் இந்த புடலங்காயைவா பார்க்கப் போறான்? நீ மனசை போட்டு குழப்பிக்காம குழந்தேளைப் பத்தி மட்டும் யோசிடி" என்றுச் சொல்லிவிட்டு சென்றார். அவரது மகள் விடிந்தால் ஸ்ரீனிவாசவிலாசத்தின் மருமகள் ஆகப் போகிறாள் என்ற குஷியில் அவர் சென்றுவிட பத்மாவதிக்கு மட்டும் மனம் உறுத்தலாகவே இருந்தது.

அதற்கு ஏற்றாற்போல அவரது புத்திரனும் திருமணத்துக்கு முந்தைய நாள் மாலை ஜானவாசத்தில் ஆரம்பித்து அதன் பின் தொடர்ந்த நிச்சயதார்த்தம் முதற்கொண்டு அவன் அண்ணனுடன் இருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு நீரஜாட்சியுடனே சுற்றிக் கொண்டிருந்தான். பத்மாவதிக்கு கிடைத்த ஒரே நம்பிக்கை என்னவென்றால் அவன் இவ்வளவு சுற்றியும் நீரஜாட்சி அவனை ஒரு பொருட்டாக எண்ணி ஒரு புன்னகையைக் கூட சிந்தவில்லை என்பது தான்.

மணமகள் அறையில் அரட்டை அடித்துக் கொண்டிருந்த நீரஜாட்சியிடம் மைதிலி "நீரு நான் கிருஷ்ணாவை வீட்டுக்கு அழைச்சிண்டு போறேன். தாத்தாவும், பாட்டியும் இங்கே தங்க முடியாதோன்னோ! அவாளும் என்னோடவே வர்றா. நீ மைத்தி, ஸ்ருதி கூட பத்திரமா இங்கேயே தங்கிக்கோடிம்மா" என்றுச் சொல்லிவிட்டு நாளை அதிகாலை அனைவரும் திரும்பிவிடுவோம் என கூறிவிட்டு கிளம்பினார்.

அதன் பின் மைத்திரேயியுடன் அரட்டையைத் தொடர்ந்தவள் விஜயலெட்சுமி வந்து "இன்னும் நீங்கல்லாம் தூங்கலியா? அதிகாலையில பொண்ணு  மாப்பிள்ளை விரதம் இருந்து வர்றச்ச நீங்க தான்டி ஆரத்தி எடுக்கணும். போய் தூங்குங்கோ" என்றுச் சொல்லிவிட்டு செல்ல மூவரும் தூங்குவதற்கு ஆயத்தமாயினர்.

அதே நேரம் வீட்டிலும் மறுநாள் திருமணத்துக்கு முந்தைய சடங்குக்காக சீக்கிரம் எழ வேண்டும் என்பதால் அனைவரும் சீக்கிரமாக உறங்கச் சென்றுவிட ஹர்சவர்தனுக்கு மட்டும் அன்றைய இரவு உறங்கா இரவாகவே நீண்டது.

மறுநாள் அதிகாலையில் ரகுநந்தன் வந்து எழுப்பிவிட திருமணச்சடங்குகளை இயந்திரம் போல செய்ய ஆரம்பித்தான் அவன். விரதச்சடங்கு முடிந்து குளித்துவிட்டு வந்தவன் உடைமாற்றிவிட்டு குடும்பத்தாருடன் மண்டபத்துக்கு கிளம்ப கிருஷ்ணஜாட்சி கவனமாக அவன் செல்லும் காரில் ஏறாமல் தாத்தா, பாட்டி மற்றும் மைதிலியுடன் மற்றொரு காரில் ஏறிக் கொண்டாள்.

அதன் பின் மண்டபத்தை அடைந்த மணமகனை ஆரத்தி எடுத்து வரவேற்க சிறிது நேரத்தில் வர்ஷாவும் அவளது வீட்டிலிருந்து சர்வலங்கார பூஷிதையாக மண்டபத்தை அடைந்தாள். அவளை மணப்பெண் அறைக்கு அழைத்துச் சென்றுவிட ரகுநந்தன் ஹர்சவர்தனை காசியாத்திரைக்கு தயாராகுவதற்காக அழைத்துச் சென்றான்.

அதாவது மாப்பிள்ளை குடைக்கம்பை பிடித்துக்கொண்டு காசிக்கு புறப்படுவதுபோல பாவ்லா  செய்யவேண்டும். அப்போது மணப்பெண்ணின் தந்தை அவன் முன் வந்து இல்லறவாழ்வின் சிறப்பையும், அதன் அவசியத்தையும் விரிவாகச் சொல்லு அவன் இல்லற வாழ்க்கைக்குத் துணையாக தன் மகளைத் தருவதாக வாக்களித்து மணமகனை மீண்டும் அழைத்து வருவார்.

அந்த சடங்கு ஆரம்பித்து ஆரம்பித்து ஆதிவராஹன் தனது மகளை மணமுடித்து தருவதாக கூறி ஹர்சவர்தனின் காசியாத்திரையை முடித்து வைத்து அவனை அழைத்துவந்தார்.  நீரஜாட்சி இந்தச் சடங்குகள் அனைத்தையும் கரோலின் மற்றும் கவிதாவுடன் சேர்ந்து வீடியோவாக படம் பிடித்தபடியே தன்னை கேலி செய்யும் ரகுநந்தனை முறைத்துக் கொண்டிருந்தாள்.

அடுத்து மாலை மாற்றுவதற்கு மணப்பெண்ணுக்கு கூரைப்புடவையை அளித்து அவளை அனுப்பி வைத்த பத்மாவதி காசியாத்திரையில் பிஸியாக இருந்த விஜயலெட்சுமி, மைதிலியிடம் "வர்ஷாவை அவ ரூம்கு அனுப்பிட்டேன் மன்னி. குழந்தைக்கு மடிசார் கட்ட உதவி பண்ணுங்கோ. மைதிலி நீயும் போடி" என்று அனுப்பி வைத்தவர் கிருஷ்ணஜாட்சியை அவளை அலங்கரிக்க அனுப்பி வைத்தார். அதன்பின் மணமேடையில் நின்று கொண்டிருந்த கணவரை நோக்கி "ஏண்ணா" என்ற அழைப்போடு சென்றார்.

சீதாலெட்சுமி கணவரோடு அமர்ந்து பேரனின் திருமணவைபவத்தை மனநிறைவுடன் கண்டுகொண்டிருக்க நீரஜாட்சி அவர்களையும் விட்டுவைக்காமல் வீடியோ எடுக்க ஆரம்பித்தாள். "சித்து பட்டு கையைப் பிடிச்சிக்கோ" என்று அவரை கேலி செய்யவும் அவள் தவறவில்லை. அந்த வயதான பெண்மணியோ பேத்தியின் கலாட்டாக்களை ரசித்தாலும் "போடி இவ ஒருத்தி!" என்று முந்தானையால் தோளை மூடிக் கொண்டார் வெட்கப்பட்டபடி.

கரோலின் கையில் மொபைலைக் கொடுத்தவள் "என்ன சித்து உனக்கு மலரும் நினைவுகளா?" என்று கண்ணடிக்க சீதாலெட்சுமி செல்லமாக அவள் காதை திருகினார். பட்டாபிராமன் "சீதே விடுடி! என் பேத்தி உன்னை கேலி பண்ணாம வேற யாரு பண்ணப் போறா" என்க நீரஜாட்சி அவருக்கு ஹைஃபை கொடுத்துவிட்டு சீதாலெட்சுமிக்கு அழகு காட்டினாள்.

"நோக்கு இதுலாம் புரியாதுடி. உன் வயசுல நானும் உன்னை மாதிரியே குதியாட்டம் போட்டுண்டு திரிஞ்சவளாக்கும். அப்போ என் அக்கா ஒரு பாசுரம் சொல்லுவா!

"வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்"

அதாவது ஆயிரம் யானை சூழ்ந்து வர எம்பெருமாள் ஊருக்குள்ள வர்றதை பார்த்த மக்கள் எல்லாம் அவரை தோரணத்தோட வரவேற்கறதை நான் கனவில கண்டுட்டேனு ஆண்டாள் நாச்சியார் பாடுனாராம்! அக்கா சொல்லுவா சீதா உன்னோட ஆம்படையானும் இதே போல ஒரு நாள் வந்து இறங்குவார்! அப்போ உன்னோட இந்த குதியாட்டம் எல்லாம் மாயமா மறைஞ்சுப் போயிடும்டினு. சொன்ன மாதிரி உன் தாத்தா வந்தார், என்னையும் கைப்பிடிச்சு கூடவே அழைச்சிண்டுப்  போயிட்டார். நோக்கும் ஒருத்தன் வருவான்டி! அப்போ இதே போல உன் பேச்சு, கேலி எல்லாமே இருந்த இடம் தெரியாம மாயமா போயிடும்" என்று அவளை கேலி செய்ய பட்டாபிராமனும் அவரும் இப்போது மெய்யாகவே மலரும் நினைவுகளில் மூழ்க ஆரம்பித்தனர்.

நீரஜாட்சி கரோலினை பார்த்து கண் சிமிட்டியவள் பாட்டியிடம் "சித்தம்மா! அவன் வர்றப்போ வரட்டும். எனக்கு ஒரு டவுட். சென்னை டிராபிக்ல அவன் எப்பிடி ஆயிரம் யானை சூழ வருவான்? ஒரே கூட்டமா இருக்காது?" என்று கிண்டலடிக்க பட்டாபிராமனும், சீதாலெட்சுமியும் பேத்தி சொன்ன  பாவனையில் வாய்விட்டே சிரிக்க ஆரம்பித்தனர்.

"என்ன தாத்தாவும் பாட்டியும் பேத்தியோட ரொம்ப குஷியா பேசிண்டிருக்கேள் போல" என்றவாறு வந்தவனின் குரலில் ஒரு முறைப்புடன் திரும்பிய நீரஜாட்சி ஒரு கணம் இமைக்க மறந்து பதுமையாய் நின்றாள்.

பட்டு வேஷ்டி சட்டையில் புன்னகை  தவழும் முகத்துடன் கம்பீரமாய் வந்து நின்றான் ரகுநந்தன். தன்னவளின் ரசனைப் பார்வையை மனதிற்குள் ரசித்தவன் அவளை நோக்கி கண் சிமிட்ட நீரஜாட்சி திடுக்கிட்டு விழித்தாள்.

சீதாலெட்சுமி பேரனுக்கு நெட்டி முறித்து திருஷ்டி கழித்தவாறே "என் பேரன் தான் எவ்ளோ அழகு?" என்று அவன் நாடியைக் கிள்ளி முத்தமிட்டுக் கொள்ள பட்டாபிராமனும் "அவன் பட்டாபிராமனோட பேரன்டி சீதே!" பேரனின் கம்பீரமான தோற்றத்தை மெச்சுதலுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

கரோலின் "வாவ் நந்து யூ ஆர் லுக்கிங் ஆசம் இன் திஸ் காஸ்டியூம்" என்று வாய் விட்டுப் பாராட்ட ரகுநந்தன் அவளை நோக்கி சினேகமாக புன்னகைத்தபடி "யூ ஆர் ரைட் லின் பேபி. பட் நான் எதிர்ப்பார்க்கிறவா வாயிலிருந்து ஒரு முத்து கூட இன்னும் உதிரலையே" என்று பொய்யாக பெருமூச்சுவிட நீரஜாட்சிக்கு அவன் தன்னை தான் சொல்கிறான் என்று நன்றாகவே புரிந்தது.

அவள் அமைதியாக "நல்லா இருக்கிங்க அம்மாஞ்சி" என்றுச் சொல்ல ரகுநந்தனுக்கு உலகை வென்ற மகிழ்ச்சி. சீதாலெட்சுமியும் பட்டாபிராமனும் இவ்வளவு நேரம் கலாட்டா செய்து கொண்டிருந்த பெண்ணா இவனிடம் சாந்தமாகப் பேசுவது என்ற ஆச்சரியம்.

இருவரையும் ஒருவரை ஒருவர் அர்த்தபுஷ்டியோடு பார்த்தபடி பேரன் பேத்தியை நோட்டமிட அவர்களோ இந்த உலகிலே இல்லை. ரகுநந்தன் இளஞ்சிவப்பு நிற புடவையில் அப்சரகாக நின்றவளை கண்ணிலேயே படம்பிடித்துக் கொண்டிருந்தான். இந்த காட்சியை கரோலின் வீடியோவாக்கிக் கொண்டிருக்க அந்த அழகிய சூழலைக் கெடுக்கும் விதமாக விஜயலெட்சுமியின் கூக்குரல் மணப்பெண் அறையிலிருந்து வெளிப்பட்டது.

"வர்ஷா இப்பிடி மோசம் பண்ணிட்டு போயிட்டியேடி" என்ற அவரது குரல் அந்த மண்டபத்தின் மணமேடையைத் தாண்டி ஹால் வரைக்கும் கேட்க நீரஜாட்சியும் ரகுநந்தனும் தாத்தா பாட்டியை அமைதிப்படுத்தி விட்டு மணப்பெண் அறையை நோக்கி ஓடினர்.

அதற்குள் அங்கே பத்மாவதி, வேங்கடநாதன், மைதிலி, கோதண்டராமன், ஆதிவராஹன் என்று அனைவரும் கூடிவிட்டனர். ரகுநந்தன் நீரஜாட்சியுடன் அங்கே செல்லும் போது விஜயலெட்சுமியின் அழுகைச்சத்தம் அவர்களின் மனதை பதற வைத்தது. அறையில் இருக்கும் அனைவருக்கும் முகம் பேயறைந்துப் போயிருக்க பத்மாவதியின் முகம் செத்துவிட்டது.

விஜயலெட்சுமியோ கையிலிருக்கும் கடிதத்தின் வார்த்தைகளை மீண்டும் ஒரு முறை வாசித்தார்.

"மா! நான் எனக்கு பிடிச்ச வாழ்க்கையை வாழ போறேன்! எனக்காக என்னோட அருண் வெயிட் பண்ணிண்டிருப்பான். என்னை மன்னிச்சிடுங்கோப்பா! மா நீயும் தான் என்னை மன்னிச்சிடு. இன்னைக்கு நான் மணமேடைக்கு போகாம இருந்தா மட்டும் தான் எனக்கு பிடிச்ச வாழ்க்கை எனக்கு கிடைக்கும். இப்படிக்கு வர்ஷா"

அந்த கடைசி வார்த்தை சரியாக இருபத்து ஐந்து வருடங்களுக்கு முன்பு தான் சொன்ன வார்த்தை என்பதை வலியுடன் நினைவு கூர்ந்தார் விஜயலெட்சுமி.

"மதுரா! நீ மணமேடைக்கு போகாம  இருந்தா மட்டும் தான் எனக்கு பிடிச்ச வாழ்க்கை எனக்கு கிடைக்கும். உன் கால்ல வேணும்னாலும் விழுறேன்" என்றுச் சொல்லி காலில் விழ அவரை எழுப்பிவிட்டவளின் முகம் இன்னும் அவருக்கு மறக்கவில்லை.

அவர் உடைந்து போய் விட ஆதிவராஹனோ மகளின் இந்த திடீர் முடிவு அளித்த அதிர்ச்சியில் பேச்சு மூச்சற்று நின்றார். அந்த நிலையிலும் அவர் மனம் ஹர்சவர்தனுக்காக வருந்தியது. இருபத்து ஐந்து வருடங்களுக்கு முன்பு அவருக்கு நிகழ்ந்த அதே விபத்து இன்று அவனுக்கும் நிகழ அவரால் மனம் வெதும்பி போக மட்டுமே முடிந்தது.

ரகுநந்தன் உட்பட அனைவருக்கும் வர்ஷா திருமணச்சடங்குகளில் உற்சாகமாக தானே பங்கேற்றாள், எங்கே இருந்து அவளது இந்த காதலன் முளைத்தான் என்ற குழப்பம். நீரஜாட்சிக்கு அவள் மண்டபத்தின் ஒவ்வொரு மூலையையும் போட்டோ எடுக்க சொன்னதற்கான காரணம் அப்போது தான் புரிந்தது. எந்த வழியில் சென்றால் தன்னை யாரும் கவனிக்க மாட்டார்கள் என்று தெளிவாக யோசித்துக் காரியத்தை முடித்துவிட்டு சென்றிருக்கிறாள் என்று கசப்புடன் நினைத்துக் கொண்டாள்.

அதே நேரத்தில் விஜயலெட்சுமியின் கூக்குரலே நிகழ்ந்த விபரீதத்தை அனைவருக்கும் சொல்லாமல் சொல்லிவிட வந்திருந்த உறவினர்கள் சளசளக்க ஆரம்பித்தனர்.

ஒருவர் "பட்டாபிராம அய்யங்காரோட ஆத்து கல்யாணத்துல மணப்பெண் ஓடிப் போறது என்ன புதுசா? இருபத்தஞ்சு வருசத்துக்கு முன்னாடி அவரோட பொண்ணு ஓடி போனா. இப்போ அவர் பேரனுக்கு பார்த்திருக்கிற பொண்ணு ஓடிப் போயிருக்கா" என்று வம்பு பேச

இன்னொருவரோ "யாருக்கு தெரியும்? பையனுக்கு எதாச்சும் குறை இருக்குமோ என்னவோ? இல்லனா அந்த பொண்ணு எதுக்கு ஓடிப் போக போறா?" என்று நாக்கில் நரம்பில்லாமல் பேச இதை கேட்டுக் கொண்டிருந்த பட்டாபிராமனுக்கு நெஞ்சில் சுருக் சுருக்கென்று வலிக்க அவர் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சரியவும் சீதாலெட்சுமி "ஏண்ணா" என்ற அலறலுடன் அவரைப் பிடித்துக் கொண்டார்.

அவரது கூக்குரல் கேட்டு மணமகள் அறையிலிருக்கும் அனைவரும் அங்கே ஓடிவர ஹர்சவர்தன் என்ன நடந்தது என்று புரியாமல் கூட்டத்தை விலகுமாறு சொல்லிவிட்டு தாத்தாவிடம் "என்ன செய்யறது தாத்தா?" என்று பதற்றத்துடன் வினவ கூட்டத்திலிருப்பவர்கள் "நோக்கு பார்த்த பொண்ணு மண்டபத்தை விட்டு ஓடிட்டா ஹர்சா" என்று விஷயத்தைப் போட்டு உடைத்தனர்.

அதற்குள் வேங்கடநாதனும் கோதண்டராமனும் தந்தையிடம் "அப்பா வாங்கோப்பா ஹாஸ்பிட்டலுக்கு போகலாம்" என்று பதற்றத்துடன் அவரை எழுப்ப முயல

அவரோ "நேக்கு ஒன்னுமில்லடா கண்ணா. என் பேரனைப் பத்தி என்னென்னவோ பேசறாடா இவால்லாம்! வேங்கடநாதா பட்டாபிராமன் ஆத்து கல்யாணத்துல ஓடிப்போறது சகஜம்னு நாக்கு மேல பல்லைப் போட்டு பேசறாளே! ஏன் அந்த பகவான் இத்தனை மனுஷாள் முன்னாடி நல்ல நாளும் அதுவுமா என்னை சோதிக்கிறார்னு புரியலையேடா. மறுபடியும் நம்மாத்து கல்யாணத்துல இப்பிடி ஒரு காரியம் நடந்துடுத்தே" என்று கண்ணீர் விட ரகுநந்தனும் நீரஜாட்சியும் கூட்டத்தை விலக்க முயன்றனர்.

"அப்பா அதெல்லாம் அப்புறமா பேசிக்கலாம். இப்போ வாங்கோ ஹாஸ்பிட்டல் போகலாம்" என்று கெஞ்சினார் கோதண்டராமன்.. அந்த வயோதிகர் மகன்கள் மருமகள்கள் பேரன் பேத்திகள் யாருடைய பேச்சையும் காதில் போட்டுக் கொள்ளவில்லை.

"நான் செத்தாலும் பரவால்லடா! இன்னைக்கு என் ஹர்சனோட விவாகத்தை பார்க்காம நான் இங்கே இருந்து நகர்றதா இல்ல" என்றவரின் பிடிவாதம் சீதாலெட்சுமியை நோகடிக்க அவர் "ஏண்ணா பிடிவாதம் பிடிக்கிறேள்? சொன்னா கேளுங்கோ" என்று அவரிடம் கெஞ்ச அந்த முதியவரின் புண்பட்ட நெஞ்சம் எதையும் காதில் வாங்குவதாக இல்லை.

கிருஷ்ணஜாட்சி "பட்டு! ஏன் இப்பிடிலாம் பேசுறிங்க?" என்றபடி அவரிடம் வர கண்ணீர் நிரம்பிய விழிகளுடன் பார்த்தவருக்கு மதுரவாணியே தன்னை அழைப்பது போல ஒரு மாயை. அழுகையுடன் நின்றவளையும் ஹர்சவர்தனையும் மாறி மாறி பார்த்தவர் மனதிற்குள் "பட்டாபிராமன் ஆத்து கல்யாணம் இனி நிக்காது" என்று உறுதி பூண்டவராய் தனது வயோதிகத்தால் சுருங்கிய கைகளால் கிருஷ்ணஜாட்சியின் கரங்களைப் பிடித்துக் கொண்டவர்  "கிருஷ்ணா! என் ராஜாத்தி இந்த கிழவனுக்காக மணமேடையில போய் உக்காருடிம்மா. இவாள்லாம் நம்மாத்து பையனை மோசமா பேசறா. உன் தாத்தாவுக்காக இதை செய்டிம்மா " என்று கண்ணீர் உகுக்க கிருஷ்ணஜாட்சி உட்பட அனைவரும் அவரது வேண்டுகோளால் அதிர்ந்தனர்.

ஆனால் அடுத்த அரைமணி நேரத்தில் மணமேடையில் ஆதிவராஹன் தந்தை ஸ்தானத்தில் அமர்ந்து கிருஷ்ணாஜாட்சியை தாரை வார்த்துக் கொடுக்க அவளது கழுத்தில் மூன்று முடிச்சிட்டு அவள் கரம் பற்றிக் கொண்டான் ஹர்சவர்தன்.


Comments

  1. பூங்காற்றிலே உன் சுவாசம்..!
    எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
    (அத்தியாயம் - 21)

    இந்த நீதி ஏன் இப்படி பயப்படணும்..? நந்து லண்டன் ட்ரிக் பண்ணி அவளை ஆஃப் பண்ண நினைச்சா, இவ நம்மளோட கிரேட் இந்தியன் டெக்னிக்கைப் பயன்படுத்தி அவனை ஆஃப் பண்ண வேண்டியது தானே...? என்ன புரியலையா...? இதை கொடுத்தாலும் சிவக்கத் தான் போகுது, அதை கொடுத்தாலும் சிவக்கத்தான் போகுது. என்ன லண்டன் ட்ரிக் இனிக்கும், இந்தியன் ட்ரிக் கசக்கும்... தட் மீன்ஸ் வலிக்கும். இப்ப புரிஞ்சிருக்குமே... ஆமா, ஆமா
    அதே தான்... உங்க கெஸ்ஸிங் ஹண்டரட் பர்சண்ட் கரெக்ட் தான்... பளார்'ங்கிற அறையைத் தான் சொன்னேன்.

    ஐய்....! ஹர்ஷாவுக்கும் கிருஷ்ணாவுக்கும் இப்படி முடிச்சு போட்டு இருக்கிறாங்களோ ? சூப்பர்.
    அது சரி, இந்த வர்ஷா நிசமாவே அருண்ங்கிறவனை காதலிக்கிறாளா...? இல்லை அவளோட அம்மா இருபத்தைஞ்சு வருசத்துக்கு முன்னாடி நடத்துன நாடகத்தை பகீரங்கப்படுத்தறாளா...?

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

    ReplyDelete
  2. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பூங்காற்று 1