பூங்காற்று 38

Image
  நிச்சயதார்த்தம் எந்த குறைபாடுமின்றி நல்ல முறையில் முடிவடைய நாட்கள் ஜெட் வேகத்தில் கடந்தன. பட்டாபிராமன் கடந்த முறை போலன்றி இந்த திருமணத்தில் அனைத்து சம்பிரதாயங்களும் முழுவதுமாக எவ்வித தடங்கலுமின்றி நடைபெற வேண்டும் என்று முன்னரே வேங்கடநாதனிடம் அழுத்தமாகக் கூறிவிட்டார். அவரும் பத்மாவதிக்கு புரியும் வகையில் தந்தை கூறிய விஷயத்தை அவரது காதில் போட்டுவிட்டு திருமண வேலைகளில் மூழ்கிப் போனார். பத்மாவதி எதிலும் ஒட்டாமல் விலக முயன்றாலும் மைதிலி "அக்கா இது உன் மகனோட விவாகம். இதுல நீயே பட்டும் படாம நடந்துண்டா நந்து அம்மாக்கு நம்ம மேல அக்கறையே இல்லைனு நினைச்சுக்க மாட்டானா ?" என்று இழுத்துப் பிடித்து அவரை ஒவ்வொரு காரியத்திலும் ஈடுபட வைத்தார். அதே நேரம் நிச்சயம் மற்றும் முகூர்த்தத்துக்கான புடவைகளை கிருஷ்ணஜாட்சி எடுத்துவிட ஊஞ்சல் வைபவத்துக்கு இன்னும் சில சடங்குகளின் போது அணிய தேவையான புடவைகளை மைத்திரேயியுடன் சேர்ந்து தானே பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்திருந்தார் மைதிலி. இளைய மருமகளுக்கு பேத்திகளின் மீது இருக்கும் பாசத்தை எண்ணி பட்டாபிராமன் தம்பதியினர் மகிழ்ந்து போயிருக்...

பூங்காற்று 32

 



கிருஷ்ணஜாட்சியிடம் நீரஜாட்சி வீட்டை நோக்கி கை காட்ட பட்டாபிராமனின் குரல் அவள் காதிலும் தெளிவாக விழுந்தது. அவளால் அப்போதைக்கு பெருமூச்சு மட்டுமே விட முடிந்தது. ஏனெனில் இந்த விவகாரத்தில் அவளால் இன்னும் சரியான ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. முதலில் அவளால் ஹர்சவர்தனின் காதல் என்ற வார்த்தையையே நம்ப முடியவில்லை எனும் போது மற்றவற்றை யோசிக்க அவளுக்கு இப்போது அவளுக்கு விருப்பமும் இல்லை, நேரமும் இல்லை.

எனவே நீரஜாட்சியிடம் பட்டாபிராமனைச் சமாதானம் செய்துவிட்டு வருமாறு கூறியவள் அவுட் ஹவுஸை நோக்கி நடைபோட்டாள். நீரஜாட்சி நீண்டநாட்களுக்குப் பின் அந்த வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்தவள் நடுஹாலில் அமர்ந்து தனது நண்பர் சேஷனிடம் தர்க்கம் செய்து கொண்டிருக்கும் பட்டாபிராமனை நோக்கி வந்தாள்.

வரும் போதே "அடேங்கப்பா! பட்டு உனக்கு இளமை திரும்புதுனு நினைப்போ? மனுஷி நிம்மதியா ஊஞ்சல்ல கண் மூடி பாட்டு கேக்கலாம்னு வந்தேன். உன்னோட சத்தம் என்னோட ஹெட்போனையும் தாண்டி கேட்டுச்சுனா பாரேன், உன் வாய்ஸ் எவ்ளோ லவுடா இருந்திருக்கும்னு" என்றுச் சொன்னபடி வந்தவளைப் பார்த்ததும் கப்சிப் ஆனார் மனிதர்.

சேஷன் பேத்தியைக் கண்டதும் அமைதியான நண்பரை கேலியாக பார்த்தபடியே "ஏன்டா இப்போ கத்தேன் பார்ப்போம். இதுக்கு தான் நீ வேணும்கிறதுடா நீரஜா. ஆமா உன் படிப்பெல்லாம் எப்பிடி போறது?" என்று கேட்க

அவள் பட்டாபிராமனின் அருகில் அமர்ந்தபடி "நான் படிச்சு முடிச்சிட்டேன் தாத்தா. இப்போ இவாளோட கன்ஸ்ட்ரெக்சன் கம்பெனியில தான் வொர்க் பண்ணுறேன்" என்று சொல்லிவிட்டு "தாத்தா நாளைக்கு காலையில பட்டுவும், சித்துவும் கதாகாலட்சேபத்துக்கு கட்டாயமா வருவாங்க. யூ டோண்ட் வொர்ரி" என்று அவரிடம் உருதியளிக்க சேஷனும் இப்போ என்ன செய்ய போகிறாய் என்பது போல பட்டாபிராமனை நோக்கி புன்னகைத்தார்.

நீரஜாட்சியின் சத்தம் கேட்டு சீதாலெட்சுமி அவரது அறையிலிருந்து வந்தவர் கண்கள் கலங்க அவளைப் பார்க்க அவள் தற்போது அவர்களை கண்ணீர் சிந்த வைக்க விருப்பமற்றவளாய் "ஓஹோ! சித்தம்மா நீ அழப் போறியா? அப்போ சொல்லிட்டு அழு ஓகே! பிகாஸ் ஆல்ரெடி மூனு மாசத்துக்கு முன்னாடி நடந்த இன்சிடெண்டால எல்லாரும் நிறையவே அழுதுட்டோம். என் செல்லமோன்னோ! சிரி பார்ப்போம்" என்று அவரை அணைத்து கொஞ்ச அவர் அவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டார்.

பட்டாபிராமன் இந்த காட்சியை எங்கே காணாமலே தன் உயிர் போய் விடுமோ என்று எண்ணியிருந்தவர் மகிழ்ச்சியில் பூரித்துப் போனவராய் மனைவியைப் பார்க்கவும் அதை கவனித்த நீரஜாட்சி "சித்தம்மா நீ எனக்கு கிஸ் பண்ணுனதை பார்த்து பட்டுக்கு பொறாமை வந்துடுச்சு" என்று கேலி செய்ய சேஷனும், பட்டாபிராமனும் சிரித்த வெடிச்சிரிப்பில் அந்த வீட்டின் மீதமிருந்த உறுப்பினர்களான வேங்கடநாதன், கோதண்டராமனுடன் அவர்களின் சகதர்மிணிகளும் ஹாலுக்கு வந்து சேர்ந்தனர்.

மற்றவர்கள் எவ்விதம் உணர்ந்தனரோ ஆனால் பத்மாவதி மட்டும் மீண்டும் மதுரவாணியின் பெண் இங்கே காலடி எடுத்து வைத்துவிட்டாளா என்ற ஆதங்கத்துடன் பார்த்தது நீரஜாட்சியின் கண்ணில் விழாமல் இல்லை. வேங்கடநாதனை நோக்கி புன்னகைத்தவாறே "மாமா! நான் வந்தது ஒன்னும் உங்க யாருக்கும் தொந்தரவா இல்லையே?" என்று கேட்டாள் ஓரக்கண்ணால் பத்மாவதியை கவனித்தவாறே.

அவரோ "என்ன சொல்லுறடிம்மா நீ? இத்தனை நாள் நீ, கிருஷ்ணா வராம இந்தாத்துல லெட்சுமி கடாட்ஷமே போயிடுத்துடா. இப்போவாச்சும் நீ மனசு மாறி வந்தியேனு நேக்கு சந்தோசம் தான்" என்றார் மனதாற.

இந்த  காட்சிகள் பத்மாவதிக்கு எரிச்சலை கிளப்ப அவள் வேண்டுமென்றே "பத்து மாமி! உங்களுக்கு எதுவும் சிரமம் இல்லையே?" என்று நக்கலாக வினவ அவரோ முகவாயை தோளில் வெட்டிவிட்டு அவரது அறையை நோக்கி சென்றுவிட்டார்.

வேங்கடநாதன் "அவ திருந்தமாட்டாடிம்மா! நீ அவளை கணக்குலயே சேர்த்துக்காதே" என்று சொல்ல நீரஜாட்சியும் அதற்கு சரியென்றவள் வாயிலில் கார் வரும் அரவம் கேட்டதும் மனதிற்குள் "ஓ! என்.கே பிரதர்ஸ் வர்றாங்க போல. வரட்டும் வரட்டும்!" என்று நினைத்துக் கொண்டவளுக்கு பத்மாவதியின் செயல்பாடுகள் ஏனோ உவப்பாக இல்லை.

கிருஷ்ணஜாட்சியின் படிப்பில் ஆரம்பித்து அவளது திருமணவாழ்க்கை வரை அவளுக்கு அநியாயத்தை மட்டுமே இழைத்த அப்பெண்மணியின் இன்றைய செய்கை அவளுக்கு இன்னும் எரிச்சலை அதிகரிக்க வாயிலை நோக்கியவள் அங்கே ஹர்சவர்தனுடன் நடந்துவரும் ரகுநந்தனை கண்டதும் அவை அனைத்தையும் மறந்து போனாள்.

அலுவலகத்தில் அவனைக் குறித்து அந்த பெண்கள் பேசியது நினைவில் தோன்ற "இந்த இடியட் ஏன் இவ்ளோ ஹாண்ட்சம்மா இருந்து தொலைக்கிறான்? அதனால தான் போறவங்க வர்றவங்கலாம் இவனை சைட் அடிக்கிறாங்க" என்ற எண்ணத்துடன் அவள் முகம் சுழிக்க அவனோ அவளை நோக்கி கண் சிமிட்டி விட்டு தனது அறைக்குச் சென்றான்.

ஹர்சவர்தன் மட்டும் பட்டாபிராமனிடம் "தாத்தா என்னண்ட நீங்க பேச மாட்டேள்னு தெரியும். ஆனா ஒன்னு மட்டும் சொல்லிடறேன். எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் கிருஷ்ணாவை என் ஆத்துக்காரியா சகல உரிமையோட இந்தாத்துக்கு அழைச்சிண்டு வருவேன். அதான் நீரஜா வந்துட்டாளோன்னோ இனி அவளும் தானா வந்திடுவா. அப்பிடி தானே நீரு?" என்று அவளை நோக்கி வினவ அவள் குழப்பத்துடன் தலையாட்டினாள்.

இருந்தாலும் அவனது அறைக்கு செல்ல முயன்றவனை யாருமறியா வண்ணம் தடுத்தவள் "நீங்க சொன்னது எனக்கு புரியல. அது எப்பிடி நான் வந்தா கிருஷ்ணாவும் வருவானு நீங்க தீர்மானமா சொல்லுறிங்க?" என்று வினவ

ஹர்சவர்தன் "நீ இங்கே வந்தான்னு நான் சொன்னதுக்கு அர்த்தம் நீ இங்க நந்துவோட ஆத்துக்காரியா வந்தாங்கிறது தான். இது கூட புரியாம நீ கேக்கிறியே?" என்று சொல்லிவிட்டு அவனது அறைக்கு சென்றுவிட்டான்.

அவன் அறியவில்லை, அவன் நீரஜாட்சியின் மூளைக்குள் ஓடும் விஷயங்கள் அனைத்தையும் ஒரே நேர்க்கோட்டில் சந்திக்க வைத்துவிட்டு சென்றான் என்பதை. அவளது சிந்தனையில் ஓடிய மூன்று விஷயங்கள் கிருஷ்ணஜாட்சியின் திருமணவாழ்க்கை, ரகுநந்தனின் காதல், பத்மாவதியின் ஆணவம். இவை மூன்றையும் ஒரே புள்ளியில் சந்திக்க இனி அவள் என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானித்துவிட்டு வேங்கடநாதனிடம் வந்தவள் "மாமா! நான் போய் பெரிய மாமியை சமாதானம் பண்ண டிரை பண்ணுறேன்" என்று சொல்ல அவர் மறுத்தார்.

"வேண்டாம்மா! அவ இருக்கிற நிலையில உன் மனசு கோணுற மாதிரி எதுவும் பேசிட போறா" என்று தடுக்க அவளோ "பேசுனா என்ன மாமா? மாமி என்னை விட வயசுல பெரியவங்க. அவங்க பேசுனா நான் ஒன்னும் குறைஞ்சு போயிட மாட்டேன்" என்று அவரை கையமர்த்திவிட்டு பத்மாவதியின் அறையை நோக்கி சென்றாள் அவளின் திட்டத்தின் முதல் படியாக.

அறையின் கதவை தட்டியவள் அவரது பதிலுக்கு காத்திராமல் உள்ளே நுழைந்தாள். பத்மாவதி அவள் உள்ளே வருவதைக் கண்டு அதிர்ந்தவர் "உன்னை யாருடி என்னோட அறைக்குள்ள வரச் சொன்னது? வெளியே போ" என்று கத்த நீரஜாட்சி அதைக் கண்டு கொள்ளாமல் அறையைச் சுற்றிமுற்றி பார்க்க தொடங்கினாள்.

நீரஜாட்சியின் ஆராய்ச்சிப் பார்வையில் எரிச்சலுற்றவர் கையில் வைத்திருந்த மொபைலை தவறவிட அவரை அறியாமல் அதில் வாய்ஸ் ரெக்கார்டர் ஆன் ஆனது. ஆனால் அதை இருவருமே கவனிக்கவில்லை. ஒரு வேளை கவனித்திருந்தால் அதனால் பிற்காலத்தில் ஏற்படப் போகும் அனர்த்தங்களைத் தவிர்த்திருப்பர் இருவருமே.

பத்மாவதி அவளிடம் "சொல்லிண்டே இருக்கேன். நீ உன் இஷ்டத்துக்கு..." என்றவரை கையுயர்த்தி தடுத்தவள் சுவாதீனமாக அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தவள் அவரைக் கேலியாக பார்த்தபடி கால் மேல் கால் போட்டு சட்டமாக அமர்ந்திருக்க பத்மாவதி கோபத்தில் முகம் சிவக்க நின்று கொண்டிருந்தார்.

அவரை ஏளனமாக பார்த்தபடி "எங்கம்மா தயவுல ராஜவாழ்க்கை வாழறேள் போல?" என்று அவள் கூற பத்மாவதியின் முகம் சுண்டிவிட்டது. அவர் மவுனமாக நிற்க நீரஜாட்சிக்கு உள்ளே பனிக்கட்டி மழை பொழிவதை போல் குலுகுலுவென்று இருந்தது.

"சரி வாழ்ந்துட்டுப் போங்கோ மாமி! ஆனா ஏன் என்னோட கிருஷ்ணா வாழ்க்கையை நாசம் பண்ணுனேள்? உங்களுக்கு கொஞ்சம் கூட குற்றவுணர்ச்சி இல்லை போலயே" என்று கேட்க அவர் சிறிதும் வருந்தாமல் நின்ற தொனியே அவர் எதற்காகவும் வருந்தவில்லை என்பதை அவளுக்கு புரியாமல் இல்லை.

அதுவே அவளது கோபத்தை தூண்ட "ரொம்ப ஆடாதேள் மாமி! இதுக்காக நீங்க ரொம்ப வருத்தப்படுவேள்" என்று எச்சரிக்க பத்மாவதி "உன் வயசு என் அனுபவம்டிம்மா! நான் எதையும் காரணமில்லாம பண்ணலை. சரி நான் வருத்தப்படுற மாதிரி மேடம் என்ன செய்ய போறேள்? உன் அக்காவை என் ஹர்சாவோட சேர்த்து வைக்க போறியா? பைத்தியக்காரி! நீயே சொன்னாலும் உன் அக்கா அதுக்கு ஒத்துக்க மாட்டா. வேற என்ன செய்ய முடியும் உன்னால?" என்று அவளைச் சீண்டினார்.

நீரஜாட்சி "அது எனக்கு நன்னா தெரியுமே மாமி! நான் அவளை உங்காத்துக்கு தனியா அனுப்புவேனு நினைச்சேளோ? பைத்தியக்கார மாமி" என்று சொல்ல இப்போது பத்மாவதிக்கு தான் குழப்பமாய் போய்விட்டது.

அவரது குழப்பத்தை ரசித்தபடி "கிருஷ்ணா இந்தாத்துக்குள்ள வருவா, அதுவும் அத்திம்பேரே அவளை உரிமையா அழைச்சிண்டு வருவார். கூடவே நானும் வருவேன், கிருஷ்ணாவோட தங்கையா இல்ல மாமி. உங்களோட இளைய மாட்டுப்பொண்ணா" என்று அவர் தலையில் இடியை இறக்கினாள்.

பத்மாவதிக்கு சிறிது நேரம் தன் காதுகளையே நம்ப முடியவில்லை.  தன் எதிரே நின்று தன்னை கேலியாய் பார்க்கும் நீரஜாட்சியை வெறித்தவர் "நீ என்னடி சொல்லுற? என் நந்தன்..." என்று பதறியவரை பார்த்து உச்சுக் கொட்டினாள் நீரஜாட்சி.

அவள் இலகுவான குரலில் "நீங்க அடிக்கடி உங்க பிள்ளையையும் கிருஷ்ணாவையும் பத்தி நினைச்சு பயப்படுவிங்க தானே! புலி வருது புலி வருதுனு பயந்து இப்போ புலி நிஜமாவே வந்துடுச்சு மாமி. ஆமா! உங்க இளைய பிள்ளை என்னை ரொம்ப காதலிக்கிறான். அவன் இப்போ என்னோட நந்து. அவனை வச்சு தான் நான் இந்த ஆத்துக்குள்ளே உரிமையோட நுழையப் போறேன் " என்றாள் அவள். சிறிது நேரம் அவரது அதிர்ச்சியை ரசித்தவாறு இருந்தவள் நாற்காலியிலிருந்து எழும்பி அவர் அருகில் வந்து நின்றாள்.

"ஷாக்கை குறைங்க மாமி! எங்க விவாகம் முடியற வரைக்காச்சும் நீங்க தெம்பா நடமாட வேண்டமா? நான் சொன்ன விஷயத்தை நன்னா கேட்டுக்கோங்கோ, உங்க பையன் ரகுநந்தனோட ஆத்துக்காரியா நீங்க இத்தனை வருசம் ராஜாங்கம் பண்ணுன இதே ஸ்ரீனிவாசவிலாசத்துல கூடிய சீக்கிரமே நான் நுழையப் போறேன், அதுவும் உங்க மூத்த மாட்டுப்பொண்ணோட. சீக்கிரமா எங்களை வரவேற்க தயாராகுங்க பத்து மாமி. நேக்கு டைம் ஆகறது. என் செல்ல நந்து கிட்ட நான் இன்னைக்கு பேசவே இல்ல. நான் போய் அவனண்ட பேசிட்டு அவுட் ஹவுஸுக்கு கிளம்பறேன்" என்று சொல்லிவிட்டு அவள் கிளம்பினாள்.

பத்மாவதி அவள் சொன்ன வார்த்தைகள் முகத்தில் அறைய அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் விழித்தபடி நாற்காலியில் அமர்ந்து தலையில் கைவைத்துக் கொண்டார். அவருக்கு நன்றாகவே தெரியும் அவள் கிருஷ்ணஜாட்சியை போல அல்ல என்று. அது மட்டுமன்றி ரகுநந்தனும் ஹர்சவர்தனை போல அல்ல. இந்த இருவரும் திருமணவாழ்வில் இணைந்தால் அது தனது இளைய மகனை கட்டாயமாக தன்னிடம் இருந்து பிரித்துவிடும் என்பது புத்தியில் உரைக்க செய்வதறியாது திகைத்தார் அவர்.

அவரது மூளையை செயல்படவிடாமல் செய்தவளோ சாவகாசமாக மாடிப்படி ஏறியவள் குத்துமதிப்பாக ரகுநந்தனின் அறையை கண்டுபிடித்தாள். கதவைத் தட்டலாமா என்று யோசித்தவள் கதவு உட்பக்கம் தாழிடாமல் இருக்கவே சொல்லாமல் கொள்ளாமல் உள்ளே நுழைந்தாள். அவளைப் பொறுத்தவரை தன்னை சீண்டிய பத்து மாமிக்கு உடனடியாக ஒரு பாடம் கற்பித்தே ஆக வேண்டும். அதோடு சேர்த்து கிருஷ்ணஜாட்சியும் ஹர்சவர்தனும் ஒன்று சேர வேண்டும். இவை அனைத்தையும் செய்து முடிக்க அவளுக்கு ரகுநந்தனின் துணை தேவை. எனவே மனதில் தீட்டிய திட்டத்தை செயல்படுத்தும் நோக்கத்தோடு தான் அவனது அறைக்கு வந்தாள் நீரஜாட்சி.

ரகுநந்தன் லேப்டாப்பில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தவன் சத்தியமாக தனது அறையில் அவளை எதிர்ப்பார்க்கவில்லை. அதிர்ச்சியுடன் படுக்கையிலிருந்து எழுந்தவன் கண்களை கசக்க நீரஜாட்சி "ரொம்ப கண்ணை கசக்காதே ஓகே! நான் நிஜமா தான் வந்திருக்கேன்" என்று சொல்ல அவன் ஆச்சரியத்துடன் அதே நேரம் சந்தோசத்துடன் நின்றான்.

அவன் அருகில் சென்றவள் "உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் நந்து. அதான் வந்தேன். உட்கார்ந்து பேசுவோமா?" என்று கேட்க அவன் நாற்காலியை இழுத்துப் போட்டான் அவன்.

இருவரும் அமர நீரஜாட்சி எப்படி ஆரம்பிப்பது என்று தவித்தவள் பின்னர் தைரியத்தை திரட்டிக் கொண்டு "நந்து நாம கல்யாணம் பண்ணிப்போமா?" என்று கேட்க அவனால் அவன் காதுகளையே நம்பமுடியவில்லை.

சிறிது நேரம் அமைதியில் கழிய அவளே "ஒரு வேளை உனக்கு என்னைப் பிடிக்காம போயிடுச்சா? அதான் நீ சைலண்டா இருக்கியா?" என்று கேட்க ரகுநந்தன் அளவுக்கடந்த சந்தோசத்தில் இருந்ததால் அவனால் பேச முடியவில்லை. ஆனால் தனது அமைதியை அவள் வேறு விதமாக எடுத்துக் கொள்ளவே சந்தோச சிரிப்புடன் தலையை மறுப்பாக அசைத்தான்.

அடுத்த நிமிடமே நாற்காலியில் அமர்ந்திருந்தவளை தன் கைகளில் ஏந்தியவன் "நீருகுட்டியை எனக்கு எப்போவாச்சும் பிடிக்காம போகுமா? ஐ லவ் யூ அ லாட்" என்று சொல்லி அவள் தலையில் செல்லமாக முட்ட நீரஜாட்சிக்கு அவனது அருகாமை ஒரு வித மயக்கத்தை உண்டு பண்ண அவளது உதடுகளும் "ஐ லவ் யூ நந்து" என்ற வார்த்தையை உச்சரித்தன.

இந்த வார்த்தைகளை அவளிடம் இருந்து வாங்குவதற்காக தவம் இருந்தவன் இன்று அந்த தவத்துக்கு வரம் கிடைத்த மகிழ்ச்சியில் அவள் நெற்றியில் முத்தமிட்டவாறே அவளை இறக்கிவிட்டான் ரகுநந்தன். நீரஜாட்சிக்கு அப்போது தான் சொன்ன வார்த்தையின் தீவிரம் விளங்க அவள் ஏதோ சொல்ல போக அவன் அவளது உதட்டில் கை வைத்து தடுத்து "பிளீஸ்! எதுவும் சொல்லி என் மனசை உடைச்சிடாதே நீரு. இந்த சந்தோசத்தோட நான் இருக்கிறேனே" என்று கெஞ்சலாய் கேட்க அவளால் பதிலளிக்க இயலவில்லை.

அவள் மனம் "நீரு நீ வந்த விஷயம் முடிஞ்சிடிச்சு! கிளம்பு. வேற எதுவும் தேவை இல்லை" என்று அறிவுறுத்த அவள் உடல் அங்கிருந்து நகர்வேனா என்று தர்ணா போராட்டம் செய்தபடி நின்றது.

ரகுநந்தன் அவள் கரங்களைப் பிடித்துக் கொண்டவன் "சீக்கிரமாவே கல்யாணம் பண்ணிக்கலாம். நான் நாளைக்கே தாத்தா அப்பா எல்லாரண்டவும் பேசப் போறேன்" என்று உரைக்க அவளை அறியாமலே மனம் நிறைந்து புன்னகைத்தாள் நீரஜாட்சி.

இருவருக்கும் தெரியவில்லை, அவர்களின் திருமணம் தான் அவர்களைப் பிரிக்க போகும் மிகப் பெரிய காரணி என்று.


Comments

  1. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    ReplyDelete
  2. பூங்காற்றிலே உன் சுவாசம்..! எழுத்தாளர்: நித்யா மாரியப்பன் (அத்தியாயம் - 32)

    அச்சோ...! இந்த நீரு அப்படியே விட்டிருந்தலாவது, நந்தனோட கை கோர்த்து சந்தோஷமா வாழ்ந்திருப்பாளோ என்னவோ..? ஆனா, இப்ப பத்து மாமியை மிரட்டின கையோட வந்து நந்து கிட்ட லவ் ப்ரபோஸல் சொன்னதால, கடைசியில உள்ளதும் போச்சு நொள்ளக் கண்ணான்னு ஆகிடப்போகுதோ என்னவோ ?
    அதுக்கேத்த மாதிரியே பத்து மாமி கிட்டே இவ மிரட்டற மாதிரி பேசினதும் வாய்ஸ் ரிகார்ட் ஆகிடுச்சு. இதுவே பின்னாடி பேக் ஃபையர் ஆகிடுமோ என்னவோ...? அய்யோ தேவுடா...!

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பூங்காற்று 1