பூங்காற்று 43

Image
  அந்த ஆடியோவால் நீரஜாட்சிக்கும் ரகுநந்தனுக்கும் இடையே சத்தமே இல்லாமல் ஒரு பனிப்போர் ஆரம்பித்தது. இருவரும் ஒருவரையொருவர் முறைத்தபடியே திரிய ரகுநந்தன் இப்போதெல்லாம் பெரும்பாலான நேரத்தை அலுவலகத்திலேயே கழித்தான்.   ஆனால் அலுவலகத்தில் கூட கணவனும் மனைவியும் அவ்வளவாக பேசிக் கொள்வதில்லை. நீரஜாட்சி அவனை ஏளனமான உதட்டுவளைவுடன் கடந்துவிட அவனால் தான் எதையும் மறக்க முடியவில்லை. அவள் இந்த பிரச்சனையை இலகுவாக எடுத்துக் கொண்டதற்கும் அவனது புத்தி தப்பர்த்தம் செய்து கொண்டது. " அது சரி! நான் மட்டும் தானே லவ் பண்ணுனது. அவ தான் என்னை பத்தி நினைச்சு கூட பார்த்தது இல்லையே. அப்புறம் எப்பிடி அவளுக்கு வருத்தமா இருக்கும் ?" என்று அவன் நினைத்துக் கொள்ள நீரஜாட்சியோ "உண்மையை சொல்ல சொல்ல கேக்காம போனா நான் இவன் பின்னாடியே போய் கெஞ்சணுமாக்கும் , பெரிய இவன்! உண்மையை புரிஞ்சுகிட்டு தானா பேசுனா பேசுறான் , இல்லைனா வாழ்க்கை முழுக்க இப்பிடி முசுடாவே இருந்துட்டு போறான். எனக்கு என்ன வந்துச்சு ?" என்று சிறிதும் தனது நிலையை விட்டு விலகாதவளாய் அவனை சமாதானம் செய்ய முயலவில்லை. அவளின் விலக...

பூங்காற்று 13

 



நீரஜாட்சி ரகுநந்தன் வெளியேறியதும் கதவை அறைந்துச் சாத்தி விட்டு வந்தவள் ஹாலின் வாயிலில் நின்று கொண்டிருந்த சீதாலெட்சுமியைக் கண்டதும் அவரிடம் வந்து "என்னாச்சு சித்தம்மா நான் ரொம்ப சத்தமா பேசி உன் தூக்கத்தைக் கெடுத்துட்டேனா?" என்று அக்கறையுடன் கேட்க

அவளின் கூந்தலை வருடிக் கொடுத்தபடி "இல்லடி ராஜாத்தி! உன்னை ரொம்ப சின்னப்பொண்ணுனு நெனைச்சிண்டிருந்தேன். ஆனா உன்னால இவ்ளோ விஷயத்தைப் பேச முடியும்கிறதை நான் இன்னைக்கு தான் பார்க்கிறேன். நோக்கு இந்த தாத்தா பாட்டி மேல ஏதும் கோவம் இல்லையேடிம்மா?" என்று கேட்டபடி வயோதிகத்தால் நடுங்கும் விரல்களால் அவளது கையை ஆதரவாகப் பற்றியபடி கேட்டார்.

நீரஜாட்சி அவரின் கன்னத்தைப் பிடித்துக் கொஞ்சியபடி "சித்தம்மா எனக்கு யார் மேலயாச்சும் கோவம் இருந்தா நான் அவங்களை ஒரு பொருட்டாவே மதிக்க மாட்டேனாக்கும். அது மட்டுமில்லாம அவங்களை என் கிட்ட இருந்து முடிஞ்ச வரைக்கும் விலக்கி வச்சிடுவேன். என்னைப் பொறுத்தவரைக்கும் உன்னோட மூத்த மருமகள், அது பெத்ததுகள், அப்புறம் உன்னோட இளைய பேத்தி இவங்க மூனு பேரும் என்னைக்குமே எனக்கு பிடிக்காதவங்க தான். இது கேக்கிறதுக்கு உனக்கு கஷ்டமா இருக்கும். ஆனா நான் ஒன்னும் உன்னோட கிருஷ்ணா மாதிரி நல்லவ இல்ல சித்தம்மா. நான் ஒரு சாதாரண மனுஷி. எனக்கு நல்லது பண்ணுனவங்க, பிடிச்சவங்களுக்காக நான் எதுவும் பண்ணுவேன். அதே மாதிரி எனக்குப் பிடிக்காதவங்களை நான் என்னைக்குமே கண்டுக்க மாட்டேன். அவங்க தேவையில்லாம என் வழியில குறுக்கிட்டா அவங்களுக்கு அவங்க ஸ்டைல்லயே பதில் சொல்லிடுவேன்" என்றுச் சொல்லிவிட்டு தனது செல்லப்பாட்டியை அணைத்துக் கொண்டாள்.

சீதாலெட்சுமிக்கும் கடந்த காலச் சம்பவங்கள் நினைவில் வர அவளது அணைப்பில் கண் மூடி இருந்தவருக்கு மதுரவாணியே தன்னை அணைத்துக் கொண்டிருப்பது போன்ற பிரம்மை.

அதே நேரம் ரகுநந்தன் அவுட் ஹவுஸில் இருந்து வெளியேறியவன் தோட்டத்தை நோக்கி நடைபோட எதிரில் வந்த கிருஷ்ணஜாட்சி மீது மோதிக்கொள்ள இருந்தான். கடைசி நிமிடத்தில் அவளைக் கண்டு சுதாரித்தவன் "சாரி அத்தங்கா" என்று விரக்தியான குரலில் சொல்ல கிருஷ்ணஜாட்சிக்கு அவனது முகத்துக்கு அந்த குரல் கொஞ்சமும் பொருந்தவில்லை என்று தோன்ற "உங்களுக்கு உடம்பு எதும் சரியில்லையா அம்மாஞ்சி?" என்று அக்கறையுடன் வினவ ஏனோ அவனுக்கு இத்தனை நாட்கள் ஆல்பத்தில் மட்டும் பார்த்துப் பழகியிருந்த அத்தை நேரில் வந்துக் கேட்பது போல தோன்றியது.

"உன் கிட்ட கொஞ்சம் பேசணும் அத்தங்கா. உக்காந்துப் பேசுவோமா?" என்க கிருஷ்ணஜாட்சி அவளது புடவையை லாவகமாக மடித்தபடி புல்தரையில் அமர ரகுநந்தன் ஆச்சரியத்துடன் "அத்தங்கா உனக்கு ஈரம்னா அலர்ஜி இல்லையா?" என்று அவளிடம் கேட்க அவளோ "இல்லையே! நீருக்கு தான் ஈரம்னா பிடிக்காது" என்று புன்னகையுடன் பதிலிறுத்தாள்.

"சொந்த அக்கா கூடவே அவளுக்கு எந்தப் பழக்கமும் ஒத்துப் போகல. குணம் மட்டும் தான் வேறனு நெனைச்சியே ரகுநந்தா, நீ ரொம்ப அனுபவிப்ப போலயே" என்று அவனது மனசாட்சி அவனை நோக்கி கைகொட்டிச் சிரித்தது. அதை அடக்கியபடியே அவனும் சில அடிகள் தள்ளி அமர்ந்தான்.

கிருஷ்ணஜாட்சியைப் பார்த்தவாறு "அத்தங்கா உங்க அப்பா அதான் மிஸ்டர் மதிவாணன் ரொம்ப வைராக்கியமானவரோ?" என்று கேட்க

கிருஷ்ணஜாட்சி "ஆமா அம்மாஞ்சி. அப்பா ஸ்ட்ரயிட் ஃபார்வேர்ட் பெர்சன். மனசுல என்ன தோணுதோ அதை பேசிடுவாரு. கோவம் கொஞ்சம் அதிகமாவே வரும். சரியான நேர்மை பைத்தியம்னு அம்மா சொல்லுவாங்க. ஏன் கேக்கிறிங்க?" என்று சந்தேகமாகக் கேட்க

அவனோ பரிதாபமாக "சும்மா தெரிஞ்சிக்கலாம்னு! நான் கேட்டது ஒன்னும் தப்பில்லையே அத்தங்கா?" என்று அவளை வினவ அவள் இல்லையென்று தலையாட்டினாள்.

ரகுநந்தன் "நெனைச்சேன், இதுல்லாம் ஜீன்ல வர்றது. அவ அப்பா கிட்ட இருந்து அவளுக்குப் பாஸ் ஆயிடுச்சு போல" என்று மனதிற்குள் புலம்பிக் கொண்டான்.

கிருஷ்ணஜாட்சியோ தன்னுடைய தந்தை பற்றிய நினைவுகளில் மூழ்கியவளாய் "அப்பாவோட எல்லா வைராக்கியமும், கோவமும் எங்க முன்னாடி காணாமப் போயிடும் அம்மாஞ்சி. நான், நீருனா அவருக்கு உயிரு. எங்க கிட்டவோ அம்மா கிட்டவோ அவரால ரொம்ப நேரத்துக்கு கோவமாவோ வைராக்கியமாவோ இருக்கவே முடியாது" என்று தந்தையைப் பற்றி உயர்வாகச் சொன்னவள் அவர்கள் அமர்ந்திருந்த இடத்துக்கு போன் பேசுவதற்காக வந்த ஹர்சவர்தனும் அவர்களின் உரையாடலைக் கேட்டுக் கொண்டிருப்பதை அறியாமல் தன்னுடைய பேச்சைத் தொடர்ந்தாள்.

ரகுநந்தன் கிருஷ்ணஜாட்சியின் ஆர்வம் மின்னும் முகத்தைப் பார்த்தபடி  இருக்க அவள் "அப்பா அடிக்கடி சொல்லுவாரு நம்ம எவ்ளோ பிடிவாதக்காரங்களாவும் இருக்கலாம். ஆனா நம்ம பிடிவாதம், வைராக்கியம், கோவம் இது எல்லாமே நமக்காக ஒரு ஸ்பெஷல் பெர்சன் நம்ம வாழ்க்கையில வர்றப்போ அவங்க முன்னாடி காணாம போயிடும்னு சொல்லுவாரு" என்க அவளது இந்த வார்த்தையில் பொறி தட்டியது அண்ணன், தம்பி இருவருக்கும்.

ரகுநந்தன் அந்த ஒரு வார்த்தையை நம்பிக்கையோடு பிடித்துக் கொண்டவனாய் "அத்தங்கா இப்பிடிலாம் நடக்குமா என்ன? பயங்கரமான பிடிவாதக்காரங்க யாரோ ஒருத்தருக்காக அவங்க கொள்கைய விட்டுக் குடுப்பாங்களா என்ன?" என்றுக் கேட்க

கிருஷ்ணஜாட்சி "ஆமா அம்மாஞ்சி. ஆனா அந்த ஒருத்தர் அதுக்கு தகுதியானவரா இருக்கணும். எங்க அப்பாவோட பிடிவாதம் எங்க அம்மா முன்னாடி ஏன் தோத்துப் போச்சுனா அதுக்கு காரணம் எங்க அம்மா அவரு மேல வச்சிருந்த அளவில்லாத காதல். ஒருத்தருக்கொருத்தர் விட்டுக்குடுக்கிறதிலயும், பிரச்சனைகளை ஒன்னா சேர்ந்து சந்திக்கறதிலயும் அவங்களை அடிச்சிக்க முடியாது. அவ்ளோ அன்னியோன்யம் அவங்களுக்குள்ள. அதான் நான் சொல்லுறேன் ஒருத்தரோட உண்மையான பாசம், அன்பு, காதல் இது மூனும் எவ்ளோ பெரிய பிடிவாதக்காரங்களையும் மாத்திடும். ஆனா அந்த ஒருத்தர் அதுக்காக ரொம்பவே கஷ்டப்படணும்" என்று முத்தாய்ப்பாய் சொல்லிவிட ரகுநந்தன் தன்னுடைய பிரச்சனைக்கு தீர்வு கிடைத்த மகிழ்ச்சி மனதை நிறைக்க கிருஷ்ணஜாட்சியை நன்றியுடன் பார்த்தான்.

சந்தோசமிகுதியில் அவளது கன்னத்தைப் பிடித்துக் கொஞ்சியபடி "ஐயோ அத்தங்கா தெய்வமே! எவ்ளோ பெரிய பிரச்சனைக்கு நீ சொல்யூசன் சொல்லிருக்க தெரியுமா?" என்க கிருஷ்ணஜாட்சிக்கு அவனது செய்கை வினோதமாகத் தோன்றியது. ஆனால் இது போல அவன் அடிக்கடி பாட்டி மற்றும் மைத்ரேயியின் கன்னத்தைப் பிடித்து கொஞ்சிப் பார்த்திருப்பதால் அவள் அதை தவறாக எதுவும் எண்ணவில்லை. ஆனால் இவ்வளவு சந்தோசப்படுமளவுக்கு தான் என்ன சொல்லிவிட்டோம் என்பதே அவளது திகைப்புக்கு காரணம்.

அவள் அப்படி சிந்தித்தால் அவர்களின் பின்னே நின்று கொண்டிருந்த ஹர்சவர்தனோ கிருஷ்ணஜாட்சியின் கன்னத்தில் ரகுநந்தனின் கைப்பட்டதும் ஏதோ தனக்குச் சொந்தமான பொம்மையை இன்னொரு குழந்தை தொட்டால் கோபப்படும் குழந்தை போல எண்ணலானான். கோபத்துடன் அவன் இடத்தைக் காலி செய்ததை அறியாத ரகுநந்தனும் கிருஷ்ணஜாட்சியும் உரையாடலைத் தொடர்ந்தனர்.

ரகுநந்தன் அவளது கன்னத்தை விடுவித்தபடி "அத்தங்கா இனிமே நீ தான் என்னோட லவ் குரு" என்க 

கிருஷ்ணஜாட்சி சந்தேகத்துடன் "என்னது லவ் குருவா?" என்றுக் கேட்க

அவன் சுதாரித்துக் கொண்டவனாய் "அது..வந்து..ஹான் லவ் மீன்ஸ் அன்பு, குரு மீன்ஸ் ஆசான். நான் என்ன சொல்ல வந்தேன்னா இன்னையில இருந்து நீ தான் எனக்கு அன்பைப் போதிக்கும் ஆசான்னு சொல்ல வந்தேன். உடனே எடக்கு மடக்கா யோசிக்காதே அத்தங்கா. உன்னை நான் மனசுல எவ்ளோ பெரிய இடத்துல வச்சிருக்கேன் தெரியுமா? யூ ஆர் மை இன்ஸ்பிரேசன் இன் பிஸினஸ்..."என்று ஆரம்பிக்க கிருஷ்ணஜாட்சி ஒரு புன்னகையுடன் அவனுக்கு கும்பிடு போட்டாள்.

"போதும் அம்மாஞ்சி! எனக்கு அப்படியே புல்லரிச்சு போச்சு" என்று கேலி செய்ய ரகுநந்தன் அதற்குப் பதிலளிக்க அதைப் பார்த்தபடியே அவர்களிடம் வந்தார் விஜயலெட்சுமி. அவரைக் கண்டதும் ரகுநந்தனுக்கு அவரை வம்பிழுத்தால் என்ன என்ற எண்ணம் வழக்கம் போல தோண அவரைக் கேலியாகப் பார்த்தபடி "என்ன விஜி மாமியோட காத்து வீட்டுப்பக்கமா வீசாம திசை மாறி அவுட் ஹவுஸ் பக்கமா வீசறது?" என்று கேட்க அவரும் வழக்கம் போல அவனது கேலியை ஹர்சவர்தனுக்காக பொறுத்துக் கொண்டபடி இழித்துவைத்தார்.

இருந்தாலும் வந்த காரியத்தில் கண்ணாக "என்ன அம்மாஞ்சியும், அத்தங்காவும் ஒன்னா உக்காந்து பேசிண்டிருக்கேளா?" என்று இதை வைத்து என்ன கலகம் மூட்டலாம் என்ற எண்ணத்துடன் வினவ

ரகுநந்தனோ நக்கலாக "இல்ல மாமி! நானும் அத்தங்காவும் டூயட் பாடிண்டிருக்கோம், வேணும்னா நீங்களும் ஜாயின் பண்ணிக்கிறேளா?" என்று அவரது எண்ணவோட்டத்தைக் கண்டுகொண்டவனாய் அவரைக் கேட்க அவர் வேறு வழியின்றி "போடா அம்பி! நோக்கு எப்போவுமே தமாஷ் தான்" என்றுச் சொல்லி சமாளித்தபடி அங்கிருந்து நகர்ந்தார்.

ரகுநந்தன் அவர் செல்வதைப் பார்த்துவிட்டு "அத்தங்கா நீ அவுட் ஹவுஸ்குள்ள போயிடு. நான் இந்த ஆல் இந்தியா ரேடியோ பிராட்காஸ்டிங்க தொடங்கறதுக்கு முன்னாடி அதை ஆஃப் பண்ணிட்டு வர்றேன்" என்றுச் சொல்லிவிட்டு எழுந்துச் செல்ல கிருஷ்ணஜாட்சியும் அவுட் ஹவுஸை நோக்கிச் சென்றாள்.

*******

இரவும் தீபாவளி கொண்டாட்டங்கள் களை கட்ட கிருஷ்ணஜாட்சி கூறிய தீர்வின் காரணமாக மனம் தெளிந்த ரகுநந்தனும் உற்சாகத்துடன் பட்டாசுகளை வெடிக்க ஆரம்பித்தான். மாலையில் மைத்ரேயி விஜயராகவுடன் வந்துவிட ஸ்ருதிகீர்த்தியும் அவளது கணவன் ராகுலுடன் வந்துவிட்டாள். அவளுக்கு திருமணமாகி ஒரு வருடமாகியும் இன்னும் அவளுக்கு குழந்தைப்பாக்கியம் கிட்டவில்லை என்ற கவலை மைதிலிக்கும், பத்மாவதிக்கும்.

ஆனால் அவளோ அதைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படவில்லை. தீபாவளி கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட போது கூட"பகவான் குடுக்கறச்ச குடுக்கட்டும்மா. நானும் மைத்திக்காவாட்டம் குழந்தைய வச்சிண்டு எங்கேயும் போக முடியாம திண்டாடனுமா? போன மாசம் திடீர்னு அவர் ஆபிஸ்ல வேர்ல்ட் டூர் அனுப்புனா. அவரும் பெஸ்ட் எம்பிளாயியோனோ, சோ அவரை குடும்பத்தோட வரலாம்னு சொல்லிட்டா. நானும், அவரும் போய் எவ்ளோ ஜாலியா என்ஜாய் பண்ணோம்னு நோக்கு தெரியாதா? இதுவே குழந்தைனு ஒன்னு வந்துட்டா இப்பிடி நினைச்சபடி போக முடியுமா?" என்பவளை நினைத்து பத்மாவதி தலையில் அடித்துக் கொண்டார்.

நீரஜாட்சி ரகுநந்தனைக் கண்டதும் பழையபடி ஒதுங்கிச் சென்று விஜயராகவனிடம் இருந்து அர்ஜூனை வாங்கிக் கொண்டு ஒரு ஓரமாய் உட்கார்ந்து அவளுடன் விளையாடத் தொடங்கிவிட்டாள்.

"ராகவ் அண்ணா! உங்க டிப்பார்ட்மெண்ட்ல எக்சாம் அனோன்ஸ் பண்ணுனா எனக்குக் கொஞ்சம் சொல்லுங்க. நான் காம்படிட்டிவ் எக்சாம் எழுதலாம்னு இருக்கேன்" என்று அவன் காதிலும் வேலை விஷயமாக ஒரு வேண்டுகோளைப் போட்டுவைத்தாள் அவள். விஜயராகவனும் அவளை எப்போதும் தனது உடன்பிறவா சகோதரியாகவே பாவிப்பதால் அவனுக்கு தெரிந்த விவரங்களை எல்லாம் உடனுக்குடன் மைத்ரேயி மூலமாக அவளுக்கு தெரிவித்துவிடுவான். நீரஜாட்சிக்கும் அவளது "சோ கால்ட் அம்மாஞ்சிகளை" விட விஜயராகவன் மீது ஏகப்பட்ட மரியாதை.

அவள் ஒரு ஓரமாக அமர்ந்து அர்ஜூனுடன் விளையாடுவதை ரசித்தபடியே அவளுக்கு எதிரில் அமர்ந்திருந்த விஜயராகவனிடம் சென்று அமர்ந்தான் ரகுநந்தன். அவளைப் பார்த்துக் கொண்டே "அப்புறம் அத்திம்பேர் பார்த்து மூனு வருஷமாறது! எப்பிடி இருக்கேனு ஒரு வார்த்தை கேக்க மாட்டேளா?" என்று விஜயராகவனிடம் பேசுவதைப் போல நீரஜாட்சியிடம் விழியை திருப்ப அதைப் புரிந்து கொண்டான் ராகவன்.

ரகுநந்தனின் தோளில் கையைப் போட்டவன் "என்னடா பண்ணுறது நந்து? உன்னோட கவனம் எதுவுமே என் மேல இல்லையே" என்று அவ்னைக் கேலி செய்ய அவனோ ராகவன் தன்னை கண்டுகொண்டதை நினைத்து நாக்கைக் கடித்துக் கொண்டான்.

நீரஜாட்சி குழந்தையுடன் அங்கிருந்து விலகிச் சென்று சீதாலெட்சுமியிடம் அமர்ந்து கொண்டாள். அவனும் தொடர்ந்து அங்கே  செல்ல இரவு தீபாவளி கொண்டாட்டம் முடியும் வரைக்கும் இந்த விளையாட்டு தொடர்ந்து நடக்கவே நீரஜாட்சி களைத்துப் போனவளாக அவுட் ஹவுஸினுள் சென்று விட்டாள்.

ரகுநந்தனுக்கோ தன்னுடைய தேவதை முன்பு போல் முகம் சுழிக்காமல் முறைத்துக் கொண்டிருந்தது கூட அவனுக்கு இதயத்தில் பியானோவை இசைத்தது போல  இனிமையாகவே இருந்தது. அதே இனிய நிகழ்வுகளுடன் உறங்கச் சென்றவனின் கனவிலும் நீரஜாவே ஆக்கிரமித்திருந்தாள்.

மறுநாள் விடியலிலும் அவளது குரலே அவன் காதுகளில் ஒலித்தது.

"என் செல்லமோன்னோ! பிளீஸ் எழுந்துக்கோடா!" என்ற நீரஜாட்சியின் இனிய குரல் இம்சிக்க ரகுநந்தன் "போடி! எனக்கு தூக்கம் வர்றது. நீ கனவுலலாம் நல்லா தான் பேசுவ. நிஜத்துல நான் உன் முன்னாடி வந்து நின்னா கோவத்துல என்னை எரிச்சு வைக்கிறியே?" என்று சிணுங்கிக் கொண்டுத்  தூக்கத்தை தொடர ஆரம்பித்தவனை மீண்டும் அவளது குரல் இம்சித்தது.

"என் செல்லப்பட்டுக்குட்டி! எழுந்திரு பார்ப்போம். இப்போ நீ எழுந்திருச்சா நான் உனக்கு கிஸ் பண்ணுவேனாம்" என்க அவன் சட்டென்று விழிகளைத் திறந்தான். ஏனெனில் அவன் கேட்டக் குரல் கனவில் அல்ல, நிஜத்தில்!

"அது எவன்டா என் நீருகுட்டி கிட்ட எனக்கு முன்னாடி கிஸ் வாங்கப் போறவன்?" என்று கடுப்புடன் அவனது பால்கனியிலிருந்து எட்டிப் பார்த்தான். அவனது பால்கனியிலிருந்து எட்டிப் பார்த்தால் முழுத் தோட்டத்தோடு அவுட் ஹவுஸும் தெரியும்.

அதிலிருந்து எட்டிப் பார்த்தவன் விழிகளை தோட்டம் முழுவதும் ஓடவிட அங்கே அவன் கண்டது அவனது தாத்தாவும், நீரஜாட்சியும் பேசிக் கொண்டிருந்ததை தான். நீரஜாட்சி அவரை தோட்டத்து பெஞ்சில் இருந்து எழுப்பி விட்டவள் "பட்டு! உனக்கு தான் வீசிங் இருக்குல்ல! இந்த நேரத்துல பனியில வந்து இருப்பியா?" என்றபடி அவரை அழைத்துக் கொண்டு வீட்டினுள் விட்டுவிட்டு வந்தாள்.

வரும் போதே அவளது அக்மார்க் லவுட்ஸ்பீக்கர் குரலில் "சித்தம்மா நான் டென் ஓ கிளாக் காலேஜுக்கு கன்சாலிடேட்டட் மார்க் ஷீட் வாங்கப் போகணும். அப்போ உன்னோட பிரிஸ்கிரிப்சனை குடு" என்று வீட்டினுள் இருந்து சீதாலெட்சுமி கேட்டதற்கு பதிலளித்தபடி அவுட் ஹவுஸை நோக்கிச் சென்றாள்.

அவளுக்குத் தெரியாமலே தனக்கு ஒரு நல்ல வாய்ப்பைக் கொடுத்துவிட்டுச் செல்லும் நீரஜாட்சிக்கு ஒரு பறக்கும் முத்தத்தை பரிசாக அளித்துவிட்டு அவனும் சீக்கிரமாகக் குளித்துத் தயாரானான். ஜம்மென்று தயாராகி கீழே வந்தவனைப் பார்த்து மூன்று விரல்களைக் காட்டிய சீதாலெட்சுமி "என்னடா கண்ணா உன் கேர்ள் ஃப்ரெண்டை பார்க்கப் போறியோ?" என்று கேட்டு பத்மாவதியின் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்தார்.

ரகுநந்தன் கண்ணை மூடி ரசனையுடன் "என் கேர்ள் ஃப்ரெண்ட் ஆத்துக்குள்ளயே இருக்கறச்ச நான் ஏன் வெளியே போய் தேடப் போறேன் பாட்டி?"என்க பத்மாவதி துணுக்குற்றார். இவன் என்னடா புது குண்டை தூக்கித் தலையில் போடுகிறான் என்று மகனைப் பதைபதைத்த இதயத்துடன் நின்றார்.

ஆனால் அவரது இளைய புதல்வன் அதற்குள் அவனது அன்னை ஐ.சி.யூவில் அட்மிட் ஆவதைத்  தடுக்கும் விதமாய் "நீ தான் பாட்டி என்னோட கேர்ள் ஃப்ரெண்ட். உன்னை விட அழகினு எவ இருக்கா இந்த லோகத்துல?" என்றுச் சொல்லிவிட்டு சீதாலெட்சுமியை அணைத்து முத்தமிட்டான். அதைப் பார்த்த பத்மாவடி "ஒரு நிமிசத்துல என் பி.பியை ஏத்திவிட்டுட்டியேடா"என்று அவன் தலையில் செல்லமாகத் தட்டிவிட்டுச் சென்றார்.

அவர் சென்றதும் சீதாலெட்சுமியிடம் "பாட்டி உன்னோட ஆங்ரிபேர்ட் பேத்தி காலேஜ் போனும்னு சொல்லிட்டு இருந்தா. அப்பாவும், ஹர்சாவும் ஆளுக்கொரு காரை எடுத்திட்டு போயிட்டாங்க. இவ எப்பிடி போவா?" என்று கேட்க

அவரோ பெருமையாய் "உங்க அப்பா தான் அவளுக்குனு ஒரு ஸ்கூட்டி வாங்கித் தந்திருக்கானோன்னோ அதுல போவாடா அசடு" என்றுச் சொல்லி அவனுக்கு ஹார்ட் அட்டாக் வரவைத்தார்.

ரகுநந்தன் மனதுக்குள் "டேய் நந்து நீ போட்ட பிளான் என்ன? இங்க நடக்கிறது என்ன? சீக்கிரமா யோசிடா. இன்னைக்கு நீருகுட்டி உன் கூட தான் காலேஜ் வரணும். யோசி யோசி" என்று மூளையத் தட்டத் துவங்க அழகான ஐடியாவும் உதித்தது.

அவன் யாருமறியா வண்ணம் ஸ்டோர் ரூமிலிருந்து சாக்கு தைக்கும் ஊசியை எடுத்துக் கொண்டவன் மெதுவாக பார்க்கிங்கில் நிற்கும் நீரஜாட்சியின் ஸ்கூட்டி பெப்பை நோக்கிச் சென்று அதன் முன் டயரை குத்தி வைத்துவிட்டு ஒன்றும் தெரியாதவன் போல வீட்டுக்குள் சென்று அமர்ந்தவன் மணி பத்து அடிப்பதற்காக காத்திருக்க தொடங்கினான்.

சரியாக பத்து மணிக்கு நீரஜாட்சியின் "சித்தம்மா" என்ற அலறல் சத்தம் அவன் காதை குளிர்விக்க அவனும் "பாட்டி உன் பேத்தி உன்னை அன்பா கூப்பிடுறா பாரு. என்னன்னு விசாரிச்சு பைசல் பண்ணிவிடு" என்று நல்லப் பிள்ளையாகச் சொல்லிவிட்டு அமர்ந்திருக்க சீதாலெட்சுமி பார்க்கிங்கை நோக்கிச் சென்றார்.

அவனும் வாயிலுக்குச் சென்று அங்கே நடப்பதை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். நீரஜாட்சி ஆகாய நீலவண்ண டாப், வெள்ளை நிற லெகின்ஸில் அழகுதேவதையாய் மிளிர அவளிடமிருந்து அவனுக்கு கண்ணை எடுக்க இயலவில்லை. அவளோ முகத்தைத் தூக்கி வைத்தபடி சீதாலெட்சுமியிடம் வண்டியின் சக்கரத்தைக் காட்டி புகார் செய்து கொண்டிருக்க ரகுநந்தனின் மனசாட்சி "அடேய் நந்து! டைம் ஸ்டார்ட் நவ். சீக்கிரமா போய் பெர்ஃபார்ம் பண்ணுடா" என்று அவனுக்கு அறிவுறுத்த அவனும் கூலர்சை மாட்டியபடி கிளம்பி பார்க்கிங்கை நோக்கிச் சென்றான்.

அவன் நீரஜாட்சியைக் கண்டு கொள்ளாமல் அவனது ராயல் என்ஃபீல்டை ஸ்டார்ட் செய்ய சீதாலெட்சுமி அவனிடம் "டேய் நந்தா! குழந்தே காலேஜுக்கு போகணும்டா. எந்த படுபாவியோ அவளோட ஸ்கூட்டி டயரை கிழிச்சு வச்சிண்டு போயிட்டான்" என்க

அவன் பதறிப் போய் "ஐயோ பாட்டி அவன் யாரோ எவனோ? இப்பிடி முன்ன பின்ன தெரியாத ஒருத்தனை திட்டி வைக்காதே" என்று சொல்லிவிட்டு திருதிருவென்று விழிக்க நீரஜாட்சியோ அவனை  சந்தேகமாகப் பார்த்து வைத்தாள்.

அவன் கூலர்ஸை ஜீன்ஸ் பாக்கெட்டில் வைத்தவன் வண்டியை திருக சீதாலெட்சுமி "டேய் நீ போற வழியில இவளை காலேஜுல இறக்கிவிட்டுப் போடா ராஜா" என்க நீரஜாட்சி "சித்தம்மா" என்றுப் பல்லைக் கடித்து அவனுடன் போக தனக்கு விருப்பமில்லை என்பதை கண்ணால் தெரிவித்தாள்.

"இப்போ ஆட்டோக்கு எங்கே போறதுடி? சமத்துப் பொண்ணோல்லியோ! அம்மாஞ்சியோட போயிட்டு வாடி" என்று அவளை தாஜா செய்ய அவளுக்குமே நேரமாவதால் வேறு வழியின்றி அவனது பைக்கில் ஏறி அமர்ந்தாள்.

பக்கவாட்டுக் கண்ணாடியில் அவளது முகத்தைப் பார்த்தபடி "போலாமா நீரு?" என்க அவளும் பதில் சொல்லாமல் முறைத்தபடி தலையை மட்டும்  ஆட்டினாள்.

அவன் வண்டியை ஸ்டாட் செய்தபடி "பாட்டி போயிட்டு வர்றோம்" என்றபடி கிளம்ப சீதாலெட்சுமி இருவருக்கும் டாட்டா காண்பித்துவிட்டு வீட்டினுள் சென்றார்.


Comments

  1. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    ReplyDelete
  2. பூங்காற்றிலே உன் சுவாசம்..!
    எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
    (அத்தியாயம் - 13)

    ஆனாலும்.... இந்த ரகு நந்தன் திட்டம் போட்டு கட்டம் கட்டி நல்லாவே தூக்குறான். இவனோட சாமர்த்தியம் ஹர்ஷாவுக்கு இல்லாததாலத் தான் முக்கி முனங்குறானோ
    என்னவோ...?

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பூங்காற்று 1