பூங்காற்று 42

கிருஷ்ணஜாட்சி கரோலினை வங்கிக்கு
அனுப்பி வைத்துவிட்டு அவள் மட்டும் பேக்கரியைத் திறந்து வைத்திருந்தாள். அவள் தனியாக
வாடிக்கையாளர்களைக் கவனித்தவள் பதினொரு மணி வாக்கில்
கூட்டம் குறையவே சிறிது ஓய்வாக அமர்ந்தாள். அன்று அவர்களுக்கு ஒரு பிறந்தநாள் கேக்குக்கான ஆர்டர்
கிடைத்திருந்தது. அந்த ஆர்டரைக் கொடுத்த பெண்மணி
தனது மகளுக்கு மிக்கி மவுஸ் உருவம் வைத்த கேக் வேண்டும் என்று சொல்லி கேட்டலாகில்
குறிப்பிட்டுவிட்டுச் செல்ல கிருஷ்ணஜாட்சி அது குறித்து யோசித்துக் கொண்டிருந்தாள்.
அப்போது பேக்கரியின் கண்ணாடிக்கதவின்
வழியே விழும் சூரியஒளியை யாரோ மறைப்பது போல தோன்ற யாரென்று பார்க்க அங்கே வர்ஷா ஒரு ஆடவனுடன்
நின்று கொண்டிருந்தாள். அவளைப் பார்த்ததும்
கிருஷ்ணஜாட்சி எழுந்து கொள்ள வர்ஷா ஓடி வந்து கிருஷ்ணஜாட்சியை அணைத்துக் கொண்டாள்.
சில கண அமைதிக்குப் பிறகு முதுகுப்புற ஏப்ரன் ஈரமாவதை உணர்ந்த
கிருஷ்ணஜாட்சிக்கு அவள் அழுகிறாள் என்பதே அப்போது தான்
உரைத்தது. பதறிப் போனவளாய் அவளை எழுப்பியவள்
"என்னாச்சு
வர்ஷா? ஏன் அழறே? நீ பெரியப்பாவை நினைச்சு பயந்தேனா
அதுக்கு அவசியமே இல்ல, நான் அவர் கிட்ட பேசிட்டேன். இப்போ நீ
வீட்டுக்குப் போனா கூடா அவர் உன்னை
மன்னிச்சிடுவார். நீங்களும் தான் அண்ணா" என்றபடி அவளுடன் நின்ற ஆடவனைப் பார்க்க அவனோ
தர்மசங்கடத்துடன் புன்னகைத்தான்.
"இல்ல சிஸ்டர்! இங்கே நாங்க வந்தது உங்க கிட்ட மன்னிப்பு
கேக்க தான்" என்று அவன், வர்ஷாவின் கணவனான அருண் கூற வர்ஷாவும் அதை
ஆமோதித்தாள்.
"நான் என்னைப் பத்தி யோசிச்சேனே தவிர அவங்க எனக்குப் பதிலா
உன்னை மணமேடையில உக்கார வைப்பாங்கன்னு
நினைக்கல கிருஷ்ணா. ஏற்கெனவே அத்தைக்கு உன்னை பிடிக்காது. ஹர்சாவும் அத்தை கிழிச்ச கோட்டை தாண்ட
மாட்டான். என்னோட சுயநலம் உன் வாழ்க்கையை
அழிச்சிடுச்சே" என்றபடி அவள் கையைப் பிடித்து அழத் துவங்கினாள் வர்ஷா.
அவளைத் தேற்ற முடியாமல் தவித்த
கிருஷ்ணஜாட்சி "இங்க பாரு வர்ஷா! நீ அழறதால நடந்த எதையும் மாத்த முடியுமா? அப்போ
எதுக்கு கண்ணீரை வேஸ்ட் பண்ணுற? எனக்கோ
பெரியப்பாவுக்கோ உன் மேல எந்த கோவமும்
இல்ல. நீ என் கிட்ட மன்னிப்பு கேக்கறதுக்கு அவசியமே இல்ல" என்று அவளை ஆறுதல் படுத்த
வர்ஷாவின் கணவன் அருண்
"நீங்க
பெரிய மனசோட சொல்லுறிங்க சிஸ்டர். ஆனா உங்க கிட்ட மன்னிப்பு கேட்டா தான் எங்களால எந்த குற்றவுணர்ச்சியும்
இல்லாம எங்க வாழ்க்கையை ஆரம்பிக்க முடியும்" என்று
சொல்லி கைகூப்பி மன்னிப்பு கேட்கவே இருவரின் செய்கையில் கிருஷ்ணஜாட்சிக்கு சங்கடமாகி விட்டது.
அவர்களின் திருப்திக்காக
"சரி
சரி! உங்க ரெண்டு பேரையும் மன்னிச்சாச்சு. புது மாப்பிள்ளை பொண்ணு வந்திருக்கிங்க, சொல்லுங்க! என்ன சாப்பிடுறிங்க?" என்று விருந்தோம்பலை ஆரம்பிக்க வர்ஷாவின் முகத்தில் அப்போது
தான் சோகத்தின் சாயல் கொஞ்சம் விலகத் தொடங்கியது.
கிருஷ்ணஜாட்சி இருவரையும் அமரச் சொல்லிவிட்டு காபியுடன் வந்து
அவளும் அமர்ந்து கொண்டாள். வர்ஷா அவள்
அமர்ந்ததும்
கவனித்த முதல் விஷயம் கிருஷ்ணஜாட்சியின் முன்வகிட்டில் குங்குமம் இல்லாததை தான். பதற்றத்துடன்
அவள் பார்வை கிருஷ்ணஜாட்சியின் கழுத்தை ஆராய முற்பட
அன்று குளோஸ்ட் நெக் டாப் அணிந்திருந்ததால் கிருஷ்ணஜாட்சியின்
கழுத்து அவளுக்குப் புலப்படவில்லை. சரி இப்போதெல்லாம் யார் முன் வகிட்டில் குங்குமம் வைத்துக்
கொள்கிறார்கள் என்று அந்த விஷயத்தை
ஓரம்
தள்ளிவிட்டு வீட்டில் அனைவரும் எப்படி இருக்கிறார்கள் என்று விசாரிக்க ஆரம்பித்தாள்.
கிருஷ்ணஜாட்சி அனைவரும் நலம்
என்றவள் மெதுவாக "வர்ஷா உங்க அம்மா தான் ரொம்ப ஷாக் ஆயிட்டாங்க. அவங்க அன்னைக்கு வீட்டுக்குப் போற வரைக்கும்
யார் கிட்டவும் பேசலடி" என்றாள்
வருத்தமான
குரலில்.
வர்ஷா அதை அலட்சியம் செய்யவே
அருண் அவளிடம் "ஷ்ஷ் வர்ஷா! என்ன இருந்தாலும் அவங்க உன்னோட அம்மா" என்று அதட்ட அவள் அவனை முறைத்துவிட்டு
கிருஷ்ணஜாட்சியிடம் திரும்பினாள்.
"கிருஷ்ணா சப்பொஸ்
இப்போ மதுரா சித்தி உயிரோட
இருந்து அவங்க கிட்ட நீயோ நீருவோ ஒரு பையனை காதலிக்கிறதா
சொன்னா அவங்க என்ன பண்ணுவாங்க? முதல்ல யோசிச்சாலும்
அப்புறம் பொண்ணோட சந்தோசம்
தான் முக்கியம்னு அந்த பையனை பத்தி விசாரிப்பாங்க. நல்லவனா இருந்தா சந்தோசமா கட்டி
வைப்பாங்க. மோசமானவனா இருந்தா பொண்ணுக்கு புத்தி
சொல்லி திருத்துவாங்க! ஆனா நான் எங்க அம்மா கிட்ட அருண் பத்தி சொன்னப்போ ஆத்துல என்ன நடந்துச்சு
தெரியுமா?" என்ற கேள்வியுடன் நிறுத்தியவளை கிருஷ்ணஜாட்சி பார்க்க
வர்ஷா விரக்தியான குரலில்
"அம்மா
அருணை ஒரு மனுசனா கூட மதிக்கல. இத்தனைக்கும் இவன் நல்ல செக்யூர்டான ஜாப்ல இருக்கான், அவங்க ஃபேமிலி பேக்கிரவுண்டும்
அருமையானது தான். ஆனா அம்மாக்கு அருணை
பிடிக்கல. அவங்க மனசு பூராவும் ஸ்ரீனிவாசவிலாசம் தான் இருந்துச்சு. அதோட மருமகளா நான் ஆகலைனா
அவங்களும் விஷம் குடிச்சுட்டு, அப்பாக்கும்
சாப்பாட்டுல கலந்து குடுத்துடுவேனு மிரட்டுனாங்க. எனக்கு என்ன பண்ணனு தெரியல கிருஷ்ணா. என்னால
ஒருத்தனை காதலிச்சிட்டு இன்னொருத்தனோட
ஆத்துக்காரியா
வாழ முடியாதுனு எவ்வளவோ சொல்லி புரியவைச்சேன்.
அதுக்கு அவங்க அப்பாவை உதாரணமா
சொன்னாங்க. அப்பா மதுரா சித்தியை காதலிச்சிட்டு அவங்க இல்லைனு ஆனதும் தான் அம்மாவை விவாகம்
பண்ணிண்டார்னு சொன்னவங்க அதே மாதிரி உனக்கும் ஹர்சா மேல வருங்காலத்துல விருப்பம்
வந்துடும்னு என்னை வற்புறுத்துனாங்க.
வேற
வழியில்லாம தான் நான் இப்பிடி ஒரு முடிவு எடுத்தேன். எல்லா சடங்கு சம்பிரதாயத்திலயும் அம்மாக்கு சந்தேகம்
வரக் கூடாதுனு தான் சிரிச்ச முகத்தோட இருந்தேன்.
உள்ளுக்குள்ள ஹர்சாவை ஏமாத்துறோமேனு நான் அழுதது எனக்கு மட்டும் தான் தெரியும். இப்போ
கூட உன் கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு
அவனை
தான் பார்க்கப் போறோம்" என்று நடந்ததைக் கூற விஜயலெட்சுமியின் மீது ஒட்டிக் கொண்டிருந்த கொஞ்சநஞ்ச
மரியாதையும் மறைய கிருஷ்ணஜாட்சி வர்ஷாவின் கையை
அழுத்தினாள்.
"நீ ஹர்சாவை போய்
பார்க்க வேண்டாம். நான்
அவரண்ட சொல்லிடுறேன். நீ இப்போ போக வேண்டியது பெரியப்பா கிட்ட. அவர் கிட்ட போய் மன்னிப்பு
கேட்டுட்டு உங்க வாழ்க்கையை நல்ல படியா வாழ
ஆரம்பிங்க" என்று நல்வார்த்தை சொல்லி இருவரையும் ஆதிவராஹனை சந்திக்க அனுப்பி வைத்தாள்.
அவர்கள் சென்று சில நிமிடங்களில்
கரோலின் வரவே அவளிடம் வர்ஷாவும் அவள் கணவனும் வந்திருந்த விஷயத்தைக் கூறியவள் என்ன மாதிரி
சூழ்நிலையில் அவள் அப்படி ஒரு முடிவு
எடுத்திருந்தாள்
என்பதையும் கூற கரோலினுக்கு வர்ஷா மீது இருந்த அதிருப்தி அப்போது தான்
மெல்ல மெல்ல அகன்றது.
அதன் பின் அவர்கள்
வழக்கமான
வேலையில் மூழ்கிவிட நேரம் போனதே தெரியவில்லை. அன்று பிறந்தநாள் கேக் அவர்களின் சிந்தனையைத் திருடிக்
கொண்டது. அதைப் பற்றிய யோசனையுடனே அன்றைய பொழுதைக்
கடத்தியவர்கள் மாலையில் வெளியே மெர்லினின் பொக்கே ஷாப்பில் ஏதோ சத்தம் கேட்கவே பதறிப் போய் அங்கே
ஓடினர்.
மெர்லின் மூர்ச்சையாகி இருக்க
அவரை தண்ணீர் தெளித்து எழுப்பிக் கொண்டிருந்தார் இன்னொரு ஆங்கிலோ இந்தியப் பெண்மணி. கிருஷ்ணஜாட்சியும்
கரோலினும் என்னவோ ஏதோவென்று பதறிப்
போய்
நிற்க அந்த பெண்மணி "டோண்ட்
கெட் பேனிக். ஸ்மால் ஃப்ளெக்சுவேசன் இன் பிபி, நத்திங் சீரியஸ் டியர்ஸ்" என்று
சொல்லிக் கொண்டிருக்கும் போதே விழித்துக் கொண்டார்
மெர்லின்.
கிருஷ்ணஜாட்சி அவருக்கு நன்றி
தெரிவித்துவிட்டு கரோலினிடம் "நான் ஷாப்பை குளோஸ் பண்ணிடுறேன். நீ அம்மாவை கூட்டிட்டு போ" என்று
சொல்லி அவளை அனுப்பி வைத்துவிட்டு பொக்கே ஷாப்பை
மூடினாள். சிறிது நேரத்தில் பேக்கரிக்கு வந்த கரோலினிடம் "நீ இனிமே இங்கேயே இருந்துக்கோ லின். எனக்கு
ஒன்னும் இல்ல. நான் தைரியமா தான் இருக்கேன். அம்மாக்கு
ஆல்ரெடி ஹெல்த் இஸ்யூஸ் வேற. இதுல நீயும் பக்கத்துல இல்லனா சரி வராது. அவங்க கொஞ்ச நேரம்
ரெஸ்ட் எடுத்துட்டு எழுந்ததும் நீ டாக்டர் கிட்ட
கூட்டிட்டு போ. பேக்கரியை நான் பார்த்துக்கிறேன்" என்று சொல்லி அவளை அனுப்பி வைத்தாள்.
அவள் சென்ற பின்னர் வந்த சில வாடிக்கையாளர்களும் சென்ற பின்னர்
பேக்கரியை வழக்கம் போல எட்டு மணிக்கு
பூட்டியவள்
நேரே கரோலினின் வீட்டுக்குச் சென்று மெர்லினிடம் மருத்துவர் சொன்ன விவரங்களை விசாரித்துவிட்டு
பேருந்தைப் பிடிக்கச் செல்ல அவளுக்கு
டாட்டா
காண்பித்துவிட்டு பேருந்து சென்றுவிட்டது.
பெருமூச்சுடன் நீரஜாட்சியை வரச்
சொல்லலாமா என்று மொபைலை எடுத்தவள் இவ்வளவு நேரத்துக்குப் பிறகு அவள் நெடுந்தொலைவு கடந்து இங்கே
வருவது பாதுகாப்பல்ல என்று உணர்ந்து
அந்த
எண்ணத்தை ஒத்தி வைத்துவிட்டு கால்டாக்சிக்கு போன் செய்தாள்.
டாக்சி வரும் வரை
பேருந்து
நிறுத்த இருக்கையில் அமர்ந்திருந்தவளுக்கு சில நிமிடங்களின் அங்கே வந்து நின்ற ஆண்களின் தோற்றம்
மனதிற்குள் குளிரை பரப்பவே மனதிற்குள்
ஹனுமன்
சாலீசாவை உருப்போடத் தொடங்கினாள். அது தீயசக்திகளிடம் இருந்து நம்மைக் காக்கும் மந்திரம் தான், என்ன செய்வது இந்த உலகில் வேலை செய்வதற்காக வெளியே வரும் ஒவ்வொரு
பெண்ணுக்கும் தன்னை தேவையின்றி நோட்டமிடும் ஒவ்வொரு
ஆணுமே தீயசக்தியாக தான் தெரிகிறார்கள், இது காலத்தின் அவலமே.
எவ்வளவு நேரம் தான் தன்னைப்
பார்வையாலே கூறு போடும் இவர்களைச் சமாளிப்பது என்று பயந்தவளுக்கு அந்த சாலையில் வேகமாக அவளைக் கடந்த
வெள்ளை நிற ஆடி காரைப் பார்த்ததும் அதன் உரிமையாளனின்
முகம் மனதில் தோன்றியது. அதோடு மனதில் ஒரு விரக்தியும் தோன்றியது. இருந்தும் இல்லாமல்
இருக்கும் உறவை நினைத்து தான் ஏன் நேரத்தை விரயமாக்கி
கொள்ள வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தவள் அந்த ஆடி மீண்டும் திரும்பி வருவதைக் கண்டு திகைத்தாள்.
ஒரு வேளை தன்னை
பார்த்திருப்பானோ
என்ற எண்ணம் மனதில் தோன்ற அடுத்த கணமே "ஆமா பார்த்தா மட்டும் அப்பிடியே ஓடி வந்து
பொண்டாட்டியை கூட்டிட்டு போயிட்டு தான் மறுவேலை
பார்ப்பான் இவன்! வீணா அவனைப் பத்தி யோசிக்காதே கிருஷ்ணா" என்ற மனசாட்சியின் அறிவுறுத்தலுக்கு செவி
சாய்த்தபடியே நிமிர்ந்து அமர்ந்து கொண்டாள்
கிருஷ்ணஜாட்சி.
அந்த ஆடியும் ஆடி அசைந்து அவள் இருக்கும் இடத்துக்கு எதிரே நிற்க அதிலிருந்து
இறங்கிய ஹர்சவர்தன் அங்கே அமர்ந்திருந்த
கிருஷ்ணஜாட்சியையும் அவளை வெறித்து பார்த்துக் கொண்டிருந்த சில ஆண்களையும் கண்டவன்
எரிச்சலுடன் அவளை நோக்கிச் சென்றான்.
அவனைக்
கண்டதும் அவர்கள் கிருஷ்ணஜாட்சி மீது வைத்திருந்த பார்வையை விலக்கிக் கொள்ள அவன் அருகில் வந்து
"வா கிருஷ்ணா! வீட்டுக்குப் போகலாம்" என்று சொல்ல கிருஷ்ணஜாட்சிக்கு அவள்
காதையே அவளால் நம்ப முடியவில்லை.
அவனது ஆணையிடும் குரலில் எரிச்சலானவள் பொய்யான ஆச்சரியத்துடன்
அவனை ஏறிட்டு "வாவ்! என்னால நம்பவே முடியலயே, பத்மாவதி அம்மாவோட் பையன் என் கிட்ட
வந்து பேசுறார். பட் ஐ அம் நாட் இம்ப்ரெஸ்ட்.
நீங்க போகலாம்" என்று மறுத்துவிட்டு சாலையை வெறிக்க ஆரம்பித்தாள்.
இது ஹர்சவர்தன்
எதிர்ப்பார்த்த
பதில் தான். எனவே அவனுக்கு அதிர்ச்சி எதுவுமில்லை. சாதாரண குரலில் "உன் கோவம், வருத்தம் எல்லாத்தையும் ஆத்துல போய்
காட்டிக்கோ கிருஷ்ணா. இப்போ
கிளம்பு. இங்க சிச்சுவேசன் சரி இல்ல" என்றான் குழந்தைக்கு விளக்குவதைப் போல.
ஆனால் அவள் ஒன்றும் பழைய கிருஷ்ணஜாட்சி இல்லையே. அவனை கேலியாகப்
பார்த்தபடி "எதை நம்பி உங்களோட
கார்ல
ஏறுறது? திடீர்னு உங்க அம்மா
கால் பண்ணி நீங்க எங்க இருக்கிங்கன்னு
விசாரிச்சா
நீங்க உத்தமபுத்திரனா என்னை
கூட்டிட்டு வர்ற விஷயத்தைச் சொல்லுவிங்க. அதை
கேட்டு பத்மாவதி அம்மாவுக்கு கோவம் வரும். அம்மா கோவப்படறதை தாங்கிக்காத புள்ளையாச்சே
நீங்க, அம்மா மனசு
கோணக்கூடாதுனு பாதி வழியில இறக்கி
விட்டுட்டு போயிட்டிங்கன்னா அங்கேயும் இதோ இந்த மாதிரி சில நாய்கள் நாக்கை தொங்கப் போட்டுட்டு
தான் நிக்கும். அப்போ நான் பாதுகாப்பா இருப்பேனா
மிஸ்டர் ஹர்சவர்தன்?" என்று அவளின் ஆறு
வருட கோபத்தையும் ஒருங்கே
அவன் மீது காட்ட ஹர்சவர்தனால் இந்த புதிய கிருஷ்ணஜாட்சியை
சத்தியமாக சமாளிக்க இயலவில்லை.
இருந்தாலும் வருந்திய குரலில்
"என்னால நம்பவே முடியல! இவ்ளோ நாள் மாமியா இருந்தவங்க இப்போ பத்மாவதி அம்மாவா ஆயிட்டாங்கல்ல, எதிரிக்கு கூட மனசு வலிக்க கூடாதுனு நினைப்பியே கிருஷ்ணா! நீயா இப்பிடி
பேசறேனு என்னாலா நம்பவே முடியல" என்றவனை எரிப்பது போல பார்த்தவள் அவன் கண்களின்
இறைஞ்சுதலை பார்க்க விரும்பாமல் முகத்தை திருப்பிக் கொண்டாள்.
அப்படியே அமர்ந்தவாறு
"ரொம்ப
பேசறேன்ல! என்ன பண்ணுறது? வாழ்க்கையில ரொம்ப
மோசமா அடி வாங்கிட்டேன், அதோட விளைவு தான் இது. பிளீஸ் நீங்க
கிளம்புங்க, இல்லைனா நான் இன்னும் எதுவும் சொல்லிடப் போறேன்"
என்றவளைப் பார்த்து அவனுக்கு ஆயாசமாக வந்தது.
காரில் அவளை அமர வைக்கவே இவ்வளவு போராட்டம் என்றால் இவளுடன் தன்
எதிர்காலத்தைப் பகிர்ந்து கொள்வது இந்த ஜென்மத்தில்
ஈடேறாது போலவே என்று அவனுக்கு தோன்ற
அவனது மனசாட்சி "நோ ஹர்சா! டோண்ட் கிவ்
அப். இவ விட்டா பேசிண்டே போவா. நீ என்ன பண்ணுவியோ தெரியாது, இன்னும்
ரெண்டு நிமிசத்துல கிருஷ்ணா உன் காருல இருக்கணும். இவ்வளவு உயரமா வளர்ந்திருக்கியோன்னோ
ஏதாச்சும் பண்ணு" என்று அவன் தலையில் குட்ட
ஹர்சவர்தனும் ஒரு முடிவுக்கு வந்தான்.
"குழந்தை மாதிரி அடம்
பிடிக்காதே கிருஷ்ணா. இப்போ நீயா வர்றியா, இல்ல....."
என்றவனை இடை வெட்டினாள் கிருஷ்ணஜாட்சி.
"இல்லனா என்ன
பண்ணுவிங்க?" என்றபடி எழுந்தவளை
அடுத்த நிமிடமே தன் கரங்களில் அள்ளிக் கொண்டான் அவளின் கணவன்.
"இப்போ
புரிஞ்சுருக்குமே! இப்போ போகலாமா?" என்றபடி அவன் நடக்க கிருஷ்ணஜாட்சி
கடுப்புடன் "உங்களுக்கு கொஞ்சம் கூட அறிவு
இல்ல ஹர்சா! இப்பிடி பொறுக்கி மாதிரி பிஹேவ் பண்ணுறிங்க, அதுவும் பப்ளிக்ல! முதல்ல என்னை இறக்கி விடுங்க" என்று அவள் திமிற அவனோ அதை சட்டை செய்யாமல் அவளை
காருக்குள் தள்ளி கதவை அறைந்துச் சாத்திவிட்டு அங்கே
நின்ற ஆண்களை ஏறிட்டான்.
"டேய் இங்க நீங்க
நிக்கிற நேரத்துல உன் அக்கா, தங்கச்சி, ஒய்ஃபை
எவனாச்சும் இப்பிடி நோட்டம் விட்டுண்டிருப்பான். போய் அவன் கிட்ட
இருந்து உங்க வீட்டு பொண்ணுங்களை காப்பாத்துங்க"
என்று செருப்பால் அடித்தது போலச் சொல்லிவிட்டு காரினுள் அமர கிருஷ்ணஜாட்சி அவனை முறைக்க
ஆரம்பித்தாள்.
அவனோ அதற்கெல்லாம்
அசராமல்
"ரொம்ப கோவமா இருக்கே! ஏ.ஸி போட்டா கூல் ஆயிடுவியா?" என்று கேலி செய்தவாறு காரை எடுக்க அவளால் முகத்தை
திருப்பிக் கொண்டு அமர மட்டுமே முடிந்தது.
மனைவியின் பாராமுகம் வருத்தத்தைக் கொடுத்தாலும்
திருமணத்துக்குப் பிறகு முதல் முறையாக தானும் அவளும் மட்டுமே
இருக்கும் இந்த தனிமை அவனுக்கு இனிமையாக நகர அவனுக்கு உள்ளே சந்தோசம் பொங்க மியூசிக் பிளேயரை
ஆன் செய்தான்.
நீயும் நானும் சேர்ந்தே செல்லும் தூரமே
நீலம்
கூட வானில் இல்லை
எங்கும்
வெள்ளை மேகமே
போக
போக ஏனோ நீளும் தூரமே
மேகம்
வந்து போகும் போக்கில்
தூறல்
கொஞ்சம் தூறுமே
பாடல் ஒலிக்க ஒலிக்க கிருஷ்ணஜாட்சியின் மனமும் அமைதியாக அதில்
கலக்க ஆரம்பித்தது.
நான் பகல் இரவு
நீ
கதிர் நிலவு
என்
மன கண்களில்
நீ
முதற் கனவு
நீ வேண்டுமே
இந்த
பிறவியை கடந்திட நீ போதுமே
யாராலும் கொடுக்க முடியாத ஆறுதலையும், அமைதியையும் கொடுக்கும் வலிமை இசைக்கு என்றுமே உண்டு. கிருஷ்ணஜாட்சியும் அதில் இலயித்தவளாய்
கண்ணை மூடி அதை அனுபவிக்க ஹர்சவர்தன்
ஒரு
கண்ணை சாலையில் பதித்து மற்றொரு கண்ணால் மனைவியை ரசித்தவாறு காரை ஓட்டினான்.
பூங்காற்றிலே உன் சுவாசம்..! எழுத்தாளர்: நித்யா மாரியப்பன் (அத்தியாயம் - 27)
ReplyDeleteஅப்பாடா...! இப்பத்தான் இந்த ஹர்ஷா இந்தியன் டிபிகல் புருசனா, அதாவது சூடு, சுரணை, வெட்கம், மானம், திமிரு, கெத்து, உருட்டு, மிரட்டு, கடுப்பு, உறைப்பு இது எதுவுமே இல்லாம மாறிட்டு வரான். இது தான் புருச லட்சணம்ன்னு தெரிஞ்சுக்கிட்டானோ இல்லையோ... அப்ப இனி எல்லாமே சுபமா மாறிடும்.
😀😀😀
CRVS (or) CRVS2797
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ReplyDelete