பூங்காற்று 43

நீராஜாட்சி கிருஷ்ணஜாட்சியுடன்
தோட்டத்தில் கால் பதித்த நேரம் வீட்டிற்குள் நுழைந்தது ரகுநந்தனின் கார். காரிலிருந்து பட்டாபிராமனின்
தோளைப் பிடித்து அவரை இறக்கி விட்டவன்
அவர்களுடன் வந்த கரோலினிடம் அவரை அழைத்துச் செல்லுமாறு சொல்லிவிட்டு "மெதுவா நடங்க
தாத்தா" என்றபடி பார்வையை வீட்டை நோக்கித் திருப்பவும் அங்கே கையில் சூட்கேசுடன்
நின்று கொண்டிருந்த சகோதரிகளையும் கண்டு அதிர்ந்தான்.
இந்த திருமணம் அதிருப்தியை ஏற்படுத்தும் என்பது அவன் அறிந்தது தான். ஆனால் இவர்கள் வீட்டை
விட்டு வெளியேறும் அளவுக்கு என்னவாயிற்று என்ற
திகைப்புடன் தாத்தாவும் பேரனும் அவர்களிடம் வந்தனர். கரோலினும் அதிர்ந்தவளாய் "வாட்
ஹேப்பண்ட் கிரிஷ்?" என்றபடி இரு சகோதரிகளிடம் ஓடினாள்.
பட்டாபிராமனின் "கிருஷ்ணா என்னடாம்மா?" என்ற குரலும் ரகுநந்தனின் "மன்னி
இவளை அழைச்சிண்டு சூட்கேசும் கையுமா
எங்கே போறிங்க?" என்ற கேள்வியும் ஒரே
நேரத்தில் ஒலிக்க கிருஷ்ணஜாட்சி
அதிராமல் நிதானமான குரலில் "நாங்க இந்த வீட்டை விட்டுப் போறோம்" என்றுச் சொல்லவும்
பட்டாபிராமனுக்கு இதயமே வெடித்துவிடும் போல இருந்தது.
அவளை மாலையும் கழுத்துமாகப்
பார்த்து முழுதாக ஒரு மணி நேரம் கூட ஆகாத நிலையில் அவள் இப்படி வெறும் கழுத்தும், கையில் சூட்கேசுமாக நிற்பதைப்
பார்த்தவருக்கு வேறு எப்படி இருக்க
முடியும்? ரகுநந்தனோ
அதிர்ந்தவனாய் குடும்பத்தினரைப் பார்க்க அங்கே அவனது
தாயார் சிலை போல் நிற்க தந்தையும் மற்றவர்களும் கலங்கிப்போய் நின்றனர்.
அவனது பார்வை அடுத்து அலசியது
அவனது உடன் பிறந்தவனை தான். கட்டிய மனைவி இங்கே சூட்கேசும், கையுமாக நிற்க இவன் அங்கே நெடுமரம் போல்
ஏன் நின்று கொண்டிருக்கிறான் என்ற ஆத்திரம் அவனுக்கு.
கோபத்தில் அவனை நோக்கி முன்னேறியவன் அங்கே குழுமியிருந்த
சம்பந்தி வீட்டாரை நோக்கி கைகூப்பி "நீங்கல்லாம் தப்பா எடுத்துக்காதேள்! இப்போ எங்காத்துல சூழ்நிலை
சரியில்ல. நீங்கல்லாம் சிரமம் பார்க்காம
கிளம்புங்கோ" என்றுச் சொல்ல உறவினர்கள் கலைய ஆரம்பித்தனர். மைத்திரேயியின் கணவனும், ஸ்ருதிகீர்த்தியின் கணவனும் அவரவர்
பெற்றோருடன் செல்வதாக
மனைவிமார்களிடம் கூறிவிட்டு நடந்தவர்கள் கையில் சூட்கேசுடன் நின்றவர்களைக் கண்டதும்
"அவசரப்படாதடா கிருஷ்ணா. அண்ணா போயிட்டு இப்போ வந்துடுவேன். நாம எதுவா இருந்தாலும்
பொறுமையா பேசி தீர்த்துக்கலாம்" என்று வேண்டிவிட்டுச்
சென்றனர்.
அவர்கள் கிளம்பியதும் ரகுநந்தன்
அண்ணனிடம் வந்தவன் "அண்ணா! இங்கே நடந்திண்டிருக்குடா? எதுக்கு இவா ரெண்டு பேரும் ஆத்தை விட்டுப்
போறோம்னு சொல்லிண்டிருக்கா? வாயைத் திறந்து இப்போவாச்சும் பேசுடா. அங்க
நிக்கிறது உன்னோட ஆத்துக்காரிடா, எவளோ ஒருத்தி இல்ல" என்று
ஆத்திரக்குரலில் வினவ ஹர்சவர்தன் என்னும் சிலைக்கு உயிர் வந்தது. நடந்த விஷயங்ளை வலியுடன்
அவன் கூற ரகுநந்தன் "சோ அவா கிளம்புறதை தடுக்காம
நீ வேடிக்கை பாத்திண்டிருக்கியோ?" என்று கடுகடுத்த குரலில் கூற அவனது தமையனுக்கும் இப்போது
கோபம் வந்துவிட்டது.
"என்னை என்னடா பண்ண சொல்லுற? என்னைக்
கொஞ்சம் கூட பிடிக்காத ஒருத்தியை தடுத்து நிறுத்தி அவளை ஆத்துக்குள்ள அழைச்சிண்டு போகச்
சொல்லுறியா? இப்பிடி அவளைக்
கார்னர் பண்ணி மணமேடையில அமர வச்சதுக்கு நான்
காலம்பூரா அவப்பெயரோடயே இருந்திருப்பேனே.
அம்மாவுக்கு அவாளைப் பிடிக்காதுனு தெரிஞ்சும் ஏன் தாத்தா இப்பிடி ஒரு காரியத்தைப் பண்ண வச்சார்?" என்று அவன் வெடிக்க பத்மாவதி தான் பெற்ற இருவரும் தன் கண் முன்னே
சண்டையிடுவதை வேதனையுடன் பார்த்துக் கொண்டு நின்றார்.
ரகுநந்தன் அவனை
உஷ்ணப்பார்வை
பார்த்தபடி "இப்போ இவாளை அம்மாவுக்குப் பிடிக்காதது தான் உன்னோட பிரச்சனையா? யூ இடியட், அவா ஆத்தை விட்டுப் போனா எங்கே போவா? என்ன பண்ணுவா? இதெல்லாம்
யோசிக்க மாட்டியா நீ? அதை விடு.
இரண்டாயிரம் பேர் முன்னாடி
அக்னிசாட்சியா அவளை நீ மனைவியா ஏத்துண்ட தானே! அப்போ ஒரு நல்ல ஆம்படையானா நீ என்ன பண்ணிருக்கனும்? அம்மா அவாளை அபவாதமா பேசறச்ச அம்மா இப்பிடி பேசாதேள்னு சொல்லிருக்கணும், அதை செஞ்சியா நீ? சில நேரத்துல கெட்டதை வேடிக்கை பார்க்கிறது கூட அதை
செய்யறதுக்கு சமம் தான்டா அண்ணா"
என்றுச்
சொல்லிமுடித்து விட்டு வெளியே நின்று கொண்டிருந்தவர்களை நோக்கிச் சென்றான்.
பட்டாபிராமனும் கரோலினும் இரு சகோதரிகளின் நிலையைக் கண்டு கண்ணீர்
உகுக்க ரகுநந்தன் கிருஷ்ணஜாட்சியிடன்
வந்தவன் "இதோ பாருங்க மன்னி! எப்போவும் இவ தான் அவசரப்பட்டு நிதானமில்லாம நடந்துப்பா.
நீங்க அப்பிடியில்லயே. கொஞ்சம் யோசிங்க! என்ன
வேணும்னாலும் நடந்திருக்கலாம். ஆனா வீட்டை விட்டுப் போறேனு மட்டும் சொல்லாதிங்க" என்க
கிருஷ்ணஜாட்சி கம்மிய குரலில்
"அவ்ளோ நிதானமான நானே இப்பிடி ஒரு முடிவு எடுத்திருக்கேன்னா நீங்களே யோசிச்சு பாருங்க, இங்க என்னென்ன விஷயங்கள்
நடந்திருக்கும்னு. இனி பேசறதுக்கு எதுவும்
இல்ல. நீரு வாடி" என்றபடி நீரஜாட்சியின் கையைப் பற்றி அழைத்துச் செல்ல முயல ரகுநந்தன்
நீரஜாட்சியின் மற்றொரு கையை இறுக்கமாகப் பற்றிக்
கொண்டு அவளை வெளியேற அனுமதிக்கவில்லை.
நீரஜாட்சி அவனது
இறுக்கமான
பிடியில் கை வலிக்க வலியில் முகம் சுளிக்கவும் கிருஷ்ணஜாட்சி திரும்பி அவளது கையைப் பற்றியிருந்த
ரகுநந்தனை திகைப்புடன் பார்த்தாள்.
"உங்க வாழ்க்கை சம்பந்தப்பட்ட முடிவை எடுக்க உங்களுக்கு
பரிபூரண உரிமை இருக்கு மன்னி! ஆனா நீரு இந்த ஆத்துல
தான் இருப்பா. உங்களால முடிஞ்சா இவளை இங்கே இருந்து கூட்டிட்டுப் போய் காட்டுங்க"
என்றபடி நீரஜாட்சியின் கையைச் சுண்டி இழுக்க அவள் இப்போது ரகுநந்தனின் பக்கம் வந்து
நின்றாள். கையை விடுவிக்க முயன்றவாறே
"வாட் இஸ் திஸ்? உனக்கு பைத்தியமா
பிடிச்சிருக்கு? என் கையை விடு" என்றவளை ஒரு கையால் அவன்
கையமர்த்தியவாறே கிருஷ்ணஜாட்சியைப் பார்க்க அவளோ
அவர்களிடையே உள்ள உறவை பற்றி அவன் ஏற்கெனவே கூறியிருந்ததால் அதை நினைத்து அதிர்ந்து போய் நின்றாள்.
பின்னர் சன்னமான குரலில்
"இங்க
பாருங்க அவ கையை விடுங்க. நாங்க போகணும்" என்று மட்டும் கூற ரகுநந்தன் கிண்டலாக "மன்னி
என்னையும் உங்க ஆத்துக்காரர் மாதிரினு
நினைச்சுட்டேளா? அவன் வேணும்னா அவனோட ஆத்துக்காரி எங்கே
போனாலும் கவலை இல்லாம இருக்கலாம்.
நான் அப்பிடி இல்ல. நான் எங்கே இருக்கிறேனோ அங்கே தான் நீரு இருப்பா. உங்களுக்கு இஷ்டம்னா
நீங்களும் அவளோட இந்த அவுட் ஹவுஸில
இருங்கோ.
இல்லனா நீங்க மட்டும் கிளம்பிப் போங்கோ" என்றான் அந்த 'நீங்க மட்டும்' என்ற
வார்த்தையில் அழுத்தமாக.
கிருஷ்ணஜாட்சி அவனது பிடிவாதத்துக்கு
வேறு வழியின்றி அடிபணிய ரகுநந்தன் இருவரையும் வீட்டை விட்டுப் போக விடாமல் தடுத்துவிட்டதில்
நிம்மதியடைந்தான்.
ஆனால் அவன் கூறிய
வார்த்தைகளின்
அர்த்தங்கள் சிலருக்கு மகிழ்ச்சியையும், சிலருக்கு குழப்பத்தையும் கொடுக்க பத்மாவதிக்கு
மட்டும் "நான் எங்கே இருக்கிறேனோ
அங்கே
தான் நீரு இருப்பா" என்ற வார்த்தையில் கதி கலங்கி நின்றார். எந்த இருவரை அவர் இந்த வீட்டிற்குள் கூட
நுழைய விடாமல் கண்கொத்தி பாம்பாக இருந்தாரோ அந்த
இருபெண்களும் எவ்வித சிரமமுமின்றி அவர் பெற்ற மகன்களின் வாழ்க்கையில் நுழைந்து விட்ட
அதிர்ச்சியில் தொப்பென்று அங்கிருந்த
இருக்கையில்
அமர வேங்கடநாதன் அவரைக் கண்டுகொள்ளவில்லை. சற்று நேரத்துக்கு முன் அவர் பேசிய வார்த்தைகளால் அவர்
மீதான மதிப்பு அவரது குடும்பத்தினரிடம் இறங்கிவிட்டது.
அவ்வளவு ஏன் அம்மா பிள்ளையான ஹர்சவர்தன் கூட தாயின் கையிலிருக்கும் திருமாங்கல்யத்தை
வெறித்தானே தவிர அவரை ஆறுதல் படுத்த
வரவில்லை.
மனதுக்குப் பிடித்தவளை மணந்தும் அவன் மனம் மகிழவில்லை.
கிருஷ்ணஜாட்சி பொறுமையாக ரகுநந்தனை பார்த்தவள் "சரி! நீங்க
சொல்லுற மாதிரி நான் வீட்டை விட்டு போகல! நாங்க
எப்போவும் போல அந்த அவுட் ஹவுஸில தான் இருப்போம். அதுக்கான வாடகையை நான் மாசாமாசம் சித்தம்மா கையில
குடுத்துடுவேன். அப்புறம் அந்த வீட்டுல இருக்கிறவங்களுக்கும், எங்களுக்கும் இனி எந்த சம்பந்தமும்
இல்ல. உங்களைப் பொறுத்தவரைக்கும்
நாங்க உங்க அவுட் ஹவுஸில இருக்கிற டெனன்ட்! அவ்ளோ தான்" என்றுச் சொல்லிவிட்டு கையிலிருக்கும்
பர்சை திறந்தவள் அதிலிருந்து பணத்தை
எடுத்தாள்.
அதை ரகுநந்தன் கையில் திணித்தபடி
"நியாபகம் வச்சுக்கோங்க, சித்தம்மா பட்டு தவிர
வேற யாரும் அந்த அவுட் ஹவுஸ் பக்கம்
வரக் கூடாது" என்றபடி நீரஜாட்சியின் கையை அவனிடம் இருந்து விலக்க முயல அவனது பிடி இன்னும்
அதிகரித்ததே தவிர குறையவில்லை.
ரகுநந்தன் கேலியாக
கிருஷ்ணஜாட்சியைப்
பார்த்தவாறே "மன்னி உங்க ரூல்ஸ் எதுவும் என்னை கன்ட்ரோல் பண்ணாது. உங்க தங்கையை அழைச்சிண்டு
போங்கோ. நீங்களும் ஒரு விஷயத்தை மறந்துடாதேள்!
எப்போவும் நான் இருக்கிற இடத்துல தான் அவ இருப்பா" என்றுச் சொன்னபடி நீரஜாட்சியின் கையை
விடுவித்தான்.
அவன் விட்டபின்னர்
கிருஷ்ணஜாட்சி
நீரஜாட்சியை அழைத்துக் கொண்டு அவுட் ஹவுஸினுள் செல்ல அவன் கரோலினை சிறிது நாட்களுக்கு அவர்களுடன்
இருக்குமாறு வேண்டிக் கொண்டு அவர்களுடன் அனுப்பி
வைத்தான்.
பட்டாபிராமன் இளைய
பேரனின்
கையைப் பிடித்துக் கொண்டவர் "என் ராஜா! இன்னைக்கு நீ மட்டும் இல்லையோ என் பேத்திகள் என்னை விட்டு கண்
காணாத இடத்துக்குப் போயிருப்பாடா! அந்த பகவான் நோக்கு
வாழ்க்கையில எந்த குறையும் வைக்க மாட்டார்" என்று அவனை அணைத்துக் கொண்டு கூடத்தினுள்
நுழைந்தார்.
ஹர்சவர்தனை ஆயாசமாக பார்த்தபடி
"உன்னை விட சின்னவன். பிரச்சனையை எப்படி சமாளிச்சான்னு பார்த்தியோன்னோ! இனியாச்சும்
சுயபுத்தியோட இருடா. உன் வாழ்க்கை உன் கையில தான். அவ்ளோ தான் இந்த கிழவனால சொல்ல
முடியும். நாங்க சொன்னாலுமே உன் காதுல
அது
ஏறும்னு நேக்கு தோணலைடா. அம்மா பேச்சை தவிர வேறு எதுவும் உன் சிந்தையில பதியாதே" என்றபடி
சீதாலெட்சுமியை அழைத்துக் கொண்டு தனது
அறைக்குச்
சென்றுவிட்டார். அந்த
வயோதிகப்பெண்மணிக்கும் பேத்தி அவுட்
ஹவுஸிற்கு
சென்ற பிறகு தான் மனதுக்கு கொஞ்சம் நிம்மதியானது.
மைதிலி கோதண்டராமனையும்,
வேங்கடநாதனையும்
அழைத்து ஏதோ பேச வேண்டுமென்று உள்ளே அழைத்துச் சென்றுவிட மைத்திரேயியும், ஸ்ருதிகீர்த்தியும் தமையனின் நிலையைக்
கண்டு கலங்கிப் போனவர்களாய் அவனை
வற்புறுத்தி எழுப்பி அவனது அறைக்கு அழைத்துச் சென்றனர். அனைவரும் சென்றுவிட கூடத்தில் பத்மாவதி, ரகுநந்தன், ஆதிவராஹன், விஜயலெட்சுமி மட்டும் இருந்தனர்.
ஆதிவராஹன் ரகுநந்தனிடம்
"நந்து
நான் போய் அந்த குழந்தேள் கிட்ட பேசிட்டு வர்றேன்டா" என்று கூறிவிட்டு அவுட் ஹவுஸை நோக்கிச் செல்ல
அவனும் தனது அறைக்குச் செல்வதற்காக
மாடியை
நோக்கித் திரும்பினான்.
செல்ல இருந்தவனை "நீ ரொம்ப பெரியவனாயிட்டடா நந்து. வருங்கால
ஆத்துக்காரியை இங்கே இருந்துப் போகவிடாம ரொம்ப
சாமர்த்தியமா தடுத்திட்டியோன்னோ" என்ற பத்மாவதியின் குரல் தடுத்து நிறுத்தியது.
ரகுநந்தன் தாயிடம் ஒரு புன்னகையுடன்
வந்தவன் "மா! உங்க பையன் ஆச்சே! உங்க சாமர்த்தியத்துல பாதி கூடவா எனக்கு இருக்காது? ஏதோ என்னால முடிஞ்சது இந்த ஆத்துல நடந்த
கூத்து வெளியே வரைக்கும்
போகாம அவாளை வீட்டோட இருக்க வச்சிருக்கேன். உங்களுக்கும் ஸ்ரீநிவாசவிலாசத்தோட கவுரம் மேல அக்கறை
இருந்தா தயவு பண்ணி அவா வழிக்கு இனி
போகாதிங்க"
என்றுச் சொல்லிவிட்டு விறுவிறுவென்று படிகளில் ஏறி அவனது அறைக்குச் சென்றுவிட்டான்.
அதே நேரம் அவுட் ஹவுஸில் கிருஷ்ணஜாட்சியின் கையைப் பிடித்துக்
கதறிக் கொண்டிருந்தார் ஆதிவராஹன்.
"என் மகளால உன் எதிர்ப்பார்ப்புகள் பொய் ஆயிடுச்சுன்னா
என் தங்கைனால உன் வாழ்க்கையே கேள்விக்குறி
ஆயிடுத்தேம்மா! இந்த பாவத்தை கங்கையில முழுகிகூட போக்க முடியாதே" என்றவரை தேற்ற வழியின்றி
தவித்தனர் அவர்கள்.
கிருஷ்ணஜாட்சி அவரை அமைதியாக்கியவள்
"பெரியப்பா இதுல உங்க தப்பு என்ன இருக்கு?
யாரையும்
தப்பு சொல்ல வழி இல்ல"
என்றுச் சொல்ல அவர் திடீரென்று நினைவு வந்தவராக "நீ மதுராவைப் பத்தி ஏதோ பூடகமா சொன்னியே!
என்ன விஷயம் அது? அதுல விஜியோட தப்பு எதுவும் இருக்கா? தயவு பண்ணி மறைக்காம சொல்லிடும்மா!
இல்லனா இந்த விஷயத்தால புது
குழப்பம் எதுவும் வந்துடப் போறது" என்றுச் சொல்ல கிருஷ்ணஜாட்சி தயங்கினாள்.
கரோலினை அர்த்தபுஷ்டியுடன்
பார்க்க அவள் புரிந்து கொண்டது போல "நீரு பேப்! சால் வீ கோ டூ வராண்டா? ஐ லைக் டு என்ஜாய் தி கார்டன்
சீனரிஸ்" என்க அவளும் தலையாட்டியபடி
கரோலினுடன் புறப்பட்டாள். அவள் சென்றதை உறுதிப்படுத்திய கிருஷ்ணஜாட்சி இருபத்து ஐந்து
வருடங்களுக்கு முன்னர் நடந்த நிகழ்வுகளை கூற ஆரம்பித்தாள்.
(இது ப்ளாஷ்பேக்!
அதனால நான் எல்லாரையும் சிங்குலர்லா கூப்பிடுவேன்)
மதுரவாணி இந்த ஸ்ரீநிவாசவிலாசத்தின்
இளவரசியாக வலம் வந்த காலம் அது. பட்டாபிராமனுக்கு அவரது மகளை நிறைய படிக்க வைக்க வேண்டும்
என்ற ஆசை! அவர்கள் இருந்த பகுதியில்
மதுரவாணியின் வயதுப்பெண்கள் மணமேடையில் அமர அதே நேரம் மதுரவாணியோ மேற்படிப்பு படிக்க ஆரம்பித்திருந்தாள்.
அப்படி இருந்தாலும் அவளது உலகமே அவளின் இரு அண்ணன்களும், பெற்றோரும் மட்டும் தான். அவளது சாதுவான குணமும், தெய்வீக
அழகுடன் கூடிய முகமும் எவரையும் கவரும் திறன் படைத்தது. அது அவள் படித்த கல்லூரியில் அவளுடன்
பயின்ற மதிவாணனின் கருத்தையும் கவர்ந்ததில்
ஆச்சரியமில்லை.
அதை அவளிடம் வெளிப்படுத்திய போது
பெண்களுக்கே உரித்தான பயமும், வெட்கமும் அவளை ஆட்கொண்டதில் பதில் எதுவும் கூறாதவள்
நாளடைவில் மதிவாணனின் மரியாதையான நடத்தை, யார் வம்புக்கும் போகாத குணத்தால்
கவரப்பட்டு அவன் வசம் வீழ்ந்தாள்.
அவர்களின் காதல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக செழித்து வளர மதுரவாணியால் ஒரு விஷயத்தை மட்டும்
ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. மதிவாணனின் கோபம்
தான் அது. அவனது கோபமும், பிடிவாதமும், தன் சுயமரியாதையைச் சீண்டியவர்களுக்கு அவன்
பதிலடி கொடுத்த விதமும் அவளுக்கு அயர்ச்சியைக்
கொடுத்தாலும் அவன் இளம்பிராயத்திலிருந்தே ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்ததால் தனது
சுயமரியாதைக்கு குந்தகம் வருவதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் இருப்பது அவனது இயல்பு
என்று சமாதானப்படுத்திக் கொண்டாள்.
அதே நேரம் மதிவாணன் ஒரு
விஷயத்தில்
தெளிவாக இருந்தான். அது என்னவென்றால் ஒரு வேளை மதுரவாணியின் பெற்றோர் அவர்களுக்கு திருமணம்
செய்துவைக்க முன்வராவிட்டால் அவர்களின் சம்மதமின்றி
அவளை எக்காலத்திலும் மணக்க மாட்டேன் என்பது தான் அது. ஏனெனில் குடும்பம் என்ற அமைப்பு தனக்கு தான்
கிடைக்கவில்லை, அதை கிடைக்கப்பெற்ற மதுரவாணியிடம் இருந்து காதல் என்ற
பெயரில் தான் அதைப் பறித்துவிடக் கூடாது என்பது
தான் அவனது எண்ணம்.
ஒரு வழியாக கல்லூரி படிப்பை
முடித்தவன் பொறுப்பாக ஒரு அரசு நிறுவனத்துக்கு மேலாளர் பதவிக்கு விண்ணப்பித்துவிட்டு அவர்களின்
பதிலுக்காக காத்திருந்தான். இடைப்பட்ட
காலத்தில்
அவனும் மதுரவாணியும் கோயிலில் சந்தித்துப் பேசிக் கொள்வார்கள். அப்படி ஒரு நாள் மதிவாணனைச் சந்திக்க
சென்ற போது தான் மதுரவாணி கோயிலில்
தனது
பள்ளிப்பருவ தோழியான மைதிலியைச் சந்தித்தாள். அவள் கூடவே இருந்த ஒரு அழகிய பெண்ணை யாரென்று கேட்க மைதிலி அது
தனது சகோதரி பத்மாவதி என்றுச் சொல்லி இருவருக்கும்
பரஸ்பரம் அறிமுகம் செய்துவைத்துவிட்டு தனது வீட்டுக்கு கையோடு அழைத்துச் சென்றாள்.
அந்த வீட்டுக்கு மதுரவாணி முதல் முறை போன போது தான் அவளுக்கு
அறிமுகமாயினர் விஜயலெட்சுமியும், ஆதிவராஹனும்.
ஆதிவராஹன் மைதிலியின் சகோதரன் என்றதும் அவனைக் கண்டுப் புன்னகைத்தாள் மதுரவாணி. அவனும்
மேற்படிப்பு படித்துக் கொண்டிருப்பதால் அவனிடம்
அவள் சகஜாமாகப் பேசவே இதைக் கண்ட மைதிலியின் அத்தை மகளான விஜயலெட்சுமிக்கு அவளை முதல்
பார்வையிலேயே பிடிக்காமல் போய்விட்டது.
விஜயலெட்சுமி ஆதிவராஹனை தனது
வருங்கால கணவனாக எண்ணி அந்நாளுக்காக காத்திருந்தவளுக்கு தன்னுடைய கனவு மதுரவாணியால் நாசமாகி விடுமோ என்ற
அச்சம் வேறு அவளுக்கு. எனவே மதுரவாணி
செல்லும்
வரை அவளை அசூயையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் விஜயலெட்சுமி.
ஆனால் மதுரவாணிக்கோ முதல் பார்வையிலேயே பத்மாவதியை மிகவும்
பிடித்துப் போய்விட வீட்டுக்குச் சென்றதும் தன்
பெற்றோரிடம் அவளை மூத்த அண்ணனுக்கு மணமுடிக்கலாமா என்று கேட்டு ஒரே வாரத்தில் பத்மாவதியை அவரது
அண்ணனுக்கு பேசியும் முடிக்க வைத்தாள்.
சுற்றுவட்டாரத்தில் பத்மாவதிக்கு ஸ்ரீநிவாசவிலாசத்தில் விவாகம் செய்யப் போகிற செய்தி பரவ அனைவருமே
அவரது அதிர்ஷ்டத்தை எண்ணி பொறுமி போயினர்.
பத்மாவதியின் குடும்பம் சிரம
திசையில் இருந்த நேரம் அது. அதனால் திருமணத்தைக் கூட பட்டாபிராமனே எடுத்துச் செய்தார். பத்மாவதியும்
புகுந்த வீட்டாரிடம் கொள்ளைப்பிரியத்துடனே
இருந்தாள் எனலாம். அதிலும் மதுரவாணி என்றால் அவளுக்கு மிகவும் பிரியம். அந்த சமயத்தில் தான்
ஆதிவராஹனின் பிஸினஸ் முயற்சி வெற்றி
பெற்று
அவனது தொழில் சூடுபிடிக்கத் தொடங்கியிருந்தது. அந்நேரம் சீதாலெட்சுமிக்கு மகளை ஆதிவராஹனுக்கு
மணமுடிக்கும் எண்ணம் வரவே பத்மாவதி
மகிழ்ந்தாள்.
ஆனால் மைதிலிக்கு மணமுடிக்காமல் ஆதிவராஹனின் திருமணத்தைப் பற்றி யோசிக்க அவளது தந்தை தயங்கவே
சீதாலெட்சுமி தயங்காமல் தன்னுடைய இளைய
மகனுக்கு
மைதிலியை சூட்டோடு சூடாக விவாகம் செய்து வைத்துவிட்டார்.
அதே சமயம் மதிவாணனுக்கும் மத்திய அரசு நிறுவனத்தில் மேலாளர்
பணியில் சேருமாறு அழைப்பு வர அவன் விஜயவாடாவில்
பணிக்குச் சேர்ந்துவிட்டு மதுரவாணிக்கு கடிதம் மூலம் அச்செய்தியைத் தெரிவித்தான். இரண்டு
வருடங்கள் மட்டும் பொறுத்திருந்தால்
தான்
ஒரு நல்ல நிலைக்கு வந்துவிடுவேன், அதற்குப் பின்
திருமணம் செய்து கொள்ளலாம், அதுவும் பெற்றோர் சம்மதத்துடனே என்று
அவன் கூறிவிடவே மதுரவாணியும் தான்
மேற்படிப்பை தொடருவதாகக் கூறி விட்டாள். இது விஜயலெட்சுமிக்கு தன் அத்தை மகன் தனது
கையை விட்டுப் போக மாட்டான் என்ற நம்பிக்கையை விதைக்க
அவளும் அமைதியானாள்.
சரியாக ஒரு வருடம்
முடியவே
ஹர்சவர்தனும், மைத்திரேயியும்
பிறந்துவிட அந்த வீட்டில் மழலைகளின்
இன்மொழி
கேட்க ஆரம்பித்தது. மதுரவாணிக்கு இருவரும் உயிர். அவர்களின் முதல் பிறந்தநாள் முடிந்த கையோடு மதுரவாணி
ஆதிவராஹன் விவாகச் செய்தியை பட்டாபிராமன் உறுதி
செய்ய அது மதுரவாணி, விஜயலெட்சுமி
இருவருக்குமே அதிர்ச்சியைக்
கொடுத்தது.
மதுரவாணி பதறிப் போனவளாய் மதிவாணனுக்கு கடிதம் போட்டு எப்போதும்
சந்திக்கும் கோயிலுக்கு வரச் சொல்லவே இருவரின்
பேச்சையும் எதேச்சையாக அந்த கோயிலுக்கு வந்த விஜயலெட்சுமி கேட்டுவிட்டாள். மதுரவாணி வேறு ஒருவனை
காதலிக்கும் செய்தி நல்லது தான் என்றாலும் அவள்
காதலிப்பவன் பெற்றோர் சம்மதம், அது, இது என்று பிதற்றுவது அவளுக்கு எரிச்சலைக் கொடுத்தது.
எனவே மனதில் திட்டம் தீட்டியவளாய்
ஒரு நாள் அத்தை வீட்டினர் அனைவரும் வெளியே சென்றிருக்கும் சமயம் மதுரவாணியை வீட்டுக்கு அழைத்தவள்
அவளது கார் வீட்டின் நுழைவாயிலுக்குள்
நுழையும் சத்தம் கேட்டதும் வேகமாக ஒரு அறைக்குள் சென்று தன்னை அடைத்துக் கொண்டவள் தனது நாடகத்தை
அரங்கேற்ற தொடங்கினாள்.
மதுரவாணியோ ஒவ்வொரு அறையாக
விஜயலெட்சுமியைத் தேடியவள் இறுதியாக உள்ள அறை உட்பக்கம் தாழ்பாள் போட்டிருக்க கதவைத் தட்டினாள். ஆனால்
சத்தமின்றி இருக்கவே ஜன்னல் வழியே பார்க்க அங்கே
விஜயலெட்சுமி புடவையை உத்தரத்தில் போட்டு முடிச்சிட்டு தூக்கு மாட்ட முயன்று கொண்டிருந்தாள்.
மதுரவாணி எவ்வளவோ
கதறியும்
இறங்க மறுத்தவள் தனது அத்தை மகன் இல்லாத வாழ்க்கை தனக்கு தேவையில்லை என்று மட்டும் மீண்டும்
மீண்டும் கூற மதுரவாணி "விஜி அக்கா! நான்
மன்னி கிட்ட பேசி உங்க விவாகத்தை நடத்தி வைக்கறேன். தயவு பண்ணி இறங்கி வாங்கோ" என்று கண்ணீர் விட அவள்
வாயிலிருந்து அந்த வார்த்தையை வரவழைக்க போட்ட
நாடகம் ஜெயித்துவிட்டதால் மகிழ்ச்சியுடன் கதவை
திறந்தாள் விஜயலெட்சுமி.
ஆனால் அது இன்னும்
முழுதாக
முடியவில்லையே. ஓடிச் சென்று மதுரவாணியை அணைத்தவள் "நீ சொன்னாலும் பத்மா கேக்க மாட்டா மதுரா. அவளுக்கு
நீன்னா ரொம்ப இஷ்டம்" என்றுக் கூறியவள் அன்று கோயிலில் அவளும், மதிவாணனும் பேசியதைத் தான்
கேட்டுவிட்டதாகக் கூற மதுரவாணி
அதிர்ந்தாள். தொடர்ந்து விஜயலெட்சுமி கூறிய திட்டத்தையும் கேட்டவள் இன்னும் அதிர்ந்தாள்.
அது என்னவென்றால்
மதுரவாணி
திருமணத்துக்கு சம்மதிப்பது போல நடித்து திருமண நாளன்று மண்டபத்தை விட்டு நீங்கினால் விஜயலெட்சுமியை தான்
அவளது மாமி மணப்பெண் ஆக்குவாள் என்றும், அதன் பின் பட்டாபிராமன்
சீதாலெட்சுமியிடம் தானே பேசி மதுரவாணியையும், மதிவாணனையும் வீட்டில் ஏற்றுக்கொள்ள
வைப்பதாகச் சொல்ல மதுரவாணியோ இதற்கு
தான் சம்மதித்தாலும் மதிவாணன் சம்மதிக்க மாட்டான் என்று உறுதியாகக் கூறினாள்.
அப்படி என்றால் தான் சாவதை
தவிர வேறு வழியில்லை என்று மீண்டும் விஜயலெட்சுமி நடிக்க தொடங்க இளகிய மனம் கொண்ட மதுரவாணி என்ன செய்ய
என்று புரியாமல் விழித்தாள். அவளது
கையைப்
பிடித்த விஜயலெட்சுமி
"நீ மணமேடைக்கு வராம இருந்தா மட்டும் தான் நான் விரும்புற வாழ்க்கை எனக்கு
கிடைக்கும் மதுரா. உன் கால்ல வேணும்னாலும் விழறேன்"
என்று விழப் போக மதுரவாணி விஜயலெட்சுமி மீது நம்பிக்கை வைத்து அவரது திட்டத்துக்கு ஒத்துழைத்தாள்.
மதிவாணன் அரைமனதுடன் சம்மதிக்க
சரியாக முகூர்த்த நேரத்தில் யாருமறியா வண்ணம் வெளியேறிவள் ஒரு கோயிலில் மதிவாணன் கையால் மாங்கல்யம்
வாங்கிக் கொள்ள அதே நேரம் மணப்பெண்
ஓடிவிட்டதால்
சொந்த அத்தை மகளையே ஆதிவராஹன் மணமுடித்தார். கடைசியில் விஜயலெட்சுமி தான் போட்ட திட்டம்
பலித்ததில் மகிழ்ந்தார்.
ஆனால் அவர் கொடுத்த வாக்கை
அவர் காப்பாற்றவில்லை. திருமணமான மறுநாள் மதிவாணனோடு வந்து நின்ற மதுரவாணியை அவளது குடும்பமே வெறுத்து
தூற்ற அதைக் கண்டபின்னும் நடந்ததைக்
கூறாமல்
வேடிக்கை மட்டும் பார்த்தாள் அவள். மதுரவாணியின் கண்ணீரைக் கண்டு வெகுண்ட மதிவாணன் " என் மதுராவ
நான் மகாராணியா பார்த்துப்பேன். யார்
யாருக்கோ
உதவுறேனு போய் தான் அவ இன்னைக்கு கெட்டபேர் ஏத்துருக்காங்கிறதை நீங்க மறந்துடாதிங்க மிஸ்டர்
பட்டாபிராமன். நீங்க என்ன சொல்லுறது? நான் சொல்லுறேன், இனி அவ மதுரவாணி பட்டாபிராமன் இல்ல. அவ
மதிவாணனோட மனைவி. அவளைப் பத்தி
பேசறதுக்கு உங்க வீட்டுல யாருக்கும் அருகதையோ தகுதியோ கிடையாது. இனி செத்தாலும் நானோ மதுராவோ
இந்த வீட்டு வாசலை மிதிக்க மாட்டோம்" என்று
வைராக்கியத்துடன் உரைத்துவிட்டு மதுரவாணியின் கரம் பற்றி அழைத்துச் சென்றான்.
அந்த காட்சி இன்றும் ஆதிவராஹனின்
மனதில் பசுமையாக நினைவிருக்கவே நடந்த உண்மையை அறிந்து வெதும்பி போனார். கிருஷ்ணஜாட்சி அவரிடம் கடைசியாக
"எங்க அம்மாவ இவங்க எல்லாரும்
ஒதுக்கி
வச்ச மாதிரி நீங்களும் வர்ஷாவை ஒதுக்கி வச்சிடாதிங்க பெரியப்பா" என்று மட்டும் உரைக்க ஆதிவராஹன்
தலையசைத்துவிட்டு கனத்த இதயத்துடன் அந்த அவுட்
ஹவுஸை விட்டு வெளியேறினார்.
பூங்காற்றிலே உன் சுவாசம்..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 23)
ஆனாலும் இந்த விஜயலட்சுமிக்கு இத்தனை கன்னிங் இருக்கக் கூடாது.
இதுல முழுக்க முழுக்க விஜயலட்சுமியோட தப்பு மட்டும் தானே இருக்குது. பத்மாவதியோட தப்பு எதுவும் காணலையே...? பத்மா மதுரைவாணி மேல உசிராத் தானே இருந்திருக்கா. அப்படியிருக்க இந்தளவுக்கு வெறுப்பு மதுரவாணி பசங்க மேல எதுக்கு காட்டிடணும் ?
😀😀😀
CRVS (or) CRVS 2797
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ReplyDelete