பூங்காற்று 42

நிச்சயதார்த்த நாளின் ஆரம்பமே ஹர்சவர்தனுக்குச் சோதனையாக தான்
ஆரம்பித்திருந்தது. முடிந்தவரை கிருஷ்ணஜாட்சியை
விட்டு விலகியிருக்க வேண்டும் என்ற உறுதியில் அவன் கிட்டத்தட்ட ஜெயித்துவிட்டான் தான்.
ஆனால் நிச்சயதார்த்தம் ஏற்பாடுகளைச்
செய்வதற்கு
ரகுநந்தனும் நீரஜாட்சியும் சென்றுவிட்டதால் அவனது அன்னை மூச்சுக்கு முன்னூறு முறை
கிருஷ்ணஜாட்சியை அழைத்து வைக்க அந்த வீட்டில் அவளது பிரசன்னமே அவனது உறுதியை சிறிது
சிறிதாக நிலை குலைத்துக் கொண்டிருந்தது.
ஒருவழியாக மாலை வரை பல்லைக்
கடித்துக் கொண்டு பொறுத்துக் கொண்டவன் மண்டபத்துக்கு வந்ததும் தான் நிம்மதி பெருமூச்சு விட்டான். அதன் பின்
அப்பா, சித்தப்பா, மைத்திரேயி என்று அவனது கவனத்தை ஒவ்வொருவரும்
கவர்ந்து கொண்டனர். அதனால் கிருஷ்ணஜாட்சியின்
நினைவு சிறிது அகல அவனும் நிச்சயதார்த்தத்தின் உற்சாகத்தில் கரைய ஆரம்பித்தான்.
அனைத்தும் கிருஷ்ணஜாட்சி மணமகன் அறைக்கு காபி டிரேயுடன் வரும்
வரை தான். அவன் தயாரானதும் பத்மாவதி
கிருஷ்ணஜாட்சியிடம்
காபி டிரேயைக் கொடுத்து மணமகன் அறையில் உள்ள வீட்டின் ஆண்களுக்கு காபி கொடுத்துவிட்டு வருமாறு
பணிக்க அவளும் டிரேயுடன் படியேறினாள்.
கதவைத் தட்டவும் அது தானாக
திறந்து கொள்ளவே "மாமா காபி கொண்டு வந்திருக்கேன்" என்றபடி உள்ளே வந்தவள் அங்கே ஹர்சவர்தனை தவிர வேறு
யாரையும் காணாமல் தேடியவாறே அவனுக்கு
காபியை
கொடுக்க அவன் அருகில் சென்றாள்.
நீல வண்ண பட்டில் மிதமான ஒப்பனை இயற்கையிலே அழகியான அவளைப்
பேரழகியாக மிளிர வைக்க கள்ளமற்ற புன்னகையுடன் தன்
அருகில் வந்தவளிடம் வழக்கம் போல சிந்தை மயங்கி நின்றான் ஹர்சவர்தன். அவளது முகத்தில் பார்வையை
நிலைத்த வண்ணம் காபி கோப்பையை எடுக்க
முயன்றவன்
கை தவறி அதைத் தட்டிவிட காபி மிகக் கவனமாக அவனது ரோலக்சை குளிப்பாட்டிவிட்டது.
சூடான காபியின் தொடுகை அவனுக்கு
அவனது சபதத்தை நினைவூட்ட எதிரே சாந்தமான முகத்துடன் நின்றவள் எப்போதுமே தனக்கு சொந்தமில்லை என்ற
எண்ணம் இதயத்தில் கத்தியை இறக்கியது.
அது
கொடுத்த வலியில் "உனக்கு அறிவில்லையா?
காபி
கொண்டு வரச்ச கவனமா கொண்டு வர மாட்டியோ? இந்த வாட்சோட விலை என்னனு தெரியுமா? உனக்கு எப்பிடி தெரிய போகுது? ஆஃப்டர்
ஆல் ஒரு செஃப் உனக்கு ரோலக்சைப் பத்தி தெரிஞ்சிருக்க வாய்ப்பில்ல" என்று அவன் கத்தி
தீர்க்க அவனது வார்த்தையிலிருந்த கடினம் கிருஷ்ணஜாட்சியின்
கண்ணில் கண்ணீரை வரவழைக்க அது இன்னும் அவனுக்கு வலியையே கொடுத்தது.
மீண்டும் ஏதோ சொல்ல வாயெடுத்தவன்
அறை வாயிலில் நிழலாட யாரென்று திரும்பி பார்க்க அங்கே கடினமான முகத்துடனும் கண்ணில் தீயுடனும் நின்று
கொண்டிருந்தனர் நீரஜாட்சியும் ரகுநந்தனும்.
நீரஜாட்சி அதே கோபத்துடன் அவன் அருகில் வந்தவள் "காபி தானே
கொட்டுச்சு. ஆசிட் ஒன்னும் உங்க வாட்சில படலையே? கல்யாண மாப்பிள்ளை ஆச்சேனு
பார்க்கிறேன். இல்லைனா...." என்று விரலை நீட்டி எச்சரித்தவள் அவனையும், ரகுநந்தனையும் நோக்கி வெறுப்பு உமிழும் பார்வையைச் சிந்திவிட்டு
கிருஷ்ணஜாட்சியை அழைத்துக் கொண்டு வெளியேறினாள்.
ரகுநந்தனுக்கு ஹர்சவர்தனின் கோபம்
ஆச்சரியத்தோடு சேர்ந்து ஆத்திரத்தையும் வரவழைக்க அண்ணனின் அருகில் சென்றவன்
"ஒருத்தவங்க மேல வச்ச கண்மூடித்தனமான பாசம் உன் கண்ணை மறைச்சிண்டிருக்குடா அண்ணா. இது
நல்லதுக்கு இல்ல. வாழ்க்கையில நிறைய
விஷயங்களை
இழந்து நிக்கிறாங்கடா. அவங்க சுயமரியாதையாச்சும் அவங்களோட இருக்கட்டும். அதையும் உன் அம்மா
பாசத்தால நாசம் பண்ணிடாதே" என்று இறுகிய குரலில் வார்த்தைகளைக் கடித்துத்
துப்பினான்.
ஹர்சவர்தனுக்கு தற்போது இருந்த
சூழல் மூச்சு முட்ட சிரமத்துடன் "உனக்கு என்னோட நிலமை புரியலைடா நந்து. உனக்கு மட்டும் இல்ல, இங்கே இருக்க யாருக்கும் என் நிலமை
புரியாது. ஓகே! என் கஷ்டம்
என்னோட போகட்டும். இனி நான் என் வாயால உன் அத்தை மகள்களை எதுவும் சொல்ல மாட்டேன்" என்றுச்
சொல்லிவிட்டு அங்கிருந்துச் சென்றவனின் விழியில்
தெரிந்த வேதனையில் துணுக்குற்றான் ரகுநந்தன்.
அவனுக்கு தெரிந்தவரை ஹர்சவர்தன்
வேதனைப்பட்டு அவன் பார்த்தது இல்லை. எதையும் புன்னகைக்கு பின்னே மறைத்து பழக்கப்பட்டவனின் மனதில் என்ன
வருத்தம் இருத்தக் கூடும் என்ற யோசனையுடன்
நடந்தவனின் காதில் அங்கே விருந்தினருக்கு ஒதுக்கிய அறையில் நீரஜாட்சியின் குரல் எதிரொலிக்க அவளை
சமாதானம் செய்ய முயலும் கிருஷ்ணஜாட்சியின்
குரலும் கேட்டது.
ரகுநந்தன் கடுப்புடன்
"இருக்கிற
பிரச்சனை காணாதுனு இவ வேற எப்போ முருங்கைமரம் கிடைக்கும், ஏறித் தொங்கலாம்னு காத்திண்டிருக்கா"
என்றபடி அறையின் கதவை தட்டி விட்டு உள்ளே நுழைந்தான்.
அவனைக் கண்டதும் கிருஷ்ணஜாட்சி அவனிடம் வந்தவள் "அம்மாஞ்சி நீங்களாச்சும் சொல்லுங்க, இவ வீட்டுக்குப் போறேனு பிடிவாதம்
பண்ணுறா" என்று கண்ணில் தவிப்புடன்
கெஞ்ச நீரஜாட்சியோ இவன் சொன்னால் மட்டும் நான் கேட்டுவிடுவேனா என்ற பாணியில்
அலட்சியமாக இருவரையும் பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள்.
அவனிடம் கெஞ்சும் அக்காவை எரிச்சலாகப் பார்த்தபடி "ஏன்? இங்கே இருந்து இன்னும் அசிங்கப்படணும்னு உனக்கு ஆசையா இருக்கா? இவங்க யாரும் நம்மளை மருந்துக்கு கூட
மதிக்க மாட்டாங்கன்னு
தெரிஞ்சும் இவங்களுக்கு ஏன் நீ சேவை செஞ்சிட்டு இருக்க கிருஷ்ணா? ஏதோ
இவங்க அப்பா சம்பாதிச்ச காசுல நாம வாழ்ந்துட்டு இருக்கிற நினைப்பு இவங்களுக்குல்லாம்"
என்றுச் சொன்னவள் ரகுநந்தனை பார்வையால் எரிக்கத்
தவறவில்லை.
கிருஷ்ணஜாட்சி அவளது கடைசி வார்த்தையில் தலை குனிய
ரகுநந்தனுக்கு நீரஜாட்சியை சமாளிக்கும் வித்தை தான் கண்ணுக்கு புலப்படவில்லை.
நீரஜாட்சி "உனக்கு வேணும்னா
இவங்க மேல பாசம் இருக்கலாம். அந்த பாசத்துக்காக நீ இங்கேயே இருந்து உன் அம்மாஞ்சியோட
நிச்சயதார்த்தத்தைச் சிறப்பிச்சிட்டு வா. ஆனா என் அக்காவை அசிங்கப்படுத்துன மனுசனோட
நிச்சயத்துல நான் கலந்துக்க மாட்டேன்" என்றாள்
பிடிவாதமாக.
ரகுநந்தன் "லிசன் நீ கோவத்துல புரியாம பேசாத. அங்கே தாத்தா
பாட்டி எல்லாருமே உன்னை தேடுவாங்க.
சின்ன
குழந்தை மாதிரி அடம் பிடிக்காத" என்றான் குழந்தைக்கு சொல்வது போல.
அவளோ அவனது சமாதானத்தை எல்லாம்
காதில் போட்டுக் கொள்ளாவதளாய் மொபைலை எடுத்துக் கொண்டவள் "மிஸ்டர் ரகுநந்தன் உங்காத்து
நிச்சயதார்த்தத்துக்கு வேலை செய்ய ஒரு சர்வெண்ட் போதும். என்னையும் சர்வெண்ட் ஆக்க டிரை
பண்ணாதிங்க. என்ன பார்க்கிற? நீங்கல்லாம் எங்களை
ரிலேட்டிவ்ஸ்னு நினைச்சு இங்கே அழைச்சிருக்கிங்கனு இவ நினைச்சிட்டிருக்கா. ஆனா உங்க
குடும்பத்துல என்னைக்குமே நீங்க எங்களை சேர்த்துக்க
மாட்டிங்கன்னு அவளுக்குப் புரியல. இங்கே காபி கொண்டு போக, சாப்பாடு பரிமாற உங்களுக்கு ஒரு ஆள்
தேவை. அதான் உங்க அம்மா இவளை இங்கே
இருக்க
வச்சிருக்காங்க. இல்லனா ஓடிப் போன மதுரவாணியோட பொண்ணுங்க இப்போ மட்டும் உங்க அம்மாவுக்கு இனிப்போமா?" என்று அவள் அனல் கக்கும் விழிகளால் ரகுநந்தனையும் கிருஷ்ணஜாட்சியையும்
பார்த்துவிட்டு கிளம்ப எத்தனித்தவளை
மீண்டும்
கிருஷ்ணஜாட்சி கரம் பற்றி தடுத்தாள்.
"நீரு வர்ஷா உன்னை
ரொம்ப எதிர்பார்ப்பாடி.
பட்டுவும், சித்துவும் நீ இல்லனா
மனசொடஞ்சு போயிடுவாங்க" என்றுச் சொல்ல அவளது
கையை விலக்கிவிட்டு புன்னகைத்தாள் நீரஜாட்சி.
"நீ சொன்ன எல்லாரும் உனக்கு அப்புறம் தான் எனக்கு கிருஷ்ணா.
நான் சொன்னா சொன்னது தான். நான் இந்த
நிச்சயதார்த்தத்துலயும் சரி, இனி நடக்கப் போற
கல்யாணத்துலயும் சரி நான் கலந்துக்கப்
போறது இல்ல. நான் கிளம்புறேன்" என்றபடி விறுவிறுவென்று அறைக்கதவைத் திறந்துவிட்டுச் சென்றவளின்
பின்னே ஓடினர் கிருஷ்ணஜாட்சியும், ரகுநந்தனும்.
அவள் இது எதையும்
கண்டுகொண்டாமல்
படிகளில் விறுவிறுவென்று இறங்கியவள் ஹாலின் மையத்தில் நின்று பத்மாவதி அவளை அழைப்பதைக் கூட
பொருட்படுத்தாமல் மண்டபத்தை விட்டு
வெளியேறிவிட்டாள்.
கிருஷ்ணஜாட்சி கையைப் பிசைந்தபடி
நிற்க ரகுநந்தன் அவளிடம் "என்ன கிருஷ்ணா இவ இவ்ளோ பிடிவாதமா இருக்கா?" என்று
ஆயாசத்துடன் கேட்டுவிட்டு சிகையைக் கோதிக் கொண்டான்.
அதன் பின் நிச்சயதார்த்த நிகழ்வுகள் அனைத்தும் சிறப்பாக நடைபெற
மோதிரம் மாற்றிக் கொள்ளும் போது வர்ஷா "நீரு
எங்கே?"என்றபடி அவளைத் தேட
கிருஷ்ணஜாட்சி அவள் காதில் ஏதோ சொல்ல அவள் சரியென்று
தலையாட்டினாள்.
ஆனால் பேத்தி கோபத்துடன் கையை வீசியபடி மண்டபத்தை விட்டு
வெளியேறுவதைப் பார்த்துவிட்ட சீதாலெட்சுமிக்கு ஏதோ
பிரச்சனை என்று மட்டும் தெளிவாகப் புரிந்துவிட்டது. சிறிது நேரத்தில் மைத்திரேயியும்
ரகுநந்தனிடம் "டேய் நீருவைப் பார்த்தியோன்னோ? அவ இருந்த சுவடே இல்லையே! நாங்க
எல்லாரும் க்ரூப் போட்டோ எடுக்கலாம்னு
நினைச்சிண்டிருந்தோம். இவ ஏன் திடீர்னு மாயமாயிட்டா?" என்று கேட்டு வைக்க அவன் வாய்க்கு வந்த
காரணத்தைச் சொல்லி அவளை அமைதியாக்கினான்.
நிச்சயதார்த்தம் முடிந்து அனைவரும் வீடு திரும்புகையில் மணி
பதினொன்றை தொட்டிருந்தது. நீரஜாட்சி
தோட்டத்தின்
ஊஞ்சலில் நன்றாகப் படுத்துக் கொண்டு காதில் ஹெட்போனை மாட்டியிருந்தவள் இவர்கள் யாரையும்
கவனிக்கவில்லை. கண்டு கொள்ளவும் இல்லை. அனைவருக்கும்
அன்றைய நாளின் களைப்பு வேறு. அதனால் பத்மாவதி எதுவாயினும் காலையில் பேசிக் கொள்ளலாம் என்று
அனைவரையும் உறங்கச் செல்லுமாறு பணிக்க
கிருஷ்ணஜாட்சி
தாத்தா பாட்டியை அவர்களின் அறையில் விட்டு வெளியே வந்தாள்.
ரகுநந்தன் நைட் பேன்ட்,
டிசர்ட்டுக்கு
மாறி அவளுக்காக காத்திருப்பதைப் பார்த்ததும் அவனிடம் என்னவென்று கேட்க அவனோ அவளை அவுட்
ஹவுசிற்கு போகச் சொல்லிவிட்டு தான்
நீரஜாட்சியை
அழைத்து வருவதாகக் கூற அவள் தயங்கினாள்.
அவன் சிரிப்புடன் "உன் தங்கையை நான் ஒன்னும் கடிச்சு முழுங்கிட
மாட்டேன். இன் ஃபேக்ட் நான் தான் அவளண்ட பேச
பயப்படணும்" என்றுச் சொல்ல அவளும் சரியென்று தலையாட்டி விட்டு அவுட் ஹவுஸை நோக்கி நடையைப் போட்டவள்
தோட்டத்து வலது பக்க ஊஞ்சலில் அவள்
படுத்துக்
கொண்டிருப்பதை ஒரு பெருமூச்சோடு பார்த்துவிட்டு சென்றாள்.
ரகுநந்தன் ஹாலின் விளக்கை அணைத்துவிட்டு தோட்டத்தில் எரியும்
குழல்விளக்குகளில் ஒளியில் பாதையில்
கண்
பதித்து நடந்தபடி ஊஞ்சலை அடைந்தான். அங்கே சொகுசாகப் படுத்தபடி விழிமூடி பாடல் கேட்டுக்
கொண்டிருந்தவளைக் கண்டதும் ஏனோ அவனுக்கு சிரிப்பு தான் வந்தது.
படுத்திருப்பவளின்
தலையில்
செல்லமாகத் தட்டிவிட்டு "கொஞ்சம் எழுந்திருடி. நானும் உக்காரணும்" என்றுச் சொல்ல அவளோ திடீரென்று யாரோ
தலையில் தட்டியதில் பதறியடித்து எழுந்தாள். தன் எதிரே
நிற்பவனைக் கண்டதும் பார்வையாலே அவள் எரிக்க அவன் நகர்ந்து அமருமாறு சைகை காட்டவும்
முடியாதென்று பிடிவாதமாக அதே இடத்தில்
அமர்ந்திருந்தாள்.
அவள் காதில் மாட்டியிருக்கும்
ஹெட்போனை பிடுங்கியவன் கையோடு அவள் மொபைலையும் பிடுங்கிக் கொள்ள நீரஜாட்சி "மரியாதையா என்
போனை குடுத்துடு" என்றாள் அவளது மூன்றாவது கண்ணை திறக்காத குறையாக.
அவன் இலகுவான குரலில்
"அப்போ
நீயும் கொஞ்சம் நகர்ந்து உக்காரு. இல்லனா நான் உன் மடியில தான் உக்கார வேண்டியதா இருக்கும்"
என்றபடி அவளை நெருங்க அவள் சட்டென்று நகர்ந்து அவன் உட்கார இடமளித்தாள். தன் அருகே
அமர்ந்தவனிடம் "என் போனை குடு" என்று கேட்டாள் அவன் முகத்தைப் பார்க்காமலே.
"மேடம் செம கோவத்துல இருக்கா போல" என்று வாய்க்குள்
முணுமுணுத்த ரகுநந்தன் "நீ என்னை நேருக்கு நேரா பார்த்துக் கேட்டா உன் போன் உன்
கைக்கு வர வாய்ப்பு இருக்கு" என்க அவளும்
அவன் புறம் திரும்பி கையை நீட்டியபடி போனை கேட்க அவன் பாக்கெட்டிலிருந்த போனை எடுத்து அவள்
கையில் வைத்தான்.
அது கைக்கு வந்ததும் எழுந்து
ஓட தயாரானவளை அவன் வளைத்துப் பிடித்து தன் கரவளையத்துக்குள் அமர வைத்தது நீரஜாட்சிக்கு ஏதோ கனவு போலவே
தோன்றியது. ஆனால் இன்னும் அவனது ஒரு
கரம்
அவளது இடையை வளைத்திருக்க குறுகுறுப்பாக உணர்ந்தவள் அவனை முறைத்தவாறே "முதல்ல கையை எடு" என்க அவன்
மாட்டேன் என்று இடவலமாக ஆட்டினான்.
"உனக்கு எங்கே இருந்து இவ்ளோ தைரியம் வந்துச்சு நெட்டைகொக்கு? " என்றபடி அவன் கழுத்தைச் சுற்றியிருந்த மற்றொரு கரத்தை விலக்க
முயன்றவளைச் சமாளித்தபடியே அவளிடம்
பேச
முயன்றான் ரகுநந்தன்.
"எல்லாம் லண்டன்ல
இருந்து தான் வந்துச்சுடி. அங்கே ஓவரா அழிச்சாட்டியம் பண்ணுறவாளை இப்பிடி தான்
கண்ட்ரோல் பண்ணுவா" என்றுச் சொல்ல
நீரஜாட்சி கடுப்புடன்
"இப்போ
நீ மட்டும் கையை எடுத்துட்டு என்னை விடலனு வையேன் நான் சத்தம் போட்டு பத்து மாமியை
எழுப்பிடுவேன்" என்று அவனை மிரட்ட அவன் அதற்கு உரக்கச் சிரித்துவிட்டான்.
"அஹான்! கூப்பிடு. லண்டன்ல ஓவரா சத்தம் போடுறவாளோட வாயை
அடைக்கறதுக்கு ஒரு மெத்தட் யூஸ் பண்ணுவா. நான் அதுல
எக்ஸ்பர்ட். நீ இப்போ கத்துனேனு வையேன், நான் அந்த டெக்னிக்கை இங்கே யூஸ் பண்ண
வேண்டியிருக்கும். எப்பிடி வசதி?" என்று புருவம் உயர்த்தி வினவியவனை புரியாமல் பார்த்து வைத்தாள்.
பின்னர் யோசித்தவள் அது என்ன
டெக்னிக் என்று புரிந்ததில் அவனை நம்ப முடியாமல் பார்க்க ரகுநந்தன் குறும்புடன் அருகில் வரவுமே தனது வாயை
கரங்களால் பொத்திக் கொண்டாள்.
"சோ நான் சொன்ன
டெக்னிக் உனக்கு என்னன்னு
தெரிஞ்சு போயிடுத்துல்ல. இனி நான் பேசி முடிக்கற வரைக்கும் மூச்" என்று எச்சரித்தவன் அவளை தன்
கை வளைவுக்குள் இருந்து மட்டும் விடவில்லை.
பொறுமையாக அவளைப்
பார்த்தவன்
"லிசன்! இங்கே ஏகப்பட்ட விஷயங்கள் நடந்திருக்கலாம். அது எல்லாமே உன் மனசுல நம்ம குடும்பத்தைப் பத்தி
உனக்கு தவறான அபிப்பிராயங்கள் வர காரணமாயிடுத்துனு
எனக்கு புரியறது. ஆனா இந்த ஆத்துல அம்மா, ஹர்சாவைத் தவிர மத்த எல்லாருக்கும் உன் மேலேயும், கிருஷ்ணா மேலேயும் உயிர் தெரியுமா? நீ என்கேஜ்மெண்டுல இருந்து பாதியில போனதும்
பாட்டி, தாத்தா, சித்தினு எல்லாரும் பரிதவிச்சு போயிட்டா.
மைத்திக்கா புலம்பித் தள்ளிட்டா. ஏதோ
சிலருக்காக
நீ ஏன் உன் மேல அன்பா இருக்கிறவங்களை கஷ்டப்படுத்துற? கிருஷ்ணா அவ வயசுக்கு மேல பொறுப்பா
நடந்திருக்கிறா. உன் அக்காவை மதிக்கலங்கிற உன்னோட ஆதங்கம் நியாயமானது. ஆனா உன்னோட கோவம்
உன் அக்காவையும் பாதிக்குங்கிறதை நீ
எப்போ
உணர்ந்துக்கப் போற?" என்று வினவ
நீரஜாட்சிக்கு அவன் சொன்னபடி தனது கோபம் தன்
உயிரானவர்களையும் பாதித்திருக்கிறது என்று அப்போது புரிந்தது.
அவன் சொன்னதை அவள்
அமைதியாகக்
கேட்டுக் கொண்டதிலிருந்தே அவள் அவனது அறிவுரையை ஏற்றுக் கொண்டாள் என்பதை புரிந்து கொண்டான்
ரகுநந்தன். வாஞ்சையுடன் அவளைப் பார்த்தபடியே
"எல்லாரும் உன் அக்காவை கஷ்டப்படுத்துறாங்கன்னு நீ கோவப்படுற. ஆனா உன் கோவம் மத்தவங்க குடுக்கிற
கஷ்டத்தை விட உன் அக்காவை ரொம்ப பாதிக்கும். அதைப்
புரிஞ்சுக்கோ நீரு. கல்யாணத்துக்கு வருவ தானே?"
என்று அவள் விழிகளை எதிர்ப்பார்ப்போடு ஏறிட
அவள் ஆமென்று தலையசைக்கவும் ரகுநந்தனின் இதழில்
புன்னகை மலர்ந்தது.
நீரஜாட்சி அவன் அசந்த நேரம்
அவனது கைகளை விலக்கிவிட்டு எழுந்து நின்று கொண்டவள் "எல்லாம் சரி தான். ஆனா நீ சொன்னதுல ஒரு சின்ன
கரெக்சன் இருக்கு. பத்து மாமி, அவங்க மூத்த பிள்ளை மட்டுமில்ல உனக்கும் தான்
எங்க ரெண்டு பேரையும் ஆகாது. அவசரத்துல நீ உன்
பேரைச் சேர்க்க மறந்துட்டியா?" என்று ஏற்கெனவே
அவனுக்கும் கிருஷ்ணஜாட்சிக்குமான
உறவில் பத்மாவதிக்கு இருக்கும் சந்தேகத்தையும் தெளிவுபடுத்திக் கொள்வதற்காக வினவ
ரகுநந்தன் பொய்யாக வாயைப் பொத்தியபடி
ஆச்சரியப்பட்டான்.
"ஆமால்ல! இதை நான்
எப்பிடி மறந்தேன்?" என்று அவன் கேட்க
அவள் ஏளனமாக உதட்டை வளைத்தாள்.
ரகுநந்தன் குறும்புடன் அவளைப்
பார்த்தபடியே "ஆக்சுவலா எனக்கு இன்னையில இருந்து தான் உங்களை பிடிக்க ஆரம்பிச்சது. ஈவ்னிங் இந்த
கார்டன்ல நடந்துச்சே ஒரு சீன். அடடா!
அதை
வார்த்தையால சொன்னா ஃபீலே இருக்காது. அந்த ஆரஞ்ச் கலர் பேக்கிரவுண்ட்ல நீ என்னை பார்க்க நான் உன்னைப் பார்க்க
நீ மெய் மறந்து என்னை ரசிக்க அது ஹெவன்லி ஃபீல்
தெரியுமா?" என்று கேலி செய்ய
நீரஜாட்சி பதறிப்
போனவளாய்
"நோ நோ! நீ நினைக்கிற மாதிரி இல்ல. நீ இன்னைக்குப் பார்க்க கொஞ்சம் நல்லா இருந்தனு தான்
பார்த்தேன். மத்தபடி ஒன்னும் இல்ல" என்று வேகமாக விளக்கம் அளித்தாள்.
அவனோ "ம்ஹூம்! நீ பொய் சொல்லுற நீருகுட்டி! இவ்ளோ நாள் எனக்கே
கொஞ்சம் தயக்கமா தான் இருந்துச்சு.
ஆனா
இன்னைக்கு ஈவ்னிங் இன்சிடெண்டுக்கு அப்புறம் எல்லா தயக்கமும் ஓடிப் போச்சு" என்றபடி கண்ணை மூடி அந்த
நொடிகளை மீண்டும் நினைவுக்குக் கொண்டு
வந்தான்.
அவனது முகபாவத்தைக் கண்டவள்
"ஆஹா! இது சரியில்ல நீரு. இவன் என்ன தான் நினைச்சிட்டிருக்கானு புரியலையே. எதுவா இருந்தாலும் பத்து
மாமியை மனசுல வச்சிக்கோ" என்று
தனக்குள்
சொல்லிக் கொண்டாள்.
பின்னர் சத்தமாக "நீ இப்பிடியே பைத்தியமாட்டம் உலறிட்டே இரு.
நான் போய் தூங்கப் போறேன்" என்றுச் சொல்லிவிட்டு
அவுட் ஹவுஸை நோக்கி ஓட்டம் பிடித்தாள். ரகுநந்தன் அவள் வேகமாகச் செல்வதைக் கண்டுவிட்டு
"நீ போய் நிம்மதியா தூங்கப் போற. எனக்கு இன்னைக்கு நடந்த இன்சிடெண்டால தூக்கம்
போச்சேடி" என்று ரசனையுடன் சொல்லிவிட்டு வீட்டை
நோக்கி நடைப்போட்டான்.
நீரஜாட்சி அவுட்
ஹவுஸினுள்
நுழைந்து கதவினை தாளிட்டவள் கிருஷ்ணஜாட்சியின் அறைக்குள் சென்று பார்க்க அவள் அன்றைய வேலைக்களைப்பில்
அசந்து உறங்கிக் கொண்டிருந்தாள். அவள்
அருகே
சென்றவள் "இனிமே என் கோவத்தால உனக்கு எந்த தர்மசங்கடமும் வராது கிருஷ்ணா. அந்த நந்து சொன்ன மாதிரி இனிமே உன்னை
கஷ்டப்படுத்த மாட்டேன்" என்று சொல்லிவிட்டு
அக்காவுக்கு போர்வையைப் போர்த்திவிட்டு தனது அறையை நோக்கிச் சென்றாள்.
விளக்கை அணைத்துவிட்டுப் படுத்தவளுக்கும் அன்றையை மாலை நிகழ்வு
மனதை நிரண்ட "நீரு! இந்த நந்துக்கு என்ன
தான் ஆச்சு? அவனை விடு. எனக்கு
என்ன ஆச்சு? எனக்கு தான் அவனைக் கண்டாலே பிடிக்காதே! ஆனா நான் எப்பிடி
சாயந்திரம் அவனைப் பார்த்து மெஸ்மரைஸ் ஆகி
நின்னேன்? தேவை இல்லாம் நான்
அப்பிடி நடந்துகிட்டதால எதும் பிரச்சனை வருமோ? அவன் வேற இனிமே தயக்கம் இல்லனு
சொல்லிட்டுப் போறான்! என்ன தயக்கம்? ஐயோ பெருமாளே, எனக்கு ஏதோ ஆயிடுச்சு. என்னை
எப்பிடியாச்சும் காப்பாத்துங்க"
என்று சத்தமாகவே வேண்டிக் கொண்டாள்.
தனது ரட்சகனிடமிருந்தே தன்னைக் காக்க கடவுளை வேண்டிக் கொண்டவள் பின்னர் தூக்கத்தை வரவழைக்க முயற்சி செய்து சிறிது நேரத்தில் அதில் வெற்றியும் பெற்றாள்.
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ReplyDeleteபூங்காற்றிலே உன் சுவாசம்..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 20)
ஆனாலும், இந்த நீருவுக்கு மூக்குக்கு மேல கோபம் வருதுப்பா. ஒரு வேளை, இடுப்புக்கு கீழ மச்சம் இருக்குமோ...?
ஹர்ஷா, உன்னோட நிலைமை இப்படி மதில் மேல் பூனையா இருக்க வேண்டாம்.
அது சரி, அந்த சாயங்கால வேளையில ரகு & நீரு ரெண்டு பேரும் சொக்கிப் போனது உண்மைத்தானே....?
😀😀😀
CRVS (or) CRVS 2797