அன்பு 8

Image
  “புதியவுறவு முகிழ்த்ததும் பழைய கசடுகள் அகலுமா? கருவில் உருவான சிறுவுயிரே நீ மட்டுமே அறிவாய் இவ்வுறவு தொடருமா முடியுமா என்பதை. மகப்பேறு மருத்துவரின் அறையில் அமர்ந்திருந்தனர் சாந்தனுவும் சம்விருதாவும். கருவுற்றிருப்பதற்கான சோதனைகள் அனைத்தும் முடிவடைந்து மருத்துவர் என்ன முடிவை அறிவிக்கப் போகிறாரோ என்ற பரபரப்பு அவர்கள் இருவரையும் சூழ்ந்திருந்தது. சோதனைகள் முடிவடைந்ததும் அவர்களை அழைத்த மருத்துவர் சம்விருதா கருவுற்றிருப்பதாக அறிவிக்கவும் இருவரும் முதலில் எப்படி எதிர்வினையாற்றுவது என்று அறியாது தவித்தனர். “ட்வெல்த் வீக் வரைக்கும் உங்களுக்குச் சின்ன சந்தேகம் கூட வரலையா?” சம்விருதா இல்லையென தலையாட்டியவள் “நான் எக்சாமுக்கு டே அண்ட் நைட் படிச்சதால தான் டயர்ட்னெஸ் வருதுனு நினைச்சுட்டேன் டாக்டர்” என்றாள். “இட்ஸ் ஓ.கே... தேர்ட் மன்த் போட வேண்டிய வேக்சினை போட்டுடுங்க... அல்ட்ரா சவுண்ட் பாத்ததுல பேபி க்ரோத் கரெக்டா இருக்கு... சோ நான் அயர்ன் அண்ட் கால்சியம் டேப்ளட் மட்டும் எழுதித் தர்றேன்... அப்புறம் இது என்.டி ஸ்கேன் எடுக்க வேண்டிய டேட்... இன்னும் டூ வீக்ஸ்ல நீங்க எடுக்கணும்” மருத்துவர

அன்பு 1

 



“அன்றில் பறவைகளாய் திரிந்த நம்மை திக்குக்கொன்றாய் நிற்க வைத்தது காலம் தானோ! காலத்தின் பரமபதத்தில் வெட்டுண்டு நின்ற காதல் சிப்பாய்கள் நாம்!

செங்கோட்டை, தென்காசி மாவட்டத்திலுள்ள பேரூராட்சி வகையறாவைச் சேர்ந்த ஊர். எங்கு நோக்கினும் இயற்கையன்னையின் எழில் குறையாத பகுதி. ஒரு காலத்தில் திருவாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்து விடுதலைக்குப் பிறகு தமிழ்நாட்டுடன் இணைந்த ஊர்.   

கிட்டத்தட்ட இருபத்தாயிரம் மக்களைக் கொண்ட அவ்வூரில் சிவன் கோவில் சன்னதியில் இருக்கும் நீலகண்டனின் இல்லம் விழா கொண்டாட்டத்தில் திளைத்துக் கொண்டிருந்தது. அவரது மனையாள் பார்வதி பூரிப்பின் மொத்தவுருவாய் வலம் வந்தவர் தனது இரு மருமகள்களை அழைத்துக்கொண்டு குலசேகரநாதரைத் தரிசிக்க கோவிலுக்குச் சென்றிருந்தார்.

மக்கட்செல்வத்தை இத்தம்பதியினருக்குக் காசி விஸ்வநாதர் குறையற அருளியிருந்தார் எனலாம். உமாதேவி, அஞ்சனாதேவி, செண்பகாதேவி என மூன்று மகள்களும், இவர்களுக்கெல்லாம் மூத்தவராக விஸ்வநாதனும் மூன்று பெண்களுக்கு இளையவராக குலசேகரநாதனுமாக இரு    மகன்களும் அவர்களின் புத்திர செல்வங்கள்.

பெண்கள் மூவரையும் திருநெல்வேலி, இலஞ்சி, தென்காசி என அருகிலேயே திருமணம் செய்து கொடுத்த அத்தம்பதியினர் மகன்களின் குடும்பத்தோடு வாழ்ந்து வந்தது செங்கோட்டையில் தான்.

மர ஆலைகள் நிறைந்த செங்கோட்டையில் சிரஞ்சீவி சாமில்லில் கணக்கராக இருந்து ஓய்வும் பெற்றவரின் நேர்மைக்காக சாமில்லின் உரிமையாளர் அவருக்கென வாங்கிக் கொடுத்த இல்லம் தான் சிவன் கோவில் சன்னதியில் இப்போது கலகலப்பில் மூழ்கியிருந்தது.

காரணம் நீலகண்டனின் இளைய மகன் குலசேகரநாதனின் புத்திரன் அதர்வாவின் திருமணம். மணமகள் அஸ்வதியின் தந்தை தென்காசியில் சொந்தமாக வணிக வளாகம், சூப்பர் மார்க்கெட் வைத்திருக்கும் பெருந்தனக்காரர்.

பெண்ணும் வழக்கமான தமிழ்நாட்டு பொறியியல் பட்டதாரிகளைப் போல பன்னாட்டு மென்பொருள் நிறுவனம் ஒன்றில் மென்பொறியாளராகப் பணியாற்றுகிறாள். அதர்வாவும் அதே நிறுவனத்தில் தான் டீம்லீடராகப் பணியாற்றுகிறான். பணியிடத்தில் அறிமுகமானவர்களின் பழக்கம் நட்பில் ஆரம்பித்து காதலாய் முகிழ்ந்து இன்று கல்யாணத்தில் கனியவிருக்கிறது.

காதல் திருமணம் என்றதும் முதலில் யோசித்த இரு வீட்டாரும் பின்னர் ஒருவரை பற்றி மற்றொருவர் விசாரித்து அறிந்ததும் தயக்கமின்றி சம்பந்தம் பேசி முடித்தனர். நிச்சயதார்த்தம் இனிதே நிறைவுற்று திருமணநாளும் அருகே வந்துவிட அதற்கான சடங்குகள் ஆரம்பித்துவிட்டன.

அன்றைய தினம் தாலிக்குப் பொன்னுருக்கும் வைபவம் மாப்பிள்ளை வீட்டில் நடைபெறவிருந்தது. அதற்கான ஏற்பாடுகள் முடிந்திருக்க தாலி செய்வதற்கான தங்க நாணயத்தை குலசேகரநாதர் சன்னதியில் வைத்து பூஜை செய்து வாங்கி வருவதற்காக தான் பார்வதி தனது மருமகள்களை அழைத்துச் சென்றிருந்தார்.

வீட்டில் மிச்சமிருப்பவர்கள் ஆண்களும் நீலகண்டனின் மூன்று புத்திரிகளும் அவரது பேரப்பிள்ளைகளும் மட்டுமே.

அவரது மூன்றாவது மகளான செண்பகாதேவி தந்தைக்குக் காபி கொண்டு வந்து நீட்டியவர் தனது மைந்தனிடம் காலை மற்றும் மதியவுணவு வரவில்லையே என விசாரித்தார்.

“இப்ப தான் கால் பண்ணுனேன்மா... வந்துக்கிட்டே இருக்காங்களாம்” என்று பொறுப்பாக பதிலளித்த அவரது மைந்தன் சுனில் அவனது பெரியம்மா மகன்களான விமல் மற்றும் கமல் என்ற இரட்டையர்களுடன் பெண் வீட்டாரை வரவேற்க வேஷ்டி சட்டையில் தயாராகி நின்றிருந்தான்.

மணமகனின் தந்தை குலசேகரநாதனும் பெரியப்பா விஸ்வநாதனும் தங்களது இல்லத்து மாப்பிள்ளைகளும் தமக்கைகளின் கணவர்களுமான சங்கரநாராயணன், குருநாதன் மற்றும் தியாகராஜனுடன் சேர்ந்து ஹாலில் ஜமக்காளத்தை விரித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் ஐவரும் வயதில் ஒத்தவர்கள் இல்லை தான். ஆனால் சொந்தத்தைத் தாண்டியும் நட்பால் உரிமையாய் பெயர் சொல்லி அழைத்துக் கொள்வது வழக்கம்.

“இன்னும் ஆசாரி வரலையே விஸ்வா?” இது தியாகராஜன்.

“நானும் குருவும் நேத்து சாயங்காலமே போய் பார்த்துட்டு வந்தோம்... நல்ல நேரத்துக்கு இன்னும் டைம் இருக்குப்பா... வந்துடுவார்” என்றார் விஸ்வநாதன்.

“அப்பிடியும் வரலைனா மாப்பிள்ளையோட அப்பாவை வச்சு குண்டுகட்டா தூக்கிட்டு வரச் சொல்லிட வேண்டியது தான்” என்று கேலி செய்தபடி ஹாலில் விளக்கு, மனைப்பலகையைக் கொண்டு வந்து வைத்தார் குருநாதன்.

ஆனால் குலசேகரனோ “எல்லாம் சரி தான்... ஆனா சாந்தனு இன்னும் வரலையேண்ணா! அதர்வாக்கு அவன் இன்னும் வரலையேனு டென்சனா இருக்குதாம்” என்று விஸ்வநாதனிடம் வினவினார்.

சாந்தனு வேறு யாருமல்ல, விஸ்வநாதனின் புதல்வன். நீலகண்டன் பார்வதி தம்பதியினரின் மூத்த பேரன். அவனுக்கு இளையவளான சஹானாவை திருநெல்வேலியில் மணமுடித்துக் கொடுத்திருந்தனர். இப்போது நான்கு மாதம் கருவுற்றிருப்பதால் வீணாக அலைய வேண்டாமென அவளை இந்நிகழ்வுக்கு அழைக்கவில்லை.

சாந்தனுவின் பெயரைக் கேட்டதுமே விஸ்வநாதனின் முகம் களையிழந்துவிட்டது. இதை மற்றவர்கள் கவனிக்கும் முன்னர் தியாகராஜன் கவனித்துவிட்டார்.

மெதுவாக அவர் பக்கம் நகர்ந்தவர் “விஸ்வா நல்ல காரியம் நடக்கப் போறப்ப ஏன் டல் ஆகுற? வருத்தப்படாதப்பா... இன்னைக்கு நடக்குற நல்ல விசயம் நம்ம பசங்களுக்குள்ளவும் மாற்றத்தை உண்டு பண்ணும்னு நம்புவோம்” என்றார்.

விஸ்வநாதனோ “ஒரு மாற்றமும் வராது தியாகு... எல்லாம் நம்ம பண்ணுன தப்பு... அடிச்சு வளர்க்காத பிள்ளை தறுதலைனு சும்மாவா சொன்னாங்க? தாத்தா செல்லம் பாட்டி செல்லம்னு வளர்ந்து இன்னைக்கு இந்த நிலமைல வந்து நிக்குது” என்றார் கசப்புடன்.

இவர்கள் இருவரும் தனியே பேசுவதை மற்ற நால்வரும் கவனிக்க ஆரம்பிக்கவும் தியாகராஜன் விஸ்வநாதனின் கரத்தைக் குறிப்பாக அழுத்த அவர் இயல்பானார்.

குருநாதன் உரத்தக் குரலில் “விமல் கமல் சுனில்! மூனு பேரும் கேட்டரிங்காரங்களை சாப்பாட்டை அடுக்களையில வைக்க சொல்லுங்கடா... அப்பிடியே மதிய சாப்பாடு டைமுக்கு வரணும்னு சொல்லிடுங்க” என்று கட்டளையிட அவர்கள் பரபரவென இயங்க ஆரம்பித்தனர்.

இவ்வளவையும் வேடிக்கை பார்த்தபடி காபியை அருந்திய நீலகண்டன் செண்பகாதேவியிடம்

“சம்மு குட்டி எங்க செண்பா? சத்தமே இல்ல” என்று விசாரிக்க

“உங்க பேத்தி தானே! மாடில அவ ரூம்ல மகாராணியாட்டம் ரெஸ்ட் எடுத்துட்டிருக்கா... பொண்ணா லெட்சணமா எங்களுக்குக் கூடமாட உதவாம என்ன தான் பண்ணுறாளோ?” என்று நொடித்துக் கொண்டார் செண்பகாதேவி.

அவரது வெண்கலக்குரலில் மாடியறையில் அமைதியே உருவாக அமர்ந்து புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்த சம்விருதா கவனம் கலைய எரிச்சலாய் கத்தினாள்.

“ஏன்மா இப்பிடி லவுட் ஸ்பீக்கர் மாதிரி கத்துற? நான் என்ன டெல்லியிலயா இருக்கேன்? நீ இருக்குற அதே வீட்டோட மாடில தானே இருக்குறேன்”

முகத்தைச் சுருக்கிக் கொண்டு குறைபட்டவளுக்குக் கீழ்த்தளத்தில் அவளது அன்னை நொடித்துக் கொள்வது கேட்டது.

“க்கும்! பொழுதன்னைக்கும் புக்கை தூக்கி வச்சிட்டு உக்காந்துடு... இல்லனா அந்த லேப்டாப்பை மடியில வச்சுக்க... என்ன நேரத்துல உன்னைப் பெத்தேனோ?”

“ஏன் செண்பா படிக்குற பிள்ளைய திட்டுற? அதான் வீட்டுல இத்தனை பேர் இருக்கோமே... நம்ம வேலைய செய்யமாட்டோமா? நாளைக்கே அவ ஆடிட்டர் ஆனதுக்கு அப்புறம் எல்லாரும் உன்னைத் தானே ஆடிட்டரோட அம்மானு பெருமையா பேசுவாங்க”

தாத்தா தனக்காக பேசவும் சம்விருதாவுக்கு மகிழ்ச்சி.

“சி.ஏ. சம்விருதா”

சொல்லும் போதே நாக்கு தித்தித்தது.

“ப்ச்! அதை விட சம்விருதா சாந்தனுனு சொல்லிப் பாரு... இன்னும் ஸ்வீட்டா இருக்கும்”

கண்ணைச் சிமிட்டியபடி மனக்கண்ணில் வந்து சென்றான் அவன். உடனே இவ்வளவு நேரம் உதட்டில் உறைந்திருந்த முறுவல் அகன்று இறுக்கத்தைக் கவசமாக்கிக் கொண்டது சம்விருதாவின் வதனம்.

அவனைப் பற்றி நினையாதே மனமே! நொடிக்கொரு முறை அதை மந்திரம் போல சொல்லிக்கொண்டு மீண்டும் புத்தகத்தில் புதையுண்டாள் சம்விருதா.

அதே நேரம் குலசேகரநாதர் கோவிலில் அதர்வாவின் பொன்னுருக்கு வைபவத்திற்கான தங்க நாணயத்தை சிவபெருமானிடம் வைத்து பூஜை செய்துவிட்டு நீட்டினார் அர்ச்சகர்.

அதை பெற்றுகொண்ட பார்வதி அவர் நீட்டிய விபூதியை நெற்றி நிறைய பூசிக்கொண்டார். அருகே நின்றிருந்த மருமகள்களும் அவ்வாறு செய்ய அவர்களில் மூத்த மருமகளும் திருமதி விஸ்வநாதனுமான கோமதி தனது மைந்தனுக்காக குலசேகரநாதரிடம் வேண்டிக்கொண்டார்.

“அசட்டுத்தனமா அவன் எடுத்த முடிவை நீங்க தான் மாத்தணும் எம்பெருமானே! என் பிள்ளை சந்தோசமா இருக்கணும்”

அருகே நின்றிருந்த அவரது ஓரகத்தி சிவசங்கரி “என்னக்கா வேண்டுதல் பலமா இருக்கு? பேரனா பேத்தியா?” என்று வினவ

“பேரனோ பேத்தியோ எதுவா இருந்தாலும் அது நம்ம ரத்தம் தானே... புதுசா வரப் போற அந்த உறவுக்காக தான் நானும் ரெண்டு வருசமா காத்திருக்குறேன் சங்கரி” என பதிலளித்த கோமதி தனது மனவாட்டத்தை மறைத்துப் புன்னகைத்தார்.

பொன்னுருக்கு நிகழ்வுக்கான தங்கநாணயத்துடன் கோவிலை விட்டுக் கிளம்பினர் மூவரும். தெருவில் நடக்கும் போதே வீட்டு முற்றங்களில் போடப்பட்டிருந்த செம்மண் காவி அலங்காரத்துடன் கூடிய கோலங்கள் லட்சுமிகரமாக மின்னின.

மூவரும் வீட்டை அடைந்த போது பொன் ஆசாரி வந்திருந்தார். நீலகண்டனின் பேரன்கள் காலையுணவை அடுக்களையில் அடுக்கி வைத்திருப்பதாக கூறவும் பார்வதி அவர்களுக்கு நெட்டி முறித்து திருஷ்டி கழித்தார்.

“எனக்குலாம் திருஷ்டி கழிக்க மாட்டிங்களா ஆச்சி?”

கேள்வியுடன் அங்கே உதயமானான் அதர்வா. மணமகனான அவனது விழிகளில் சந்தோசம் பொங்கி வழிந்தது.

அதை கண்டதும் கோமதியின் நெஞ்சம் ஒரு கணம் ஈராண்டுகளுக்கு முந்தைய நினைவுகளை அசை போட துவங்கியது. அன்று சாந்தனுவும் இவ்வளவு மகிழ்ச்சியாகத் தானே இருந்தான்.

எங்கே தவறு நேர்ந்தது? எவ்வளவோ யோசித்தும் புரியவில்லை. அதர்வா உதிர்த்த சாந்தனு என்ற பெயர் அவரை நிகழ்காலத்துக்குக் கொண்டு வந்தது.

“சாந்தனு அண்ணாக்காக வெயிட்டிங்... பட் அவர் ஹைட் அண்ட் சீக் ஆடுறாரே”

“வந்துடுவான்டா... அவன் என்ன உன்னை மாதிரியா? பெரிய ஆட்டோமொபைல் கம்பெனில லீட் இன்ஜினியரா இருக்குறான்ல, எடுத்ததும் கிளம்ப முடியுமா?”

சிவசங்கரி மைந்தனிடம் கூற மாடியறையில் அமர்ந்திருந்த சம்விருதா கேட்டுக் கொண்டிருந்தாள்.

“என் ட்ரீம் ஜாப் இது... ஃபைனலி வாழ்க்கையில எதையோ பெருசா ஜெயிச்சிட்ட ஃபீல் சம்மு”

சிலாகித்தவனின் குரல் இன்னுமே காதில் ஒலித்தது அவளுக்கு.

“டேய் சாந்தனு வந்துட்டியா?”

சட்டென புத்தகத்தை மூடி வைத்தவளுக்குள் மெல்லிய பரபரப்பு.

“ஏன்ணா இவ்ளோ லேட்? உனக்காக எவ்ளோ நேரமா வெயிட் பண்ணுறேன் தெரியுமா?”

அதர்வாவும் கோமதியும் குதூகலிப்பது அவளது காதில் கேட்டது. அதை அடுத்து விமலும் கமலும் அத்தான் அத்தான் என ஆர்ப்பரிக்க அந்த ஆரவாரங்களுக்கிடையே அமர்த்தலாக ஒலித்தது சாந்தனுவின் குரல்.

“பஸ் கொஞ்சம் லேட்... ஜஸ்ட் அரைமணி நேரம் குடுங்க... நான் ரெடியாயிடுவேன்”

“சரி... மாடி ரூமுக்குப் போய் லக்கேஜை எல்லாம் வச்சுட்டு சீக்கிரமா குளிச்சுட்டு வேஷ்டி சட்டையோட வா” என்றார் கோமதி.

 “ஓ.கேம்மா” என்றபடி தடதடவென காலடிகளுடன் மாடிப்படிகளில் ஏறினான் சாந்தனு.

கதவைத் தட்டும் சத்தம் கேட்க தயக்கத்துடன் கதவைத் திறந்தாள் சம்விருதா.

அங்கே நின்று கொண்டிருந்தான் சாந்தனு. பின்னிருபதுகளில் ஒன்றை வயதாகக் கொண்ட இளைஞன். செய்யும் வேலைக்கேற்ற முதிர்ச்சி அவனது உடல்மொழியில் தெரிந்தாலும் இப்போது என்னவோ அலட்சியம் மட்டுமே சம்விருதாவின் கண்ணுக்குத் தெரிந்தது.

அடர்ந்த கேசமும், ட்ரிம் செய்யப்பட்ட தாடி மீசையும் அவனது தோற்றத்தை இன்னும் அழகாய் காட்டியது. பயணக்களைப்பு முகத்தில் அப்பியிருந்தாலும் அவனது இயல்பான துறுதுறு குணம் ஆங்காங்கே நானும் இருக்கிறேன் என அட்டெண்டன்ஸ் போட்டது. என்ன தான் மூக்குக்கண்ணாடி அவனை முதிர்ச்சியாய் காட்ட முயன்றாலும் அம்முயற்சி தோல்வியைத் தான் தழுவியது.

சம்விருதாவைப் பார்த்ததும் அந்த முகத்தில் கூடுதலாய் இன்னொரு விருந்தாளியும் வந்தமர்ந்தார். அது தான் இறுக்கம்.

“கதவைத் திறந்துட்டு வழிய மறிச்சு நின்னா என்ன அர்த்தம்? நான் இங்க உன் கூட தங்குறது உனக்குப் பிடிக்கலைனா பெரியவங்க கிட்ட சொல்லு... அதை விட்டுட்டு வழிப்பறிக்கொள்ளைக்காரன் மாதிரி குறுக்க நிக்காத”

இதை விட கடுமையாய் என்னால் பேச முடியாது என்ற ரீதியில் வந்து விழுந்தன வார்த்தைகள். அவை சம்விருதாவைக் கோபம் கொள்ள செய்தன.

“வந்ததும் ஆரம்பிச்சிட்டியா? உன் முகத்தைப் பார்க்காம இங்க நிம்மதியா இருக்கலாம்னு நினைச்சேன்”

அவனை விட கடுமையாய் மொழிந்தபடி வழி விட்டாள் சம்விருதா.

சாந்தனு “உனக்கு ரொம்ப அன்கம்பர்டபிளா இருந்துச்சுனா தாத்தா கிட்ட போய் சொல்லேன்” என்றபடி தனது உடைமைகளை வைத்திருந்த பேக்கிலிருந்து டவலை எடுத்தான்.

சம்விருதா அமைதியாக இருக்கவும் “சொல்ல முடியாதுல்ல? உனக்கு கிடைச்ச இளிச்சவாயன் நான் தான்... என் தலையில மிளகாய் அரைக்குறதுக்குத் தானே உனக்குப் பிடிக்கும்... அதர்வா மேரேஜ் முடியுற வரைக்கும் நீயும் நானும் ஒரே ரூம்ல தான் இருந்தாகணும் மிசஸ் சாந்தனு... நமக்குள்ள என்ன பிரச்சனை வேணும்னாலும் இருக்கலாம்... ஆனா நீயும் நானும் ஹஸ்பெண்ட் அண்ட் ஒய்ப் தான்... அதை நீயோ நானோ மாத்த முடியாது”

எள்ளல் தொனியில் சொல்லிவிட்டுக் குளியலறைக்குள் பதுங்கினான் அவன். ஆனால் அவன் கூறிய ‘மிசஸ் சாந்தனு’ என்ற சொல் சம்விருதாவுக்குள் பூகம்பத்தை உண்டாக்கியது.

Comments