அன்பு 8

 



“புதியவுறவு முகிழ்த்ததும் பழைய கசடுகள் அகலுமா? கருவில் உருவான சிறுவுயிரே நீ மட்டுமே அறிவாய் இவ்வுறவு தொடருமா முடியுமா என்பதை.

மகப்பேறு மருத்துவரின் அறையில் அமர்ந்திருந்தனர் சாந்தனுவும் சம்விருதாவும். கருவுற்றிருப்பதற்கான சோதனைகள் அனைத்தும் முடிவடைந்து மருத்துவர் என்ன முடிவை அறிவிக்கப் போகிறாரோ என்ற பரபரப்பு அவர்கள் இருவரையும் சூழ்ந்திருந்தது.

சோதனைகள் முடிவடைந்ததும் அவர்களை அழைத்த மருத்துவர் சம்விருதா கருவுற்றிருப்பதாக அறிவிக்கவும் இருவரும் முதலில் எப்படி எதிர்வினையாற்றுவது என்று அறியாது தவித்தனர்.

“ட்வெல்த் வீக் வரைக்கும் உங்களுக்குச் சின்ன சந்தேகம் கூட வரலையா?”

சம்விருதா இல்லையென தலையாட்டியவள் “நான் எக்சாமுக்கு டே அண்ட் நைட் படிச்சதால தான் டயர்ட்னெஸ் வருதுனு நினைச்சுட்டேன் டாக்டர்” என்றாள்.

“இட்ஸ் ஓ.கே... தேர்ட் மன்த் போட வேண்டிய வேக்சினை போட்டுடுங்க... அல்ட்ரா சவுண்ட் பாத்ததுல பேபி க்ரோத் கரெக்டா இருக்கு... சோ நான் அயர்ன் அண்ட் கால்சியம் டேப்ளட் மட்டும் எழுதித் தர்றேன்... அப்புறம் இது என்.டி ஸ்கேன் எடுக்க வேண்டிய டேட்... இன்னும் டூ வீக்ஸ்ல நீங்க எடுக்கணும்”

மருத்துவர் அடுத்தடுத்து செய்ய வேண்டிய சோதனைகளை அடுக்கிவிட்டு மாத்திரைகளை எழுதிக் கொடுக்க சாந்தனு அவற்றை வாங்கிக் கொண்டான்.

இருவரும் சேர்ந்து வெளியே வர அங்கே அவர்களுக்காக காத்திருந்த செண்பகாதேவியும் கோமதியும் ஆவலுடன் முடிவென்ன என்று வினவ “வீ ஆர் ப்ரெக்னெண்ட்” என்று மட்டும் கூறிய சாந்தனு மருந்து மாத்திரைகளை வாங்க சென்றுவிட சம்விருதா மட்டும் அவர்களோடு தனித்து விடப்பட்டாள்.

செண்பகாதேவியும் கோமதியும் தாங்கள் பாட்டி ஆன சந்தோசத்தை எண்ணிக் கொண்டாடுவதா அல்லது இளையவர்களின் பிடிவாதத்தைப் பற்றி எண்ணி வருந்துவதா என்பது அறியாமல் இரண்டுங்கெட்டான் மனநிலையில் இருந்தனர்.

சாந்தனு மருந்து மாத்திரையுடன் வரவும் பெண்கள் மூவரும் எதுவும் பேசாமல் அவனுடன் கிளம்பினர். வீட்டில் இருப்பவர்கள் மருத்துவமனைக்குச் சென்றவர்கள் என்ன தகவல் சொல்லப் போகிறார்கள் என ஆவல் ததும்ப காத்திருந்தனர்.

வீட்டை அடைந்ததும் இளையவர்கள் எதுவும் பேசாமல் அல்ட்ரா சவுண்ட் ரிப்போர்ட்டுடன் நிற்க செண்பகாதேவியும் கோமதியும் குழந்தையின் வரவைப் பற்றிய செய்தியை பெரியவர்களிடம் தெரிவித்தனர்.

நீலகண்டனும் பார்வதியும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பேரனையும் பேத்தியையும் ஆரத் தழுவி உச்சி முகர்ந்து தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டவர்கள் தங்களது வாழ்த்தைத் தெரிவிக்கவும் அனிச்சையாகப் புன்னகைத்தனர் சாந்தனுவும் சம்விருதாவும்.

“இன்னும் கொஞ்ச நாளுக்கு நீ கவனமா இருக்கணும் சம்மு... உடம்பை அலட்டிக்கக்கூடாது... செண்பாவும் கோமதியும் உன்னைய பார்த்துப்பாங்க... நீ இப்போதைக்குச் சென்னைக்குப் போகவேண்டாம்” என்று பார்வதி அடுக்கவும் சம்விருதாவின் பார்வை சாந்தனுவின் பக்கம் சென்றது.

அதைக் கண்டுகொண்ட பார்வதியோ “அவனை ஏன் பார்க்குற? கொஞ்சநாளுக்கு அவன் தனியா சமைச்சுச் சாப்பிட்டு சமாளிச்சிப்பான்... ஏன்டா கண்ணா நீ சமாளிப்ப தானே?” என்று கேட்க அவன் வேகமாக தலையாட்டினான்.

பின்னர் என்ன? பெரியம்மாக்கள் அத்தைகளின் அறிவுரை மழையில் சம்விருதா நனைய அஸ்வதி வந்த நேரம் வீட்டிற்கு வாரிசு வரவிருக்கிறது என்று பெரியவர்கள் பூரிக்க அவளுக்கும் மகிழ்ச்சி!

சம்விருதாவுக்கும் சாந்தனுவுக்கும் இடையே என்ன பிரச்சனையாக இருக்கும் என்று யோசித்த உமாதேவி கூட இது கணவன் மனைவிக்கிடையே நடந்தேறிய சிறிய பிணக்காக இருக்கக்கூடுமென எண்ணி புதுவரவை வரவேற்கும் உற்சாகத்தில் மூழ்கிப் போனார்.

இக்காட்சியை வேடிக்கை பார்த்தபடி நின்று கொண்டிருந்த சாந்தனுவை தியாகராஜனும் விஸ்வநாதனும் தனியே அழைத்துச் சென்றனர்.

அவன் என்னவென புரியாமல் விழிக்கையில் “என்னடா முடிவு பண்ணிருக்கீங்க?” என்று இறுக்கமாக வெளிப்பட்டது விஸ்வநாதனின் குரல்.

சாந்தனு திகைக்க தியாகராஜனோ “இதுல தனுவோட முடிவை மட்டும் கேட்டு என்ன ஆகப்போகுது விஸ்வா? என் பொண்ணு தானே பிரியுற முடிவை எடுத்தவ?” என்றார் கசந்த குரலில்.

“அவளை அந்த முடிவெடுக்குற நிலமைக்குக் கொண்டு வந்தவன் இவன் தானே?” என்றார் விஸ்வநாதன் குற்றம் சாட்டும் குரலில்.

தியாகராஜன் அவருக்குப் பதிலடி கொடுக்க நினைக்கையிலேயே “என் குழந்தைக்கு அம்மா அப்பா ரெண்டு பேரோட பாசமும் தேவைப்பா... சோ நான் டிவோர்ஸ் பண்ணுற முடிவை மாத்திக்கிட்டேன்” என்ற சம்விருதாவின் குரல் அவர்களின் கவனத்தைக் கலைத்தது.

மூவரும் திரும்பிப் பார்க்க தெளிவான முகத்துடன் அங்கே நின்று கொண்டிருந்தாள் சம்விருதா. அவர்களின் பேச்சு முழுவதையும் கேட்டிருப்பாள் போல!

அவளது பதிலில் பெரியவர்களிருவரும் நிம்மதி பெருமூச்சு விட சாந்தனுவோ புரியாத பார்வை பார்த்தான்.

விஸ்வநாதன் மருமகளை நெருங்கியவர் வாஞ்சையுடன் அவளது சிகையை வருடிக் கொடுத்தபடியே “எனக்குத் தெரியும்டா... நீ அவசரத்துல முடிவெடுக்குறவ இல்ல... ஆனா இந்த டிவோர்ஸ் முடிவுல உன் மேல எனக்குக் கொஞ்சம் வருத்தம் தான்... இப்ப அந்த வருத்தம் முழுசா கரைஞ்சிடுச்சுடா சம்மு... இன்னைக்குக் குழந்தைக்காக ஒன்னு சேர நினைக்குறவங்க சீக்கிரமே உங்களுக்காகவும் ஒன்னா சேர்ந்து வாழணும்னு ஆசைப்படுவீங்க... அது போதும் எங்களுக்கு” என்று கூறிவிட்டு தியாகராஜனை அழைத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட சம்விருதாவும் சாந்தனுவும் மட்டும் இப்போது அங்கே நின்றிருந்தனர்.

அவன் எங்கேயோ பார்த்து தனது குழப்பத்தை அவளிடம் காட்டிக்கொள்ளாது இருக்க முயல்வதை கண்டுகொண்டாள் சம்விருதா.

இப்போது கூட நடந்த எதற்காகவும் அவன் வருத்தப்படப்போவதில்லை போல. சிறிது நேரம் இவனைப் பார்த்துக்கொண்டே நின்றிருந்தால் இந்த அலட்சியபாவனையில் விவாகரத்து வேண்டாமென எடுத்த முடிவை மறுபரிசீலனை செய்யும் நிலைக்குத் தான் வந்துவிடுவோமோ?

பேச வேண்டியதை பேசிவிட்டு ஓடிவிடுவோம் என்று முடிவு செய்த சம்விருதா தொண்டையைக் கனைத்தாள். சாந்தனு அவள் புறம் திரும்பினான்.

இது தான் சரியான தருணமென எண்ணி தனது முடிவை மாற்றிக் கொண்டதற்கான காரணத்தை அவனிடம் விளக்க ஆரம்பித்தாள்.

“டிவோர்ஸ் வேண்டாம்னு நான் முடிவெடுத்தது என் குழந்தைக்காக தான்... ஆணோ பொண்ணோ அது அப்பாவோட அன்புக்காக பின்னாடி ஏங்கிடக்கூடாதுனு நினைச்சுத் தான் மனசை மாத்திக்கிட்டேன்... மத்தபடி எனக்குப் புருசன்ங்கிற உறவு எப்பவும் தேவைப்படாது... இன் ஃபேக்ட், இப்ப உன்னோட மனநிலையும் இப்பிடி தானே இருக்கும்... அன்னைக்கும் இன்னைக்கும் உனக்கு இருந்தது குழந்தை ஆசை மட்டும் தானே... சோ என்னோட இந்த முடிவுல உனக்கு எந்த அப்ஜெக்சனும் இருக்காதுனு நினைக்குறேன்... இனிமே உன்னை யாரும் ஆம்பளையானு கிண்டல் பண்ண மாட்டாங்க... ஊர் முன்னாடி நானும் ஆம்பளை தான்டா மார் தட்டிக்க உனக்கே உனக்குனு ஒரு குழந்தை வரப்போகுது... நான் ஜஸ்ட் அதை பெத்தெடுக்கப் போற டூல் மட்டும் தான்... சோ என் மேல எந்தப் பொய்யான பாசமும் கரிசனமும் காட்ட  வேண்டிய தர்மசங்கடம் உனக்கு வராது”

அவளது கடைசி வாக்கியத்தில் சாந்தனு அதிர்ந்தான். வழக்கம் போல அதிர்ச்சியை மறைத்துக் கொண்டவன் “குழந்தைக்காக யோசிச்சதுக்கு தேங்க்ஸ்... மத்தபடி எனக்கும் எந்தப் பழைய உறவையும் புதுப்பிச்சிக்க ஆசையில்ல” என்றான் நிதானமான குரலில்.

“பை த வே, நம்மளோட இந்த முடிவு பெரியவங்களுக்குத் தெரிய வேண்டாம்... ஆல்ரெடி நம்மளால அவங்க நிறைய மனவுளைச்சலுக்கு ஆளாகிட்டாங்க... ஜஸ்ட் இந்தச் சின்ன சந்தோசத்தை அவங்க அனுபவிக்கட்டும்”

“ம்ம்... சரி”

அவ்வளவு தான்! பேச்சுவார்த்தை முடிந்தது என்பது போல சம்விருதா இறங்கி சென்றுவிட சாந்தனு சிகையை அழுந்த கோதிக்கொண்டான்.

எவ்வளவு இனிமையான தருணம் இது. அவன் ஆசையாகக் காத்திருந்த தருணமும் கூட. ஆனால் அதை கூட மனைவியுடன் இனிமையாகப் பகிர்ந்து கொள்ள முடியாத இக்கட்டில் அவனை வாழ்க்கை நிறுத்தி வைத்து வேடிக்கை பார்க்கிறதே என மனதுக்குள் நொந்து கொண்டான்.

அதே நேரம் சம்விருதாவோ வரவிருக்கிற தேர்வு குறித்து என்ன முடிவெடுப்பது என்று புரியாமல் தனது அறைக்குள் அங்குமிங்குமாக நடந்து கொண்டிருந்தாள்.

யாரோ கதவைத் தட்டவும் “கதவு திறந்து தான் இருக்கு” என்றாள் அவள்.

கதவு திறக்கவும் உள்ளே வந்தவளைப் பார்த்து புன்னகைத்தாள் சம்விருதா. வந்தவள் அஸ்வதி.

“ஹாய் சம்முக்கா... கங்கிராட்ஸ்” என்று மனதாற வாழ்த்தியவள் அவளை இழுத்து கட்டிலில் அமர வைத்தாள்.

“ஏன் நிக்குறிங்க? உக்காருங்க”

சம்விருதா அமரவும் “ஏதோ யோசனையா இருக்கீங்க போல... இப்ப நீங்க பேபிய பத்தி மட்டும் தான் யோசிக்கணும்... ஃபீல் ஹேப்பி அக்கா” என்றாள் அவள்.

“வேற என்ன யோசனை அஸ்வதி? எக்சாம் வரப் போகுது... இப்ப மானிங் சிக்னெஸ் வேற ஆரம்பிச்சிடுச்சு... அதை மேனேஜ் பண்ணிட்டு என்னால ரெண்டு க்ரூப்பும் கிளியர் பண்ண முடியுமானு தெரியல” என்றாள் சம்விருதா.

அஸ்வதி அவள் கரத்தைப் பற்றிக் கொண்டவள் “அக்கா! வீட்டுல பெரியவங்க குடுத்த அட்வைஸை நினைச்சு பயந்துட்டிங்களா? ப்ரெக்னென்சில நீங்க உங்க உடம்பும் மனசும் சோர்ந்து போகாத அளவுக்கு என்ன வேலையா இருந்தாலும் செய்யலாம்... இப்ப நீங்க என்ன மாதிரி மனநிலைல இருக்கீங்களோ அதை தான் பேபி ஃபியூச்சர்ல ரிஃப்லெக்ட் பண்ணும்... இப்ப நீங்க உங்களை சுறுசுறுப்பா வச்சுக்கிட்டிங்கனா பேபியும் ஆக்டிவா இருக்கும்... ஹெல்தியா வளரும்... மானிங் சிக்னெஸ், பாடி பெயினை காரணம் காட்டி சோர்ந்து போய் ரெஸ்ட் மட்டுமே எடுக்காதிங்க... நீங்க ப்ரெக்னெண்டா தான் இருக்கீங்களே தவிர உங்களுக்கு சீரியஸான டிசீஸ் எதுவும் வந்துடல... சோ டோண்ட் கெட் பேனிக்... என்ஜாய் யுவர் ப்ரெக்னென்சி, அட் த சேம் டைம் டோண்ட் கிவ் அப் யுவர் ஸ்டடீஸ் அண்ட் ஆம்பிசன்” என்று கூற சம்விருதாவின் மனதுக்கு இதமாக இருந்தது.

“நீ இவ்ளோ தூரம் எக்ஸ்ப்ளெய்ன் பண்ணுனதும் எனக்கும் கொஞ்சம் ரிலாக்சா இருக்கு அஸ்வதி... கண்டிப்பா ப்ரெக்னென்சிய காரணம் காட்டி ஓவர் ரெஸ்ட்ல இருக்காம எக்ஸாமுக்குப் படிப்பேன்... இந்த குரூப்பை முடிச்சிட்டு சி.ஏ சம்விருதாவா தான் என் குழந்தை இந்த உலகத்துக்கு வர்றப்ப வரவேற்பேன்... சரியான நேரத்துல சரியான அட்வைஸ் குடுத்திருக்க.. தேங்க்ஸ்டா” என்ற சம்விருதா அவளை நட்போடு அணைத்துக் கொண்டாள்.

கூடவே பெரியவர்களிடம் உடம்பை அலட்டிக்கொள்ளாமல் குழந்தையின் வளர்ச்சியைப் பாதிக்காவண்ணம் படிப்பையும் தேர்வையும் கவனித்துக் கொள்வதாக அவள் கூறிவிட அவர்களும் சம்மதித்துவிட்டனர்.

ஆனால் சாந்தனு மட்டும் அரைமனதாக தலையாட்டி வைத்தான்.

“இப்ப கூட மேடம்கு எக்சாம் தான் முக்கியம்... எனக்கென்ன வந்துச்சு? நாலு நாள் வாமிட் பண்ணுனா அஞ்சாவது நாள் தானா நீ ரெஸ்ட் மோடுக்குப் போய்டுவ... அதுக்கப்புறம் எக்சாமாவது, மண்ணாங்காட்டியாவது” என்று அலட்சியமாக எண்ணிக்கொண்டான்.

குடும்பம் முழுவதும் ஜாதகத்தைக் காரணம் காட்டி அவர்களின் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த போது பிடிவாதமும் உறுதியுமாக நின்று தன்னை மணந்த சம்விருதாவின் மனவுறுதியை அக்கணம் அவன் குறைத்து எடை போட்டுவிட்டான் என்பதே உண்மை!

******

தண்பொருநை தீரத்தில் கதை நந்தவனம் நாவல்கள் சைட்ல முதல் எபி போட்டுட்டேன். படிக்காதவங்க கீழ உள்ள லிங்க் க்ளிக் பண்ணி படிக்கலாம்... தினமும் ஈவ்னிங் ஆறு மணிக்கு நந்தவனம் சைட்ல அந்தக் கதை அப்டேட் வரும்.... சைட்ல ரிஜிஸ்டர் பண்ணிக்கோங்க....

தண்பொருநை தீரத்தில் 1 | Nandhavanam Novels


உங்களுக்கு ஆடியோ நாவல்கள் கேட்க விருப்பம் இருந்தா நித்யா மாரியப்பன் ஆடியோ நாவல்கள் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க. தினசரி எபி அங்கயும் உண்டு.

சேனல் லிங்க்

https://www.youtube.com/channel/UCFlfX_bMcIls4bcByoYr4nw

ராகமஞ்சரி - முழு நாவல் ஆடியோ

https://youtu.be/CQBkj1-4KDM

கண்ணாமூச்சி ஏனடி ரதியே - முழு நாவல் ஆடியோ

https://youtu.be/xIdh2ePyH4s

கழிமுகம் - முழுநாவல் எழுத்து வடிவில்

https://youtu.be/vkLVbIyfV2c

மாயமித்ரா கதை ஆன்கோயிங்ல போகுது. ஆன்டிஹீரோ கதை விரும்பிகள் கேட்கலாம்.

https://www.youtube.com/playlist?list=PLilgo4TUH31Y28Lg4R5yQfciuRhRvdteV

Comments