அன்பு 7

 


“நெஞ்சில் நிரம்பிய நேசத்தில் ஒரு துளி கோபம் கலந்தேன். மொத்த நேசமும் துவேசமாய் மாறிப்போனது. மீண்டும் அந்நேசத்தை மீட்க எண்ணாது ஈகோவை ஆடையாய் தரித்துக் கொண்டது மூளை”

சம்விருதாவின் பேச்சனைத்தையும் ஒன்று விடாமல் கேட்டுவிட்டான் சாந்தனு. அவள் பேசியது அனைத்தையும் ஒப்புக்கொள்ள இப்போது கூட அவன் மனம் மறுத்தது.

ஏன் என்றால் சிறுவயதில் எத்தனையோ முறை தந்தை கோபத்தில் தாயாரை அறைவதைப் பார்த்திருக்கிறான் அவன். ஆனால் அவனது அன்னை ஒன்றும் அதற்காக அவரை விட்டு விலகிவிடவில்லை. நான்கைந்து நாட்கள் பேசாமலிருந்து விட்டு மீண்டும் சமாதானமாகிவிடுவது அவர்களின் வாடிக்கை.

எனவே கணவன் மனைவியை அறைவது மாபெரும் தவறு என்று அவனது புத்திக்கு இப்போது வரைக்கும் உறைக்கவில்லை. அவனைப் பொறுத்தவரை படிப்புக்காக குழந்தைப்பேற்றை தள்ளிப் போட சம்விருதாவுக்குக் கிடைத்த வாய்ப்பு தான் அந்நிகழ்வு.

தான் கோபத்தில் அறைந்ததை சாக்காக வைத்துக்கொண்டு படிப்புக்குத் தடையாக தானோ குழந்தையோ வந்துவிடுவோமென எண்ணித் தான் சம்விருதா விவாகரத்து முடிவுக்கு வந்திருக்கிறாள் என்பது அவனது ஊகம்.

அப்படி இல்லை என்று சொல்லி அவனுக்குப் புரியவைக்க சம்விருதாவின் ஈகோ இடமளிக்காது போய்விட ஆளுக்கொரு எண்ணப்போக்குடன் இருவரும் நிரந்தரமாகப் பிரியும் முடிவுக்கு வந்துவிட்டனர்.

இருவரது பெற்றோரும் என்னென்னவோ சொல்லி சமாதானம் செய்தாலும் இளையவர்கள் கேட்டால் தானே!

தலையைத் தேய்த்துக் கொண்டு வராண்டாவில் நடந்தவனின் மனம் இத்தகைய முடிவுக்கு அவர்கள் வருவதற்கு காரணமான அச்சம்பவம் நிகழ்ந்த நாளை நோக்கி பறந்தோடியது.

அன்றைய தினம் பணியாளர் ஒருவரது மீது வேலைநேரத்தில் அவரது கவனக்குறைவால் உண்டான இழப்பு பற்றி உயரதிகாரிகள் பேசிக்கொண்டிருந்தனர். அந்நபர் மீது புகாரளித்தவனே சாந்தனு தான். ஏனெனில் இம்மாதிரி இழப்புகள் அவரது தொடர்ச்சியான கவனக்குறைவால் வாடிக்கையாகிப் போனது தான்.

பேச்சுவார்த்தையின் முடிவில் அந்நபரைப் பணிநீக்கம் செய்வதென உயர்மட்ட மேலாண்மை அதிகாரிகளால் முடிவெடுக்கப்பட பணிநீக்க ஆணை விரைவில் வந்து சேரும் என்ற செய்தியோடு அந்நபர் அனுப்பி வைக்கப்பட்டார்.

பேச்சுவார்த்தை முடிந்ததும் அவ்வறையை விட்டு வெளியேறிய சாந்தனுவின் செவிகளில் அந்நபர் அவரது சகப்பணியாளரிடம் குரோதத்துடன் பேசிய வார்த்தைகள் விழுந்து வைத்தது.

“எல்லாத்துக்கும் லீட் இன்ஜினீயர்னு ஒருத்தன் இருக்கான்ல, அவன் தான் காரணம்... இவனை மாதிரி கையாலாகாதவனுங்க வீரத்தை எல்லாம் நம்மளை மாதிரி உழைக்கிற ஜாதி கிட்ட தான் காட்டுவானுங்க... இந்த வீரத்தை பொண்டாட்டி கிட்ட காட்டியிருந்தா இந்நேரம் பிள்ளையாச்சும் பிறந்திருக்கும்”

“சரி விடுப்பா... இந்தக் கம்பெனி இல்லனா ஆயிரம் கம்பெனி”

“அப்பிடிலாம் விட முடியாதுப்பா... இந்த வேலை போச்சுனா என் குடும்பமே நடுத்தெருவுக்கு வந்துடும்... புள்ளைக்குட்டி வச்சிருக்குறவனுக்குத் தான் அந்த வருத்தம் தெரியும்... இவனை மாதிரி கல்யாணம் ஆகி ரெண்டு வருசம் ஆகியும் புள்ளை பெத்துக்க தகுதியில்லாதவனுக்கு நம்ம வலி எங்க இருந்து புரியும்?”

அந்நபரின் நாராசமான பேச்சுகள் சாந்தனுவின் காதில் விழுந்துவிட பொங்கிய சினத்தோடு அவரிடம் சண்டையிட சென்றவனைத் தடுத்து நிறுத்தியது அவனது நண்பனும் சக பொறியாளனுமான நவீன் தான்.

“கோவப்படாத சாந்தனு... உன்னோட பொசிசன் என்ன? அவனோட பொசிசன் என்ன? அவன் சல்லித்தனமா பேசுறான்னா நீயும் சட்டைய மடிச்சு விட்டுட்டுச் சண்டைக்குப் போவியாடா?” என்று அதட்டி அவனைத் தன்னோடு அழைத்துச் சென்றான்.

தனியே வந்ததும் “சொல்லுறேன்னு வருத்தப்படாத... இன்னும் எவ்ளோ நாளுக்குத் தான் படிப்பை காரணமா சொல்லி நீயும் சிஸ்டரும் குழந்தைய தள்ளிப் போடுவிங்க? அவங்க ரெண்டு வருசம் டைம் கேட்டாங்கனு சொன்ன... இதோ இன்னும் மூனு மாசம் தான் இருக்கு... அவங்க எக்சாமை க்ளியர் பண்ணுனா ஓ.கே... பட் இந்த தடவை முடியலைனா எல்லா பேப்பரையும் மறுபடி எழுதணுமேடா... அப்ப இன்னும் ஆறு மாசம் காத்திருப்பியா? ஒழுங்கா சிஸ்டர் கிட்ட பேசி முடிவெடு... படிப்பை எப்ப வேணும்னாலும் படிச்சுக்கலாம்... அட படிக்காமலே போனா கூட என்ன நஷ்டம்டா? நீ கை நிறைய சம்பாதிக்கிற... அவங்க சம்பாதிச்சா குடும்பம் நடக்கப்போகுது? ஆனா குடும்பம்னு ஒன்னு முழுமையாகணும்னா குழந்தை முக்கியம்டா... இல்லனா கண்டவனும் கண்ட பேச்சு பேசுவான்... அதை நம்ம கேட்டுத் தான் ஆகணும்” என்று தனது மனதில் சரியென்று தோன்றுவதை கூறிவிட்டு அவன் சென்றுவிட்டான்.

ஆனால் சாந்தனுவின் மனமோ அவன் சொன்ன வார்த்தைகளை இறுக்கமாகப் பற்றிக் கொண்டது. கூடவே தனக்குக் கீழ் பணியாற்றும் ஒருவன் தன்னை ஆண்மகனே இல்லையென சொல்லாமல் சொன்ன கோபமும் சம்விருதாவின் மீதே திரும்பியது.

இவள் மட்டும் மற்ற பெண்களை போல இருந்திருந்தால் எனக்கு இந்த பேச்செல்லாம் தேவை தானா? அப்படி என்ன குழந்தையை விட முக்கியமான படிப்பு என அவனும் நவீனைப் போல எண்ணிக்கொண்டான்.

இந்த மனநிலை வீட்டிற்கு செல்லும் வரை நீடித்தது. அவன் வீட்டுக்கு வந்து ஒருமணி நேரம் கழித்து வந்த சம்விருதாவுக்கு அவனது கடுகடு முக தரிசனம் தான் காணக் கிடைத்தது.

“என்னாச்சு தனு? தலை வலிக்குதா?” என்று அக்கறையாகக் கேட்டபடி அவனது நெற்றியைப் பிடித்துவிடப் போனவளின் கரம் “ப்ச்” என்ற சலிப்பான தொனியில் பட்டென தட்டிவிடப்பட்டது.

சம்விருதா முதலில் திகைத்தவள் பின்னர் சமையலறைக்குள் புகுந்து கொண்டாள். அடுத்த சில நிமிடங்களில் சுடச்சுட காபியோடு திரும்பியவள் அவனருகே ஒரு கோப்பையை வைத்துவிட்டு முகம் கழுவ சென்றுவிட்டாள்.

பின்னர் அவள் திரும்பி வரும் போது கோப்பை தீண்டப்படாமல் இருக்கவே பணியிடத்தில் ஏதோ பிரச்சனை போல; சிறிதுநேரம் கழித்து தானே சரியாகிவிடுவான் என்று எண்ணியவளாய்

“நைட் சப்பாத்தியும் கிழங்கும் பண்ணிடுறேன்... இப்ப படிக்கப் போறேன்” என்றவள் அவளது ஸ்டடி டேபிளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகத்தை எடுக்கவும் சாந்தனுவின் கோபம் இன்னும் பிரம்மாண்டமாக விஸ்வரூபம் எடுத்தது.

வேகமாக அவளருகே சென்றவன் சம்விருதாவின் கரத்தில் இருந்த புத்தகத்தைப் பிடுங்கி வீசியெறிந்தான்.

“தனு”

கோபத்துடன் சம்விருதா விழிக்க அவனோ “என்னடி தனு? எப்ப பார்த்தாலும் படிப்பு, புக்ஸ், டாக்ஸ்னு பேசிப் பேசியே என்னை இந்த நிலமைக்குக் கொண்டு வந்துட்ட... உன்னால தான் என் முன்னாடி நின்னு பேசத் தகுதியில்லாதவன் கூட என்னை ஆம்பளையே இல்லைனு கிண்டலா பேசுறான்... அந்தக் கடுப்புல நான் இருந்தா நீ சாவகாசமா வந்து கடனேனு காபிய குடுத்துட்டு புக்கோட உக்காரப் போற... நீ படிச்சுக் கிழிச்ச லெச்சணத்துல நாசமானது என் மானமரியாதை தான்” என்று வெடித்தான்.

சம்விருதா என்னவாயிற்று இவனுக்கு என்ற ரீதியில் சாந்தனுவைப் பார்த்தவள் சமீப காலமாக அவனது நடவடிக்கையில் தெரிந்த ஒத்துக்கமும், திடீர் கோபமும் மனதை உறுத்த அமைதியாகவே நின்றாள்.

“இன்னைக்கு எனக்குக் கீழ ஒர்க் பண்ணுற ஒருத்தன் கல்யாணம் ஆகி ரெண்டு வருசமாகியும் ஒரு புள்ளைக்கு அப்பனாக துப்பில்லாதவன்னு எகத்தாளமா பேசுறான்... இதுக்குலாம் யாருடி காரணம்? நீ தானே... படிப்பு தான் முக்கியம்னா ஏன் என்னைக் கல்யாணம் பண்ணி என்னோட வாழ்க்கைய நாசம் பண்ணுன?”

இவன் தானே என்னைக் காதலிப்பதாக கூறியவன்? அப்போதெல்லாம் கனிவும் காதலுமாக நடத்தியவனுக்குத் தன் மீது அதிருப்தி உண்டாக குழந்தை ஒரு காரணமாக அமையுமா என்ன?

“வாயைத் திறந்து பதில் பேசு சம்மு”

“என்ன பதில் வேணும் உனக்கு?”

“படிப்பு மண்ணாங்கட்டிய ஓரங்கட்டிட்டு சீக்கிரமா லைஃபோட அடுத்தக் கட்டத்துக்குப் போக ரெடியாகுங்கிறேன்”

சம்விருதாவுக்கு இப்போது மெய்யாகவே கோபம் வந்துவிட்டது.

“முடியாது... மனுசனா இருந்தா குடுத்த வார்த்தைய காப்பாத்தணும்... ரெண்டு வருசம் கழிச்சு குழந்தைய பெத்துப்போம்னு சொன்னதுக்கு சரினு தலையாட்டிட்டு இப்ப அதை மீறுறியே... உனக்குக் கொஞ்சமாச்சும் மனசாட்சி இருக்குதா தனு?”

“எனக்கு மனசாட்சி இல்லைனு வச்சுக்க... அதை பத்தி எனக்குக் கொஞ்சம் கூட கவலை இல்ல... நீ படிச்சு வேலைக்குப் போய் சம்பாதிச்சா தான் வாழ முடியும்னு எந்தக் கட்டாயமும் இல்ல... முதல்ல நம்ம வாழ்க்கைய பார்ப்போம்”

சாந்தனு பிடிவாதம் பிடிக்க சம்விருதாவுக்கு எரிச்சல் அதிகமானது.

“நீ சொல்லுறதை கேக்குறதுக்கு நான் ஒன்னும் உன்னோட அடிமை இல்ல”

அவளது பதிலில் சில கணம் புருவம் சுருக்கியவன் “ஏன் சொல்ல மாட்ட? உனக்குக் குடுத்த வார்த்தைய காப்பாத்தணும்னு இத்தனை என்னோட குழந்தை ஆசைய ஒதுக்கி வச்சேன்ல, எனக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்... ஒருவேளை உனக்குக் குடுத்த வார்த்தைய நான் காப்பாத்தாம விட்டு நீ ஆக்சிடென்டலா ப்ரெக்னெண்ட் ஆகியிருந்தா என்ன பண்ணிருப்ப?” என்று கேட்க

“அபார்ட் பண்ணிருப்பேன்” என்றாள் சம்விருதா யோசிக்காமல்.

அடுத்த நொடி சாந்தனுவின் கரம் பளாரென அவளது கன்னத்தில் இறங்கியது.

“சீ! நீயெல்லாம் ஒரு பொண்ணா? அஞ்சறிவு ஜீவன் கூட தன்னோட குட்டிய காப்பாத்த போராடும்... நீ கொஞ்சம் கூட இரக்கமில்லாம அபார்ட் பண்ணுவேன்னு சொல்லுற... உன்னால கண்டவன்லாம் என்னை ஆம்பளையானு கேக்குறான்... உனக்காக நான் ஏன்டி அசிங்கப்படணும்? உன்னை மாதிரி ஒருத்திய காதலிச்சதுக்கு நான் ரொம்ப அசிங்கப்படுறேன்... உன் முகத்தைக் கூட பார்க்க பிடிக்கலை” என்று உறுமி விட்டு வீட்டை விட்டு வெளியேறினான்

ஒரு பெண்ணுடைய வாயிலிருந்து வரக்கூடாத வார்த்தை தான். ஏனென்றால் இன்னொரு உயிரை இவ்வுலகிற்கு கொண்டு வரும் வரத்தை இயற்கை பெண்ணுக்கு மட்டும் தான் அளித்திருக்கிறது.

தவிர்க்க முடியாத சூழலில் குழந்தைக்குச் சிக்கல் என்றால் மட்டுமே கருக்கலைப்பு என்ற துயரமான முடிவை ஒரு பெண் எடுப்பாள். மற்றபடி நல்லபடியாக வயிற்றில் வளரும் குழந்தையைத் தங்கள் சுயநலத்திற்காக கலைப்பவர்களும் இருக்கிறார்களே! அவர்களில் ஒருத்தியாக சம்விருதாவை எண்ணிக்கொண்டான் சாந்தனு. அதன் விளைவே அவளது கன்னத்தில் அவன் அறைந்த நிகழ்வு!

சம்விருதாவோ தான் சொன்ன வார்த்தையின் வீரியத்தை மறந்து அவன் அறைந்தது தவறு என்பதிலேயே நின்றாள். விளைவு அந்தச் சம்பவத்தோடு அவனுக்கும் தனக்கும் கருத்து ஒத்துப் போகாததை காரணம் காட்டி விவாகரத்து முடிவுக்கு வந்தவளும் அவளே!

இவ்விசயத்தைக் கேள்விப்பட்டதும் பதறிய சாந்தனு இருவரது பெற்றோரையும் சென்னைக்கு வரவழைத்துப் பஞ்சாயத்து நடத்தியும் பிரயோஜனமில்லை.

இருவரது பெற்றோருக்கும் இந்தப் பிரச்சனையில் தங்கள் பிள்ளைகள் இருவர் மீதும் தவறிருக்கிறது என்பது புரிந்தாலும் அவர்களால் இளைய தலைமுறையைச் சமாதானம் செய்ய முடியவில்லை.

சாந்தனுவின் பெற்றோர் அவனது அவசர முடிவுகளும், அனாவசியமான வார்த்தைகளும் தான் இப்பிரச்சனைக்கு அடிகோலியது என்க சம்விருதாவைப் பெற்றவர்களோ திருமணம் குழந்தை குடும்பத்தை விட படிப்பு முக்கியம் என்று அவள் அடம்பிடிப்பது நடைமுறைக்கு ஒத்து வராது என எப்படியெப்படியோ அவளுக்குப் புரிய வைக்க முயன்று தோற்றனர்.

முடிவில் விவாகரத்துக்கான வேலைகளை சம்விருதா ஆரம்பிக்க இந்நிகழ்வு எதுவுமே குடும்பத்தில் மற்றவர்களுக்குத் தெரியாமல் பார்த்துக்கொண்டனர் பெரியவர்கள்.

அச்சமயத்தில் தான் அதர்வா – அஸ்வினி திருமணம் கூடி வந்ததும், அதன் பின்னர் நடந்த நிகழ்வுகளும்!

அனைத்தையும் ஒரு முறை யோசித்த சாந்தனு தனது வலது கரத்தை ஒரு முறை பார்த்துக்கொண்டான். மனைவியை அறைந்தது தவறு தானோ? வெகு தாமதமாக வருந்தினான் அவன்.

இருப்பினும் மன்னிப்பு கேட்க மனம் வரவில்லை. ஏனெனில் அவன் அறைந்தது தவறென்றால் சம்விருதாவின் பேச்சும் தவறு தானே!

அமைதியாக எழுந்து அறைக்குள் சென்றவன் சம்விருதா உறங்குவதை பார்த்தபடி கட்டிலின் மறுபக்கம் சரிந்து உறங்க முயன்றான்.

மறுநாள் காலையில் அவன் கண் விழிக்க வெகு நேரமாகி விட கீழ்த்தளத்திலோ பரபரப்பாக பெரியவர்கள் பேசுவது கேட்டது.

“திடீர்னு இந்தப் பொண்ணுக்கு என்னாச்சு?” கவலையாய் ஒலித்தது பார்வதியின் குரல்.

“நேத்து பலகாரபந்தியில மைசூர்பாக்கா தின்னு தீர்த்தா... அதான் இப்ப வாமிட் பண்ணிட்டிருக்கா” என்ற சுனிலின் கிண்டலும்

“சூ! வாயை மூடுடா... பாவம் அவ” என்ற ஆருத்ராவின் அதட்டலும் தொடர்ந்து கேட்க சாந்தனு யாருக்கு என்னவாயிற்று என்ற கேள்வியோடு கீழ்த்தளத்துக்கு வந்தான்.

வந்து பார்த்தால் சோர்ந்த முகத்தோடு தலையைக் கையில் தாங்கியபடி தூணில் சாய்ந்து அமர்ந்திருந்தாள் சம்விருதா.

கோமதிக்கு மருமகள் அமர்ந்திருந்த கோலம் மனதை வருத்த “என்னடா பண்ணுது? உடம்பு சரியில்லையா?” என்று அவளது கழுத்தில் கை வைத்துப் பார்க்க

“தெரியலத்த... காபி குடிக்கலாம்னு கிச்சனுக்குப் போனேன்... இட்லி சாம்பாருக்கு ஆச்சி குக்கர்ல பருப்பு போட்டிருந்தாங்க போல... நான் போனப்ப விசில் அடிச்சுதா, அப்ப வந்த ஸ்மெல் எனக்குக் குமட்டியிருச்சு... கண்ட்ரோல் பண்ண முடியாம வாமிட் பண்ணிட்டேன்... எல்லா கலர்ல வாமிட் பண்ணுனேன் அத்தை... ஒரு வேளை ஜான்டிஷா இருக்குமோ?” என்று பயத்துடன் வினவினாள் சம்விருதா.

ஆனால் கோமதியோ பருப்பு வேகும் வாசம், மஞ்சள் நிற வாந்தியில் ஏதோ புரிந்தவராக செண்பகாதேவியை நோட்டமிட அவர் மகளிடம் கிசுகிசுப்பான குரலில் வினவினார்.

“எப்ப தலைக்கு ஊத்துன?”

சம்விருதா சோர்வோடு கண் மூடி அமர்ந்திருந்தவள் “மறந்துட்டுமா” என்க அவர்கள் இருவரும் தலையிலடித்துக் கொண்டனர்.

“சண்டை போட மட்டும் மறக்குதாடி உனக்கு? கடைசியா தலைக்கு ஊத்துன தேதி கூடவா மறந்து போகும்?” என்று செண்பகாதேவி எரிச்சலோடு கேட்க சம்விருதா சிரமப்பட்டு ஞாபகப்படுத்திகொண்டு மூன்று மாதங்களுக்கு முந்தைய தேதியைக் கூற வீட்டிலிருந்த பெண்கள் ஒருவரையொருவர் அர்த்தபுஷ்டியோடு பார்த்துக்கொண்டனர்.

இதை வேடிக்கை பார்த்தபடி நின்று கொண்டிருந்தான் சாந்தனு.

கோமதி மைந்தனிடம் “என்னடா மசமசனு நிக்குற? சீக்கிரம் குளிச்சுட்டு உன் பொண்டாட்டிய விஜயலெட்சுமி டாக்டர் கிட்ட கூட்டிட்டுப் போ” என்று அதட்ட

“நானே தான் போகணுமா?” என வினவினான் அவன் அதிருப்தி மிகுந்த குரலில்.

“நீ தான்டா கூட்டிட்டுப் போகணும்... ஆனா உங்களைத் தனியா விட யோசனையா இருக்கு... நானும் செண்பா மதினியும் உங்க கூட வருவோம்” என்று அவர் கூற சாந்தனு சரியென தலையசைத்துவிட்டு மீண்டும் மாடியறைக்குச் சென்றுவிட்டான்.

சம்விருதாவோ சோர்வாய் தலையுயர்த்த ஆருத்ராவும் செண்பகவள்ளியும் அவளருகே அமர்ந்து கொண்டனர்.

“ஃபைனலி நான் அத்தை ஆகப் போறேன்” என ஆருத்ரா குதூகலிக்க சம்விருதா சோர்வு அகல அதிர்ந்தாள்.

ஒருவேளை அப்படியும் இருக்குமோ? சமீப நாட்களாக சோர்வும் தலைபாரமும் காலை நேரத்தில் அதிகமாக இருப்பதையும், சாதம் பருப்பு வேகும் வாசனையில் வயிற்றைப் புரட்டுவதையும் இணைத்துப் பார்த்தவள் குனிந்து தன் வயிற்றைப் பார்த்துக்கொண்டாள்.

இது மட்டும் குழந்தையாக இருந்தால்?

தானாக அவளது கரம் வயிற்றை ஆசையாக வருடியது. அந்த வேளையில் படிப்பு, தேர்வு எதுவும் அவள் மனதில் நிற்கவில்லை. இது தான் இயற்கையின் தூண்டுதல் போல!

Comments