அன்பு 8

Image
  “புதியவுறவு முகிழ்த்ததும் பழைய கசடுகள் அகலுமா? கருவில் உருவான சிறுவுயிரே நீ மட்டுமே அறிவாய் இவ்வுறவு தொடருமா முடியுமா என்பதை. மகப்பேறு மருத்துவரின் அறையில் அமர்ந்திருந்தனர் சாந்தனுவும் சம்விருதாவும். கருவுற்றிருப்பதற்கான சோதனைகள் அனைத்தும் முடிவடைந்து மருத்துவர் என்ன முடிவை அறிவிக்கப் போகிறாரோ என்ற பரபரப்பு அவர்கள் இருவரையும் சூழ்ந்திருந்தது. சோதனைகள் முடிவடைந்ததும் அவர்களை அழைத்த மருத்துவர் சம்விருதா கருவுற்றிருப்பதாக அறிவிக்கவும் இருவரும் முதலில் எப்படி எதிர்வினையாற்றுவது என்று அறியாது தவித்தனர். “ட்வெல்த் வீக் வரைக்கும் உங்களுக்குச் சின்ன சந்தேகம் கூட வரலையா?” சம்விருதா இல்லையென தலையாட்டியவள் “நான் எக்சாமுக்கு டே அண்ட் நைட் படிச்சதால தான் டயர்ட்னெஸ் வருதுனு நினைச்சுட்டேன் டாக்டர்” என்றாள். “இட்ஸ் ஓ.கே... தேர்ட் மன்த் போட வேண்டிய வேக்சினை போட்டுடுங்க... அல்ட்ரா சவுண்ட் பாத்ததுல பேபி க்ரோத் கரெக்டா இருக்கு... சோ நான் அயர்ன் அண்ட் கால்சியம் டேப்ளட் மட்டும் எழுதித் தர்றேன்... அப்புறம் இது என்.டி ஸ்கேன் எடுக்க வேண்டிய டேட்... இன்னும் டூ வீக்ஸ்ல நீங்க எடுக்கணும்” மருத்துவர

அன்பு 4

 



“மிதவாதமாக ஆரம்பித்த பொறுமையின்மை மிதமிஞ்சிய பிடிவாதமாய் விஸ்வரூபமெடுத்து பிரிவெனும் கோர தாண்டவத்தை ஆடி தீர்த்ததால் பரிதவித்து உயிர் போகும் தருவாயை எட்டிய நம் காதலை எப்படி மீட்டெடுப்பது?”

“அந்த க்ரீன் கலர் புடவைய எடுங்க”

“சாந்தனு கல்யாணத்துக்குத் தானே எல்லாரும் ஒரே மாதிரி க்ரீன் புடவை வாங்குனோம்... இந்த தடவை வேற கலர் வாங்குவோம்”

“அது ராமர் பச்சை... இது மாந்துளிர் பச்சை... ரெண்டும் வேற வேற மதினி”

திருமணத்திற்கு ஆடை அணிகலன்கள் எடுப்பதற்காக நீலகண்டனின் குடும்பத்தார் அனைவரும் தென்காசி ஹாஜி முஸ்தபா ஜவுளி கடைக்கு வந்திருந்தனர்.

பெண்கள் புடவை எடுப்பதிலும் முன்னர் எடுத்த புடவைகளின் நிறங்களை நினைவு கூர்ந்து ஒப்பிட்டுப் பார்ப்பதிலும் நேரத்தைக் கடத்த ஆண்களோ விதியே என நாற்காலிகளில் அமர்ந்து அக்காட்சியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

சாந்தனு மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன? சலிப்பாய் அமர்ந்திருந்தவனின் தோளைத் தொட்டான் அதர்வா. அவனது முகத்தைப் பார்க்கவே சாந்தனுவுக்குப் பரிதாபமாக இருந்தது.

“என்னடா பாவப்பட்ட பையனாட்டம் முகத்தை வச்சிருக்க? இது ஆரம்பம் தான்... இனிமே ஒவ்வொரு தடவை ஷாப்பிங் வர்றப்பவும் இதே கதை தான்... பொறுமைனா கிலோ என்ன விலைனு கேட்ட காலம் நீ எப்ப அஸ்வதி கையில நிச்சயதார்த்த மோதிரத்தை மாட்டுனியோ அப்பவே பறந்து போயிடுச்சு... இனிமே பொறுமையில பூமாதேவி வெர்சன் டூ பாயிண்ட் ஓவா மாறுறதை தவிர வேற வழியில்ல தம்பி”

திருப்தியாய் அதர்வாவைக் கலாய்த்தவனை அவன் முறைத்தான்.

“அனுபவம் பேசுது தனு அத்தானுக்கு... மத்த லேடீஸ் கூட பரவாயில்ல... சம்மு இருக்காளே, ஒரு கர்சீப் வாங்க கூட அவ்ளோ யோசிப்பா... அவ புடவை எடுக்கப் போனானா...” என்று இழுத்தான் இரட்டையர்களில் ஒருவனான கமல்.

“வேற என்ன? திரும்பி வர்றதுக்கு ஒரு யுகமே ஆகும்” என்றான் சாந்தனு கிண்டலாக.

விஸ்வநாதனோடு சேர்ந்து மற்ற ஆண்கள் அனைவரும் பக்கத்திலிருக்கும் ஹோட்டலுக்குச் சென்றுவிட்டு அப்படியே காசி விஸ்வநாதரையும் உலகம்மனையும் தரிசித்து வர எப்போதோ கிளம்பிவிட்டனர்.

மிச்சமிருந்தவர்கள் சாந்தனு அதர்வாவோடு இரட்டையர்கள் மற்றும் சுனில் மட்டுமே!

பெண்கள் அனைவரும் புடவைகளைப் பார்ப்பதில் நேரம் செலவளிக்க அங்கே சுரத்தின்றி அமர்ந்திருந்தவள் சம்விருதா மட்டுமே. அங்கேயே அமர்ந்திருக்க போரடிக்கவே எழுந்து எளிமையான காட்டன் சில்க் புடவைகளைப் பார்வையிடத் தொடங்கினாள்.

சாந்தனுவோ அன்னையின் பார்வை குற்றம் சாட்டவும் எழுந்து சம்விருதா நிற்கும் இடத்திற்கு சென்றான். அவளோ வந்தவனை கவனியாதது போல காட்டிக்கொண்டு

“அண்ணா அந்த மெரூன் கலர் ஷேரிய எடுங்க” என்க

“இந்தக் கலர் உனக்குக் கொஞ்சம் கூட சூட் ஆகாது” என்றான் சாந்தனு.

சம்விருதாவோ எரிச்சல் மேலிட “எனக்கு என்ன கலர் பிடிக்குதோ அந்தக் கலர்ல தான் நான் வாங்குவேன்... உன் இஷ்டத்துக்குலாம் என்னால ஷேரி வாங்க முடியாது” என்றாள் சுள்ளென்று.

அப்போது யாரோ பின்னிருந்து அவளது புஜத்தைப் பற்றி இழுக்கவும் திகைத்து திரும்பியவள் அங்கே மூன்றாவது கண்ணைத் திறக்காத குறையாக அவளை முறைத்தபடி நின்று கொண்டிருந்தார் அவளது பெரியம்மா உமாதேவி.

“பெரியம்மா...” என்று தயக்கத்துடன் இழுத்தவளிடம்

“என்ன பெரியம்மா? நீயும் தனுவும் சின்ன வயசுல இருந்தே ஒன்னா வளர்ந்தவங்களா இருக்கலாம்... ஆனா அவன் உன் புருசன்... உங்க ரூமுக்குள்ள எப்பிடி வேணும்னாலும் பேசிக்கோங்க... இது பொது இடம்... இங்க வச்சு எடுத்தெறிஞ்சு பேசுனா கேக்குறதுக்கு நல்லாவா இருக்கு? ருத்ரா இப்பிடி மாப்பிள்ளைய மரியாதை இல்லாம ஒரு தடவை பேசுனதுக்கு நான் என்ன செஞ்சேன்னு தெரியும்ல?” என்று உறுமினார் அவர்.

மறுவீட்டிற்கு வந்த போது அவரது மகளான ஆருத்ரா அவளின் கணவன் கணேஷை உரிமையாகப் பெயர் சொல்லி அழைத்ததற்கே அவளைத் தனியே அழைத்துக் கடிந்து கொண்டவர் உமாதேவி. அப்போது சம்விருதாவுக்குத் திருமணமாகவில்லை.

இருப்பினும் அன்றிலிருந்து உமாதேவி என்றால் அவளுக்குக் கொஞ்சம் பயம் தான்.

இப்போது வேறு சாந்தனுவை திட்டிவிட்டோம்! இதற்கு என்ன மண்டகப்படி காத்திருக்கிறதோ!

தயக்கத்துடன் உமாதேவியை ஏறிட அவரோ பேச்சை முடித்துக்கொண்டு இடத்தைக் காலி செய்துவிட்டார்.

அவர் சென்றதும் பெருமூச்சு விட்டாள் சம்விருதா. அவள் பின்னே நின்று கொண்டிருந்த சாந்தனுவை நோக்க அவனோ ஏளனமாகச் சிரித்துவிட்டு அங்கிருந்து நழுவினான்.

சம்விருதா அவளுக்கு விருப்பமான நிறத்தில் புடவையை எடுத்துக்கொண்டவள் தனது நாத்தனார் சஹானாவுக்காகவும் ஒரு புடவையை வாங்கி மாமியாரிடம் கொடுத்தாள்.

“நானே எடுத்துட்டேன்” பட்டும் படாமல் பதிலளித்தார் கோமதி.

“இட்ஸ் ஓ.கே... இது அவ ப்ரெக்னென்சிக்கு என்னோட கிப்ட்” என்று அவரைப் போலவே பட்டும் படாமல் பதிலளித்துவிட்டு மீண்டும் பழைய இடத்தில் சென்று அமர்ந்து கொண்டாள்.

இவ்வளவையும் உமாதேவி கவனித்துக் கொண்டு தான் இருந்தார். சமீப காலங்களில் தங்கை மற்றும் தங்கை கணவரின் நடத்தையில் ஏகப்பட்ட மாறுதல்கள்! என்ன தான் உற்சாகம் போல காட்டிக்கொண்டாலும் அவர்கள் எதையோ மனதில் போட்டு குழப்பிக் கொள்கிறார்கள் என்பது அவ்வபோது அவர்களின் சோர்ந்த முகத்திலிருந்து கண்டுகொண்டார் அவர்.

அதோடு விஸ்வநாதனும் கோமதியும் வேறு அவ்வபோது செண்பகாதேவி தியாகராஜனோடு இரகசியமாகப் பேசுவதையும் கவனித்து விட்டார்.

இன்றோ சம்விருதா சாந்தனுவிடம் சிடுசிடுவென எரிந்து விழுகிறாள். என்ன நடக்கிறது இவர்களுக்குள்? இவர்கள் அனைவரும் சேர்ந்து எதையோ மறைக்கிறார்களா?

அனைவரும் புடவை அணிகலன்கள் எடுத்துவிட்டு வீட்டுக்கு வந்ததும் செண்பகாதேவியையும் கோமதியையும் அழைத்து வினவினார் உமாதேவி.

சிவசங்கரி மட்டும் அங்கே இல்லை. மற்றபடி ஆண்கள் அனைவரும் வெளித்திண்ணையில் அமர்ந்திருந்தனர்.

பார்வதியைத் தலைமையாக வைத்து விசாரணையை ஆரம்பித்தார் உமாதேவி.

சம்விருதா குற்றவாளிக்கூண்டில் நிற்பது போல நடுநாயகமாக நின்று கொண்டிருந்தாள்.

“சம்பந்தி ரெண்டு பேரும் எங்க கிட்ட இருந்து எதை மறைக்கிறீங்க?”

கணீரென கேட்டவருக்கு என்ன பதில் கூற என்று புரியாது கோமதியும் செண்பகாதேவியும் திகைக்க பார்வதியோ மூத்த மகளை புரியாத பார்வை பார்த்தார்.

“என்ன பேசுற உமா? அவங்க எதை மறைக்கப் போறாங்க?”

அன்னையை தயக்கத்துடன் பார்த்தார் செண்பகாதேவி. உமாதேவியோ “அது தானே எனக்கும் புரியல... ஆனா இவங்க ரெண்டு குடும்பமும் சரியில்லம்மா” என்றவர் வந்ததிலிருந்து தான் கவனித்ததை மறைக்காது கூறிவிட்டார்.

முழுவதையும் கேட்ட பிறகு செண்பகாதேவியும் கோமதியும் பதபதைப்புடன் நிற்க சம்விருதாவோ அடுத்த விசாரணையை ஆரம்பிப்பாரோ என்று பயந்து போனாள்.

ஆனால் அவரோ பகபகவென நகைக்க ஆரம்பித்தார். பெண்கள் அனைவரும் அவரை குழப்பமாக பார்க்க அவரோ வயிற்றைப் பிடித்துகொண்டு சிரித்தபடி தரையில் அமர்ந்தார்.

கூடவே தன்னருகே அமரும்படி சம்விருதாவுக்குச் சைகை வேறு! பாவம் அவள், தயங்கிக்கொண்டே அமர அவளைத் தோளணத்து உச்சி முகர்ந்தார் பார்வதி.

“என் தங்கத்தைப் பத்தி எனக்கு நல்லா தெரியும்... சாந்தனுவ கல்யாணம் பண்ணிக்க இவ எப்பிடிலாம் நம்ம கிட்ட வாதம் பண்ணுனானு மறந்துட்டிய உமா?”

“அதுல்லாம் ஞாபகம் இருக்கும்மா... ஆனா...”

“என்ன ஆனா ஆவன்னானு இழுக்குற? சாந்தனுக்கும் இவளுக்கும் ஜாதகம் பொருந்தலைனு உங்கப்பா எத்தனை தடவை இவ மனசை மாத்த முயற்சி பண்ணுனார்னு உனக்குத் தெரியாதா? அவ்ளோ பிடிவாதமா நின்னு அவனைக் கல்யாணம் பண்ணுனவ என்ன பிரச்சனை பண்ணுவானு நினைக்குற? அவங்க காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டவங்க... அந்தக் காலத்து புருசன் பொண்டாட்டி மாதிரியா அவங்க இருப்பாங்க? உரிமையா அவ பேசுனதை நீ தான் தப்பா புரிஞ்சிகிட்ட உமா... தேவையில்லாத சந்தேகம் இது”

பார்வதி உமாதேவியின் சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். எப்படியோ தப்பித்தோம் பிழைத்தோம் என்று சம்விருதாவுக்கும் சாந்தனுவுக்கும் இடையே நடக்கும் குருஷேத்திரப்போரைப் பற்றி ஒரு வார்த்தை கூட உதிர்க்காமல் நழுவினர் அவர்களைப் பெற்றெடுத்த அன்னையர் இருவரும்.

சம்விருதாவோ அவள் பின்னே இருந்த தூணில் சாய்ந்து நிம்மதி பெருமூச்சொன்றை இழுத்து விட்டாள்.

இன்று தப்பித்து விட்டோம்! ஆனால் ஒரு நாள் அனைத்தும் தெரிய வரும். அப்போது எந்த முகத்தை வைத்துக்கொண்டு இவ்வளவு நம்பிக்கையோடு பேசும் ஆச்சியை எதிர்கொள்ளப் போகிறோம் என்ற கவலை அவளைச் சிலந்தி வலையாய் சூழ்ந்து கொண்டது.

அதே நேரம் அதர்வா அஸ்வதியிடம் மொபைலில் பேசிவிட்டு வந்து சாந்தனுவின் அருகே அமர்ந்து கொண்டான்.

“என்னடா கொஞ்சி முடிச்சிட்டியா?”

“சீ! போண்ணா” என்று சிணுங்கினான் அதர்வா.

“டேய் இதுக்கே சிணுங்குனா எப்பிடி? இன்னும் வாழ்க்கைல எவ்ளோவோ இருக்குடா... அதை விடு... ஃபியூச்சர் பத்தி நீயும் அஸ்வதியும் என்ன ப்ளான் பண்ணிருக்கீங்க?” என்று கேட்டான் சாந்தனு.

அதர்வா புன்னகையுடன் “ரெண்டு பேரும் சேர்ந்து முதல்ல சொந்தமா ஒரு ஃப்ளாட் வாங்கலாம்னு இருக்கோம்ணா... காசா க்ராண்டேல தேடுறோம்... அப்புறம் என் கிட்ட இருக்குற காரை செகண்ட்சுக்கு வித்துடலாம்னு அஸ்வதி சொன்னா... பெட்ரோல் விக்குற விலையில காருக்குப் பெட்ரோல் போட்டு மாளாதுங்கிறது அவளோட ஒபீனியன்... அப்புறம் சேவிங்ஸ் அண்ட் இன்வெஸ்ட்மெண்ட் பத்தியும் கொஞ்சம் யோசிச்சு வச்சிருக்கோம்” என்றான்.

சாந்தனு அவன் தோளில் ஆதரவாகத் தட்டியவன் “இதெல்லாம் விட முக்கியமான ஒன்னை பத்தி இன்னும் பேசி முடிக்கலையா?” என்று கேட்க

“இதை தவிர வேற எதை பத்தி ப்ளான் பண்ணணும்?” என்றான் அதர்வா புரியாமல்.

“டேய்! குழந்தைடா... எப்ப பேபினு பேசுனிங்களா இல்லையா?” என்றான் சாந்தனு சற்றே சூடான குரலில்.

அதர்வா தயக்கத்துடன் “இப்பவே பேபிக்குப் ப்ளான் பண்ணணுமாண்ணா?” என்கவும்

“என்னடா பேசுற? இன்னைக்குக் கொஞ்சம் கஷ்டப்பட்டா எல்லாரும் ஃப்ளாட் வாங்கிடலாம்... கார், சேவிங்ஸ், இன்வெஸ்ட்மெண்ட் பண்ணுறதும் எல்லாருக்கும் பாசிபிள் தான்... ஆனா பேபி பிறக்குறது இந்தக் காலத்துல வரம் கிடைக்குற மாதிரி ஆகிடுச்சுடா... எத்தனை பேர் வயசு இருக்குறப்ப குழந்தை வேண்டாம்னு தள்ளி வச்சிட்டு காலம் கடந்ததுக்கு அப்புறம் ஃபெர்டிலிட்டி செண்டருக்குக் காசைக் கொட்டி அழுறாங்கனு தெரியுமாடா? ட்ரீட்மெண்ட் எடுத்தாலும் எத்தனை பேருக்கு சக்சஸ் ஆகுது? வாழ்க்கையில நமக்குக் கடவுள் குடுக்குற பெரிய கிப்டே குழந்தை தான்டா அதர்வா... அடுத்த தடவை பேசுறப்ப பேபி பத்தியும் பேசி ஒரு முடிவுக்கு வாங்க” என்றான் அவன்.

அதர்வாவுக்கும் அவன் சொல்வது சரியென தோன்ற தலையாட்டி வைத்தான்.

ஆனால் அவனிடம் பேசிவிட்டு அமர்ந்திருந்த சாந்தனுவின் உள்ளம் தான் வாடிப்போனது. 

கடந்த இரண்டு ஆண்டுகளாக நண்பர்களுடைய குழந்தைகளின் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்குச் செல்லும் போதெல்லாம் அவனுக்குள் எழும் ஏக்கம் இப்போதும் எழுந்தது.

சிறுவயதிலிருந்தே குழந்தை என்றால் அவனுக்குக் கொள்ளை இஷ்டம். தாத்தா வீட்டிற்கு வரும் ஆருத்ராவின் மைந்தன் முக்கால்வாசி நேரம் சாந்தனுவுடன் தான் இருப்பான்.

அதனால் தானோ என்னவோ திருமணம் ஆனதுமே குழந்தை எதிர்பார்ப்பு அவனுக்குள் உதயமானது. ஆனால் அவனது எதிர்பார்ப்பு அவனுக்கு ஏமாற்றத்தை மட்டுமே கொடுத்தது.

மனதில் ஊறிப்போன அந்த ஏமாற்றம் சமீபத்தில் கோபமாக வெளிப்படுவது வாடிக்கையாகி விட்டது. முன்பெல்லாம் அவன் கோபப்பட்டால் சகித்துக் கொள்ளும் சம்விருதா என்றைக்கு அவனுக்குப் பதிலடி கொடுக்க ஆரம்பித்தாளோ அன்றிலிருந்து அவருக்குள் போராட்டம் தொடங்கியது.

அந்தப் போராட்டத்தின் விதையே இன்று அவர்களுக்குள் மண்டிக் கிடக்கும் வெறுப்பு. கடந்த இரண்டு மாதங்களாக ஒரே வீட்டில் இருந்தாலும் முகம் பார்த்துப் பேசிக்கொள்வதில்லை. அப்படி பேசினாலும் அந்தப் பேச்சு சண்டையில் தான் முடிந்தது.

இச்சண்டை பெற்றவர்களின் காதுக்குப் போன போது அவர்கள் மேற்கொண்ட சமாதானப்படலங்கள் யாவும் வீணாயின. பின்னர் அவர்களும் ஒதுங்கிவிட இன்று சாந்தனு சம்விருதாவின் உறவு நூலிழையில் என்று வேண்டுமானாலும் பிரியலாம் என்ற நிலையில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது.

Comments

  1. அன்புடை அன்றிலே...!
    எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
    (அத்தியாயம் - 4)

    சாந்தனு சொல்றதும் உண்மை தான்...! வீடு, கார், சேவிங்ஸ் இன்வெஸ்ட்மென்ட் எல்லாத்தையும் உடனுக்குடனே
    திட்டமிடுபவர்கள், இந்த குழந்தை விஷயத்தையும் திட்டமிட்டால் வாழ்க்கை மிகவும் சிறப்பாகவும், சந்தோஷமாகவும் இருக்கும் என்று தோன்றுகிறது.

    குழந்தைகள் என்பது ஒரு வரம் மாதிரி. அது காசு பணம் மாதிரி கிடையாது. அது நமக்கு எப்ப, எப்படி கிடைக்குமோ நமக்கேத் தெரியாது. நம்மளால தள்ளிப் போட கூட முடியும். ஆனா, உடனேங்கறது மட்டும் நம்ம கையில கிடையாது. ஏன்னா, இப்பவுள்ள சூழ்நிலையில உடல் சார்ந்த நிறைய பிரச்சினைகள் பெண்ணுக்கும், பையனுக்கும் ரெண்டு பேருக்குமே இருக்குது. அதை ஆரம்பத்துலயே கண்டு பிடிச்சிட்டா, அடுத்த மூணு வருசத்துல நமக்கே நமக்குன்னு அட்லீஸ்ட் ஒரு பேபியாவது நம்ம கையில தவழும். நிறைய பேருக்கு ரெண்டாவது குழந்தைங்கறது இப்பவெல்லாம் தலை கீழ நின்னு தண்ணி குடிக்கிற மாதிரி தான். அது தவிர, குறைகள் இருந்தாலும் நாம எடுத்துக்கிற ட்ரீட்மெண்ட்லயே தெரிஞ்சிதறதோட, உடல் சார்ந்த பிரச்சினைக்கு உடனுக்குடனே தீர்வும் கிடைச்சிடும். அப்படி பிரச்சினைகள் தீராத பட்சத்துல வேறெதாவது வழியில் குழந்தையை பெற முயற்சிப்பதோ, அல்லது வழியே இல்லாத பட்சத்தில் குழந்தையை தத்தெடுப்பதோ, அல்லது நாம் இருவர், நமக்கேன் இன்னொருவர் என்று வாழ்வை இருவராகவே தொடருவதோ, அல்லது பரஸ்பர புரிதலின் அடிப்படையில் பிரிந்து செல்வது என்று நம் வாழ்க்கையை நாமே சீரமைத்துக் கொள்ளலாம் தானே....? தாமதிக்கும் ஒவ்வொரு நாளும், பல சங்கடங்களையும், அதிரடி திருப்பங்களையும் தான் சந்திக்க வேண்டியிருக்கும்.

    ம்... சாந்தனுவும் சம்முவும் அப்படியொரு புரிதல் இல்லாத தன்மையால் தான், இப்படி கிழக்கும் மேற்குமாக வாழ்க்கையை சிக்கலாக்கி கொண்டு, மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் விக்கிக் கொண்டு திரிகிறார்களோ என்று தோன்றுகிறது. அதுவே தானோ...???
    😆😆😆
    CRVS (or) CRVS 2797


    ReplyDelete

Post a Comment